Tuesday, June 24, 2014

a A... b B.... c C...

காதுகுத்தோ, கல்யாண வீடோ,  இல்ல சாமிக்கு படையலோ.. இப்படி எந்த பொது நிகழ்ச்சியா இருந்தாலும் சரி,  இந்த மாதிரி ஆட்கள சர்வசாதாரணமா பாக்கலாம்...

வெள்ளக்காரன் காலத்துல ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராவோ அல்லது தாசில்தாராவோ இருந்து Retire ஆகிட்டு, விடாம  நம்மளத் தேடிவந்து பக்கத்துல உக்காந்துகிட்டு, "In 1947... When i was in poonaa..." அப்டின்னு வெள்ளக்காரன் Government பத்தியோ, இல்ல அந்தக்கால Austin Car பத்தியோ கதறக்கதற ஒரு மணிநேரம் நம்மகிட்ட இங்கிலீஷ்ல போட்டுத்தள்ளுற ஆளுங்க ஊருக்கு ஒருத்தர் கண்டிப்பா உண்டு...
எங்க ஊருல ஒரு பெரியவர் இப்படித்தான் பக்கத்துல இருந்தவர்கிட்ட அந்தக்காலத்தப் பத்தி இங்கிலீஷ்ல போட்டுத்தள்ளிட்டு இருந்தாரு... "So Much Water has flown under the bridge.." அப்டினு அவர் சொல்ல.. அதுக்கு அர்த்தம் புரியாம பக்கத்துல இருந்தவரு, ஏதோ எங்க ஊரு முள்ளியாத்து பாலத்துல தண்ணி தொறந்துவுட்டதா நெனச்சுகிட்டு.. "ஆமாங்க நெரையத் தான் போகுது.. இந்த வருஷம் பருவத்துலயே தெறந்து விட்டுட்டாங்ய.."னு பதிலுக்கு ஒரு பிட்ட போட..அந்தப் பெருசு தெரிச்சு ஓடிட்டாரு.. பக்கத்துல இருந்து பாத்த எனக்கு அந்த வயசுல அர்த்தம் புரியாட்டாலும்.. பிற்காலத்துல அதுக்கு அர்த்தம் தெரிஞ்சு.. பாவம் அந்தப் பெருசு எவ்வளவு நொந்திருப்பாருன்னு நெனச்சு சிரிச்சுகிட்டேன்..

பெருநகரங்கள் அல்லாத சின்ன சின்ன கிராமத்துலேந்து வந்து இன்னைக்கி பெரிய கம்பெனில இந்த இதும்பாங்களே... அதான்யா. இந்த இதும்பாங்களே... அந்த வேல பாக்குற ஆளுங்க எல்லார் வாழ்க்கையிலும் கண்டிப்பா ஆழமான அழுத்தமான நினைவுகள ஏற்படுத்தியிருக்கிற‌ விஷயம் இங்கிலீஷ்....

என்னதான் English Medium ல‌ படிச்சாலும், தாத்தா செத்ததுக்கு கூட நாம "As I am Suffering from fever"னு தான் எழுதுவோம்.. ஏன்னா நமக்கு தெரிஞ்ச English அவ்ளோ தான்.. மூணுவரி poetry ல முப்பது தப்பு பண்ணி, அதுக்காக முட்டியெல்லாம் போட்ட வீரப் பரம்பரை ஆச்சே நம்ம பரம்பரை...

அவ்வளவு ஏன்.. "Union Minister" அப்டிங்கிறதயே "வெங்காயம் மந்திரி"ன்னு தமிழ்ல Translate பண்ற அளவுக்கு நமக்கு ஆங்கில அறிவு அப்போ ரொம்ப அதிகம்..
அதையும் மீறி ஊருக்குள்ள எவனாச்சும் "What is your name?", "How are you?", "Good Morning Meeeeeeesssssss!!!!!!"னு ஒண்ணு ரெண்டு வார்த்தை பேசுனாலும் அவனையும் "பீட்டர் உடுறான்.. சீன் போடுறான்னு சொல்லி நாமளே காலி பண்ணிருவோம்...

