Saturday, October 22, 2016

அமுதைப் பொழியும் நிலவு!!!

பொன்னிநதி பாயும் சோழவளநாட்டுக்கு இன்றைய பெயர் டெல்டா மாவட்டம்... வயலெல்லாம் நெல்லாக 'நெல்'டா மாவட்டமாக விளங்கும் அதன் இடுப்பில் இருக்கிற சிறுநகரம் மன்னார்குடி..

ஆயிரம் ஆண்டு பழமையான ராஜகோபாலஸ்வாமி திருக்கோயிலும் 22.5 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் நாட்டின் மிகப்பெரிய குளங்களில் ஒன்றான 'ஹரித்ரா நதி'யையும் தன்னகத்தே கொண்ட "மதிலழகு" மன்னார்குடி, உணவோடு சேர்த்து உணவு அமைச்சர்களையும் ( மன்னை நாராயணசாமி, ஆர். காமராஜ் ) தமிழகத்துக்கு சப்ளை செய்யும் ஊர்..

அரசியல் மட்டுமன்றி கலைவளர்த்த பெருமையிலும் கணிசமான பங்கு மன்னையம்பதிக்கு உண்டு..ஒரு பெரிய்ய்ய லிஸ்ட் ... குறிப்பாக  மோகமுள், அம்மா வந்தாள், சக்தி வைத்தியம் போன்ற நூல்களை எழுதிய சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் "தி.ஜா", ஆயிரம் திரை கண்டு கின்னஸ் சாதனை செய்த "ஆச்சி மனோரமா" இவர்கள் எல்லாம் மன்னார்குடி "Products" தான்...



மன்னார்குடி நகரில் இருந்து 10 கல் தூரத்தில் இருக்கிற சிற்றூர் வேளுக்குடி... அங்கு 1920ல் பிறந்து கலை, அரசியல் இரண்டிலும் முத்திரை பதித்த ஒருவர் தான் இந்தப் பதிவின் நாயகர்.

சிலம்புச் செல்வர்  ம.பொ.சி அவர்களது தலைமையில் 'தமிழரசுக் கழகம்' என்ற அரசியல் கட்சி அற்றை நாளில் தமிழக எல்லை மீட்பு போராட்டம், தலைநகர் பெயர்மாற்றப் போராட்டம் போன்றவற்றை முன்னெடுத்தது... இயக்குனர் ஏ.பி.நாகராஜன், கவிஞர்கள் கா.மு.ஷெரிப், கு.சா. கிருஷ்ணமூர்த்தி, பதிப்பாசிரியர் சின்ன அண்ணாமலை உள்ளிட்டோர் அதில் இடம்பெற்றிருந்தனர். அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து எல்லைமீட்பு போராட்டத்தில் சிறைசென்ற மொழிப்போர் தியாகி அவர்.. பின்னாளில் தி.மு.க வோடு கூட்டணி ஏற்பட 1974 - 1980 வரை தமிழக சட்டமன்ற (மேலவை) உறுப்பினராக இருந்தவர்.

ஏ.வி.எம் மில் வசனகர்த்தவாக இருந்து, பேரறிஞர் அண்ணா கதை வசனத்தில் உருவான 'ஓர் இரவு' படத்தில் புவிமேல் மானமுடன் உயிர்வாழ வழியேதும் இல்லையே' என்கிற பாடலின் மூலம் பாடலாசிரியராக அறிமுகம் ஆனார்.. அதன் பிறகு எழுதிய பாடல்கள் சில நூறை எட்டும்... எடுத்து வாசித்தால் எழுத்துக்கு எழுத்து இனிமை கொட்டும்... அவர் தான் கு.மா.பா என்று அழைக்கப்படுகிற கலைமாமணி கு.மா.பாலசுப்ரமணியம்... குறிச்சி மாரிமுத்து பாலசுப்ரமணியம்.. (இவர்களது மூதாதையர்கள் குறிச்சியில் இருந்து வேளுக்குடிக்கு குடி பெயர்ந்தவர்கள் என்று அறியப்படுகிறது )



 "Aesthetic Sense" என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் (அழகுணர்ச்சி).. அதற்கு சிறந்த உதாரணங்கள்  இவரது பாடல்கள்.. உதாரணத்திற்கு சில...

  • உன்னை கண்  தேடுதே - கணவனே கண்கண்ட தெய்வம் 
  • அமுதை பொழியும் நிலவே - தங்கமலை ரகசியம் 
  • இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே - வீரபாண்டிய கட்டபொம்மன்
  • சித்திரம் பேசுதடி.. எந்தன் சிந்தை மயங்குதடி - சபாஷ் மீனா
  • காணா இன்பம் கனிந்ததேனோ - சபாஷ் மீனா
  • ஏமாறச் சொன்னது நானோ.. என்மீது கோபம் தானோ - நானும் ஒரு பெண் 
  • கனவின் மாயா லோகத்திலே.. நாம் கலந்தே உல்லாசம்  காண்போமே - அன்னையின் ஆணை
  • மாசிலா நிலவே நம் காதலை - அம்பிகாபதி 
  • மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம் - மகாகவி காளிதாஸ்
  • மதனா எழில் ராஜா நீ வாராயோ - செல்லப்பிள்ளை 


"நிலவுக் கவிஞர்" என்றே சொல்லலாம் இவரை... அத்தனை பாடல்கள் வெண்மதி மீது இயற்றி இருக்கிறார்.

மெல்லிசைப் பாடல்கள் மட்டுமின்றி துள்ளலான நடையை உடைய பாடல்களிலும் தனது முத்திரையை பதித்தவர்  கு.மா.பா.... உதாரணத்திற்கு
  • யாரடி நீ மோகினி - உத்தம புத்திரன்
  • குங்குமப் பூவே.. கொஞ்சும் புறாவே - மரகதம் (ஜெ.பி.சந்திரபாபுவின் ஹிட் பாடல்)
  • ஆடவாங்க அண்ணாத்தே - சக்கரவர்த்தி திருமகள்
  • அஞ்சாத சிங்கம் என் காளை - வீரபாண்டிய கட்டபொம்மன் 

அரசிளங்குமரி, திருடாதே, தெய்வத்தின் தெய்வம், யானை வளர்த்த வானம்பாடி, குழந்தைகள் கண்ட குடியரசு  கோமதியின் காதலன்,  மரகதம், சித்தூர் ராணி பத்மினி, ஸ்கூல் மாஸ்டர்,  இன்ஸ்பெக்டர், நல்ல தீர்ப்பு உட்பட ஏராளமான படங்களுக்கு பாடல்களை எழுதியவர்...

ஜி.ராமநாதன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, சுதர்சனம், ஏ.ராமராவ், கே.வி.மஹாதேவன், எஸ்.எஸ்.வேதா என்று ஏராளமான இசையமைப்பாளர்களிடம் எழுதி இருந்தாலும் ஒரு  கட்டத்தில் இசையமைப்பாளர் டி.ஜி.லிங்கப்பாவின் ஆஸ்தான கவிஞராக இருந்திருக்கிறார்...

