Sunday, August 28, 2016

பாதாள பைரவி டூ பாகுபலி - பாகம் 2

பாதாள பைரவி டூ பாகுபலி - பாகம் 1ன் தொடர்ச்சி.....அதைப் படிக்கவில்லையெனில், புரிதலுக்காக முதலில் அதைப் படித்து விடுங்கள்!!

இரண்டாவது கட்டத்தில் (1960 களின் மத்தியில் இருந்து 1980 களின் மத்தி வரை ) மிகக் குறைந்த அளவே தெலுங்கு இசை அமைப்பாளர்கள் தமிழில் பங்களித்திருக்கிறார்கள்... இதற்கு முக்கிய காரணம் 60களில் மெல்லிசை மன்னர்களும் பின்னர் 1974ல் அறிமுகமாகி இளையராஜா ஒரு பக்கமும் ஏழைகளின் இளையராஜாவாக சங்கர் - கணேஷ் இரட்டையர்கள் இருந்ததும் தான்.. இந்தக் கால கட்டத்தில் இசையமைத்த ஒரு சில தெலுங்கு இசை அமைப்பாளர்களை பார்ப்போம்...

கவிஞர் வாலி, நாகேஷ், ஸ்ரீகாந்த், தாராபுரம் சுந்தர்ராஜன் இவர்களோடு கிளப் ஹவுசில் தங்கி வாய்ப்புத் தேடித் கொண்டிருந்தவர் அப்பாராவ் (Kommineni Apparao).. பின்னாட்களில் தெலுங்கில் கொடிகட்டிப் பரந்த இசை அமைப்பாளர்களின் ஒருவர் ஆனார்.. கே.சக்கரவர்த்தி என்றால் தெலுங்குக்கார்களுக்கு நன்கு தெரியும் 1989ல் வெளியான 95 தெலுங்குப் படங்களில் 66 இவரது இசை அமைப்பில் வெளிவந்தவை.. 900 படங்களுக்கு மேல் இசை அமைத்து அந்த ஊரின் சங்கர்-கணேஷாக விளங்கி வருகிறார்.. சிவாஜி, வாணிஸ்ரீ நடித்து 1978ல் வெளியான வாழ்க்கை அலைகள் படத்திற்கு இசை சக்கரவர்த்தி தான்..  எஸ்.பி.பி , சுசீலா குரல்களில் "உன் கண்களிலோ கனிகள்" என்று ஒரு மென்மையான பாடல் இந்தப் படத்தில்.. இவர் இசை அமைத்த மற்றொரு தமிழ்ப் படம் கமல் நடித்த "பகடை பன்னிரண்டு".

70 களில் இசை அமைத்த தெலுங்கு இசை அமைப்பாளர்களின் குறிப்பிடும்படியான இன்னொருவர் மேகசந்தேசம் படத்திற்காக தேசிய விருது பெற்ற ரமேஷ் நாயுடு.. மேளதாளங்கள் படத்தில் "ஆனந்த வீணை நான் மீட்டும் நேரம்' என்று எஸ்.பி.பி, ஜானகி குரல்களில் ஒலிப்பது ரமேஷ் நாயுடுவின் இசை.. "அவளொரு மேனகை... என் அபிமானத் தாரகை..... சிவரஞ்சனி..." நட்சித்திரம் படத்தில் ஸ்ரீப்ரியாவை பற்றி நீண்ட ஆலாபனையுடன் எஸ்.பி.பி பாடும் இந்தப் பாடல் தெலுங்கில் தாசரி நாராயணராவ் ஜெயசுதாவுக்காக எடுத்த "சிவரஞ்சனி" படத்தில் ரமேஷ் நாயுடு போட்ட மெட்டு... இதன் தமிழ் மறுபெயர்ப்பில் சங்கர் கணேஷ் இரட்டையர் இசை அமைத்திருந்தாலும் இந்தப் பாடலின் மீது உள்ள ஈர்ப்பால் அப்படியே மாற்றம் செய்யாமல் அமைத்திருப்பார்கள்..

தமிழ் சினிமாவில் தெலுங்கு இசை அமைப்பாளர்களின் மூன்றாவது கட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர்.. 1980 களின் இறுதியில் இளையராஜாவோடு முட்டிக்கொண்டு பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம் மூவரும் புதிய இசை அமைப்பாளர்களை தேடித் போனார்கள்... கொடி பறக்குது படத்துக்கு கன்னடத்து அம்சலேகாவை அழைத்து வந்தார் பாரதி ராஜா.. மணிரத்னம் ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகப் படுத்தினார்.. பாலச்சந்தர் அழைத்து வந்தது மரகதமணியை..

கீரவாணி (Koduri Marakathamani Keeravaani)  என்றால் தான் தெலுங்கு தேசத்தில் தெரியும்...  வானமே எல்லை படத்தில் "நாடோடி மன்னர்களே வணக்கம்", "நீ ஆண்டவனா தாய் தந்தை தான் உனக்கில்லையே", "ஜன கன மன என ஜதி சொல்லும் நேரம்" என்று வெரைட்டிக்கு ஒன்று ஹிட்.. குறிப்பாக "கம்மங்காடே கம்மங்காடே" என்று மரகதமணி பப்லூவுக்கு பாடிய பாட்டு செம ஹிட்டு.. 20 வருடம் கழித்து அதை தெலுங்கில் ராஜமௌலியின் சத்ரபதி படத்தில் போட்டிருப்பார்..

நைட் முழுக்க கடலை போடுவதென்றாலே நினைவுக்கு வருகிற "சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா" சஹானாவில் ஒரு அழகிய மெலடி.. புலவர் புலமைப்பித்தன் பாவேந்தரின் அழகின் சிரிப்பு பாணியில் எழுதிய "சாதி மல்லிப் பூச்சரமே" , எந்த இசைப் போட்டி என்றாலும் பாடப் படுகிற சித்ராவின் "தத்தித்தோம்",  சீர்காழி சிவசிதம்பரம், சித்ரா குரல்களில் நாட்டுப்புற பாணியில் ஒலிக்கும் "கோழி கூவும் நேரம் ஆச்சு" என்று அழகன் படத்தின் அத்தனை பாடல்களுமே இன்று வரை மரகதமணியின் பெயரை தமிழ்  சினிமா ரசிகர்களிடம் அழியாது பாதுகாக்கிறது ... குஷ்பூவை வைத்து பாலச்சந்தர் எடுத்த ஜாதி மல்லியிலும் மரகதமணியின் இசை வருடிக் கொடுக்கிறது "சமுந்தர் பார் பார்" என்னும் கஜல் பாடல்,  "மறக்க முடியவில்லை" என்னும் மெலடி,  "கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்" என்னும் பெப்பி நம்பர் என்று செம வெரைட்டி காட்டி இருப்பார்..

பாலச்சந்தரின் உதவி இயக்குனர் வசந்த் எடுத்த நீ பாதி நான் பாதியில் "யாரைக் கேட்டு ஈரக்காற்று பூவைக் கிள்ளும்", "புதிய பூக்களை பார்த்து அம்மம்மோ" என்று மென்மையான பாடல்கள்.. அதிலும் வித்யாசமாக வெறும் ஸ்வரங்களையும் ஒரே ஒரு பெயரையும் வைத்து உருவான "நிவேதா" பாட்டு அப்போ ரொம்ப பிரபலம்.. மரகதமணி மலையாளத்தில் இசை அமைத்து தமிழில் டப்பிங் செய்யப்பட்ட "தேவராகம்" படத்திலும் " சின்ன சின்ன மேகம்", "அழகிய கார்த்திகை தீபங்கள்" என்று மெலடிச் சாரல் தெறிக்கிறது.. ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் அவரது தம்பி எஸ்.எஸ்.ராஜமௌலியின் "ஸ்டூடன்ட் நம்பர் 1" படம் தமிழில் ரீமேக் ஆனபோது அதில் "விழாமலே இருக்க முடியுமா", "மம்மி செல்லமா டாடி செல்லமா" என்று ரீ-என்ட்ரி கொடுத்தார் இன்று வரை ராஜமௌலியின் தமிழ் படங்களில் அது தொடர்கிறது (பாகுபலி வரை).

