Monday, September 30, 2013

லியோ கப்பாசா!!!!


பொதுவாவே தமிழ் சினிமா இசை வரலாறு பத்தி எந்த Critic கிட்டகேட்டாலும்..."ஜி.ராமநாதன்...எம்.எஸ்.வி..இளையராஜா-ஏ.ஆர்.ரகுமான்..."இப்படி நாலே வார்த்தைல சொல்லிடுவாங்க... ஏன்னு கேட்டா இவங்க தான் 60, 70, 80, 90 கள்ள தமிழ் சினிமாவை ஆண்டவர்கள் அப்டின்னு பதில் வரும்...

மொதல் மூணு எப்படி இருந்தாலும் 90கள் விஷயத்தில‌ மட்டும் இந்த பொதுவான கருத்து உண்மையில்ல.. அதான் நிஜமும் கூட...

சில பேரு ஆமாமா 90ல கூட இளையராஜா கலக்கிட்டு இருந்தாருன்னு சண்டைக்கு வருவாங்க...

ஆனா 90களில் தமிழ் சினிமா இசையை ஆண்டது... தேவா தான்....

ரொம்ப இன்டெரெஸ்டிங்கான விஷயம் என்னன்னா... அந்தக்காலத்துல இளையராஜாவுக்காக மட்டுமே ஓடுன ராமராஜன் படத்துல தான் தேவா அறிமுகம் ஆனாரு (மனசுக்கேத்த மகராசா)..  ரொம்ப நாள் வரைக்கும் அதெல்லாம் இளையராஜா போட்ட பாட்டுன்னு நெனச்சிட்டு இருந்தேன்...

ஆரம்பத்துல மணிரத்னம், ஷங்கர் மாதிரி காஸ்ட்லி இயக்குநர்களின் ஃபேவரைட்டா ரகுமானும், வருஷத்துக்கு 25 படம்னு வகைதொகையில்லாம அடிச்சு தள்ளிகிட்டு இளையராஜா இருந்ததும் தேவாவை "Budget Director's Ilaiyaraja"ன்னு அடையாளம் காட்டிச்சு...

அதக் கரெக்டா புடிச்சிகிட்டு தேவாவும் இளையராஜா பாணியிலயே ஜெராக்ஸ் எடுத்து தள்ளுனாரு.. உதாரணத்துக்கு கொஞ்சூண்டு....

  • ஆடியில சேதி சொல்லி - என் ஆசை மச்சான்
  • கூவுற குயிலு சேவல பாத்து - சோலையம்மா
  • நில்லடி என்றது உள் மனது - காலமெல்லாம் காத்திருப்பேன்
  • செம்பருத்தி செம்பருத்தி - வசந்த காலப் பறவை
  • ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா - கட்டபொம்மன்
  • சின்னப்பொண்ணு தான் வெக்கப்படுது - வைகாசி பொறந்தாச்சு
  • ஒத்தையடிப் பாதையில - ஆத்தா உன் கோயிலிலே
இதுபோக நம்ம "யங் தளபதி"யோட அப்பா S.A.C யோட படங்களுக்கெல்லாம் தேவா தான் அன்னிக்கு தேதிக்கு ஆஸ்தான இசையமைப்பாளர்..

ரசிகன், தேவா, செல்வா, விஷ்ணு, செந்தூரப்பாண்டினு (நல்லகாலம் விக்ரமன் பூவே உனக்காக எடுத்து தமிழ்நாட்டக் காப்பாத்துனாரு)

இந்த சமயத்தில் தான் மெல்லிசை மன்னரால் தேவா "தேனிசைத் தென்றல்"னு பாராட்டப் பட்டதெல்லாம்...

தேவா சார் கேரியர மூணு அஜித் படத்த வச்சு சொல்லிரலாம்...

ஆசை

1995ல வந்த இந்தப்படம் தான் "இளையராஜாவோட Copy Cat"  அப்டிங்கிற ஷெல்ல ஒடச்சு "தேவா டைப் மியூசிக்" அப்டின்னு ஒரு புதிய அடையாளத்த வாங்கிக் கொடுத்துச்சு... அதுமட்டுமில்லாம அதுவரை எஸ்.பி.பி, மனோ, ஜானகி, சுவர்ணலதான்னு இருந்த டிரென்ட மாத்தி ஹரிஹரன், உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம்னு ஒரு புது கூட்டணிய ஆரம்பிச்சு வச்ச படம்னும் சொல்லலாம்...

இந்த மூணு பேருமே ஏ.ஆர். ரகுமான் இசையில் அறிமுகம் ஆகியிருந்தாலும், இவங்க மூணு பேரையும்  தேவா அளவுக்கு படத்துக்கு ரெண்டு பாட்டு குடுத்து கதறக் கதற Parade எடுத்த ஆளு யாரும் இருக்கமாட்டாங்க...

பின்னாட்களில் வந்த வாலி, குஷி, ஆஹா, கண்ணெதிரே தோன்றினாள், காலமெல்லாம் காதல் வாழ்க, நேருக்கு நேர், அப்பு மாதிரி படப் பாடல்களை கண்ணமூடிகிட்டு கேட்டாலும் இது தேவா மியூசிக்குனு சொல்லவச்ச அந்த டிரெண்டுக்கு அஸ்திவாரம் இந்தப்படம்....

வான்மதி :

தனக்கு பெரிய பிரேக் கெடச்ச அஜித் காம்பினேஷன்ல அகத்தியன் கூட "மதுமதி"ன்னு ஒரு படம் பண்ணிட்டு 1996ல‌அதே ஜோடி மீண்டும் "வான்மதி" படத்துல சேந்துச்சு...

"லியோ கப்பாசா"

கேக்கும்போது என்னன்னே அர்த்தம்புரியாம ஏதோ ஒரு ரஷ்ய விஞ்ஞானியோட பேரு மாதிரி இருந்தாலும் இந்த்ப் பாட்டு அன்னிக்கு தேவா சார் கேரியர்லயும், தமிழ் சினிமா இசையிலும் ஒரு பெரிய ஷிஃப்ட கொண்டு வந்துச்சு...

எனக்கு தெரிஞ்சு தமிழ்சினிமாவின் முதல் கானா பாட்டு (அல்லது குறைந்தபட்சம் முதல் சூப்பர்ஹிட் கானா பாட்டு ) இதுவாகத்தான் இருக்கும்...

