Friday, August 14, 2015

பூஞ்சிட்டு குருவிகளா!!! புதுமெட்டு தருவிகளா!!!

"இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு உங்கள் சோ அண்ட் சோ டிவியின் சிறப்பு நிகழ்ச்சிகள்"னு ஒவ்வொரு சேனலும் ஒரு வாரமா போட்டு பொளந்து எடுத்துகிட்டு இருக்காங்க..சரி விளம்பரமா இருக்கேன்னு டி.டிக்கு மாத்தும் போது அதுல எப்போவோ 20 வருஷத்துக்கு முந்தி எடுத்த வரலாற்று ஓரங்க நாடகம் ஒளிபரப்பாகிட்டு இருந்தது...

இத பாத்திட்டு இருக்கும்போதே Mind அப்ப‌டியே ஃப்ளாஷ் பேக்குல 20 வருஷம் பின்னாடி போயிருச்சு... தூர்தர்ஷனோட கொடைக்கானல் அலைவரிசை தொடங்குனதுக்காக ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாச்சு... அப்போதைய பிரபலமான சந்திரபோசோட இசை நிகழ்ச்சி... அதுக்கப்புறம் எந்த விசேஷம்னாலும் சிறப்பு ஒளிபரப்பு அதே தான்... ஆனா சும்மா சொல்லக் கூடாது நல்ல நல்ல பாட்டா போட்ருபாப்ல சந்திரபோஸ்... சரி நம்ம பிளாக்லயும் இந்த சுதந்திர தின சிறப்பு பதிவு திரு.சந்திரபோஸ் அவர்களப் பத்தி தான்...



80களின் தமிழ் சினிமாவுல இளையராஜா கொடிகட்டிப் பறந்த காலத்துல அவருக்கு மாற்றாக பல பட்ஜெட் இயக்குநர்களால் அடையாளம் காணப்பட்டவர்களில் மிக முக்கியமான ஒரு இசையமைப்பாளர் சந்திரபோஸ்..  திரைப்படத் துறைக்கு வர்ரதுக்கு முந்தி, இசையப்பாளர் தேவாவோட சேர்ந்து "போசஸ்-தேவா"ன்னு ஒரு இசைக்குழு வச்சு மேடைக்கச்சேரிகள் எல்லாம் பண்ணிகிட்டு இருந்தவருக்கு முதல் வாய்ப்பு மெல்லிசை மன்னர் இசையில பாடுறதுக்கு "ஆறு புஷ்பங்கள்" படம் மூலம் வந்தது.. அந்தப் பாட்டு பலராலும் பாராட்டப்பெற்ற "ஏண்டி முத்தம்மா ஏது புன்னகை"...

சந்திரபோசுக்கு இசையமைப்பாளராக முதல் வாய்ப்பு  1977 ல, அந்தக் காலத்துல "ம" வரிசைப் படங்களா எடுத்துகிட்டு இருந்த வி.சி.குகநாதன் இயக்கிய "மதுர கீதம்" படத்துல கிடைச்சது.. அதுக்கு பிறகு வரிசையா "மச்சானை பாத்தீங்களா", "மாங்குடி மைனர்", "முயலுக்கு மூணு கால்"னு வரிசையா அவரோட "ம" வரிசைப் படங்களுக்கும் இவர் தான் இசை.. இந்த சமயத்துல "பார்வையின் மறுபக்கம்", "தரையில் வாழும் மீன்கள்", "ராஜாத்தி ரோஜாக்கிளி"னு ஒரு 50 படம் மியூசிக் பண்ணிருப்பாரு.. பெரிய ஹிட் ஏதுமில்லைன்னாலும் அபூர்வமான சில நல்ல பாடல்களையெல்லாம் குடுத்திருப்பாரு... உதாரணத்துக்கு மச்சானப் பாத்தீங்களாவில் "மாம்பூவே சிறு மைனாவே", பார்வையின் மறுபக்கம் படத்தில் "சந்தோஷ நேரங்கள்", "தேவதை புரியும் தவங்கள்" இப்படி அப்போதைய சிலோன் ரேடியோவின் ஹிட் பாடல்கள் இவற்றில் அடக்கம்... அவரோட‌ பெரிய பலமே காதுகளை உறுத்தாத மென்மையான இசை தான்...

