Monday, November 16, 2020

ஹௌரா பிரிட்ஜிலிருந்து ஒரு தமிழ்க் கலைஞன்!!

 19060 களில் நூற்றாண்டு பழமை மிக்க கொல்கத்தாவின் புனித சவேரியார் கல்லூரியின் ஆங்கிலத் துறையின் விவாதங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை... அதிலும் இரண்டு பேராசிரியர்களின் பேச்சுக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு. ஒருவர் பஞ்சாபின் சட்லஜ் நதிக்கரையில், கபுர்தலாவில் பிறந்தவர், பெயர் பி.லால் என்கிற புருஷோத்தம லால். மற்றொருவர் தமிழகத்து பாலாற்றங்கரையில் வேலூரில் பிறந்தவர் பெயர் விஸ்வநாதன். இன்றைய பாரத சமூகத்தில் வி.வி.வி.ஐ.பிக்களாக இருக்கும் "லக்ஷ்மி மிட்டல், விஜய் மல்லையா, முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் கமல்நாத்" இவர்களெல்லாம் அப்போதைய மாணவர்கள்.

ஒரே துறையின் இரண்டு பேராசிரியர்கள் என்பதை தாண்டி அவர்களுக்கு இன்னும் சிறப்பான ஒற்றுமைகள் உண்டு. வங்காளத்தின் புகழ்மிக்க வரலாற்று அறிஞரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கவிப் பெருந்தகை ரவீந்திர நாத் தாகூரின் நெருங்கிய நண்பருமான "காளிதாஸ் நாக்" கின் இரண்டாவது மகள் ஷ்யாமஸ்ரீயை மணந்தவர் லால். மூன்றாவது மகள் பரமிதாவை மணந்தவர் விஸ்வநாதன். ஆம் இருவரும் சகலபாடிகள்.

எழுத்துக்கலைக்கு பெரும் தொண்டு செய்தவர் திரு. லால். அவர் ஒரு எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் இவற்றையெல்லாம் தாண்டி Writers Publications என்ற பதிப்பகத்தை தொடங்கி 3000க்கும் அதிகமான புத்தகங்களை பதிப்பித்து “Indian English” என்ற எழுத்து நடை வளர “Ruskin Bond” Nizaim Ezeikel” போன்றவர்களை ஊக்குவித்து அரும்பணி செய்தவர். இதற்கு இணையாக பன்முகத்திறமை கொண்டவர் விஸ்வநாதன். அவர் தூர்தர்ஷனில் ஆங்கில செய்தி வாசிப்பாளர். கொல்கத்தா ஆகாசவாணி ரேடியோவில் வினாடி வினா நிகழ்ச்சிகள் (Bournvita Quiz) நடத்துவார். 1949 லேயே கொல்கத்தாவில் “Amateur Dramatists என்ற நாடக குழுவை தொடங்கி நடத்தியவர். பின்னர் உத்பல் தத்தின் "Little People Theatre", "Chaturmugh" போன்ற பல நாடக குழுக்களில் தமிழ், வங்காளம் மற்றும் ஆங்கில ஷேக்ஸ்பியர் நாடகங்களில் நடித்தவர். ஆம் அவர் ஒரு ஆர்ப்பாட்டமில்லாத நடிகர்.. பின்னர் உத்பல் தா சினிமாவில் பிசி ஆகிவிட தானே “Calcutta Players” என்ற பெயரில் மீண்டும் ஒரு நாடகக் குழுவை தொடங்கி நடத்தியவர். ஆக்ஸ்போர்டில் அரசியல் அறிவியல் துறையில் உயர்பட்ட படிப்பை கற்றதால் பிரித்தானிய ஆங்கில உச்சரிப்பு குறையில்லாது அவர் நாவில் குந்தி இருந்தது. 1951ல் வங்காளத்தின் தேசிய விருது பெற்ற இயக்குனர் தேவகி குமார் போஸ் தனது "ரத்னதீப்" என்ற படத்தில் இவரை வெள்ளித்திரையில் அறிமுகம் செய்தார்.


கவியரசர் கண்ணதாசன் தமிழ் சினிமாவில் "கலங்காதிரு மனமே" பாடலுடன் அறிமுகம் ஆனாலும் பிறகு தொடர்ந்து வேறு பெரிய வாய்ப்புகள் இல்லாமல் தவித்த காலம். அப்போது அவருக்கு ரத்னதீப் படத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை ரத்னதீபம் என்ற பெயரில் (உரையாடல்) எழுதும் வாய்ப்பு கிடைக்கவே, கல்கத்தாவுக்கு சென்றார். அங்கு அவருக்கு மொழிபெயர்ப்பில் உதவியவர் விஸ்வநாதன். விஸ்வநாதனைப் பற்றி தனது சுயசரித்ததில் ஒரு பக்கம் முழுக்க எழுதி இருக்கிறார் கவியரசர். தேவகி போஸ் "உங்களுக்கு இருக்கும் திறமைக்கு நீங்க இங்கேயே இருந்தா பெரிய இயக்குநரா வருவீங்க" என்று ஊக்கமளித்தாலும் கண்ணதாசன் மனம் அங்கு தங்க மறுத்து "பராசக்தி" படத்தில் பாட்டெழுத வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கிருந்து சென்னை வந்துவிட்டார். இருந்திருந்தால் ஒருவேளை "கண்ணையா தாஸ்" ஆகியிருப்பாரோ என்னவோ.

