Saturday, September 17, 2016

கல்யாணத் தேன் நிலா!!

அவர் தமிழ் சினிமாவின் முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவர்.. அடுத்த ஆண்டு தனது சினிமாத் துறையின் பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகிறவர்.... எம்.ஜி.ஆர் பாடல்கள் மூலம்  பிரபலமாகி பின்னர் இளையராஜா சங்கர் - கணேஷுடன் கால் நூற்றாண்டு ஏராளமான ஹிட் பாடல்களை வழங்கியவர்... எம்.எஸ்.வி, கே.வி.மகாதேவன் காலம் தொட்டு ஜி.வி.பிரகாஷ் காலம் வரையில் சற்றேறக்குறைய 1000 பாடல்கள் எழுதிய ஒரு உன்னதமான சினிமா கவிஞர்... யார் அவர் ????

மக்கள் திலகத்தின் "குடியிருந்த கோயில்" படத்திற்கு பாடல் எழுத அந்தக் கவிஞருக்கு அழைப்பு வருகிறது... யார் யாரோ வந்து எழுதிப்பார்த்து சரிவராத பாடல்... எழுதத் தொடங்கினார்... "நான் யார்?.. நான் யார்?.. நீ யார்?" ... கேள்வியுடன் தொடங்குகிற பல்லவி... பாடல் முழுவதும் கேள்விகள் தான்...

"உள்ளார் புசிப்பார் இல்லார் பசிப்பார்
உதவிக்கு யார் யாரோ?
நல்லார் தீயார் உயர்ந்தார் தாழ்ந்தார்
நமக்குள் யார் யாரோ ?" 

என்று பாடலில் மொத்தம் 73 வார்த்தைகள் "ஆர்" விகுதியில் முடியும்.. சின்னவருக்கு பாடல் பிடித்துப் போக அன்றே பாடல் பதிவு... அதிலிருந்து வரிசை கட்டி எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல்கள் எழுதினார்... உதாரணத்திற்கு சில சூப்பர் ஹிட் பாடல்கள் :



  • ஆயிரம் நிலவே வா  - அடிமைப்பெண் 
  • எங்கே அவள் எங்கே மனம் - குமரிக்கோட்டம் 
  • பூமழை தூவி வசந்தங்கள்  - நினைத்ததை முடிப்பவன் 
  • பாடும் போது நான் தென்றல் காற்று  - நேற்று இன்று நாளை 
  • நீங்க நல்லா இருக்கோணும்  - இதயக்கனி 
  • சிரித்து வாழ வேண்டும்  - உலகம் சுற்றும்  வாலிபன்
  • ஒன்றே குலமென்று பாடுவோம் - பல்லாண்டு வாழ்க
  • இந்த பச்சை கிளிக்கொரு  - நீதிக்கு தலைவணங்கு 
  • நீ என்னென்ன சொன்னாலும் கவிதை - நேற்று இன்று நாளை 
  • நாளை உலகை ஆளவேண்டும் - உழைக்கும் கரங்கள்
  • ஓடி ஓடி உழைக்கணும் - நல்ல நேரம்
  • உனது விழியில் எனது பார்வை - நான் ஏன் பிறந்தேன் 


எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த இறுதிப் படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை (தென்றலில் ஆடும் கூந்தலில்) பாடல்கள் எழுதி இருக்கிறார்.. எம்.ஜி.ஆர் நடிச்சு கடைசியா வெளிவந்தது பாக்யராஜோட "அவசர போலீஸ்" ஆச்சேன்னு யாராவது கெளம்புனீங்கன்னா.. அதுலயும் "நீ நெனச்சதும் மழையடிக்கணும்" பாட்டு இவர் எழுதினது தான்..

எம்.ஜி.ஆர் முதல்வரான பிறகு, 80 களில்  இளையராஜா  இவருக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்... குறிப்பாக  எண்பதுகளின் மத்தியில் மனிதர் படு பிசியாக  இருந்திருக்கிறார்... உதாரணத்துக்கு அந்த கால கட்டத்தில் இவர் எழுதிய பாடல்களில் கொஞ்சூண்டு...



  • கூ கூ என்று குயில் - காதல் பரிசு
  • கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு - காக்கி சட்டை
  • நீ ஒரு காதல் சங்கீதம் - நாயகன் ("நெலா அது" பாட்டைத் தவிர மற்ற அனைத்து பாடல்களும் இவர் எழுதியது )
  • ஓ வசந்த ராஜா - நீங்கள் கேட்டவை
  • அமுதே தமிழே அழகிய மொழியே - கோயில் புறா 
  • காற்றோடு குழலின் நாதமே - கோடை மழை 
  • புஞ்சை உண்டு நஞ்சை உண்டு - உன்னால் முடியும் தம்பி
  • மாலைக் கறுக்கலில் சோலைகருங்குயில் - நீதியின் மறுபக்கம்
  • தாழம்பூவே  வாசம் வீசு - கை கொடுக்கும் கை
  • செவ்வந்தி  பூக்களில் செய்த வீடு - மெல்லப் பேசுங்கள் (பானுப்ரியாவின் முதல் தமிழ் படம்)
  • உச்சி  வகுந்தெடுத்து பிச்சிப்பூ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி
  • விழியிலே மணிவிழியில் மௌனமொழி - நூறாவது நாள் 
  • நான் புடிக்கும் மாப்பிள்ளை தான் - முந்தானை முடிச்சு
  • ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை - தங்கமகன்
  • வெண்மேகம் மண்ணில் வந்து - நான் சிகப்பு மனிதன்...


1980ல் வெளிவந்த "கண்ணில் தெரியும் கதைகள்" படத்திற்கு 5 இசையமைப்பாளர்கள்.. அதில் ராஜாவின் இசையில் "நான் ஒரு பொன்னோவியம் கண்டேன்" எழுதியவர் இவர் தான்

இளையராஜாவுடன் மட்டுமல்ல சங்கர் - கணேஷோடு பொன் அந்தி மாலைப்பொழுது (இதயவீணை), பட்டுவண்ண ரோசாவாம் (கன்னிப் பருவத்திலே), அழகிய விழிகளில் (டார்லிங் டார்லிங் டார்லிங்), சங்கத்தில் பாடாத  கவிதையை (ஆட்டோ ராஜா), பனிவிழும் பருவ நிலா (பன்னீர் நதிகள்), மண்ணில் வந்த நிலவே (நிலவே மலரே) (ஏறத்தாழ 200 படங்கள் ஷங்கர் கணேஷுடன் பணி செய்திருக்கிறார்)...