சில பேரு காலேஜ் போகுறப்ப தான் புத்திவந்து Spoken English Class எல்லாம் போவாங்ய... அந்த வயசுல நீ போறது English படிக்கிறதுக்காடா??? ரைட்டு..விடு..

காலேஜ் போறவரைக்கும் அப்பிடி இப்பிடி அட்ஜஸ்ட் பண்ணி வண்டிய ஓட்டுனாலும், இன்டெர்வியூன்னு வரும்போது தான் சனியன் சடைபின்ன ஆரம்பிக்கும்...

சும்மாவா சொன்னாப்ல‌ வைரமுத்து "வயித்துக்கும் தொண்டைக்கும் நடுவுல ஒரு உருண்டை உருளுதுன்னு... எங்கயோ இன்டெர்வியூல இங்கிலீஷ் வராம செமையா முழிச்சிருப்பாப்ல போல... கரெக்டா எழுதியிருக்காரு...

'வேலைக்காரன்' ரஜினி மாதிரி, Vijay Hazare called Vinoo Mankad.. and then Vinoo Mankad called Vijay Hazare..."னு செம பிராக்டிஸ் எல்லாம் பண்ணிட்டு நம்மாளு ஒருத்தரு Interview க்கு போனாரு..

ஒரே கேள்வி தான்.. "Alma Mater?" அப்டின்னு..


நம்மாளு காதுல அது "அல்வா மேட்டர்"னு விழுந்திச்சு... "சே.. என்னடா மேட்டர பத்தியெல்லம் கேக்குறாங்ய‌"ன்னு மனசுக்குள்ள திட்டிகிட்டே நம்மாளு முழிக்க.. அத புரிஞ்சுகிட்டு அந்த ஆபீசர் "Schooling..." அப்டின்னு லீட் எடுத்துக் குடுத்ததும்... "புனித அந்தோணியார் நடுநிலை ஸ்கூல் சார்..." அப்டின்னு இங்கிலீஷ்ல கலக்க... ஆபீசர் கொஞ்சம் மெரண்டு தான் போயிட்டாரு.. பிற்காலத்துல இதே ஆளு "St. Antony's" அப்டின்னு படம் காட்டுற அளவுக்கு வளந்தாரு...

 வேலைக்கு சேர்ந்த மொதல் கொஞ்ச நாள் நம்ம மானத்த காப்பாத்துற மூணு Englsh வார்த்தை " Yes Sir, No Sir, Ok Sir.."...

அதுக்கப்புறம், வராத இங்கிலீஷ வம்படியா இழுக்கிறதுக்காக‌ கத்துக்கிற மூணு வார்த்தை " Well... You See... You Know..."

இங்கிலீஷ் நல்லா வந்திருச்சுன்னா அத வச்சுகிட்டு நம்மாளு Aim பண்ற‌ அடுத்த மூணு வார்த்தை என்னன்னு ஒலகத்துக்கே தெரியுமே...

ஆஃபீஸ விட்டுத்தள்ளுங்கப்பா... தனிப்பட்ட விஷயத்துல கூட இங்கிலீஷால நொந்த ஆளுக எவ்வளவு பேரு தெரியுமா... நம்மாளு ஒருத்தருக்கு அவரோட ஃப்ரெண்டு  ஒருநாள் போன் பண்ணி, மச்சான் எனக்கு தெரிஞ்ச ஃப்ரெண்ட் Google ல‌ HR வேல பாக்குறாங்க‌ (Yes.... ஆமா.. That was a Girl..அது ஒரு பொண்ணே தான்..) Introduce பண்ணி வைக்கிறேன்.. நாளைக்கு வந்துடுன்னு சொன்னாரு... நம்மாளும் உடனே.. பயங்கர குஜாலாகி, பர்சனாலிடிய 2 இன்ச் ஏத்தி, கையில எல்லாம் பவுடர் அடிச்சு (கை குலுக்கணும்ல..) கெளம்பிப் போனாரு...