1990களில் தெலுங்கு டப்பிங் படங்கள் தமிழில் பிரபலமான சமயத்தில் "உயிரே உயிரே" என்று ஒரு பாடல் "எல்லாமே என் காதலி" படத்தில் (தெலுங்கில் தெலுசா மனசா) சன் மியூஸிக்கில் செம பாப்புலர்.. அதே சமயம் இன்னொரு டப்பிங் பாடலும் பிரபலமானது இரண்டுமே நாகர்ஜுனா படங்கள் தான்.. பிந்தயது "இன்ப ராகங்கள் நெஞ்சுக்குள்ளே பொங்குகின்ற" என்னும் "ஹலோ பிரதர்" திரைப்படப் பாடல்.. இசை "ராஜ்-கோட்டி".. தெலுங்கில் நூற்றுக்கணக்கில் இசை அமைத்த இந்த ஜோடி தமிழில் அவ்வளவு பிரபல்யம் இல்லை.. நினைவுக்கு வந்த ஒரு பாடல் இது

டப்பிங் படங்கள் என்றதும் என் நினைவுக்கு வருகிற மற்றொரு பாடல் "நமது நகரம் கல்கத்தாபுரி".. "கல்கத்தா" என்ற டப்பிங் படத்தில் உன்னி கிருஷ்ணன் பாடியது... மூலப்படமான "சூடாலனி உந்தி"யில் ஹரிஹரன் பாடியிருப்பார்.. "கதனகுதூகலம்" ராகத்தில் அமைந்த "ரகுவம்ச சுதாகர லோச்சனா" என்ற கீர்த்தனையின் அட்டைக்காப்பி.... இந்தப் பாடல் மூலம் எனக்கு அறிமுகமானவர் மணிசர்மா..  தெலுங்கில் மெலடி பிரம்மா என்று பெயர்..

நம்ம கேப்டன் கரண்டுக்கே ஷாக் அடிச்ச நரசிம்மவுல தமிழுக்கு அறிமுகமானவர்.. முதல் படத்திலேயே "காதல் ஆராரோ" என்ற நல்ல மெலடியையும் "ராரா நந்தலாலா", "எகிப்து ராணி உனக்கு' என்று பாஸ்ட் நம்பர்களையும் கொடுத்து பளிச் அறிமுகத்தை ஏற்படுத்திக் கொண்டவர்.. ஷாஜஹானில் "மே மாத மேகம்", "அச்சச்சோ புன்னகை", "மின்னலைப் பிடித்து" என்று வைரமுத்துவின் வரிகளில் நல்ல நல்ல பாடல்கள்.. என்றாலும் தெறிக்கவிட்ட பாட்டு "சரக்கு வச்சிருக்கேன்" தான்.. யூத் படம் தான் இன்றளவும் மணிஷர்மாவின் கேரியர் பெஸ்ட்.. சன் டிவி தேயத் தேய ஒளிபரப்பிய "சக்கரை நிலவே" மனதை வருடும் பாடல்.. அனால் அதையும் மிஞ்சி ஹிட் ஆனது "ஆல்தோட்ட பூபதி"... "மல்லிகை மல்லிகை பந்தலே" அரசு படத்தில் சரத்குமாருக்கு இவர் போட்ட நல்ல பாடல்களில் ஒன்று.. போக்கிரி, சுறா படங்களில் தெலுங்கில் ஹிட் அடித்த பாடல்களை தமிழுக்கு இறக்குமதி செய்திருப்பார்.. 25 படங்களுக்கு மேல் தமிழில் இசை அமைத்திருக்கும் மணி சர்மா வணிக ரீதியிலான பாடல்களை அமைத்த தெலுங்கு தேவாவாகவே தெரிகிறார்..

90களின் ஆரம்பத்தில் "டான்ஸ் பார்ட்டி" என்று ஒரு பாப் ஆல்பம் வெளியானது... "ஏய் உன்னோட அழகப் பார்த்து" என்று அதில் பாடியவர் தான் தேவிஸ்ரீ பிரசாத் (DSP).. 2005ன் முதல் மூன்று மாதத்தில் "கட்டு கட்டு கீரக்கட்டு", "வாடி வாடி வாடி கைபடாத சிடி", "காத்தாடி போல ஏண்டி" இந்த மூன்று பாடல்களால் தமிழ்நாட்டில் படுவேகமாக பிரபலமடைந்தவர்.. அதிலிருந்து இன்று வரை ஏராளமான டண்டனக்கடி வகையறா பாடல்களை கொடுத்தவர் "கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம்", "மியாவ் மியாவ் பூன", "டாடி மம்மி வீட்டில் இல்ல", "ஜல்ஸா ஜல்ஸா", "தீம்தனக்கா தில்லானா", "காதல் வந்தாலே காலு ரெண்டும் தன்னாலே", "ஜிங் ஜிக்கா" என்று சொல்லிக்கொண்டே போகலாம்... குறிப்பாக சில நல்ல மென்மையான பாடல்களையும் தள்ளி விட முடியாது... "கடவுள் தந்த அழகிய வீடு", "என் இதயம் இதயம்", "பாக்காத என்ன பாக்காத", "கண்மூடித் திறக்கும் போது கடவுள் எதிரே" என்று பட்டியல் நீளும்.. தசாவதாரம், மன்மதன் அம்பு என்று இரண்டு கமல் படங்களுக்கு இசை அமைத்து  தமிழ் சினிமாவில் அழுத்தமான இடம் பிடித்த தெலுங்கு இசை அமைப்பாளர்களில் இவரும் ஒருவர்

ஜெயம் ரவி நாயகனாக நடித்த முதல் படமான ஜெயம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனவர் ஆர்.பி.பட்நாயக் (Ravindra Prasad Patnaik) "கோடி கோடி மின்னல்கள்", "கவிதையே தெரியுமா" என்று இரண்டு மெலடி "வண்டி வண்டி ரயிலு வண்டி", "திருவிழான்னு வந்தா" என்று இரண்டு துள்ளலான பாடல்களுடன் ஜெயம் வெற்றி அடைய அதற்கு பிறகும் ஏனோ இவர் தமிழில் சோபிக்கவே இல்லை.. "பழனியப்பா கல்லூரி", "நான் அவள் அது' என்று இரண்டு படங்கள் இசை அமைத்திருக்கிறார்.. பாடல்கள் கேள்விப்பட்டதில்லை..

இவரைப் போலவே ஒரே ஒரு தமிழ்ப் படத்திற்கு மட்டும் இசை அமைத்த மற்றொருவர் "ரமணா கோகுலா".. விஜய் நடித்த "பத்ரி" படத்தின் பாடல்கள் மட்டும் இவரது இசை (பின்னணி தேவிஸ்ரீ பிராசத்).. "கலகலக்குது", காதல் சொல்வது உதடுகள் அல்ல, என்னோட லைலா வராளே மெயிலா" என்று மூன்று பாடல்கள் தேறும்...

இந்த லிஸ்ட்டில் கட்டக் கடைசியாக சேருபவர் "பாய்ஸ்" படத்தில் டிரம்மர் கிருஷ்ணாவாக வந்த "எஸ்.எஸ்.தமன்".. தமிழில் முதல் படம் "ஈரம்" என்று நினைவு... Computerized குத்து பாட்டு ஸ்பெஷலிஸ்ட்... "கலாசலா", "கருப்பு பேரழகா", "நீ தாண்டி ஒஸ்தி பொண்ணா" என்று அடுக்கலாம்... இதுவரை 30 படங்களுக்கு மேல் தமிழில் இசை அமைத்து விட்ட தெலுங்கு ஹாட் கேக்...

இந்த மூன்று கால கட்டங்களிலும் தமிழ் இசை அமைப்பாளர்களோடு கடும் போட்டி இருந்த போதும் "அக்கட" தேசத்து இசை வாணர்கள் அருமையான பாடல்களை தந்து தமிழ் ரசிகனுக்கு தீனி போட்டிருக்கிறார்கள்..