சந்திரபோஸுடன்  "என்ன கத சொல்லச் சொன்னா (அண்ணா நகர் முதல் தெரு)" .. பாக்யராஜுடன் "பச்சமல சாமி ஒண்ணு (இது நம்ம ஆளு)"... ரவீந்திரன் மாஸ்டருடன் "பாடி அழைத்தேன் (ரசிகன் ஒரு ரசிகை) என்று மற்ற இசை அமைப்பாளர்களுடன் நீளுகிறது பட்டியல்

90களில் மாறிய இசைவடிவத்துடன் இவரது வெற்றிப் பாடல்கள் தொடர்கின்றன :


  • அதோ மேக ஊர்வலம் - ஈரமான ரோஜாவே
  • கல்யாணத் தேன் நிலா - மௌனம் சம்மதம் (மொத்தம் 38 "லா"க்கள் கொண்டு முடியும் பாடல் வரிகள்)
  • மழை வருது மழை வருது - ராஜா கைய வச்சா
  • விழியின் வழியே நீயா வந்து போனது - சிவா 
  • மணமாலையும் மஞ்சளும் சூடி  - வாத்தியார் வீட்டு பிள்ளை
  • வாசக் கறிவேப்பிலையே - சிறையில் பூத்த சின்னமலர்
  • உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி  - பணக்காரன்
  • சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா - அழகன்
  • தத்தித்தோம் - அழகன்
  • மெதுவா தந்தி அடிச்சானே - தாலாட்டு
  • எதிலும் இங்கு இருப்பான் - பாரதி
  • ஆத்தோரத்திலே ஆலமரம் - காசி


இந்நேரம் நீங்கள் யூகித்திருப்பீர்கள்... இவர் கண்ணதாசனல்ல... வைரமுத்துவல்ல... தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர்... ஆனால் இவர் கவிஞர் முத்துலிங்கமும் இல்லை..  இவர் ஒரு "Octogenarian" ஆனால் இவர் பஞ்சு அருணாசலமும் அல்ல.. இரண்டு முதல்வர்களோடு நெருங்கிய அரசியல் தொடர்புடையவர்...  எம்.ஜி.ஆர்- சிவாஜி முதல் விக்ரம் - சூர்யா வரை நான்கு தலைமுறை கண்ட கவிஞர்... தொடர்ந்து படியுங்கள்...

90 களுக்கு பிறகு மாறிய புதிய இசை அலைகளில் இவர் பங்களிப்பு முந்தைய காலகட்டங்களை போல இல்லை என்றாலும் யுவன் இசையில் "எங்கெங்கோ கால்கள் போகும் பாதையில் - நந்தா", ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் "அழகு நிலவே - பவித்ரா தேவா இசையில் "ஒரு கடிதம் எழுதினேன் - தேவா" என்று கிடைத்த வாய்ப்பிலெல்லாம் நிறைவான பாடல்கள் தந்திருக்கிறார்... எஸ்.ஏ.ராஜ்குமார், வித்யாசாகர் என்று தொடர்ந்து சமீபத்திய "தெறி" படத்தில் "தாய்மை வாழ்க" பாடல் வரை நீள்கிறது இவரது இசைப்பயணம்...

எழுதிய பாடல்களில் 90 % மெல்லிசைப்பாடல்கள் தான்... அதிலும் இவரது சிறப்பு இலக்கிய நயத்துடன் பாடல்கள் எழுதுவது ... அவற்றையும் கொஞ்சம் அலசுவோம்....

மரகதமணியின் இசையில் அழகன் படத்தில் அனைத்துப் பாடல்களும் இவர் தான்.. அதில்
தனது மானசீக குருவான பாவேந்தரின் "குடும்ப விளக்கு" சாயலில் "சாதிமல்லிப் பூச்சரமே" பாடல் எழுதி இருப்பார்...

எனது வீடு எனது வாழ்வு 
என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே 
வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்ல 
ஒன்றுதான் 
தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் 
ஒன்றுதான் 
கடுகுபோல் உன்மனம் இருக்கக்கூடாது

என்னும் வரிகள்... பாவேந்தரின்

"தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
சம்பாத்தியம் தானுண்டு இவையுண்டென்போன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளம் கொண்டோன்" 

என்பதன் லைட் வடிவம்...

"தத்தித்தோம்... வித்தைகள் கற்றிட தத்தைகள் சொன்னது தத்தித்தோம்...
தித்தித்தோம்... தத்தைகள் சொன்னது முத்தமிழ் என்றுளம் தித்தித்தோம்... "

காளமேகப் புலவரின் சித்திரக் கவியான

"தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி" யின் Inspiration.

"வாசக் கறிவேப்பிலையே" பாடலில்

"உடம்போ தங்கத்துல வார்த்தது போல
உதடோ முள்முருங்க பூத்தது போல" 

என்று எழுதி இருப்பார்.. இது குற்றாலக் குறவஞ்சியில்

"திருந்து பூமுருக்கின் அரும்பு போலிருக்கும். இதழினாள் 
வரிச்சிலையைப் போல்வளைந்து 
பிறையைப் போல் இலங்கு நுதலினாள்" 

என்று வசந்தவல்லியை வர்ணித்து திரிகூடராசப்பர் எழுதியதன் சினிமாட்டிக் வடிவம்... (பூமுருக்கு - பூ முருங்கை / முள் முருங்கை )

"குழலைப் பார்த்து முகிலென மயில்கள் நாணும்"... 

"அதோ மேக ஊர்வலம்" பாடலின் சரணத்தில் வரும் இந்த வரிகளின் மூலம் "சிறுபாணாற்றுப்படையில் இருக்கிறது...

"நெய் கனிந்து இருளிய கதுப்பின்; கதுப்பு என,             
மணிவயின் கலாபம், பரப்பி, பல உடன்           
மயில், மயிற் குளிக்கும் சாயல்" 
(விறலியரின் கூந்தலை மயில்கள் மழைமேகம் என்று கருதியதாக வரும் பாடல்)

நீ ஒரு காதல் சங்கீதம்... நாயகன் படத்தில் வரும் இந்தப் பாடலின் சரணத்தில்

"பூவைச் சூட்டும் கூந்தலில் - எந்தன் 
ஆவியை ஏன் நீ  சூட்டுகிறாய் " 

என்று கவிதை மழை பொழிந்திருப்பார்... 

"முருகிற் சிவந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் குழல் மடவீர்" 

என்று கலிங்கத்துப்பரணி கடைதிறப்பு பகுதியில் வரும் பாடலின் சாரம் தான் இது....

தன் மனைவியின் பெண்மை மீது விழுந்த களங்கத்தை மனதில் சுமந்து கொண்டு "வட்டக் கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ
கட்டெறும்பு மொச்சதுன்னு சொன்னாங்க..." என்று செம்பட்டை கதாபாத்திரம் பாடுவதாய் அமைந்தவை... சொல்லவந்ததை சொல்லாமல் வேறு ஒன்றை சொல்லும் "பிறிதுமொழிதல் அணி" என்னும் இலக்கிய இலக்கணம்...

"பூமழை தூவி வசந்தங்கள்" பாடலின் சரணத்தில்

"வெண்சங்கு கழுத்தோடு பொன்மலை அசைந்தாட
நான் கண்ட பொருள் கூறவா? 
என் அண்ணாவை ஒருநாளும் என்னுள்ளம் மறவாது
என்றாடும் விதமல்லவா..." என்னும் வரிகள் 

சிலப்பதிகாரத்தில் பாண்டிய மன்னனின் கொடி அசைந்தது கோவலனை வராதே என்னும் விதமாக அசைந்தது போல் இருந்ததாக இளங்கோவடிகள் "தற்குறிப்பேற்ற அணியாக"

"போருழந்தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி 
வாரல் என்பன போல் மறித்துக் கைகாட்ட"

என்று எழுதிக் காட்டியதைப் போல தங்கையின் கழுத்தில் ஆடும் மணிகள் "அண்ணனை மறவேன்" என்று தலையசைப்பதாக தனக்கு தோன்றியதாக எழுதி இருப்பார்..

அதுவே "தங்கை தன் அண்ணனை மறவேன்" என்று நாம் எடுத்துக் கொள்ளும் விதமாகவும் "எம்.ஜி.ஆர்... அண்ணாவை நான் மறவேன்" என்று பாடுவதாய் நாம் எடுத்துக் கொள்ளுமாறும் "இரட்டுற மொழிதலாய்" எழுதி இருப்பார்....