சந்திரபோசுக்கு முதல் பெரிய break நடிகர் பாலாஜி தயாரிப்பில் வெளிவந்த "விடுதலை" படத்துல (இந்தி "குர்பானி"யோட ரீமேக்) தான் கெடைச்சது.... சிவாஜி, ரஜினி, கன்னட சூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்த்தன்னு மெகா நடிகர் பட்டாளத்தோட வெளிவந்த படம். அதுல ஸ்டைலான ரஜினிக்கும், அலட்டிக்காத விஷ்ணுவர்த்தனுக்கும் எஸ்.பி.பி. சந்திரபோஸ் குரல்கள்ல ஒலிக்கிற "நீலக்குயில்கள் ரெண்டு" பாட்டு  சந்திரபோஸ் பேரச் சொன்னதும் பலருக்கும் இன்றும் நினைவுக்கு வரும் பாடலாக அடையாளம் காட்டிச்சு... (இந்த ஒரு வாரத்துல மட்டும் இந்தப் பாட்ட கொறஞ்சது 300 வாட்டியாச்சும் முணுமுணுத்திருப்பேன்... எஸ்பிபி குரல்ல என்ன ஒரு ஸ்டைல்...) "தங்கமணி ரங்கமணி வாம்மா நீ", "நாட்டுக்குள்ள நம்மப் பத்திக் கேட்டுப் பாருங்க, அம்மம்மா இவர் தான் சூப்பர் ஸ்டாருங்க"னு படத்தோட அத்தனை பாடல்களும் சக்கபோடு போட, சந்திரபோசோட வெற்றிகரமான ரெண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பம் ஆச்சு..


அதே சுரேஷ் ஆர்ட்ஸ் நிறுவனத்தோட அடுத்த படத்துக்கும் இவர் தான் இசை. அந்தப் படம், சத்யராஜ், அம்பிகா நடிச்சு வெளியான "மக்கள் என் பக்கம் (மலையாளத்து "ராஜாவின்டே மகன்" படத்தோட ரீமேக்). "ஆண்டவன பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும்"னு சந்திரபோஸ் போட்ட பாட்டு ஹிட் அடிக்க அடுத்த பெரிய  ஹிட் சந்திரபோச இன்னும் உயரத்துக்கு கொண்டு போச்சு...


பிரபல மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் "மோஹன்லால், மம்மூட்டி"னு ரெண்டு பெரிய ஸ்டார் நடிச்சு வெற்றிகரமாக ஓடிய "Gandhi Nagar 2nd Street" தமிழ்ல "அண்ணாநகர் முதல் தெரு"ன்னு ரீமேக் ஆச்சு.. இசை சந்திரபோஸ்... "மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு" என்ன ஒரு அருமையான மெலடி... ரொம்ப நாள் வரைக்கும் இது இளையராஜா பாட்டுன்னே நெனச்சுகிட்டு இருந்தேன்..  இது சந்திரபோஸ் பாட்டுன்னு தெரிஞ்சதும் வியந்துட்டேன்... அவரை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்த முதல் பாடல் இது தான்... இதே படத்தில் வரும் "என்ன கத சொல்லச் சொன்னா" ஒரு அருமையான மென் சோகப் பாடல்  ("அடடா யாவுமே முடிஞ்ச கத.. கனவாய்ப் போனதே காதல் கத"ன்னு எஸ்.பி.பி உருகும் போது நமக்குள்ள என்னவோ செய்யும்)
இந்தப் படம் தந்த வெற்றியால மிகப்பெரிய அதிர்ஷ்டம் அவரை அணைக்க தயாராச்சு....



"ஊக்குவிப்பார் ஊக்குவித்தால்.. ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்'னு கவிஞர் வாலி சொல்லுவாரே... அது போல சந்திரபோசோட தலையெழுத்தையே மாற்றியது ஒரு மூணெழுத்து... அந்த மூணெழுத்து....



1986 ல "பேர் சொல்லும் பிள்ளை" படத்துல இளையராஜா கிட்ட இருந்து பிரிந்து வந்த ஏவிஎம் நிறுவனுத்துக்கு கிடைச்ச சரியான ஆள் "சந்திரபோஸ்". (இவரை இளையராஜாவுக்கு எதிரா கொம்பு சீவிவிட்டார்கள்னும் சிலர் சொல்றாங்க)..
அதே நேரத்துல "கரிமேடு கருவாயன்" படத்தோட‌ இளையராஜாகிட்ட இருந்து பிரிஞ்சு வந்த வைரமுத்துவும் கூட்டு சேர "ஏவிஎம் - சந்திரபோஸ் - வைரமுத்து"ன்னு புதுக் கூட்டணி உண்டாச்சு... அடுத்த அஞ்சு வருஷத்துக்கு சந்திரபோஸ் காட்டுல இசை மழைதான்...