வீரபாண்டிய கட்டபொம்மன், சபாஷ் மீனா ஆகிய படங்களுக்கு எல்லாப் பாடல்களையும் எழுதியவர் இவர்தான்... அதே போல மஹாகவி காளிதாஸ், கொஞ்சும் சலங்கை ஆகிய படங்களுக்கு திரைக்கதை - வசனமும் எழுதி இருக்கிறார்...

"சாந்தா.. ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்... உன் இசையென்னும் இன்பவெள்ளத்தில் நீந்த ஓடோடிவந்த என்னை ஏமாற்றாதே... பாடு சாந்தா..பாடு.." புகழ்பெற்ற இந்த வசனம் கு.மா.பாவின் வரிகள்.. அதை தொடர்ந்து காருகுறிச்சியாரோடு சேர்ந்து எஸ்.ஜானகி இசைத்த "சிங்காரவேலனே தேவா" பாடலை எழுதியதும் இவர் தான்...


'மந்திரமாவது நீரு' என்கிற ஞானசம்பந்தர் தேவாரப் பாடலுக்காக போட்ட மெட்டு... பின்னர் சிங்கார வேலனே தேவா என்று கு.மா.பா  எழுதிக் கொடுத்திருக்கிறார்...

சினிமாவில் இலக்கிய லட்சணங்களோடு பாடல்களை எழுதியவர் கு.மா.பா...
ஆறாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திய அவர், யாப்பு பிழறாது  கவிதைகளை எழுதக்கூடியவர்... மகாகவி காளிதாஸ் படத்தில் நோயுற்ற தாயை குணமாக்க காளிதாசன் பாடுவதாக

சின்னையா என்றழைத்த செங்கனிவாய் மூடியதோ
உண்ணைய்யா என்றெடுத்து ஊட்டியகை வாடியதோ
அன்னையாள் கொண்ட அவலமிதை காண்பதற்கோ
கண்ணையான் பெற்றுள்ளேன் காளி

என்கிற இன்னிசை வெண்பாவும்

பூவில் இடம்கொள்ளப் போதாமல் என்னுடைய 
நாவில் இடம்கொண்ட நாயகியே - நோவில்
முடக்குற்ற தாயிவளும் முன்போல் எழுந்து
நடக்கத் தருவாய் நலம்

என்கிற நேரிசை வெண்பாவும் எழுதி இருப்பார்...

அதே போல போஜராஜன் அவையில் காளிதாசன் பாடுவதாக 'கட்டளைக் கலித்துறையில்'   விளையாடி இருப்பார்.. ஒவ்வொரு அடியிலும் 16 எழுத்துக்கள் (ஒற்றெழுத்துக்களை கணக்கில் கொள்ளக் கூடாது) .. கடைசி வரியின் இறுதிச் சீர் "ஏ"காரத்தில் முடிய வேண்டும்... (எழுத்துக் கூட்டவே  மூச்சு வாங்குது.. இந்த மனுஷர் சர்வ சாதாரணமா பாடிப்புட்டாரு )

தங்கமே தாமரை மொட்டுகளாகி தலையெடுக்க
குங்குமம் தோய்ந்த முகப்பினில் வண்டு கொலுவிருக்க
பங்கயன் விந்தைப் படைப்பாகி நிற்கும் பசுங்கொடிமேல்
பொங்கியேபூத்த முழுநிலா வண்ணம் புறப்பட்டதே...

பாரதியார் எழுதிய 'ராதைக் கண்ணியை' அடியொற்றி "காதலென்னும் சோலையிலே ராதே ராதே' என்று சக்கரவர்த்தி திருமகள் படத்தில் எழுதியிருப்பார்... (பின்னாட்களில் "வாது சூது தெரியாத மாது கண்ணா" என்று எதிர்நீச்சல் படத்தில் வி.குமார் இதை உல்டா அடித்திருப்பார்).

பாவேந்தர் பாரதிதாசன் மீது அளவுகடந்த பற்று கொண்டிருந்திருக்கிறார்.. ஒருமுறை பாவேந்தர் சினிமாவுக்கு எழுதிய பாடலை  திருத்துமாறு இவரைக் கேட்டவர்களிடம் "அதை நான் ஒரு போதும் செய்ய மாட்டேன்" என்று மறுத்திருக்கிறார்

60 களின் பிற்பகுதியிலும் 70 களிலும் இவரது பங்களிப்பு குறைவாக இருந்திருக்கிறது கண்ணதாசன், வாலி, மருதகாசி மூன்று பேருமே அப்போதைய பாடல்களின் பெரும்பகுதியை எழுதி இருக்கிறார்கள்.... இவரது அரசியல் பங்களிப்பும், எம்.ஜி.ஆர் - சிவாஜிக்கு வாலியும், கண்ணதாசனும் ஆஸ்தான கவிகளாக இருந்ததும் காரணமாக இருக்கலாம்...

ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு  80 களின் தொடக்கத்தில் "தூரத்து இடிமுழக்கம்" என்ற படத்தில் சலீல் சௌதுரி இசையில் அனைத்து பாடல்களையும் எழுதி இருப்பார்.... "உள்ளமெல்லாம் தள்ளாடுதே" என்ற பாடல் இனிமையான ஒன்று... இவர் இறுதியாக பாடல் எழுதியது கங்கை அமரனின் இசையில் "கனவுகள் கற்பனைகள்" என்ற படத்துக்காக.....

1994ம் ஆண்டு கு.மா.பா மறைந்த போது அவருக்கு வயது 74.காலத்தால் அழியாத பாடல்களை எழுதி தமிழ் சினிமாவின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக திகழ்கிறார் கு.மா.பா என்பதில் மாற்றுக் கருத்தேயில்லை... இதில் ஆச்சர்யமான விஷயம் இந்தப் பாட்டையெல்லாம் எழுதியது நம்ம ஊர்க்காரரா?? என்பது மன்னார்குடிக்காரர்களே  பலர் அறியாத விஷயம்!!!

Saturday, October 15, 2016

ஒரு சாதனை இயக்குனரின் நினைவலைகள்!!

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல்.... இந்த நான்கு பேரும் தமிழ் சினிமாவின் நான்கு சகாப்தங்கள்... இந்த நான்கு சகாப்தங்களையும் தமிழ் சினிமாவில் இயக்குகிற பெருமையை பெற்றவர்கள் தமிழ் சினிமா வரலாற்றில் யார் யார் ??... தெய்வத்தாய் படத்திற்கு வசனம் எழுதிய பாலச்சந்தர் இறுதிவரை எம்.ஜி.ஆரை இயக்கவில்லை... மூத்த இயக்குனர்களான ஏ.பி.நாகராஜன், எஸ்.பி.முத்துராமன், பாரதிராஜா இவர்களுக்கெல்லாம் கிடைக்காத இந்த வாய்ப்பினை பெற்றவர்கள் தமிழ் சினிமாவில் 3 பேர் மட்டுமே..