பராசக்தியில் பாட்டு கிடைக்கவில்லை, கோட்டு தான் கிடைத்தது. ஆம்... சிவாஜி, SSR க்கு மட்டுமல்ல, கண்ணதாசனுக்கும் திரைக்கு முன் பராசக்தி தான் முதல் படம். இறுதிக் காட்சியில் நரம்பு புடைக்க சிவாஜி பேசும் நீதிமன்ற சீனில் நீதிபதியாக உட்கார்ந்து இருப்பவர் கண்ணதாசனே தான். பிறகு அவர் கவியரசர் ஆன கதை நாடறிந்தது. 

இதே போல விஸ்வநாதனுக்கு ஒரு கதை உண்டு.

பராசக்தியின் பெரிய வெற்றிக்கு பிறகுஅந்தப் படத்தை எடுத்த ஏவி.எம், அகிரா குரோசவாவின் ரோஷோமோன் படத்தை தமிழில் வீணை எஸ்.பாலச்சந்தரை வைத்து எடுக்க திட்டமிட்டார்கள். படத்தின் பெயர் "ஒரு நாள்". ஆறு நாள் படப்பிடிப்பு முடிந்த பிறகு கதாநாயகன் எஸ்.வி. சகஸ்ரநாமம் அந்த (ரேடியோ இன்ஜினியர் ராஜன்) பாத்திரத்திற்கு வயதானவராக தோன்றியதால் அவருக்கு பதில் அந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு விஸ்வநாதனுக்கு கிடைக்க, அவர் நடிப்பில் கிட்டத்தட்ட 1000 அடிகள் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ஏவி.எம் அப்பச்சிக்கு ஏனோ விஸ்வநாதன் நடிப்பில் திருப்தி இல்லாது போக அவரையும்  மாற்றும்படி சொன்னார். அதற்கு S. பாலச்சந்தர் தயக்கத்துடன், இல்லை அவர் ஒரு சிறந்த நாடக நடிகர் என்று கூற, "1000 அடி ரீலையும் என் முன்னாடி வச்சு கொளுத்து , பாலச்சந்தரை கணக்கு தீர்த்து அனுப்பு" என்று கண்டிப்பாக தன் மேனேஜரிடம் சொல்ல வேறு வழியின்றி விஸ்வநாதன் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக கதாநாயகனாக சிவாஜி நடித்தார். திரைக்கதையில் ஜாவர் சீதாராமனை வைத்து மாற்றங்கள் செய்து படத்தின் பெயரையும் "ஒரு நாள்" என்பதை மாற்றி வெளியிட்ட அந்தப்படம் சக்கை போடு போட்டு தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல் ஆனது. அந்தப் படம் தான் பாடல் , நடனங்கள் இல்லாமல் வெளியான முதல் தமிழ்படமான "அந்த நாள்"!!

அந்த நாள் படம் கைநழுவிப் போனாலும் அடுத்தடுத்து படங்கள் வந்தன. நடிகை பானுமதியின் கணவர் பி.எஸ்.ராமகிருஷ்ணா இயக்கத்தில், அக்கினேனி நாகேஸ்வரராவ் நடிப்பில் ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெளியான "கானல் நீர்" (தெலுங்கில் பாட்டசாரி ) படத்தில் நடித்தார். தொடர்ந்து பீம்சிங் இயக்கத்தில், வலம்புரி சோமநாதன் கதை வசனத்தில் "ஜெமினி, சாவித்திரி, நாகையா, எஸ்.வி. ரங்கா ராவ்" என்று பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்த "திருமணம்" படத்தில் பிரதான வில்லன் வேடம். (இந்த இரண்டு தமிழ்ப் படங்களுமே இணையத்தில் கிடைக்கவில்லை).