"சங்கர் குரு", "மனிதன்", "தாய் மேல் ஆணை", "பாட்டி சொல்லை தட்டாதே", "வசந்தி", "ராஜா சின்ன ரோஜா", "பெண்புத்தி முன் புத்தி", "சொந்தக்காரன்", "மாநகரக் காவல்"னு 1992 வரைக்கும் அனைத்து ஏவிஎம் படங்களுக்கும் சந்திரபோஸ் தான் இசை... இந்தக் காலகட்டத்தில் இவரது இசையில் வந்த சில சூப்பர் ஹிட் பாடல்கள் :

  • காக்கிச் சட்ட போட்ட மச்சான் (சங்கர் குரு)
  • சின்ன சின்னப் பூவே (சங்கர் குரு)
  • வானத்தப் பார்த்தேன் பூமியப் பாத்தேன் (மனிதன்)
  • மனிதன் மனிதன்... எவன் தான் மனிதன்(மனிதன்)
  • மல்லிகப்பூ பூத்திருக்கு அது மழையில் நனஞ்சிருக்கு (தாய் மேல் ஆணை)
  • கொலுசே கொலுசே.. எச பாடு கொலுசே (பெண்புத்தி முன் புத்தி)
  • பூஞ்சிட்டு குருவிகளா (ஒரு தொட்டில் சபதம்)
  • ராஜா சின்ன ரோஜாவோடு (ராஜா சின்ன ரோஜா)
  • சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா (ராஜா சின்ன ரோஜா)
  • டில்லிக்கு ராஜான்னாலும் (பாட்டி சொல்லைத் தட்டாதே)
  • வண்ணத்துப்பூச்சி வயசென்ன ஆச்சு (பாட்டி சொல்லை தட்டாதே)
  • ஏதேதோ கற்பனை வந்து (வாய்க்கொழுப்பு)
  • வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர (மாநகரக் காவல்)
இத எழுதும் போது இன்னொரு முக்கியமான விஷயத்தப் பத்தியும் சொல்லணும்... ஒவ்வொரு காலகட்டத்திலும் சந்திரபோஸ் தன்னுடைய இசையில் கே.ஜே.யேசுதாசுக்கு மிகச் சிறந்த பாடல்கள கொடுத்திருப்பாரு.. இது ஒரு அபூர்வமான இணைன்னே சொல்லலாம்..

  • மாம்பூவே சிறு மைனாவே (சந்திரபோசின் முதல் ஹிட்)
  • ஓடையின்னா நல்லோட... ஒளிஞ்சிருக்கப் பூஞ்சோல ( ராஜாத்தி ரோஜாக்கிளி படப் பாடல்)
  • பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டுபோனால் ( இன்றும் அனைத்து ஐய்யப்ப பூஜைகளிலும் தவறாது இடம் பிடிக்கு சந்திரபோஸின் இசைச் சொத்து)
  • தோடி ராகம் பாடவா மெல்லப்பாடு (மாநகரக் காவல்)
  • ரவிவர்மன் எழுதாத கலையோ ( வசந்தி)
  • சந்தோஷம் காணாத வாழ்வுண்டா ( வசந்தி படப் பாடல்... இந்தப் பாடல் ல‌ "வாழ்ந்துவிட்டால்"ன்ற வார்த்தைய தாசேட்டன் பாடும்போது ஒரு Roller Coaster ல சுத்தி மெதுவா land ஆன உணர்வு இருக்கும்..)
  • சின்ன சின்னப் பூவே.. நீ கண்ணால் பாரு போதும் ( சங்கர் குரு)
  • ஏதோ நடக்கிறது... இதமாய் இருக்கிறது... ( மனிதன் - என்ன ஒரு ஃபீல்... றெக்கட்ட நமக்கு மொளக்கிற மாதிரியே இருக்கும்)
  • ஒரு பண்பாடு இல்லையென்றால் ( ராஜா சின்ன ரோஜா படத்தின் தத்துவப் பாடல்)
இந்த ரெண்டாவது இன்னிங்ஸ்ல பாண்டியராஜன் நடித்த ஒரு டஜன் படங்களும், ரகுவரன் நடிப்பில் "மைக்கேல் ராஜ்",  உட்பட ஒரு அரை டஜன் படங்களும், பார்த்திபனின் முதல் படமான புதியபாதையும் அடக்கம்.

1992 ல ரோஜாவுல "ஏ.ஆர். ரகுமான்" னு  வைரமுத்துவுக்கு ஒரு புதுக் கூட்டாளி கெடைக்க‌ ,  "எஜமான்' படம் மூலம் ஏவிஎம் மீண்டும் இளையராஜாவோட கைகோர்க்க அதுக்கு பிறகு இந்தக் கூட்ட்ணி தொடரவே இல்ல...