அந்தப் புள்ளையும் வந்துச்சு.... சந்தோஷத்துலயும், பதட்டத்துலயும் நாக்கு வரண்டு,  "Please to meet You"ன்னு இவர் சொல்றதுக்காக வச்சிருந்த ஒரே டயலாக்க மறந்து போயி, கைய குலுக்கிகிட்டே "Wish you a Happy Birthday..."னு சொல்ல‌.. அதுக்கப்புறம் என்ன.. ஊரே சிரிச்சிச்சு...

இங்கிலீஷ் சாமான்யன மட்டுமில்ல பெரிய பெரிய்ய ஆளுங்கள கூட ஆட்டி வச்சிருக்கு... தந்தை பெரியார் ஒரு தடவை அண்ணா அவர்கள கூப்பிட்டு,  "சொல்லியாச்சு" அப்டினு தந்தி குடுன்னாரு... அண்ணாவும் உடனே "Have been told" அப்டின்னு தந்தி குடுத்தாரு.. அதுக்கு பெரியார் சொன்னாராம்... "ஏம்பா Have been told அப்டின்னு குடுத்தா மூணு வார்த்தை வருதே அதுக்கு பதிலா "Tolded" அப்டின்னு குடுத்தா ஒரே வார்த்தைல முடிஞ்சிருமே"ன்னு..

"English is just a language..." அப்டின்னு சொல்ற ஆளுங்க கொஞ்சம் நிதானமா யோசிக்கணும்...

"We are calling from TK TK TK Bank for Free Credit Cards",அப்டின்னோ "We are calling from Country Club, you have got free gifts sir.." அப்டின்னோ மொபைல்ல நம்ம விடாம வெரட்டுற கருப்புக‌ளுக்கு இங்கிலீஷ் அப்டின்றது "பிழைப்பு"..

Dan Brown,  Sydney Sheldon, Jeffrey Archer, Paulo Coelho ...இந்த நாலே நாலு பேர மட்டும் தெரிஞ்சு வச்சுகிட்டு, நாசா விஞ்ஞானி லெவலுக்கு பில்டப் குடுக்குற ஆளுங்களுக்கு இங்கிலீஷ் அப்டிங்கிறது "விளம்பரம்".. (என்னடா விளம்பரம்.. நீ வாங்குற பத்து அஞ்சு பிச்சைக்கு இதெல்லாம் தேவ தானா??)..

இதுல இன்னும் பெரிய கொடுமை உண்டு.. சில பேர் தெரியலன்னு சொன்னா கூட விடமாட்டான்.. "How about R.K.Narayan?.. Indian Author only..." அப்டிம்பான்..

(டேய்... டேய்... எனக்கு மீடியா சொல்லிக்குடுத்ததெல்லாம் ராம.நாராயணனும், காழியூர்.நாராயாணனும் தான்..எனக்கு R.K.Narayan எல்லாம் தெரியாதுடா... என்ன உடுங்கடா... நாராயணா இந்த கொசுத்தொல்ல தாங்கமுடியலடா...)

பழைய இங்கிலீஷ் நாவலோட அட்டையக் கழட்டி "அஞ்சு புள்ளி கோலம்" புத்தகத்துக்கு மாட்டிவிட்டு வச்சிருக்கிற புள்ளைகள பாத்து பெரிய படிப்பு படிச்ச புள்ள போலருக்குன்னு நம்புற ஊரு தானே நம்ம ஊரு...