இந்தப் பாட்டு குடுத்த பிரேக்னால ஆளாளுக்கு அடிச்சுப் புடிச்சு தேவா சார் கிட்ட கானா பாட்டு வாங்க ஆரம்பிச்சாங்க..

அடுத்து அடுத்து வந்த கானா பாடல்கள் அன்னிக்கு காலேஜ் மாணவர்களின் தேசிய கீதமாவே மாற ஆரம்பிச்சது...

வடுகபட்டி, ஆண்டிபட்டி,குச்சனூருன்னு அதுவரைக்கும் கேட்ட ரசிகனுக்கு "ஆனை கவுனி, அயனாவரம், பார்டர் தோட்டம், காசிமேடுன்னு தேவாவோட கானா பாடல்கள் அறிமுகப் படுத்துன வார்ததைகள் எல்லாம் புதுசா இருந்தது...

  • கவலைப் படாதே சகோதரா - காதல் கோட்டை
  • அண்ணா நகர் ஆண்டாளு - காலமெல்லாம் காதல் வாழ்க‌
  • குன்றத்துல கோயில கட்டி - நேசம்
  • ஊத்திகினு கடிச்சுக்கவா - நினைவிருக்கும் வரை
  • கந்தன் இருக்கும் இடம் - காதலே நிம்மதி
  • குலுக்கி வச்ச கொக்ககோலா - உயிரிலே கலந்தது
  • திருப்பதி ஏழுமல வெங்கடேசா - நினைவிருக்கும் வரை
கிட்டத்தட்ட ஒரு 25 படமாவது இந்த மாதிரி பாப்புலர் கானா பாட்டு வந்த படம் Easy யா List Out பண்ணிரலாம்...

டாப் கியர போட்டு தூக்கு தூக்குனு தூக்க ஆரம்பிச்சாரு தேவா...

காதல் கோட்டை :

அதே 1996ல அதே அஜித்-அகத்தியன்-தேவா-சிவசக்தி பாண்டியன் கூட்டணியல வந்து இந்திய சினிமாவுலயே பெரிய ஹிட் அடிச்ச  காதல் கோட்டை தேவாவ எங்கேயோ கொண்டு போயிருச்சு..

அப்டியே ரெண்டு காலையும் பூஷ் பண்ணி... கிருட்டு கிருட்டு கிருட்டுனு போயிகிட்டெ இருந்தாரு தேவா...

ரஜினிக்கு அருணாசலம், அண்ணாமலை, பாட்ஷா... கமலுக்கு அவ்வை ஷண்முகி, PKS , பஞ்ச தந்திரம்..... விஜய்க்கும் அஜித்துக்கும் அன்னிக்கு தேதில வந்த 90% படங்கள்... இது போக பிரசாந்த்துக்கு கல்லூரி வாசல், கண்ணெதிரே தோன்றினாள், அப்பு... சரத்குமாருக்கு நட்புக்காக, பாட்டாளி, சிம்மராசி... இப்படி Top to Bottom,  Tamil Cinema Industryல‌ யார் நடிச்சு படம் வந்தாலும் இசை தேவா தான்னு ஒரு ட்ரெண்டு வர்ர அளவுக்கு அசுர வளர்ச்சி அடஞ்சாரு தேவா.. 80கள்ள இளையராஜா இல்லாம படல் இல்லனு ஒரு டிரெண்ட் இருந்துச்சே அதுக்கு கொஞ்சமும் குறையாத வளர்ச்சி...

இதுல ரெண்டு பேருக்கும் ஒரு சின்ன வித்தியாசம் உண்டு.. தான் உச்சத்துல இருந்தபோது தனக்கு நிகரா யாருமே வளரமுடியாத அளவுக்கு விஸ்வரூபம் எடுத்தது இளையராஜாவின் சாதனை.. சொல்லப்போனா முறியடிக்க ரொம்பவே கஷ்டமான சாதனை தான்..

ஆனா விக்ரமனுக்கு எஸ்.ஏ.ராஜ்குமார்...... , சரணுக்கு பரத்வாஜ்..... , மணிரத்னம், ஷங்கர், ராஜீவ் மேனனனுக்கு ரகுமான்...., பாசில், பாலுமகேந்திரா, ஆர்.வி.உதயகுமார் படங்களுக்கு இளையராஜா... இது போக உள்ளத்தை அள்ளித்தா, நாட்டாமை, கோகுலம்னு ஆடிக்கொண்ணு அம்மாவாசைக்கு ஒண்ணு ஹிட் குடுத்த சிற்பி இப்படி கடுமையான போட்டி இருந்த காலத்திலும் "He was able to make it possible"... அதனால தான் மொதல்லயே சொன்னேன் 90களில் தமிழ் சினிமா இசையை ஆண்டது தேவா தான் அப்டினு...

இதற்கான காரணங்கள் என்னன்னு கொஞ்சம் பாப்போம்....

80 கள்ல வளச்சு வளச்சு எடுத்த , சின்ன கவுண்டர், சின்ன ஜமீன், பெரிய மாப்பிள்ளை, பாட்டுக்காரன், மாட்டுக்காரன், பண்ணக்காரன், காவக்காரன் இது மாதிரியான படங்களும் அதில் இருந்த ஒரே மாதிரியான இசைவடிவமும் ரசிகனுக்கு சலிச்சு போனது...

அடுத்து வந்த College Era படங்களுக்கு (அஜித், விஜய், பிரசாந்த், 40 வயசானாலும் அசராமல் காலேஜுக்கு போன முரளி)  இளையராஜாவின் இசை பொருந்தாமல் போனது (இதயம் படம் மட்டும் விதிவிலக்கு)...

லா லா லான்னு ஒரே ஒரு டியூன வச்சுகிட்டு கொஞ்சம் கூட சளைக்காம எல்லா படத்துக்கும் போட்டுக்குடுத்த (ஹிட்டும் அடிச்ச) எஸ், ஏ. ராஜ்குமார்

டெக்னாலஜி வளர்ச்சியும், பெரிய பட்ஜெட் படங்களுமாய் எட்டமுடியாத உயரத்தில் இருந்த ஏ.ஆர்.ரகுமான்...

Folk Music ல‌ Vareity எதிர்பார்த்த  audienceக்கு தேவா, சபேஷ் குரல்களில் "கானா"னு ஒரு புதிய இசை வடிவம் கொடுத்த உற்சாகம்..

ஹரிஹரன், உன்னிகிருஷ்ணன் குரல்கள் விஜய், அஜித் மாதிரி இளம் நாயகர்களுக்கு பொருந்திப் போனது...