சொல்லிக் கொண்டே போகலாம் அத்தனை இலக்கிய திறன் இவர்  பாடல்களில்.... இவர் வரிகளிலேயே சொல்வதென்றால் இவரது  புலமையைக் கண்டு

"உன்னைச் செய்த பிரம்மனே உன்னைப் பார்த்து ஏங்குவான்.. இன்னும் என்ன சொல்ல? "

சரி 80 வயது.. எம்.ஜி.ஆர். இளையராஜா என்றெல்லாம் சொன்னதை வைத்து இவர் கவிஞர் வாலி என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.. இவர் வாலியும் அல்ல (பரம நாத்திகர்).... 4 முறை தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது, கலைமாமணி விருது, அரசவைக் கவிஞர் பட்டம் பெற்றவர்.. அதுமட்டுமல்ல தமிழக சட்டப்பேரவையின் (மேலவை) முன்னாள் துணை சபாநாயகர்.... அண்ணா திமுக உருவாக காரணமாக இருந்தவர்களில் ஒருவர்... அந்தக் கட்சியின் அவைத்தலைவராக ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இருந்தவர்...

அவர் வேறு யாருமல்லர்... பேரூர் தமிழ்க்கல்லூரியில் புலவர் பட்டம் பெற்று, சென்னை சாந்தோம் பள்ளியில் எம்.எஸ்.வியின் பிள்ளைகளுக்கு தமிழ் வாத்தியாராக இருந்து பின் நான் முதல் பத்தியில் சொன்ன "குடியிருந்த கோயில்" திரைப்படம் மூலம் பாடலாசிரியர் ஆன..... தலை, மீசை, உடை, சிரிப்பு என்று எல்லாம் வெள்ளை மயமாக இருக்கும்

"புலவர் புலமைப்பித்தன்"...... 


நான் மீண்டும் மீண்டும் வியந்து போகும் ஒரு விஷயம் "இலக்கியத்திறன், அரசியல் தொடர்பு, படவாய்ப்புகள், வெற்றிகரமான பாடல்கள்" இவை அனைத்தும் இருந்தும் இவரது சமகாலத்தவர்களான வாலி - வைரமுத்துவை போல இவர் பெயர் அந்த அளவுக்கு பிரபலம் அடையாதது ஏன் ? என்பது தான்... காலம் எப்போதுமே புரிபடாதது....

Saturday, September 10, 2016

அது ஒரு "பாப்" காலம்

நேத்து டிவில பிஸ்தா படத்துல வர்ற "அழகு புயலா அல்ட்ரா மாடர்னா" பாட்டு பாத்திட்டு இருந்தேன்.. மைண்டு அப்படியே பின்னோக்கி போயிடிச்சு.. இந்த படம் வந்த புதுசுல சன் டிவி திரைவிமர்சனம் ல இந்த பாட்டப் பத்தி "நீங்க வழக்கமா மெலடி தானே பண்ணுவீங்க.... இது எப்படின்னு?" கேள்விக்கு "நான் பாப் ஆல்பம் எல்லாம் பண்ணிருக்கேங்க.. அதனால அதெல்லாம்.. ஈஸியா வந்துருச்சு.." அப்படின்னு பதில் சொன்னாரு இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார்.. இன்னிக்கு தேதி வரைக்கும் நானும் அந்த ஆல்பத்தை தேடிட்டே இருக்கேன் கிடைக்க மாட்டேங்குது...

அவரு போட்டது இருக்கட்டும்... 90 களின் மத்தியில தமிழ்நாட்டுக்கே புதுசா ஒரு ஜுரம் வந்தது.. அது தான் "பாப்" ஜுரம்.. அதாவது பாப் பாடல்கள் அல்லது அந்த வகையைச் சேர்ந்த தனிப் பாடல்கள்னு நாம இதை வச்சுக்குவோம்.. சரியா சொல்லனும்னா 1995ல வெளிவந்து சக்கைப்போடு போட்ட "Alisha Chinay" யின் "Made In India" தான் இதுக்கு  பிள்ளையார் சுழி.. ஸ்கூல், காலேஜ் னு எங்க ஆண்டு விழா நடந்தாலும் "Made In India" தான்..

அதுக்கு அடுத்த ஆண்டு வெளிவந்த "Hariharan - Lesle Lewis" ஜோடியின் "Colonial Cousins" ஆல்பம் ரெண்டாவது பெரிய காரணி... முதன்முதலா "டாடா காப்பி" விளம்பரத்துல தான் அதை நம்மாளுங்க கேட்டாங்க... "கிருஷ்ணா நீ பேகனே"ல ஆரம்பிச்சு ஆங்கில வரிகள் ல தொடரும் வித்யாசமான கலப்பிசை... ஆல்பம் பயங்கர ஹிட்.. அத்தோட நாம சும்மா இருக்க மாட்டோமே... இறங்கினாங்கப்பா நம்மாளுங்க தமிழ் பாப் பாடல்களோடு களத்துல... அடுத்த அஞ்சாறு வருஷத்துக்கு என்னென்ன எல்லாம் நடந்ததுன்னு பாப்போம்...

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி அந்தக் கால இசை ரசனை மற்றும் சூழல் எப்படி இருந்ததுன்னு தெரிஞ்சிக்கிறது நல்லது.. 80களின் கிராமியப் பின்னணி படங்கள் மாறி 90களின் காலேஜ் பின்னணிப் படங்கள் வெற்றிகரமா ஓடிட்டு இருந்தன.. ராஜா தன்னோட "Peak Period" முடிந்து அவரது அடுத்த கட்டத்துக்கு போயிருந்தார்.. 92ல ரகுமானின் வருகை நிறைய புதிய இசை ரசனையை (மேற்கத்திய கலப்பிசை) ஏற்படுத்தி இருந்தது.. அதே மாதிரி இளையராஜா பாணியிலே ஜெராக்ஸ் அடிச்ச தேவாவும் இதே 95ல வெளிவந்த ஆசை படத்து மூலம் வேறு இசை வடிவத்துக்கு தன்னை மாத்திக்கிட்டாரு.. தூர்தர்ஷனே கதின்னு இருந்த தமிழனுக்கு 93-94ல சன் டிவி, ராஜ் டிவி ன்னு ரெண்டு புதிய சேனல்களும் அதன் புதிய விளம்பர யுக்திகளும் ஏற்படுத்திய ஈர்ப்பு முக்கியமான ஒரு மாற்றம்... இந்த சூழல்ல தான் நான் சொன்ன தமிழ் பாப் பாடல்கள் வரிசை கட்டின... அதுக்கு பெரும் பங்கு "ராஜ் டிவி யில் முக்கால் வாசி நேரம் வந்த அவற்றின் விளம்பரங்கள்.."

1987லேயே தமிழில் பாப் ஆல்பம் வரத்தொடங்கி விட்டதாக இணையத்தில் சில தகவல்கள் கிடைக்கின்றன... என் நினைவுக்கு எட்டிய வரை சன் மியூஸிக்கில் 1995/96ல் வெளிவந்த பாப் பாடல் "Philip - Jerry" இரட்டையர்களின்  "Dance Natyam" ஆல்பத்தில் உள்ள "Banana Boat" தான் முதல் ஹிட் ... அரை நிஜாரும் தலையில் தொப்பியுமாய் இவர்கள் ஆடும் விஷுவல் அடிக்கடி அப்போது ஒளிபரப்பாகும்...

