Tuesday, April 13, 2021

பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும் !!!

 

நாளைக்கு தமிழ் புத்தாண்டு ஆச்சே... அதனால தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்த்த ஒருவரைப் பற்றி எழுதலாம்னு நெனச்சேன்....

சரி … "தமிழ் - மண் - பெருமை" என்று யோசித்துக் கொண்டிருந்தேன்...

தற்செயலாக தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த ஒரு புதுப் படத்தின் பாடல் என் கவனத்தை ஈர்த்தது... அதிலும்... சரணத்தில்

"பதராப் போயி சருகா ஆச்சு எம் மனசு - நீ

ஓட நீரா ஓடிவந்து உசுருக்கு உசுரூட்டு "

Pain and Wailing என்று சொல்வார்கள்.. அதன் அச்சுப்பிசகாத வெளிப்பாடு!!!! இதயத்தைப் பிடித்து இழுத்து என்னவோ செய்துவிட்டுப் போகும் குரல்.

அப்பொழுது தான் நான் யோசித்துக் கொண்டிருந்த "தமிழ் - மண் - பெருமை" முடிச்சிற்கு விடை கிடைத்து அந்த குரலைப் பற்றியே எழுத முடிவு செய்தேன்.



திரையிசை பாடகர்களில் பலவிதமான  குரல்கள் உண்டு... முழுக்க மென்மையான பி.பி.ஸ்ரீனிவாஸ், .எம். ராஜா, ஜெயச்சந்திரன் போன்ற குரல்கள்… அதற்கு நேரெதிராக ஆலயமணி போல உச்சஸ்தாயியில் கணீரென்று ஒலிக்கும் சீர்காழி கோவிந்தராஜன் , டி.ஆர். மகாலிங்கம் போன்ற குரல்கள்... துள்ளலான பாடல்களின் பிரத்யேக தேர்வான சந்திரபாபு, தேவா, சபேஷ் போன்ற குரல்கள்... மரபிசையை அழுத்தமாக வெளிப்படுத்தும் யேசுதாஸ், ஹரிஹரன் போன்ற குரல்கள்... தமிழ் மண்சார்ந்த வாழ்வியலை வெளிப்படுத்தும் புஷ்பவனம் குப்புசாமி, தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் போன்ற குரல்கள் இப்படி பலவகை உண்டு... இதில் காதல், சோகம், பக்தி, உற்சாகம்  என்று எந்த மாதிரியான உணர்வையும் மென்மையாகவோ கணீரென்றோ  கொண்டு வந்து அந்த உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்துவது தான் ஒரு முழுமையான Cinematic Voice என்று சொல்லுவார்கள்... 

இன்னும் எளிமையாக சொல்வதென்றால் தமிழகத்தின் வடக்கில் இருக்கும் ராயபுரம் ரசிகனுக்கும் தெற்கில் இருக்கும் ராதாபுரம் ரசிகனுக்கும் ஒரு பாடலை கேட்கும் பொழுது அந்தக் குரல் "அட நம்மூரு வாய்ஸ்" என்று தோன்ற வைப்பது தான் வெற்றிகரமான சினிமா பாடகரின் குரல். அப்படி ஒரு குரலை உடைய பாடகரைப் பற்றிய பதிவு தான் இது.

இன்னும் சொல்வதென்றால் எஸ்.பி.பி, யேசுதாஸ், டி.எம். எஸ்ஸுக்கேல்லாம்  கிடைக்காத ஒரு அரிய புகழை இந்த மண்ணுக்கு பெற்றுத் தந்த ஒரு குரல்...

யார் அந்தப் பாடகர்??.. அப்படி என்ன பெருமை ??..... அவரது பெயர்

ராஜன் சக்ரவர்த்தி!!!

1991 ம் ஆண்டு கவியரசு கண்ணதாசனின் வாரிசு கலைவாணன் கண்ணதாசன் எடுத்த "வா அருகில் வா" படத்தில் தான் (இசை - சாணக்யா) இந்தப் பெயர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனது..