இவருக்கு மூன்றாவது இன்னிங்சை அளித்தவர் இயக்குநர் வி.சேகர். அவருடைய முதல் படமான 'நீங்களும் ஹீரோ தான்"ல ஆரம்பிச்சு, "வரவு எட்டணா செலவு பத்தணா", "நான் புடிச்ச மாப்பிள்ளை", "பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்", "பொறந்த வீடா புகுந்த வீடா", "நான் பெத்த மகனே"ன்னு வரிசையா எல்லாப் படத்துக்கும் சந்திரபோஸ் இசை தான்.. "காலம் மாறிப் போச்சு"ல தான் தேவா இந்த இடத்துக்கு வந்தார்...

அதற்கு பிறகு நடந்தது பத்தி விரிவா சொல்லத் தேவையில்ல.. 90 கள்ல இளையராவோட இடத்த ரகுமானும்... இவரோட இடத்த இவரது முன்னாள் கூட்டாளி தேவாவும் பிடிக்க அதற்கு பிறகு இவருக்கு பெரிதாய் படங்கள் அமையல... ரொம்ப நாள் கழிச்சு தன்னோட பூஞ்சிட்டு குருவிகளாவ ரீமிக்ஸ் பண்ணி வெளியிட்டாரு... அப்புறம் சீரியல்ல கொஞ்ச நாள் நடிகர் அவதாரம் எடுத்தாரு...

ஒரு பத்தாண்டு காலம் காதுகளை குடையாத மென்மையான நல்ல பாடல்களைத் தந்த இந்த இசையமைப்பாளர் செப்டம்பர் 2010 ல தனது இசையை மட்டும் நம்மளோட விட்டுட்டு பிரிந்தார்.....

முத்தாய்ப்பாய் இந்தச் சுதந்திரப் பொன்னாளில், திரு. சந்திரபோஸ் இசையில் , "இது போன்ற உயர்ந்த பாடல்களை நான் ஊதியம் பெறாமலே பாட ஆசைப்படுகிறேன்" என்று கானகந்தர்வன் கே.ஜே.யேசுதாஸ் சொன்ன அந்தப் பாடலில் இருந்து....

பாசங்கள் போதும் பார்வைகள் போதும்
பாலையில் நீரும் சுரந்து விடும்
புன்னகை போதும் பூமொழி போதும்
போர்களும் கூட முடிந்துவிடும்

பாதையை அன்பே திறந்துவிடும்
பாறையும் பழமாய் கனிந்துவிடும்
வாழ்க்கையின் ஆழம் விளங்கிவிடும்!!!!!!!!

Sunday, August 2, 2015

என்னம்மா..... இப்படி பண்றீங்களேம்மா!!!!!!!!

ஒரு ரெண்டு வருஷத்துக்கு முந்தி ஒரு "நோ தங்கமணி டே" ல கையில கேம‌ராவோட மைசூர் உயிரியல் பூங்கால மர்மோசெட் குரங்க படம் புடிச்சிட்டு இருந்தேன்... அப்போ அங்கே ஒரு குரூப் கேரளாவுல இருந்து வந்தாங்ய... அதுல ஒரு ஆளு "இதா.... நம்மட‌ மலை அண்ணான்..." அப்டின்னாரு  (இது தான் நம்ம ஊரு மலை அணில்னு அர்த்தம்)... நம்மளும் சும்மா இருக்க முடியாம.. இது அணில் இல்லங்க உலகின் மிகச்சிறிய குரங்கு அப்டின்னேன்... அதுல கடுப்பான அந்தாளும்... கொரங்கு எங்கயாச்சும் இத்துணூண்டு இருக்குமா? இது மலபார் அணில்னு சத்யாகிரகம் பண்ணுணாரு...



வேணும்னா கீழ போர்டு இருக்கு பாருங்க அப்டின்னேன்... "ம்ம்.. நீ பாரு... மருமோ....செட்டு...  அப்டின்னா மலையாளத்துல மலை அண்ணான்...." அப்டின்னுட்டு.. (அவர்கூட வந்தவர்கிட்ட "எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுராம் பாரு...  அணில் எது குரங்கு எதுன்னுகூட  தெரியாம" அப்டின்னு பேசிகிட்டே நகர்ந்துட்டாரு)..