ஒருவர் புதுமை இயக்குனர் ஸ்ரீதர்.. சிவாஜியை வைத்து "நெஞ்சிருக்கும் வரை, ஊட்டி வரை உறவு, சிவந்த மண்", எம்.ஜி.ஆரை வைத்து "உரிமைக்குரல், மீனவ நண்பன், அண்ணா நீ என் தெய்வம்", ரஜினி - கமலை வைத்து "இளமை ஊஞ்சலாடுகிறது" என்று ஹிட் படங்களை கொடுத்தவர்... இரண்டாமவர் தேவர் பிலிம்ஸ் சாண்டோ சின்னப்ப தேவரின் உடன்பிறந்த சகோதரர் எம்.ஏ.திருமுகம்... "எத்தனை எம்.ஜி.ஆர் படங்கள் நீங்களே கணக்கு போட்டு கொள்ளுங்கள்...".. தேவர் மறைவுக்கு பிறகு சிவாஜியை வைத்து "தர்மராஜா" என்று ஒரு படம் எடுத்தார்.. அதே போல ரஜினியை வைத்து "எல்லாம் உன் கைராசி" என்று ஒரு படம்.. நான் அதிகம் கேள்விப்பட்டதில்லை.. ஜெய்சங்கர் கதாநாயகனாக நடிக்க மாணவன் என்று ஒரு படம் இயக்கினார்.. அதில் தான் 14 வயது கமல் முதன்முதலாக ஒரு பாடல் காட்சிக்கு நடனம் ஆடினார்... இந்த இருவரைத் தவிர மூன்றாவது நபர் ஒருவர் இருக்கிறார்... ஆனால் 4 நட்சத்திரங்களுக்கும் தெறிக்கவிட்ட ஹிட் படங்களை கொடுத்தவர்... .

எம்.ஜி.ஆருக்கு 'இதயக்கனி", சிவாஜி இரட்டை வேடங்களில் நடித்த "வெள்ளை ரோஜா", இன்றளவும் ரஜினியின் "அலெக்ஸ் பாண்டியன்" போலீஸ்  ஆபிசர் கெட்டப் தூக்கி வைத்து பேசப்படும் "மூன்று முகம்" , கமலின் போட்டி நடனங்களோடு கூடிய கமர்ஷியல் ஹிட் "காதல் பரிசு" என்று  அவரவர்  பாணியிலேயே ஹிட் கொடுத்தவர்..  இது தவிர ரஜினி, கமல், சிவாஜி இந்த மூவருக்கும் வேறு படங்களும் இயக்கி உள்ளார்.. என் நண்பர்களிடம் இவரைப் பற்றிக் கேட்டபோது பலருக்கும் இவரது பெயரை சொன்னதும் தெரிந்திருக்கவில்லை... அதற்காகவே இந்த பதிவை எழுதத் தீர்மானித்தேன்...20 ஆண்டுகளில் சற்றேறக்குறைய 50 படங்களை இயக்க்கிய முக்கியமான இயக்குனர் அவர்...

ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ஆர் இந்த இருவரைத் தவிர அந்த காலத்தில் நடித்த எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன், பாலாஜி மற்றும் ஸ்ரீகாந்த்.. இவர்கள் அனைவரையும் வைத்து படங்கள் இயக்கிவர்.. அதே போல அதற்கு அடுத்த தலைமுறையில் "சிவகுமார், விஜயகுமார், ஜெய்கணேஷ் , சுதாகர்" இவர்களையும் அதற்கு அடுத்த சூப்பர் சிக்ஸில் கார்த்திக் தவிர மற்ற 5 பேர் ( "ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ்") படங்களையும் இயக்கிவர்... தியாகராஜன், பாண்டியராஜன், சுருளிராஜன், ராமராஜன், அர்ஜுன், ரகுமான், சரத்குமார்  என்று இவரது இயக்கத்தில் நடித்த இரண்டாம் வரிசை நாயகர்கள் பட்டியலும் பெருசு....சரி யார் அந்த இயக்குநர்??


தினத்தந்தியில் உதவி ஆசிரியராக இருந்தவர் அவர்.... பின்னர் இயக்குனர்கள் டி.பிரகாஷ் ராவிடமும், 17 எம்.ஜி.ஆர். படங்களை இயக்கிய ப.நீலகண்டனிடமும் உதவி இயக்குனராக இருந்திருக்கிறார்.. 'காவல்காரன்', 'கண்ணன் என் காதலன்', 'மாட்டுக்கார வேலன்', 'ராமன் தேடிய சீதை', 'என் அண்ணன்', 'சங்கே முழங்கு', 'கணவன்', 'நீரும் நெருப்பும்', 'நல்லவன் வாழ்வான்', 'ஒரு தாய் மக்கள்' என்று ப.நீலகண்டன் எடுத்த படங்களில் எல்லாம் இவர் உதவி இயக்குனர்.. டி.பிரகாஷ் ராவ் எடுத்த படகோட்டியில் இணை இயக்குனர்..  இந்த வகையில் எம்.ஜி.ஆரின் வலது கரமான ஆர்.எம்.வீரப்பனின் தொடர்பு அவருக்கு கிடைத்தது...

அதன் மூலம் 1973ல் ஆர்.எம்.வீ தயாரித்த "மணிப்பயல்" படத்தை முதன் முதலாக இயக்கும் வாய்ப்பை பெற்றார்.. "அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா" பாட்டு திராவிட இயக்கத்தினர் இன்றும் கொண்டாடும் பாட்டு.. முதல் காட்சியை சென்னை மிட்லண்ட் தியேட்டரில் துவக்கி வைத்து இவரை பாராட்டி இருக்கிறார் எம்.ஜி.ஆர்..

அப்போதே அடுத்த எம்.ஜி.ஆர் படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கிறது.. அது தான் நான் மேலே சொன்ன இதயக்கனி படம்...

அந்த இயக்குனர் திரு.ஏ.ஜெகந்நாதன்.



ஜெகந்நாதன் படங்களை பார்த்தால் இவர் அந்தக்கால கே.எஸ்.ரவிகுமாராக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது... "சினிமாத்தனமான" என்று நாம் எதை சொல்லுகிறோமோ அது அத்தனையும் இவர் படங்களில் இடம்பெற்றிருக்கிறது.... கொஞ்சம் செண்டிமெண்ட், கொஞ்சம் ரொமான்ஸ், கொஞ்சம் டிஷ்யூம் டிஷ்யூம் (சிவாஜியே சண்டை போட்டிருக்காருப்பா இவர் படத்துல), கொஞ்சம் ஹியூமர், டான்ஸ், பன்ச் வசனங்கள், ஜெயமாலினியோ சிலுக்கோ அந்த அந்த காலத்துல பிரபலமான ஐட்டம் டான்சர்ஸ் என்று கலந்துகட்டி அடிக்கிற படங்களாகவே இருந்திருக்கின்றன... நடிக்கின்ற ஹீரோவை பொறுத்து அவரது தனிப்பட்ட மசாலாவும் இதில் சேரும்.. அவர் முதன்முதலாக இயக்கிய ஏ.வி.எம்.ராஜன் படத்திலிருந்து (மணிப்பயல்) கடைசியாக இயக்கிய ராமராஜன் படம் வரை (மில் தொழிலாளி) இதே பார்முலா தான்... உதவி இயக்குனராக கிட்டத்தட்ட 15 படங்கள் எம்.ஜி.ஆருடன் பணிசெய்ததால் இந்த கமர்ஷியல் வேல்யூ பார்முலா அவருக்கு பிடித்துப் போயிருக்க வேண்டும்...