அவ்வளவு ஏன்.. இப்பக்கூட.. ஆபிஸ்ல கூட வேலபாக்குற பொண்ணுங்க எதாச்சும் "Quantum of Solace..." பாத்துருக்கீங்களா... "Pirates of Carribean.." புடிக்குமான்னெல்லாம் கேட்டா.. "கடைசியா நான் பாத்த இங்லிஸ் படம் "சோலே" தாங்க..."னு சொல்ற அளவுக்கு ஆங்கிலம் நம்மாளு வாழ்க்கையில தாறுமாறா தாண்டவம் ஆடுது...

நம்மாளு என்ன வச்சுகிட்டாய்யா வஞ்சன பண்றான்.. அவனுக்கு வரமாட்டேங்குது... அவ்வளவு தான்...

சரி இதுக்கு என்ன தான் பண்றது....... இதுக்கெல்லாம் ஒரே தீர்வு..  நேரா டெல்லி தான்...Friday, June 20, 2014

ஒரு கிராமத்துக் கிளியும்... அதன் ஒறமொறையும்...!!

பதினஞ்சு வருஷத்துக்கு முந்தி, நம்மூரு க்கம் ரெண்டு நாள் கரண்ட் வராதுன்னு சொன்னாக் கூட கவலையே படமாட்டாங்ய... ஆனா ஊருக்குள்ள ரெண்டு நாள் பஸ் வராதுன்னு சொன்னா தவிச்சு தள்ளாடிருவாங்ய... 'நச்'சுனு சொல்லனும்னா, தி காலத்துல எப்படி "பசு" கிராமத்தானோட வாழ்வின் ஒரு அங்கம்னு சொல்லுவாங்களோ அதே மாதிரி நவீன காலத்துல "பஸ்" தான் கிராமத்தான் வாழ்வோட ஒரு அங்கம்...பொன்வண்டு சோப் அல்லது புலி மார்க் சீயக்காய் விளம்பரம் போட்ட பையில தேன் முட்டாயி,குருவி ரொட்டி, ஊறுகாய் பாக்கெட்டு, சுருட்டு, பீடிக்கட்டு, பட்டை சோம்பு, கருவாடு பாக்கெட்டு இதர மளிகை சாமன்கள் வாழைத்தார் கட்டைய வெட்டி மூடியா போட்ட டின்ல எண்ணெய், பிரம்பு கூடைக்குள்ள வெக்கப் பிரி சுத்துன வெத்தலக் கவுளி, பெரிய வாழை மட்டைல சுத்துன எலைக்கட்டு,பனை ஓலை விசிறி பண்டல், பால் கேன், நியூஸ் பேப்பர், வாழைத்தார், பலாப்பழம் இப்படி உள்ளேயும் வெளியேயும், காலை முதல் மாலை வரை ஒரு கிராமத்தானுக்கு தேவையான எல்லாத்தையும் ஏத்திகிட்டு வர்ர காமதேனுவே பஸ் தான்...

எல்லாரும் புள்ளைங்களுக்கோ அல்லது தான் வளக்கிற செல்லப் பிராணிங்களுக்கோ தான் பேரு வைப்பாங்க.. ஆனா அதுக்கு அடுத்து மனுஷன் பேரு வைக்கிற விஷயம் பஸ் தான்..

எங்க ஊருல ஒரு போக்குவரத்து அதிகாரி அரசு பஸ்ஸுக்கெல்லாம் "கிராமத்து கிளி", "தங்க ரதம்", "மன்னை மயில்" இப்டினெல்லாம் பேரு வச்சாரு... அதப் பாத்துட்டு, "என்னய்யா இது, கிராமத்துக் கிளின்னு பேரு வச்சிருக்கானுவ.. கிராமத்து எருமமாடுன்னு வச்சிருந்தா கரெக்டா இருக்கும்... எளவு ஒரு மைலுக்கு ஒருக்க எறங்கி தள்ள வேண்டியிருக்கு, பத்தாததுக்கு ஆத்துக்குள்ளாற அப்பப்போ எறங்கிருது.."னு நக்கல் அடிக்குங்க எங்க ஊரு பெருசுங்க...

