Sunday, February 19, 2017

அழகாய் பூக்குதே!! சுகமாய் தாக்குதே!!

ஒரு வாரத்திற்கு முன்பே எழுதி இருக்க வேண்டிய "Valentines Day" பதிவு.. என்ன பண்ணுறது... தமிழ்நாட்டு பப்பரப்பா செய்திகளில் முங்கிப் போயி அதற்கான சந்தர்ப்பம் அமையாமல் போய்விட்டது...

எதேச்சையாக சேனல்களை மாற்றிக்கொண்டிருந்த போது விஜய் ஆண்டனி இசை அமைத்த படம் ஒன்றின் பாடல் ஓடிக்கொண்டிருந்தது... சரணத்தில் வந்த வரிகள் டக்கென்று கவனிக்க வைத்தன...

"சிறுதுளி விழுந்து 
நிறைகுடம் ஆனாயே
அரைக்கணப் பிரிவில் 
நரைவிழச் செய்தாயே"

வழக்கமான காதல் பாட்டு தான் என்றாலும் அதைச் சொல்ல வந்த விதம் புதிது.... எழுதியவர் யாராக இருக்கும் என்று  தேட ஆரம்பித்தேன்... தெரிந்து கொண்டபோது அடடா இவரா!! இவரைப் பற்றி எழுதலாமே என்று தோன்றியது...

90களின் மத்தியில் தமிழ் சினிமா ஒரு புதிய மாற்றத்திற்கு தயாராகிக்கொண்டிருந்தது...பாடுபொருள் என்னவோ அதே மரத்தைச் சுற்றி பாடுகிற பாடல்கள் தான் என்றாலும் அதைச் சொல்ல வருகின்ற விதத்தில் ஒரு பெரிய மாற்றத்தை தமிழ் ரசிகர்கள் எதிர்நோக்கினார்கள்....

இதற்கு பல காரணங்களை சொல்லலாம்...  கரகாட்டக்காரன் ஹிட் ஆனதும் ஆளாளுக்கு கேமராவை தூக்கிக்கொண்டு வயக்காட்டுக்கு ஓடியதைப் போல, காதல் கோட்டை வெற்றியைத் தொடர்ந்து பாத்த காதல், பாக்காத காதல், நாக்கறுத்த காதல், சொல்லாத காதல், இன்டர்நெட் காதலன்னு ஆளாளுக்கு தொம்சம் பண்ண தொடங்கி  அதே போல பாடல்களிலும் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று அடம்பிடித்ததும் ஒரு மிக முக்கியமான காரணம்.

ஏற்கனவே 80களின் பாடல்களில் தேயத்தேய பயன்படுத்திய "மானே தேனே பொன்மானே" வகையறா சொற்களும் சலித்துப் போயிருக்க வேண்டும்... 90களின் மத்தியில் சிறுநகரங்கள் மற்றும் சென்னை சார்ந்த கதைகள் வரத்தொடங்கிய போது அதற்கு வேறு ஒரு எழுத்து வடிவம் தேவைப்பட்டது... பெரும்பாலும் கல்லூரி சார்ந்த படங்களாக அவை அமைந்ததால் அப்போது பிரபலத்துவம் பெற்று விளங்கிய "புதுக்கவிதைகளை" திரைப்பாடலாக்கும் முயற்சியில் புதிய இசை அமைப்பாளர்கள் ஈடு பட்டார்கள். அது ஒரு புதிய ஈர்ப்பை தமிழ் ரசிகர்களிடம் உருவாக்கியது.

இன்னும் எளிமையாக சொல்லவேண்டும் என்றால் ஐந்தே வருடங்களுக்குள் ஒரு "ஒரு ரூபாய் நாணயத்தை தமிழ் சினிமா பாடலாசிரியர்கள் பார்க்கும் பார்வை எப்படி மாறிப்போனது" என்பதை வைத்தே இதை நாம் விளங்கிக்கொள்ள முடியும்.

"ஒத்தரூவா தாரேன் ஓணப்பத்தட்டும் தாரேன்" என்று முந்தைய பத்தாண்டில் சினிமா பாடல்களில் பயன்பட்ட ஒரு ரூவாய் நாணயம்... "பல்லாங்குழியின் வட்டம், புல்லாங்குழலின் துளைகள்" என்று பார்க்கும் இடமெல்லாம் காதலன் கொடுத்த ஒற்றை நாணயம் தெரிவதாய் யுகபாரதி எழுதினார்...

அதே காதல் தான்.. அதே மரத்தை சுத்திப் பாடுகிற டூயட் தான் என்றாலும் புற்றீசல் போலப் புறப்பட்டு வந்த புதிய பாடலாசிரியர்கள் அதைக்
கையாண்ட விதம் நவீனமாக இருந்தது... புதிய உவமைகள் கட்டவிழ்க்க்கப்பட்டன...

"உன் சமையலறையில் நான் உப்பா? சர்க்கரையா? " என்ற கேள்வியை எழுப்பினார் கபிலன்....

"உறங்காமலே உளறல் வரும் 
இதுதானோ ஆரம்பம்
அடடா மனம் பறிபோனதே
அதில் தானே இன்பம்"

என்று காதலின் அறிகுறிகளை பட்டியலிட்டார் முத்துவிஜயன்

"மழைபேஞ்சா தானே மண்வாசம்...
உன்ன நெனச்சாலே பூவாசம்"

என்று யதார்த்த வார்த்தைகளிலேயே வியக்க வைத்தார் ரா. ரவிசங்கர்.

"தேன்மிதக்கும் உதடு 
சேர்ந்திருப்பதென்ன
ஒன்றை ஒன்று முத்தமிட்டு 
இன்பம் கொள்ளுதோ"

என்று வைரமுத்துவே தனது வழக்கமான ரூட்டில் இருந்து இந்தப் புதிய வடிவத்திற்கு தன் ஜாகையை மாற்ற வேண்டி வந்தது

நா.முத்துக்குமாரும் பா.விஜயும் இந்த வரிசையில் புதுக்கவிதையை தேசிய விருதுக்கே தூக்கிச்சென்றவர்கள்...

பழனிபாரதி, அறிவுமதி, விவேகா, சினேகன், இளைய கம்பன், தாமரை, மயில், அண்ணாமலை, வைரபாரதி என்று புதுப்புது கவிஞர்கள் புறப்பட்ட காலம் அது...

இவர்கள் வரிசையில் வந்தவர் தான் இந்தப் பதிவின் நாயகர்.

1998ல் வெளிவந்த அந்தப் பாடலின் இரண்டு வரிகள் அழகியல் பார்வையின் உச்சம் என்றே நான் சொல்வேன்... ஞாபக முடிச்சுக்களை பிடித்துக்கொண்டு மனசென்னும் பள்ளத்தாக்கில் இறங்குகிற அந்தப் பாடலில் விழியெல்லாம் வியப்பை அப்பிக்கொண்டு திரும்ப திரும்ப அந்த இரண்டு வரிகளை உச்சரித்தது தமிழ்நாடு....

"பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் 
முகப்பரு ஞாபகமே!!!!"


முகத்தின் மேலே களங்கம் போல எழுகின்ற பருக்களைக்கூட இத்தனை அழகாக சிந்திக்க இயலுமா?? யாருய்யா இந்த ஆளு?? என்று தேட வைத்தார் அந்தக் கவிஞர்....

"அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்.
அழகு என்றதும் உந்தன் முத்தம் ஞாபகம்!!!"

என்று அடுத்த இரண்டு வரிகளில் அனைவர் இதயத்தையும் அள்ளியவர்.... யார் அந்தக் கவிஞர்??

சேலம் மாவட்டத்தில் உள்ள சிறுநகரம் இளம்பிள்ளை.. அதுதான் அந்த இளைஞருக்கு சொந்த ஊர். சிறுவயது முதலே பாட்டு மீது அலாதி பிரியம். சேலம் ஆர்ட்ஸ் காலேஜில்  படித்துக்கொண்டிருந்த பொழுது ஒரு இசைக்குழுவையும் நடத்தி வந்தார்.. இடையிடையே இவரது சொந்தப் பாடல்களும் அதில் பாடப்படும்.. புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே...சென்னைக்கு வந்து வாய்ப்பு தேட ஆரம்பித்தார்... சினிமா  ஒரு "ஒருகூறு புகவூடு சவ்வு" என்று புரிந்ததும் சில காலம் பத்திரிகைத் துறையில் வேலை செய்தார்.. ஆனால் பாடல்கள் மீதான ஆர்வம் மட்டும் குறையவில்லை. "ரெடி ஜூட்" என்று ஒரு ஆல்பம் வெளியிட்டார்..

அந்த சமயத்தில் தான் ஒரு நண்பர் மூலம் இயக்குனர் விக்ரமனிடம் "புதிய மன்னர்கள்" படத்தில் உதவி இயக்குனராக சேர்ந்தார்... "வானத்தை போல" படம் வரை அவருக்கு உதவி இயக்குனராக இருந்தார்... பாடலாசிரியர்கள் பாடலை எழுதுவதற்கு முன்பே உதவி இயக்குனர்களை வைத்து டியூனுக்கு டம்மி வரிகளை எழுதிவைப்பது வழக்கம்... "சூர்யவம்சம்" படத்தில் ஒரு டியூனுக்கு இவர் எழுதி வைத்திருந்த

"திருநாளு தேரழகா... மகராசன் நடையழகா
பிறைபோல நெத்தியில செந்தூரப் பொட்டழகா"

என்ற வரிகள் டியூனுக்கு மட்டுமன்றி சக்திவேல் கவுண்டரின் கதாபாத்திரத்திற்கும் கச்சிதமாக பொருந்திப்போக, அதையே படத்தில் வைத்து அந்த இளைஞரின் பாட்டுப் பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டார் விக்ரமன்.. அடுத்த படமான "உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் " படத்தின் "ஏதோ ஒரு பாட்டு" தான் அந்த இளைஞரின் திருப்புமுனைப் பாட்டு... பல்வேறு ஞாபகங்களின் அடுக்காய் அமைந்த அந்தப் பாடலின் சரணத்தில் வரும் வரி தான் நான் மேலே குறிப்பிட்டது...அது முதல் விக்ரமன் கடைசியாக எடுத்த "நினைத்தது யாரோ" வரை அவரது அனைத்துப் படங்களிலும் அந்த இளைஞருக்கு ஒரு பாட்டு கண்டிப்பாக உண்டு (வானத்தைப் போல படத்தை தவிர ).

காதல் - இந்த மூன்றெழுத்து வார்த்தையை எந்தக் கவிஞன் எழுதும்போதும் அவன் பேனாமுனையில் தேவதைகள் குடிவந்து விடுகின்றன... இவர் இந்த மூன்றெழுத்து மேஜிக்கை கையாளும் நேர்த்தி அலாதியானது... நான் ஊன்றிக் கவனித்த வரையில் ஓரிரு வரிகளுக்குள்ளேயே உவமை ஊற்றை உடைத்து விடுகிற உத்தியை இவரது காதல் பாடல்கள் முழுவதிலும் காணலாம்..

"நாணம் வந்து மேகம் கொண்டு 
மூடும் நிலவென
கூந்தல் கொண்டு முகத்தை நீயும்
 மூடும் அழகென்ன"

"மின்சாரக் கண்ணா" படத்தில் உன் பேர் சொல்ல ஆசைதான் பாடலில் வரும் அழகான உவமை...

அதற்கு சில வருடங்கள் முன்பு தான் பிரம்மனை கஞ்சன் வள்ளல் என்று வித்தியாசமாக வர்ணித்திருந்ததார் கவிஞர் வைரமுத்து...

இவர் அதை அடுத்த எல்லையில் தூக்கி வைத்தார்

"பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன் தான் 
உன்னைப் படைத்ததாலே" என்று.

"மழை இல்லை நனைகிறேன்
நம் காதலின் சாரலா?
உனைக்கண்டு உறைகிறேன்
உன் பார்வை மின்சாரமா?? "

"நெஞ்சினிலே" படத்தில் இடம்பெற்ற "மனசே மனசே குழப்பமென்ன" பாடலில் இவரது இந்த வரிகளின் இன்ஸ்பிரேஷனில் நானே எழுதிய கவிதை ஒன்று உண்டு..

உன் பார்வை துருவியதும்
குளிர்ந்து உறைகிறதே என் இதயம்
இது தான் துருவப் பிரதேசமா"

நான் இந்தப் பதிவின் தொடக்கத்தில் சொன்ன பாடலில் மற்றொரு சரணத்தில் இந்த இளைஞர் நிகழ்த்துகிற காதல் களவு


கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே 
கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே 
இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே 
ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே

சிம்புக்கு பாட்டெழுதும் போதும், எந்த வம்புக்கும் சிக்காமல் இவர் எழுதிய வரிகள் 


"உன்னை நானும் நினைப்பதை 
யாரும் தடுக்கின்ற வேளை
துடிக்கும் இதயம் வேலைநிறுத்தம் செய்கின்றதே"


வரிசை கட்டுகிற வாலிப வார்த்தைகளை வரம்பு மீறாமல் வகிடெடுத்து விடுகிறார்.

இப்படி ஏராளமான பாடல்கள் இருக்கின்றன.. உதாரணத்திற்கு சில :


 • வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா - சிம்மராசி
 • மாளவிகா மாளவிகா - உன்னை தேடி
 • நீதானா நீதானா என் அன்பே நீதானா - உன்னை தேடி
 • மனசே மனசே குழப்பமென்ன - நெஞ்சினிலே
 • உன் பேர் சொல்ல ஆசை தான்- மின்சார கண்ணா
 • அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே - நினைத்தாலே இனிக்கும்
 • காதல் அழகா காதல் பெண் அழகா - பாட்டாளி
 • சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் - தம்
 • நிபுணா நிபுணா என் நிபுணா - குத்து
 • அர்ஜுனா அர்ஜூனா அம்புவிடும் அர்ஜுனா- ஏய் 
 • பலகோடி பெண்களிலே உனைத்தேடி - இந்தியா பாகிஸ்தான் 
 • கண்ணோரமாய் கதை பேசு - கண்ணுபடப் போகுதய்யா
 • இருபது வயதுவரை என் பெற்றோரின் - கண்ணோடு காண்பதெல்லாம்
 • மயக்க ஊசி உன் பார்வையாச்சு - யுவன் யுவதி


இவரது முதல் பாடலுக்கு இசையமைத்த எஸ்.ஏ.ராஜ்குமார் தான் இவருக்கு ஆரம்பகாலத்தில் தொடர்ந்து புன்னகை தேசம், மலபார் போலீஸ், பாட்டாளி, சுதந்திரம், ஆனந்தம், காதலுடன், மானஸ்தன் என்று வரிசையாக தனது படங்களில் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்.

தேனிசை தென்றல் தேவாவுடன் இவர் கைகோர்த்த பிறகு விஜய், அஜித், பிரசாந்த் என்று அப்போதைய டாப் ஹீரோக்களின் படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்புக்கள் வரத்தொடங்கின... இப்போது ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிவிட்ட இவர் ரஹ்மான் முதல் முந்தாநாள் முளைத்த இசையமைப்பாளர்கள் வரை அனைவர் இசையமைப்பிலும் பாடல்கள் எழுதி இருக்கிறார்..., சூப்பர் ஸ்டார் ரஜினி ஒருவரைத் தவிர கமல் முதல் சரத்குமார் வரை முந்தைய தலைமுறை ஹீரோக்களுக்கும்... விஜய், அஜித் தொடங்கி பிரஷாந்த், மாதவன், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், பரத், ஆர்யா என்று லேட்டஸ்ட் ஹீரோக்கள் வரைக்கும் பாடல்கள் எழுதி இருக்கிறார்...

விக்ரமன் பட்டறையில் இருந்து வந்தவர் என்பதால் காதலைப் போலவே குடும்பச்சூழலை விளக்குகின்ற பாடல்கள் எழுதுவது இவருக்கு "கேக் வாக்" மாதிரி.. அதிலும் இவரது முத்திரை வரிகள் பளிச்சிடும்... எத்தனை மனச்சுமையில் இருக்கும்போதும் மயிலிறகு வார்த்தைகளால் இந்தப் பாடல் வருடிக்கொடுக்கும்போது மனசு லேசாவதை மறுப்பதற்கில்லை..

"பல நூறு வண்ணம் ஒன்றாக சேறும்
ஓவியம் போல சேர்ந்திருப்போம்
வரலாறு எல்லாம் நம் பேரை நாளை
சொல்வது போல வாழ்ந்திருப்போம்
எங்களுக்குள்ளே வளைந்திடுவோம்
நாணலை போல் தானே"

ஆனந்தம் படத்தில் டாக்டர் கே.ஜெ.யேசுதாஸ் குரலில் ஒலிக்கின்ற "ஆசை ஆசையாய் இருக்கிறதே இது போல் வாழ்ந்திடவே" பாடலின் சரணத்தில் வரும் கவித்துவமான வரிகள் இவை...