கடைசியாக ஒரு Disclaimer: இந்தப் பதிவை எழுத நான் அடிப்படையாக வைத்துக் கொண்டது "தெலுங்கு படங்களில் பெரும்பான்மையான படங்களுக்கு இசை அமைத்து அதே நேரம் தமிழிலும் இசை அமைத்த இசைஞர்களைப் பற்றியே".. பேச்சு மொழியையோ அல்லது அவர்கள் சார்ந்த சாதியையோ அல்ல.. ஆகையால் எஸ்.எம்.சுப்பையா நாயடு, ஜி.கோவிந்தராஜூலு நாயுடு, அவரது மகன் டி.ஜி.லிங்கப்பா உள்ளிட்ட பலரின் பெயர்கள் இந்தப் பதிவில் இடம் பெறவில்லை.. அவர்கள் பெரும்பாலும் தமிழ்ப் படங்களுக்கே இசை அமைத்ததால் அவர்கள் அனைவரையும் தமிழ் இசை அமைப்பாளர்களாகவே கருதுகிறேன்!!பாதாள பைரவி டூ பாகுபலி - பாகம் 1

2008ல் ஒரு தனியார் நிறுவனம் நடத்திய இசைப்போட்டியின் இறுதி போட்டியை பார்த்துக் கொண்டிருந்தேன்.. அடுத்து பாடவேண்டிய பெண் மேடையில் சுருதி சேர்த்துக் கொண்டிருந்தார்.. என் அருகில் அமர்ந்திருந்த என் நண்பர் "கடைசி வரைக்கும் ஒளப்பிகிட்டே இருப்பா பாருங்க.. பாட்டையே எடுக்க மாட்டா அவ்ளோ சீக்கிரத்தில" என்றார்.. என்ன பாட்டு என்றேன் நான்.. "குஹு குஹு போலே கோயலியா" என்றார்.."என்னது ??" இது நான் (எம்.ஆர். ராதா "வாட் பட்டை?? என்று கேட்பது போல் கேட்டிருக்கிறேன்).. "தேசுலாவுதே"ங்க... மணாளனே மங்கையின் பாக்கியம்" படத்துல வருமே" இது நண்பர்.. அப்போது தான் அந்தப் பாடலை முதன் முறை கேட்கிறேன்... ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் அலை அலையாய் எழும் ஸ்வரங்களோடு அத்தனை அற்புதமாய் இருந்தது அந்த பாடல்..
தமிழ் சினிமாவில் வந்த தெலுங்குப் பாடல்கள் மீது எனக்கு ஒரு ஈடுபாட்டை உண்டு பண்ணியது அந்த நிகழ்ச்சி...

தமிழ் சினிமாவில் தெலுங்கு இசை அமைப்ப்பாளர்களின் பங்கு என்பது சினிமா பேசத் தொடங்கிய காலத்தில் இருந்தே இருந்திருக்கிறது... இதை நாம் புரிதலுக்காக மூன்று கால கட்டங்களாக பிரித்துக் கொள்ளலாம்...
1950 கள் வரை மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப் படாமல் அனைத்தும் மதராஸ் ராஜதானியாக இருந்ததும் பெரும்பாலான ஸ்டுடியோக்கள் சென்னையிலேயே இருந்ததும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம்... அதே போல ஏராளமான படங்கள் Bilingual அதாவது (தமிழ்- தெலுங்கு) இருமொழி படங்கள் அந்தக் கால கட்டத்தில் வெளியாகின.. 1950 களின் மத்தியில் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி என்று இந்த மூன்று நட்சத்திர நாயகர்கள் தமிழில் உதயமாக என்.டி.ராமராவும் ஏ.நாகேஸ்வர ராவும் தமிழ்ப் படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டனர் இது வரை முதல் கால கட்டம்... இந்தக் கால கட்டத்தில் ஏராளமான தெலுங்கு இசை அமைப்பாளர்கள் தமிழ் சினிமாவில் தங்கள் பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்... முதலில் அவர்களை பார்ப்போம்.

உன்னை "ஹக்" கண் தேடுதே... இந்தப் பாடலை மறக்க முடியுமா??.. பி.சுசீலாவின் ஆரம்ப கால ஹிட் பாடல்.. கணவனே கண்கண்ட தெய்வம் படத்தில் இந்தப் பாடலுக்கு இசை ஏ.ராம ராவ் (Addepalli Ramarao). முதலில் இந்தப் பாடல் பி.பானுமதியை வைத்துப் பதிவு செய்யப் பட்டு பின்னர் எனோ சுசீலாம்மாவுக்கு மாற்றி இருக்கிறார்கள்.. பாடலில் நாம் கேட்கும் "ஹக்" என்ற விக்கல் மட்டும் பானுமதியுடையது.  இதே படத்தில் மற்றுமொரு அருமையான பாடல் "எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ"... ஹிந்தி தழுவலான தாய் உள்ளம் படத்தில் வரும் "கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம்" பாடலுக்கு இசை இவர் தான்.. மூலப் பாடலான "தண்டி ஹவாயே" க்கு கொஞ்சமும் குறையாத இனிமை எம். எல்.வசந்த குமாரியின் குரலில்... தமிழில் பங்களிப்பு குறைவென்றாலும் நான் மேற்சொன்ன பாடல்கள் காலத்தால் அழியாது நிற்பவை என்பதில் மாற்றில்லை.

கணவனே கண் கண்கண்ட தெய்வம் வெற்றிக்கு பிறகு நடிகை அஞ்சலி தேவி "மணாளனே மங்கையின் பாக்கியம்", "மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்" என்று அதே போல முழ நீள பெயர்கள் கொண்ட படங்களை தயாரித்தார்..  அனைத்துப் படங்களுக்கும் இசை அவரது கணவர்  ஆதி நாராயண ராவ் (Penupatruni Adinarayana Rao).."தேசுலாவுதே தேன் மலராலே", "அழைக்காதே சிரிக்காதே அவைதனிலே ஓ ராஜா" இரண்டும் இன்றும் இனிமை...(தேசுலாவுதே எனக்குள் நிகழ்த்திய மேஜிக்கை முதல் பத்தியிலேயே சொல்லி விட்டேன்)... ஹிந்தி "படோசன்" படத்தின் "ஏக் சதுர் நார்" பாடலைக் கேட்டிருக்கிறீர்களா?? இதே சிச்சுவேஷனுக்கு அதன் மூலப் படமான "அடுத்த வீட்டுப் பெண்ணில் "கண்களும் கவி பாடுதே" என்று சீர்காழி, ஏ.எல்.ராகவன் குரல்களில் அமர்க்களமான பாடல் உண்டு. இசை ஆதி நாராயண ராவ் தான்..கவிகளும் கண் பாடுதே என்று உளறி சரிக்கட்டுவார்... செம்ம காமடிப் பாடல்.. பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய "கண்ணாலே பேசி பேசி கொல்லாதே" இந்தப் படத்தின் மற்றொரு நல்முத்து .. தமிழில் சொந்தப் படங்கள் ஒரு ஐந்தாறு தான் பண்ணியிருக்கிறார் (சிவாஜியின் இரண்டாவது படம் பூங்கோதை உட்பட) என்றாலும் நல்ல நல்ல பாடல்களைத் தந்திருக்கிறார்.

எம்.ஜி.ஆரின் முதல் படமான சந்திரலேகாவுக்கு இசை அமைத்த எஸ்.ராஜேஸ்வர ராவ் (Salur Rajeswara Rao) ஒரு முக்கியமான இசை அமைப்பாளர்.. "பிருந்தாவனமும் நந்தகுமாரனும்", "பழகத் தெரிய வேணும்.. பெண்ணே பார்த்து நடக்க வேணும்", "நீ தானா என்னை அழைத்தது", "ஆஹா இன்ப நிலாவினிலே போகோஜகமே ஆடிடுதே", 'கல்யாண சமையல் சாதம்" "புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே.. தங்கச்சி கண்ணே" என்று அந்தக் கால ஹிட் பாடல்களை நிறைய வழங்கியவர்... சந்திரலேகா, பிரேம பாசம், மிஸ்ஸியம்மா, மாயா பஜார், கடன் வாங்கி கல்யாணம், பானை பிடித்தவள் பாக்கியசாலி என்று ஏராளமான படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்

"நீல வண்ண கண்ணா வாடா".. மங்கையர் திலகம் படத்தில் பாலசரஸ்வதியின் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் அந்நாளில் மிகப் பிரபலம்.. பாடலுக்கு இசை எஸ்.தட்சிணாமூர்த்தி (Susarla Dakshinamurthi)... "அழகான பொண்ணு தான்.. அதுக்கேத்த கண்ணு தான்", "மாசிலா உண்மைக் காதலே" அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல்களுக்கும் இசை இவர் தான்..

ராஜேஸ்வர ராவுக்கு அடுத்து ஒப்பீட்டு அளவில் தமிழில் அதிகப் படங்கள் இசை அமைத்த மற்றொரு இசை அமைப்பாளர் டி.சலபதி ராவ் (Tatineni Chalapathi Rao). சலபதி ராவ் தெரியுமா?? என்று எனது தெலுகு நண்பர்களிடம் கேட்ட போது "ஓ.. பாலகிருஷ்ணா படத்துல எல்லாம் ஒயிட் அண்ட் ஒயிட் ல சைட்ல இருப்பாரே அவரு தானே ?" என்று என்று பதில் சொல்லி என்னை மிரள வைத்தார்கள்.. அவரு நடிகர் சலபதி ராவ் டா.. நான் கேட்டது அந்தக் கால இசை அமைப்பாளர் சலபதி ராவ் என்று பின்னர் விளக்கினேன்..(அதென்னமோ பாலகிருஷ்ணா அப்டின்னாலே நமக்கு ஒரு பயம்).. "தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு", உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதிலே", "கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்", "துயிலாத பெண்ணொன்று கண்டேன்", "எங்கும் சொந்தமில்லை எந்த ஊருமில்லை" என்று ஏ.எம்.ராஜாவுக்கு பாடகராக நிறைய ஹிட் கொடுத்தவர்.. அந்த கால குத்துப் பாட்டான "ஜாலிலோ ஜிம்கானா" வுக்கும் இசை இவர் தான்... அமரதீபம், புனர்ஜென்மம், மீண்ட சொர்க்கம்,  உத்தமி பெற்ற ரத்தினம் என்று நிறையப் படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்..