இதே காலகட்டத்தில் இந்த தமிழ் பாப் இசை அலையின் இரண்டு முக்கிய நபர்களின் ஆல்பங்கள் வெளி வந்தன.. ஒன்று 13 வயதில் பாப் ஷாலினி பாடி வெளியிட்ட "ஷாலினி" என்கிற ஆல்பம்.. மற்றொன்று "சுரேஷ் பீட்டர்ஸ் பாடி வெளிவந்த "மின்னல்"... இரண்டும் செம ஹிட்.. மின்னலில் "இது வானம் சிந்தும் ஆனந்த கண்ணீர்", வா மானே வா தேனே ரெண்டும் நிறைய முறை கேட்டிருக்கிறேன்.. இதில் ரெண்டாவது பாட்டை , பின்னாளில் தான் இசையமைத்த "கூலி" படத்தில் "பூப்பூவா பூப்பூவா" என்று மீண்டும் பயன்படுத்திக் கொண்டார் சுரேஷ் பீட்டர்ஸ்..

1997 தமிழ் பாப் இசையில் தமிழ் நாட்டையே கலக்கிய 4 ஆல்பங்கள் வெளிவந்தன.. முதலாவது.... மால்குடி சுபா பாடிய "வால்பாறை வட்டப்பாறை"..... மொத்தம் 10 டிராக்குகள் என்றாலும் டைட்டில் டிராக் இன்றும் பாப்புலர்.. (இந்த பாட்ட கேக்கும் போது "என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா" எதுக்கு எனக்கு நியாபகம் வருது??? ) எஸ்.எஸ். மியூஸிக்கில் அடிக்கடி வரும்... (திமிரு ஹீரோயின் ஷ்ரியாவுக்காகவே எஸ்.எஸ்.மியூசிக் பார்த்த காலம் அது... ம்ஹ்ஹ்ஹம்ம்ம்.. இப்போ ஷ்ரியாவுக்கெல்லாம் வயசாகி இருக்கும்)

இரண்டாவது... ஹிந்தியில் ஹரிஹரன் பாடி வெளிவந்த காதல் பாடல்களை தமிழில் வைரமுத்துவின் வரிகளில் மொழிபெயர்த்து வெளிவந்த "காதல் வேதம்".. இரண்டே நாட்களில் இதன் எட்டுப் பாடல்களையும் வைரமுத்து எழுதி இருக்கிறார்..

"இருதயம் இடம் மாறித் துடிக்கும் வலது புறத்திலே" ,

"மலையும் நதியும் நிலவும் ஒருநாள் மறையும்
 காலம் வந்தாலும்
காற்று நின்றாலும் - நீ பிரியாதிரு".. இந்த இரண்டும் அடிக்கடி ராஜ் டிவியில் விளம்பரங்களில் வரும்.. எட்டுமே மெலடி ரகம் தான்..

மூன்றாவது.... அன்று புதுமுகங்களாக இருந்து இன்று பிரபலங்கள் ஆகி இருக்கும் ஆறு பேர் சேர்ந்து உருவாக்கிய "டான்ஸ் பார்ட்டி" என்கிற பாப் ஆல்பம்.. 15 நிமிடத்துக்கு ஒரு முறை ராஜ் டிவியில் விளம்பரம் வரும்.. யுகேந்திரன் பாடிய "சொல்லித்தரவா.. கற்றுக்கொள்ளவா", அனுராதா ஸ்ரீராம் பாடிய "உயிரின் உயிரே", தேவிஸ்ரீ பிரசாத் பாடிய "ஜிங்கி சிக்கிச்சாரோ", எஸ்.பி.பி.சரண் - தேவன் ஏகாம்பரம் குரல்களில் "மல்லிகைப் பூவில் நடனமாடிடும்", ஏற்கனவே "ஷாலினி" பாப் ஆல்பத்தில் அவர் பாடி வெளிவந்த "மாமா உன் புள்ளை இல்லையா", மற்றும் பிரவீண் என்பவர் பாடிய "காரைக்குடி கறம்பக்குடி கல்லக்குடி" என்று ஆறு பாட்டு.. இதில் பிரவீன் என்பவர் மட்டும் என்ன ஆனார் என்று தெரியவில்லை.. மற்றவர்கள் ஆளுக்கு 15 பாட்டாவது சினிமாவில் பாடிவிட்டார்கள்..

நான்காவது.. தமிழ்நாட்டை மட்டுமல்ல.. இந்தியாவையே.. ஏன் உலக அளவில் பிரசித்தி பெற்ற "வந்தே மாதரம்".. "பரத் - பாலா - கனிகா" தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் "அங்கும் இங்கும்" ஒன்று மட்டும் தான் தமிழ்ப் பாட்டு என்றாலும் இந்திய சுதந்திர பொன்விழாவை ஒட்டி வெளிவந்து பட்டிதொட்டி எல்லாம் பட்டையை கிளப்பிய தனிப்பாடல் தொகுப்பு என்று ஆணித்தரமாக சொல்லலாம்... நஸ்ரத் பதே அலிகான் பாடிய "சந்தா சூரஜ்" (போறாளே பொன்னுத்தாயி மெட்டில்) சூபி மற்றும் மேற்கத்திய கலப்பிசை வடிவத்தை தமிழக கிராமங்களிலும் அறிமுகப் படுத்தியது...

"பாய்ஸ்" படத்தில் "ஆல்பம் போடறதுன்றது என்ன ஆப்பம் போடுற மாதிரி அவ்வளவு ஈஸின்னு நெனச்சியாடா"னு விவேக் கேட்பாரே... உண்மையில்  இந்த நான்கு முக்கிய ஆல்பங்களும் ஏற்படுத்திய அதிர்வில் ஆளாளுக்கு ஆப்பம் போடுற மாதிரி வரிசை கட்டி வெளியிட்டார்கள்..

டான்ஸ் பார்ட்டி ஹிட் அடிக்க அதில் பாடிய "எஸ்.பி.பி.சரண் - தேவன்" ஜோடி தனியாக "கம்பன் ஒரு கண்ணிலே" என்று ஒரு ஆல்பம் வெளியிட்டார்கள்.. "கம்பன் ஒரு கண்ணிலே.. காளிதாசன் நெஞ்சிலே" என்று ஒன்று மட்டும் நினைவிருக்கிறது.. மற்றதெல்லாம் கொட்டாவி விடும் ரகம் தான்..

"எதிரும் புதிரும்" படத்தில் "தொட்டு தொட்டு பேசும் சுல்தானா" என்று டான்ஸ் பாடல் பாடிய புஷ்பவனம் குப்புசாமி அதில் பயங்கர இம்ப்ரெஸ் ஆகி "அடியாத்தி டான்ஸ் டான்ஸ்" என்று ஒரு பாப் ஆல்பம் வெளிட்டார்.. தூக்கு தூக்கி படத்தில் ஜி.இராமநாதன் இசையமைத்த "ஏறாத மலைதனிலே ஜோரான கவுதாரி ரெண்டு" பாடலை தாளத்தை மட்டும் மாத்தி

"காக்கா இல்லா சீமையிலே காட்டெருமை மேய்க்கயிலே
கண்ணுறங்கும் வேளையிலே கண்டேன் கண்டேன் கனவு ஒண்ணு"

என்று பாடுவார்.. என்ன பாடினாலும் இவரது குரல் அப்பட்டமாக கிராமிய மணத்துடனே ஒலிக்கும்.. அடுத்த வரிகளில்

"மந்திரியா இருக்கச் சொல்லி.. என்ன மத்தியிலே அழைச்சாங்க
வெள்ள வேட்டி இல்லையின்னு வேணாமுன்னு சொல்லிப்புட்டேன்"

என்று போகும்..