தெனாலி படத்தின் "ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா" பாடலிலும் ஒரு அழகான குடும்பத்தை புதிய புதிய உவமான உவமேயங்களால் கட்டமைத்திருப்பார் 

குளம் காட்டும் வெண்ணிலவாய்
அழகான நம் குடும்பம் கல் ஒன்று விழுவதால் கலையலாமா??
கல் ஒன்று விழுவதினால் தண்ணீரில் நெளி நெளியாய் 
அலை போடும் ஓவியத்தை ரசிக்கலாமே
சித்தன்ன வாசல் சிற்பங்கள் பக்கம் வெறும் பாறை ஏனோ??
அன்பெனும் உளி பட்டதால் பாறை சிலை ஆகுமே
பிட்டு குழலுக்கு தேங்கப்பூவப்போல
ஒன்றாய் கலந்திட நெஞ்சு துடிக்குது

"குளம் காட்டும் வெண்ணிலவு", "பிட்டுக்குழலுக்கு தேங்காய்ப்பூவைப்போல" இவையெல்லாம் தமிழ் சினிமாவுக்கு ஒரே மாதிரியான லகான் பூட்டிய குதிரைபோல அல்லாது எந்த ஒரு பொருளையும் வேறு மாதிரியாக கூட கற்பனை செய்ய இயலும் என்பதற்கு நல்ல உதாரணங்கள்...

துளசிச் செடியில் மழையின் துளியைப் போலவே
எங்கள் விழியில் ஆனந்தத்தின் ஈரமே
பூவில் ஓர் பாத்திரம் நாம் செய்து பார்க்கலாம்
பால்சோறு போட்டு நாம் பறவைக்கும் ஊட்டலாம்

மெட்டுக்கு உறுத்தாமலும் வார்த்தைகள் துருத்தாமலும் கவிதைக்கு வர்ணமடிக்கிற அழகிய முயற்சி இது...

இப்படி இவரது கைவண்ணத்தில் வந்த அநேகம்  பாடல்களை சொல்லலாம். உதாரணத்திற்கு சில :

 • ஹேப்பி நியூ இயர் வந்ததே - உன்னை நினைத்து
 • ஆலங்கட்டி மழை தாலாட்ட - தெனாலி
 • அழகான சின்ன தேவதை - சமுத்திரம்
 • ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே - பிரியமான தோழி
 • வானம் என்ன வானம் தொட்டுவிடாலாம் - பிரியமான தோழி
 • பாலக்காட்டு பொண்ணு பம்பரம் போல கண்ணு - மலபார் போலீஸ்

"சினிமா என்பது வணிகமும் சேர்ந்த கலை.. அதற்காக நாம் சில படிகள் இறங்கி வரத்தான் வேண்டி இருக்கிறது" என்று கமல் ஹாசன் சொன்னதைப் போல என்னதான் வளைத்து வளைத்து புதுக்கவிதை எழுதினாலும் துள்ளிசைப்பாட்டு எழுதலைன்னா துட்டு பாக்க முடியாது கோடம்பாக்கத்தில்.. இதற்கு யாரும் விதிவிலக்கல்ல... "ஆகாயம் பிழிந்து மை எடு.. சந்திர சூரியரை அஞ்சல்காரர்கள் ஆக்கு"ன்னு முழங்குற கவிப்பேரரசே "சிரிச்சு சிரிச்சு வந்தா சீனா தானா டோய்" எழுத வேண்டிவந்த இடம் இது.

1000 பாடல்கள் தாண்டிவிட்ட ஒரு சினிமா கவிஞன் குத்துப்பாட்டு எழுதலன்னா எப்புடி?? இவரும் நிறைய எழுதி இருக்கிறார்...

 • வண்டார்குழலி வண்டார்குழலி - திருடா திருடி
 • கொக்ககோலா பிரௌன் கலருடா - பகவதி
 • கை கை கை கை வெக்கிறா - பகவதி
 • சலாம் குலாமு - ஹலோ 
 • துனியா ஹே துனியா உன் கன்னம் - உனக்காக எல்லாம் உனக்காக
 • கத்த கத்த கானாங்கத்த - அரசு
 • புல்புல் தாரா புல்புல் தாரா - அரசு
 • சிங்காரி சிங்காரி - ராஜா
 • ராத்திரிடா ரவுண்டடிடா - சொல்லாமலே
 • மனச மடிச்சு நீதான் - கண்ணுபடப் போகுதய்யா

உவமையைப் போலவே இவரது எழுத்துக்களில் நான் கவனித்த மற்றொரு விஷயம் இது. நா.முத்துக்குமார் "மியாவ் மியாவ் பூன" பாடலைப் பற்றி சொல்லும்போது "பல்லவியின் முதல் சொல்லை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை வரும்படி எழுதுவது அந்தப் பாடலை கேட்பவரின் மனதில் அழுத்தமாக பதிய வைக்கிற ஒரு உத்தி.. சின்னப்ப பசங்க ரைம்ஸுல பயன்படுத்துற டெக்னிக் இது.. நீங்க வேணா யோசிச்சு பாருங்க" என்று ஒரு போடு போட்டார்.. அதே ரூட்டில் இவரது பாடல்கள் ஏராளமாய் இருக்கின்றன. "நீதானா நீதானா, நிபுணா நிபுணா, சாணக்யா சாணக்யா" என்று காதல் பாடல்களானாலும், வண்டார்குழலி வண்டார்குழலி என்று குத்துப்பாட்டானாலும், அர்ஜுனா அர்ஜுனா என்று "தத்துவப்" பாட்டானாலும் இந்த "ரிப்பீட்டே" முறையை பரவலாகப் பிரயோகித்திருக்கிறார்.

நா.முத்துக்குமாருக்கோ, பா.விஜய்க்கோ கற்பனை வளத்திலோ, நவீன சிந்தனையிலோ சற்றும் குறைந்தவரல்ல இந்த இளைஞர்... பாடல் எழுதும் வாய்ப்பு நிறைய இருந்த போதே இயக்குனராகும் முயற்சியில் இறங்கியதும், ஹாரிஸுக்கு தாமரை, ரஹ்மானுக்கு வைரமுத்து, தேவாவுக்கு காளிதாசன், வித்யாசாகருக்கு பா.விஜய், யுவனுக்கு முத்துக்குமார் என்பதைப் போல  எந்த இசையமைப்பாளருக்கும் ஆஸ்தான கவியாக இல்லாமல் போனதும்  இவருக்கு ஒப்பீட்டளவில் குறைவான பாடல்கள் கிடைக்க காரணமாக இருந்திருக்கலாம். 

நான் தேடியவரை கிடைத்தவை இவை.. அதிலேயே நிறைய பாடல்கள் இவர் எழுதியவை தானா என்று புருவம் உயர்த்த வைத்தன.. முறையான ஆவணப்படுத்தல் இல்லாத ஒரே காரணத்தினாலேயே இவரது பல பாடல்கள் வெளியில் தெரியவில்லை..

இந்நேரம் கண்டுபிடித்திருப்பீர்கள்.. இருந்தாலும்... அட யார் அந்தக் கவிஞர்ன்னு சொல்லவே இல்லையேப்பா என்று கேட்பவர்களுக்கு மட்டும்... 

தன் சொந்தப் பெயரிலேயே பாடல்கள் எழுதும் கவிஞர்களில் ஒருவரான

"கவிஞர். ஜெ.கலைக்குமார்"!!!


"வானம் என்ன வானம் தொட்டுவிடலாம்" என்று எழுதிய அந்த இளைஞருக்கு நிச்சயம் தொடுவானம்  தூரமில்லை... இப்போதும் 'ஐம்புலன், சாமிப்புள்ள, தாக்க தாக்க, மார்கழி 16, காகித கப்பல்" என்று பிசியாகவே இயங்கும் இந்த இளைஞரை தேடி விருது வரும் நேரம்... இல்லை வெகு தூரம்....


Sunday, January 8, 2017

மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே!!!

இளையராஜாவின் இசையமைப்பை சிலாகித்து ஒரு பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் சீமான் பேசும் போது இந்த உதாரணத்தை சொன்னார் "மூடு பனின்னு ஒரு படம்.. அதுல பிரதாப் போத்தன் கெட்டவர்... படம் முழுக்க பெண்களை கடத்தி கொண்டுபோய் கொலை செய்யிற கதாபாத்திரம்... படத்தில உச்சகட்ட காட்சி.. எல்லாரும் அவரை வெரட்டிக்கிட்டு போகும் போது ஒரு பாழடைஞ்ச வீட்டுக்குள்ள போவாரு.. அங்கே வெள்ளையா ஒண்ணு போத்தி இருக்கும்.. என்னன்னு பாத்தா எலும்புக்கூடு.. அவரு உடனே "மாமா.... அம்மா மாமா.. அம்மா மாமான்னு அழுவ ஆரம்பிப்பாரு... அப்ப அப்டியே மென்மையா பின்னணியில் "ஆசை ராஜா ஆரீரோ" அப்டின்னு ஒரு பாட்டு வரும்... அதுவரைக்கும் பிரதாப்பை திட்டுனவன் பூராவும் கரகர ன்னு அழுவான்... ஒரு கதையை அந்தப் பாட்டு அப்படியே காவியமா உந்தித் தள்ளிரும்..." என்று... அப்பேற்பட்ட குரலுக்கு சொந்தக்காரரைப் பற்றிய பதிவு தான் இது...

கதாநாயகர்களை சார்ந்த தமிழ் சினிமாவில் பாடகர்களுக்கு கிடைக்கிற வாய்ப்புக்கள் பாடகிகளுக்கு இயல்பாகவே குறைவு தான்.. அதிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் சுசீலா, ஜானகி, சித்ரா என்று ஆயிரக்கணக்கில் பாடித்தள்ளிவிடும் பிரதான பாடகிகள் இருப்பார்கள். இதில் நுழைந்து வாய்ப்புக்களை பெறுவது என்பதே பெரிய காரியம்.. அதே நேரம் ஒரே மாதிரி மூன்று நான்கு பாடல்கள் பாடினாலே இவரு இந்த மாதிரி பாடத்தான் லாயக்கு என்று முத்திரை குத்தி விடுவார்கள்... கேரியர் கதம் கதம் தான்... யாருடைய குரலையும் காப்பி அடிக்க கூடாது.. நம்ம குரலையும் யாரும் காப்பி அடிக்கிற மாதிரி இருக்க கூடாது... எனவே புதிதாக வரும் பாடகிகளின் நிலை என்பது டி-20 மேட்சில் இறக்கி விடப்பட்ட ஆறாவது பேட்ஸ்மேனின் நிலை தான்.. கிடைக்கும் எந்த வாய்ப்பையும் விடாது விளாச வேண்டும்.. அப்படி ஒப்பீட்டு அளவில் குறைவாகவே பாடி இருந்தாலும் 37 ஆண்டுகள் ஒவ்வொரு பாட்டையும் தெறிக்க விட்ட ஹிட் பாடல்களாக பாடிய பாடகி அவர்...

மெல்லிசைப் பாடல் கச்சேரிகளில் பாடிக் கொண்டிருந்த அவருக்கு
ஒரு நாள் இயக்குனர் அருட்செல்வர் ஏ.பி.என் அவர்களிடம் இருந்து அழைப்பு வருகிறது... ஏற்கனவே ஹிந்தியில் "பிளே பாய்" என்கிற படத்தில் ஒரு பாடலை பாடி இருந்தாலும் தமிழில் வந்த முதல் வாய்ப்பு அது... "மீரா படத்தில் "காற்றினிலே வரும் கீதம்", "கிருஷ்ண பக்தியில் "ஸாரஸம் வசீகர கண்கள்", "ஞான சௌந்தரியில் "அருள் தாரும் தேவ மாதாவே" போன்ற பாடல்களுக்கு இசையமைத்த இசை மேதையின் இசையமைப்பில் பாட...  1977ல் வெளிவந்த "கிருஷ்ண லீலா" படத்தில் இசை மேதை "எஸ்.வி.வெங்கட்ராமன்" இசையில் "மோகன கண்ணன் முரளி கானன்" என்கிற பாடலைப் பாடி தமிழில் அறிமுகம் ஆனார்...

பிறகு மெல்லிசை மன்னர் இசையில் "குடும்பம் ஒரு கதம்பம்", ஏ.வி.ரமணன் இசையில் "நீரோட்டம்", ஷியாம் இசையில் "அல்லி தர்பார்" ஆகிய படங்களில் பாடிவந்தாலும் அவருக்கான சரியான பிரேக் கிடைக்க மூன்று ஆண்டுகள் ஆனது...1980ல் நான் முதல் பத்தியில் சொன்ன பாடலை இளையராஜா இசையில் பாடினார்... ஆனாலும் அவரது வெற்றி பயணத்தின் பாதையை உண்மையிலேயே திறந்து விட்டது அவரது அடுத்த பாடல் தான்....
 "பூங்கதவே தாழ் திறவாய்" ...."உமா ரமணன்" என்ற பெயரை தமிழ் திரையிசை ரசிகர்கள் நெஞ்சில் அழுத்தமாக பதிய வைத்தது அந்தப் பாட்டு... பிறகு அந்தப் பத்தாண்டுகளில் ஏராளமான ஹிட் பாடல்களை பாடினார்... பெரும்பாலும் இளையராஜாவின் இசையில் தான்.. ஆனால் ஒவ்வொன்றும் எவர் கிரீன் ஹிட்ஸ் :


 • ஆனந்த ராகம் கேட்கும் நேரம் - பன்னீர் புஷ்பங்கள்
 • மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே - நண்டு
 • பொன்மானே கோபம் ஏனோ - ஒரு கைதியின் டைரி
 • பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் - தூறல் நின்னு போச்சு
 • கஸ்தூரி மானே கல்யாண தேனே - புதுமைப்பெண்
 • செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு - மெல்லப் பேசுங்கள்
 • கண்ணனே நீ வரக் காத்திருந்தேன் - தென்றலே என்னைத் தொடு
 • ஆறும் அது ஆழம் இல்ல - முதல் வசந்தம்
 • செவ்வரளித் தோட்டத்தில - பகவதிபுரம் ரயில்வே கேட்


என்று 80களின் முதல் 5 வருடங்களில் மட்டும் இளையராஜாவின் இசையில் முத்து முத்தான பாடல்கள்...

இதைத்தொடர்ந்து மற்ற இசைஅமைப்பாளர்களிடம் இருந்தும் வாய்ப்புக்கள் வந்தன...


 • வானமே மழை மேகமே - மதுமலர் (கங்கை அமரன்)
 • இந்த அழகுதீபம் ஒளிவீசும் பொழுது  - திறமை (சங்கர் - கணேஷ்)
 • ராக்கோழி கூவையில - ஒரு தாயின் சபதம் (விஜய டி. ராஜேந்தர்)


அற்புதமான குரல் வளம் உடையவர் உமா ரமணன். பழனி விஜயலட்சுமியிடம் பயின்ற கர்நாடக சங்கீத ஞானமும், மேல் ஸ்தாயியில் பாடும் போது குரல் துல்லியமாக ஒலிப்பதும், எல்லாவற்றிற்கும் மேலாக நறுக்குத் தெறித்த மாதிரி தெளிவான தமிழ் உச்சரிப்பும் அவருக்குத் தொடர்ந்து கைகொடுத்து வந்திருக்கின்றன...

உமா ரமணனின் Peak Period என்று 90களை சொல்லலாம்.. பெரும்பாலும் இளையராஜா பாடல்கள் தான் என்றாலும் எக்கச்சக்க ஹிட் பாடல்கள்.... சும்மா கொஞ்சம் பாப்போமே


 • நீ பாதி நான் பாதி கண்ணே - கேளடி கண்மணி
 • ஆகாய வெண்ணிலாவே - அரங்கேற்ற வேளை
 • ஏலேலக்குயிலே ஏல மல மயிலே - பாண்டி நாட்டுத் தங்கம்
 • கோட்டய விட்டு வேட்டைக்கு போகும் - சின்னத்தாயி
 • தண்ணீரிலே முகம் பார்க்கும் - மணிக்குயில்
 • பூத்து பூத்து குலுங்குதடி பூவு - கும்பக்கரை தங்கய்யா
 • வெள்ளி நிலவே வெள்ளி நிலவே - நந்தவன தேரு
 • ஓ  உன்னாலே நான் பெண்ணானேனே - என்னருகில் நீ இருந்தால்
 • நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் - பாட்டுப் பாடவா
 • முத்தம்மா முத்து முத்து - தந்துவிட்டேன் என்னை
 • ராஜா இல்லா ராணி - எதிர்காற்று
மற்ற இசையமைப்பாளர்களின் இசையிலும் அருமையான பாடல்கள் :


 • யாரோ அழைத்தது போலே - சிஷ்யா (தேவா)
 • பொன்மாலையில் ஒரு பூ பூத்தது - கோகுலம் (சிற்பி)
 • உதயமே உயிரே நிலவே - ஒரு பொண்ணு நெனச்சா (எஸ்.ஏ. ராஜ்குமார்)
 • பூத்திருக்கும் மனமே மனமே - புதையல் (வித்யாசாகர்)
 • வா சகி வாசகி... வள்ளுவன் வாசுகி - அரசியல் (வித்யாசாகர்)


இப்படி நிறைய சொல்லலாம்...