இந்த விஸ்வநாதன் என்ற பெயரில் பூர்ணம் விஸ்வநாதன், விசு (எ ) எம்.ஆர். விஸ்வநாதன் என்று நடிகர்கள் பலரும் இருப்பதால் குழப்பத்தை தவிர்க்க அவரது பெயரை இப்போதே சொல்லிவிடுகிறேன். அவர் தான் என்.விஸ்வநாதன் என்கிற இயற்பெயரை உடைய நடிகர் "கல்கத்தா விஸ்வநாதன்".தனது கேரியரில் மொத்தமாக (அனைத்து மொழிகளையும் சேர்த்து) 100 படங்களும் தமிழில் கிட்டத்தட்ட ஒரு 20 படங்களும் நடித்திருப்பார்... ஆனால் இந்திய சினிமாவின் மிகப் புகழ்பெற்ற இயக்குனர்கள் "சத்யஜித் ரே, மிருணாள் சென், எஸ்.பாலச்சந்தர், கே.பாலச்சந்தர், பாலு மகேந்திரா, எஸ்.பி. முத்துராமன், தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் நால்வரையும் இயக்கி பெருமை பெற்ற ஜெகநாதன், இயக்குனர் திலகம் கே.எஸ். கோபாலகிருஷ்ணன், தேசிய விருது பெற்ற இயக்குநர் துரை , அமீர்ஜான் , கே.ரங்கராஜ் , சுரேஷ் கிருஷ்ணா என்று முத்திரை இயக்குநர்களோடும் சிவாஜி, ஜெமினி, ரஜினி, கமல் என்று சூப்பர் ஹீரோக்களோடும் தனது பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தி பெரும் புகழ் பெற்றவர்.

இவரது சினிமா பயணத்தின் பெரிய திருப்பு முனை 1961ம் ஆண்டு வெளிவந்த புனாஸ்சா.. மிருணாள் சென் என்னும் திரைக்கலை மாமேதையின் வெளிச்சம் இவர் மீது விழுந்த நாள் அது. சிறந்த வங்காள திரைப்படத்திற்கான தேசிய விருதினை தட்டிய இந்தத் திரைப்படத்தில் அழகானதொரு கதாபாத்திரம் இவருக்கு கிடைத்தது. அதற்கு அடுத்த ஆண்டே ஆஸ்கர் விருது பெற்ற ஒரே இந்திய இயக்குனரான சத்யஜித் ரே இயக்கிய முதல் கலர்ப்படமான "கஞ்செஞ்சுங்கா"வில் முக்கிய கதா பாத்திரம் இவருக்கு கிடைத்தது. ஸ்டைலாக பைப் பிடித்தபடி கதாநாயகியிடம் பேசும் காட்சியில் அமெரிக்க மாப்பிள்ளை "பேனெர்ஜீ" என்கிற கதாபாத்திரத்தில் அத்தனை நேர்த்தியாக நடித்திருப்பார். சட்டென்று சின்ன வயது பிரகாஷ்ராஜ் என் கண்முன் வந்து போனார். இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு சத்யஜித் ரேயின் பிரபல படைப்பான "ஃபெலுடா" கொல்கத்தா ஆகாசவாணி ரேடியோவில் ஒளிபரப்பான போது அதில் "தமீஜா" கதாபாத்திரத்திற்கு பின்னணி குரல் கொடுத்தவர் விஸ்வநாதன் தான்.

இதற்கு பிறகு வங்காள மொழியில் சற்றொப்ப 60 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். ஒரு புறம் கல்லூரியில் பேராசிரியர் வேலை, விவாத மேடைகள், ஷேக்ஸ்பியர் நாடகங்கள், புத்தகங்களுக்கு மொழிபெயர்ப்பு உதவி இத்தனைக்கும் இடையே சினிமா என்னும் பொழுது எண்ணிக்கையை பெரிதாக எண்ணாமல் சரியான பாத்திரங்களை மட்டுமே ஏற்று நடித்திருப்பார் என்று அவதானிக்க முடிகிறது.

கல்கத்தா விஸ்வநாதன் என்றவுடன் நினைவுக்கு வரும் மூன்று விஷயங்கள் :

1) அச்சு பிசகாமல் இவர் பேசும் British Accent English

2) ஸ்டைலாக கைகளில் புகையும் பைப் அல்லது சிகார்.

3) உணர்ச்சிபூர்வமான காட்சியிலும் உருண்டு புரண்டு ஐயோ அம்மா என்று அழுது ஆராட்டியம் பண்ணாமல் உணர்வுகளை Subtle ஆக வெளிப்படுத்தும் நடிப்பு.

இவை தவிர எனது அவதானிப்பில் நான் கண்டுகொண்ட மற்ற இரண்டு விஷயங்கள்

1) மிகக்குறுகிய காலத்தில் மிகச்சிறந்த இயக்குனர்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்த நடிகர்.

2) இவர் நடித்தவற்றில் பெரும்பாலும் மொழிமாற்றுப் படங்கள். அதிலும் மூலப் படங்களில் அந்தந்த மொழியின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர்கள் நடித்த கதாபாத்திரங்கள் இவருக்கு கிடைத்திருக்கின்றன. 