எம்.ஜி.ஆரைப் போலவே இவரும் இசைஅமைப்பாளரிடம் ( எம்.எஸ்.வி முதல் தேவா வரை யாராக இருந்தாலும் ) பாடல்கள் வாங்குவதில் படுகில்லாடி.. இவரது படங்களில் வந்த பாடல்களை பார்த்தாலே தெரிகிறது.. உதாரணத்திற்கு கொஞ்சூண்டு...


  • அண்ணா அண்ணா அண்ணா - (மணிப்பயல் / எம்.எஸ்.வி)
  • இன்பமே உந்தன் பேர் பெண்மையோ - (இதயக்கனி / எம்.எஸ்.வி)
  • நீங்க நல்லா இருக்கோணும் - (இதயக்கனி / எம்.எஸ்.வி) 
  • யானையின் பலம் எதிலே  - (இதயம் பார்க்கிறது - டி.ஆர்.பாப்பா)
  • கன்னிராசி என் ராசி..  - (குமார விஜயம் / தேவராஜன் மாஸ்டர்)
  • இனங்களில் என்ன இனம் பெண்ணினம் - (நல்ல பெண்மணி / வி.குமார்)
  • நந்தா நீ என் நிலா - (நந்தா என் நிலா / வி. தெட்சிணாமூர்த்தி சுவாமிகள்)
  • தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண்தான் - (மூன்று முகம் / சங்கர்- கணேஷ் )
  • மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் - (முதல் இரவு / இளையராஜா)
  • ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் - (தங்கமகன் / இளையராஜா)
  • பூமாலை ஒரு பாவை ஆனது - (தங்கமகன் / இளையராஜா)
  • ஓ மானே மானே மானே - (வெள்ளை ரோஜா / இளையராஜா )
  • சோலைப்பூவில் மாலைத் தென்றல் (வெள்ளை ரோஜா / இளையராஜா)
  • ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் (கொம்பேறி மூக்கன் / இளையராஜா )
  • வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது (நாளை உனது நாள் / இளையராஜா )
  • கூகூ என்று குயில் கூவதோ (காதல் பரிசு / இளையராஜா)
  • காதல் மகராணி கவிதை (காதல் பரிசு / இளையராஜா )
  • காலகாலமாய் பெண் தானே கற்பூரதீபம் (கற்பூரதீபம் /கங்கை அமரன் )
  • கன்னத்தில் கன்னம் வைத்து (வாட்ச்மேன் வடிவேலு / தேவா)


இவரிடம் அதிகப் படங்கள் நடித்த கதாநாயகர்கள் என்றால் விஜயகுமாரும் சிவகுமாரும் தான்... தலா 6 - 7 படங்கள்... ஹீரோயின்களில் முதல் 10 ஆண்டுகளில் சுமித்ராவும் இரண்டாவது 10 ஆண்டுகளை அம்பிகாவும் பங்குபிரித்து கொள்ளுகிறார்கள்.. கே.எஸ்.ரவிக்குமாருக்கு மீனா மாதிரி இவருக்கு அம்பிகா.. 10 வருடங்களுக்குள் இவரது ஒரு டஜன் படங்கள் நடித்திருக்கிறார்.. தேங்காய் சீனிவாசன் இவரது படங்களில் நிறைய நடித்திருக்கிறார்.. ரொம்ப பிடிக்கும் போலிருக்கிறது..

காதல் பரிசுக்கு பிறகு இவருக்கு பெரிய ஹிட் படங்கள் என்று ஏதும் அமையவில்லை ... ஜீதேந்திராவை வைத்து வெள்ளை ரோஜாவை ஹிந்தியிலும் டைகர் பிரபாகரை வைத்து கன்னடத்திலும் எடுத்தார்... அர்ஜுனை வைத்து என் தங்கை, ராமராஜனை வைத்து மில் தொழிலாளி, ஆனந்த் பாபுவை வைத்து வாட்ச்மேன் வடிவேலு , "ஈரமான ரோஜாவே" சிவாவை வைத்து அர்ச்சனா ஐ.ஏ.எஸ் என்று எதுவும் இவருக்கு கைகொடுக்காமல் போக சீரியல் பக்கம் தனது கவனத்தை திருப்பினார்... தமிழ் தாத்தா உ.வே.சா அவர்கள் மீது தீவிர பற்று உடையவர் ஜெகந்நாதன்.. கமலை வைத்து உ.வே.சா பற்றி ஒரு படம் எடுக்க வேண்டுமென்பது அவரது கனவாக இருந்திருக்கிறது... அது சில காரணங்களால் கைகூடாமல் போகவே 13 வாரத் தொடராக ஏ.வி.ரமணனை வைத்து தூர்தர்ஷனில் இயக்கி இருக்கிறார்..

ஏ.ஜெகந்நாதன் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் :


  • கவிஞர் வாலி கதை, திரைக்கதை,வசனம் எழுதி தேங்காய் சீனிவாசன், சௌகார் ஜானகி நடிப்பில் "அதிர்ஷ்டம் அழைக்கிறது என்று ஒரு படம் இயக்கினார் இவர்.. அதில் இவரிடம் சின்னச்சாமி என்ற இளைஞர் உதவி இயக்குனராக இருந்தார்.. அந்த சின்னச்சாமி அடுத்த வருடம் இயக்குநராகி எடுத்த படம் தேசிய விருதை அள்ளியது... அந்த சின்னச்சாமி தான் இயக்குனர் இமயம் பாரதிராஜா..
  • ஒரே நாளில் ஒரு நடிகரின் இரண்டு படங்கள் வெளியானதுண்டு.. ஆனால் ஒரே நாளில் (1983 தீபாவளி) ஒரு இயக்குனரின் இரண்டு படங்கள் வெளியாகி இரண்டும் வெள்ளி விழா கொண்டாடியது முதன்முதலாக இவர் படங்கள் தான் (சிவாஜி பிலிம்ஸின் "வெள்ளை ரோஜா", சத்யா மூவிஸ் "தங்கமகன்")
  • நடிகர் திலகம் சிவாஜி நடித்த படத்துக்கு "இந்தப் புலி" புகழ் டி.ஆர் இசையமைத்திருக்கிறார் தெரியுமா உங்களுக்கு???? ஏ.ஜெகந்நாதன் இயக்கத்தில் சிவாஜி, சத்யராஜ், பாண்டியராஜன்,அம்பிகா நடித்த "முத்துக்கள் மூன்று" படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் டி.ராஜேந்தர்.
  • ஜெகந்நாதன் இயக்கிய இரண்டாவது படம் "இதயம் பார்க்கிறது".. இது தான் நடிகர் ஜெய்சங்கரின் 100வது படம்
  • மலேசிய நடிகர் "பிரேம்" இவர் இயக்கத்தில் தான் "குரோதம்" படத்தில் அறிமுகம் ஆனார்.. 100 நாள் கொண்டாடிய இந்த படத்தில் சுவாரஸ்யமான விஷயம் என்ன என்றால் 5 இயக்குனர்கள் சேர்ந்து உருவாக்கிய படம் இது... படத்திற்கு கதை எழுதியது "பிரேம்", திரைக்கதை எழுதியவர்கள் "இயக்குனர்கள் மணிவண்ணனும், ஆர்.சுந்தர்ராஜனும், வசனம் எழுதியவர் உதயகீதம், கீதாஞ்சலி படங்களை இயக்கிய கே.ரங்கராஜ்... இயக்கம் ஏ.ஜெகந்நாதன்
  • ரஜினிகாந்தை வைத்து இவர் இயக்கிய மூன்று முகம் தான் இன்றுவரை ரஜினி நடித்த ஒரே மூன்று வேடப் படம்.. 
  • மூன்று முகம் படத்தில் ஹீரோ ஒரே தவ்வில் மேலே பறந்து சென்று மூன்று நான்கு ரவுடிகளை உதைத்துவிட்டு கீழே வரும் ஸ்டைலை அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.. பின்னாளில் "சீறிவரும் காளை" படத்தில் ராமராஜன் போட்ட மேட்ரிக்ஸ் பைட்டை நினைத்துக் கொள்ளுங்கள்...
  • எம்.ஜி.ஆரை வைத்து இதயக்கனி இயக்கிய ஒன்றரை ஆண்டில் அவர் முதல்வர் ஆகிவிட்டதால் அவரை வைத்து மேலும் படங்கள் இயக்க முடியவில்லை.. அதன்பின் 1981ல் எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் எம்.ஜி.சி.சுகுமாரை வைத்து நடிகன் குரல் என்ற படத்தை இயக்கினார் ஏ.ஜெகந்நாதன்.. ஆனால் சில காரணங்களுக்காக அந்தப் படமும் வெளிவரவில்லை