1991 ல் இருந்து 1993 ம் ஆண்டு வரையில் இரண்டு ஆண்டுகளில்

  • ·         பப்பளக்குற பளபளக்குற - வைகாசி பொறந்தாச்சு
  • ·         இஞ்சி இடுப்பழகி - வைகாசி பொறந்தாச்சு
  • ·         தமிழ் நாட்டு தாய்க்குலமே - முக்தா பிலிம்ஸின் பிரம்மச்சாரி (ஜனகராஜுக்கு கிடைத்த அபூர்வமான பாட்டு)
  • ·         சின்ன இதழ் செண்பகமே - வைதேகி வந்தாச்சு

என்று தேனிசை தென்றல் தேவாவின் இசையில் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார் ... இவற்றில் வெளிவராத படங்களும் கூட உண்டு

  • ·         அம்மா தானம்மா  - ராமராஜனின் மண்ணுக்கேத்த மைந்தன்
  • ·         மாலக் கருக்கல் வந்து - நாடோடிக் காதல்
  • ·         உன்ன நான் தொட்டதுக்கு -  அகத்தியனின் அதிகாலை சுபவேளை (பிறகு இந்தப் பாடல் கே. எஸ்.ரவிக்குமாரின் ஊர் மரியாதை படத்தில் எஸ்.பி.பி குரலில் பயன்படுத்தப் பட்டது )

அவரது வெற்றிகரமான திரைப் பாடல்களையும் சாதனைகளையும் பார்ப்பதற்கு முன்பு, இந்த இடத்தில் ஒரு Flash Back   ...

"Tortoise  கொளுத்துங்க!! கொசுவை விரட்டுங்க!! சந்தோஷமா இருங்க!!!

இதை நான் Flash Back  போறதுக்காக மட்டும் சொல்லல... 80 களில் மிகப் பிரபலமாயிருந்த இந்த விளம்பர பாடலைப் பாடியதும் இவர் தான்.

சேலம் மாவட்டத்தின் வீரபாண்டி ஒன்றியத்தில் உள்ள சிற்றூர் "வேம்படித்தளம்". அது தான் அவரது சொந்த ஊர். சேலம் சௌந்தர் இசைக்குழுவில் பாடிக்கொண்டிருந்த அவருக்கு முதல் அதிருஷ்டம் ஏற்காடு மலர்க்கண்காட்சியில் பாடிய பொழுது அடித்தது... இவர் பாடிய பாடலை நடுவராக வந்திருந்த இசையமைப்பாளர் வி.குமார் வெற்றிப்பாடலாக தேர்வு செய்ய, "உங்களுக்கு நல்ல குரல் வளம் இருக்கு, நீங்க சினிமாவில் முயற்சி செஞ்சா பெரிய ஆளா வரலாம்" என்று ஆளாளுக்கு உசுப்பேத்திவிட சினிமா கனவுகள் அவரை  தொற்றிக்கொண்டன..

அப்போது அந்த இசைக்குழுவில் புல்லாங்குழல் வாசித்தவர் , நீங்க முதல்ல சென்னை இசைக்கல்லூரியில சேர்ந்து படிங்க என்று ஆற்றுப்படுத்த சென்னை இசைக் கல்லூரியில் சேர்ந்து கர்நாடக இசை மேதைகள் "பி.ராஜம் அய்யர்" போன்றவர்களிடம் தேர்ச்சி பெற்று கல்லூரியில் முதல் மாணவராக அப்போதைய முதல்வர் " எம்.ஜி.ஆர்" கையால் விருது பெற்றார்..

பின்னர் இசையமைப்பாளர் ஆர்.ராமானுஜத்திடம் உதவியாளராக இணைந்து பணிசெய்திருக்கிறார்...  (அன்னப்பறவை, அனுக்கிரகம், ஆனந்த பைரவி, அண்ணன், கைதியின் தீர்ப்பு , அவள் ஒரு கவரி மான், புத்தம் புது நாயகன் போன்ற படங்களுக்கு இசையமைத்த இந்த ராமானுஜம் எஸ்.ஜானகியை "மகதல நாட்டு மேரி " படத்தின்  மூலம் தமிழுக்கு அறிமுகம் செய்த "ரங்கஸ்வாமி பார்த்தசாரதி"யின் உடன்பிறந்த தம்பி... " எஸ்.பி.பியின் அரிதான பாடல்களை நான் தேடி அலைந்த சமயத்தில் "அன்னப்பறவை" படத்தில் "பொன்னென்பதோ" என்ற அபூர்வமான பாடலைக் கேட்கக் கிடைத்தது...)