எல்லாத்துக்கும் மேல 5 தம்பிகள், கூடவே மகன் ஸ்ரீகாந்த் தேவான்னு 6 பேரோட வேலை செஞ்சதால மியூசிச் ஃபேக்டரி மாதிரி வருஷத்துக்கு 30 படம்னு பண்ணித் தள்ளுனாரு தேவா...

கிட்டத்தட்ட 10-13 வருஷத்துல 400 படங்களுக்கும் அதிகம்னு கணக்கு சொல்லுது விக்கிபீடியா...

Beetles கிட்ட சுட்டது,  LP கிட்ட ஆட்டைய போட்டது,  Back Street Boys ஆல்பத்தோட "Ctrl C - Ctrl V"ன்னு ஆயிரம் விமர்சனம் வந்தாலும், மில்லீனியத்தை ஒட்டி வந்த தேவாவோட பாடல்கள் அவரோட தனித்துவமான பாடல்களா தான் எனக்கு தெரியும்... உதாரணத்துக்கு....

  • அவள் வருவாளா -  நேருக்கு நேர்
  • பூசு மஞ்சள் பூசு மஞ்சள் - கனவே கலையாதே
  • ஒரு மணியடித்தால் உன் நியாபகம் - காலமெல்லாம் காதல் வாழ்க‌
  • கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு - வெற்றிக்கொடி கட்டு
  • மொட்டு ஒன்று மலர்ந்திட நினைக்கும் - குஷி
  • நிலவைக் கொண்டுவா - வாலி
  • கனவே கலையாதே - கண்ணெதிரே தோன்றினாள்
  • கொச்சின் மாடப்புறா - புருஷ லட்ஷணம்
  • கருடா கருடா - நட்புக்காக‌
  • முதன் முதலில் பார்த்தேன் - ஆஹா
  • மனசே மனசே குழப்பமென்ன - நெஞ்சினிலே

சொல்லிட்டே போகலாம்.. அவ்வளவு அருமையான பாடல்கள்...

2000 - 2010 ல இந்த வேகம் "சபேஷ்-முரளி", "ஸ்ரீகாந்த் தேவா" போன்றவர்கள் தனித்தனியா இசையமைக்க ஆரம்பிச்ச பிறகு கொஞ்ச கொஞ்சமா கொறைஞ்சு ஒரு கட்டத்துல நின்னே போச்சுன்னு சொல்லலாம்...

யுவன், ஹாரிஸ் மாதிரியான இசையமைப்பாளர்களின் வருகையும், அடுத்துவந்த ரத்தக்களரி வகை படங்களும், காலமாற்றம் ரசிகனுக்கு அடுத்த டிரெண்டை அறிமுகம் செய்துவைத்ததும் ஒரு முக்கிய காரணம்...

எது எப்படி இருந்தாலும் தமிழ் சினிமா இசையில் தேவாவுக்கென்று ஒரு மிகமுக்கியமான இடம் உண்டு...

அதை ஒதுக்கிவிட்டு தமிழ் சினிமை இசையின் வரலாற்றை சொன்னால் அது முழுமையானது அல்ல என்பதே உண்மை...

தேவா சார்!!!!!!!! You Should come back again and you will!!!!!!! ( மீசக்கார நண்பா..... உனக்கு ரோஷம் அதிகண்டா.......)

Friday, May 31, 2013

வீட்டுக்கு ஒரு இலவச ஜெனரேட்டர்!!!

பொதுவா IT Company Appraisal க்கு அடிப்படையே ரெண்டே ரெண்டு வார்த்தை தான்... ஒண்ணு Performance.. இன்னொண்ணு Value Addition..

குடுக்கற Rating க வாங்கிகிட்டு கும்புடு போட்டுட்டு போறவன டீல் பண்றதுக்கான வார்த்தை தான் Performance.. ஆனா சிம்புவ கலாய்ச்ச பிருத்திவிராஜ் மாதிரி "நான் வேலையே செய்யலன்னு எப்படி சொல்லலாம்"னு கேக்கற ஆளுங்கள டீல் பண்றதுக்கான வார்த்தை தான் Value Addition..

இந்த Value Addition அப்டிங்கிறது என்னன்னா..."services available at little or no cost, to promote their primary business" அதாவது கவுண்டமணி சொல்ர மாதிரி, மூணு அண்டாவுக்கு ஈயம் பூசுனா, ஒரு குண்டாவுக்கு Freeயா ஈயம் பூசிக் குடுக்குறது தான்..

Tele Communication Departmentல‌ மொதல் மொதலா அறிமுகமான இந்த Value Addition இன்னிக்கு நம்ம வாழ்க்கையில, இல்லாத இடமே இல்லைன்னு சொல்ற அளவுக்கு, பரம்பொருள் மாதிரி பார்க்குமிடமெல்லாம் நிறைஞ்சு போயிருக்கு...

ஒரு குழந்தை பொறக்குறதுக்காக Hospital ல அட்மிட் பண்ணும்போதே, எங்க Hospital ல பிரசவம் பாத்தா, ஒரு வருஷத்துக்கு DPT, BCG, Rotta Virus Vaccication Free அப்டின்னு ஆரம்பிச்சு, அந்த கொழந்தைய School ல சேக்க போனா, எங்க School ல Play School ல சேத்திங்கன்னா, LKG Admission Free அப்டின்னு தொடர்ந்து, Uniform வாங்க கடைக்கு போனா, எங்களது கடையில் 50% வரை தள்ளுபடி (15% க்கு மேல தரவே மாட்டங்ய, அதென்ன 50% வரைன்னு Scotland Yard தான் கண்டுபுடிக்கணும்) அப்டின்னு போயி, பின்னாட்கள்ல பொண்ணு பாக்கும் போது, கூட என்ன கார் தரீங்களா, இல்ல "பைக்"கான்னு கேக்கற வரை இந்த VAS சுத்தி சுத்தி வந்துட்டே இருக்கும்..

அட கையில ஒண்ணுமே இல்லன்னு லோன் வாங்க போனாகூட, எங்க பாங்க்ல லோன் வாங்குனா, processing fee discount அப்டின்னு அங்க கூட இந்த VAS பின்னாடியே வரும்..