இப்போது நான் டைட்டிலில் சொன்ன பாதாள பைரவி படத்தின் இசை அமைப்பாளரைப் பற்றி சொல்ல வேண்டும்.. 1950 / 60 களில் வந்த தெலுங்கு டப்பிங் படம் அல்லது மொழி மாற்றப் படம் என்றாலே பாடல்களில் நினைவுக்கு வரும் குரல் கண்டசாலாவுடையது (Ghantasala Venkateswara Rao) தான்.. (தெலுங்கில் கண்டசாலா மாஸ்டர் என்று மரியாதையாக அழைக்கிறார்கள்).. ஒரு மூன்று தசாப்தங்கள் என்.டி.ஆர், ஏ.என்.ஆர், காந்தா ராவ், கிருஷ்ணா, முரளி மோகன், சோபன் பாபு என்று தெலுங்கு தேசத்தின் அத்தனை கதாநாயகர்களுக்கும் பாடிய புண்ணியவான் இவர் தான்.. தமிழில் டி.எம்.எஸ் செய்த அதே சாதனை..

தமிழில் சி.ஆர்.சுப்பாராமன் தொடங்கி மெல்லிசை மன்னர் வரையில் அநேகர் இசை அமைப்பில் பாடிய கண்டசாலா, இசை அமைப்பாளராகவும் தனது இசைப் பங்களிப்பை தமிழ் சினிமாவுக்கு வழங்கி இருக்கிறார்.. இவற்றில் முக்காலே மூணு வீசம் தெலுங்குப் படங்கள் அல்லது இருமொழிப் படங்கள்.. "அமைதியில்லதென் மனமே.. என் மனமே" கண்டசாலா, பி.லீலா குரல்களில் ஒலிக்கும் பாதாள பைரவி படத்திற்கு இசை கண்டசாலா மாஸ்டர் தான்..

"காதல் யாத்திரைக்கு பிருந்தாவனமும் கற்பகச் சோலையும் ஏனோ?" மனிதன் மாறவில்லை படத்தில் ஏ.எல்.ராகவன், பி.சுசீலா குரல்களில் ஒலிக்கும் இந்தப் பாடலின் தெலுகு வடிவத்தை (பிரேம யாத்ராலகு)இசை அமைத்த கண்டசாலாவே பாடி இருப்பார்.. இன்றும் தெலுங்கு மக்கள் கொண்டாடும் பாடல்களில் ஒன்று.. பின்னநாளில் "டிடெக்ட்டிவ் நாரதா" படத்தில் இதன் Remastered Version ஐ  இதற்கு counter melody சேர்த்து அமைத்திருப்பார் இளையராஜா.. எல்லாம் இன்ப மயம், மனிதன் மாறவில்லை, பாதாள பைரவி, கல்யாணம் பண்ணிப் பார், கள்வனின் காதலி (இணை இசை டி.ஜி.லிங்கப்பாவின் தந்தை கோவிந்தராஜூலு நாயுடு) என்று பத்துப் பதினைந்து படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.. ஏ.எம். ராஜாவைப் போல இவரும் பாடகராகவே தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டிருக்கிறார்..

தெலுங்கில் ஆண் குரல் என்றதும் கண்டசாலா நினைவுக்கு வருவது போல பெண் குரல் என்றதும் முதலில் நினைவுக்கு வருபவர் அஷ்டாவதானி பி.பானுமதி (Paluvayi Bhanumathi Ramakrishna).. நடிகை, தயாரிப்பாளர், இயக்குனர், பின்னணிப் பாடகி, ஸ்டூடியோ அதிபர் என்று பன்முகத் திறமை கொண்ட பானுமதி சில படங்களுக்கு இசை அமைப்பாளராகவும் இருந்திருக்கிறார்... இந்துஸ்தானி சங்கதிகளோடு "நானே ராதே கண்ணா" என்று இவர் பாடும் "இப்படியும் ஒரு பெண்", சக்ரபாணி" போன்ற படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்...

பி.பி.ஸ்ரீனிவாஸ் என்ற கலைஞன் வரும் வரை (அதற்குப் பிறகும் கூட) ஜெமினியின் பாட்டுக் குரலாக ஒலித்த ஏ.எம்.ராஜா (Aemala Manmadharaju Rajah) இசை அமைப்பாளராக தமிழில் அருமையான பாடல்களை வழங்கி இருக்கிறார்.. கல்யாணப் பரிசு மற்றும் தேன் நிலவு இந்த இரண்டு படங்களின் பாடல்களே போதும் அவரது இசையின் இனிமையை நுகர... "துள்ளாத மனமும் துள்ளும்", "வாடிக்கை மறந்ததும் ஏனோ", "காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன்", பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா", "ஓஹோ என்றான் பேபி", "நிலவும் மலரும் பாடுது", "தனிமையிலே இனிமை காண முடியுமா", "காலையும் நீயே மாலையும் நீயே", "ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன்" அப்பப்பா எத்தனை எத்தனை மெட்டுக்கள்... அத்தனையும் சத்தான மெட்டுக்கள்.. கேட்பவரின் செவியை உறுத்தாத மெல்லிசை அவரது குரலைப் போலவே ஏ.எம்.ராஜாவின் இசையிலும் தெரிகிறது..

தமிழில் குறைந்த அளவு படங்களுக்கு மட்டும் இசையமைத்திருந்தாலும் "ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா", "பட்டணந்தான் போகலாமடி பொம்பளே", "மண்ணே நம்பி மரமிருக்கு கண்ணே சஞ்சலா" என்று தெலுங்கு வாசனையுடன் இனிய பாடல்களைக் கொடுத்த   இசை அமைப்பாளர் மாஸ்டர் வேணு (Madduri Venugopal).. மஞ்சள் மகிமை, எங்கள் வீட்டு மஹாலட்சுமி, பாக்கியதேவதை என்று ஒரு பத்துப் படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார் (பெரும்பாலும் Bilingual ) ..  இவரது மகன் தான் நடிகர் பானுச்சந்தர்.. (ஓ வசந்த ராஜா பாட்டில் சட்டையில்லாமல் வருவாரே அவரே தான்)..

இந்தக் கால கட்டம் வரையிலும் என்.டி.ராமராவும், நாகேஸ்வர ராவும் தமிழில் நடித்து வந்ததை கொஞ்சம் கொஞ்சமாக  குறைத்து ஆந்திரா மாநிலம் பிரிக்கப் பட்ட பிறகு ஒரு கட்டத்தில்  "ராவோடு ராவ் சேர்ந்து ராவோடு ராவாக  ஹைத"ராவ்"பாத்துக்கு குடிபெயர்ந்தனர்.. அதேபோல மெல்லிசை மன்னர்களும், திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவனும் தமிழ் சினிமா இசையின் ஆதாரத்தை அசைக்க முடியாத அளவுக்கு பற்றிக் கொண்டனர்.. அதே போல மாயாஜால, ராஜாராணிக் கதைகளைக் கொண்ட தெலுங்கு கதைக்களம் மாறி திராவிடக் கருத்துக்களை முன்வைத்த சமூகப் படங்களின் வருகையும் தமிழ் ரசிகர்களின் ரசனை மாற்றத்தை தெலுங்கு படாதிபதிகளுக்கு தெளிவாகக் காட்டின.. மேற்சொன்ன காரணங்களால் இந்த முதல் கட்டம் முடிந்தது..