இன்று சட்டசபையில் "நீங்க நல்ல இருக்கோணும்" என்று பாடி சங்கீத சபையாக ஆக்கிக் கொண்டிருக்கும் திருவாடானை சமஉ "கருணாஸ்" 90களின் மத்தியில் "ஷாக்" என்றொரு பாப் ஆல்பம் வெளியிட்டார்.. ஆனால் "தெம்மாங்கு", "கானா", என்று பலபட்டறையாக இருந்ததால் தொடர்ந்து இவர் பாப் இசையில் நிறைய பாடவில்லை..

"சன் டிவியின் தமிழ் மாலை"க்கு பின்னணி இசை அமைத்த "ஆகோஷ்" (ஆனந்த் - கோபால் ராவ் - ஷலீன் ஷர்மா) 1997ல் "Come on India" என்று சங்கர் மகாதேவனை வைத்து ஒரு ஆல்பம் இந்தியில் வெளியிட்டார்கள்.. அப்போதைய உலக கோப்பைக்கு அதை புரோமோ பாடலாக மாற்றி காச்சிகுடா ரயில்வே ஸ்டேஷனில் "கமான் இந்தியா" என்று அவர் பாடுவதை விளம்பரமாக ஒளிபரப்பிக் கொண்டே இருந்தனர்.. இந்திப் பாடலாக இருந்தாலும் கிரிக்கெட் ஜுரத்தில் தமிழ் நாட்டிலும் நன்கு ரீச் ஆகியது... ( ஓயாமல் கமான்.. கமான் என்று அழைத்ததாலோ என்னவோ "வங்கதேசம், இலங்கை இருவரிடமும் மரண உதை வாங்கி முதல் சுற்றிலேயே இந்திய ஊர் திரும்பியது...)

"மின்னல்" வெற்றிக்கு பிறகு சுரேஷ் பீட்டர்ஸ் பாடி வெளிவந்த மற்றொரு ஆல்பம் "காத்திருப்பேன்"... "எந்நாளும் அன்பே உன்னை எண்ணி காத்திருப்பேன்" என்றொரு பாடல் இப்போதும் நினைவிருக்கிறது..

ராஜீவ் மேனன் தயாரித்து வெளிட்ட "உஸ்ஸெலே உஸ்ஸெலே" மற்றொரு வெற்றிகரமான ஆல்பம்.. ஸ்ரீனிவாஸ், கார்த்திக், டிம்மி குரல்களில் டைட்டில் பாடல் இப்போதும் யூ டியூபில் கிடைக்கிறது.. உன்னிகிருஷ்ணன் பாடிய "எப்போ வருவாரோ", சுஜாதா பாடிய "மழையே" என்று ஆல்பம் முழுக்க நிறைய ஜிலீர் பாடல்கள்...

மில்லீனியத்தை ஒட்டி இசையமைப்பாளர் ஆதித்யன், அப்போது அவரது அப்பரசண்டியாக இருந்த டி.இமான் மற்றும் பாடகர் சோலார் சாய் இவர்கள் மூவர் குரல்களில் "அக்சர் அதிரடி" என்று ஒரு ரீமிக்ஸ் ஆல்பம் வெளியிட்டனர் "கிருஷ்ணா முகுந்தா முராரே" என்று கைகளில் கிதாரோடு கண்ணனை துரத்திக் கொண்டு ஓடுவது மாதிரி ஒரு விஷுவல் ராஜ் டிவியில் வரும்.. பாகவதர் பாடிய இந்தப் பாடல் உட்பட 14 பாடல்களை ரீமிக்ஸ் செய்திருப்பார்கள்...

இதன் தொடர்ச்சியாக 2005ல் "யோகி. பி" மற்றும் "நட்சத்திரா" இணைந்து "வல்லவன்" என்று ஒரு ஆல்பம் வெளியிட்டனர்.. "மடை திறந்து தாவும் நதியலை நான்" பாடலை ரீமிக்ஸ் செய்திருப்பார்கள்... இதற்கு பிறகு சினிமாவிலேயே போதும் போதும் என்று கதறும் அளவுக்கு அடுத்த மூன்று நான்கு வருஷங்களுக்கு ஒரு பாட்டு விடாமல் ரீமிக்ஸ் செய்து தான் ஓய்ந்தார்கள்...

திடீரென ஆரம்பித்த இந்த பாப் அலை திடீரென காணாமல் போய் ரீமிக்ஸ் என்கிற வேறு அலை வந்தது...

இப்போதும் தமிழ் பாப் ஆல்பங்கள் புற்றீசல் போல வந்துகொண்டே இருக்கின்றன.. ஆனால் 90களின் மத்தியில் இருந்த ஈர்ப்பு இல்லை..
இன்டர்நெட் யுகத்தில் சின்ன மொபைலை வைத்து ஒரு சினிமாவே எடுக்கும் காலத்தில் இப்போது பாப் ஆல்பம் என்பது ஒரு பெரிய விஷமேயில்லை...

கடைசியாக ஒரு "Disclaimer" இதில் நித்தி கனகரத்தினம், இ.ஏ.மனோகர் இவர்களின் பாடல்களைத் தேட வேண்டாம்.. சிலோன் பைலா என்பது தனி இசை வடிவமாதலால் அதை இந்த ஆங்கில தமிழ் கலப்பில் வெளிவந்த தமிழ் பாப் பாடல்களில் சேர்க்கவில்லை... அதே போல நான் ஏற்கனவே சொன்னது போல 90களின் மத்தியில் தொடங்கி ஓங்கி வீசிப் பின் ஓய்ந்து போன ஒரு அலையைப் பற்றிய பருந்துப் பார்வை இது... அவ்வளவே!!!!

Sunday, September 4, 2016

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்!!!!

விநாயகர் சதுர்த்தி வருது... (விடுமுறை தினம்னு சொல்லணுமா? தெரியலையே).. எல்லா டிவி சேனலும் பக்திமழை பொழியிறாங்க.. நாமளும் ஏதாச்சும் செய்வோம்....

'மலரோ நிலவோ மலைமகளோ' ஜெயச்சந்திரன் பாடிய இந்தப் பாட்டுக்கு இசை யாருப்பா?? ஜெயச்சந்திரன் பாடிருக்காப்ல... செமி-கிளாசிக்கல்... ரெண்டாவது சரணத்துல ஸ்வரம் எல்லாம் வருது, 'ஸ்ரீதேவி என் வாழ்வில்' பாட்டு மாதிரியே இருக்கு.... வேற யாரு ராஜா தான்...

 'திருப்பரங்குன்றத்தில்  நீ சிரித்தால்' பாட்டு யாரு மியூசிக்கு?? என்ன கேள்விப்பா இது... கந்தன் கருணை கே.வி.மகாதேவன் National Award வாங்கின படம் ஆச்சே ... இது போன்ற தப்பிதக் கற்பனைகள் எனக்கு நிறைய இருந்தததுண்டு... சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும்...