இப்டியே எல்லாமே சும்மா தர்ராங்யளோன்னு நம்பி ஏமாந்திறக்கூடாது.. அதுக்கு தான் வச்சிருக்காங்ய VAT அப்டிங்கிற பேர்ல ஒரு ஆப்பு..உதாரணமா ஒரு ஓட்டல்ல போயி காபி மட்டும் குடுங்கன்னு கேட்டா, வலுக்கட்டாயமா ஐஸ் வாட்டர குடுத்துட்டு அதுக்கும் சேத்து காபிக்கு மேல 10% வரிய போட்டுத் தீட்டுனா அது தான் Value Added tax. (வட போச்சே...)

அது தனி டிராக்..

இப்படி எல்லாரும் போட்டி போட்டுகிட்டு அள்ளிக் குடுக்குறதுக்கு காரணம்... அடிப்படைலயே இலவசம், Discount அப்டின்னா நம்மாளுங்களுக்கு அது மேல ஒரு தனி மோகம்..

"Jar of Life"னு ஒரு கதை உண்டு..

 France ல‌ School of public Management ல ஒரு Professor தன்னோட students க்கு ஒரு task குடுத்தாரு.. ஒரு ஜாடில "பெரிய கற்கள், கூழாங்கல், மணல், தண்ணி" இத நாலையும் பயன்படுத்தி நிரப்பணும் அப்டின்னு.. இதை எந்த வரிசைல போடுறோம் அப்டிங்கிறதுல தான் அடிப்படை தத்துவமே... பெரிய கற்கள் நம்ம வாழ்க்கையோட முக்கியமான விஷயங்களை குறிக்கும்.. அதுக்கு தான் முதலிடம்.. அடுத்து அதவிட சின்ன கல், மணல், தண்ணி எல்லாமே.. மண்ணையும் தண்ணியையும் மொதல்லயே போட்ட்டுட்டா பெரிய கற்கள போட முடியாது..

அதே மாதிரி தான், தரமான கல்வி, தடையற்ற மின்சாரம், பாதுகாப்பான குடிநீர், நிலையான வேலைவாய்ப்பு மாதிரியான விஷயங்கள் இருக்கும்போது, அடுத்து என்னடா இலவசமா தருவாங்யன்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டோம்.. அத‌னால‌ தான் 150 ப‌க்க‌த்துல‌ 90 ப‌க்க‌ம் வெறும் விள‌ம்ப‌ர‌மாவே இருந்தாலும், முந்திரி ப‌ருப்பு பாக்கெட் Freeயா த‌ரான்னு தீபாவ‌ளி ம‌ல‌ர‌ Advance Booking ல‌ வாங்குறோம்..(அதுச‌ரி, ஒரு பிரியாணி வாங்குனா ரெண்டு அவிச்ச‌ முட்டை இல‌வ‌ச‌ம்னு போர்டு போட்ட‌ ஊரு தான‌ நாம‌...)

கவர்மெண்ட்ல இலவசமோ, மானியமோ தருதுன்னா அதுக்காக நம்மாளு என்னென்னவெல்லாம் பண்றான்..

நம்ம ஊரு கிராமத்து சைடுல ஒரு Trend உண்டு.. மழை நிவாரணத்துக்காகவே வீட்டுக்கு ஒரு மண் செவுரு வச்சிருப்பான்.. மழை பெய்ஞ்சு நனைஞ்சா அந்த செவுத்த ஒரு ஒத ஒதச்சு தள்ளிட்டு நிவாரணம் வாங்கி சரக்கடிச்சிரலாம்னு..

அதே மாதிரி வீட்டுக்கு 4 கார்டு வச்சிருப்பங்ய, இலவசமா எதாவது குடுத்தா மொத்தமா அடிச்சிரலாம்னு.. விவசாயத்துக்கு மானியம் குடுக்குறாங்கன்னா மொத ஆளா போயி.."நீங்களே பாசனத்துக்கு கொழா வச்சு குடுப்பீங்களா இல்ல கொழா புட்டு வச்சு குடுப்பீங்களான்னு"லைன் கட்டிருவாங்ய..

இது low level னா, middle level ல‌ ஒரு காமெடி ந‌ட‌க்கும்.. Election Duty போட்டா அதுக்கு பேட்டாவும் வாங்கிகிட்டு, Value Addition னு குண்டூசிலேர்ந்து, Bundle க‌ட்டுற‌ நாடா வ‌ரைக்கும், பொண்டாட்டி பாவாட‌ நாடாவுக்கு யூஸ் ப‌ண்ணிக்க‌லாம்னு தூக்கிருவாங்ய‌..

வீட்டுக்கொரு TV, Mixi, Grinder, Fan எல்லாமே இல‌வ‌ச‌ம்னா ஒரு நாளைக்கு 25 ம‌ணி நேர‌ம் க‌ர‌ண்ட் க‌ட் ஆகும்னாலும் க‌வ‌ல‌ப்பாடாம‌ ந‌ம்மாளு வாங்கிக்கிறான்..

நாகராஜசோழன் MA MLA படத்துல ஒரு டயலாக் வரும்.. "எல்லாத்தையும் இலவசமா குடுத்துட்டாங்க.. நாம ஆட்சிக்கு வந்தா என்னத்த குடுக்குரதுன்னு.. அதுக்கு மணிவண்ணன் ஒரு பஞ்ச் அடிப்பாரு "எல்லாத்தையும் குடுத்துட்டு கரண்ட்ட புடுங்கிட்டாங்க.. பேசாம வீட்டுக்கொரு ஜெனரேட்டர் இலவசம்"னு சொல்லுவோம்னு...

யாருக்கு தெரியும், இத‌க் காப்பிய‌டிச்சு அடுத்த‌ எல‌க்ஷ‌ன்ல‌ யாராச்சும் Follow ப‌ண்ணுனாலும் உண்டு.. ந‌ம்மாளுங்க‌ளும், எம் பேர்ல‌ ஒரு கார்டு.. எம் பொண்டாட்டி பேர்ல‌ ஒரு கார்டு.. எம் பைய‌ன் பேர்ல‌ ஒண்ணு.. மொத்த‌ம் மூணு ஜென‌ரேட்ட‌ர் குடுங்க‌ன்னு கூட கேப்பாங்ய‌...

இத எழுதும்போது தவிர்க்கவே முடியாம கரகாட்டக்காரன்ல கவுண்டமணி சொல்ர டயலாக் நியாபகம் வருது..

"அட‌ வ‌றுமைக்கு பொற‌ந்த‌வ‌னே.. டீக்கு அப்புற‌ம் மோரா?.. Freeயா குடுத்தா நீ பினாயில‌ கூட‌ குடிப்ப‌...!!!!!"