தொடர்ச்சி இதன் அடுத்த பதிவில்... கீழே!!

http://krishronline.blogspot.in/2016/08/2.html

Saturday, August 20, 2016

வெள்ளிக் கொலுசு மணி

தமிழ் சினிமாவில் 1980 / 90களில் ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சத்யராஜ் என்கிற இந்த சூப்பர் சிக்ஸ்.... முரளி, ராம்கி, சரத்குமார் , ராமராஜன், பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், ராஜ்கிரண் என்கிற இந்த இரண்டாவது வரிசை கதாநாயகர்கள்... விஜய், அஜித், விக்ரம், பிரசாந்த், வினீத் என்கிற அடுத்த தலைமுறை நாயகர்கள் இதுபோக பிரபுதேவா, லாரன்ஸ், ஜான் பாபு என்று டான்ஸ் மாஸ்டர்கள்... இவர்கள் அத்தனை பேருக்கும் பின்னணி பாடி இருக்கும் பாடகர்கள் யார் யார் என்று கேட்டால் உடனே வரும் பதில் இதுவாகத்தான் இருக்கும் "லிஸ்ட்டு கொஞ்சம் பெருசா இருக்கு... எஸ்.பி.பி.. அப்பறம் மனோ ரெண்டு பேர் தான்" என்று.. உண்மையில் இந்த அத்தனை கதாநாயகர்களுக்கும் பாடிய மூன்றாவது பாடகர் ஒருவர் இருக்கிறார்..

கெமிக்கல் கம்பெனியில் சூப்பர்வைசராக இருந்த அந்த தஞ்சாவூர்க்கார இளைஞனுக்கு பண்டிட் ஹரி பிரசாத் சௌராசியா என்றால் ஆதர்ஷம்.. ஒரு நாள் அவரது நண்பரும் இசை மேதை  சி.ஆர். சுப்பராமனின் மகனுமாகிய சித்தார் கண்ணன் தன்னுடைய சித்தப்பா இசையமைக்கும் ஒரு படத்தின் பாடல் பதிவுக்கு அந்த இளைஞனை அழைத்துச் சென்றார்.. அன்று வாசிக்க வேண்டிய புல்லாங்குழல் கலைஞர் வராததால் அங்கு ஒரே பரபரப்பு...  "என்னோட வந்திருக்கிற நண்பர் கூட Flute நல்லா வாசிப்பாரு.. அவரை வாசிக்க சொல்லவா? " என்று திரு. கண்ணன் கேட்க அடுத்த 5வது நிமிடத்தில் ஓ.கே செய்தனர் படத்தின் இசையமைப்பாளர்களான இரட்டையர்கள் சங்கர் - கணேஷ். அந்த இளைஞனின் சினிமா பிரவேசமும் 1981ல் பிரேம் நசீர் நடித்து வெளியான "சங்கர்ஷம்" என்கிற அந்த மலையாளப் படத்தின் மூலம் நிகழ்ந்தது..அடுத்து சில வருடங்களிலேயே  வரிசையாக அர்ஜுனன் மாஸ்டர், ஜான்சன் மாஸ்டர், தெட்சிணாமூர்த்தி, கே.வி.மஹாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், நௌஷாத் அலி என்று அன்றைய மலையாளத் திரை உலகில் இருந்த அனைத்து இசை அமைப்பாளர்களிடமும் வாசித்து விட்டார் அந்த இளைஞர்.. சொல்ல மறந்து விட்டேன்.. அவர் பெயர் நெப்போலியன்..

ஒரு நாள் அவருக்கு இளையராஜாவிடம் இருந்து அழைப்பு வந்தது.. ஆர்.சுந்தர்ராஜன் இயக்கும் "என் ஜீவன் பாடுது" படத்தில் "ஒரே முறை உன் தரிசனம்" என்ற பாடலுக்கு புல்லாங்குழல் வாசிக்க.. அது தான் இளையராஜாவின் இசையில் அவர் வாசித்த முதல் பாடல்.. அதைத் தொடர்ந்து அவரது இசையில் "சொல்லத் துடிக்குது மனசு" படத்தில் வரும் "பூவே செம்பூவே உன் வாசம் வரும்" பாடல்..... 

இசைக் கலைஞர்களுக்கு வாசிக்க வேண்டியவற்றை மேற்கத்திய இசைக் குறிப்புகளாய் எழுதும் வழக்கமுடைய இளையராஜாவிடம் அவரது குறிப்புகளை புரிந்துகொண்டு அதை மற்ற இசைக் கலைஞர்களுக்கும் நெப்போலியன் விளக்க ஆரம்பித்தது ராஜாவுக்கு பிடித்துப் போக, அவரது ஆஸ்தான வித்வான்களான சதானந்தம் (Guitar), பிஜு மேனுவல் (Key Board), பிரபாகர் (Violin), ஜெயச்சா (Percussion), புருஷோத்தமன் (Drums / Rythm Programmer) வரிசையில் நெப்போலியன் (Flute) என்ற பெயரும் இடம்பிடித்தது.. அன்று முதல் இன்று வரை இளையராஜாவின் அத்தனை படத்திலும் கேட்கும் குழலோசை நெப்போலியனுடையது தான்..

ஒரு நாள் வாய்ஸ் ரூமில் மற்றொரு இசைக்கலைஞருக்கு வாசிக்க வேண்டிய ஸ்வரத்தை இவர் பாடிக்காட்டியதை ஹெட்போனில் கேட்ட ராஜா அடுத்த நாளே "நெப்போலியன் இந்த பாட்ட நீங்களே பாடிடுங்க" என்று ஒரு இன்ப அதிர்ச்சி அளித்தார்.. தமிழ் சினிமாவில் இன்னுமொரு புதிய பின்னணிப் பாடகர் உருவான நாள் அது..

தான் அறிமுகம் செய்கிற கலைஞர்களுக்கு பெயர் சூட்டும் இளையராஜா (மனோ (நாகூர் பாபு), மின்மினி (மினி ஜோசப்), தீபன் (சக்கரவர்த்தி ராஜரத்தினம்))  நெப்போலியனை (ரமணரின் அருண்மொழித் திரட்டு என்ற நூலின் பெயரில் இருந்து) அருண்மொழி என்று அறிமுகப் படுத்தினார்.. அவர் பாடி வெளியான முதல் பாடல் "சூரசம்ஹாரம்" படத்தில் "நானென்பது நீயல்லவோ தேவதேவி".. அதே படத்தில் "நீலக்குயிலே" என்று இன்னொரு பாடலும் பாடி இருப்பார்..

80 களின் பிற்பகுதியிலும் 90 களிலும் தமிழ் சினிமா உலகில் தன் மென்மையான குரலால் முதல் பத்தியில் நான் சொன்ன அத்தனை ஹீரோக்களுக்கும் பாடிய அந்த மூன்றாவது பாடகர் இந்த அருண்மொழி தான்..பி.பி.எஸ், ஏ.எம்.ராஜா போன்ற மென்மையான குரல் அருண்மொழியுடையது.. அதிகம் சங்கதிகளோ பிருகாக்களோ இருக்காது ஆனால் மேல் ஸ்தாயியில் பாடும்போது கூட கொஞ்சமும் பிசிரடிக்காது... குறிப்பாக அவரது பிரபலமான "வெள்ளிக் கொலுசு மணி" பாடலில் கூட நீண்ட பல்லவி கொஞ்சமும் மூச்சு முட்டாமலும் சரணத்தில் "உள்ள போயி நீதான் பாடுகின்ற பாட்டு" என்னும் வரியில் சுதி விலகாமலும் இனிமையாகப் பாடி இருப்பார்.

இதில் வினோதம் என்ன என்றால் எந்த நடிகருக்கு பாடினாலும் அது அருண்மொழியின் குரல் என்று தனியாகத் தெரியும்.. உதாரணத்திற்கு :

 • கமலுக்கு - நானென்பது நீயல்லவோ (சூரசம்ஹாரம்)
 • ரஜினிக்கு - ஆத்துல அன்னக்கிளி (வீரா)
 • விஜயகாந்துக்கு - வாசக் கறிவேப்பிலையே (சிறையில் பூத்த சின்னமலர்)
 • சத்யராஜுக்கு - மனசுக்குள்ள நாயன சத்தம் (மல்லுவேட்டி மைனர்)
 • பிரபுவுக்கு - தென்றல் வரும் முன்னே முன்னே ( தர்மசீலன்)
 • கார்த்திக்கிற்கு -  வேண்டினா வேண்டும் வரம் ( கட்டப் பஞ்சாயத்து)
 • பார்த்திபனுக்கு  - வராது வந்த நாயகன் (தாலாட்டு பாடவா)
 • ராமராஜனுக்கு - வெள்ளி கொலுசு மணி (பொங்கி வரும் காவேரி)
 • விஜய்க்கு - அரும்பும் தளிரே (சந்திரலேகா)
 • விக்ரமிற்கு - முத்தம்மா முத்து முத்து (தந்து விட்டேன் என்னை )
 • ராம்கிக்கு - ஆதாமும் ஏவாளும் போல (மருதுபாண்டி)
 • பாக்யராஜுக்கு -  வந்தாள் வந்தாள் ராஜகுமாரி (ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி)
 • பிரபுதேவாவுக்கு - மஸ்தானா மஸ்தானா (ராசையா)