நம்ம மனசாட்சியும்... விவேக் வாய்சுல "அடப்பாவிங்களா...  மர்மோசெட்ட மலையாளம் வரைக்கும் கொண்டாந்துட்டீங்களாடா???.. நல்ல வேள‌.. இது தான் மம்மூட்டியோட  அடுத்த படத்துல  ஹீரோயின் அப்டின்னு சொல்லாம விட்டீங்களே அதுவே பெருசு தான்... அது சரி உங்க ஊருக்கு ஒரு ராம.நாராயணன் சார் இல்லாமலா போயிருப்பாரு...." அப்டின்னு பொலம்ப ஆரம்பிச்சிடுச்சு....

இந்த ஒரு ஆளு மட்டுமில்ல... பொதுவாவே Zoo க்கு வர்ர ஆளுக  அடிக்கிற கூத்து இருக்கே... சொல்லி மாளாது... வீட்டுல சீரீயல் பாக்கும் போதெல்லாம் மயில் கழுத்து பொடவை, புள்ளிமான் பார்டர்னு Discovery Channel effect ல‌ பாக்குற குடும்ப இஸ்திரிகள்...  இங்க வரும்போது தான்.. "ஆமாக்கா, நேத்து கரெக்டா எட்டு மணிக்கு கரண்ட கட் பண்ணிட்டானுங்க.. தெய்வ மகளே பாக்க முடியலன்னு ஃபீல் பண்ணுங்க... (அடி பிசாசு மகளே, இங்க வந்தும் உனக்கு தெய்வ மகள் நெனப்பு தானா..)

ஈமு கோழியப் பாத்து... நம்ம ஈரோட்டுல ஈமு வளக்கச் சொல்லி ஏமாத்திட்டு ஓடுனாங்யளே அந்தக் கோழி தான் இது... இது ஒரு குரூப்பு (ஈமுவ பத்தி  Intro குடுக்க எப்புடி ஒரு மேட்டர புடிச்சு வச்சிருக்காங்ய பாரு.. இதுல டெல்லி கணேஷ வேற திட்டுவாங்ய.. )

ஹான் ராஜூ பாய்... போலியே... I have submitted the timesheets for this week... சோனு பேட்டா... Cage கே பாஸ் மத் ஜாவோ... (இது ஒரு பக்கம் போனுக்கும், இன்னொரு பக்கம் சோனுக்கும் நடுவுல வாரக் கடைசிலையும் டீ ஆத்துர ஐ.டி குருப்பு... இங்க வந்துமாடா??? )

மாப்ள.. இதான்டா வான்கோழி.. போன தீவாளிக்கு மன்னார்குடி சாந்தில பிரியாணி அடிச்சமே அதே தான்...  இது ஒரு தின்னிப் பண்டார குருப்பு... (இதுல கொடும என்னன்னா அவிங்ய சொன்னது Ostrich பறவையப் பாத்து... அடேய். இது நெருப்புக் கோழிடா.. ஒயரமா இருக்குன்றதுக்காக இத வான்கோழிங்கிறாம் பாரு...)



இதுக்கு நடுவுல நியூஸ் ரிப்போர்டர் கிட்ட சீரியசா பேட்டி குடுக்குற குரூப்பு ஒண்ணு... "இங்க நாங்க நெரைய தரம் வந்துருக்கோம்... இங்க புலியெல்லாம் தூங்கிகிட்டே இருக்கு.. இந்த மத்திய அரசும், மாநில அரசும் எதாச்சும் நடவடிக்கை எடுத்தா நல்லாருக்கும்... (மத்திய மாநில அரசுக்கெல்லாம் வேர வேலை வெட்டியே இல்லையாம்மா??? இப்டி கெளம்புறீங்களே!!!)

இவங்ய இப்டின்னா ஸ்கூல்ல இருந்து பசங்கள கூட்டிட்டு வர்ர குரூப் வேர மாதிரி இருக்கும்... "மேத்ஸ் மிஸ் போட்டுட்டு வந்திருக்குர Chocker Set நல்லாருக்குல்ல... எங்க வாங்கினாங்கன்னு கேக்கணும்..." இது டீச்சர் குரூப்புன்னா.. பசங்க வேர லெவல்ல மெரட்டுவாங்ய... "இதான்டா நீர் யான... இதுக்கு மூணு கண்ணு இருக்கும்..." (என்னது மூணு கண்ணா?? நல்லவேளடா... இதான் மூணு கண்ணன்னு சொல்லாம போனியே... )

இவங்களாச்சும் பரவால்ல, Facebook ல ஒரு குரூப்பு இருக்கானுங்க பாருங்க... ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்பா.....