Monday, May 27, 2013

ம‌ச்சீ.. இன்னொரு குவாட்ட‌ர் சொல்லேன்!!!!!!!


முந்தி எல்லாம் எலக்ஷன்ல ஜெயிக்க 3 M வேணும்னு ஒரு Saying உண்டு, Man Power,  Money Power and Minister Power.. ஆனா இன்னைக்கி Trendடே வேற‌.. 3 B தான் முக்கியம்.. Batta, Biriyaani and Bottle..இதுல கடைசி ஐட்டத்த பத்தி தான் இந்த பதிவே..

உள்ளூர் சொடலமாடன் கோயில்ல படைக்கிற சாரயத்துல இருந்து, வாட்டிகன் சர்ச்ல படைக்கிற Wine வரைக்கும், சாமிக்கும் சரக்குக்குமே International Level Link இருக்கும் போது ஒரு மனுசன் ஏன் குடிக்க மாட்டான்..

அவ்வளவு ஏன், நம்மூர்ல மது ஒழிப்பு Meeting போடணும்னாலே கூட்டத்துக்கு ஆள் சேக்க, குவாட்டர் வாங்கி குடுத்து தான் கூட்டிட்டு வரவேண்டியிருக்கு...இத தெரிஞ்ச கவர்மெண்டும் டாஸ்மாக்க தொறந்து பாஸ்மார்க் வாங்கிருது..

குடிக்கிறதுக்கு ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு காரணம்.. Friend Compul பண்ணுனான், Weekend Treat, O C தண்ணி, ஆபீஸ்ல Outing இப்டி ஆரம்பிச்சு...Love Failure, Exam ல கோயிந்தா, Appraisal ல சங்கு இப்டின்னு போயி...சரக்கடிக்கலன்னா கைகாலெல்லாம் நடுங்கும்ன்ற வரைக்கும் ஏகப்பட்ட டைப் உண்டு...

இதே மாதிரி வில்லேஜ்லயும், "கருமாதி வீடு, கெடாவெட்டு, காளவா கொளுத்துறது, மாமா ஊர்லேந்து வந்திருக்காருன்னு ஆரம்பிச்சு தெனமும் குடிக்கிறதே, காலைல எந்திரிச்சு பல்லு வெளக்குற மாதிரின்னு பல ரகம் உண்டு..

சரக்கு அப்டிங்கிறதும் Newton's Third Law மாதிரி..

அத அடிக்கிறவன் எல்லாருக்கும் மப்பு வரும் இது "Equal Reaction".. ஆனா சில பேருக்கு கோவம் வரும், சிலருக்கு அழுகை வரும், சிலருக்கு தத்துவம் வரும், சிலருக்கு மூடு வரும், சிலருக்கு வாந்தியோட சேந்து உண்மையும் வெளில வரும்.. இதான் "ஆப்போ"சிட் ரியாக்ஷன்...

குடிகாரங்கள்ளையும் பல வெரைட்டி உண்டு.. சில‌ர் Professional Type..

Cheers சொல்லி ஆரம்பிக்கிறதுல இருந்து, விஸ்கிக்கு Soda , வோட்காவுக்கு Orange Juice, டக்கீலாவுக்கு Salt, ஜின்னுக்கு Lemonade இப்டின்னு அது அதுக்கு என்ன காம்பினேஷன்ன்னு பக்காவா குடிக்கிறதுல இருந்து, ஒயின் எப்படி குடிக்கிறது, Shooters எப்படி அடிக்கிறது, கடைசில Bottoms Up சொல்லி எப்படி முடிக்கிறது வரைக்கும் பக்கா சிலபஸ் வச்சிருப்பாங்ய...இது போக சரக்குல வெத்தலைய விட்டு ஆட்டிட்டு குடிக்கணும்னு செம‌ Professional Course வேற எடுப்பாங்ய..

அதே மாதிரி, எளநீர்ல சாராயத்த கலந்தடிக்கிறது, பழைய சோத்துல பச்சமொளகா, பட்டசரக்கு ரெண்டையும் மிக்ஸ் பண்ணி புது காக்டெயில கண்டுபுடிக்கிறதுன்னு வில்லேஜ்லயும் விஞ்ஞானிங்க நெரய பேர் உண்டு.. இட்லியையும், பீரையும் கலந்து அடிக்கிறது எல்லாம் இவங்ய முன்னாடி ஜுஜுபி...

அடுத்த டைப், கொஞ்சம் ரிஸ்க்கான ஆளுங்க.. ஓசி தண்ணி ஜாஸ்தி ஆகி அப்ரைசல பத்தி கூட கவலப்படாம, மேனேஜர அப்பு அப்புன்னு அப்புற அளவுக்கு ரைஸ் ஆகுற ஆளுங்க... இவங்ய கூட பெரும்பாலும் ஆபீஸ் ஆளுங்க தண்ணியடிக்காம இருக்குறது நலம்..

சில பேர் சென்ட்டி பார்ட்டிங்க.. ரெண்டு ரவுண்டு உள்ள போனதும் பேசுறத வச்சு நமக்கே சந்தேகம் வரும், நெதானத்துல இருக்கானா இல்ல மப்பு ஏறிடிச்சான்னு..

மொதல்ல சீரியசா தான் ஆரம்பிப்பாங்ய, "இந்த உலகத்துல எதுவுமே கரெக்ட் இல்ல மச்சி.. ஏன் இப்டி நடந்துக்குறாங்கன்னே தெரியல... நீ என்னடா நெனைக்கிற" அப்டின்னு ஒரு தூண்டில வீசுவாங்ய... பதில் சொல்லவும் முடியாம, சும்மா இருக்கவும் முடியாம ஒரு Feel இருக்கே.. (ஆனா ஒண்ணு.. சிக்குனோம்.. செதஞ்சோம்...)

"யாருக்குமே இரக்கமே இல்ல மச்சி.." (இதான் Code Word.. இவருக்கு ஏரிடிச்சு, நாளைக்கு காலைல வரைக்கும் எரக்கமே இல்லன்னு...)

"மச்சி... போனவாரம் Zoo லேந்து தப்பிச்ச Chimpanzee ய ஒரு பொம்பள வெளக்கமாத்தால அடிச்சிருச்சாம்டா.. ஏண்டா இந்த ஒலகத்துல யாருக்குமே எரக்கமே இல்ல.. அதுக்கு எவ்ளோ வலிச்சிருக்கும்.." (உன் கூட வந்ததுக்கு என்ன அடிச்சிருக்கலாம்..).

