Saturday, December 31, 2016

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட!!!

ஊருக்கு போவதில் உள்ள பலசுகங்களில் ஒன்று பேருந்தில் இளையராஜா பாட்டு கேட்டுக் கொண்டே போவது.. இளையராஜா என்றதும் "பனிவிழும் மலர்வனமோ அல்லது ஆயிரம் மலர்களேவோ அல்லது காற்றில் எந்தன் கீதமோ அந்த கால ராஜா பாடல்களோ கிடையாது... எங்கேந்து தான் புடிப்பாங்கன்னு தெரியாது புதுசுமில்லாம பழசுமில்லாம நடுவாந்திரமா.... "மணிக்குயில் இசைக்குதடி", "என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன்", "புன்னைவனப் பூங்குயிலே பூமகளே வா", "சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி" இப்படி நீளும் பட்டியல் ..... இந்த முறை ஊருக்கு போகும்போதும் பெட்டிக்கடை முதல் கோயில் திருவிழாவில் ஆர்கெஸ்டரா வரை அதே வகைப் பாடல்கள்....  நானும் சிந்தித்ததுண்டு என் நண்பர்களும் கேட்டதுண்டு இதுல அப்படி என்ன Uniqueness தெரியுது நாம்மாளுகளுக்கு என்று... காரணம் எதுவேண்டுமாயினும் இருக்கலாம் நான் கண்டுகொண்டது, இதையெல்லாம் எழுதியவர் ஒருவர் தான்... அதுவும் நம்ம ஊர்க்கார ஆள் என்று!!!

மெல்லிசை மன்னர் முதல் இன்றைய ஹிப் ஹாப் தமிழா வரை அனைவரது இசையிலும் 33 ஆண்டுகளாக கிட்டத்தட்ட 1500 பாடல்களுக்கு மேல் எழுதிய  கவிஞர் அவர்!!!!

காவிரி பாயும் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்தவர்.. இயற்பெயர் சந்திரசேகரன்.. ஒரு கட்டத்தில் 130 ரூபாயுடன் தமிழ் தனக்கு சோறு போடும் என்ற நம்பிக்கையில் சென்னைக்கு வந்தவர்... ஒரு தேநீர்க்கடையில் நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்த போது "மக்கள் குரல்" பத்திரிக்கையாளர் ராம்ஜி என்பவர் இவரை பார்த்து இனிமை பற்றி ஒரு கவிதை எழுத முடியுமா என்று கேட்க.. அங்கேயே

"தாலாட்டிப் பாலூட்டி தண்டமிழில் சீராட்டும்
தாயார்க்குத் தன் மகவே இனிமை"

 என்று தொடங்கி ஒரு கவிதையை எழுதிக் கொடுத்திருக்கிறார்.. அதில் வியந்த ராம்ஜி அவருக்கு முதல் சினிமா பாடல் எழுதும் வாய்ப்பினைப் பெற்றுத் தந்திருக்கிறார்.. "ஆர்.சி. சக்தி இயக்கத்தில் 1984ல் வெளிவந்த "சிறை" படத்தில் "மெல்லிசை மன்னர்" இசையில் "ராசாத்தி ரோசாப்பூவே வெட்கம் வெட்கம் ஏனோ ஏனோ" தான் இவர் எழுதிய முதல் பாடல்...

இதற்கு பிறகும் மெல்லிசை மன்னருக்கு அவரது கடைசி படம் வரை பாடல்கள் எழுதி இருந்தாலும் படம் வெளிவரவில்லை... தனது முதல் பாடலை தந்த மெல்லிசை மன்னரின் கடைசிப் படமான வி.சி.குகநாதனின் "இது எம்.ஜி.ஆர். இல்லம்" படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் இவர் தான்..

முதல் பாடலுக்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இவருக்கு பெரிதாக சினிமா வாய்ப்புகள் எதுவும் வரவில்லை... அந்நேரத்தில் ஏ.ஆர்.ரகுமானின் விளம்பர படங்களில் பாடல்கள் எழுதிக் கொண்டிருந்திருக்கிறார்... 1986ல் வைரமுத்துவோடு டூ விட்ட இளையராஜா மற்ற கவிஞர்களை ஊக்கப்படுத்த தொடங்கினார்.. இவருக்கும் பளிச் பாடல்கள் கிடைத்தன... "எங்க ஊரு காவக்காரன் படத்தில் "சிறுவாணி தண்ணி குடிச்சு" மற்றும் "என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு" படத்தில் "உயிரே உயிரின் ஒளியே" ....



இந்த இரண்டு பாடல்களின் வெற்றிக்கு பிறகு இளையராஜாவின் இசையில் வரிசையை கட்டத்தொடங்கின இவரது சூப்பர் ஹிட் பாடல்கள்... உதாரணத்திற்கு சில சூப்பர் ஹிட் பாடல்கள்...