பஸ்ஸ வச்சி நம்மாளுங்க பண்ற அளப்பறை சொல்லி மாளாது...

பஸ் ஸ்டாண்டு முனைல பஸ் திரும்பும் போதே, வாடிவாசல்ல அவுத்துவுட்ட ஜல்லிக்கட்டு மாடு மாதிரி இருவது முப்பது பேரு அதுமேல பாஞ்சு, எடம் புடிக்கிறதுக்காக துண்டு, பை, நோட்டு, குடை,செருப்பு,தூக்கு வாளின்னு கண்ட கருமத்தையும் ஜன்னல் வழியா உள்ள தூக்கிப் போட்டு.. இன்னும் சிலபேரு, பெத்தபுள்ளையக் கூட உள்ள தூக்கிப் போட்டு "ரோதைய விட்டு தள்ளிக் குந்து ஆயி"ன்னு அட்வைஸ் பண்ணி, அடுத்த பந்திக்கு கறி கெடைக்காதுன்ற மாதிரி அடிச்சுப் புடிச்சு ஏறி உக்காருறதுக்குள்ள ஒரு பெரிய யுத்தமே நடந்துரும்...உள்ள போயும் சும்மா இருக்க மாட்டாங்ய, கன்னுபோட்ட் மாடு பசியில வெக்கல திங்கிற மாதிரி எங்க ஊரு கெளவிங்க வாய் நெரய வெத்தலைய மென்னு எவன் மேலயாச்சும் துப்பி ஏழரைய கூட்டிருங்க...சின்னப் பய எவனாச்சும் வேடிக்க பாக்குறேன்னு சொல்லி கம்பிக்குள்ள தலையவுட்டு மாட்டிகிட்டு அலறி ஊரையே ரெண்டு பண்ணுவாங்ய... சில பேரு கைய வச்சிகிட்டு சும்மா இருக்கமுடியாம, பஸ்ஸுக்குள்ள நகத்த வச்சு சொரண்டியே ஆர்ட்டின்ல அம்பு விடுவாங்ய.. இத எழுதும்போது நியாபகத்துக்கு வருது.. கைப்பிடித்த மனைவிகிட்ட செமையா ஒதவாங்கிட்டு வந்த யாரோ ஒரு தீர்க்கதரிசி "புகைப்பிடித்தல் உடல் நலத்துக்கு கேடு" அப்டின்னு எழுதி இருந்ததுல "பு"ன்ற மொதல் எழுத்தமட்டும் சொரண்டி எடுத்து போறபோக்குல ஒரு வாழ்க்கை தத்துவத்தையே சொல்லிட்டுப் போனான்...

பஸ்ஸுக்குள்ள எழுதிவைக்கிற வாசகங்களும் செமையா இருக்கும்... "பெண்கள்" அப்டிங்கிற வார்த்தைக்கு "பூவையர், பாவையர், மங்கையர், மலரினம்"னு கண்டமேனிக்கு ஆராய்ச்சி பண்ணி எழுதி கலைத்தாகத்த தீத்துக்குற ஆளுங்க உண்டு...  

அதுலயும் "நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது.. நாம் என்று சொன்னால் உதடு ஒட்டும்"னு ஒரு கட்சி எழுதிவைக்க... "Government Bus Foot Boardடே பஸ்ஸோட ஒட்டமாட்டேங்குது... ஒதடு ஒட்டுனா என்ன ஒட்டாட்டி என்ன"னு அடுத்து வந்த கட்சியோட போக்குவரத்து அமைச்சர் சட்டமன்றத்துலயே கலாய்ச்ச வரலாறெல்லாம் நம்மூரு பேருந்துக்கு உண்டு...