அதனால் தான் அதிகம் பிரபலமாகாத அல்லது பெயரே தெரியாத ஹீரோக்களுக்கு கூட நிரைய ஹிட் பாடல்கள் பாடி இருக்கிறார்.. உதாரணத்திற்கு
 • மல்லிகமொட்டு  மனசத்தொட்டு (சக்திவேல் - செல்வா (டாக்டர் ராஜசேகரின் தம்பி))
 • புன்னை வனப் பூங்குயிலே (செவ்வந்தி - சந்தனபாண்டியன் (நடிகை ஸ்ரீஜாவின் கணவர்))
 • உன்னைக் காணாமல் நான் ஏது (கவிதை பாடும் அலைகள் -  ராஜ்மோஹன்)
 • சொல்லாயோ வாய் திறந்து (மோகமுள் - அபிஷேக்)
 • கெழக்கால செவுத்துப் பக்கம் (நாட்டுப்புறப் பாட்டு - செல்வா)
 • ஏ ராசாத்தி பூச்சூட்டி (என் உயிர்த் தோழன் -  தென்னவன்)
 • என் வீட்டு ஜன்னல் எட்டி (ராமன் அப்துல்லா - விக்னேஷ்)
பார்த்திபன் - இளையராஜா இணைந்த முதல் படமான பொண்டாட்டி தேவை படத்தில் "ஆராரோ பாட்டுப் பாட" என்று  ஒரு பாடல் அருண்மொழி பாடி இருப்பார்..  இந்த ஜோடி மீண்டும் இணைந்த "தாலட்டுப் பாடவா" படத்தில் எல்லா பாடல்களும் ஹிட்டடிக்க , அவரது குரல் தனக்கு கச்சிதமாக பொருந்துவதாக உணர்ந்த பார்த்திபன் அதிலிருந்து தனது அடுத்து வந்த படங்களில் எல்லாம் பாட வைத்திருப்பார்... உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்,  அழகி, புள்ளகுட்டிக்காரன், இவன் என்று  வரிசையாக இளையராஜா படங்களில் மட்டுமன்றி மற்ற இசையமைப்பாளர்களின் படங்களிலும் அருண்மொழியையே பாட வைத்திருப்பார்.. இந்த ஜோடியின்  சூப்பர்ஹிட்டுகள் சில :

 • ஆராரோ பாட்டுப் பாட (பொண்டாட்டி தேவை)
 • வராது வந்த நாயகன் (தாலாட்டுப் பாடவா)
 • நீ தானா நீ தானா(தாலாட்டுப் பாடவா)
 • வெண்ணிலவுக்கு வானத்த புடிக்கலயா(தாலாட்டுப் பாடவா)
 • ஓடைக்குயில் ஒன்று(தாலாட்டுப் பாடவா)
 • மெட்டி மெட்டி வெள்ளி மெட்டி  (புள்ளகுட்டிக்காரன்)
 • பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா (நீ வருவாய் என )
 • தென்றலுக்கு தெரியுமா தெம்மாங்கு பாட்டு (பாரதி கண்ணம்மா)
 • கம்மாக்கரை ஓரமா (சொர்ணமுகி)
 • ஒரு சுந்தரி வந்தாளாம் (அழகி)
நாட்டுப்புறப் பாட்டு படத்தில் இவர் பாடிய "ஒத்த ரூவா தாரேன்" தாறுமாறு ஹிட்டாக அமைய, அதிலிருந்து சலக்கு  சலக்கு (சூரியவம்சம்),  சாந்து  பொட்டும் (வீரத் தாலாட்டு), எத்தன மணிக்கு (கரிசக்காடுப்  பூவே), ஏளா அழகம்மா (திருநெல்வேலி), கஞ்சி கலயந்தான் (கும்மிப் பாட்டு), செம்பருத்திப்பூ (விண்ணுக்கும் மண்ணுக்கும்) என வரிசையாக நாடுப்புறக் குத்துப் பாடல்களே வரிசை கட்டின. இயல்பிலேயே மெலடிப் பிரியரான இவர் இதனால் பாடுவதையே நிறுத்தி விட்டார்.

நான் அறிந்த வரையில் ஒரு இசைக்கலைஞர் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருப்பது தமிழ் சினிமாவில் இவர் தான்..

பாடுவது மட்டுமின்றி இவர் ஒரு பாடலாசிரியரும் கூட.. கிட்டத்தட்ட 20 பாடல்கள் எழுதி இருக்கிறார்... வித்யாசாகர் இசையில் "வாசகி  வாசகி" (அரசியல்), கார்த்திக் ராஜாவின் இசையில் "ஜாலி ஜாலி லைப் (உல்லாசம்) மற்றும் எனக்கொரு மகன் பிறப்பான் படத்தின் அனைத்துப் பாடல்களும் இவர் எழுதியது தான்.. 

அதுமட்டுமல்ல, ராஜாவின் பார்வையிலே, நாட்டுப்புறப் பாட்டு உள்ளிட்ட சில படங்களுக்கு இவரை பின்னணி இசை (ரீ-ரெக்கார்டிங்) அமைக்க வைத்திருக்கிறார் இளையராஜா..

தன் இனிய குரலால் காலத்தால் அழியாத பல நல்ல பாடல்களைக் கொடுத்த அருண்மொழியை மீண்டும் தமிழ் சினிமா சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.... அருண்மொழி சார் மீண்டும் வருக... நல்ல நல்ல பாடல்களைத் தருக!!!

Friday, August 12, 2016

தனிமையிலே இனிமை காண முடியுமா

ஆலம்பனா ஊருக்கு போனபிறகு தனிமையில இனிமை காண என்னடா வழின்னு யோசிச்சப்போ நமக்கு இருக்கிற ஒரே இனிமை எழுதுறது  தானே... சரி எழுதிடுவோம்... ஏன் தனிமையிலே இனிமை காண பாட்டப் பத்தியே எழுதக் கூடாது அப்டின்னு யோசிச்சேன்??? அட ... நல்லாருக்கில்ல ..... விளைவு கீழே

ஒரு விழாவில் இளையராஜா பேசும் போது மெல்லத் திறந்தது கதவு திரைப்படத்தில் வரும் "வா வெண்ணிலா" பாடலுக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்த ஒரு பாடலைச் சொல்லி பாடிக் காட்டினார்... அந்தப் பாட்டு என்.டி.ஆர், பானுமதி நடிப்பில் இசைமேதை சி.ஆர். சுப்பராமன் இசையில் வெளிவந்த சண்டி ராணி திரைப்படத்தில் இடம்பெற்ற "வான் மீதிலே இன்பத் தேன் மாரி பெய்யுதே" என்கிற பாடல்..

யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் மதுரை ஸ்ரீ மங்கள பால கான சபா என்று ஒரு பாய்ஸ் கம்பெனி திருச்சியில் அற்றை நாளில் இயங்கி வந்தது.. அதில் திருச்சியை சேர்ந்த மாணவன் ஒருவனும் அவன் நண்பணும் போய் சேர்ந்தார்கள்.. அதில் ஒரு கண்டிப்பான நாடக ஆசிரியர் ஒருவர் இருந்தார்... மாணவர்கள் தவறு செய்து விட்டால் பிரம்பால் அடி பின்னி எடுத்து விடுவார்..அவரைக் கண்டாலே மாணவர்களுக்கு சிம்ம சொப்பனம் தான்.. ஒரு முறை அந்த மாணவன் நடிக்கும் போது கவனக் குறைவால் ஒரு சிறு தவறு செயது விட அவனை துரத்தி துரத்தி அடித்திருக்கிறார்..

பின்னாளில் அந்த மாணவன் ஒரு மாபெரும் நடிகனாகி ஒரு ஷூட்டிங் இடைவேளையில் செட்டுக்கு வெளியே கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி ஸ்டைலாக சிகரெட் பிடித்துக்கொண்டிருக்க அப்போது அதே படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த அந்த பழைய ஆசிரியர் தூரத்தில் வருவது கண்டு எழுந்து சிகரெட்டை பின்னால் மறைத்துக் கொண்டார்... ஆசிரியரும் அவரைக் கண்டு கொள்ளாதது போலவே செல்வார்...  அவர் தொலைவில் சென்ற பிறகு அருகில் இருந்த வசனகர்த்தாவிடம் "டேய் இதோ போறாரே வாத்தி... இவர் கிட்ட வாங்குன அடில தான் நான் இன்னிக்கு இந்த நெலமைல இருக்கேன்" என்று இந்த சம்பவங்களை எல்லாம் சொல்கிறார்.... அந்த ஆசிரியர் பெயர் கே.டி. சந்தானம்.. மாணவன் பெயர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்... அவரது நண்பர் காகா ராதாகிருஷ்ணன்... பாசமலர் படப்பிடிப்பில் நடந்த இந்த சம்பவத்தை வசனகர்த்தா ஆரூர்தாஸ் தனது சுயசரித்தில் அழகாய் பதிவு செய்கிறார்...