"அண்ணன்" படத்தில் தான் இவரை ராமானுஜம் பாடகராக அறிமுகம் செய்தார்.. ஆனால் படம் தான் வெளிவரவில்லை.

1984ல் புரட்சித் தலைவர் நோயுற்று இருந்த சமயத்தில் அப்போதைய பவானிசாகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் "நவரசம் ஜி.கே.எஸ்" உடன் இணைந்து பூவை செங்குட்டுவன் மற்றும் புலவர் புலமைப்பித்தன் வரிகளில் "அன்னமிட்டகை எம்.ஜி.ஆர். பிரார்த்தனை பாமாலை " என்று ஒரு ஆல்பத்தை ராமானுஜம் வெளியிட்டார் அதில் இவர் நான்கு பாடல்களை பாடியிருந்தார்.


1985
ல் கே.வி.மகாதேவன் இசையில் கிருஷ்ணா - ஜெயப்பிரதா நடித்து வெளிவந்த தெலுங்கு டப்பிங் படமான 'வில்லாளன் ஏகலைவன்' படத்தில் "ஓங்கார டமருகம்' என்று அறிமுகப் பாடல் பாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

பக்திப் பாடல்களையும் ஆடியோ விளம்பரங்களையும் (அதில் ஒன்று தான் நான் முதல் பத்தியில் சொன்ன கொசுவர்த்தி விளம்பரம் ) பாடி காலத்தை தள்ளி வந்த அந்த இளைஞருக்கு "வா அருகில் வா" படத்தை அடுத்து அப்போது திரைப்படங்களுக்கு இசை அமைக்க தொடங்கி இருந்த மற்றொரு பிரபல இசை அமைப்பாளரிடம் உதவியாளராக இணையும் வாய்ப்பு கிடைத்தது.

Flash Back Over!!!

1993ல் வெளிவந்த இயக்குநர் மணிவண்ணனின் கவர்மெண்ட் மாப்பிள்ளை படத்தில் "சொந்தம் என்பது" என்னும் சோகப் பாடல் இவருக்கு கிடைத்தது.. ஆனால் அந்தப் படம் அந்தப் பாடகரின் வாழ்வில் ஒரு முக்கியமான வெற்றிகரமாக மைல் கல்லாக அமைந்தது என்று சொல்லலாம்..

அந்தப் பாடலை எழுதியவர், இசையமைத்தவர் மற்றும் பாடியவர் மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு... ஆம் எழுதியவர் திருப்பத்தூர் ராசுவாக இருந்து, பின்னர் திருப்பத்தூரான் ஆகி வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் "கவிஞர் காளிதாசன் " ஆனார்.. இசை அமைத்தவர் தேவநேசன், நாடோடி சித்தன் , சித்தரஞ்சன் , மனோரஞ்சன் இப்படி பலபெயர்களில் 13 படங்கள் இசையமைத்து வெளிவராமல் போய், பின்னர் தேனிசை தென்றலாய் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியவர்.. பாடிய பாடகரும் ஆர். கிருஷ்ணராஜ், ராஜன் சக்கரவர்த்தி என்ற பெயர்களில் பாடி பிறகு மீண்டும் கவர்மெண்ட் மாப்பிள்ளை படத்தின் மூலம் "கிருஷ்ணராஜ்" என்று அறிமுகம் ஆகி பல வெற்றி பாடல்களை வாரி வழங்கி தமிழக அரசின் விருதுகளையும் உலகத் தமிழர் இதயங்களையும் வென்ற அவரே  இந்தப் பதிவின் நாயகர்


முந்தைய பாடலில் (அதிகாலை சுபவேளை ) இருந்த ஈர்ப்பில் இயக்குனர் அகத்தியன் 1996 ல் இயக்கிய ஒரு படத்தில் இவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அமைந்தது அது தான் அந்த பாடகரின் வாழ்க்கையில் ஒரு புதிய ஏட்டையே புரட்டிய "காதல் கோட்டை" படத்தில் இடம்பெற்ற "வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா" பாடல்
. வெகுஜன ஈர்ப்பை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்த இந்தப் பாடலுக்கு பிறகு 90 களின் பிற்பாதியில் தமிழ் சினிமாவின் முன்னணி பாடகர்களில் ஒருவராக இருந்தார் என்றார் மிகையில்லை.