அப்புறம் தான் மேட்டருக்கு வருவாரு.. "மூணு வருஷம்டா...உட்டுட்டு போயிட்டா மச்சி.. முடியல மச்சீ...(யப்பா சாமி.. என்னாலயும் முடியலடா..).

இப்ப‌டி ஆர‌ம்பிக்கிற‌ அல‌ம்ப‌ல், அவ‌ரா பெரிய‌ ம‌ன‌சு வ‌ச்சு நிறுத்துனா தான் உண்டு..

இன்னும் வேற டைப் சலம்பல் உண்டு.. மடக்கு மடக்குனு மூணு ரவுண்ட எருமமாடு கழனித்தண்ணிய குடிக்கிற மாதிரி குடிச்சிட்டு, மேல தீனியையும் திணிச்சிட்டு அந்த எடத்துலயே மட்டையாயிடுவாங்ய..

சலூன் கடைல முடிவெட்டிக்க வர்ரவன விட‌ ஓசி பேப்ப‌ர் ப‌டிக்க‌ வ‌ர்ர‌வ‌ன் அதிக‌ம்ங்கிற‌ மாதிரி.. ச‌ர‌க்க‌டிக்க‌ வ‌ர்ரவ‌ன‌ விட‌, சைட் டிஷ்ஷ‌ க‌ரெக்ட் ப‌ண்ண‌ வ‌ர்ர‌ ஆளுங்க நெரைய உண்டு.. இதுல வீட்டுக்கு வேற போன போட்டு, நான் பெப்சி தாம்மா குடிக்கிறேன்..இவங்ய தான் குடிகாரப் பசங்கன்னு அசிங்கம் வேற படுத்துவாங்ய..

அதுலயும் சிலபேரு, நாளைக்கெல்லாம் சோறே கெடைக்காதுங்கிற மாதிரி, சிக்கன், சுண்டலு, வேர்க்கல்ல, பெப்சின்னு கண்டதையும் பிரி பிரின்னு பிரிச்சிட்டு, தண்ணியடிச்சவன் மறுநாள் பெட்ட விட்டு எந்திரிக்க முடியாம இருந்தா, இவிங்ய பாத்ரூம விட்டு எந்திரிக்க முடியாத நெலமைல இருப்பாங்ய.. (தண்ணியடிச்ச ஒனக்கே அப்படி இருந்தா, தண்ணி தண்ணியா போற எனக்கு எப்படி இருக்கும்..)

உள்ளூர் கண்ணதாசன், வாலில இருந்து வெளியூர், Bukowski, Charles Jackson வரைக்கும் கவிஞர்களுக்கும், சரக்குக்கும் எப்பவுமே ஒரு கனெக்டிவிட்டி உண்டு..

ம‌து எல்லாவ‌ற்றையும் ம‌ற‌க்க‌ச் செய்கிற‌து..
காத‌லோ.. உன்னைத் த‌விர‌
எல்லாவ‌ற்றையும் ம‌ற‌க்க‌ச் செய்கிற‌து.. (பிர‌மாத‌ம்... க‌வித‌.. க‌வித‌..)

அபின், கொகெய்ன் மாதிரியான போதைப் பொருட்கள் பழக்கத்த உடனே நிறுத்தமுடியும்.. ஆனா ச‌ர‌க்கு அப்டிங்கிற‌து, புலிவால் மாதிரி தான்.. புடிச்சா விட‌வே முடியாதுன்னு ப‌ல‌பேருக்கு தெரியாது..Barbiturates and Benzodiazepines மாதிரி கொடூர‌மான‌ கெமிக்க‌ல்ஸ் இருக்கிற சரக்கை அடிக்க பழகிட்டு, அத‌ நிறுத்த‌னும் நெனைக்கிற‌வ‌ன்.. தான் சாவுக்கு தானே "ட‌ண்ட‌ன‌க்கா" வாசிக்கிறான்னு தான் அர்த்த‌ம்..

அதெல்லாம் ந‌ம‌க்கெதுக்கு.. கோழி குருடா இருந்தாலும், கொழ‌ம்பு ருசியா இருக்கில்ல‌டா..

ம‌ச்சீ.. இன்னொரு குவாட்ட‌ர் சொல்லேன்!!!!!!!

Friday, May 10, 2013

ஆத்தா நான் பாஸாயிட்டேன்ன்ன்!!!!!!!

பொதுவா நம்ம ஆளுங்க டாக்டர்கிட்ட போய் சொல்ற விஷயம்... "டாக்டர்.. என்னன்னே தெரியல ஒரே காச்சலா இருக்கு..." அப்டின்னு.

வந்த இளிச்சவாயன அந்த டெஸ்ட்டு, இந்த டெஸ்ட்டு எல்லாம் எடுத்துட்டு, டாக்டர் தன்னோட ரிப்போர்டல "PUO" (Pyrexia of Unknown Origin) அப்டின்னு எழுதுவாரு.. "Pyrexia" ன்னா காச்சல்... Unknown Origin அப்டின்னா, எதுனால வந்துச்சுன்னே தெரியல.. அவன் டெஸ்ட்டுக்கு முன்னாடி சொன்ன அதயே தான் சுத்தி சுத்தி எழுதிவச்சிருப்பாரு...

உண்மையிலேயே எல்லா மனுஷனுக்கும் எப்படி வந்துச்சுன்னே தெரியாத ஒரு காச்சல் வரும்.. அது வந்தா, Chemistry book க தொரந்தாலே "மானாட மயிலாட" ல கலாக்கா சொன்ன கமெண்ட்டெல்லாம் நெனப்புக்கு வந்து பயமுறுத்தும்... Thallophyta வும் Bryophyta வும் தலய சுத்து சுத்துன்னு சுத்தும்... Cyclotran பத்தி நெனச்சாலே Roller Coaster la சுத்தி வாந்தி எடுத்த Feel வரும்...

கரெக்ட்... Exam Fever தான் அது...

Exam Fever கூட சூப்பர் ஸ்டார் மாதிரி தான்... எப்போ வரும் எப்படி வரும்னு தெரியாது...

சிலருக்கு.. Exam தேதிய பாத்த உடனே வரும்... சிலருக்கு.. Hall Ticket பாத்த உடனே வரும்...சிலருக்கு... Question Paper பாத்த உடனே வரும்... சிலருக்கு.. ரிசல்ட் Paper பாக்கும் போது தான் வரும்...