கே.டி. சந்தானம் ஒரு நல்ல நடிகர்... பெரும்பாலான படங்களில் அப்பா அல்லது குணச்சித்திர வேடம் .... கணீரென்ற குரல்.... பாசமலரில் ராஜரத்தினம் என்ற கதாபாத்திரத்தில் சிவாஜிக்கு  திருமணம் பேசி முடிக்கும் ஊர் பெரிய மனிதர் வேடம்... ரகசிய போலீஸ் 115ல் "ஆஹா என்ன பொருத்தம்" பாடலில் "அங்கே என்னம்மா சத்தம்" என்று நடுவில் வசனம் பேசி பாடலில் கடைசி இரண்டு வரியை பாடுவார்...ஜெயலலிதாவுக்கு அப்பா வேடம்...ஆசை முகம் படத்தில் எம். ஜி.ஆருக்கு அப்பா....அம்பிகாபதியில் சடையப்ப வள்ளல்... திருமலை தென்குமரியில் பேராசிரியர் சொக்கலிங்கம்.... காரைக்கால் அம்மையாரில் பணக்கார தொழுநோயாளி வேடம்....பலே பாண்டியா, பாலும் பழமும், சங்கே முழங்கு,  குலமா குணமா என்று நூற்றுக் கணக்கான படங்களில் நடித்துள்ளார்...சரி அதற்கும் நான் மேலே இளையராஜா சொன்னதாக சொன்ன பாடலுக்கும் என்ன தொடர்பு? அந்தப் பாடலை எழுதிவர் கவிஞர் கே.டிசந்தானம். ஆம்,  அவர் ஒரு மிகச் சிறந்த கவிஞர்.. காலத்தால் அழியாத பல இனிய பாடல்களை புனைந்தவர்...

உதாரணத்திற்கு சில :


 • தனிமையிலே இனிமை காண முடியுமா - ஆடிப் பெருக்கு (A.M. ராஜா  P. சுசீலா - A.M. ராஜா)

 • பம்பரக் கண்ணாலே -  மணமகன் தேவை (சந்திரபாபு - G. ராமநாதன்)

 • ஒண்ணுமே புரியலே உலகத்திலே - குமார ராஜா (சந்திரபாபு - T.R. பாப்பா)

 • கனவிது தான் நினைவிது தான் - தேவதாஸ் (கண்டசாலா - C.R. சுப்பராமன்)

 • கண் கவரும் சிலையே - காஞ்சித்  தலைவன் (TMS -  K.V.மகாதேவன் )

 • வான் மீதிலே இன்பத் தேன் -  சண்டி ராணி (கண்டசாலா, P. பானுமதி  - C.R. சுப்பராமன்)
தமிழ்த் திரை இசையின் பொற்காலமாக விளங்கிய  1950 களில்
அங்கதம் கமழும் பகுத்தறிவுக் கருத்துக்களால்  "இவரை  அடிச்சுக்க ஆள் கிடையாது" என்று அறியப்பட்டு அன்றைய காலத்தின் பாடல்களில்  "Lion's Share" ஐ  எழுதியவர் உடுமலை நாராயண கவிராயர் (கவிராஜர் என்பதன் மரூஉ... 60 களில் கவியரசு என்றும் 80களுக்கு பிறகு கவிப்பேரரசு என்றும் வளர்ந்த அதே  தான்... இது ஒரு வகையான பகுத்தறிவு போலருக்கு )... பொதுவுடமைக் கருத்துக்களுக்கு  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , எளிய தமிழில் விவசாயக் கலாச்சாரத்தைப் பாட அ.மருதகாசி, தமிழர் வாழ்வியலையும் தத்துவத்தையும் பாட கண்ணதாசன் , செவிக்கினிய உறுத்தாத பாடல்களை எழுதிய கு.மா.பாலசுப்ரமணியம், ஜாலிலோ ஜிம்கானாவா? உலகே மாயம் வாழ்வே மாயமா? படத்துக்கு எது வேண்டுமோ  அதை எழுதித் தள்ளி அந்தக் கால வாலியாக விளங்கிய தஞ்சை என்.ராமையாதாஸ் இந்த வரிசையில் வைத்துப் போற்றப் படும் கவிஞர் கே.டி.சந்தானத்தின் அடையாளம் சந்தப் பாடல்கள்...

அம்பிகாபதியில் முக்கியக் காட்சி...  சிற்றின்பம் கலவாது 100 பாடல்களை அம்பிகாபதி பாட வேண்டும்... காப்புச் செய்யுளுடன் தொடங்கும் பாடல்களில் 99 பாடியதும் அமராவதி அவன் முன் தோன்ற 100வது பாடல் அவளைப் பற்றி பாடி விடுகிறான்... 5  பாடல்களைக் கொண்டு இந்தக் காட்சி அமைத்திருப்பார்கள் ஆங்கிலத்தில் Running Notations என்று சொல்வார்கள்... கடகடவென்று ஓடும் சந்தம்.. ராமநாத அய்யரின் இந்தப் பிரத்தியேக பாணியினியில் அதற்கு ஏற்றது போல  வரிகளில் கே.டி.சந்தானம் விளையாடி இருப்பார்1) ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் (கடவுள் வாழ்த்து)

2) சிந்தனை செய் மனமே (முதல் பாட்டு) வரிக்கு வரி சந்தம் கொஞ்சும் பாடல்

செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனை - செந்தில்
கந்தனை வானவர் காவலனை குகனை
சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை
சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை
ஆதலினால் இன்றே அருமறை பரவிய சரவணபவகுகனை ((Running Notations)
3)  வடிவேலும் மயிலும் துணை (98 வது பாட்டு)

4) தமிழ் மாலை தனைச் சூடுவாள் (99 வது பாட்டு ) (கே.டி.சந்தானத்தின் Signature பாடல் என்று சொல்வேன் )

தமிழ் மாலை தனைச் சூடுவான்
கொன்றைத் தளிர் மாலை மலர் மாலை  ஜப மாலையுடன்
சந்தத் தமிழ் மாலை தனைச் சூடுவான்

தாபமிகு வெப்பு வாதமொடு
பித்தமான பிணி மொய்க்கும் உடம்போடு
சாரும் உயிர் துன்ப சாகரமுழன்று
சாதனை இழந்து வருந்தா முன்
தாளையளித்திட வேணுமெனத் துதி
பாடருணைகிரி நாதனழைத்திட
தயவுடன் விரைந்து அருள் மழை பொழிந்து
முத்தைத்தரு பத்தித் திருநகையென
முதலடி உரைத்த தழைத்த கருணையை
நினைந்து நினைந்து கவி மலர் தொடுத்த
தமிழ் மாலை தனைச் சூடுவான்


(சரணத்தின் 5வது அடியில் இருந்து இறுதி வரை ஒரே மூச்சில் பாடுவதாய் காம்போதி ராகத்தில் அமைந்த அசுர மெட்டு... மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்)

5) சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம் (இறுதிப் பாடல் )

 சற்றே சரிந்த குழலே துவளத் தரள வடம்
 துற்றே அசைய குழையூசலாடதுவர் கொள் செவ்வாய்
 நற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்
 பொற்றேரிருக்க தலையலங்காரம் புறப்பட்டதே

(சத்தியமாக இது கே.டி.சந்தானத்தின் வரிகள் தாம்... மூலப் பாடலில் மாறுதல்கள் செய்திருப்பார்  )

ஓடுகின்ற நதியின் போக்கினைப் போல வேகமாக முன்னேறிச் செல்லுகிற நடை... இதை எழுதும் போது இவரது இன்னொரு பாடல் நினைவுக்கு வருகிறது...

அகத்தியர் திரைப்படத்தில் சாருகேசி ராகத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடும்  " நடந்தாய் வாழி காவேரி" , நதியின் பல்வேறு விதமான போக்குகளை காட்டுவதாய் அமைந்த மெட்டு... ஜி. ராமநாதன் பாணியில் Running நொட்டேஷன்ஸ் இல்  குன்னக்குடி வைத்தியநாதன் இசை...