முதல் பத்தியிலேயே நான் சொன்னது போல ஒரு முழுமையான Cinematic Voice கிருஷ்ணராஜுடையது . சரியான இசையமைப்பாளர்கள் கையில் அது கிடைக்கும் பொழுது பொக்கிஷம் மாதிரி பாடல்கள் அமைந்தன. குறிப்பாக தேனிசை தென்றல் தேவா அவரது குரலின் வீச்சை நன்கு உணர்ந்து அற்புதமான பாடல்களை தந்தார்.

  • ·         எந்தன் உயிரே எந்தன் உயிரே - உன்னருகே நான் இருந்தால்
  • ·         ஜனவரி மலரே நலம் தானா - மனம் விரும்புதே உன்னை
  • ·         கருடா கருடா - நட்புக்காக
  • ·         சின்ன சின்ன முந்திரியாம் - நட்புக்காக
  • ·         இதயம் இதயம் இணைகிறதே - விடுகதை
  • ·         நகுமோ நீ சுகமோ - அருணாச்சலம்

என்று அவரது குரல் மெல்லிசையில் உருகி வழிந்தது. அதற்கு நேர்மாறாக தேவாவின் டிரேட் மார்க்கான கானாவிலும் துள்ளலான கிராமிய பாணியில் அமைந்த   பாடல்களிலும் கூட கிருஷ்ணராஜ் கலக்கி எடுத்தார். உதாரணத்திற்கு

  • ·         திருப்பதி ஏழுமலை வெங்கடேசா - நினைவிருக்கும் வரை
  • ·         யப்பா யப்பா அய்யப்பா - ஏழையின் சிரிப்பில்
  • ·         ஆனா ஆவன்னா  - பாஞ்சாலங்குறிச்சி 
  • ·         கட்டுனா அவளக் கட்டணுண்டா - ஜெயசூரியா
  • ·         வாடி மச்சினிச்சி - லவ்லி 
  • ·         சிலோனு சிங்கள பொன்னே சிணுங்காதே (தொகையறா மட்டும்) - சந்தித்த வேளை

என்று 90 களின் ரசிகர்களை ஆட்டம் போடவைத்த  ஹிட் பாடல்களை சொல்லலாம்

ஆட்டம் போடவைத்த என்றதும் நினைவுக்கு வரும் மற்றொரு விஷயம் திரையில் நடன இயக்குனர்கள் தோன்றும் பாடல்கள் என்றாலே அப்போது கிருஷ்ணராஜ் தான். அதிலும் ராம்ஜி மாஸ்டர் என்றால் கண்ணை மூடிக் கொண்டு சொல்லி விடலாம் இவர் பாட்டு தான் என்று.

 

  • ·         வெள்ளரிக்கா பிஞ்சு, நீ பாத்துட்டு போனாலும் , லில்லி லில்லி - ராம்ஜி மாஸ்டருடன்.
  • ·         நான் சால்ட் கோட்ட, காஞ்சிவரம் போவோம்  - ராஜு சுந்தரம் மாஸ்டருடன்.
  • ·         ஊத்திக்கினு கடிச்சிக்கவா , யப்பா யப்பா அய்யப்பா , ஆயா ஒன்னு அடம்புடிக்கிது , திருப்பதி ஏழுமலை என்று பிரபுதேவாவுடன்
  • ·         பூத்து சிரிச்ச பொண்ணு - ஸ்ரீதர் மாஸ்டருடன்
  • ·         நான் ரெடி நீங்க ரெடியா - ராகவா லாரன்சுடன்

என்று ஆட்டக்காரர்களுடன் இந்த பாட்டுக்காரர் ஜோடிகட்டிய பாடல்கள் அநேகம்.

தேவாவுக்கு அடுத்தபடியாக இவரை கிட்டத்தட்ட  தனது எல்லா படங்களிலும் பயன்படுத்திய ஒருவர்  இசையமைப்பாளர் பரணி.