டெல்லி உயிரியல் பூங்கால புலி ஒருத்தர இழுத்துட்டு போனப்போ ஆளாளுக்கு ஆராய்ச்சில இரங்கி கதிகலங்க அடிச்சிட்டாங்ய... இதுல உச்சகட்டமா ஒரு ஆளு எழுதுறாரு பாருங்க "அது ஒரு பெண் புலி... தாய்மையின் அடையாளம்.. ஒரு தாய் தன் கண்முன் ஒரு குழந்தை அடிபடுவதை தாங்க முடியாமல் எப்படி காப்பாற்றுவாளோ அப்படித்தான் அந்த இளைஞனை காப்பாற்ற முயன்றது..." (நீங்கல்லாம் எங்கேந்துடா கெளம்புறீங்க... முடியல....) உண்மையில அது ஒரு ஆண் புலி.. பேரு விஜய்... (நம்ம யங் டளபதி இல்லப்பா) புலின்னு இல்ல, நம்ம வீட்டுல இருக்குற நாய், பூனை கூட தன் எல்லைக்குள் இருக்குற பொருளை யாராச்சும் எடுக்க வந்தா அல்லது கல்லால அடிச்சா, தூக்கிட்டு ஓடும்... காரணம்.. "நிம்மதியா இருக்க உடமாட்டீங்களாடா சனியன் புடிச்சவனுங்களான்னு" அர்த்தம்... எல்லாரும் கல்லால அடிச்சப்போ அந்த புலியும் அதையே தான் செஞ்சிச்சு.. ஒரே வித்தியாசம் புலி தன் குட்டிகளைக் கூட கழுத்தைப் பற்றி தான் தூக்கும்.. அப்படி அந்த இளைஞனைத் தூக்குனப்போ அதனுடைய 3 இன்ச் நீளமுள்ள பல் (Canine) கழுத்துல இரங்கி செத்துட்டான்...


இவங்யள சொல்லிக் குத்தமில்ல... நமக்கு நம்ம பக்கத்துல இருக்கிற விலங்குகளப் பத்தியே சரியாத் தெரியாது.. பாலம் கட்டும்போது ராமருக்கு அணில் எளநி ஊத்திக் குடுத்துச்சு.. ஓணான் ஒண்ணுக்கு ஊத்திகுடுத்துச்சுனு சொல்லி அத கல்லால அடிக்க்கிற பரம்பர தான நாம...

நமக்கு தமிழ் சினிமா சொல்லிக் குடுத்த விலங்கியல் கல்வியே நாய்னா "ராஜா", குரங்குன்னா "ராமு", பாம்புன்னா "நாகராஜா", யானைன்னா "வெள்ளிக்கெழம ராமசாமி"... அதுங்க என்னடா செய்யும்???னா... ஹீரோயினுக்கு வளையல் வாங்குறது, வில்லன் ஷூவுக்குள்ள தேள வைக்கிறது, கிளைமாக்ஸ் பைட்டுல நெருப்புக்குள்ள பாஞ்சு சண்ட போடுறது... இதெல்லாம் தான்...

பொதுவா நம்ம ஊருல ஒரு வீட்டுல‌, இந்த வாரம் Zooக்கு போகலாம்னு முடிவு செஞ்சாங்கன்னா, மொதல்ல செய்யிர வேலையே ஒரு தூக்கு வாளி நெரைய புளி சாதமோ இல்ல பிரியாணியோ கட்டுறது தான்... அப்புரம் ரெண்டு ஷட்டில்காக் மட்டையும் ஒரு ஜமுக்காள‌மும் எடுத்துக்கிறது... பத்து பத்தரைக்கா கெளம்பி, அப்டியே போயி ஜமுக்காளத்த விரிச்சு புளிசோத்த ஒரு கட்டு கட்டிட்டு.. மிச்ச சோத்த அங்கேயே கொட்டிட்டு... ரெண்டு ரவுண்டு ஷட்டில் ஆடிட்டு... மதியம் ஒரு ரெண்டு மணிக்காட்ட புலியையும் சிங்கத்தையும் தேடிப் போனா, உச்சி வெய்யில்ல அதது உள்ளார தூங்கிகிட்டு இருக்கும்...

அப்புற‌ம் மத்திய மாநில அரசுகள நடவடிக்கை எடுக்கச் சொல்லிட்டு வந்துருவோம்... குரங்கு இருக்குற எடத்துல நானும் உன் சொந்தக்காரப்பயதான்ற மாதிரி உர்ர்ருனு கத்துறது... அது திரும்பலைன்னா கல்லக் கொண்டு அடிக்கிறது... புதுசா கெளம்பியிருக்கிற ஃபோட்டோ மோகத்துல  அதப் புடிச்சி பப்ளிகுட்டி பண்ணிக்கிறதுண்ணு நமக்குன்னு ஒரு தனி அஜெண்டாவே உண்டு... இந்த போட்டோ கிருக்கு முத்தி சமீபத்துல ஒரு ஆளு பூங்காவுல இருந்த ஒரு ஊழியர கரெக்ட் பண்ணி ஜாகுவார் கூண்டுக்குப் போயி கையக் கால இழுத்து போட்டோ புடிச்சது மட்டுமில்லாம Facebook ல பப்ளிகுட்டி பண்ணப்போயி போலிசுல மாட்டி கம்பி எண்ணுற அளவுக்கு போயிருச்சு...