அவர் ஒரு இசைக்கலைஞர்.. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் ஜி.ராமநாதன், சுப்பையா நாயுடு போன்றவர்களின் படங்களில் பக்கவாத்தியக் கலைஞராக இருந்தவர் பிறகு வாய்ப்புத் தேடி சென்னை வந்து கொலம்பியா எச்.எம்.வி யில் சூலமங்கலம் சகோதரிகள், எல். ஆர். ஈஸ்வரி, சீர்காழி கோவிந்தராஜன் போன்றவர்களுக்கு பக்திப் பாடல்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார்...  (கிட்டத்தட்ட 700 பாடல்களுக்கு மேல் ).. உதாரணத்துக்கு சில :

அழகெல்லாம் முருகனே, முருகனுக்கொருநாள் திருநாள், திருநீறில் மருந்திருக்கு தெரியுமா, ஆடுகின்றானடி தில்லையிலே (சூலமங்கலம் சகோதரிகள்)... கற்பூர நாயகியே கனகவல்லி, தாயே கருமாரி, கண்ணபுர நாயகியே மாரியம்மா, கருணை உள்ளம் கொண்டவளே (எல். ஆர் .ஈஸ்வரி) நாராயணா என்னும் பாராயணம், ஒப்பில்லாத பெருமாள் நம் உப்பிலியப்ப திருமால் (சீர்காழி கோவிந்தராஜன்)

அவரது பக்திப் பாடல்களில் ஒன்றைக் கேட்ட கவியரசு கண்ணதாசன் இந்தப் பாடல் உங்களது படத்தில் வரும் சூழலுக்கு சரியாகப் பொருந்தும் என்று இயக்குனர் ஏ.பி.நாகராஜனிடம் சொல்ல, அந்தப் பாடல் மற்றொரு இசை அமைப்பாளர் இசையமைத்த அந்தப் படத்தில் இடம் பெற்றது... "முருக கானாம்ருதம்" என்னும் பக்திப் பாடல் கேஸட்டிற்கு இவர் இசை அமைத்த பாடல் தான் கந்தன் கருணை படத்தில் இடம்பெற்ற "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்"

1969ம் ஆண்டு அதே ஏ.பி.என்னிடம் இருந்து அந்த இசைக் கலைஞருக்கு அழைப்பு வருகிறது.. செல்கிறார்... "வா ராஜா வா" என்கிறார் இயக்குனர்.. இவர் புரியாமல் பார்க்க.. "என்ன பாக்கறீங்க.. இது தான் நீங்க இசை அமைக்கப் போற படத்தோட பேரு" என்று இன்ப அதிர்ச்சி அளிக்கிறார் ஏ.பி.என்... அந்த இசையமைப்பாளர் வேறு யாருமல்ல வயலின் இசை வேந்தர் பத்மஸ்ரீ குன்னக்குடி வைத்தியநாதன்...



குன்னக்குடின்ன உடனே "நெத்தி நெறய பொங்கலுக்கு வெள்ளை அடிச்ச மாதிரி விபூதி பூசிக்கிட்டு, நடுவுல பழைய காலத்து பத்து ரூவா காயின் மாதிரி பொட்டு வச்சுக்கிட்டு, பொன்னாடைல சட்ட தெச்சு போட்டுக்கிட்டு தீபாவளிக்கு தீபாவளி காலைல சன் டிவி ல 06:30 - 07:30 அன்றும் இன்றும் ல மருதமலை மாமணியேவும் இஞ்சி இடுப்பழகாவும் வாசிப்பாரே அந்த குன்னக்குடி தான்" 15 வருஷம் முந்தி வரை எனக்கு தெரிஞ்ச குன்னக்குடி.. 22 படங்கள்.. 700க்கு மேற்பட்ட பக்திப் பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார் என்ற விபரம் தாமதமாக நான் அறிந்த ஒன்று..

சரி மீண்டும் விஷயத்துக்கு வருவோம்.. "இறைவன் படைத்த உலகை எல்லாம்", "கல்லெல்லாம் செல செஞ்சான் பல்லவராஜா" என்று அருமையான பாடல்களோடு "வா ராஜா வா" ஹிட் அடிக்க வரிசையாக ஏ.பி.என் படங்களுக்கு குன்னக்குடி இசை அமைத்தார்.

1970ல் வெளிவந்த "திருமலை தென்குமரி' தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றுத் தந்த திரைப்படம். ஒரு பேருந்தில்  சில குடும்பங்கள் பக்தித் தலங்களுக்கு யாத்திரை செல்வதாக அமைந்த படம். "திருப்பதி மலை வாழும் வெங்கடேசா" , குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா", "சிந்தனையில் மேடை கட்டி", என்று அனைத்தும் ஹிட் பாடல்கள்..

"மதுரை அரசாளும் மீனாட்சி".... சீர்காழியின் குரலில் காபி, கானடா, பீம்ப்ளாஸ், குந்தல‌வராளி என்று ராகமாலிகையாய் அமைந்த இந்தப் பாடலில் "திரிபுரசுந்தரி சீர்காழியிலே' என்ற வரியில் "சீர்காழியிலே" என்ற சொல்லை மட்டும் தனியாக ஆலாபித்து பக்கத்தில் இருக்கும் குன்னக்குடியை பார்த்து புன்னகைப்பார் சீர்காழி கோவிந்தராஜன்.. கடைசியில் வரும் அதி வேக ஸ்வரங்கள் குன்னக்குடி ஸ்பெஷல்..

1972ல் வெளிவந்த அகத்தியர் படம் குன்னக்குடியின் அடுத்த பெரிய ஹிட்.. சீர்காழி கோவிந்தராஜன், டி.ஆர்.மஹாலிங்கம் என்று இரண்டு இசை வல்லுநர்கள் இணைந்த படம்.. "நடந்தாய் வாழி காவேரி, உலகம் சமநிலை பெறவேண்டும், மலை நின்ற திருக்குமரா", "நமச்சிவாய என சொல்வோமே", "தாயிற் சிறந்த கோயிலுமில்லை", "இசையாய் தமிழாய் இருப்பவனே" என்று பெரிய பட்டியல்.. அத்தனையும் முத்தான பாடல்கள்...

அதே ஆண்டு வெளிவந்த "தேவரின் தெய்வம்" படம் தான் இன்றளவும் குன்னக்குடியின் கேரியர் பெஸ்ட் படம்.. முருகனின் ஆறுபடை வீடுகளைக் குறிக்கும் விதமாய் ஆறு பாட்டு.. ஆறும் பட்டயைக் கிளப்பிய ஹிட்... மதுரை சோமுவின் "மருதமலை மாமணியே", பெங்களூர் ஏ. ஆர். ரமணி அம்மாள் பாடிய "குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்", பித்துக்குளி முருகதாஸ் சுவாமிகள் பாடிய "நாடறியும் ஏழுமலை", டி.எம்.எஸ் - சீர்காழி இணையில் "திருச்செந்தூரின் கடலோரத்தில்", "சூலமங்கலம் ராஜலட்சுமி - எம்.ஆர்.விஜயா குரல்களில் "வருவான்டி தருவான்டி", ராதா-ஜெயலட்சுமி குரல்களில் "திருச்செந்தூரில் போர் புரிந்து".. படம் வந்து 45 ஆண்டுகள் ஆகின்றன.. ஆயினும் இன்னும் மனதை விட்டு நீங்காத இசை...

1973ல் வெளிவந்த தமிழின் முதல் சினிமாஸ்கோப் படம் ராஜராஜ சோழனில் "தஞ்சை பெரிய  கோயில் பல்லாண்டு வாழ்கவே", "ஏடு தந்தானடி", தென்றலோடு உடன் பிறந்தாள்" என்று பல நல்ல பாடல்கள்...