"அசைந்து நெளிந்து வளைந்து தொடர்ந்து
அலைகடல் எனுமொரு மணமகன் துணைபெறவே"
என்று சரணத்தில் கே.டி.சந்தானத்தின் மேஜிக்கல் டச்...

இதே படத்தில் இன்னொரு நல்முத்து சீர்காழி , டி.ஆர். மகாலிங்கம் குரல்களில் அமைந்த "இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே"... கரகரப்ரியாவின்  மொத்த சங்கதிகளையும் ஒரே பாடலில் திரட்டுப்பாலாக கொடுத்து விட்டீர் குன்னக்குடி என்று மகாராஜபுரம் சந்தானம் பாராட்டிய பாடல்...

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே..
இகபரசுகமருள் பரமகருணை வடிவே.. (Running நொட்டேஷன்ஸ் )

சரணத்தில் அடுத்தடுத்து சந்தத்தில் வேகம் கூட்டி குன்னக்குடி செய்த விளையாட்டுக்கெல்லாம் நான் மட்டும் என்ன சும்மாவா?? என் தமிழின் அழகை காட்டுகிறேன் பாருங்கள் என்று கே.டி.எஸ் அநாயாசமாக எழுதி இருப்பார்....

நந்திதேவனொடு இந்திராதியரும் வந்து தாளினை வணங்கிடவே..
தந்திமாமுகனும் விந்தைவேல்முகனும் சந்தமார் தமிழ் முழங்கிடவே..
எந்தவேளையும் மறந்திடாது மறைசிந்து நான்முகன் பணிந்திடவே..
சந்தமார்குழலி இந்துநேர்வதனி மங்களாம்பிகை மகிழ்ந்திடவே

(இதில் நந்தி  இந்தி வந்து என்பவை சீரெதுகை...நந்தி தந்தி எந்த சந்த  என்பவை அடி எதுகை... வணங்கிடவே முழங்கிடவே பணிந்திடவே மகிழ்ந்திடவே என்பவை இயைபுத் தொடை... நான்கு வரிகளுக்குள் எத்தனை இலக்கண அழகு பாருங்கள் )

பாடலில் அடுத்து இன்னும் வேகம் கூடும்
தவினுறு முகமதில் இளநகையே
கனிவுறு விழிகளில் அருள் மழையே..
சுவைபட வருவதும் எழுசுரமே
துணையென மொழிவதும் உயர்தமிழே.. ((Running நொட்டேஷன்ஸ் ))

அடுத்து இன்னும் கடுமையான சந்தம்

வழிபடும் அடியவர் இருவினை பொடிபட
மழுமதி தனைவிடும் இனிய அபயகரமும்
வாய்ந்த செஞ்சடைக் கோலமும்.. (ஒரே மூச்சில் பாட வேண்டிய சந்தம் )

கிடைத்த வாய்ப்பையெல்லாம் தன் வரிகளால் பொன்னாக மாற்றி இருப்பார்....

இன்றளவும் கே.டி.சந்தானத்தின் பேர் சொல்லும் மற்றுமொரு பாடல்.. கண்காட்சி படத்தில் பீம்பிளாஸ் ராகத்தில் இதுவரை யாரும் செய்யாத புதுமையாய் ஏழு அட்சரங்களைக் கொண்ட மிஸ்ர நடையில் ஒரு டூயட் பாடல் மெட்டமைத்தார் குன்னக்குடி

கே.டி.சந்தானத்தின் வரிகளில் ஏ.பி.என் அவர்கள் குரலில் தொகையறா :

வெண்நிலவைக் குடைபிடித்து வீசுதென்றல் தேர் ஏறி
மென் குயில்தான் இசை முழங்க மீன் வரைந்த கொடியசைய
கண்கவரும் பேரழகி கனகமணிப் பொற்பாவை
அன்ன நடை ரதியுடனே அழகுமதன் வில்லேந்தி
தன்முல்லை, தாமரை,மா, தனி நீலம், அசோகமென
வண்ணமலர்க் கணை தொடுத்தான் வையமெல்லாம் வாழ்கவென்றே!

அடுத்து வருகிறது பாடல் எஸ்.பி.பி, எல். ஆர். ஈஸ்வரி குரல்களில்
அனங்கன் அங்கஜன் அன்பன்
வசந்தன் மன்மதன் என்றும்
வணங்கும் என் உயிர் மன்னவா - மண்ணுயிர்க்கின்பம்
வழங்கும் உன் புகழ் சொல்லவா

கதம்பம் சண்பகம் தங்கும்
கருங்கூந்தல் கவின் பொங்கும்
கனிந்து ஓங்கும் கயற்கண்ணியே - அன்பெழுந்தங்கம்
கலந்தின்பம் தரும் கன்னியே
ஆடலும் பாடலும் அன்பின்

ஊடலும் கூடலும் இன்பம்
தேடலும் உன் செயல் அல்லவா
நீ இல்லையென்றால் வாடிடும் வையகம் அல்லவா

அழகு தமிழே பழகும் இசையே
அமுத நிலையே உனது செயலால்
அந்தரங்க சிந்து பாடுவார்
சந்ததம் காதல் மந்திரத்தை தினம் நாடுவார்

மனம் கொஞ்சும் மலர் மஞ்சம்
அடைந்துள்ளம் குளிர் தங்கம்
கலந்தன்பின் நலம் காணுவோம்
குணம்கொள் பெண் அனங்கே உன்
மனம் கொண்டே மனம் தந்தேன்
இணைந்தொனறாய் சுகம் காணுவோம்

விவரிக்க வார்த்தைகள் போதவில்லை எனக்கு... அவ்வளவு அழகு...
அடுத்த இரண்டு ஆண்டுகளில் "லல்லி லாலி லாலோ" என்று ஒரு புதிய தமிழை பேசத் தயாரானது தமிழ் சினிமா ... 


 • கே.டி.எஸ் பற்றிய சில சுவாரஸ்யமான குறிப்புகள்
  100 படங்களுக்கு மேல் நடித்தவர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதிய ஒரே கவிஞர் / நடிகர் இவர் தான்.

 • ஏ.வி.எம் நிறுவனம் முதன் முதலாய் திரைப்படத் துறைக்குள் நுழைந்த போது கே.டி.எஸ்ஸை வைத்து சில காட்சிகளை வாழ்க்கை படத்திற்காக படம் பிடித்தார்கள்.. பின் அது கைவிடப் பட்டது. அந்த வகையில் ஏ.வி.எம் சினிமாஸின் முதல் நடிகர் கே.டி.சந்தானம் தான்.

 • நூற்றுக்கணக்கான இவர் பாடல்களில் ஒன்று கூட  இரட்டை அர்த்தமோ ஆபாசமோ கலந்த பாடல்கள் இல்லை .

 • 1960களில் பாடல் எழுதினாலும் ஒன்று கூட கதாநாயக  துதியோ / திராவிடம் / கம்யூனிசம் / அரசியல் சார்புடையதில்லை

 • திருவிதாங்கூர் சகோதரிகள் (லலிதா, பதமினி, ராகினி ) நாட்டிய நாடகங்களில் பிரபலமடைந்து வந்த போது அவர்களை அப்பச்சி (ஏ.வி.எம் அவர்கள் ) தன் படங்களில் நடிக்க வைக்க விரும்பினார்.. அவர்களுக்கு முதன் முதலில் 1948இல் வேதாள உலகம் படத்தில் ஒரு நாட்டிய நாடகப் பாடலை எழுதியவர் கே.டி.சந்தானம்...

 • ஏறத்தாழ 30 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் பாடல்களை புனைந்துள்ளார். கடைசிப் படம் 1977ல் எஸ்.வி.வெங்கடராமன் இசையில் கிருஷ்ண லீலா...

இறுதியாக ஒன்று...

அம்பிகாபதியில் சடையப்ப வள்ளலாக கே.டி.சந்தானத்தின் முதல் காட்சி... சிவாஜி மாடி அறைக்கு செல்வார். சடையப்ப வள்ளல் வந்திருக்கிறார் என்ற குரல் கேட்டதும் வெளியே வந்து கைகூப்பி அய்யா வணக்கம் என்று சொல்லிவிட்டு செல்வார்...

எனக்குத் தோன்றியது... "இது சடையப்ப வள்ளலுக்கு கம்பன் மகனின் வணக்கமன்று... சந்தான வாத்தியாருக்கு கணேசன் என்ற மாணவனின் வணக்கம்" என்று... இதைத்தான் "உள்ளத் தனையது உயர்வு" என்று உயர்த்திப் பேசுகிறது தாடி வைத்த தமிழ்!!!