பஸ்ஸ கண்டுபுடிச்ச நாளோ, பஸ்ஸக் கண்டுபுடிச்சவன் பொறந்த நாளோ, இல்ல பஸ்ஸச் செஞ்ச நாளோ இது எதுக்குமே சம்பந்தமே இல்லாம "பஸ் டே"ன்னு ஒண்ணக் கொண்டாடி, இதையே சாக்கா வச்சு களவாணி படத்து விமல் மாதிரி வசூல் பண்ணி சரக்கடிக்கிற வரையில எளந்தாரிப் பயலுக வாழ்க்கையில பஸ் கூட ஒரு ஒறமொற மாதிரி தான்...
பஸ்ஸுன்னு சொல்லிட்டு காதல் இல்லமலா??.. கால் ரெண்டுக்குள்ள சொருகுன கட்டம் போட்ட கைலியும், பக்கத்துல இருக்குறவன் தோள்மேல போட்ட கையுமா, " 09:50 விஜய்ல வரேன்னிச்சு மாப்ள... டிரைவருக்கு பின்னாடி மூணாவது சீட்ல குந்திருக்கேம்னிச்சு..."ன்னு தன்னோட ஆளுக்காக வெயிட் பண்ற காதல் நாயகர்கள் நம்ம ஊரு பஸ் ஸ்டாப்புல ரொம்ப பேரு... அந்த காதல் வாகனம் அவனக் கடந்து போற வரைக்கும் அவனுக்குள்ள ஒரு ரஜினி, கைய பேண்ட்டுக்குள்ள விடாமலே "காதலின் தீபம் ஒன்று" பாடிகிட்டு இருப்பாரு...

இதெல்லாம் தாண்டி, "விஜய்" போகுதா மணி 09:50, கே.பி.டி யா மணி ஆறேகால், ராஜலட்சுமியா மணி 08:20ன்னு கடிகாரமே இல்லாம நேரத்த சொல்ற அளவுக்கு பஸ்ஸுக்கும் அவிங்யளுக்கும் ஒரு நெருக்கம் உண்டு...

வெவரமான இன்னும் சிலபேரு "என்னண்ணே வண்டியோட வாஸ்துவே வேறமாதிரி இருக்கு.. நம்பரும் நம்மூரு நம்பர் மாதிரி இல்லையேன்னு கரெக்டா கேள்வியப் போடுவாங்ய... அதுக்கு ".. இதுவா, மொதல்ல பல்லவன்ல ஓடுச்சு, பொறவு டாக்டர். அம்பேத்கர்னு ஆக்குனாவோ, அதுக்கும் பெறகு மருதுபாண்டியர்ல மூணு வருசம் வச்சு ஓட்டிருக்காவ்வோ இப்ப இங்க வந்துருக்குன்னு.. சொப்பன சுந்தரி கார் மாதிரி வண்டியோட வரலாறு சொல்ற ரசனையான டிரைவர்களும் நம்மூர்ல நெரைய உண்டு...

இவங்யளே இப்படின்னா இவங்யள பஸ்ஸுக்குள்ள வச்சு மேக்கிறவங்ய பண்ற அழும்பு இன்னும் ஜாஸ்தி...

லேடிஸ் கான்வெண்டோ, காலேஜோ நெருங்கிடிச்சுன்னா போதும், போட்டுருக்கிற சட்ட பட்ட்னயெல்லாம் பப்பரப்பான்னு அவுத்துவுட்டு, நட்டகுத்தா எந்திரிச்சு ஆக்சிலேட்டர் மேல நின்னாலும் நாப்பதுக்கு மேல நகராத வண்டில கூட, காதல் பரத் மாதிரி ஒரு சைடு போஸ்ல உக்காந்துகிட்டு நாலு வெரல்லயே கியர் லிவர தட்டுறதாகட்டும்.. ஒண்ணுக்கு ரெண்டா ஏர் ஹாரன வச்சுகிட்டு அதுலயே 'என்னடி முனியம்மா' பாட்டு வாசிக்கிறதாகட்டும்.. அப்படியே போயிங் விமானத்தஜக்க்க்குனு தூக்குற பைலட் லெவலுக்கு பெர்ஃபாமன்ஸ்ல பின்னுவாங்ய...