இது ஒரு பக்கம் இருக்கும்போது, பூங்காக்கள்ள இந்த விலங்குகளப் பராமரிக்கிற ஊழியர்கள் பண்ணுற அலப்பறை இன்னும் அதிகம்... காச வாங்கிகிட்டு கண்டவனையும் விலங்குகளின் தனியறைக்குள் விடுவது... பூங்காக்கள்ல இருக்குற சந்தன மரங்கள வெட்டிவித்து மாட்டிகிறது, சமீபத்துல.. ஒரு சிம்பன்சிய தப்பிக்க விட்டு அதுக்கப்புறம் அத வெளக்கமாத்தால அடிச்ச‌து (நெஜந்தாங்க)... இப்படி அடுக்கிகிட்டே போகலாம்...

இந்தியாவுல 164 உயிரியல் பூங்காக்கள் (Central Zoo Authority of India accredited)  இருந்தாலும் WAZA அப்டிங்கிற "World Assocciation of Zoos and Aquariums"அங்கீகாரம் பெற்ற பூங்காக்கள் வெறும் நாலே நாலு தான்... இவ்வளவு பெரிய துணைக்கண்டத்துல நாலு பூங்காக்களுக்கு உலக அங்கீகாரம் வாங்கவே முக்கவேண்டி இருப்பதற்கு காரணங்களே நாம மேல பார்த்த விழிப்புணர்வின்மை, சரியான பராமரிப்பின்மை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்.. இது மூணும் தான்....

சரி Zooவுல அப்டி என்னத்த பண்ணணும்?? என்ன பண்ணலாம்??

Zooக்கள் அமைக்கப்படுவதன் நோக்கமே 3 காரணங்களுக்காக, Creating Awareness, Captive Breeding, Introduction of new blood lines. இதுல முதல் காரணமான விலங்குகள் மற்றும் அதன் சுற்றுச் சூழல் மேலான விழிப்புணர்வை வளர்ப்பது...

  • உதாரணத்திற்கு, நமது உயிரியல் பூங்காக்களில் பார்க்கிற‌ Leopard, Cheetah, Jaguar இந்த மூன்று புள்ளிப்புலிகளையும் நாம சொல்றது சிறுத்தைன்னு தான்..  பார்வைக்கு ஏறக்குறைய ஒரே மாதிரி இருந்தாலும் உடலமைப்பிலும், வேட்டையாடும் முறை, அவை வசிக்கும் சூழலும் முற்றிலும் வேறானவை... Leopard ஆசிய மலைக்காடுகளிலும், Cheetah ஆப்பிரிக்க சமவெளிகளிலும், Jaguar தென்னமெரிக்க மழைக்காடுகளிலும் வசிப்பவை. இந்த வேறுபாடுகளையும், அவற்றின் சூழலையும் பாக்க வர்ர பசங்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம்.
  • வெள்ளைப் புலியையும், கருஞ்சிறுத்தையயும் பார்த்து வெறுமனே ஆச்சர்யப் படாமல் அவைகளின் தோலின் நிறமி மாற்றத்தால் ஏற்படும் melanism மற்றும் albinism பத்தி பசங்களுக்கு சொல்லித் தரலாம்.
  • பார்வைக்கு மான்னு தெரிந்தாலும் உருவ அமைப்பில் வேறுபாடு கொண்ட Deer மற்றும் Antelope பற்றிய வேறுபாடுகளை சொல்லித்தரலாம்...
என்னய்யா எல்லாமே பள்ளிக்கூடத்து பசங்களுக்கா சொல்ற, பூங்காவுக்கு சின்னப்பய மட்டுமா போறான்ன்னு கேக்குற ஆட்களுக்கு நாம தெரிஞ்சுக்கவும் ஏராளம் இருக்கு...