  • ·         நீ பாத்துட்டு போனாலும் - பார்வை ஒன்றே போதுமே
  • ·         காதல் பண்ணாதீங்க - பார்வை ஒன்றே போதுமே
  • ·         கண்ணும் கண்ணும் பாத்துக்கிட்டா - சுந்தரா டிராவல்ஸ்
  • ·         விளக்கு வச்சதும் - அலையடிக்குது
  • ·         பிகரு - பேசாத கண்ணும் பேசுமே
  • ·         புடவை வாங்கி - மீச மாதவன்
  • ·         நா உன்ன நீ என்ன - காற்றுள்ளவரை
  • ·         போதாது போதாது - திருடிய இதயத்தை
  • ·         கண்ணாடி சேல - சார்லி சாப்ளின்

என்று தான் உச்சத்தில் இருந்த 2001 - 2005 காலகட்டத்தில் கிருஷ்ணராஜூக்கு நிறைய பாடல்களை தந்தவர் பரணி.

கமல் ஹாசன் ஒருவரைத் தவிர மற்ற மூத்த நடிகர்கள் மற்றும் 90 களின் இளம் தலைமுறை நாயகர்களான அஜித், விஜய் என்று அனைத்து நடிகர்களுக்கும் அதே போல  தமிழ்த் திரையுலகில் சற்றொப்ப அனைத்து முன்னணி இசையமைப்பாளர்கள் இசையிலும் பாடிவிட்டார் கிருஷ்ணராஜ். உதாரணத்திற்கு

  • ·         பொட்டுமேல  பொட்டு - கண்களும் கவிபாடுதே - இளையராஜா
  • ·         ஈச்சி எலுமிச்சி - தாஜ்மஹால் - .ஆர்.ரஹ்மான்
  • ·         தாயே திரிசூலி - சிம்மராசி - எஸ். . ராஜ்குமார்
  • ·         போராடினால் - அப்பா அம்மா செல்லம் - பரத்வாஜ்
  • ·         சோக்கு சுந்தரி - மூவேந்தர் - சிற்பி
  • ·         மண்ணுக்கு நாம் தான் - புரட்சிக்காரன் - வித்யாசாகர்
  • ·         பூத்து சிரிச்ச பொண்ணு - மாயாண்டி குடும்பத்தார் - சபேஷ் முரளி
  • ·         சண்டாளி உன் பாசத்தாலே - பருத்தி வீரன் - யுவன்
  • ·         நாலு நிமிஷம் - சூரரை போற்று - ஜி.வி.பிரகாஷ்

என்று 1985 ல் கே.வி.மஹாதேவன் முதல் 2020ல் ஜி.வி. பிரகாஷ் வரை 35 ஆண்டுகளில் இந்தப் பட்டியல் மிக நீளம்.



கிருஷ்ணராஜ் குரலில் உள்ள பலம் என்றால் :

  • ·         மரபிசையில் முறையான பயிற்சியும் அதன் மூலம் தமிழ்நாடு இயலிசை மன்றத்தில் கச்சேரி நடத்துமளவு பெற்ற ஸ்வர ஞானமும் , தேவையான சங்கதிகளை பாடலில் நினைத்தபடி கொண்டு வருவது.
  • ·         டிராக் பாடகராக இருந்ததால் ஒரு இசையமைப்பாளர் எந்தப் பாடகரை மனதில் வைத்து எந்த உணர்வில் ஒரு வரியை மெட்டமைத்திருப்பார் என்பதை நன்கு உணர முடிவது  .
  • ·         இயல்பாகவே இவரது மண்சார்ந்த பின்புலமும் அதன் இசைவடிவங்களில் உள்ள அறிமுகமும்

பெரும்பாலும் கனமான குரலை உடைய பாடகர்களுடனோ(தேவா , சபேஷ் , மனோ)  அல்லது பிறமொழிப் பாடகர்களின் (உதித் நாராயணன், சுக்விந்தர் சிங் )  பாடல்களிலோ Counter Melody பாடுவதற்கு இவர் குரல் சரியாகப் பொருந்தி இருக்கிறது

இசைஞானி இளையராஜாவின் காதல் ஓவியம் படத்தில் "பூஜைக்காக வாழும் பூவை" பாடலை எஸ்.பி.பி பாடுவதற்காக டிராக் பாடியவர் பாடகர் தீபன் சக்ரவர்த்தி. பாடலை கேட்ட எஸ்.பி.பி "இதுவே மிகச்சிறப்பாக இருக்கிறது... தீபன் பாடியதே இருக்கட்டும்" என்று படத்தில் இடம் பெறச்செய்தார். அந்தப் பாடலுக்கு தமிழக அரசின் சிறந்த பாடகருக்கான விருது தீபன் சக்ரவர்திக்கு கிடைத்தது.