2012 அக்டோபரில் தனது 78வது வயதில் ஜெகந்நாதன் அவர்கள் மறைந்து விட்டார்.. இருபதாண்டு காலம் 4 சகாப்த நடிகர்கள் உட்பட ஏராளமான நடிகர்களை இயக்கி வெற்றி படங்களை தந்த இயக்குனரை நம்மில் பலருக்கு தெரியாதது ஆச்சர்யமே..

Tuesday, October 11, 2016

மேகமே மேகமே பால்நிலா தேயுதே!!!

"காஷ்மீர் பிரச்சினை தீவிரமாக போயிகிட்டு இருக்கும் நேரத்தில் எதையோ காஷ்மீர் என்று யூ - டியூபில் தேடப் போன எனக்கு அல்வா மாதிரி ஒரு மேட்டர் கிடைத்தது.."

"கேஷ்மீர் பியூடிபுள் கேஷ்மீர்"... மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் இந்த பாட்டுக்கு இசை அமைத்தது யாரு? (என்ன எம்.எஸ்.வி யா இருக்கும்... இல்லனா கே.வி.மகாதேவனா இருக்கும்)...

"மாசி மாசந்தான் கெட்டி மேளதாளம் தான்"... (அடுத்து இதுக்கு இசை யாருன்னு கேக்க போற... எங்களுக்கே தெரியும் இளையராஜான்னு)

சினிமா இசையைப் பொருத்த வரை நமக்கு ஒரு பொதுப்புத்தி உண்டு... 75 க்கு முன்பு வந்த பாடலா?? அது மெல்லிசை மன்னர்கள் பாட்டாகத்தான் இருக்கும்.. 75 - 90 மத்தியில் வந்த பாடலா?? அது நிச்சயம் இளையராஜாவின் பாட்டாகத்தான் இருக்கும் என்று... இந்த பொதுப்புத்தியின் விளைவால் அநேக இசைக்கலைஞர்களை நாம் சரியாக அடையாளம் காணத் தவறிவிட்டோம் என்பது நிதர்சனம்... ஒரே ஒரு உதாரணம்... யூ டியூபில் ஒரு பாடலை கேட்டுக் கொண்டிருந்தேன்... பாடலின் தொடக்கமே ஒரு ஒலிப்பதிவுக் கூடத்தில் இசையமைப்பாளர்கள் ஒரு பாடலை ஒலிப்பதிவு செய்வது போல இருக்கும்... பாடலை இசை அமைத்த இசையமைப்பாளர் தெளிவாக காட்சியில் தெரிகிறார்.. என்றாலும் கமெண்ட்ஸ் முழுக்க "ராஜா ராஜா தான்..." "ராஜா கடவுளின் இசை" என்று நீளுகிறது... நான் மேற்சொன்ன பொதுப்புத்தியின் விளைவு இது..

அந்த இசை அமைப்பாளர்கள்........ "இளையராஜாவுக்கு முன்பே ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்த சங்கர் - கணேஷ் இரட்டையர்கள்".


சமீபத்தில் தான் இந்த 1000 பட விபரத்தை நான் அறிந்தேன்... என் பால்ய வயது நண்பர் ராஜசேகர் சொல்லிக்கொண்டே இருப்பார்... "நம்ம ஊர்ல கல்யாண மண்டபம் கட்டுறோம்.. சங்கர் கணேஷ் கச்சேரி வைக்கிறோம்யா" என்று... அப்போது சங்கர் கணேஷ் என்ன படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்கள் என்று கூடாது தெரியாது எனக்கு...

தனது குருவான சி.ஆர்.சுப்பாராமன் மறைவுக்கு பிறகு ஏழே வயதான அவரது தம்பி சங்கர்ராமனை தன்னுடனே வைத்துக் கொண்டார் எம்.எஸ்.வி... சென்னையில் பிறந்து இசையின் மீது கொண்ட அதீத ஆர்வத்தால் பலரிடம் இசை பயின்று (தன்ராஜ் மாஸ்டர் உள்பட) ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராக சேர்ந்து பின்னர் எம்.எஸ்.வியிடம் பாங்கோஸ், டாம்போரின் போன்ற தாள வாத்தியங்களை வாசிக்க சேர்ந்தவர் கணேஷ்... பாசமலர், பாலும் பழமும், ஆலயமணி போன்ற படங்களில் வரும் பாடல்களில் பிரதானமாக ஒலிக்கும் பாங்கோஸ் கணேஷின் கைவண்ணம்...

"அவளுக்கென்ன அழகிய முகம்" பாடல் பார்த்திருக்கிறீர்களா?? எம்.எஸ்.வி கண்டெக்ட் செய்யும் போது முன்வரிசையில் கோட் சூட் அணிந்து ஒல்லியான ஒரு இளைஞர் பாங்கோஸ் வாசிப்பார்.. கவனித்து பாருங்கள் அவர் தான் கணேஷ்... இவருக்கும் சங்கருக்கும் அலைவரிசை ஒத்துப் போக இருவரும் சேர்ந்து இசையமைக்க ஆரம்பித்தனர்... கவிஞர் கண்ணதாசன் தயாரித்த "நகரத்தில் திருடர்கள்" தான் இவர்கள் முதன்முதலாக இசையமைத்தது... படம் வெளிவராமல் போகவே கண்ணதாசனே அடுத்த வாய்ப்பையும் வாங்கி கொடுத்தார்... அது தான்  1967ல் வெளிவந்த"தேவர் பிலிம்சின்"  "மகராசி" படம்... இந்த நன்றியறிதலுக்காக எப்போதும் டைட்டிலில் "கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் - கணேஷ்" என்றே போட்டுக் கொள்ளுவார்கள்...