பரீட்சை Time ல பெருசுங்க பண்ற டார்ச்சர் இருக்கே..

கேபிள் கனெக்ஷன புடுங்கறதும்... வீட்டுக்கு வர்ர Friends எல்லாரையும் IPL ஆடவந்த Srilankan Players மாதிரி வெரட்டி அடிக்கிறதும்...காலங்காத்தால தலைல தண்ணிய கொட்டி கெளப்புறதும்... நடுராத்திரி வரைக்கும் பந்தோபஸ்த்துக்கு வந்த கான்ஸ்டபிள் மாதிரி "என்ன லுக்கு.. படி படி.."ன்னு  ரவுண்டு கட்டுறதும்.. ஓழுங்கா இல்லன்னா Half Yearly ல வாங்குன "ஆம்லெட்ட்"யெல்லாம் விருந்துக்கு வந்த மாமா பொண்ணு கிட்ட காட்டிருவேன்னு மெரட்டுரதும்... (மாமா பொண்ணு கிட்ட காட்டுற விஷயமாய்யா அது..) International Level அலப்பறைய குடுப்பாய்ங்க..

இவிங்ய இப்படின்னா, பசங்க பண்ற லந்து பல டைப்புல இருக்கும்...

பொதுவாவே இந்த‌ ப‌ரீட்சை நேர‌த்துல‌ வீட்டுக்கு வ‌ர்ர‌ ஆளுங்க‌ எல்லாமே சொல்ற‌ வார்த்தை "ப‌ர‌வால்லையே...பைய‌ன் ரொம்ப‌வே மாறிட்டான்.." அப்டிங்கிற‌துதான்..

ஆனா அது என்ன‌ மாதிரி மாற்ற‌ம் அப்டிங்கிற‌துதான் முக்கிய‌ம்..

Exam சில‌பேர‌ ப‌க்திமான் ஆக்கிடும்.. காலைலயே எந்திரிச்சு குளிச்சு, பொங்க‌லுக்கு வெள்ளைய‌டிச்ச‌ செவுரு மாதிரி நெத்தி நெறைய‌ ப‌ட்டைய‌டிக்கிற‌துல‌ ஆர‌ம்பிச்சு, ஊர்ல‌ ஒரு சாமி விடாம‌ வெர‌ட்டி வெர‌ட்டி கும்புட்டு, கோயில் சுவ‌த்துல‌ Exam
 ந‌ம்ப‌ர‌ எழுதிவ‌ச்சு..க‌டைசில‌ ப‌ரீட்சை பேப்ப்ர்ல‌ "உ" "ப‌தினெட்டாம்ப‌டி பெரிய‌க‌ருப்ப‌ண்ண‌சாமி துணை"னு எழுதுற‌ வ‌ரை போயி நிக்கும்...

Exam சில‌பேர‌ விஞ்ஞானி ஆக்கிடும்.. த‌ல‌கீழா நின்னு ப‌டிக்கிற‌து (Straight டா மூளைக்கு ஏத்துறாராமா...).. ஞான‌ப்ப‌ழ‌த்துக்கு கொட்டை இருக்குமா? இருக்காதா?ன்ற‌ மாதிரி எப்ப‌வுமே ஒரு கேள்வியோட‌ அலையிற‌து... 20 ம‌ணி நேர‌ study, night out study ன்னு ப‌டிச்சி, க‌டைசில‌ எதுவுமே புரியாம‌ பிம்பிளிக்கி பிலாப்பி ஆகுற‌து.. (மாமா பிஸ்கோத்து!!!)

Exam சில‌ பேர‌ Dietecian ஆக்கிடும்.. காலைல‌ மூணு ம‌ணிக்கு "டீ"ல‌ ஆர‌ம்பிக்கும்.. அப்புற‌ம் வெண்டைக்காய் குழ‌ம்பு, வெண்டைக்காய் பொரிய‌ல், வெண்டைக்க‌ய் ர‌ச‌ம்னு வெண்டைக்காய‌ வெளுத்து வாங்குற‌து.. இது போக‌ வ‌ல்லாரைக் கீரை, பிர‌ம்மி மூலிகை, Memory Plus மாத்திரைன்னு,Garry Kasparovக்கே கேரி க‌ண்டுடும் அள‌வுக்கு மெம‌ரி மேட்ட‌ர்ல‌ ஒரு மூலிகை ஆராய்ச்சியே ப‌ண்ணிருவாங்ய‌..

Exam சில‌பேர‌ க‌விஞ‌ரா கூட‌ ஆக்கிடும்..

"உன்னால் சாமிக‌ளுக்குள் ச‌ண்டை
நீ மார்போடு அணைத்து வ‌ரும்
ப‌ரீட்சை அட்டையில்
யார் இடம் பிடிப்பது என்று..."

இந்த ரேஞ்சுல கூட யோசிப்பாங்ய.. (ராஜா.. இவ்வளவு ரணகளத்துலயும் உனக்கு ஒரு கிளுகிளுப்பு..)

Last Bench பார்ட்டிங்க பண்ற சேட்டை தான் ஹைலைட்டே...

மச்சான்.. 10 மணிவரைக்கும் தூங்கிட்டு அப்புறமா ஸ்டார்ட் பண்ணுவோம்டானு ஆரம்பிக்கும்.. ஆனா அலாரம் மட்டும் ஐகோர்ட் தீர்ப்பு மாதிரி தள்ளி தள்ளிப் போயி விடிஞ்சிரும்..அப்புறம் அடுத்த கட்டமா "பிட்டு" பிட்டுக்கு "Index Bit" இப்டின்னு போட்டு அதுவும் செட் ஆகாம முன்னால இருக்கிறவன சொரன்டி, கூப்புட்டு பாத்துலாம் கரெக்ட் பண்ணி கடைசில எதுவுமே ஒர்க் அவுட் ஆகாம, "நான் பாவம்.. என்னை எப்படியாவது பாஸ் ஆக்கிவிடுங்கள்"னு Exam பேப்பர்லயே வாத்தியாருக்கு லெட்டர் எழுதுர வரை இவிங்ய லந்து களைகட்டும். (எதையுமே பிளான் பண்ணி பண்ணணும்..ஓகே)..