2000க்கு பிறகு இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லையென்றாலும் திருப்பாச்சி, கஜா, இளவட்டம், ஆப்பிள் பெண்ணே என்று தனது படங்களில் இசையமைப்பாளர் மணி சர்மா இவருக்கு நிறைய வாய்ப்புக்களைத் தந்திருக்கிறார்...

சிவகாசியில் "இது என்ன இது என்ன", திருப்பாச்சியில் "கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு" இரண்டும் சொல்லிக்கொள்ளும்படியான ஹிட் பாடல்கள்

உமா ரமணன் என்றதும் சட்டென்று நினைவுக்கு வருவது ஏசுதாஸுடன் இணைந்து அவர் பாடிய பாடல்கள்.. அதே போல மற்றொன்று இரண்டு பெண்குரல்களில் ஒருவராக அவர் பாடிய பாடல்கள்.. ரெண்டு female voices வருதுன்னா உடனே கொஞ்சம் மென்மையான குரல் உள்ள கதாபாத்திரத்திற்கு உமா ரமணனை போட்டுக்கோங்கப்பான்னு ராஜா சொல்லிடுவார் போல.... கிட்டத்தட்ட அவரது சமகாலப் பாடகிகள் எல்லோருடனும் பாடியிருக்கிறார். உதாரணத்திற்கு :


 • அமுதே தமிழே அழகிய மொழியே - கோயில் புறா (பி.சுசீலாவுடன்)
 • கண்ணுக்குள்ளே யாரோ நெஞ்சமெல்லாம் யாரோ - கை கொடுக்கும் கை (எஸ்.பி.சைலஜாவுடன்)
 • நானொரு சின்னப்பா - தழுவாத கைகள் (பி.எஸ்.சசிரேகாவுடன்)
 • ஏ மரிக்கொழுந்து - புது நெல்லு புது நாத்து (சித்ராவுடன்)
 • பூங்காற்றே இங்கே வந்து வாழ்த்து - வால்டர் வெற்றிவேல் (சுனந்தாவுடன்)
 • ஊரடங்கும் சாமத்திலே - புதுப்பட்டி பொன்னுத்தாயி (சுவர்ணலதாவுடன்)
 • ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் - மகாநதி (ஷோபனாவுடன்)


எல்லாவற்றிற்கும் மேலாக குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் "கல்வியில் சரஸ்வதி செல்வத்தில் லட்சுமி" என்கிற பாடலில் "வாணி ஜெயராம், எஸ்.பி.சைலஜா, பி.எஸ்.சசிரேகா ஆகிய 3 பேருடன் இணைந்து பாடி இருக்கிறார்...

உமா ரமணன் சில சுவாரஸ்யமான குறிப்புகள் :


 • இசைத்துறைக்கு வருவதற்கு முன்பு இவர் ஒரு தேர்ந்த பரதக்கலைஞர். டாகடர் பத்மா சுப்ரமணியத்தின் சிஷ்யை.
 • 40 வருடங்களில் தன் கணவர் ஏ.வி.ரமணனுடன் 6000 கச்சேரிகளுக்கு மேல் பாடி இருக்கிறார் 
 • இவரது தந்தை முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் வெங்கட்ராமன் ஐ.ஏ.எஸ்
 • தமிழ் சினிமாவில் தீபன் சக்ரவர்த்தி, உன்னி மேனன், ஹரிஷ் ராகவேந்திரா, மகாநதி ஷோபனா ஆகியோர் தங்கள் முதல் பாடலை இவருடன் தான் இனைந்து பாடி இருக்கிறார்கள்.
 • இசையமைப்பாளர் தேவாவின் முதல் படத்தின் முதல் பாடலைப் பாடியவர் உமா ரமணன் (மனசுக்கேத்த மகராசா படத்தில் "மஞ்சக்குளிக்கிற" என்கிற பாடல்)


நல்ல குரல் வளம் உடைய பாடகியாக இருந்தும் ஏராளமான ஹிட் பாடல்களை பாடியிருந்தாலும் இவருக்கான சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது தான் உண்மை.. இளையராஜாவிடம் பாடிய பாடல்கள் அளவிற்கு வேறு எந்த இசையமைப்பாளர்களிடமும் இவர் பாடவில்லை என்பதே இதற்கு நல்ல சான்று... சமீபத்திய இளையராஜா இசைநிகழ்ச்சியிலும் குரல் பிசிறில்லாமல் அதே இனிமையோடு பாடினார். தற்கால இசைமைப்பாளர்களும் இவரது குரலை சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதே ஒரு இசை ரசிகனாக நமது விருப்பம்....

Saturday, December 31, 2016

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட!!!

ஊருக்கு போவதில் உள்ள பலசுகங்களில் ஒன்று பேருந்தில் இளையராஜா பாட்டு கேட்டுக் கொண்டே போவது.. இளையராஜா என்றதும் "பனிவிழும் மலர்வனமோ அல்லது ஆயிரம் மலர்களேவோ அல்லது காற்றில் எந்தன் கீதமோ அந்த கால ராஜா பாடல்களோ கிடையாது... எங்கேந்து தான் புடிப்பாங்கன்னு தெரியாது புதுசுமில்லாம பழசுமில்லாம நடுவாந்திரமா.... "மணிக்குயில் இசைக்குதடி", "என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன்", "புன்னைவனப் பூங்குயிலே பூமகளே வா", "சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி" இப்படி நீளும் பட்டியல் ..... இந்த முறை ஊருக்கு போகும்போதும் பெட்டிக்கடை முதல் கோயில் திருவிழாவில் ஆர்கெஸ்டரா வரை அதே வகைப் பாடல்கள்....  நானும் சிந்தித்ததுண்டு என் நண்பர்களும் கேட்டதுண்டு இதுல அப்படி என்ன Uniqueness தெரியுது நாம்மாளுகளுக்கு என்று... காரணம் எதுவேண்டுமாயினும் இருக்கலாம் நான் கண்டுகொண்டது, இதையெல்லாம் எழுதியவர் ஒருவர் தான்... அதுவும் நம்ம ஊர்க்கார ஆள் என்று!!!

மெல்லிசை மன்னர் முதல் இன்றைய ஹிப் ஹாப் தமிழா வரை அனைவரது இசையிலும் 33 ஆண்டுகளாக கிட்டத்தட்ட 1500 பாடல்களுக்கு மேல் எழுதிய  கவிஞர் அவர்!!!!

காவிரி பாயும் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்தவர்.. இயற்பெயர் சந்திரசேகரன்.. ஒரு கட்டத்தில் 130 ரூபாயுடன் தமிழ் தனக்கு சோறு போடும் என்ற நம்பிக்கையில் சென்னைக்கு வந்தவர்... ஒரு தேநீர்க்கடையில் நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்த போது "மக்கள் குரல்" பத்திரிக்கையாளர் ராம்ஜி என்பவர் இவரை பார்த்து இனிமை பற்றி ஒரு கவிதை எழுத முடியுமா என்று கேட்க.. அங்கேயே

"தாலாட்டிப் பாலூட்டி தண்டமிழில் சீராட்டும்
தாயார்க்குத் தன் மகவே இனிமை"

 என்று தொடங்கி ஒரு கவிதையை எழுதிக் கொடுத்திருக்கிறார்.. அதில் வியந்த ராம்ஜி அவருக்கு முதல் சினிமா பாடல் எழுதும் வாய்ப்பினைப் பெற்றுத் தந்திருக்கிறார்.. "ஆர்.சி. சக்தி இயக்கத்தில் 1984ல் வெளிவந்த "சிறை" படத்தில் "மெல்லிசை மன்னர்" இசையில் "ராசாத்தி ரோசாப்பூவே வெட்கம் வெட்கம் ஏனோ ஏனோ" தான் இவர் எழுதிய முதல் பாடல்...

இதற்கு பிறகும் மெல்லிசை மன்னருக்கு அவரது கடைசி படம் வரை பாடல்கள் எழுதி இருந்தாலும் படம் வெளிவரவில்லை... தனது முதல் பாடலை தந்த மெல்லிசை மன்னரின் கடைசிப் படமான வி.சி.குகநாதனின் "இது எம்.ஜி.ஆர். இல்லம்" படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் இவர் தான்..

முதல் பாடலுக்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இவருக்கு பெரிதாக சினிமா வாய்ப்புகள் எதுவும் வரவில்லை... அந்நேரத்தில் ஏ.ஆர்.ரகுமானின் விளம்பர படங்களில் பாடல்கள் எழுதிக் கொண்டிருந்திருக்கிறார்... 1986ல் வைரமுத்துவோடு டூ விட்ட இளையராஜா மற்ற கவிஞர்களை ஊக்கப்படுத்த தொடங்கினார்.. இவருக்கும் பளிச் பாடல்கள் கிடைத்தன... "எங்க ஊரு காவக்காரன் படத்தில் "சிறுவாணி தண்ணி குடிச்சு" மற்றும் "என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு" படத்தில் "உயிரே உயிரின் ஒளியே" ....இந்த இரண்டு பாடல்களின் வெற்றிக்கு பிறகு இளையராஜாவின் இசையில் வரிசையை கட்டத்தொடங்கின இவரது சூப்பர் ஹிட் பாடல்கள்... உதாரணத்திற்கு சில சூப்பர் ஹிட் பாடல்கள்...


 • மீனம்மா மீனம்மா கண்கள் தேனம்மா - ராஜாதி ராஜா
 • ஆட்டமா தேரோட்டமா - கேப்டன் பிரபாகரன்
 • தென்றல் தான் திங்கள் தான் - கேளடி கண்மணி
 • நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி - செம்பருத்தி
 • நட்ட நடுக்கடல் மீது நான் பாடும் பாட்டு - செம்பருத்தி
 • ஆதாமும் ஏவாளும் போல - மருதுபாண்டி
 • சோலைப் பசுங்கிளியே - என் ராசாவின் மனசுல
 • நட்டுவச்ச ரோசாச்செடி ஆமா ஆமா - அரண்மனைக்கிளி
 • காதல் கவிதைகள் படித்திடும் நேரம் - கோபுர வாசலிலே
 • இதயமே இதயமே உன் மௌனம் என்னை - இதயம்
 • கலகலக்கும் மணியோசை  - ஈரமான ரோஜாவே
 • மணிக்குயில் இசைக்குதடி - தங்க மனசுக்காரன்
 • என்னை தொட்டு அள்ளிக்கொண்ட - உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்


இப்படி நிறைய சொல்லலாம்... மீனம்மாவில் தொடங்கி சூப்பர் ஸ்டாருக்கு நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறார்.. உதாரணத்திற்கு


 • நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் - பணக்காரன்
 • சைலன்ஸ்... காதல் செய்யும் நேரம் - பணக்காரன்
 • தானந்தன கும்மி கொட்டி  - அதிசய பிறவி
 • வேறுவேலை உனக்கு இல்லையே - மாப்பிள்ளை


ரஜினி மட்டுமல்ல "அரங்கேற்ற வேலை, மை டியர் மார்த்தாண்டன், பாண்டித்துரை, ராஜா கைய வெச்சா, சின்ன வாத்தியார்" என்று பிரபுவுக்கு.... "பெரிய வீட்டு பண்ணைக்காரன், நாடோடி பாட்டுக்காரன், சின்னக் கண்ணம்மா, கோபுர வாசலிலே, உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்" என்று கார்த்திக்கிற்கு.... பொங்கிவரும் காவேரி, அன்புக்கட்டளை, எங்க ஊரு காவக்காரன், என்ன பெத்த ராசா" என்று ராமராஜனுக்கு இப்படி அந்த காலகட்டத்தில் வந்த பாதிக்கு பாதி இளையராஜா படங்களில் எழுதி தள்ளி இருக்கிறார்...

ராஜாவுக்கு இவர்மீது இருந்த நம்பிக்கைக்கு ஒரு உதாரணம் சொல்லலாம்... வழக்கமாக "Semi - Classical" வகை பாடல், கே.ஜே.யேசுதாஸ் பாடப்போகிறார் என்றால் "கூப்பிடுங்கப்பா வாலி சாரை" என்பது தான் ராஜா டிரெண்ட்... "ராம நாமம் ஒரு வேதமே.....,  ஆடல் கலையே தேவன் தந்தது..., கமலம் பாதக் கமலம்... கங்கைக்கரை மன்னனடி" இப்படி அநேக பாடல்கள்... அல்லது சந்தம் கொஞ்சம் கடுமையா இருக்கா புலவர் புலமைப்பித்தன வச்சு எழுதுவார்... "வேதம் நீ இனிய நாதம் நீ, நீ ஒன்று தானா என் சங்கீதம்.." இது மாதிரி... இதிலிருந்து மாறி இவருக்கும் ஒரு அழகான வாய்ப்பை "கோபுர வாசலிலே" படத்தில் தந்திருப்பார் இளையராஜா.... கதாநாயகி பரதம் ஆடுவதில் கதாநாயகன் மயங்குவதாக ஒரு சிச்சுவேஷன்.. "நாதம் எழுந்ததடி கண்ணம்மா"... யேசுதாஸ் - ஜானகி குரல்களில் ஸ்ரீரஞ்சனி ராகத்தில் ஸ்வரங்களோடு அமைந்த அழகான பாடலின் வரிகளை எங்கும் உறுத்தாத வண்ணம் அத்தனை நேர்த்தியாய் கோர்த்திருப்பார்...

"தா என்ற சொல்லில் இன்பம் வந்து தாவ
தை என்ற சந்தம் சொந்தங்கள் கொண்டாட"

இதில் தா - தை என்பது பரதத்தில் சொல்லப்படும் ஜதிகளை குறிக்கும்.. அதையே "தா என்றால் "தாவு" என்று பொருள் கொள்ளலாம் "தை" என்றால் "தைத்தல்" என்று பொருள் கொள்ளலாம் என்று தமிழில் விளையாடி இருப்பார்... அடுத்த சரணத்தில் துரித கதியில்

"பழகு கண்கொண்டு உலகை நீவென்று
தினமனுதினம் கவி பாடிடவா
இனிய கற்கண்டு இளமை பண்கொண்டு
சுகமொரு சுகமென தேடிடவா"

என்று வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல வார்த்தைகள் வந்து விழுகின்றன... இந்தப் பாடலின் வெற்றியைத் தொடர்ந்ந்து "ஊரெல்லாம் உன் பாட்டு" படத்தில் "தோம் தோம் தோம்" என்று இதே வகைப் பாடலை மீண்டும் இவருக்கு வழங்கி இருப்பார் இளையராஜா..

இளையராஜா மட்டுமன்றி தேவா இசையில் "வசந்த காலப் பறவைகள்", "பதவிப் பிரமாணம்", "கருப்பு நிலா", "தாயகம்", "ஜோர்" என்று ஒரு 50 - 60 படங்களில் எழுதி இருக்கிறார்...  ஏ.ஆர். ரகுமான் இசையில் ஆரம்ப காலத்தில் விளம்பர படங்களில் பாடல்கள் எழுதியவர் பிறகு "ஸ்டார்" படத்தில் "ரசிகா ரசிகா", "தெனாலி" படத்தில் "போர்க்களம் அங்கே பூவில் காயம் இங்கே" என்று இரண்டு பாடல்கள் எழுதி இருப்பார்...

இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கிய மற்றொரு இசையமைப்பாளர் "ஆதித்யன்". ஆதித்யனின் முதல் படமான "அமரன்" ல் இருந்து "நாளைய செய்தி, அதே மனிதன், லக்கி மேன், டேவிட் அங்கிள், அசுரன், சின்ன புள்ள" என்று படத்துக்கு படம் தொடர்ந்து அவரது இசையில் ஏராளமான பாடல்கள் எழுதி இருக்கிறார்.... உதாரணத்திற்கு


 • வெத்தல போட்ட ஷோக்குல - அமரன்
 • வசந்தமே அருகில் வா - அமரன்
 • சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே - அமரன்
 • தாழமடல் ஓல கொண்டு - அதே மனிதன்
 • சக்கு சக்கு வத்திக்குச்சி சக்குன்னுதான் பத்திக்கிச்சு - அசுரன்


எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் "இது நீ இருக்கும் நெஞ்சமடி - கிருஷ்ணா", மரகதமணி இசையில் "உயிரே உயிரே இது தெய்வீக - எல்லாமே என் காதலி", வித்யாசாகர் இசையில் "வாராயோ தோழியே - அரசியல்" இப்படி மற்ற இசை அமைப்பாளர்களின் இசையிலும் நிறைய ஹிட் பாடல்களை எழுதி இருக்கிறார்...

இப்போதும் ஆர்யா சூர்யா, அரண்மனை, அரண்மனை 2, குரோதம் 2, ஸ்ரீ ராமராஜ்யம் என்று தனது மகன் கவின் சிவா உட்பட பலரது இசையில் பாடல்களை எழுதி வருகிறார்... அதாண்டா இதான்டா, குரோதம் 2, ஸ்ரீராமராஜ்யம் படங்களுக்கு வசனம் எழுதி வசனகர்த்தாவாகவும், புகழ், சதுரங்க வேட்டை படங்களில் நடிகராகவும் தனது பன்முகப் பரிமாணங்களை பதித்து வருகிறார்...