தமிழில், ஒரு பாலச்சந்தர் தொடங்கி வைத்த முதல் இன்னிங்ஸ் அத்தனை வெற்றிகரமாக இல்லாமல் போனாலும் மற்றொரு பாலச்சந்தர் தொடங்கி வைத்த இரண்டாவது இன்னிங்சில் சக்கை போடு போட்டார் விஸ்வநாதன்.

தெலுங்கில் "ஓ சீதா கதா" என்ற கொல்லப்புடி மாருதிராவின் கதையை இயக்குனர் கே.விஸ்வநாத் இயக்கி வெற்றிகண்டார். அதை தமிழில் ரீமேக் உரிமை பெற்று இயக்குனர் சிகரம் K. பாலச்சந்தர் எடுத்த படம் தான் "மூன்று முடிச்சு". நண்பனின் காதலி மேல் கண் வைக்கும் விளையாட்டுத்தனமான இளைஞன், அவனது செயலால் ஏற்படும் விளைவுகளுக்கு கதாநாயகி கொடுக்கும் பதிலடி இவர்கள் இடையில் சூழ்நிலையால் ஆட்டுவிக்கப்படும் தந்தை கதாபாத்திரம். இந்த மூன்று முடிச்சுகளையும் மூன்று முடிச்சு போட்டுஎப்படி அவிழ்க்கிறார் என்பது தான் கதை. இந்தியாவே வாய் பிளந்து ரசித்த ஸ்ரீதேவியின் முதல் திரைப்பட கதாநாயகன் கல்கத்தா விஸ்வநாதன் தான். ரஜினி - கமல் ரெண்டு பேருக்குமே கிட்டாத வாய்ப்பு.

தெலுங்கில் காந்தாராவ் செய்த கதாபாத்திரம் தமிழில் இவருக்கு. தன்னை ஸ்ரீதேவி திருமணம் செய்துகொள்ள விரும்புவதை சொன்னதை ஏற்றுக் கொள்ள தயங்குவது, பிறகு அதற்கு சம்மதம் என்று பூந்தொட்டி நிறைய பூக்களை நிரப்புவது. ஏற்கனவே ரஜினி ஸ்ரீதேவி இருவருக்கும் இருந்த தொடர்பை அறிந்து அதிர்ச்சியடைவது, இரண்டாம் திருமணம் செய்துகொண்டு மகன் முன்னால் பேச வெட்கப்படுவது, உண்மையை வரவழைக்க துப்பாக்கியை எடுத்து விட்டு சாவகாசமாக உடை மாற்றுவது, உச்சகட்டமாக அந்தக் குழந்தைக்கு தந்தை ரஜினி என்று தெரிந்ததும் செவுளில் ஓங்கி ஒரு அப்பு என்று 44 வயது தந்தையாக நடிப்பில் அசத்தி இருப்பார். 

மூன்று முடிச்சு படம் வெளிவந்த 1976ல் வரிசையாக கமல் படங்களில் நடித்தார். வங்காளத்தில் அஜாய் கர் இயக்கத்தில் நேற்று அமரராகிவிட்ட சௌமித்ரா சட்டர்ஜி நடித்த வெளியான "சாத் பாக்கே பந்தா" (பிறகு இந்தியில் தேசிய விருதுபெற்ற கோரா காகஜ் ) தமிழில் வலம்புரி சோமநாதன் இயக்கத்தில் ஜெமினி , சுஜாதா நடிப்பில் "லலிதா" என்ற பெயரில் வெளியானது. ஒரு பணக்கார வீட்டு பெண், அந்தஸ்து வெறிபிடித்த தாயின் விருப்பத்திற்கு மாறாக ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியரை திருமணம் செய்கிறாள். பிறகு அந்த தாயால் ஏற்படும் சிக்கல்களால் கணவனை பிரிகிறாள். அவள் மீணடும் சேர்ந்து வாழ நினைக்கும் போது என்ன நடக்கிறது என்பது தான் கதை. கதாநாயகியின் தந்தையாக வங்காளத்தில் "பஹ்ரி சன்யால்" நடித்த கதாபாத்திரம் விஸ்வநாதனுக்கு. அடங்காபிடாரி மனைவி சுகுமாரிக்கு கிளைமாக்சில் இவர் புத்திமதி சொல்லும் காட்சியில் அத்தனை அளவான நடிப்பு. இவரது மகனாக கதாநாயகிக்கு தம்பி வேடம் கமலுக்கு.

அதே ஆண்டு, இதயம் பேசுகிறது மணியன் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய "மோகம் முப்பது வருஷம்" இயக்குனர் முத்துராமன் - மகேந்திரன் (திரைக்கதை) கூட்டணியில் வெளிவந்தது. கமலுடன் கல்கத்தா விஸ்வநாதன் இணைந்த மூன்றாவது படம். முத்துராமன் கூட்டணியில் முதல் படம்.