அதே மாதிரி 30 பேருக்கு 1 ரூவா டிக்கெட் போடனும்னா, எவன்யா ஒவ்வொரு டிக்கெட்டா போட்டுகிட்டுன்னு சொல்லி டிக்கெட் புக்கோட நடுவுல அஞ்சு பக்கத்துக்கு செங்குத்தா கோடு போட்டு இந்தா வச்சுக்கன்னு சொல்றதாகட்டும், அடிக்கிற நம்மூரு வெயில்லயும் ஆஸ்திரேலியா ஷூட்டிங் போன ஹீரோ மாதிரி உள்ள ஒண்ணு, வெளில ஒண்ணுனு சட்டைய போட்டுகிட்டு வாயில வச்ச விசில்லயே வயலினெல்லாம் வாசிச்சு பெர்ஃபாமன்ஸ் பண்றதாகட்டும் டிரைவருக்கு கொஞ்சமும் சளைச்சதல்ல கண்டக்டர் ஸ்டைல்... அது சரி இந்த நாட்டோட ஸ்டைலான ஹீரோவே ஒரு கண்டக்டர் தானே..

கண்டக்டர்னு சொல்லும்போது இன்னொரு விஷயம் நெனப்புக்கு வருது... வண்டிய நிறுத்தணும்னா "ஓல்டேஏஏஏஏஏன்ன்ன்ன்..."னு ஒரு சவுண்டு விடுவாங்ய பாரு... ரொம்பக் காலம் வரைக்கும் இந்த "ஓல்டேன்"னுக்கு அர்த்தம் தெரியாம மண்டகாஞ்சு அலைஞ்சு கடைசில கண்டுபுடிச்சேன்.. அது "ஓல்டேன்" இல்ல "Hold On" அப்டின்னு..

சாதாரண மக்களுக்கு மட்டுமில்லாம, அரசியல் கட்சிகளுக்கும் பஸ்ஸுக்கும் கூட மிகப்பெரிய தொடர்பு உண்டு....

"சேரன், சோழன், பாண்டியன்"னு நிர்வாக வசதிக்காக ஆரம்ப காலத்துல அந்தந்த மண்டலத்துல ஆட்சி செஞ்ச அரசர்களோட பேர பஸ் போக்குவரத்துக் கழகங்களுக்கு வெச்சாங்க. அப்புறம், அண்ணா, காமராஜர், பட்டுக்கோட்டை அழகிரின்னு தலைவர்கள் பேர பஸ்ஸூக்கு வைக்க ஆரம்பிச்சதுல தான் வந்துச்சு சிக்கல்.. அடுத்து ஜாதிக்கு ஒரு தலைவர் பேர்ல போக்குவரத்துக் கழகம் ஆரம்பிக்கிற அளவுக்கு இந்த வியாதி முத்திப் போயி... கடைசில ராஜ்கிரண் மாதிரி வரிக்கு வரி "தக்காளி" போட்டு பேசுற மாவட்டத்துல, பஸ்ஸுல போன ரெண்டு ஜாதி ஆளுங்க ஒருத்தர ஒருத்தர் அடிச்சுகிட்டு தக்காளி சட்னிய தரைல ஓடவிட்ட கொடுமை வரைக்கும் போச்சு...

மரத்தவெட்டி ரோட்டுல போட்டு பஸ்ஸ ஓடவிடாம செய்யுறது, கண்ணாடிய ஒடைக்கிறது, பஸ்ஸுக்கு தீய வச்சு கொளுத்துறது இதெல்லாம் நவீன அரசியல்ல ஒரு அங்கமாவே மாறிப்போச்சு... அதனால பஸ்ஸுக்கும் தனக்கும் உள்ள இத்தனை தொடர்பும் மறந்தும் போயிடுது...