  • மீனம்மா மீனம்மா கண்கள் தேனம்மா - ராஜாதி ராஜா
  • ஆட்டமா தேரோட்டமா - கேப்டன் பிரபாகரன்
  • தென்றல் தான் திங்கள் தான் - கேளடி கண்மணி
  • நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி - செம்பருத்தி
  • நட்ட நடுக்கடல் மீது நான் பாடும் பாட்டு - செம்பருத்தி
  • ஆதாமும் ஏவாளும் போல - மருதுபாண்டி
  • சோலைப் பசுங்கிளியே - என் ராசாவின் மனசுல
  • நட்டுவச்ச ரோசாச்செடி ஆமா ஆமா - அரண்மனைக்கிளி
  • காதல் கவிதைகள் படித்திடும் நேரம் - கோபுர வாசலிலே
  • இதயமே இதயமே உன் மௌனம் என்னை - இதயம்
  • கலகலக்கும் மணியோசை  - ஈரமான ரோஜாவே
  • மணிக்குயில் இசைக்குதடி - தங்க மனசுக்காரன்
  • என்னை தொட்டு அள்ளிக்கொண்ட - உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்


இப்படி நிறைய சொல்லலாம்... மீனம்மாவில் தொடங்கி சூப்பர் ஸ்டாருக்கு நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறார்.. உதாரணத்திற்கு


  • நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் - பணக்காரன்
  • சைலன்ஸ்... காதல் செய்யும் நேரம் - பணக்காரன்
  • தானந்தன கும்மி கொட்டி  - அதிசய பிறவி
  • வேறுவேலை உனக்கு இல்லையே - மாப்பிள்ளை


ரஜினி மட்டுமல்ல "அரங்கேற்ற வேலை, மை டியர் மார்த்தாண்டன், பாண்டித்துரை, ராஜா கைய வெச்சா, சின்ன வாத்தியார்" என்று பிரபுவுக்கு.... "பெரிய வீட்டு பண்ணைக்காரன், நாடோடி பாட்டுக்காரன், சின்னக் கண்ணம்மா, கோபுர வாசலிலே, உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்" என்று கார்த்திக்கிற்கு.... பொங்கிவரும் காவேரி, அன்புக்கட்டளை, எங்க ஊரு காவக்காரன், என்ன பெத்த ராசா" என்று ராமராஜனுக்கு இப்படி அந்த காலகட்டத்தில் வந்த பாதிக்கு பாதி இளையராஜா படங்களில் எழுதி தள்ளி இருக்கிறார்...

ராஜாவுக்கு இவர்மீது இருந்த நம்பிக்கைக்கு ஒரு உதாரணம் சொல்லலாம்... வழக்கமாக "Semi - Classical" வகை பாடல், கே.ஜே.யேசுதாஸ் பாடப்போகிறார் என்றால் "கூப்பிடுங்கப்பா வாலி சாரை" என்பது தான் ராஜா டிரெண்ட்... "ராம நாமம் ஒரு வேதமே.....,  ஆடல் கலையே தேவன் தந்தது..., கமலம் பாதக் கமலம்... கங்கைக்கரை மன்னனடி" இப்படி அநேக பாடல்கள்... அல்லது சந்தம் கொஞ்சம் கடுமையா இருக்கா புலவர் புலமைப்பித்தன வச்சு எழுதுவார்... "வேதம் நீ இனிய நாதம் நீ, நீ ஒன்று தானா என் சங்கீதம்.." இது மாதிரி... இதிலிருந்து மாறி இவருக்கும் ஒரு அழகான வாய்ப்பை "கோபுர வாசலிலே" படத்தில் தந்திருப்பார் இளையராஜா.... கதாநாயகி பரதம் ஆடுவதில் கதாநாயகன் மயங்குவதாக ஒரு சிச்சுவேஷன்.. "நாதம் எழுந்ததடி கண்ணம்மா"... யேசுதாஸ் - ஜானகி குரல்களில் ஸ்ரீரஞ்சனி ராகத்தில் ஸ்வரங்களோடு அமைந்த அழகான பாடலின் வரிகளை எங்கும் உறுத்தாத வண்ணம் அத்தனை நேர்த்தியாய் கோர்த்திருப்பார்...