பசி, அவளும் பெண் தானே, பாவத்தின் சம்பளம், ஒரு வீடு ஒரு உலகம் என்று கனமான சமூக பிரச்சினை களங்களை கையாண்ட, தேசிய விருது பெற்ற இயக்குனர் துரை மலையாளத்தில் இயக்கிய படம் "வெளிச்சம் விடருன்ன பெண்குட்டி" (தமிழில் புனித மலர் என்கிற டப்பிங் படம் ). ஒருதலை ராகம் சங்கர், பூர்ணிமா மற்றும் டிக் டிக் டிக் படத்தில் நடித்த ஸ்வப்னா நடிப்பில் வெளியான படத்தில் ஸ்வப்னாவின் தந்தை கதாபாத்திரம் கல்கத்தா விஸ்வநாதனுக்கு. இவர் மேலும் சில மலையாள படங்களில் நடித்திருக்கிறார் என்று அறிய முடிகிறது ஆனால் பெயர் குழப்பத்தால் முறையான ஆவணங்கள் இணையத்தில் ஏதுமில்லை.

கல்கத்தா விஸ்வநாதனுக்கு தமிழில் பேர் சொல்லும் படியாக கிடைத்த மற்றொரு படம் "கவரி மான்" எஸ்.பி.முத்துராமனுடன் இரண்டாவது படம். நடிகர் திலகத்துடன் முதல் படம். ஒரு கவுரவமான குடும்பத்தில் இரண்டாவது மகன் சிவாஜி. அப்பா ஓய்வுபெற்ற கவர்னர். அம்மா கர்நாடக சங்கீத பாடகி. தனது மனைவி பிரமிளாவுக்கு இருக்கும் தவறான தொடர்பை நேரில் கண்டு ஆத்திரத்தில் பூந்தொட்டியால் அடித்து கொல்ல , அதைக் கண்ணால் பார்க்கும் அவரது குழந்தை ஸ்ரீதேவி அவரை வெறுக்கிறது. இறுதியில் சூழ்நிலையால் தான் குற்றமற்றவன் என்பதை சிவாஜி அந்தக் குழந்தைக்கு எப்படி புரியவைக்கிறார் என்பது தான் கதை. சிவாஜிக்கு அப்பாவாக அவரைவிட 8 மாதங்கள் இளையவரான கல்கத்தா விஸ்வநாதன். 

இவரது பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான காட்சி உண்டு. முதல் முறை ஜெயிலுக்கு போய்விட்டு சிவாஜி வீடு திரும்புவார். வீட்டில் அவரது தாய், சகோதரர்கள் எல்லோரும் அவரை வெறுத்து ஒதுக்குவார்கள். அப்பாவிடம் சென்று "நீங்களுமாப்பா நான் தப்பானவன்னு நினைக்கிறீங்க ? " என்று அழுவார். அப்போது "அங்கே இருக்கும் அந்த டயரியை எடுத்து படி" என்பார் விஸ்வநாதன். அதில் என்ன நடந்திருக்கும் என்பதை தேதியோடு அப்படியே ஊகித்து எழுதி இருப்பார். அத்தனை உணர்ச்சிகரமான காட்சியிலும் மிகையில்லாது நடித்திருப்பார். அதே போல மீண்டும் சிவாஜி செய்யாத கொலைக்காக ஜெயிலுக்கு போவார். அப்போது மொத்த குடும்பமும் அவரை திட்டி தீர்க்கும். சிவாஜி விஸ்வநாதனுக்கு நேராக வருவார்.. அவர் சொல்லும் பதில் "தியாகு ... நீ திரும்ப வரும்போது நான் இருக்க மாட்டேன்.. ஆனால் டயரி இருக்கும்..." அல்டிமேட் டயலாக் டெலிவரி.

ராஜேஷ் கண்ணா நடிப்பில் இந்தியில் வசூலை வாரிக்குவித்த "கடி பதங்" தமிழில் மதியொளி சண்முகம் இயக்கத்தில் "நெஞ்சில் ஒரு முள்" என்று வெளியானது. பூர்ணிமாவுக்கு தமிழில் முதல் படம். கதாநாயகியின் மாமனார் வேடத்தில் விஸ்வநாதன். தன் வீட்டுக்கு வந்திருக்கும் பெண் உண்மையில் தனது மருமகள் தானா என்பதை அழகாக நடிப்பில் வெளிப்படுத்தி இருப்பார்.

ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் சைக்கோ திரைப்படத்தின் சாயலில் எடுக்கப்பட்ட பாலு மகேந்திராவின் மூடுபனி படத்தில் கொலையாளியை தேடி கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரி வேடம் இவருக்கு. படம் முழுக்க பிரதாப் போத்தன் பெண்களை கொலை செய்வார். இறுதிக்காட்சியில் அவரது அம்மாவின் எலும்புக்கூட்டை ஷோபா பார்த்துவிட அதுவரை இருந்து கொலைவெறி மறைந்து "அம்மா மாமா" என்று விஸ்வநாதனின் காலை பிடித்து அழுவார். பிரதாப் தான் கொலையாளி என்பதை அவர் கண்டுபிடிக்கும் விதம் அழகாக இருக்கும்.

நடிகர் திலகத்துடன் இவர் மீண்டும் இணைந்த படம் "வெள்ளை ரோஜா" மலையாளத்தில் பிரேம் நசீர், மம்மூட்டி, பிருதிவிராஜின் நைனா சுகுமாரன் என்று பெரிய பட்டாளம் நடித்த "போஸ்ட்மார்ட்டம்" படத்தின் தமிழ் ரீமேக். ஒரு கொலை, அதற்காக நடக்கும் விசாரணை, அதன் காரணமாக நடக்கும் தொடர்கொலைகள் இவற்றை ஒரு போலீஸ் அதிகாரி துப்பு துலக்கும் கதையில் பிரதான வில்லனாக மலையாளத்தில் டி.ஜி.ரவி செய்த கதாபாத்திரம் விஸ்வநாதனுக்கு. கமர்ஷியல் இயக்குனர் ஜெகநாதன் இவரது நடிப்பை அற்புதமாக பயன்படுத்தி இருப்பார். பரிசுத்தம் என்னும் பணக்கார கதாபாத்திரத்தில் இவர் அறிமுகம் ஆகும் காட்சியிலேயே, கேமரா இவரது தலைக்கு பின்னால் இருந்து நடிகர் திலகத்தை பார்த்தவாறு இருக்கும்.. பின் மெல்ல இவரது முகத்தை நோக்கி நகரும்பொழுது, அவரது டிரேட் மார்க் பைப்பை ஊதியபடி ஸ்டைலாக "Father….. Please don’t mistake me" என்று அறிமுகம் ஆவார். சிவாஜி, ராதா, சுரேஷ் என்று வரிசையாக இவர் எல்லாரையும் போட்டுத்தள்ளிய பிறகு இவர் தான் குற்றவாளி என்று போலீஸ் சிவாஜி கண்டுபிடித்து துரத்துவார்.. அப்போது "டேய் பரிசுத்தம்... என்னைக்கு உன் கெஸ்ட் ஹவுஸுல வந்து உக்காந்தேனோ.. அன்னைக்கே எல்லா பயலோட ஜாதகத்தையும் கணக்கு போட்டுட்டேன்டா பிளக்கார்ட்" என்று காட்டு கர்ஜனை செய்யும் சிவாஜியிடம் குண்டு முழியை உருட்டியபடி "Yoooo… Cunning Policeman" என்று பக்காவான British accent ல் வெறிச்சிரிப்புடன் இவர் சீறும் காட்சி இவரது நடிப்புலக அனுபவத்திற்கு துளி சாம்பிள்.

நகர்ப்புற மேட்டுக்குடி கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்த இவருக்கு பெரிய மாற்றத்தை தந்த படம் "கண் சிவந்தால் மண் சிவக்கும்". கீழவெண்மணி படுகொலையை அடிப்படையாக வைத்து இந்திரா பார்த்தசாரதி எழுதிய "குருதிப்புனல்" நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா விரும்பினார். சிவப்பு சிந்தனையாளரும் , பத்திரிகையாளருமான தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் ஸ்ரீதர் ராஜன் இந்தப் படத்தை தமிழில் கூத்துக் கலைகளை கலந்து உணர்ச்சிபூர்வமான படமாக எடுத்தார். படத்தின் கருவே குடிசைகளை எரியூட்டிய எதிர்மறை கதாபாத்திரத்தின் மேல் தான். அந்த பாத்திரத்தை செய்தவர் தான் விஸ்வநாதன்.

பண்ணையார் ராஜரத்தினமாக டீக்கடையை இடித்துவிட்டு சேவல் சண்டை ரசிப்பது, குடிசைகளை கொளுத்தி விட்டு கற்பூரம் ஏற்றி சாமிகும்பிடுவது என்று படம் நெடுக வில்லத்தனத்தை வாரி இறைத்திருப்பார். ஒரு சோறு பதமாக நான் ரசித்த ஒரு காட்சி. 