தாலாட்டு முதல் தாலாட்டு வரை, எம்.ஜி.ஆர் கவிதைகள் உட்பட பல கவிதை நூல்களை எழுதியவர்... தூர்தர்ஷனில்  கவிராத்திரி, கலைஞர் தொலைக்காட்சியில் வானம்பாடி  என்று இவரது நிகழ்ச்சிகள் எனக்கு மிகவும் பிடித்தவை....

இந்நேரம் நீங்கள் யாரென்று கண்டுபிடித்திருப்பீர்கள்... ஆம் அவர்தான் தமிழ்நாடு எழுத்தாளர்கள் சங்கத்தின் செயலாளர், கவிஞர், பாடலாசிரியர், சொற்பொழிவாளர், வசனகர்த்தா, நடிகர்..... கலைமாமணி டாக்டர் பிறைசூடன்!!!!

வாலி, வைரமுத்து, கங்கை அமரன், புலமைப்பித்தன், முத்துலிங்கம் அளவுக்கு இவரது பெயர் ஏனோ சரியாக பதிவு செய்யப்படவில்லை.. அதே போல சொன்ன மாத்திரத்தில் எழுதக்கூடிய திறமை உடைய கவிஞருக்கு இன்னும் அதிக வாய்ப்புக்கள் கிடைத்திருக்க வேண்டும் என்பதே என் எண்ணம்!!! 

Saturday, November 26, 2016

கண்ணுறங்கிய சின்னக் கண்ணன்!!! (ஒரு இதய அஞ்சலி)

நாட்டை Demonitization பிரச்சினை உலுக்கிக் கொண்டிருக்க எல்லாரும் ATM வாசலில் கால் கடுக்கக் காத்திருப்பது நாடறிந்தததே... ஆனால் எவரும் அறியாமல் இசை உலகின் ஒரு ATM களவு போனது கடந்த செவ்வாய்க்கிழமை... ATM என்றால் Any Time Music!!! ஆம், எம்.எஸ்.வி, இளையராஜா, ரகுமான், வித்யாசாகர் என்று திரை இசையமைப்பாளர்களாக இருந்தாலும் சரி.. அருணா சாய்ராம், ராஜேஷ் வைத்யா, சுதா ரகுநாதன் என்று கர்நாடக இசைக்கலைஞர்களாக இருந்தாலும் சரி எந்த நேரத்தில் இசையில் சந்தேகம் எழும்போதும் இவர்களெல்லாம் தேடுவது இந்த Reference Book ஐத் தான்... சொன்ன மாத்திரத்தில் பட்டென்று பாடிக்காட்டி விளக்கம் சொல்லும் Music Wiki... 27 ஸ்ருதிகளில் பாடிக்காட்டி விளக்கம் சொல்லக் கூடிய ஸ்வர ஞானி... பத்மவிபூஷன், பத்மஸ்ரீ, செவாலியே... இப்படி எத்தனையோ பட்டங்கள் விருதுகளைத் தாங்கி கொண்டும் நான் மேலே சொன்ன இன்னும் சொல்லப்படாத அத்தனை இசைக்கலைஞர்களாலும் "குருஜி" என்று அன்பொழுக அழைக்கப்பட்ட Dr. மங்கலம்பள்ளி பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் தாம் அந்த ATM....
மழலை மேதை (child prodigy), ஆறாவது வயதிலேயே கச்சேரி பண்ண ஆரம்பித்து விட்டார் என்றெல்லாம் சொல்வார்கள்... என்னைக் கேட்டால் இவருக்கு இசை என்பது வேறெங்கோ கற்றுக்கொள்ள வேண்டியதாக இல்லை.. அதுவே அவராக அவரே அதுவாக பிறந்தும் இருந்தும் இருக்கிறார்... பெற்றோர்கள் இருவரும் இசைக்கலைஞர்கள்.. அதுவும் இவரது தந்தை பட்டாபிராமைய்யா "சத்குரு தியாகராஜரின் சிஷ்ய பரம்பரையான சூசர்ல தட்சிணாமூர்த்தி சாஸ்திரிகளிடம்" பயின்றவர்... அதனால் தான் பிறக்கும் போதே பெயரிலேயே இசையைத் தாங்கி கொண்டு பிறந்திருக்கிறார் (முரளி என்றால் புல்லாங்குழல்).. 16 வயதுக்குள் 72 மேளகர்த்தா ராகங்களில் சாகித்யங்களையும் இயற்ற முடிந்திருக்கிறது...

சாஸ்திரிய சங்கீதத்துக்கும் எனக்குமான தொடர்பு "வீசம் என்ன விலை? " என்கிற அளவு தான் என்பதால் அதிகப்பிரசங்கித் தனமாக எதுவும் பேசாமல் அவருக்கான எனது இதய அஞ்சலியை இந்தப் பதிவில் திரை இசையில் அவரது பங்களிப்பை பற்றி மட்டுமே பேச விழைகிறேன்...

பாலமுரளி என்றதும் எனக்கு மட்டுமல்ல இசை விரும்பிகள் பலருக்கும் நினைவுக்கு வருவது இரண்டு விஷயங்கள்... ஒன்று அவரது மென்மையான மனதைப் பிடித்து இழுக்கும் வசீகரக் குரல் மற்றொன்று இசையில் அவர் செய்த Experiments... எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, பத்து வருஷங்களுக்கு முன்பு அவருக்கு செவாலியே விருது கிடைத்ததற்கான பாராட்டு விழாவில் வழக்கமான அவரது கீர்த்தனைகளும் தில்லானாக்களும் பாடிவிட்டு ஹைதராபாதில் இருந்து சென்னை வரும்போது ஸ்டேஷன்களின்  பெயர்களை பார்த்து எண்ணிக்கொண்டு வந்ததாகவும் அதை வைத்து ஒரு பாடல் படுவதாகவும் சொல்லிப் பாடினார்... ஹைதராபாத்தில் தொடங்கி சார்மினார் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மாதிரி வேகமெடுத்து "நெல்லூர், கூடூர், நாயுடுபேட்டா, சூலூர்பேட்டா, பேசின் பிரிட்ஜ், சென்ட்ரல்... என்று கடகடவென்று முடியும் பாடல்.. முன்வரிசையில் அமர்ந்திருந்த ஜெயலலிதா ரசித்து கேட்டார்.. அடுத்ததாக இந்தப் பாடல் முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்று சொல்லிவிட்டு "ஜெய ஜெய லலிதே... ஜெயலலிதே" என்று அவரது பெயரில் தான் இயற்றிய கிருதி ஒன்றைப் பாடி அசத்தினார்... விழாவில் பேசிய ஜெயலலிதா "அடுத்த பிறவியில் தான் குருஜியின் மாணவியாகப் பிறந்து அவரிடம் சபாஷ் வாங்க வேண்டும்" என்று விரும்புவதாக நெகிழ்ந்து போய் பேசினார்...

இதை எதற்கு இப்போது சொல்கிறேன் என்றால் இவரது திரைப்பாடல்கள் பெரும்பாலும் "கர்நாடக சங்கீதத்தின் மேதைமை உள்ள கதாபாத்திரங்கள் அல்லது இது போன்ற Musical Experiments வகைப் பாடல்களே"!!

தெலுங்கு, சம்ஸ்கிருதம், கன்னடத்தில் பாடி இருந்தாலும் தமிழில் முதன்முதலில் இவர் பாடியது 1964ல் வெளிவந்த இயக்குனர் ஸ்ரீதரின் "கலைக்கோயில்" படத்தில் தான்.. குடியால் குடை சாய்ந்த ஒரு வீணை இசைக்கலைஞன் மீண்டு வந்து கலைக்கோயில் எழுப்புவதாய் அமைந்த "சிந்து பைரவி" சாயல் கதை .. அதில் அந்த இசைக்கலைஞன் பாடுவதாக அமைந்த சூழலில் ஒரு பண்பட்ட பாடகரைப் பாடவைக்க வேண்டும் என்று எல்லோரும் விரும்பினார்கள்.... படத்தின் தயாரிப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி... வேறன்ன வேண்டும்...தனது குருஜிக்கு போன் செயது நீங்க தான் பாடணும் என்று சொல்லிப் பாடவைத்தார்... அந்தப் பாட்டு "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா" என்னும் கோபாலகிருஷ்ண பாரதியின் புகழ்பெற்ற பாடல் அமைந்த "ஆபோகி" ராகத்தில் அமைந்த "தங்கரதம் வந்தது வீதியிலே" என்னும் பாடல்...

அதற்கு அடுத்த ஆண்டு தான் (1965) தமிழ் சினிமாவில் பாலமுரளியின் குரலை பட்டொளிவீசிப் பறக்கவிட்ட திருவிளையாடல் வெளிவந்தது... தோற்கும் பாடல்களை பாடமாட்டேன் என்று சீர்காழி சொல்லிவிட்டதால் கே.வி.எம்.மாமா இவரைப் பாடவைத்திருக்கிறார்... ஆனால் "ஒருநாள் போதுமா?? இன்றொரு நாள் போதுமா" என்று இவரது அமர்க்களமான எடுப்பே ஹேமநாத பாகவதராக வந்த டி.எஸ்.பாலைய்யாவுக்கு கனகச்சிதமாக பொருந்திப் போனது .. குரலில் என்ன ஒரு கெத்து... முதல் சரணம் வரை வரும் வரிகளை இசையமைத்து விட்டு இரண்டாவது சரணத்தில் வரும் ராகமாலிகையை இவரிடமே விட்டிருக்கிறார்கள்... தோடி,தர்பார், மோஹனம் ,கானடா என்று வரிசையாக அடுக்கி "இசை தெய்வம் நானடா" என்று முடிப்பது சாட்சாத் பாலமுரளியின் சொந்த இசையே.....

1970ல் கண்மலர் என்றொரு படத்தில் "ஓதுவார் உன்பெயர் ஓதுவார்... ஓம் ஓம் ஓம் எனும் மந்திரத்தின் உட்பொருள் நாடுவார்" என்று ஒரு பாடல் சூலமங்கலத்தோடு இணைந்து பாடி இருப்பார்... "தோடுடைய செவியன்" என்னும் "ஞானசம்பந்தர் பதிகத்தோடு" தொடங்கும் பாடலாதலால் ஞானத்தோடு நெருங்கிய சம்பந்தம் உள்ள இவரைப் பாடவைத்திருக்கிறார் கே.வி.எம்... சித்தூர் வி. நாகையாவுக்கு அத்தனை அழகாக பொருந்துகிறது இவர் மென்மையான சாரீரம்... பாடலின் சரணத்தில்

"கங்கை கொண்டான் என்மேல் கருணை கொண்டான் - பிறைத்
திங்கள் கொண்டான் நெஞ்சைத் திருடிக் கொண்டான் - பாதி
மங்கை கொண்டான் எந்தன் மனதைக் கொண்டான் - இவை
யாவையும் கொண்டான் எந்தன் மாலையும் கொண்டான் "

என்று வரும் வரிகளைக் கேட்டுவிட்டு "இது எதோ தேவாரம் திருவாசகம்னு நெனச்சேன்.. வாலி நீ எழுதுனதாமே?? " என்று கண்ணதாசன் வியந்து பாராட்டியிருக்கிறார்...


1975ல் பாலச்சந்தர் "அபூர்வ ராகங்கள்" படம் எடுக்கும் போது எம்.எஸ்.வியிடம் "படத்துக்கு அபூர்வ ராகங்கள்ன்னு பெரு வச்சிருக்கேன்... அதனால இதுவரை சினிமாவில் வராத அபூர்வமான ஒரு ராகத்தில் நீங்க ஒரு பாட்டு போடணும்" என்று கோரிக்கை வைக்க, எம்.எஸ்.வி அணுகியது பாலமுரளி அவர்களைத் தான்... "மஹதி" என்று தானே கண்டுபிடித்த ஓரு ராகத்தை (ச - க - ப - நி என்று வெறும் நான்கு ஸ்வரங்கள் மட்டுமே கொண்டது) சொல்லித்தந்து உதவி இருக்கிறார்.. அதில் அமைந்த பாடல் தான் "அதிசய ராகம்... ஆனந்த ராகம்"...

(அவரை நான் குருஜின்னு சொல்லுவேன்.. அவரு ஒத்துக்கமாட்டாரு என்ன குருஜிம்பாரு.. எங்க ரெண்டு பேருக்கும் "குரு சாட்சாத் பரப்பிரம்மா" தான் என்கிறார் எம்.எஸ்.வி).. இதுபோல மூன்று அல்லது நான்கு ஸ்வரங்களை மட்டுமே உடைய பல ராகங்களை கண்டறிந்திருக்கிறார் இவர்... "மஹதி"யைப் போலவே "லவாங்கி", "சித்தி", "சுமுகம்" இவற்றுக்கும் நான்கு ஸ்வரங்கள் தான்... "கணபதி, ஓம்காரி, சர்வஸ்ரீ"  இவற்றிற்கு வெறும் மூன்றே ஸ்வரங்கள் தாம்...

1977ல் இளையராஜா என்கிற புதிய இசையமைப்பாளரின் இசையில் "கவிக்குயில்" படத்தில் இரண்டு பாடல்கள் பாடினார் பாலமுரளி... படத்தின் ஆரம்பமே ஊர் ஊராக சென்று புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ண பக்தர் சிவகுமார் பாடும் "ஆயிரம் கோடி காலங்களாக ஆனந்த லீலையில் நாயகன் நீயே" என்னும் ராகமாலிகை தான் (மாயா மாளவகௌளை, வகுளாபரணம், வாகதீஸ்வரி, வலஜி, சக்ரவாகம், மோஹனம், மோஹன கல்யாணி, சாருகேசி என்று எட்டு ராகங்களில் அமைந்த அஷ்டராகமாலிகா).. படத்தின் மற்ற பாடல்கள் அளவுக்கு இந்த பாடல் ஏனோ பிரபலமாகவில்லை...

அடுத்தது கதாநாயகியின் மனதில் ஒரு தெரியாத ராகம் இருக்கும்.. அதை என்னவென்று கண்டுபிடித்து இசைப்பதாக சவால் விட்டுவிட்டு முதலில் "பஹாடி" ராகத்தை வாசிப்பார்... அது இல்லை என்றதும் அடுத்த ரகசிய ராகம் வாசிப்பார்.. அபூர்வ ராகங்கள் போலவே அதுவரை திரை இசையில் பயன்படுத்தப் படாத "பரிபாலயமாம்" என்னும் ஸ்வாதி திருநாள் கீர்த்தனை அமைந்த "ரீதி கௌளை" ராகத்தில் அமைந்த அந்தப் பாடல் தான் "சின்னக் கண்ணன் அழைக்கிறான்" (பால முரளிகிருஷ்ணா என்றால் சின்னக் கண்ணன் என்று பொருள்)..  "அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி சின்னக் கண்ணன் அழைக்கிறான்" என்று பஞ்சு அருணாசலம் எழுதியதன் பொருள் இதுதான்...அவரது பெயரில் இருக்கும் குழல் போல இனிமையாய் நம் இதயத்தை வருடுகிறது அவரது குரலின் மென்மை... 34 வருடங்களுக்கு பிறகு இளையராஜாவின் மேடையில் இதே பாடலைப் பாடிய போதும் அவரது குரலின் வாத்சல்யம் கொஞ்சமும் குறையவில்லை....

அதே 1977ல் இன்னும் 2 அருமையான பாடல்கள் அவருக்கு அமைந்தன... முதலாவது அவரே திரையில் தோன்றி பாடும் "ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே"... சங்கர் கணேஷ் இசையில் இவரது சிஷ்யர் கமலின் "உயர்ந்தவர்கள்" படத்தில்... அடுத்தது குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு இவர் பாடியது...

ஏற்கனவே நான் "குன்னக்குடி' அவர்கள் பதிவில் சொன்னது தான் என்றாலும் திரு. பாலமுரளி அவர்களுக்கான அஞ்சலிப் பதிவான இதில் சொல்லாது விட்டால் முறையாகாது என்பதால் மீண்டும் சொல்கிறேன்... இதுவும் நான் சொன்னது போல "Musical Experimental" type பாடல் தான்... மேற்கத்திய இசைக்கு அடிப்படை கர்நாடக சங்கீதமே என்று நிரூபிக்கும் வகையில் ஒரு பாடல் வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கேட்டதும் குன்னக்குடியின் நினைவுக்கு வந்தவர் பாலமுரளி சார் தான்... முதலில் "Sound of Music" படத்தில் வரும் "Loanely Goathered" பாடலை தியாகய்யரின் "பலுக்கு கண்ட சா" என்கிற நவரச கானடா ராக கீர்தனைக்கு  ஒப்பிட்டு விளக்குவார்.. அடுத்து "Golden Youths Always Rules" என்னும் "My Fair lady" படப்பாடலை "ஏதாவுனரா" என்னும் கல்யாணி ராக தியாகராஜ கீர்த்தனைக்கு ஒப்பிட்டு பாடிக்காட்டி பின்னர் அதையே ஹிந்துஸ்தானி "அமீர் கல்யாணி"யில் "ஜோ தும் தோடோ பியா" என்னும் மீரா பஜன் பாடலுக்கு ஒப்பிட்டு மீண்டும் ஸ்வரங்களில் இந்த மூன்றையும் இணைத்து பாடிக்காட்டுவார்..