மகராசி பாடல்கள் வெற்றிபெற தொடர்ந்து பல வெற்றிகரமான பாடல்களை இந்த இணை வழங்கியது... அவர்களது முதல் 5 ஆண்டுகளில் வந்த பாடல்களை பார்த்தால் அப்படியே மெல்லிசை மன்னரின் பாடல் போலவே தோன்றும்... உதாரணத்துக்கு சில :


  • உனது விழியில் எனது பாடல் (டி.எம்.எஸ், பி.சுசீலா - நான் ஏன் பிறந்தேன்)
  • நான் ஏன் பிறந்தேன்  (டி.எம்.எஸ் - நான் ஏன் பிறந்தேன்)
  • நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் (டி.எம்.எஸ் - நான் ஏன் பிறந்தேன்)
  • தேன்கிண்ணம் தேன்கிண்ணம் (பி.சுசீலா - தேன்கிண்ணம்)
  • செந்தாமரையே செந்தேன் இதழே (ஏ.எம்.ராஜா  - ஜிக்கி  - புகுந்த வீடு )
  • ஆடியிலே பெருக்கெடுத்து ஆடிவரும் காவேரி (பி.சுசீலா - ராதா )
  • அகிலமெல்லாம் விளங்கும் அம்மன் அருள் (ராதா, ஜெயலட்சுமி - அம்மன் அருள் )
  • கேஷ்மீர் பியூட்டிபுள் கேஷ்மீர் (டி.எம்.எஸ் - இதய வீணை )
  • திருநிறைச்செல்வி மங்கையற்கரசி (டி.எம்.எஸ் - இதய வீணை )
  • பொன் அந்தி மாலைப்பொழுது (டி.எம்.எஸ், பி.சுசீலா - இதய வீணை)


முதல் 5 ஆண்டுகளுக்குள்ளேயே எம்.ஜி.ஆர் படங்களுக்கு இசை அமைத்து வெற்றி கண்ட இந்த ஜோடியின் நிஜமான வசந்த காலம் என்பது அடுத்து வந்த 10 ஆண்டுகள் தான் (அதாவது 70கள்)... 60 களில் எம்.எஸ்.வியின் பாணியில் பாடல்களை அமைத்த ஜோடி அதிலிருந்து மாறி புதிய இசை வடிவத்தை கையாளத் தொடங்கிய காலம் இது ...

தனது எல்லாப் படங்களையும் பாடல்பதிவுடன் தொடங்கும் வழக்கமுடைய சாண்டோ சின்னப்ப தேவர் ஆட்டுக்கிடாவை வைத்து "ஆட்டுக்கார அலமேலு" என்ற படம் எடுத்தார்... இசை சங்கர் கணேஷ்.. கம்போஸிங்கில் "பருத்தி எடுக்கையிலே என்ன பல நாளா பாத்த மச்சான்" என்று நாட்டுப்புற பாணியில் இரட்டையர்கள் போட்ட டியூனில் தேவர் எழுந்து ஆடி இருக்கிறார்...  அதுமட்டுமல்ல கண்ணதாசன் வராததால் இந்த பாடலை எழுதியவர் சாட்சாத் சாண்டோ சின்னப்ப தேவர் அவர்களே தான்... படம் வெள்ளி விழா கொண்டாட சங்கர் - கணேஷுக்கு மார்க்கெட் எகிரத் தொடங்கியது...



இந்தியில் வெளிவந்த "நாகின்" படத்தை ஸ்ரீப்ரியா தமிழில் "நீயா?" என்று எடுத்தார்.. இசை சங்கர் கணேஷ்... "தேரே சங் பியார் மே" தமிழில் "ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் என்று கல்யாண்ஜி - ஆனந்தஜி போட்ட மூல மெட்டிலேயே ஒலித்தது என்றாலும் பாலு - வாணி குரல்களில் உள்ள நெளிவுகளில் பாடல் நெத்தியடி ஹிட்.. அதுமட்டுமல்ல சங்கர் - கணேஷ் போட்ட "நான் கட்டில் மேலே கண்டேன்", "உனை எத்தனைமுறை பார்த்தாலும்" பாடல்களும் செம ஹிட் அடித்தன... இந்த  காலத்தில் இவர்கள் இசை அமைத்த சில பாடல்களை சற்று பார்ப்போம் : (நாட்டுப்புற பாணி, மெல்லிசை, மற்றும் மேற்கத்திய இசை இந்த மூன்றிலுமே தங்களுக்கென்று ஒரு தனி பாணியில் இந்த இரட்டையர்கள் இசை அமைத்த பாடல்கள் இந்த தசாப்தம் முழுதும் விரவிக் கிடக்கின்றன)


  • ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள் - (அடுக்குமல்லி )
  • ஆல...மரத்துக்கிளி  (பாலாபிஷேகம்)
  • காலைப்பொழுது விடிந்தது என் நெஞ்சத்தைபோலே (ராஜராஜேஸ்வரி )
  • பருத்தி எடுக்கையிலே (ஆட்டுக்கார அலமேலு )
  • ஆத்துலே மீன்புடிச்சு ஆண்டவனே உன்ன நம்பி (ஆட்டுக்கார அலமேலு)
  • இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் (உயர்ந்தவர்கள்)
  • உன்னை நான் பார்த்தது வெண்ணிலா  (பட்டிக்காட்டு ராஜா)
  • நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு (தாய் மீது சத்தியம்)
  • நடிகனின் காதலி நாடகம் ஏனடி (தாயில்லாமல் நானில்லை)
  • பட்டுவண்ண ரோசாவாம்  (கன்னிப் பருவத்திலே) 
  • அடி அம்மாடி சின்னப்பொண்ணு (கன்னிப் பருவத்திலே) 
  • நடைய மாத்து (கன்னிப் பருவத்திலே) 
  • ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை (என்னடி மீனாட்சி)
  • செப்புக்குடம் தூக்கிப்போற செல்லம்மா (ஒத்தையடிப் பாதையிலே) மற்றும் நீயாவின் பாடல்கள் (ஏற்கனவே சொன்னவை)...


1980ல் வெளிவந்த கண்ணில் தெரியும் கதைகள் படத்திற்கு இசை அமைத்த 5 பேர்களில் இவர்களும் உண்டு "நான் ஒன்ன நெனச்சேன்.. நீ என்ன நெனச்ச" என்று மென்மையாக இவர்கள் இசைஅமைத்த பாடல் இன்றும் கேட்கும்போது மனதை வருடும் பாடல்...

இந்த பத்தாண்டுகளில் இறுதியில் இருந்து (1980ல் இருந்து ) இவர்களது இசை அமைப்பில் அப்போதைய வெற்றிகரமான இசையமைப்பாளராக இருந்த இளையராஜாவின் சாயல் தெரிய ஆரம்பித்தது...