ராஜேஷின் கடையை இடித்ததற்காக விவசாய தொழிலாளர்கள் வயலில் இறங்க மாட்டோம் என்று போராட்டம் செய்வார்கள். அப்போது போலீசுடன் அங்கு வரும் பண்ணையாரை "எல்லாத்துக்கும் காரணம் இவன் தான்" என்று அலேக்காக தூக்கி வயலில் போட்டு புரட்டி நச்சு நச்சென்று மிதித்து எடுப்பார் ராஜேஷ். இவரது அடியாட்கள் ஓடிவந்து காப்பாற்றுவார்கள்...வசனமே எதுவும் கிடையாது.. சேற்றிலிருந்து அடிவாங்கிய மிரட்சியுடன் எழுந்து தனது பெரிய கண்களை உருட்டியபடி ஆத்திரம், வெறி, அதிர்ச்சி, பயம், இத்தனை பேர் முன் நிகழ்ந்த அவமானம், இயலாமை இவை எல்லாவற்றின் கலவையாக ஒரு ரியாக்ஷன் கொடுப்பார்.. பிறகு இழுத்து மூச்சுவிட்டு (இவ்வளவு நேரம் எங்கே போயிருந்த ?? என்னும் வகையில் ) அடியாள் முகத்தில் த்த்த்த்த்தூ என்று ஒரு துப்பு…. பண்ணையார்த்தனத்தின் உச்சபட்ச வெளிப்பாடு அது.

பிறகு ஸ்ரீதர் ராஜனோடு மீண்டும் "இரவுப் பூக்கள்" படத்தில் வழக்கறிஞராக ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.. பிறகு ஸ்ரீதர் ராஜன் ராஜேந்தரின் இசையில் "நகக்ஷதங்கள்" படத்தை "பூக்கள் விடும் தூது" என்று எடுத்து ஜெமினி கணேசன் மகளை மணந்து சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.

இயக்குனர் திலகம் என்று பெயர் பெற்ற கே.எஸ்.ஜி தனது "கண்கண்ட தெய்வம்" படத்தை தானே மறுபடி "படிக்காத பண்ணையார்" என்று எடுத்தார். ரங்காராவ் வேடத்தில் நடிகர் திலகம், அவரது தம்பியாக எஸ்.வி.சுப்பையா செய்த வேடத்தில் தேங்காய் சீனிவாசன்.. பத்மினி கதாபாத்திரத்தில் கே.ஆர்.விஜயா.. இந்த குடும்பத்திற்கு கெடுதல் செய்யும் வில்லன் ஓ.ஏ.கே. தேவர் வேடம் விஸ்வநாதனுக்கு.

அதீத மிகை நடிப்புக்கு பேர் போன கூட்டணி... "அம்மா..." என்று சிவாஜி... "என்னாங்க....." என்று கே. ஆர். விஜயா... "ண்ணே ....." என்று எப்போதும் அழுதுவிடும் வேடத்தில் தேங்காய், பக்கவாத்தியமாக "பிள்ளைவாள் வி.எஸ்.ராகவன்".. இது போதாதென்று ஒய்.ஜி. மகேந்திரன், வேணு அரவிந்துக்கெல்லாம் எமோஷனல் ரோல்... சிரித்து சிரித்தே பண்ணையாரின் தம்பி மகன்களை ஏமாற்றும் வேடத்தில் விஸ்வநாதன் அளவாக அழகாக நடித்திருப்பார்.


80 களில் விஸ்வநாதன் சற்றொப்ப பத்துப் படங்களில் நடித்திருப்பார்.. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கமலின் "எனக்குள் ஒருவன்", மலையாளத்தில் பெரிய வெற்றிபெற்ற "சட்டக்காரி" படத்தின் தமிழ் ரீமேக்கான "ஓ மானே மானே" படத்தில் பெண்ணை விரும்பும் ஐயர் வீட்டு பையனின் அப்பாவாக (மலையாளத்தில் மூத்த நடிகர் சங்கராடி செய்த பாத்திரம்) நடித்தார்.

பாலச்சந்தரை அடுத்து அவரது உதவியாளர்கள் படத்திலும் நடிக்கும் வாய்ப்பு வந்தது விஸ்வநாதனுக்கு... மூன்று முடிச்சு படத்தில் உதவி இயக்குனராக இருந்த அமீர்ஜான் எடுத்த "புதியவன்" படத்தில் காதல் படங்கள் எடுக்கும் இயக்குனர் வேடம்.. ஆனால் "அப்பனுங்க எல்லாம் Weapon மாதிரி" என்று விவேக் அடிக்கும் காமெடி மாதிரி தனது சொந்த மகளின் காதலை எதிர்ப்பார்.. கதாநாயகன் முரளியை ஓட ஓட விடுவார்.