இதே படத்தில் மீண்டும் ஒரு பரீட்சர்த்த முயற்சி "குருவிக்காரன் பொஞ்சாதி.." என்றொரு ஜிப்ஸி பாடல்.. எந்தவிதமான ஈகோவும் இல்லாமல் பாடி இருப்பார்.... பாலமுரளி அவர்களின் எளிமைக்கு இது ஒரு மிகச்சிறந்த உதாரணம்.. இதனால் தான் "சஹானா" மாதிரி டி.வி.சீரியல் பாடல் என்றாலும் அலட்டிக் கொள்ளாமல் பாட முடிகிறது இவரால்....

மீண்டும் கே.பி - எம்.எஸ்.வி - பாலமுரளி கிருஷ்ணா கூட்டணி கே.பி இருமொழிகளில் எடுத்த "நூல்வேலி" படத்தில் அமைந்தது... "மானஸ சஞ்சரரே" என்னும் சதாசிவ பிரம்மேந்திரரின் புகழ்பெற்ற கீர்த்தனம் அமைந்த 'சாமா" ராகத்தில் "மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே" என்றொரு மென்மையான பாடல்... இன்றும் வானொலிகளில் அரிதாகக் கேட்கக் கூடிய ஒரு அபூர்வமான பாடல்.. தெலுங்கிலும் "மௌனமே நீ பாஷா ஓ மூக மனசா" என்று பாலமுரளி கிருஷ்ணா அவர்களே பாடி இருப்பார்..

சின்னக் கண்ணனுக்கு பிறகு இளையராஜா 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் பாலமுரளி கிருஷ்ணாவை தனது படங்களில் பயன்படுத்தினார்... 1986ல்  "இசை பாடும் தென்றல் என்றொரு படம்... சின்னக் கண்ணன் கூட்டணியாக அதே "தேவராஜ் - மோகன், சிவகுமார், இளையராஜா, பாலமுரளி கிருஷ்ணா".. இந்த முறை கூடுதலாக கே.ஜே.யேசுதாஸ் மற்றும் எஸ்.ஜானகியும்.... "ரகுவரா நன்னு மறவ தகுனா" என்னும் பந்துவராளி ராகத்தில் அமைந்த தியாகராஜ கீர்த்தனை... மூன்று பேரும் இணைந்து இசைப்பதாக ஒரு சிச்சுவேஷன்... சரணத்தில் தனது ஜெட் வேக ஸ்வரங்களில் அசத்தி இருப்பார் பாலமுரளி சார்...

தமிழில் மெல்லிசை மன்னரோடு இணைந்து "மெல்லத் திறந்தது கதவு" இசைத்த அதே ஆண்டு மலையாளத்தில் "தெட்சிணாமூர்த்தி ஸ்வாமிகளோடு இணைந்து "காவேரி" என்றொரு படம் இசை அமைத்தார் இளையராஜா.. மோகன்லால், மம்மூட்டி, நெடுமுடி வேணு என்று பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்த இந்தப் படத்தில் 4 பாடல்கள் பாடினார் பாலமுரளி...

திருவிளையாடலில் ஆணவக்கார பாடகனுக்கு பாடியதாலோ அல்லது தோல்வி அடையும் கதாபாத்திரமாக இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் எனக்கு எந்தக் கவலையும் இல்லை, எனக்கு சங்கீதம் சங்கீதம் தான் என்கிற மனோபாவமோ எது காரணம் என்று புரியவில்லை.... நடிகர் திலகம் சிவாஜியின் "மிருதங்க சக்கரவர்த்தி" படத்தில் "இது கேட்க திகட்டாத கானம்.. இதில் தேவை என்ன பக்கமேளம்" என்று எம்.என்.நம்பியாருக்கு பாலமுரளியை பாடவைத்திருப்பார்கள்... உடனே மிருதங்க வித்வான் சிவாஜி மிருதங்கத்தை ஓரமாக வைக்க,  மக்களின் கூக்குரலுக்கு சரணாகதி அடைந்து "தேவை என்ன தர்க்கவாதம்" என்று மாற்றிப் பாடி "சிவாஜியிடம் தோற்றுப் போவது" போல ஒரு சூழல்... உண்மையிலேயே "கேட்கத் திகட்டாத கானம் தான்" ஆனால் "பார்க்க சகிக்காத நடிப்பு"... பாடல் காட்சிப்படுத்தும் விதத்தால் குட்டிச்சுவராகப் போன அருமையான பல பாடல்களில் இதுவும் ஒன்று... சிவாஜி - நம்பியார் இருவரின் நடிப்பும் (மிகைநடிப்பும்) இந்தப் பாட்டில் தாங்கமுடியாது.... நல்ல வேளை ஏற்கனவே நாரதர் வேஷத்தில் நடித்திருக்கிறார் என்பதால் இந்த நம்பியார் கெட்டப்பை பாலமுரளியையே போடவைக்காமல் விட்டதற்கே நாம் சினிமா உலகுக்கு பெரிய நன்றி சொல்ல வேண்டும்...

பாலமுரளி கிருஷ்ணாவின் குரல் வெல்லும் பாடலுக்கு ஒரு நல்ல உதாரணம் உண்டு... அதுவும் அவரது ஸ்டைலிலேயே....
கன்னடத்தில் பிரபல நாவலாசிரியர் 'த.ரா.சு (டி.ஆர்.சுப்பாராவ்) எழுதி திரைப்படமாக வெளிவந்து தேசிய விருதை அள்ளிய "ஹம்சகீதே" படத்தில் பாடல்களுக்கு இசை அமைத்தார் பாலமுரளி கிருஷ்ணா.. இதில்  "ஹிமாத்ரி சுதே பாஹிமாம்" என்னும் சியாமா சாஸ்திரிகளின் கீர்த்தனத்தை 'திருமல்லையா" என்னும் இசைக்கலைஞன் பாடுவார் (குரல் மதுரை டி.என்.சேஷகோபாலன்) அவருக்கு தம்புரா வாசிக்கும் கதாநாயகன் (அனந்த் நாக்) அதே கீர்த்தனத்தை 'திஸ்ர" நடையில் மாற்றி பாடவிரும்புதாய்க் கூற "இயலாது இதை இப்படித்தான் சாகித்யகர்த்தர் செய்திருக்கிறார்" என்று வாதிடுவார்... அதை கதாநாயகன் பாடிக்காட்டி வெல்வதாய் அமைந்த பாடல் பாலமுரளிக்கு "சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை பெற்றுத் தந்தது"...

தேசிய விருது பெற்றுத் தந்த "அனந்த் நாக் - பாலமுரளி கிருஷ்ணா கூட்டணி' மீண்டும் இணைந்தது.. இம்முறை மலையாள படத்திற்காக... மலையாளத்தில் ஏராளமான சாகித்யங்களை அருளித்தந்த "ஸ்வாதித் திருநாள்" பெயரில் அமைந்த படம்... ஸ்வாதித் திருநாள் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் "கே.ஜே.யேசுதாஸ்"..  இதில் 'பன்னகேந்திர சயனா" என்றொரு ஸ்வாதித் திருநாள் மகாராஜாவின் கீர்த்தனத்தை "யேசுதாஸ் - நெய்யாட்டின்கரா வாசுதேவன் இவர்களோடு இணைந்து பாடி இருப்பார் பாலமுரளி கிருஷ்ணா... 'சங்கராபரணம், காம்போதி, நீலாம்பரி, பைரவி, தோடி, சுருட்டி, நாதநாமக்கிரியா, பூபாளம் என்னும் ராகங்களில் அமைந்த அஷ்டராகமாலிகா... இதில் சங்கராபரணத்தில் தொடங்கும் பல்லவியையும் பைரவி, பூபாளம் ஆகிய சரணங்களையும் மட்டும் படத்தில் வைத்திருப்பார்கள்... பாலமுரளி ஆலாபனை செய்து ராகத்தை எடுத்துக் கொடுக்க... யேசுதாஸ் அந்த ராகத்தில் அமைந்த சாகித்யத்தை பாட.. நெய்யாட்டின்கரா அதில் அமைந்த ஸ்வரத்தை பாடி அழகாய் நிறைவு செய்வதாய் அமைந்த மனோகரமான பாடல்...ரிசல்ட் "சிறந்த பாடகருக்கான கேரளா அரசின் விருது!!!

நெடுநாட்களுக்கு பிறகு "அன்பாலே அழகாகும் வீடு" என்று ஜேம்ஸ் வசந்தன் இசையில் "பசங்க" படத்தில் ஒலித்தது அவர் குரல்.... ஒரு நாள் போதுமா, சின்னக் கண்ணன் என்று வெற்றி பாடல்களைத் தந்தாலும் தமிழ் சினிமாவில் அத்திப் பூத்தாற்போல ஒரு 20 பாடல்கள் தான் பாடி இருப்பார்..

இசை ஆராய்ச்சியாளர், ராகங்களை கண்டறிந்து அவற்றில் கீர்த்தனங்களை யாத்து, அவற்றிற்கு பண்ணமைத்து பாடவும் செய்யும் வாக்கேயக்காரர்,  திரைப்பட இசையமைப்பாளர், வயலின், மிருதங்கம், புல்லாங்குழல் வாசிக்கும் இசைக்கலைஞர், 25000 மேடைகளுக்கு மேல் கண்டு 80 ஆண்டு காலம் தனது குரலால் இந்தியாவை கட்டிப் போட்ட ஒரு தேசியக் கலைஞர்... சொல்லிக் கொண்டே போகலாம்...

எப்படி முடிப்பது என்று யோசித்த போது "வெல்லப் பிள்ளையாருக்கு அதையே உடைத்து படைப்பதை போல" அவரது வரிகளில் இருந்தே நிறைவு செய்ய விரும்புகிறேன்... "கர்நாடக இசையில் "அனுமந்தர ஸ்தாயி", "மந்தர ஸ்தாயி", "மத்யம ஸ்தாயி", "தார ஸ்தாயி", "அதிதார ஸ்தாயி"' என்று உண்டு... இவற்றையெல்லாம் கடந்து இன்று தெய்வ ஸ்தாயியை அடைந்திருக்கிறார் இந்த "காலத்தின் கலைஞர்"... எனது வரிகளில் சொல்வதென்றால் தனது இசையால் நம் அனைவரையும் ஆட்கொண்டு நிறைவாக இப்போது 'மங்களம்' பாடி "பள்ளிகொண்டிருக்கிறார் (நீங்காத் துயில்)" அந்த மங்கலம்பள்ளி சின்னக் கண்ணன்!!!!


-------------------------------------------------------------------------------------------------------------------

வியப்பின் விளிம்பில் : பொதுவாக கர்நாடக இசை மேடைகளில் "நாட்டை" ராகத்தில் தொடங்குவதும் நிறைவு செய்யும் போது "மங்களம்" பாடி நிறைவு செய்வதும் சம்பிரதாயம்... இந்தப் பதிவை எழுதி முடித்து பிழை திருத்தும் போது தான் கவனித்தேன் என்னை அறியாமலே "நாட்டை" என்று தொடங்கி "மங்களம் பாடி" என்று முடித்திருப்பதை... இது தான் தெய்வச்செயல் என்பது... தெய்வமான பாலமுரளி சாரின் செயல் என்றும் சொல்லலாம்!!!!

Saturday, November 19, 2016

நதியோடும் கரையோரம்!!

"வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம் 
நாள் ஒன்றிலும் ஆனந்தம் 
நீ கண்டதோ துன்பம் 
இனி வாழ்வெல்லாம் இன்பம் 
சுக ராகமே ஆரம்பம்!! "

"உறவுகள் தொடர்கதை' பாடலின் சரணத்தில் வரும் இந்த வரிகளை கடந்த வாரம் ஒரு நண்பருக்கு முகநூல் செய்தி அனுப்பும் போதே நெனச்சேன்... அடடா தாடிக்காரரைப் பத்தி நம்ம Blog ல எழுதாம விட்டுட்டோமே அப்படின்னு... அடுத்து இன்னிக்கு "தேவனின் கோயில் மூடிய நேரம் நான் என்ன கேட்பேன்" பாட்டு கேட்கிற ஒரு சந்தர்ப்பம் வந்ததும் முடிவே பண்ணி களத்துல இறங்கிட்டேன்... ஏற்கனவே 7 - 8 வருஷங்களுக்கு முன்பு வேறொரு இடத்தில் இவரைப் பத்தி எழுதி இருந்தாலும் என்னோட சொந்த தளத்தில் எழுதும் போது மகிழ்ச்சி தான்.. முத்தம் என்பது சுவையானது என்றால் எத்தனை முறை தந்தாலும் சுவையானது தானே!!!

இந்த தாடிக்காரரை எப்படி அடையாள படுத்துவதுன்னு தெரியல... இப்போதைக்கு "அஷ்டாவதானி " ன்னு வச்சுக்குவோம்...
183 படங்களுக்கு இசையமைப்பாளர், கிட்டத்தட்ட ரெண்டாயிரம் பாடல்கள் எழுதிய பாடலாசிரியர், 100 நாள் கண்ட படங்கள், வெள்ளி விழா படங்கள் உட்பட 22 படங்களுக்கு இயக்குனர், கதை - வசனகர்த்தா, தயாரிப்பாளர், "பாமா ருக்மணி", "புதிய வார்ப்புகள்" போன்ற படங்களில் கே.பாக்யராஜுக்கு பின்னணிக் குரல் கொடுத்த டப்பிங் கலைஞர், தேவைப்படும் போது நடிகரும் கூட, ஜி.கே.வெங்கடேஷ், தெட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள், அர்ஜுனன் மாஸ்டர் உள்ளிட்ட பலரிடம் ரிதம் கிடாரிஸ்ட், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் இப்படி சொல்லிகிட்டே போகலாம்... மூணாங்கிளாஸ் வரைக்கும் படிச்ச இந்த மனிதர் பேனா பிடிக்கும் போது வந்து கொட்டுகிற தமிழ் அலாதியானது... "என்னது மூணாங்களாசாவா????".... ஓஓஓஓ அஷ்டாவதானின்னு சொன்னதும் நீங்க கருப்பு தாடிக்காரரை நெனைச்சுட்டீங்களா... இவரு வெள்ள தாடிக்காரருப்பா......

பேரு "R. டேனியல் அமர்சிங்"....

கவிஞர் வைரமுத்து வார்த்தைகளில் சொல்வதென்றால் "எப்போதும் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும் உற்சாக கங்கை அமரன்".....

அவர் மட்டுமல்ல.. அவரைப் பற்றி பேசுறதுன்னா எனக்கும் உற்சாகம் தொத்திக்கும்... பயறுமூட்டையை பொத்துவிட்ட மாதிரி கடகடன்னு கொட்டப்போறேன்.... பொறுத்துக்கோங்க...பாவலர் பிரதர்ஸில் இளையராஜாவுக்கு அடுத்து அதிகம் அறியப்பெற்ற முகம்... இவரு வெவ்வேறு துறைகளில் செஞ்ச விஷயங்களைப் பற்றி பேசணும்னா ஒரு ரெண்டு மூணு பதிவாவது நான் எழுதணும்.. அதனால "பாடலாசிரியர் கங்கை அமரன்" பத்தி மட்டும் இப்போ பாக்கலாம்...

 "எங்கள் அண்ணன் பாவலர் வரதராஜன் தான் எங்கள் இசைக்கு ஆதாரம்" என்பது பல மேடைகளில் இளையராஜாவே சொன்னது தான் என்றாலும் சினிமாவில் நாம் கேட்கும் இளையராஜாவின் இசை என்பது பாவலரின் பாணி அல்ல.. அது டி.வி.ஜி யிடம் பயின்ற கர்நாடக இசை, Trinity College of Music ல் படித்த Western Guitar, தன்ராஜ் மாஸ்டரிடம் பயின்ற Western Classical மற்றும் Arrangement, ஜி.கே.வெங்கடேஷிடம் கற்ற இசை நுணுக்கங்கள் இப்படி பலவற்றின் கலவையே... அதில் கிராமிய பாணி என்கிற ஒரு துளி மட்டுமே பாவலரின் இன்ஸபிரேஷன்...  ஆனால் பாவலரின் எழுத்து பாணியை முழுக்க முழுக்க அப்படியே சுவீகரித்த அவரது நிஜ வாரிசு கங்கை அமரன்... புரியும் படியே சொல்றேன்...

கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்தவர் பாவலர் வரதராஜன்.
ஏற்கனவே இருந்த சினிமா மெட்டுக்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துக்களை எளிய வார்த்தைகளில் ஜனரஞ்சகமாக மக்களிடம் சேர்ப்பது தான் பாவலர் ஸ்டைல்.. இதற்கு உதாரணமாக பல பாடல்களைச் சொல்லலாம்... உணவுப் பஞ்சம் வந்த போது காங்கிரஸ் கட்சியை எதிர்த்து "விஸ்வநாதன் வேல வேணும் " என்கிற காதலிக்க நேரமில்லை படத்தின் பாடலின் மெட்டில் "சி.சுப்ரமண்யம் சோறு வேணும்" என்று பாடுவார்...  சரணத்தில்

"கங்கையும் காவிரி பாய்ந்து செழிக்கும் என் இந்திய நாட்டினிலே 
திங்கிற சோத்துக்கு டிங்கி அடிக்குது எங்களின் வாழ்க்கையிலே" என்று போகும்

குடும்பக் கட்டுப்பாட்டை எதிர்த்து "ரூப் தேரா மஸ்தானா மெட்டில் "

"லூப்பு தர்றான் சர்தானா
மாட்டலன்னா விடுறானா?? " என்று கிண்டல் செய்வார்

பாலிருக்கும் பழமிருக்கும் பாடல் மெட்டில் :

"ஏர்பிடிக்கும் உழவனுக்கு நிலமிருக்காது
எந்திரமாய் உழைத்திடுவான் பலனிருக்காது
ஆறுவகை உணவிருக்கும் பசியிருக்காது
அடிவயிற்றை பசி கடிக்கும் கூழிருக்காது" என்று பாடுவார்...

கம்யூனிஸ்ட் தலைவர் அஜய் கோஷ் மறைந்த போது "மலர்ந்தும் மலராத பாதி மலர்" மெட்டில்

"உழைத்துக் களைத்தோரின் இயக்கம்தனைக் காத்து
வளர்த்த அஜய்கோஷ் அய்யா
உம்மை நினைத்து துடித்தேங்க நிலத்தில் எம்மைநீயும்
விடுத்து பிரிந்தாய் அய்யா " என்று உருகுவார்

"பூமாலையில் ஓர் மல்லிகை' பாடல் மெட்டில்

"மாவீரமாய் போராடியே வியட்நாம் தானே வென்றது
எங்கும் வீரவாழ்த்து கேட்குது 
உள்ளம் விம்மியே துள்ளுது" என்று பாடுவார்இதையெல்லாம் அருகில் இருந்து கேட்டும் அவரது கச்சேரிகளில் பெண்குரலாகவும் இருந்து பாடியும் வந்த அமருக்கு இயற்கையிலேயே அந்த எழுத்துப் பாணி ஒட்டிக் கொண்டிருக்கிறது.... அதன் விளைவாக அந்தப் பாணியில் விளையாட்டாக வார்த்தைகளை போட்டு எழுத ஆரம்பித்தார் அமரன்...

"குமரிப் பெண்ணின் உள்ளத்திலே" மெட்டில் "

"முருகப் பெருமான் கோயிலிலே
முடியெடுக்க நான் வரவேண்டும்
முடியெடுக்க நான் வருவதென்றால்
காணிக்கை என்ன தரவேண்டும்" என்று ஆரம்பித்த எழுத்து

ஒரு மேடையில்  சிறைப்பட்ட கம்யூனிஸ்ட் தொண்டர்களை விடுதலை செய்யும்படி "எனக்கொரு மகன் பிறப்பான்" பாடல் மெட்டில்

"அவர்களைத் திறந்துவிடு - இல்லை
அவருடன் எமையும் தூக்கிலிடு" ன்னு பாவலர் அண்ணன் பாடிய பாடலில் சரணத்தை அமரன் தன் சொந்த வரிகளில் பாடினார் இப்படி...

"வாடும் தொழிலாளர் வாழ்வை வளமாக்க 
வாழ்வில் பெரும்பாதி அளித்தார்
ஓடும் துயரென்று உறுதி தனைப்பூண்டு 
உறக்கமதைக் கூட ஒளித்தார்"

அது தான் அவரது எழுத்துக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்... இது நடந்த போது 13 - 14 வயதுப் பையனாக இருந்திருக்கிறார்...

அந்த நேரம் மலேரியா இன்ஸ்பெக்டர் சின்னச்சாமி (பாரதிராஜா) இவர்களோடு சேர்ந்து நாடகம் போட ஆரம்பித்தபோது, நாடகத்தில் கதாநாயகனாக நடித்த பாரதிராஜாவுக்கு முதன்முதலில் இளையராஜா இசையில் ஒரு பாடல் எழுதினார்

"வெண்ணிலவின் காவலிலே கங்கை நதி ஓடும்
கங்கை நதி ஓரத்திலே கண்ணன் மனம் பாடும்"

அதைத் தொடர்ந்து அந்த காலகட்டத்தில் நிறைய எழுதி இருக்கிறார்

"வைகறையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் நினைவில்" (பின்னாளில் பயணங்கள் முடிவதில்லையில் வந்த பாடல்)

"அந்தப்புரத்தில் ஒரு மகாராணி - அவள்
அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்" (இதன் பல்லவியை மட்டும் வைத்துக் கொண்டு சரணங்களை திரைக்கு எழுதினார் புலமைப்பித்தன்)

இதெல்லாம் 13 லிருந்து 15 வயதுக்குள் இவர் எழுதிய பாடல்களில் சில...

சென்னைக்கு வந்து "பாவலர் பிரதர்ஸ்" என்ற பெயரில் சினிமா வாய்ப்பு தேடி அலைந்த சமயங்களில் நாடகங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்கள்... ஓ.ஏ.கே.தேவரின் ஒரு நாடகத்திற்கு இவர் எழுதிய பாட்டு

"மூன்று தமிழ்க் காவியமும் முருகனுக்கு தொட்டிலடி
முத்தமிழின் சங்கமமே முருகனுக்கு கட்டிலடி
நன்று சொன்ன தலைவனுக்கு நாடெல்லாம் கோயிலடி
நாளுமந்த கோயிலிலே நல்லநாள் கோலமடி"

நாடகத்தில் இளையராஜாவின் இசையில் இந்தப் பாடலை பாடியவர்கள் ஷோபா சந்திரசேகரும் (நடிகர் விஜயின் அம்மா) அவரது சகோதரி ஷீலாவும்... பின்னாளில் இந்த மெட்டு "பத்ரகாளி படத்தில் "கண்ணன் ஒரு கைக்குழந்தை" என்று வாலியின் வரிகளில் உருவெடுத்தது...

1975ல் இளையராஜா "பாப் ஹிட்ஸ் ஆப் 1975 - பாவலர் பிரதர்ஸ்" என்று ஒரு ஆல்பம் தயாரித்திருக்கிறார்.. இணையத்தில் பாடல்கள் எங்கும் கிடைக்கவில்லை.. இசை ஆராய்ச்சியாளர் வாமனனின் நூலில் இதற்கான குறிப்பு மட்டும் கிடைக்கிறது.. அதில் அனைத்து பாடல்களும் எழுதியது கங்கை அமரன் தான்...  அன்னக்கிளிக்கு முன்பாக "தீபம்" என்று ஒரு படம் பூஜை போடப்பட்டு "பாவலர் பிரதர்ஸ்" இசையில் முதல் பாடல் பதிவானது.. டி.எம்.எஸ். குரலில்

"சித்தங்கள் தெளிவடைய சிவனருளை நாடு" என்று பாடல் எழுதியவர் கங்கை அமரன்... படம் வெளிவரவில்லை...

1976ல் வெளிவந்த  அன்னக்கிளி ஹிட் அடிக்க... பின்னாலேயே  "16 வயதினிலே" படத்துடன் பாரதிராஜா அறிமுகம் ஆகிறார்... தனக்கு முதன்முதலில் பாடல் எழுதிய கங்கை அமரனை "சோளம் வெதைக்கையிலே" என்று தனது முதல் படத்தின் டைட்டில் பாடலை எழுத வைக்கிறார்... அந்தப் படத்தில் மற்றொரு பாடல்... கண்ணதாசன் எழுதுவதற்கு மெட்டமைக்கப் பட்டு கங்கை அமரன் டம்மி வரிகளை எழுதினார்...

"மன்னன் வருவான்... மாலையிடுவான்
இந்த மனதில்... இன்பம் தருவான்" என்று..

ஆனால் அந்த மெட்டு தேர்வாகவில்லை... (பின்னாளில் இந்த மெட்டு "பொண்ணு ஊருக்கு புதுசு படத்தில் "சோலைக்குயிலே காலைக்கதிரே" என்று M.G.வல்லபன் வரிகளில் உருவானது.. அதிலும் டெல்லியிலிருந்து வல்லபன் டெலிபோனில் சொல்லச்சொல்ல எழுதியவர் அமரன் தான்)

வேறு மெட்டு போடப்பட்டது... தான் முன்பே எழுதி இருந்த வரிகளை அப்படி இப்படி தூக்கி போட்டு அமர் மாற்றிக் கொடுத்தார்...

"என் மன்னன் எங்கே... என் மன்னன் எங்கே 

மாலைவரும் அந்த நாளை உரைத்திடுங்கள்
சாலைவழி எங்கும் பூவை இறைத்திடுங்கள்" என்று

"அமர் எழுதுனதே ரொம்ப நல்லாருக்கு.. இதையே வச்சுக்கலாம்" என்று பாரதிராஜா போட்ட பிள்ளையார் சுழியில் உருவான பாடல் தான் "எஸ்.ஜானகிக்கு தேசிய விருது பெற்றுத் தந்த "செந்தூர பூவே"..

தனது அடுத்த படம் கிழக்கே போகும் ரயிலிலும் அமரனை பாடல் எழுத வைத்தார் பாரதிராஜா...  "பூவரசம்பூ பூத்தாச்சு" என்று எழுதினார் கங்கை அமரன்..

அந்த சமயத்தில் "தியாகம்" படத்திற்கு பாடல் எழுத வந்த  கண்ணதாசனிடம் "ஒரு பூ பாட்டு எழுதுங்கண்ணே" என்று கேட்க... 'இந்த இவன் தான் ஊர்ல ஒரு பூ விடாம எழுதி வச்சிருப்பானே... சாயபு, செருப்பு ரெண்டு பூவத்தவிர மிச்ச எல்லாத்துலயும் எழுதிட்டான்" என்று இவரை கண்ணதாசன் கலாய்த்திருக்கிறார்... அன்று அவர் எழுதின பாட்டு "தேன்மல்லிப் பூவே... பூந்தென்றல் காற்றே"

பாரதிராஜா - கங்கை அமரன் இணை ரொம்ப அபூர்வமான பாடல்களை படத்திற்கு படம் தந்திருக்கிறது


 • செந்தூரப்பூவே - 16 வயதினிலே
 • பூவரசம்பூ பூத்தாச்சு - கிழக்கே போகும் ரயில்
 • நம் தன நம் தன  தாளம் வரும் - புதிய வார்ப்புகள்
 • பூங்கதவே தாழ் திறவாய் - நிழல்கள்
 • சிறுபொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம்
 • புத்தம் புது காலை - அலைகள் ஓய்வதில்லை


நிழல்களில் அறிமுகமான வைரமுத்து பிறகு "முதல் மரியாதை, புதுமைப் பெண், கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கொடி பறக்குது" படங்களில் அனைத்துப் பாடல்களையும் எழுதி இருக்கிறார்.. ஒரு நெடிய இடைவேளைக்கு பிறகு பாரதிராஜா மீண்டும் இளையராஜாவுடன் கைகோர்த்த "என் உயிர்த்தோழன், புதுநெல்லு புதுநாத்து" படங்களில் மீண்டும் அமரன் ராஜாங்கம்...

விட்ட இடத்துக்கே வரேன்... பாரதிராஜா மட்டுமல்ல... வைரமுத்து வரும் வரைக்கும் ஏராளமான மற்ற படங்களுக்கும் பாடல்கள் எழுதி இருக்கிறார்..

"ஜானி", "பகல் நிலவு", "பன்னீர் புஷ்பங்கள்", "அறுவடை நாள்" இப்படி படத்திலுள்ள அனைத்து பாடல்களும் எழுதிய படங்களும் நிறைய உண்டு... உதாரணத்துக்கு மிகப்பிரபலமான சில பாடல்கள் மட்டும் :


 • காற்றில் எந்தன் கீதம் - ஜானி
 • பூமாலையே தோள் சேரவா - பகல் நிலவு
 • உறவுகள் தொடர்கதை - அவள் அப்படித்தான்
 • ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் - முள்ளும் மலரும்
 • என் இனிய போன் நிலாவே - மூடு பனி
 • பூவண்ணம் போல மின்னும் - அழியாத கோலங்கள்
 • பொன்மேனி உருகுதே - மூன்றாம் பிறை
 • தேவனின் கோவில் மூடிய நேரம் - அறுவடை நாள்


இப்போது நான் சொன்னது மிகத் தெளிவாக புரிந்திருக்கும்... எளிமையான வார்த்தைகளை கொண்டு சூழலை மெட்டுக்குள் அடைக்கிற பாணியை பாவலரிடம் இருந்து அமரன் எப்படி பெற்றிருக்கிறார் என்று... இளையரஜாவின் இசை பாணி எப்படி வேறுபட்டது என்று மேலே சொல்லிட்டேன்.. அவருடைய எழுத்து நடையும் "ஜீவன், ஆத்மா, தேவர்கள், தியாகராஜர்" இப்படி அது ஒரு தனி ரகமாகவே இருக்கும்... அதுக்கும் பாவலருக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது.. அதுக்கும் சினிமாட்டிக் சிச்சுவேஷனுக்குமே சம்பந்தம் இருக்கான்னு கவனிக்கணும்....

 இன்னும் ஒரு அருமையான உதாரணம் சொல்றேன்... "தலைவனை எண்ணி தலைவி பசலை நோயில் வாடுறா... இரவு நேரம் ... தூக்கம் வரல... பாடுறா இப்படி"

"நள்ளென்றன்றே யாமம்; சொல் அவிந்து
இனிது அடங்கினரே மக்கள்; முனிவு இன்று
நனந்தலை உலகமும் துஞ்சும்;
ஓர்யான் மன்ற துஞ்சா தானே"

இது குறுந்தொகையில பதுமனார் பாடிய செய்யுள்... இதை கண்ணதாசன் எளிமையாக்கி இப்படி பாடினாரு

"பூவுறங்குது பொழுதும் உறங்குது நீயுறங்கவில்லை நிலவே
கானுறங்குது காற்றும் உறங்குது நானுறங்கவில்லை" அப்படின்னு

நம்மாளு அதையும் இன்னும் எளிமையா ஆக்கிபுட்டாரு

"ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு
பாவிமனம் தூங்கலையே அதுவும் ஏனோ தெரியலையே"...

அதாங்க கங்கை அமரன்!!!!

அதுக்காக ரொம்ப சப்பையா மட்டுமே எழுதக்கூடியவர் அப்படினு முடிவுக்கு வந்துடாதீங்க... இளையராஜா இசையில் கடுமையான சந்தங்களைக் கூட அற்புதமான தனது வரிகளால் அழகு படுத்தியவர்... ரெண்டு மூணு உதாரணம் பாக்கலாம் :

"நதியும் முழுமதியும் இரு இதயம்தனில் பதியும்
ரதியும் அதன்பதியும் பெரும் சுகமே உதயம்
விதை ஊன்றிய நெஞ்சம் விளைவானது மஞ்சம்
கதைபேசுது கவிபாடுது கலந்தால் சுகம் மிஞ்சும்"

"சிறுபொன்மணி" அசையும் பாடலின் ரெண்டாவது சரணம்.. என்ன ஒரு கவித்துவம் பாருங்க

"சிந்தனை அம்புகள் எய்தது என்னிடம் வந்து விழ பல சிந்தை எழ
மனம் மன்னவன் உன்னடி வந்து தொழ
சிந்திய பூ மலர் சிந்திவிழ அலைபோல் உணர்வோ தினம் முந்தியெழ
அந்தியில் வந்தது சந்திரனோ சந்திரன் போலொரு இந்திரனோ
முந்திய நாளினில் எந்தனின் முன்பலனோ
துணை சுகம் தர சுவை பெற"

'இந்திரையோ இவள் சுந்தரியோ" என்னும் குற்றாலக்குறவஞ்சிப் பாடலை அடிப்படையாகக் கொண்டு "நம் தன நம் தன " என்று முடியாமல் நீண்டுகொண்டே போகும் பல்லவியை கொண்ட பாட்டின் ரெண்டாவது சரணம் இது...

"வெண்ணிலவும் பொன்னிநதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையில் சுகமன்றி
தந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்
கன்னிமயில் அருகே இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்"

"எனக்கு ஓஹோன்னு பாடத் தெரியாட்டாலும் ஓரளவுக்கு பாடுவேங்க" என்று சொல்லிவிட்டு மூச்சுவிடாமல் எஸ்.பி.பி பாடிய "மண்ணில் இந்த காதல்" பாடலின் சரணம்... பாவலர் வரதராஜன் பாட்டு என்று படத்தில் வரும்.. உண்மையில் எழுதியவர் கங்கை அமரன்"

"பிரிந்தே வாழும் நதிக்கரை போல தனித்தே வாழும் நாயகி
இணைவது எல்லாம் பிரிவதற்காக.. 
இதயங்களெல்லாம் மறப்பதற்காக
மறந்தால்தானே நிம்மதி"

தேவனின் கோவில் பாடலின் முதல் சரணத்தில் வரும் மனதை உருக்கும் வரிகள்

"இளங்காதல் ஆசை நெஞ்சில் ஏக்கம் அது தாக்கும்
இரவென்ன பகலும் என்ன தூக்கம் போகும்
பிரிவேதும் அறியா நெஞ்சில் உருவானது பாரம்
உறவென்னும் உணர்வால் இங்கே உயிரே பாரம்
உறவே வெறும் கனவே வரும் நினைவே பழங்கதையே
கனவே என தெரிந்தும் மனம் நினைக்கும் அதையே"

"ஆவாரம்பூ" படத்தில் வரும் "நதியோடும் கரையோரம்" பாடலின் சரணம்... சோகத்திற்குள்ளும் ஒரு சுகம் இருக்கிறது என்பதற்கு இந்தப் பாட்டு ஒரு உதாரணப்பாடல்.... பலமுறை கேட்டு தூக்கம் தொலைத்துண்டு...