  • மொதல்ல எந்த சமயத்துல Zooக்கு போகணும்னு தெரிஞ்சுக்கணும்... அதிகாலை 08:30 - 10:30 அல்லது மாலை 4 முதல் போகலாம்.. இந்த நேரத்தில் அவை சுறுசுறுப்பாக இயங்கும். மதிய நேரத்துல போனா அவைகள் ஓய்வு எடுக்கும். (அப்புறம் மத்திய மாநில அரசுகளத் தான் திட்டணும்).
  • ரொம்ப அடிப்படையா ஒரு விலங்கு எந்தப் பகுதியை சேர்ந்தது, அதன் உணவுப் பழக்கம் என்னன்னு தெரிஞ்சுக்கலாம். Zooக்களில் அவற்றின் அடிப்படையான உணவுப் பழக்கவழக்கதைப் பொருத்து தான் உணவு கொடுப்பாங்க.. குரங்கினங்களுக்கு பழங்கள் மற்றும் வெள்ளரி, மான், மிளா, காட்டெருமை போன்ற தாவர உண்ணிகளுக்கு தீவனப்புல்லும், தவிடும், நரி, செந்நாய், ஓநாய் போன்ற சிறிய ஊனுண்ணிகளுக்கு கோழி இறைச்சி, புலி, சிங்கம் போன்ற பெரிய ஊனுண்ணிகளுக்க்கு மாட்டிறைச்சி, கரடிகளுக்கு பூச்சிகள் மற்றும் தேன், சிறிய பாம்புகளுக்கு எலிகள், ராஜநாகத்திற்கு உணவாக சிறிய பாம்புகள், பறவைகளுக்கு தானியங்கள் இப்படி நிரைய இருக்கு.. 
  • இந்தியாவின் தேசிய விலங்கு புலி, தேசியப் பறவை மயில்னு எல்லாருக்கும் தெரியும். ஆனால் நம்மில் ரொம்ப பேருக்கு தெரியாத விஷயம், அதே போல ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு மாநில விலங்கும் பறவையும் கூட உண்டு அப்டிங்கிறது... உதாரணத்துக்கு தமிழகத்தின் மாநில விலங்கு வரையாடு, கேரளத்திற்கும், கர்நாடகாவுக்கும் இந்திய யானை, ஆந்திராவுக்கு கிருஷ்ண ஜிங்க்கா என்கிற மானினம், தெலுங்கானாவுக்கு புள்ளிமான்...

  • இந்தியாவில் ஒரே ஒரு உயிரியல் பூங்காவில் மட்டுமே உள்ள அறிய வகை வெளிநாட்டு உயிரினங்கள் உண்டு... உதாரணத்துக்கு "வண்டலூரில் மட்டுமே உள்ள "European Brown Bear" மற்றும் "Pygmy Hippo", மைசூரில் மட்டுமே உள்ள "Brazilian Tapir", "Madagascar Meerkat", மற்றும் "Savannah Bat Eared Fox", ஒரிசாவின் நந்தன் கானனில் மட்டுமே உள்ள "Orangutan", டார்ஜிலிங் உயிரியல் பூங்காவில் மட்டும் உள்ள பாகிஸ்தானின் தேசிய விலங்கு "Markhor", ஐதராபாத்தில் மட்டுமுள்ள "Galapagos tortoise" மெகா சைஸ் ஆமை.
  • உலகிலேயே ஒரு உயிரியல் பூங்காவின் பெயரில் ஒரு விரைவு ரயில் வண்டி இயங்குவது இந்தியாவில் தான்... அது ஒரிசா மாநிலத்தின் பூரி நகரிலிருந்து புதுதில்லி வரை செல்லும் 'நந்தன் கானன் விரைவு வண்டி".
இப்படி எழுதிகிட்டே போகலாம்... இதெல்லாம் எழுதும்போது ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துட்டேன்... Zoo ல உச்சக்கட்டமா ஒரு அக்கப்போர் பண்றாங்யப்பா... தப்பித் தவறிக்கூட எந்தப் புதர்கிட்டயும் போயிடாதீங்க... ஜோடி ஜோடியா உள்ளேந்து வர்ராங்ய... நம்ம வீட்டு வாசல்ல ரெண்டு நாயோ அல்லது கழுதையோ ஒண்ணா இருந்தா "ச்சீ சனியனுங்களா வீட்டு வாசல்ல வந்து மோந்துகிட்டு அலையிதுங்க பாரு.."னு கல்லத்தூக்கி அடிப்போம்... அதே வேலைய ஆறாம் அறிவு இருக்கிற நம்மாளுங்க அதுங்க வீட்டு வாசல்ல (Zoo ல) பண்றது தான் நான் சொன்ன உச்சக்கட்ட அசிங்கம்...


பேச்சு மொழி மட்டும் இருந்தா அந்த விலங்குகளும் இதையே சொல்லித்தான் நம்மை திட்டும்...

"என்னம்மா..... இப்படி பண்றீங்களேம்மா!!!!!!!!"