1981ல் ராபர்ட் - ராஜசேகர் இயக்கத்தில் வெளிவந்து சக்கைபோடு போட்ட படம் "பாலைவனச்சோலை".. முதன் முறையாக வைரமுத்து ஒரு படத்தில் அத்தனை பாடல்களும் எழுதிய படம்... சங்கர் - கணேஷ் என்றவுடன் சட்டென்று நினைவுக்கு வரும் பாடல் இந்த படத்தில் இடம் பெற்ற "மேகமே மேகமே பால்நிலா தேயுதே"... ஹிந்தி கஸல் பாடலின் அப்பட்டமான ரீமேக் ஆக இருந்தாலும் வாணி ஜெயராமின் ஆலாபனையுடன் தொடங்கும் பாடல் 35 வருடங்களாக இன்னும் வானொலியில் நேயர் விருப்பமாக இருக்கிறது.. அதிலும் இரண்டாவது இன்டெர்லூடில் வரும் சந்தூர் (வாசித்தவர் பின்னாளில் இசையமைப்பாளரான வித்யாசாகர்) மூலப் பாடலில் இருந்து பளிச்சென்று வேறுபடுத்திக் காட்டும் அற்புதம்...

இந்த தசாப்தத்தின் முதல் 5 ஆண்டுகளை முதலில் பார்ப்போம்
  • தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி (விதி)
  • ரெண்டு கன்னம் சந்தன கிண்ணம் (சிவப்பு மல்லி)
  • எரிமலை எப்படிப் பொறுக்கும் (சிவப்பு மல்லி)
  •  யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது (நெஞ்சமெல்லாம் நீயே)
  • தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் (சட்டம் ஒரு இருட்டறை)
  • வா மச்சான் வா வண்ணாரப்பேட்டை (வண்டிச்சக்கரம்)
  • அழகிய விழிகளில் அறுபது கலைகளும் (டார்லிங் டார்லிங் டார்லிங்)
  • ஓ நெஞ்சே நீ தான் பாடும் கீதங்கள் (டார்லிங் டார்லிங் டார்லிங்)
  • தேவாம்ருதம் ஜீவாம்ருதம் பெண் தான் (மூன்று முகம்)
  • என்னடி முனியம்மா உன் கண்ணுல மை (வாங்க மாப்பிள்ளை வாங்க)
  • பட்டுக்கோட்ட அம்மாளு (ரங்கா)
  • டூத் பேஸ்ட் இருக்குது பிரஷ் இருக்குது (ரங்கா)
  • எனைத்தேடும் மேகம் சபைவந்து சேரும் (கண்ணோடு கண்)
  • மழையே மழையே இளமை முழுதும் (அம்மா)
  • பனியும் நீயே மலரும் நானே (பனிமலர்)

இளையராஜா ஊடுகட்டி அடித்த 80களின் பிற்பாதியில் சங்கர் - கணேஷும் தன் பங்குக்கு வெளுத்துக் கட்டி இருக்கிறார்கள்.. உதாரணத்திற்கு சில :

  • மாசி மாசம் தான் கெட்டி மேளதாளம் தான் (ஊர்க்காவலன்)
  • மல்லிகைப் பூவுக்கு கல்யாணம் (ஊர்க்காவலன்)
  • கொண்டைச்சேவல் கூவும் நேரம் (எங்க சின்ன ராசா)
  • மாமா உனக்கு ஒரு தூது விட்டேன் (எங்க சின்ன ராசா)
  • மரகதவல்லிக்கு மணக்கோலம் (அன்புள்ள அப்பா)
  • சிட்டுக்குருவி தொட்டுத்தழுவி (வீரபாண்டியன்)
  • வெண்ணிலா முகம் பாடுது (ஜோதி மலர்)
  • ஜானகி தேவி ராமனை தேடி (சம்சாரம் அது மின்சாரம்)
  • கட்டிக் கரும்பே கண்ணா (சம்சாரம் அது மின்சாரம்)
  • பனிவிழும் பருவ நிலா பரதமும் ஆடுதோ (பன்னீர் நதிகள்)
  • வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் (திருமதி ஒரு வெகுமதி)
  • மூங்கிலிலைக் காடுகளே முத்துமழை மேகங்களே (பெண்மணி அவள் கண்மணி)


மெல்லிசை மன்னர்களுக்கு பி.சுசீலா, இளையராஜாவுக்கு எஸ்.ஜானகி போல சங்கர் - கணேஷ் ஜோடிக்கு "வாணி ஜெயராம்".. ஆனால் மற்ற இருவருக்கும் இல்லாத சிறப்பாக வாணியை தமிழில் அறிமுகப் படுத்தியவர்கள் சங்கர் கணேஷ் தான்... (ஏற்கனவே எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடம் 1970ல் பாடி இருந்தாலும் படம் வெளிவரவில்ல்லை... 1973ல்  வெளிவந்த "வீட்டுக்கு வந்த மருமகள்" படத்தில் "ஓரிடம் உன்னிடம்" என்று டி.எம்.எஸ்ஸுடன் வாணி பாடிய பாடல் தான் முதலில் வெளிவந்தது) சங்கர் கணேஷின் வெற்றி பாடல்களை எடுத்துப் பார்த்தால் அதில் முக்கால்வாசிப் பாடல்களைப் பாடியவர் வாணி ஜெயராம் தான்.. (மேகமே மேகமே, ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம், யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது, அழகிய விழிகளில், கட்டிக்கரும்பே கண்ணா, மூங்கிலிலை காடுகளே, ஆலமரத்துக்கிளி, வெண்ணிலா முகம் பாடுது)..

70 - 80 களில் ரஜனி, கமல், விஜயகாந்த் படங்களுக்கு இசையமைத்த இந்த ஜோடி 90களில் ராம நாராயணனின் படங்களில் "ராமு, ராஜா, வெள்ளிக்கிழமை ராமசாமி, நாகராஜா" ஆகியோருக்கு இசை அமைக்கும் கட்டத்துக்கு போனார்கள் "தைப்பூசம், ஆடிவெள்ளி, ஈஸ்வரி, துர்கா, செந்தூரதேவி" என்று ஒரு வண்டிப் படங்கள்.. 93க்கு பிறகு இளையராஜாவே கிட்டத்தட்ட பீல்டு அவுட் நிலைமைக்கு போய்க்கொண்டிருந்த நிலையில் சங்கர் கணேஷின் படங்கள் பற்றி சொல்லத்தேவையில்லை.. இந்த காலகட்டத்தில் இவர் கொடுத்த சில பாடல்கள்...


  • ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் (இதய தாமரை)
  • ஓ தென்றலே ஒரு பாட்டு பாடு (சந்தனக்காற்று)
  • பாப்பா பாடும் பாட்டு (துர்கா)
  • யக்கா யக்கா ஏலக்கா (செந்தூர தேவி)


1959ல் களத்தூர் கண்ணம்மாவின் குழந்தை கமலுக்கு "அம்மாவும் நீயே" என்று பாடிய எம்.எஸ்.ராஜேஸ்வரி 35 ஆண்டுகளுக்கு பிறகும் அதே மழலைக் குரலில் பேபி ஷாமிலிக்கு "யக்கா யக்க்கா" பாடல் பாடி இருப்பார்.. இவரைப்போல நிறைய பழைய பாடகர்களை மீண்டும் பயன்படுத்தியவர்கள் சங்கர் கணேஷ்... எம்.ஆர்.ராதாவின் கடைசி காலத்தில் " தர்மங்கள் சிரிக்கின்றன" படத்தில் இசைச் சித்தர் சி.எஸ்.ஜெயராமனை "போடா உலகத்தை தெரிஞ்சுக்க" என்ற பாடலையும், "வேலும் மயிலும் துணை" படத்தில் "மோதகமும் அதிரசமும் வைக்கின்றோம்" என்று பெங்களூர் ரமணி அம்மாளையும், சஷ்டி விரதம் படத்தில் "துணைவன் வழித்துணைவன்" என்று மதுரை சோமுவையும் பாடவைத்திருப்பார்கள்....