இப்படி நெறய இருக்கு...

ராஜாவின் பொற்காலமாகிய 80களில் கிட்டத்தட்ட படத்துக்கு ஒரு பாட்டு கங்கை அமரன்னு இருந்திருக்கு... நிறைய நல்ல நல்ல பாடல்கள்...
 • நிலவு தூங்கும் நேரம் - குங்குமச்சிமிழ்
 • சீர்கொண்டுவா வெண்மேகமே - நான் பாடும் பாடல்
 • சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு - பூந்தோட்ட காவல்காரன்
 • ஆத்துமேட்டுல ஒரு பாட்டு கேக்குது - கிராமத்து அத்தியாயம்
 • இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே - வைதேகி காத்திருந்தாள்
 • அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் - சின்னத்தம்பி
 • பூவ எடுத்து ஒரு மால - அம்மன் கோயில் கிழக்காலே
 • இந்த மான் எந்தன் சொந்தமான் - கரகாட்டக்காரன்
 • தென்பாண்டி தமிழே என் சிங்காரக் குயிலே - பாசப்பறவைகள்
 • செண்பகமே செண்பகமே - எங்க ஊரு பாட்டுக்காரன்
 • அரும்பாகி மொட்டாகி பூவாகி - எங்க ஊரு காவக்காரன்


இந்த நேரத்துல ஒரு பக்கம் இயக்குநரா "கரகாட்டக்காரன்", எங்க ஊரு பாட்டுக்காரன்", "செண்பகமே செண்பகமே", "கோயில் காளை", "கும்பக்கரை தங்கையா"ன்னு வெற்றி படங்களை இயக்கிட்டு இருந்திருக்காரு... இன்னொரு பக்கம் நிறைய படங்களுக்கு இசை அமைப்பு.. இதில் அவர் இயக்கிய படங்கள் அனைத்திலும் பாடல்கள் அவர் தான்... அது சொல்லத் தேவையில்லை...

இதை தவிர அவர் இயக்காத, இந்த காலகட்டத்தில் வந்த நிறைய படங்களுக்கு அனைத்து பாடல்களும் எழுதி இருக்கிறாப்ல... உதாரணத்துக்கு :

ஜல்லிக்கட்டு, பாண்டி நாட்டு தங்கம், அம்மன் கோயில் கிழக்காலே, எங்க ஊரு காவக்காரன், சூரசம்ஹாரம்... இப்படி ஒரு 20 - 30 படங்கள் இருக்கும்...

கவிஞர் வாலி ராஜ் டிவி நடத்திய ஒரு விழாவில் தனது வாரிசு அப்டின்னு "கவிஞர் பா.விஜய்" பெயரை சொன்னாரு.. என்ன கேட்டா கவிஞர் வாலியின் நிஜமான திரையுலக வாரிசு கங்கை அமரன் தான்.. அவ்வளவு நெருக்கமா இருக்கும் ரெண்டு பேரோட எழுத்து நடையும்... உதாரணத்துக்கு நினைவே ஒரு சங்கீதம் படத்துல "எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்"னு ஒரு பாட்டு சந்தோஷமாகவும் பின்னர் சோகமாகவும் ரெண்டு முறை வரும்.. இதுல ஒண்ணு கங்கை அமரன் இன்னொண்ணு வாலி எழுதினது.. எது யாருதுன்னே வித்தியாசம் சொல்ல முடியாது... இன்னும் ரசனையான ஒரு சம்பவம் உண்டு...

"நிதமும் உன்னை நினைக்கிறேன்... நினைவினாலே அணைக்கிறேன்"

இது கங்கை அமரன் "உன் பார்வையில்" பாட்டுக்கு எழுதிய வரி... அடுத்த பாட்டு ரெக்கார்டிங்குக்கு வந்திருந்த கவிஞர் வாலி 'டேய் அமரா.. உன் பாட்டுல ஒரு வரி ரொம்ப நல்லா இருந்துது.. அத நான் பயன்படுத்திக்கிறேன்" என்று சொல்லி எழுதியது தான்

"எனை நீதான் பிரிந்தாலும்  நினைவாலே அணைப்பேனே" என்கிற 'நிலாவே வா" பாடலின் வரி... ஒரு காலத்தில் வாலிக்கு உதவியாளராக சேரணும்னு கனவோடு அலைஞ்ச அமரனுக்கு வாலி கொடுத்த மிகப்பெரிய கௌரவம் அது...

மனப்பூர்வமாக ஒரு விழாவில் இப்படி பாராட்டினார் கூட "எங்கிட்ட ஏதாவது கவித்துவம் இருக்குன்னு நீங்க நெனச்சீங்கன்னா.. அதே அளவு கவித்துவம் இந்த கங்கை அமரன்கிட்டையும் இருக்கு" அப்டின்னு

இது ஒரு பக்கம் இருந்தாலும் கங்கை அமரன்னு சொன்னதும் பலருக்கும் நினைவுக்கு வருவது "டண்டனக்கடி" வகையறா பாடல்கள் தான்.. இதை இல்லைன்னும் முழுசா மறுத்துட முடியாது... ரொம்ப எளியமையா எழுதுறாரு அப்படிங்கிற ஒரே காரணுத்துக்காக தொடர்ந்து இவருக்கு இது மாதிரி வாய்ப்புகளே நிறைய தரப்பட்டிருக்கு... வேறு வார்த்தைகளில் சொல்வதுன்னா.. ஒரு படத்துல 6 பாட்டு 6 கவிஞர்கள் எழுதுறாங்க அப்டின்னா அதுல குத்துப்பாடோ அல்லது மலிவான ரசனையை உடைய பாடலோ இவருக்குன்னு ஒதுக்கப்பட்டிருக்கு... உதாரணத்திற்கு


 • ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா - பயணங்கள் முடிவதில்லை
 • வச்சுக்கவா உன்னமட்டும் நெஞ்சுக்குள்ள - நல்லவனுக்கு நல்லவன்
 • வாடி என் பொண்டாட்டி நீதாண்டி - வெள்ளை ரோஜா
 • அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி - நீங்கள் கேட்டவை
 • கண்ண தொறக்கணும் சாமி - முந்தானை முடிச்சு
 • வாடி என் கப்பக்கிழங்கே - அலைகள் ஓய்வதில்லை
 • வா வா வாத்தியாரே வா - முந்தானை முடிச்சு
 • வெத்தல மடிச்சுத்தர - மண்ணுக்கேத்த பொண்ணு
 • பொன்மேனி உருகுதே - மூன்றாம் பிறை


கங்கை அமரன் வாலி மாதிரி மெலடி பாடல்களுக்கு எழுதிய இதே நேரம், வாலியும் கங்கை அமரன் சாயலில் 'நேத்து ராத்திரி யம்மா", "நெலாக்காயுது நேரம் நல்ல நேரம்", "சும்மா நிக்காதீங்க நான் சொல்லும்படி வைக்காதீங்க"ன்னு தரைரேட்டுக்கு எழுத ஆரம்பிச்சிருந்தாரு...

அதே மாதிரி வேறு அரசியல் வில்லங்கங்களும் அமரன் பாடல்களுக்கு வந்து சேர்ந்தன... "ருக்குமணி வண்டி வருது... ஓரம்போ ஓரம்போ" என்று இவர் எழுதிய பாடலை நம்ம ஊரு ரேடியோ தடை செய்தது... ஆனால் சிலோன் ரேடியோவில் விடாமல் ஒலித்தது இந்தப்பாட்டு... சிலோனுக்கு கச்சேரி பண்ணப் போன இசையரசர் டி.எம்.எஸ் கிட்ட ஒரு பத்திரிகை நிருபர் "இந்த பாட்ட பத்தி என்ன நெனைக்கிறீங்க"ன்னு போட்டு வாங்க... "நேராப்போ ன்னு  சொல்லாமே ஒவ்வொருத்தனையும் பாத்து ஓரம்போ ஓரம்போன்னு சொல்றது அறச்சொல் மாதிரி ஒலிக்குது.. இது பாடியவர்களுக்கும் இசையமைத்தவர்களுக்கும் இழுக்கு" அப்டின்னு அவரும் யதார்த்தமா சொல்லிவைக்க... மறுநாளே இலங்கையின் மித்திரன் பத்திரிகைல இது பப்பரப்பா நியூஸ் ஆகிப்போனது.. அதோட இளையராஜாகிட்ட டி.எம்.எஸ். பாடுறதுக்கும் எண்டு கார்டு போட்டாச்சு...  ஒருகாலத்தில் திரைப்பட வெற்றிவிழாவில் தனக்கு கேடயம் வழங்கப் படாததற்கு "என்னுடைய உழைப்பும் இந்தப் படத்தில்  இருக்கு.. வேணும்னா என் பாட்டை நீக்கிட்டு படத்தை ஓட்டிப்பாருங்க" என்று தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணியிடம் தன்மானத்தோடு கர்ஜித்த அந்த இசைச்சிங்கம் கடைசிக்காலத்தில் "என்னை பயன்படுத்திக்க ராஜா" என்று ஆனந்த விகடனில் பேட்டி கொடுக்கும் நிலைக்கு போனது காலத்தின் வினோத விளையாட்டு...

சமீபத்தில் "மேல ஏறி வாரோம் கொஞ்சம் ஒதுங்கி நில்லு" என்று அமரன் எழுதிய பாட்டுக்கும் அதே பொருள் தான்.. பாவம் அந்த இசைக்கலைஞன்...

அதே போல "ஒண்ணரை அணா காய்கறிய ஒன்னாருவா ஆக்கிபுட்டாங்க"ன்னு கோழி கூவுது படத்தில் இவர் எழுதிய பாடலின் வரிகளை அலேக்கா தூக்கி போஸ்டரில் போட்டு, அதற்கு கீழே "வாக்களிப்பீர் உதய சூரியனுக்கே' அப்படின்னு எதிர்க்கட்சி எம்.ஜி.ஆருக்கு எதிரா இடைத்தேர்தலில் பயன்படுத்த... தோட்டத்திற்கு அழைத்து முதல்வர் எம்.ஜி.ஆறே இவரை இந்த வரிகளை பற்றி விசாரிக்கிற அளவுக்கு போனது... கடந்த பொதுத்தேர்தல்ல "ஆளுமா டோலுமா" பாட்டு இதே டெக்கினிக்கில் தான் பயன்பட்டது...

இவர் இந்த நேரத்தில் பிசியாக இருந்தார்.. இந்த நேரம் குறைவாக எழுதினார்னு எல்லாம் சொல்றதுக்கு இல்லை.. 90களிலும் நிறைய பாடல்கள் எழுதி இருக்காப்ல "ஆவாரம்பூ, தங்க மனசுக்காரன், சின்னவர், சின்னப்பசங்க நாங்க, அத்த மக ரத்தினமே" ன்னு ஒரு வண்டிப் படங்கள்...அதற்கு பிறகு இளையராஜா தனக்கு சரியான வாய்ப்பு தரல அப்படின்னு சமீபத்துல கூட ஒரு பேட்டில சொல்லி இருந்தாரு...

2000க்கு பிறகும் உன்னை சரண் அடைந்தேன், மங்காத்தா, சென்னை 600028ன்னு நிறைய படங்களுக்கு எழுதிக்கொண்டு தான் இருக்கிறார்....கவிஞர் வாலி சொன்னது போல மற்ற துறைகளிலும் சாதனைகள் நிறைய செய்திருந்தாலும் இளையராஜா முழுமையாக தன்னை இசையில் கரைத்துக்கொண்டதை போல இவர் பாடலாசிரியராக மட்டுமே கவனம் செலுத்தி இருந்தால் வாலி - வைரமுத்துவுக்கு இன்னும் கடுமையான சவாலாக இருந்திருப்பார் என்பதில் எள்முனை அளவுக்கும் சந்தேகமில்லை...

எத்தனை கவித்துவமான பாடல்கள் இருந்தாலும்... எத்தனை துள்ளலான பாடல்களை எழுதி இருந்தாலும், என்னை கங்கை அமரனின் பால் ஈர்த்த ஒரு பாட்டு உண்டு... இந்தப் பாடலுக்காகவே ஒரு சமயத்தில் விடிகாலையில் எழுந்து விஜய் டிவி பார்த்ததுண்டு...

அது அமரன் எழுதி இசையமைத்த "அம்மா" என்கிற பக்திப் பாடல் ஆல்பத்தின் முதல் பாடலான பாண்டிச்சேரி அரவிந்த அன்னையின் மேல் அமைந்த "மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே"

இளையராஜாவுக்கு "ஜனனி ஜனனி" மாதிரி அமருக்கு "மலர்போல மலர்கின்ற"... அவரது வரிகளிலேயே நிறைவு செய்வதென்றால்... அந்த நல்ல கலைஞனையும் அவரது கவித்துவத்தையும்

"ஒரு நோயும் தீண்டாமல் அணை போடு தாயே,
நதி காய நேராமல் நீரூற்று தாயே
இந்நிலம் பார்த்து நீயே..!"

Saturday, November 12, 2016

ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு!!!

ஒரே சாயலில் அமைந்த பாடல்கள் வேறு இசையமைப்பாளர் இசை அமைத்ததாக கருதப் படுவதை நாம் அநேகம் முறை பார்த்தும் கேட்டும் இருக்கிறோம்.. ஒரே சாயலில் அமைந்த வரிகள் அதே காலகட்டத்தில் இருந்த பிறிதொரு கவிஞரால் எழுதப் பட்டதாக கற்பிதங்கள் உண்டு... இந்த வரிசையில் ஒரே சாயலில் அமைந்த குரல்களில் வந்த பாடல்கள் மற்றொருவர் பாடியதாக கருதப் பட்ட வரலாறும் நிறைய உண்டு... மனோ பாடிய பல பாடல்கள் எஸ்.பி.பி என்று நினைத்ததுண்டு.

அதே போல இவர் பாடிய பல பாடல்கள் ஏசுதாஸ் என்றும் அவர் பாடியவற்றை இவருடையது என்றும் நினைத்ததுண்டு....  "அவர்" கடவுளின் தேசம் கேரளம் தமிழுக்கு தந்த மிகச் சிறந்த குரல்களில் ஒன்றான 'பாவகாயகன்' 'கலைமாமணி'  "பி.ஜெயச்சந்திரன்" (மலையாளிகளிடம் பேசும் போது இந்த இனிஷியல் ரொம்ப முக்கியம் வெறுமனே ஜெயச்சந்திரன் பாட்டு என்றால் பி.ஜெயச்சந்திரனா?? எம்.ஜெயச்சந்திரனா?? என்று கேட்பார்கள்)....மலையாளத்தில் "பாவகாயகன்" என்பது எந்த பாவத்திற்கும் உணர்ந்து பாடக்கூடியவர் என்று பொருள்படும்... இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகள் உட்பட 15,000 பாடல்களுக்கு மேல் பாடிய எவர்கிரீன் பாடகர்.... அதில் முக்காலே மூணு வீசம் மெல்லிசைப் பாடல்கள் தாம்... லேசான பேஸ் வாய்ஸுடன் கூடிய உறுத்தாத மிக மெல்லிய சாரீரம் ஜெயச்சந்திரனுடையது....

 என்னதான் யேசுதாஸின் சாயல் இருந்தாலும் ஜெயச்சந்திரனை பளிச்சென்று வேறுபடுத்திக் காட்டும் ஒரு விஷயம் அவரது தமிழ் உச்சரிப்பு.. பிள்ளையை 'பில்லை' என்றும் செந்தூர பந்தம் என்பதை செந்தூர 'பெந்தம்' என்றும் யேசுதாஸ் பாடுவது போல இருக்காது இவர் உச்சரிப்பு....

"மாஞ்சோலை கிளிதானோ" பாடலின் இரண்டாவது சரணம் ஒன்று போதும் இதற்கு உதாரணம்

"மின்னல் ஒளியென கண்ணைப் பறித்திடும் 
அழகோ தேவதையோ
அங்கம் ஒரு தங்கக் குடம் அழகினில்
மங்கை ஒரு கங்கை நதி உலகினில்
துள்ளும் இசை தேன் தான்
அள்ளும் கரம் நான் தான்
மஞ்சம்தனில் வஞ்சிக்கொடி 
வருவாள் சுகமே தருவாள் மகிழ்வேன்
கண்காவியம் பண்பாடிடும் பெண்ணோவியம் செந்தாமரையோ"

"ழ / ல / ள" மற்றும் "ன / ண" உச்சரிப்ப்பில் என்ன தெளிவு பாருங்கள்...
தத்தகாரத்தில் காற்புள்ளி, அரைப்புள்ளி மாறாமல் தமிழ் எழுதும் கவிஞர் முத்துலிங்கத்தின் வரிகளை சிதைக்காமலும், கரகரப்ரியாவின் துரித கதியில் அமைந்த மெட்டை இனிமை குறையாமலும் அருமையாகப் பாடி இருப்பார்...