தேவாவின் டிராக் பாடகராக தனது வெற்றி பயணத்தை தொடங்கியவர் கிருஷ்ணராஜ். தீபன் சக்கரவர்த்தியை போலவே இந்த ராஜன் சக்கரவர்த்திக்கும் நிறைய வெற்றிகள் இப்படி கணக்கில் உண்டு.

ஆனந்த பூங்காற்றே படத்தில் பாட்டு வாத்தியாராக வரும் கார்த்திக் பாடுவதாக

"பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும் " என்றொரு பாட்டு உண்டு.

 

"மெட்டு மெட்டு வர்ண மெட்டு மெல்லிசை படிக்குதடி

மொட்டு மொட்டு முல்லை மொட்டு மெட்டுக்கு திறக்குதடி

விட்டுவிட்டு அலைவந்து நட்டுவாங்கம் சொல்லுதடி

நட்டுவாங்க சந்ததிற்கு நாணல் தா-தை ஆடுதடி

அஞ்சுமணி குயில் ஒன்னு பஞ்சமத்தில் நிக்கையிலே

பச்சப் பசுங்கிளி ஒன்னு சட்ஜமத்தில் தாவுதடி

சோகத்துக்குள் உள்ளதெல்லாம் ராகத்துக்குள் சிக்குதடி

பாடலென்பதொரு மாயமாகுதடி பாடல் பாடுகையில் மாடு மேயுதடி"

 

இந்த தொகையறா முழுவதும் ஒரே மூச்சில் பாடவேண்டியது. தொடக்கத்தில் ஸ்வரமாகவும் முடிவில் வரிகளாகவும் ஹரிஹரன் பாடுவார். இதில் கிருஷ்ணராஜ் மாடு மேய்க்கும் இளைஞன் பாடும் version ஒன்றை பாடி இருப்பார். ஹிந்துஸ்தானி ஸ்வரங்களை எல்லாம் சம்மர்சால்ட் அடிக்கும் ஹரிஹரன் இந்த வரிகளை பாடும் போது கொஞ்சம் சிரமப்பட்டிருப்பார். கிருஷ்ணராஜ் இந்த breathless பாடல் வரிகளை அனாயசமாக பாடியிருப்பது நம்மால் எளிதாக உணர முடியும்.

மற்றொரு உதாரணம் சூப்பர் ஸ்டாரின் அருணாச்சலம் படத்தில் வரும் "நகுமோ நீ சுகமோ". ஹரிஹரன் பாடுவதற்காக டிராக் பாடியவர் கிருஷ்ணராஜ். ஹரிஹரன் பாடி கேசட்டில் கூட வெளிவந்தது.ஆனால் சூப்பர் ஸ்டாருக்கு இவரது குரல் பிடித்து போக திரைப்படத்தில் வரும் காட்சியின் பின்னணியில் ஒலித்தது இவர் குரல் தான். இந்தப் படத்தில் "சிங்கம் ஒன்று புறப்பட்டதே" பாடலின் மெட்டில் "தெய்வம் இன்று " என்றொரு பாடலும் இவர் குரலில் உண்டு.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போன்ற நிகழ்வொன்று உண்டு. இந்தப் பதிவின் தொடக்கத்தில் நான் சொன்ன அந்தப் பெருமை.