கடந்த ஒரு மாசத்துல அரசியல் தலைப்புச் செய்திகளுக்கு அடுத்து எல்லாப் பத்திரிக்கையிலும் மெயின் கவரேஜே பஸ் விபத்துக்கள் தான்...

அரியலூரில் நேருக்கு நேர் மோதல், ஆற்றுக்குள் கவிழ்ந்த பஸ், பிரேக் பிடிக்காமல் கோயிலுக்குள் புகுந்த பேருந்து, சைதாப்பேட்டையில் கவிழ்ந்த பேருந்து... இப்படி ஏராளம்... ஒவ்வொரு விபத்துலயும் செத்தவன் கணக்க சொல்லி மாளாது...அரசு நடைமுறைப்படி ஒரு வண்டியோட Running Condition, பிரேக் புடிக்குதா, இல்லையான்னு டியூட்டி முடிஞ்சு போற ஒவ்வொரு டிரைவரும் எழுதிவைக்க ரிப்போர்ட் புக்குன்னு ஒண்ணு உண்டு.. அது போக போக்குவரத்து துறையே வண்டிய அப்பப்போ பரிசோதனை செய்ய Fitness Certification ன்னு ஒண்ணு உண்டு...

இது அத்தனைக்கும் மேலபிரேக் புடிக்காமஆத்துக்குள்ளதாவுற "கிராமத்துக் கிளிய" என்னன்னு சொல்றது.. முந்தி எல்லாம், ஸ் எஃப் சிக்கு போகுதுன்னாலே, பொண்டாட்டி ஆடி சீருக்கு அம்மா வீட்டுக்கு போற மாதிரி டிரைவர்கள் எல்லாம் பிரைட்டா ஆயிடுவாங்க‌..

நெஜமான Defect என்னன்னு கண்டுபுடிக்காம, Nerolax பெயிண்ட வாங்கி பளபளன்னு அடிச்சு உடுறதுங்கிறது, பல்லு போன பாட்டிக்கு Papaya Face Pack போட்டுவிடுறதுக்கு சமம்.. அதனால இந்தப் பிரச்சினைக்கு என்ன பண்ணலாம்...

  • சொப்பன சுந்தரி கார் மாதிரி "Date முடிஞ்ச" இரும்பையெல்லாம் எடைக்குப் போட்டு "Dates" வாங்கி இந்திய குழந்தைகளோட இரும்புச்சத்த அதிகப்படுத்தலாம்...
  • அப்படியே "பழைய இரும்பு வாங்க... விற்க.. எங்க கிட்ட வாங்க"ன்னு வண்டிக்கு பின்னாடியே விளம்பரம் கூட குடுக்கலாம்...
  • ரொம்ப சென்டிமென்டான வண்டி.. அப்டியெல்லாம் செய்ய முடியாதுன்னா, வண்டி நம்பர மட்டும் TN01,TN02,TN30 ன்னு இருக்கிறத, "எமன் 01, எமன் 02, எமன் 03"னு மாத்தலாம்.. ஆங்கிலத்துல ஸ்டைலா "MN01,MN02"னு போட்டுக்கலாம்...
  • முத்து படத்துல வர்ர அம்பலத்தாரோட கார் மாதிரி, பஸ்ஸுக்கு முன்னாடி ரெண்டு எரும மாட்டு கொம்பு வச்சு விட்ரலாம்.. எமனோட வண்டி வருதுன்னு தெரிஞ்சு எல்லாரும் எச்சரிக்கையா இருப்பாங்க... இப்படி எவ்வளவோ செய்யலாம்...
சாமிக்கு மாலையப் போட்டு கோயிலுக்கு கெளம்புறவன, சாமியாக்கி போட்டோவுல மாலைய போடுற வகையில கூட "கிராமத்துக் கிளி" நமக்கு ஒறமொற தாம்லே...

வண்டிய எடு ரை...ரை....!!!!!