எல்லாரையும் போல எனக்கும் ஜெயச்சந்திரன் என்றதும் உடனே நினைவுக்கு வருவது "ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு" தான்.. இதனாலே இவர் இளையராஜாவின் கண்டுபிடிப்பாக இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு சிறுவயதில் உண்டு.. ஆனால் இவர் எம்.ஜி.ஆர், முத்துராமன் காலத்து பாடகர் என்பது 90 களில் நான் கேசட்டுகளை பதிவு செய்ய அடிக்கடி செல்லும் "எலக்ட்ரோ மியூஸிக்கல்ஸ்" வாயிலாக அறிந்தது...

சின்ன வயதில் மிருதங்கம் கற்று அப்போதைய காலகட்டத்தில் நிறைய போட்டிகளில் வாசித்திருக்கிறார்.. யேசுதாஸ் சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு போட்டியில் இவரை சிறந்த மிருதங்க கலைஞராக தேர்வு செய்த்திருக்கிறார்கள்... அவ்வப்போது சின்னச் சின்ன லைட் மியூசிக் குழுக்களிலும் பாடிக்கொண்டு இருந்திருக்கிறார்...1965ல் பாகிஸ்தான் போர் நிதிக்காக இவர் ஏதோ ஒரு இசைநிகழ்ச்சியில் பாடியதை கேட்ட தயாரிப்பாளர் "ஆர்.எஸ்.பிரபு" இவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.. ஆனால் அதற்கு முன்பாகவே தேவராஜன் மாஸ்டர் இசையில் "களித்தோழனில்" இவர் பாடிய "மஞ்சலையில் முங்கி தோர்த்தி" வெளிவந்து ஹிட் அடிக்க இவரது பாட்டுப் பயணத்துக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது... ஆரம்பகாலங்களில் அதாவது 70களின் முற்பாதியில் தேவராஜன், எம்.கே.அர்ஜுனன், தெட்சிணாமூர்த்தி சுவாமிகள், எம்.எஸ்.வி ஆகியோர் இவருக்கு நிறைய வாய்ப்புகளை கொடுத்திருக்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் இவர் பாடிய சில அற்புதமான பாடல்கள் :


 • நின் மணியறையிலே - சி.ஐ.டி.நசீர்
 • சுவர்ண கோபுர நர்த்தகி - திவ்யதர்ஷனம்
 • சந்தனத்தில் கடைஞ்செடுத்தொரு - சாஸ்திரம் ஜெயிச்சு மனுஷ்யன் தோத்து
 • சந்தியக்கு எந்தினு சிந்தூரம் - மாயா
 • நீலகிரியுடே சகிகளே - பனிதீராத்தவீடு


இதில் கடைசிப் பாடல் 1972ல் இவருக்கு கேரளா அரசின் சிறந்த பாடகர் விருதை பெற்று தந்த பாட்டு... இசை மெல்லிசை மன்னர்.... பிறகென்ன ஜெயச்சந்திரனை அப்படியே லபக்கென்று தமிழுக்கு தூக்கிட்டு வந்துட்டார்  எம்.எஸ்.வி...

அதே ஆண்டு இயக்குனர் ஏ.ஜெகந்நாதனின் முதல் படமான "மணிப்பயல்" படத்தில் "தங்கச்சிமிழ் போல் இதழோ" தான் இவர் முதன்முதலாக பாடிய தமிழ் பாட்டு (பி.பி.எஸ் பேஸ் வாய்ஸில் பாடியதோ என்று தோன்றுகிறது)...

அதோடு நில்லாமல் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்திருக்கிறார் எம்.எஸ்.வி... 76ல் இளையராஜா வரும் வரையில் இவர் பாடிய சில ஹிட் பாடல்கள் :


 • மந்தார மலரே மந்தார மலரே - நான் அவன் இல்லை
 • பொன்னென்ன பூவென்ன கண்ணே - அலைகள்
 • வசந்த கால நதிகளிலே - மூன்று முடிச்சு
 • ஆடிவெள்ளி தேடி உன்னை நான் அடைந்த - மூன்று முடிச்சு
 • திருமுருகன் அருகினிலே - மேயர் மீனாட்சி
 • அமுத தமிழில் எழுதும் கவிதை - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்


தமிழிலும் மலையாளத்திலும்  தனக்கு முதல் வாய்ப்பு அளித்தஎம்.எஸ்.வி மற்றும் தேவராஜன் மாஸ்டர் மீது அதீத பற்றுதலும் மரியாதையும் உடையவர் ஜெயச்சந்திரன்...70களின் இரண்டாவது பாதியில் ஒரு பக்கம் எம்.எஸ்.வி என்றால் இன்னொரு பக்கம் இளையராஜா என்று கலக்கி இருக்கிறார்... இளையராஜாவின் ஆரம்பகால பாடல்களில் இவரது சில ஹிட் பாடல்கள் :


 • பூந்தென்றலே நல்ல நேரம் - புவனா ஒரு கேள்விக்குறி
 • ஒரு வானவில் போலே - காற்றினிலே வரும் கீதம்
 • சித்திரை செவ்வானம் - காற்றினிலே வரும் கீதம்
 • மாஞ்சோலை கிளிதானோ - கிழக்கே போகும் ரயில்
 • செவ்வானமே பொன்மேகமே - நல்லதொரு குடும்பம் 
 • மஞ்சள் நிலாவுக்கு இன்று - முதல் இரவு


70களில் ரஜினி மற்றும் கமலுக்கு சில பாடல்கள் பாடி இருக்கிறார் பிறகு நிரந்தரமாக அந்த இடம் எஸ்.பி.பாலுவுக்கு தாரை வார்க்கப்பட்ட பிறகு இவர்கள் இருவருக்கும் இவர் பாடவில்லை... நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினிக்கு பாபா படத்தில் பாடி இருப்பார்...

1980 கள் தான் இவர் தமிழில் அதிகமாக பாடிய காலம்...  இதை நாம் விரிவாக பார்க்க வேண்டும்... 80களின் முற்பாதியில் இவரை எம்.எஸ்.வி, இளையராஜா மட்டுமன்றி சங்கர் கணேஷ், கங்கை அமரன், சலீல் சௌதுரி, ஜி.கே. வெங்கடேஷ், டி.ராஜேந்தர் என்று அன்றைய நாளின் அநேக இசையமைப்பாளர்களும் பயன்படுத்த ஆரம்பித்தனர்... இந்தக் காலகட்டத்தில் வெளிவந்த இவரது பாடல்களில் சில :


 • கவிதை அரங்கேறும் நேரம் - அந்த 7 நாட்கள் (எம்.எஸ்.வி)
 • தென்றலது உன்னிடத்தில் - அந்த 7 நாட்கள் (எம்.எஸ்.வி)
 • வசந்த காலங்கள் - ரயில் பயணங்களில் (டி.ராஜேந்தர்)
 • கடவுள் வாழும் கோவிலிலே - ஒரு தலை ராகம் (டி.ராஜேந்தர் )
 • காதல் ஒருவழிப் பாதை - கிளிஞ்சல்கள் (டி.ராஜேந்தர் )
 • பூவண்ணம் போல மின்னும் - அழியாத கோலங்கள் (சலீல் சௌதுரி)
 • இசைக்கவோ நம் கல்யாண ராகம் - மலர்களே மலருங்கள் (கங்கை அமரன் )
 • பாடு தென்றலே - நெல்லிக்கனி (சங்கர் கணேஷ்)
 • மலரோ நிலவோ மலைமகளோ - ராக பந்தங்கள் (குன்னக்குடி வைத்தியநாதன்)
 • பாடிவா தென்றலே - முடிவல்ல ஆரம்பம் (இளையராஜா)
 • தேவன் தந்த வீணை - உன்னை நான் சந்தித்தேன் (இளையராஜா)
 • பூவிலே மேடை நான் போடவா - பூவிலங்கு (இளையராஜா)
 • கண்ணில் ஏதோ மின்னல் - பூவிலங்கு (இளையராஜா)
 • காதல் மயக்கம் அழகிய கண்கள் - புதுமைப்பெண் (இளையராஜா)
 • தாலாட்டுதே வானம் - கடல் மீன்கள் (இளையராஜா)
 • காளிதாசன் கண்ணதாசன் - சூரக்கோட்டை சிங்கக்குட்டி (இளையராஜா)1984ல் வெளிவந்த சுந்தர்ராஜனின் "வைதேகி காத்திருந்தாள்" ஜெயச்சந்திரனின் தமிழ் சினிமா அத்தியாயத்தில் ஒரு புதிய ஏட்டை புரட்டிப் போட்ட படம்... "ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு"ன்னு ஜெயச்சந்திரன் உருகுவது கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக இன்றும் காற்றலைகளில் மிதந்து கொண்டிருக்கிறது... இந்த ஒரே பாட்டின் மூலம் கிட்டத்தட்ட விஜயகாந்தின் பாட்டுக் குரலாகவே மாறிப்போனார் ஜெயச்சந்திரன்... 20 வருடங்களுக்கு மேலாக 2005ல் "எங்கள் அண்ணா" வரை நீள்கிறது இந்த இணை... எத்தனை சூப்பர் ஹிட் பாடல்கள் :


 • இன்றைக்கு ஏனிந்த - வைதேகி காத்திருந்தாள்
 • காத்திருந்து காத்திருந்து - வைதேகி காத்திருந்தாள்
 • மயங்கினேன் சொல்ல தயங்கினேன் - நானே ராஜா நானே மந்திரி
 • தேகம் சிறகடிக்கும் - நானே ராஜா நானே மந்திரி
 • பூவ எடுத்து ஒரு மால - அம்மன் கோயில் கிழக்காலே
 • பூமுடித்து பொட்டுவைத்த வட்டநிலா - எம் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்
 • புல்லைக்கூட பாடவைத்த - என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்
 • கஸ்தூரி மான்குட்டியாம் - ராஜ நடை 
 • விழியே விளக்கொன்று ஏற்று - தழுவாத கைகள்
 • சோதனை தீரவில்ல - செந்தூர பூவே
 • ஏழை ஜாதி கோழை ஜாதியல்ல - ஏழை ஜாதி
 • காதல் வெண்ணிலா - வானத்தை போல
 • வெள்ளையாய் மனம் பிள்ளையாய் - சொக்கத்தங்கம்
 • கொஞ்சி கொஞ்சி பேசும் மைனாவே - எங்கள் அண்ணா


80களின் பிற்பகுதி தான் ஜெயச்சந்திரன் தமிழில் அதிகம் பயன்படுத்தப்பட்ட காலம்... இதில் விஜயகாந்த் தவிர மற்ற நடிகர்களுக்கும் இவர் பாடிய சில ஹிட் பாடல்கள் :


 • கொடியிலே மல்லிகைப்பூ - கடலோரக் கவிதைகள்
 • அழகாக சிரித்தது அந்த நிலவு - டிசம்பர் பூக்கள்
 • அதிகாலை நிலவே - உறுதிமொழி
 • உன்னைக் காணும் நேரம் நெஞ்சில் - உன்னை நான் சந்தித்தேன்
 • எனது விழி வழிமேலே - சொல்ல துடிக்குது மனசு
 • அடி மாடிவீடு மானே - நட்பு
 • ராஜா மகள் ரோஜா மகள் - பிள்ளை நிலா
 • அழகிய அண்ணி - சம்சாரம் அது மின்சாரம்
 • கவிதை கேளுங்கள் - புன்னகை மன்னன் (ஆலாபனை மற்றும் ஜதி மட்டும்)


ஒருபக்கம் தமிழில் வெற்றி பாடல்களை தந்து கொண்டே மறுபக்கம் தனது தாய்மொழியில் 1988ல் 'ஸ்ரீ நாராயண குரு' படத்திற்காக "சிவசங்கர சர்வ" என்கிற பாடலுக்காக தேசிய விருதினை பெற்றார்...

1987ல் சின்னப்பூவே மெல்லப்பேசு படத்தில் ஆரம்பித்த தொடர்பில் அடுத்து இவரை எஸ்.ஏ.ராஜ்குமார் தனது படைப்புகளில் தொடர்ந்து நிறைய பாட வைத்திருக்கிறார் உதாரணத்துக்கு :


 • சின்னப்பூவே மெல்லப்பேசு - சின்னப்பூவே மெல்லப்பேசு
 • பூந்தென்றலே நீ பாடிவா - மனசுக்குள் மத்தாப்பூ
 • சொல்லாமலே யார் பார்த்தது - பூவே உனக்காக
 • இது காதலின் சங்கீதம் - அவள் வருவாளா
 • ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ - சூர்யவம்சம்
 • காதல் வெண்ணிலா - வானத்தை போல


90களில் இளையராஜாவின் ஆஸ்தான பாடகராக மனோ இருந்ததால் ஜெயச்சந்திரனுக்கு பெரிய அளவில் வாய்ப்புக்கள் கிடைத்திருக்கவில்லை... "ஒரு சின்ன மணிக்குயிலு (கட்டப் பஞ்சாயத்து), "வள்ளி வள்ளி என (தெய்வ வாக்கு), "ஊரெல்லாம் சாமியாக (தெய்வ வாக்கு)" என கிடைத்த வாய்ப்பையெல்லாம் தவற விடாது ஹிட் அடித்திருக்கிறார்...

90களில் மீண்டும் மலையாளத்தில் பிசி ஆகி 'பிராயம் நம்மில்'(நிறம்) பாடலுக்காக மூன்றாவது கேரளா அரசு விருதை தட்டினார்..

1975ல்  9 வயது சிறுவன் திலீப் தன் தந்தை இசையமைப்பில்  "பெண்படா" என்கிற படத்தில் "வெள்ளிக்கிண்ணம்" என்ற பாடலுக்கு  இசை அமைத்தான்... பாடியவர் ஜெயச்சந்திரன்.. பின்னர் 17 ஆண்டுகள் கழித்து  திலீப் ஏ.ஆர்.ரஹ்மானாக மாறிய பின்னர் தனது இசையில் முதன் முதலில் பாடிய ஜெயச்சந்திரனுக்கு நிறைய வாய்ப்புக்கள் கொடுத்திருப்பார்... உதாரணத்துக்கு சில :


 • சித்திரை நிலவு - வண்டிச்சோலை சின்ராசு
 • கொல்லையில தென்னை வச்சு - காதலன்
 • என் மேல் விழுந்த - மே மாதம்
 • கத்தாழக் காட்டுவழி - கிழக்கு சீமையிலே
 • ஒரு தெய்வம் தந்த பூவே - கன்னத்தில் முத்தமிட்டால்
 • ராஜ்யமா இல்லை இமயமா - பாபா


2000க்கு பிறகு ஜெயச்சந்திரனுக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லை பரணி இசையில் (சுந்தரா டிராவல்ஸ்), வித்யாசாகர் இசையில் (தம்பி), ஜி.வி.பிரகாஷ் இசையில் (கிரீடம்) இப்படி அத்திப் பூத்தாற்போல பாடல்கள் அமைந்திருக்கின்றன... ஆனால் இந்த காலகட்டத்தில் மனிதர் மலையாளத்தில் படுபிஸியாக இருந்திருக்கிறார்.. கிட்டத்தட்ட எல்லார் இசை அமைப்பிலும்.... சும்மா ஒரு சாம்பிளுக்கு :


 • நீ மணிமுகிலாடல்கள் - வெள்ளித்திர (அல்போன்ஸ் ஜோசப்)
 • கல்லாயி கடவாதே - பெருமழக்காலம் (எம்.ஜெயச்சந்திரன்)
 • ஆலிலைத்தளியுமாய் - மிழி ரண்டிலும் (ரவீந்திரன் மாஸ்டர்)
 • பொண்ணுஷசின்னும் - மேக மல்ஹார் (ரமேஷ் நாராயண்)
 • ஸ்வயம்வர சந்திரிக்கே - கிரானிக் பேச்சிலர் (தீபக் தேவ்)
 • வட்டையில பந்தலிட்டு - யாத்ரகாருடே சிரத்தைக்கு (ஜான்சன் மாஸ்டர்)
 • தேரிறங்கும் முகிலே - மழைத்துளிகிளுக்கம் (சுரேஷ் பீட்டர்ஸ்)
 • இதலூர்ன்னு வீணா - தன்மத்ரம் (மோகன் சித்தாரா)
அவர் கடைசியாக பாடிய பாடல் நானறிந்த வரை பிஜிபால் இசையமைப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த "சு சு சுதி வாட்மீகம்" என்ற படத்தில் 'என்டே ஜன்னலருகில்'  என்ற பாடல்...

இந்தப் பாட்டை பாடும் போது அவருக்கு வயது 71.. ஆனால் இளைஞரான ஜெயசூர்யாவுக்கு இவரது குரல் அத்தனை இனிமையாக பொருந்துகிறது..... அது தான் நான் இந்தப் பதிவின் ஆரம்பத்தில் சொன்ன "எவர்கிரீன் வாய்ஸ்" என்பது!!!