இயக்குனர் சேரனின் பொற்காலம் படத்திற்காக ஒரு மண்பானை செய்யும் இளைஞனின் காதலை வார்த்தைகளில் வடித்திருந்தார் கவிஞர் வைரமுத்து. இல்லையில்லை "அவனது மொழியிலேயே வனைந்து எடுத்திருந்தார்". அந்தப் பாடல் வழக்கம் போல ஒரு கிராமிய இசைக்கலைஞர் பாடி ஒளிப்பதிவு செய்வதற்காக டிராக் பாடி இருந்தார் கிருஷ்ணராஜ். ரோஜா கம்பைன்ஸ் அலுவலகத்தில் அந்தப் பாடலை கேட்ட அனைவரும் இவரது குரலே சிறப்பாக இருப்பதாய் கூற அந்த அற்புதமான பாடல் இவர் குரலிலேயே வெளிவந்தது.

"தஞ்சாவூரு மண்ணு எடுத்து " என்று ஊரெல்லாம் சுற்றி மண்ணெடுத்து வைரமுத்து அமைத்தது அடித்தளம் என்றால் , தேம்பொடிக் குரலால்  அதில் உயிர்மூச்சை நுழைத்தது வேம்படித்தளம் . அதனால் தான் இன்றும் தமிழ் ரசிகர்கள் தம் தலைமேல் வைத்துக் கொண்டாடும் அந்தப் பாடலுக்கு தமிழக அரசு விருது கிடைத்தது

இசைஞானி இளையராஜா சொல்வார்

"என் பாடல்களை கேட்கின்ற ஜீவன்களில் ஒரேயொரு ஜீவனாவது இவன் ஆன்மாவை இதில் கரைய விட்டிருக்கிறான் என்பதை உணர்ந்தால், நான் ஜென்மம் எடுத்ததன் பயனை அடைந்ததாக எண்ணி மகிழ்வேன்".

அதைப் போலவே இந்தப் பாடலில் தனது ஜீவன் முழுவதையும் கரைய விட்டிருப்பார் கிருஷ்ணராஜ். அதை உணர்ந்த பல கோடி ஜீவன்களில் மாபெரும் பிரபலம் ஒருவர் அடக்கம்.

சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் திரு. எஸ்.ஆர். நாதன் அவர்கள் தான் அந்தப் விவிவிஐபி.



மகாத்மா காந்திக்கு எப்படி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் "வைஷ்ணவ ஜனதோ " பாடலோ அப்படித் தான் திரு எஸ்.ஆர். நாதன் அவர்களுக்கு இந்தப் பாட்டு... இதற்காக பிரத்யேகமாக தேனிசை தென்றலை குழுவோடு சிங்கப்பூர் வரவழைத்து கிருஷ்ணராஜ் அவர்களை பாடவைத்து கேட்டு தன்னை இழந்தவர். அந்த மறத்தமிழர் மறைந்த பொழுது  அவர் விரும்பியபடி அவரது இறுதி நிகழ்வில்  இந்தப் பாடல் ஒளிபரப்பானது.

நான் இந்தப் பதிவின் தொடக்கத்தில் சொன்ன தமிழ்த் திரையுலகின் எந்தப் பாடகருக்கும் கிடைக்காத பெருமை... அது என்ன தெரியுமா??

இந்திய தேசத்தின் எல்லைகளை எல்லாம் தாண்டி ஒரு உலகத் தலைவரின் இறுதி நிகழ்வில் ஒலித்த ஒரே தமிழ்த் திரைப்பட பாடகரின் குரல் திரு. கிருஷ்ணராஜ் அவர்களுடையது தான். அந்த அற்புத குரலோனுக்கு  2019 ஆம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருது கவுரவித்து இருக்கிறது.

முன்னூறுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை பாடி இருக்கும் அவர், இன்று வரை ஆயிரக் கணக்கில் அனைத்து சமய பக்திப் பாடல்களைப் பாடி இருக்கிறார்.



நிறைவாக ஒன்று : - வாயில் நுழையாத வார்த்தைகளை எல்லாம் போட்டு பாடும் தற்கால தமிழ் இசை உலகம், உயிரில் நுழைந்து உட்கார்ந்து கொள்ளும் திரு. கிருஷ்ணராஜ் அவர்களின் குரலை மென்மேலும் பயன்படுத்தி தமிழ் திரை உலகிற்கு புகழ் சேர்க்க வேண்டும். அது நடக்கும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது சூரரைப் போற்று படப் பாடல்... காத்திருப்போம் கனவுகளுடனும் நம்பிக்கையுடனும்!! வாழ்க அந்த மஹா கலைஞன்!!