மிகப்பெரிய இயக்குனர்களிடம் பணி செய்யும் வாய்ப்பு பெற்றவராக இருந்தும் ஏனோ இவர் பாரதிராஜா இயக்கத்தில் நடிக்கவில்லை...அல்லது அதற்கான வாய்ப்பு அமையவில்லை...  ஆனால் பாரதிராஜாவின் உதவி இயக்குனர் கே.ரங்கராஜ் இயக்கிய "நிலவு சுடுவதில்லை" படத்தில் நடித்தார். சித்தர் சிவகுமார் நாயகன்... சித்தி ராதிகா நாயகி.. பணக்கார கதாநாயகிக்கு ஹீரோ மேல் காதலான காதல்.. அவரை பணத்துக்கு ஆசைப்படாதவரா என்று டெஸ்ட் பண்ண ராதிகா மலைவாழ் பெண்ணாக வருவார்.. பிறகு உண்மை தெரிஞ்சு ஹீரோ டூ விட்டுட்டு போக படாத பாடுபட்டு ஒன்று சேர்ந்தாரா இல்லையா ஹீரோயின் என்பது கதை. நாயகியின் கோடீஸ்வர தந்தை வேடத்தில் விஸ்வநாதன்.. நான் பார்த்த வரையில் இவர் அழுது புரண்டு நடித்த ஒரே படம் இது தான்...

கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து பாபா படத்தில் ரஜினியின் அப்பாவாக (எந்த மூன்று முடிச்சில் தொடங்கினாரோ அதே பாத்திரம்) வெறும் 5 நிமிடங்கள் மட்டும் வருவார்.. அந்தப் படம் முடிந்ததும் ரஜினி தன்னுடைய சன்மானமாக தயாரிப்பாளர் கொடுத்த செக்கை கிழித்துப் போட்டுவிட்டு, உங்கள் பெருமை என்னவென்று எனக்கு தெரியும் சார் என்று கூறி 5-6 நாட்கள் கால்ஷீட்டுக்கு 5 லட்ச ரூபாய் கொடுத்ததாக ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார்.

கல்கத்தா விஸ்வநாதன் ஏற்ற கதாபாத்திரங்கள் மட்டுமல்ல, அவர் உருவாக்கிய கதாபாத்திரமும் அவருக்கு பெரும் புகழ் சேர்த்தது..ஆம் அவரது மகன் அசோக் விஸ்வநாதன் எடுத்த கையளவுப்படங்களில் "தேசிய விருது", "சர்வதேச திரைப்பட விருது" என்று அள்ளி "என்னோற்றான்கொல் எனும் சொல்லுக்கு" அடையாளமாக திகழ்கிறார்.

என்.விஸ்வநாதன், கல்கத்தா விஸ்வநாதன், பேராசிரியர் விஸ்வநாத், வங்காளத்தில் இன்னும் கொடுமை பிஸ்வநாதன் , விஸாநாதன் என்று இவரது பெயரில் படங்களின் டைட்டில் கார்டுகளிலேயே ஏகப்பட்ட குழப்படிகள்... இந்த தேர்ந்த திரைக்கலைஞரின் படங்கள் சரியாக ஆவணப்படுத்தப் படாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்.

அவரது நடிப்பு பற்றி அவரே ஒரு பத்திரிகை நேர்காணலில் ... "நடிக்கிறது உன் வேலை... கேமராவை பாக்குறது இல்ல.. நீ நடி, கேமரா உன்னை பாத்துக்கும்" என்று தனது முதல் பட இயக்குனர் தேவகி போஸ் சொல்லித்தந்த சூட்சுமத்தை சொன்னார்!!! 

ஆர்ப்பாட்டமில்லாத அந்த திரைக்கலைஞன் தமிழில் இன்னும் அதிக வாய்ப்புக்களை 90 களில் பெறாமல் போனது பெரும் வியப்பு மட்டுமன்றி துரதிருஷ்டமும் கூட..

நான் இந்தப் பதிவின் தொடக்கத்திலேயே சொன்னது போல "அத்திப் பூத்தாற்போல வெகு சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும்.. கல்கத்தா விஸ்வநாதனின் நடிப்பு குறைசொல்ல முடியாத சிங்கத்தின் பால் போன்றது...

இன்று அந்த மகா கலைஞனின் பத்தாம் ஆண்டு நினைவு நாள்.. தமிழ் மண் இந்திய சினிமா மற்றும் இலக்கிய உலகிற்கு வழங்கிய ஒரு கொடை திரு. கல்கத்தா விஸ்வநாதன்... அன்னாரின் நினைவு போற்றும் இந்த வேளையில், நான் இந்தப் பதிவின் தொடக்கத்தில் பட்டியலிட்ட திரு பி. லால் அவர்களுக்கும் இந்த வாரம் நவம்பர் 12 பத்தாம் ஆண்டு நினைவு நாள்... திரு. விஸ்வநாதனின் ஏராளமான படங்களில் நாயகனாக நடித்த சௌமித்ரா சட்டர்ஜியும் இதே நவம்பரில் (நேற்று முன்தினம் - 15) மறைந்தார் என்பது இந்த காலத்தின் கலைஞர்களுக்குள்ள மற்றொரு அபூர்வ ஒற்றுமை.