அடுத்து வந்த திருமலை தெய்வம், திருவருள் படங்களிலும் வெற்றி பாடல்கள் தொடர்ந்தன "ஏழுமலை இருக்க எனக்கென்ன மனக்கவலை, நாளெல்லாம் உந்தன் திருநாளே, திருவருள் தரும் தெய்வம், கந்தன் காலடியை வணங்கினால், மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க, மாலை வண்ண மாலை" என்று...

பக்திப் படங்களில் இருந்து மாறி சமூகப் படங்களை ஏ.பி.என் எடுத்த போதும் குன்னக்குடியின் இசையில் பக்தி மணம்.. குமாஸ்தாவின் மகள் படத்தில் "எழுதி எழுதி பழகிவந்தேன்", மேல்நாட்டு மருமகள் படத்தில் "முத்தமிழில் பாடவந்தேன்" (நவராத்திரி சுண்டல் பாட்டு.. வருஷத்துக்கு யாராவது ஒருவர் வந்து பாடிடுறாங்க)

குன்னக்குடி என்றதும் நினைவுக்கு வரும் மற்றொரு விஷயம் அவர் எதையாவது வித்தியாசமாக செய்துகொண்டே இருப்பார்.. அவரது இசையமைப்பில் அப்படி நிறைய இருக்கிறது பேச.... வாங்க பேசுவோம்...

அகத்தியர் படத்தில் சீர்காழி - டி.எம்.எஸ் குரல்களில் ஒலிக்கும் பாடல் "வென்றிடுவேன்" "நாட்டை, பைரவி, தோடி, ஆரபி, ஷண்முகப்ரியா, தர்பார், ஹம்சத்வனி, வசந்தா, மோகனம், மனோலயம், பாகேஸ்வரி, சாரங்கா, காம்போதி, கௌரி மனோகரி, கல்யாணி, சரஸ்வதி" என்று 16 ராகங்களில் அமைந்த தமிழ் சினிமாவின் மிகப் பெரிய ராகமாலிகை.

அது மட்டுமல்ல "நாட்டை"யும் நாதத்தால் வென்றிடுவேன்.. "பைரவி" துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன் என்று ஒவ்வொரு வரியிலும் ராகத்தின் பெயரை பாடல் வரியில் கொண்ட பாடல் .. ..

இன்னும் சுவாரஸ்யமாக "சமமா நீ சரிசமமா? மனிதா நீ பாதக மனிதா" சாகசமா? பரிகாசமா? போன்ற சொற்களில் அந்த அந்த எழுத்துக்களைக் கொண்ட ஸ்வரங்களிலேயே வைத்து விளையாடி இருப்பார் வைத்தி... (உதாரணத்துக்கு: சமமா என்பதை "ச" "ம" "ம")...

வாகீச கலாநிதி கி.வா.ஜ அவர்களை முதன் முதலாக சினிமா பாடல் எழுத வைத்தவர் குன்னக்குடி தான்.. "நம்ம வீடு தெய்வம்" படத்தில் "உலகமெல்லாம் படைச்சவளே" என்ற பாட்டு.. (அவர் அடுத்து எழுதிய பாடலும் குன்னக்குடியின் இசையில் தான் "அன்னை அபிராமி" படத்துக்காக).. அதே போல குழந்தைக் கவிஞர் என்று போற்றப்பட்ட அழ. வள்ளியப்பாவை "கல்லெல்லாம் செல செஞ்சான்" என்று "வா ராஜா வா"வில் எழுத வைத்திருப்பார்..

அநேக பாடகர்களை முதன் முதலில் சினிமாவில் பாடவைத்தவர் இவர் ( மதுரை சோமு, பெங்களூர் ரமணி அம்மாள், பித்துக்குளி முருகதாஸ், எம். ஆர்.விஜயா, டி.கே.கலா,உஷா உதூப்" என்று பெரிய பட்டியல்).

தமிழின் முதல் பாப் பாடலான " Life is a Flower.. Love is a Treasure" என்ற பாடலை மேல்நாட்டு மருமகள் படத்தில் உஷா உதூப்பை பாட வைத்திருப்பார்..

கண்காட்சி படத்தில் பீம்பிளாஸ் ராகத்தில் "3 - 2 - 2" என்று ஏழு அட்சரங்களைக் கொண்ட மிஸ்ர நடையில் முதன் முதலாக ஒரு டூயட் பாடல் அமைத்திருப்பார்.. அது கே.டி.சந்தானம் பதிவில் நான் சொன்ன "அநங்கன் அங்கஜன் அன்பன்" என்னும் பாடல் (நடிகர் சங்க மீட்டிங்கில் சிவகுமார் சொன்ன அதே பாடல் )

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு குன்னக்குடி இசையமைத்த "நவரத்தினம்" படத்தில் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவுக்கு இரண்டு வித்தியாசமான பாடல்கள்.. மேற்கத்திய பாடலுக்கு மூலம் கர்நாடக இசைதான் என்னும் விதமாக பாடல் வேண்டும் என்று எம்.ஜி.ஆரின் விருப்பத்திற்காக இவர் இசை அமைத்தது...

"Sound of Music" படத்தில் வரும் "Loanely Goathered" பாடலை தியாகய்யரின் "பலுக்கு கண்ட சா" என்கிற நவரச கானடா ராக கீர்தனைக்கு  ஒப்பிட்டு விளக்குவார்.. அடுத்து "Golden Youths Always Rules" என்னும் "My Fair lady"
படப்பாடலை "ஏதாவுனரா" என்னும் கல்யாணி ராக தியாகராஜ கீர்த்தனைக்கு ஒப்பிட்டு பாடிக்காட்டி பின்னர் அதையே ஹிந்துஸ்தானி "அமீர் கல்யாணி"யில் "ஜோ தும் தோடோ பியா" என்னும் மீரா பஜன் பாடலுக்கு ஒப்பிட்டு மீண்டும் ஸ்வரங்களில் இந்த மூன்றையும் இணைத்து பாடிக்காட்டுவார்.. 27 ஸ்ருதிகளில் பாடக்கூடிய ஸ்வர ஞானியாகிய பாலமுரளி பிரமாதப் படுத்தி இருப்பார்..

அப்பேர்ப்பட்ட பாலமுரளி கிருஷ்ணாவை "குருவிக்காரன் பொஞ்சாதி" என்று அதே படத்தில் ஜிப்ஸி பாடலையும் பாட வைத்திருப்பார்..

நடிகர் திலகம் சிவாஜியுடன் இவர் இணைந்த "ராஜராஜ சோழனில்" சிவாஜி கவிதை சொல்லச் சொல்ல டி.ஆர்.மஹாலிங்கம் அதை ராகமாக பாடும் "தென்றலோடு உடன் பிறந்தாள்" ஒரு வித்தியாசமான முயற்சி..

இதே படத்தில் இசைத்துறையில் மூன்று ஆகிருதிகளான "சீர்காழி - டி.ஆர்.மகாலிங்கம் - எஸ்.வரலட்சுமி" ஆகிய மூவரையும் "தஞ்சை பெரியகோயில் பல்லாண்டு வாழ்கவே" பாடலில் இணைத்திருப்பார்.. "நஞ்சைக் கழனிகளின் நாயகனே" என்று ஆரம்பமே படு கம்பீரமாக இருக்கும்.. மூன்று குரல்களும் ஒன்றாக சேர்ந்து ஒலிக்கும் பொழுது "வெண்கல நாதம்" மாதிரி இருக்கும்...