சங்கர் கணேஷ் இசையின் மீது பெரும்பாலானவர்கள் சொல்லும் குறை என்ன என்றால் இவர்கள் பிறமொழிப் பாடல்களை நகலெடுப்பவர்கள் அல்லது அப்படியே பயன்படுத்திக் கொள்பவர்கள் என்பது... இதை முழுமையாக ஒதுக்கவும் முடியாது அப்படியே ஏற்கவும் முடியாது...  இவர்கள் பிறமொழிப் பாடல் சாயலில் அல்லது மெட்டில் இசையமைத்த சில பாடல்கள் உதாரணத்துக்கு :


  • தேவி கூந்தலோ பிருந்தாவனம் (என் ஆசை உன்னோடு தான்) - Turtles Happy Together என்ற பாடலின் சாயல்
  • மேகமே மேகமே (பாலைவனச்சோலை ) - "தும் நஹி ஹம் நஹி" என்னும் ஜக்ஜித் சிங்கின் கஸல் பாடலின் அட்டைக்காப்பி.
  • யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது (நெஞ்சமெல்லாம் நீயே) - "மே ஹவா ஹூன் கஹான்" என்னும் "அஹ்மது & மொஹம்மது ஹுசைன்" சகோதரர்களின் கஸல் பாடலின் சாயலில் அமைந்தது.
  • அவள் ஒரு மேனகை (நட்சத்திரம்) - தெலுங்கில் ரமேஷ் நாயுடு மூலப்படமான சிவரஞ்சனி படத்துக்காக போட்ட "அபிநவ தாரவோ" என்னும் பாடல்.. இயக்குனரின் விருப்பப்படி அப்படியே வைக்கப்பட்டது.
  • ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் (நீயா) - "நாகின்" ஹிந்தி படத்திற்காக கல்யாண்ஜி - ஆனந்தஜி போட்ட "தேரே சங் பியர் மே" பாடலின் மெட்டு, தமிழில் இயக்குனர் விரும்பியபடி அப்படியே இடம் பெற்றது.
  • சங்கத்தில் பாடாத கவிதையை (ஆட்டோ ராஜா) - "ஓலங்கள்" படத்துக்காக இளையராஜா இசையமைத்த "தும்பீ வா" பாடலின் மெட்டு.. இந்த பாடலின் மீது உள்ள அபிமானத்தில் இளையராஜாவிடம் கேட்டு பெற்று இடம்பெறச்செய்தார்கள் என்று கேள்வி.
  • சொர்க்கத்தின் வாசல் இங்கே (மங்கம்மா சபதம்) - மைக்கேல் ஜாக்சனின் "Billie Jean" பாடலின் சாயலில் அமைந்தது 


இப்படி நிறைய இருக்கிறது... இவை இவர்களது வளர்ச்சியின் மீது ஒரு குறிப்பிட்ட அளவு தாக்கத்தை ஏற்படுத்தவே செய்தது... என்றாலும் இந்தப் பதிவு முழுக்க நாம் கண்ட ஏராளமான நல்லிசைப் பாடல்கள் சங்கர் கணேஷின் இசைச் சான்றுகளாகவே நமக்கு கிடைக்கின்றன...

சங்கர் கணேஷிடம் இருந்து மற்றவர்கள் சுவீகரித்த பாடல்களும் உண்டு.. அவற்றை நான் இங்கு சொல்லாவிட்டால் அது ஒருதலைப்பட்சமான செயலாகும்..


  • மாணவன் படத்தில் "விசிலடிச்சான் குஞ்சுகளா குஞ்சுகளா" என்று கமலுக்கு இவர்கள் போட்ட பாடலின் பல்லவி "வாளமீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்" என்று பின்னாளில் பயன்பட்டது.
  • எங்க சின்ன ராசா படத்தில் இவர்கள் இசைத்த "கொண்ட சேவல் கூவும் நேரம்" பாடலின் மெட்டு, படத்தை இந்தியில் "பேட்டா" என்று அனில்கபூர் எடுத்த போது "கோயல் சி தேறி போலி " என்று அப்படியே இடம்பெற்றது..
  • என்னடி முனியம்மா உன் கண்ணுல மய்யி பாடலை கேட்கும் போது "ஒத்த ரூவா தாரேன்" பாட்டு உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா??
  • "மாமா கையப்புடி" என்று வேங்கையின் மைந்தன் படத்தில் இவர்கள் போட்ட பாடலின் பல்லவியின் சாயல் "மாமா உன் பொண்ண குடு" என்று ராஜாதி ராஜா படத்தில் ராஜா இசையில் தெரிகிறது... 
இப்படி இந்தப் பக்கமும் நிறைய இருக்கிறது..

80களில் இளையராஜா புயல் வீசிய போதும் விடாமல் ஆண்டுக்கு 40 படங்கள் இசையமைத்த இந்த ஜோடி 93ல் பிரிந்தது.. அடுத்த சில ஆண்டுகளில் சங்கர் காலமானார்.. இந்தப் பிரிவு இவர்களது சரிவுக்கு ஒரு மிகமுக்கிய காரணம்.. அதுமட்டுமன்றி  92ல் ரகுமானின் வருகையும் அதன் மூலம் ஏற்பட்ட ரசனை மாற்றமும் மற்றொரு காரணம்.. ஒரு பார்சல் வெடிகுண்டில் தனது கைவிரல்களையும் கண்பார்வையையும் கணேஷ் இழந்தார்...


அதேபோல 90களில் இவரது இடத்தை தேவா சகோதரர்கள் பிடித்துக் கொண்டதும் மிகமுக்கிய காரணம்... இடையில் கணேஷ் 8 படங்களில் ஹீரோவாக நடித்தார்.. "பூக்களைத்தான் பறிக்காதீங்க" உட்பட பல பாடல்களிலும் தோன்றினார்... ஜகதலப்ரதாபன் என்ற படம் தயாரித்தனர் இவைகள் எவையுமே பெரிய அளவில் இந்த ஜோடிக்கு வெற்றி தரவில்லை... இப்போதும் "கருவேலன், பப்பு கொப்பம்மா, இயக்குனர்" என்று படங்களுக்கு இசை அமைத்து வருகிறார் கணேஷ்... தனது பெயரை தனியாக போடாமல் மறைந்த தனது நண்பர் பெயருடன் சேர்த்து "சங்கர்கணேஷ்" என்றே இன்றும் அடையாள படுத்திக்கொள்கிறார்...

நம்பர் 1 என்கிற இடத்தை தொட முடியாவிட்டாலும் 50 ஆண்டுகளில் நாம் இன்றும் நினைவில் இருத்தும் ஏராளமான நல்ல பாடல்களை வழங்கி தமிழ் திரை இசையின் மிக முக்கியமான ஒரு இடத்தைப் பிடிக்கிறது  இந்த இணை!!