"தா என்ற சொல்லில் இன்பம் வந்து தாவ
தை என்ற சந்தம் சொந்தங்கள் கொண்டாட"

இதில் தா - தை என்பது பரதத்தில் சொல்லப்படும் ஜதிகளை குறிக்கும்.. அதையே "தா என்றால் "தாவு" என்று பொருள் கொள்ளலாம் "தை" என்றால் "தைத்தல்" என்று பொருள் கொள்ளலாம் என்று தமிழில் விளையாடி இருப்பார்... அடுத்த சரணத்தில் துரித கதியில்

"பழகு கண்கொண்டு உலகை நீவென்று
தினமனுதினம் கவி பாடிடவா
இனிய கற்கண்டு இளமை பண்கொண்டு
சுகமொரு சுகமென தேடிடவா"

என்று வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல வார்த்தைகள் வந்து விழுகின்றன... இந்தப் பாடலின் வெற்றியைத் தொடர்ந்ந்து "ஊரெல்லாம் உன் பாட்டு" படத்தில் "தோம் தோம் தோம்" என்று இதே வகைப் பாடலை மீண்டும் இவருக்கு வழங்கி இருப்பார் இளையராஜா..

இளையராஜா மட்டுமன்றி தேவா இசையில் "வசந்த காலப் பறவைகள்", "பதவிப் பிரமாணம்", "கருப்பு நிலா", "தாயகம்", "ஜோர்" என்று ஒரு 50 - 60 படங்களில் எழுதி இருக்கிறார்...  ஏ.ஆர். ரகுமான் இசையில் ஆரம்ப காலத்தில் விளம்பர படங்களில் பாடல்கள் எழுதியவர் பிறகு "ஸ்டார்" படத்தில் "ரசிகா ரசிகா", "தெனாலி" படத்தில் "போர்க்களம் அங்கே பூவில் காயம் இங்கே" என்று இரண்டு பாடல்கள் எழுதி இருப்பார்...

இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கிய மற்றொரு இசையமைப்பாளர் "ஆதித்யன்". ஆதித்யனின் முதல் படமான "அமரன்" ல் இருந்து "நாளைய செய்தி, அதே மனிதன், லக்கி மேன், டேவிட் அங்கிள், அசுரன், சின்ன புள்ள" என்று படத்துக்கு படம் தொடர்ந்து அவரது இசையில் ஏராளமான பாடல்கள் எழுதி இருக்கிறார்.... உதாரணத்திற்கு


  • வெத்தல போட்ட ஷோக்குல - அமரன்
  • வசந்தமே அருகில் வா - அமரன்
  • சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே - அமரன்
  • தாழமடல் ஓல கொண்டு - அதே மனிதன்
  • சக்கு சக்கு வத்திக்குச்சி சக்குன்னுதான் பத்திக்கிச்சு - அசுரன்


எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் "இது நீ இருக்கும் நெஞ்சமடி - கிருஷ்ணா", மரகதமணி இசையில் "உயிரே உயிரே இது தெய்வீக - எல்லாமே என் காதலி", வித்யாசாகர் இசையில் "வாராயோ தோழியே - அரசியல்" இப்படி மற்ற இசை அமைப்பாளர்களின் இசையிலும் நிறைய ஹிட் பாடல்களை எழுதி இருக்கிறார்...

இப்போதும் ஆர்யா சூர்யா, அரண்மனை, அரண்மனை 2, குரோதம் 2, ஸ்ரீ ராமராஜ்யம் என்று தனது மகன் கவின் சிவா உட்பட பலரது இசையில் பாடல்களை எழுதி வருகிறார்... அதாண்டா இதான்டா, குரோதம் 2, ஸ்ரீராமராஜ்யம் படங்களுக்கு வசனம் எழுதி வசனகர்த்தாவாகவும், புகழ், சதுரங்க வேட்டை படங்களில் நடிகராகவும் தனது பன்முகப் பரிமாணங்களை பதித்து வருகிறார்...

தாலாட்டு முதல் தாலாட்டு வரை, எம்.ஜி.ஆர் கவிதைகள் உட்பட பல கவிதை நூல்களை எழுதியவர்... தூர்தர்ஷனில்  கவிராத்திரி, கலைஞர் தொலைக்காட்சியில் வானம்பாடி  என்று இவரது நிகழ்ச்சிகள் எனக்கு மிகவும் பிடித்தவை....

இந்நேரம் நீங்கள் யாரென்று கண்டுபிடித்திருப்பீர்கள்... ஆம் அவர்தான் தமிழ்நாடு எழுத்தாளர்கள் சங்கத்தின் செயலாளர், கவிஞர், பாடலாசிரியர், சொற்பொழிவாளர், வசனகர்த்தா, நடிகர்.....



 கலைமாமணி டாக்டர் பிறைசூடன்!!!!

வாலி, வைரமுத்து, கங்கை அமரன், புலமைப்பித்தன், முத்துலிங்கம் அளவுக்கு இவரது பெயர் ஏனோ சரியாக பதிவு செய்யப்படவில்லை.. அதே போல சொன்ன மாத்திரத்தில் எழுதக்கூடிய திறமை உடைய கவிஞருக்கு இன்னும் அதிக வாய்ப்புக்கள் கிடைத்திருக்க வேண்டும் என்பதே என் எண்ணம்!!!