உச்சஸ்தாயியில் மேல்கால சஞ்சாரம் எல்லாம் செய்து பிருகாக்களோடு பாடும் டி. ஆர்.மகாலிங்கத்துக்கு அகத்தியர் படத்தில்  ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் சாகித்யமான எஸ்.ஜி.கிட்டப்பாவின் "ஆண்டவன் தரிசனமே தியாகேசன் தாண்டவ தரிசனமே" பாடலை உளுந்தூர்பேட்டை சண்முகம் வரிகளில் "ஆண்டவன் தரிசனமே மெய்யடியார் வேண்டிடும் அனுபவமே" என்று பாட வைத்திருப்பார்.. சொல்லத் தேவையே இல்லை ஹோம் கிரவுண்டில் சச்சின் ஆடுவது மாதிரி தான்... பிச்சு உதறி இருப்பர் டி.ஆர்.எம். (இதுபோல தனது பழைய பக்திப் பாடல்களான "ஆடுகின்றனடி தில்லையிலே"  பாடலை "ஏடு தந்தானடி" என்றும் "வேல்வந்து வினை தீர்க்க" பாடலை "காவலுக்கு வேலுண்டு" என்று மனிதனும் தெய்வமாகலாம் படத்திலும் பயன்படுத்தி இருக்கிறார்).

இந்தப் படத்தில் தான் நான் முந்தைய பதிவில் சொன்ன "இசையாய் தமிழாய் இருப்பவனே" பாடல்.. கடகடவென ஓடும் ரன்னிங் நொட்டேஷனில் கவிஞர் கே.டி.சந்தானத்தின் பல்லை உடைக்கிற வார்த்தைகளில் அருமையான Male டூயட்.. இந்த துரித கதி என்பது அவரது ஸ்டைலாகவே இருந்திருக்கிறது.. ஏராளமான பாடல்கள் இதே மாதிரி ஓடும் சங்கதிகளோடு அமைத்திருக்கிறார்.

கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் இவர் இசையில் காரைக்கால் அம்மையார், திருமலை தெய்வம் ஆகிய இரண்டு படங்களில் பாடி இருப்பார்.. அதிலும் காரைக்கால் அம்மையார் படத்தின் கிளைமாக்ஸ் பாடலான "தகதகதக தகதக வென ஆடவா" "திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம்" என்று மூன்று தாளக்கட்டுக்களில் மாற்றி மாற்றி கே.பி.எஸ்.குரலில் ஆனந்த தாண்டவத்தை இசை வடிவமாக கண் முன் நிறுத்தி இருப்பார்...

இவர் திரையில் தோன்றி நடித்த முதல் படமான கந்தர் அலங்காரத்தில் வயலின் இசைத்து அதில் வரும் தீப்பொறியில் ஆறு தீபங்கள் ஏற்றுவதாக ஒரு காட்சி வரும் (கேட்பதற்கு கொஞ்சம் தீப்பொறி திருமுகம் எபெக்ட்டில் இருந்தாலும்) ஷண்முகப்ரியா ராகத்தில் "வெல்லும் பெயர் தானே வேலவன்" என்று எஸ்.ஜானகி குரலில் ஒலிக்கும் பாடல் முழுதும் வயலினை திருப்பி பிடித்து மாண்டலின் போல் வாசிப்பது.. வில்லை எடுத்து மடார் மடார் என்று தந்தியில் அறைவது.. என்று வழக்கமான குன்னக்குடி சேட்டைகள்... என்னென்னெவெல்லாமோ செய்வாரு...

இதே படத்தில் எம்.ஆர்.ராதா கதாகாலட்சேபம் செய்வதாக ஒரு பாட்டு "கந்தா கடம்பா செவ்வேலா" என்று "பாகவதரின் "கிருஷ்ணா முகுந்தா" பாடலை எம்.ஆர்.ராதாவின் குரலில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை வைத்து மிமிக்ரி செய்திருப்பார்...

நான் முதல் பத்தியில் சொன்ன மலரோ நிலவோ பாடல் இடம்பெற்ற "ராக பந்தங்கள்" படத்தில் மற்றொரு நல்ல பாடல் "சரி கம பத நி என்னும் சப்தஸ்வர ஜாலம்".. இசைப் பயிற்சியின் பல கட்டங்களாக "சரளி, ஜண்டை, கீதம் ஆகியவற்றை" முதன் முதலில் பயிற்றுவிக்கப்படும் "மாயா மாளவகௌளை" ராகத்தில் அமைத்திருப்பார்..

அவருக்கு மாநில அரசு விருது பெற்றுத் தந்த திருமலை தென்குமரியில் அனைத்து மொழி பேசுபவர்களும் பாடுவதாக அமைந்த (பாரத விலாஸ் டைப்) பாடல் ஒன்று உண்டு.. "அமுதே தமிழே" என்று சீர்காழி தொடங்கி வைப்பார் பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், நடுவில் "பாடணுன்னு மனசுக்குள்ள ஆச நெறய  கீது" என்று பேட்டை பாஷையில் மனோரமா என்று போய் கடைசியில் காலேஜ் மாணவர்கள் பாடும் ஆங்கிலம் கலந்த தமிழாக முடியும்... அருமையாக செய்திருப்பார்.. எனக்கு இதில் மிகவும் பிடித்தது எம்.ஆர். விஜயா பாடிய "தாசினா கரையுவே பா கிருஷ்ணா" என்கிற கன்னடப் பாடல்..

இதைத் தவிர "ஜெயலலிதா" என்ற ராகத்தை கண்டுபிடித்தது (அட சத்தியமா தாங்க)... மழை வராத பொழுது சென்னை புழல் ஏரியில் நின்று அமிர்தவர்ஷினி வாசித்து இப்படி நெறய இருக்கு...

இவர் தயாரித்து வெளியிட்ட தோடி ராகம் படத்தில் "தோடியில் பாடுகின்றேன்" என்று டி.என்.சேஷகோபாலன் பாடும் அருமையான பாடல் உண்டு (ஜெயா டிவியில் பார்த்ததாக நினைவு... பாடல் இணையத்தில் கிடைக்கவில்லை)

இந்தப் படத்துல "கொட்டாம்பட்டி ரோட்டிலே.. குட்டி போற ஷோக்கிலே" என்றொரு வண்டிக்காரன் பாட்டு உண்டு.. வில்லங்கமான வார்த்தைகளுடன் வரும் இந்தப் பாடலை பாடியவர் சாட்சாத் குன்னக்குடியே தான்...

வலையப்பட்டி தவிலோடு இணைந்து வயலின்... வயலின் தனிக்கச்சேரி... ராக ஆராய்ச்சி... ஏ.ஆர்.ரகுமான், ஜாகிர் உசேனோடு இணைந்து "கலர்ஸ்" என்னும் கலப்பிசை... இதுபோக சினிமா இசையமைப்பு என்று பல தளங்களிலும் இருந்தாலும் அவரது இசை "பக்தி இசை" என்ற அடையாளத்துக்கு உள்ளேயே வருகிறது.. அதில் குன்னக்குடியின் சாதனை அதை எளிமையாக்கி எல்லாரையும் ரசிக்க வைத்ததே....

இறுதியாக.... இந்தப் பதிவை நான் இப்போது எழுதக் காரணம் வரும் வியாழன் (08-செப்டெம்பர்) அன்னாரின் எட்டாம் ஆண்டு நினைவேந்தல்...

குன்னக்குடி அவர்கள் உடலால் மறைந்து எட்டாண்டுகள் ஆயினும் அவர் நாதம்  "குன்றாக் குடி" கொண்டு இருக்கிறது நம் எல்லோர் இதயங்களிலும்...