இன்னும் வினோத‌மான‌ ஆளுங்க‌ உண்டு.. எதாச்சும் ஒண்ண‌ ப‌டிச்சு வ‌ச்சுகிட்டு, எத‌க்கேட்டாலும் அதையே சுத்தி சுத்தி ரெண்டுபக்க‌த்துக்கு வெளாசுற‌து.. உதார‌ண‌த்துக்கு.. "ப‌சு" ப‌த்தி ப‌டிச்சுவ‌ச்சிகிட்டு.. அங்க‌போயி "விமான‌ம்" ப‌த்தி கேட்டாலும், "விமான‌ம் உய‌ரே ப‌ற‌ந்தது" அப்டின்னு ஆரம்பிச்சு.. அதிலிருந்து பார்த்தால் கீழே ப‌சு தெரிகிற‌து..ப‌சு ந‌ல்ல‌ வில‌ங்கு, அது பால் த‌ரும்...னு ப‌சுவ‌ ப‌த்தி ரெண்டு ப‌க்க‌ம் எழுதிருவானுங்க‌..

இதெல்லாத்துக்கும் மேல‌, School ல பண்ற அலப்பறை இருக்கே...

Test, Mid term, Quaterly, Revision, Hope Test... Special Class, Coaching Class, Summer Course, 7 to 7 class... (ஸ்ஸ்ஸ்..ஓவ‌ரா க‌ண்ண‌க் க‌ட்டுதே)..

இதெல்லாம் ப‌ண்ணி, ப‌டிக்க‌த்தான் வ‌க்கிறாங்க‌ளோன்னு ந‌ம்ம்ம்பி ஏமாந்திற‌க்கூடாது..

வாச‌ன் ஐகேர் விள‌ம்ப‌ர‌த்துல‌ வ‌ர்ர‌ மாதிரி, க‌ண் பிர‌ச்சினையா, ப‌ல் பிர‌ச்சினையா.."நாங்க‌ இருக்கோம்"..னு சொல்ற‌ மாதிரி

Practical ல பிரச்சினையா... Result ம‌ன‌ப்பாட‌ம் ப‌ண்ணிடு.. நாங்க‌ இருக்கோம்...
Exam ல பிரச்சினையா.. Blueprint ம‌ன‌ப்பாட‌ம் ப‌ண்ணிடு.. நாங்க‌ இருக்கோம்... அப்டின்னு உண்மையில‌யே ப‌டிக்கிற‌ ப‌ய‌லுங்க‌ள‌ கூட‌ காலி ப‌ண்ணிருவாங்ய‌...

இத ந‌ம்பி ந‌ம்ம‌ ப‌யலுவ‌ளும், ம‌ச்சான் 3rd lesson ல‌ "5 Mark" மட்டும் தான்.. 5th lesson ல‌ "10 Mark" ம‌ட்டும் தான்னு Template வ‌ச்சி க‌ரெக்ட் ப‌ண்ணி, க‌டைசில‌ மூணு "2 Mark " க சேத்து, ஒரு "5 Mark" ல‌ கேட்டா ப‌தில் தெரியாம‌, மாடிலேந்து குதிச்சிட‌லாமான்னு யோசிக்கிரதும்...‌ "நம்ம‌ ப‌ச‌ங்க‌ ரொம்ப‌வே மாறிட்டாங்க‌" அப்டிங்கிற‌ வ‌ரிய‌ உறுதிப்ப‌டுத்திட்டே இருப்பாங்க‌..

"Ivan Pavlov"ன்னு ஒரு Russian Scientist அனிச்சையா ந‌ட‌க்கிற‌ செய‌ல‌க்கூட‌ தொட‌ர்ந்து ப‌ழ‌க்க‌த்தினால் மாத்த‌முடியும்னு (Conditional Reflex) சொன்னாரு.. அவ‌ரு ஒரு 4 நாய‌ வ‌ச்சிகிட்டு ஒரே ஆள‌விட்டு குறிப்பிட்ட‌ நேர‌த்துல‌ சாப்பாடு போட்டா, கொஞ்ச‌ நாள்ல‌, சாப்பாட‌ பாத்தா சுர‌க்க வேண்டிய‌ உமிழ்நீர் அத‌ கொண்டுவ‌ர்ர‌ ஆள‌ப்பாத்தாலே சுர‌ந்த‌துனு நிரூபிச்சாரு..

அதே மாதிரி தான்..இய‌ல்பாவே ப‌டிக்க‌ணும்னு நென‌க்கிற‌ ப‌ச‌ங்க‌ளுக்கு கூட‌ இல்லாத‌த‌யெல்லாம் சொல்லிக்குடுத்தா இதான் க‌தி...

ந‌ச்சுன்னு ந‌ம்ம‌ நாட்டாமை சொல்ற‌ மாதிரி

"செல்லாது.. செல்லாது.. பொங்க‌ப் பானைய‌ தெருவுல‌ வ‌ச்சா நாய் ந‌க்க‌த்தாண்டா செய்யும்.."

இதையும் மீறி ஜெயிச்ச‌வ‌ன் ம‌ட்டும் ச‌ந்தோஷ‌மா சொல்லுவான் "ஆத்தா நான் பாஸாயிட்டேன்ன்ன்!!!!!!!!"

Wednesday, April 24, 2013

ஸ்மைல் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்...

பத்து நாள் முன்னாடி தமிழ் நாட்டோட ரெண்டு முக்கிய கட்சிகளும் ஒரு "போட்டோ"போட்டி போட்டுகிட்டாங்க..


அதாவது மம்மிய பாத்த எம்.எல்.ஏக்கள் எப்படி கும்புடுவாங்க.. தலைவர பாத்த உடன்பிறப்புக்கள் எப்படி கும்புடுவாங்கன்னு... அப்பவே முடிவு பண்ணிட்டேன்.. போட்டோவ வச்சி பண்ற அலப்பறையப் பத்தி தான் அடுத்த பதிவுன்னு...

ஆத்துக்குள்ள அந்தர்பல்டி அடிச்ச பஸ்ஸா இருந்தாலும் சரி, ஆண்ட்ரியாவும் அனிருத்தும் அடிச்ச கிஸ்ஸா இருந்தாலும் சரி...பத்து வரில சொல்லுற விஷயத்த பச்சக்குனு ஒரே ஒரு போட்டோ சொல்லிடும்.. அதான் அதோட மகத்துவமே...

அது மட்டுமில்ல.. Photo அப்டிங்கிறதும் தமிழ் மக்கள் வாழ்க்கைல இரண்டறக் கலந்து போன பல விஷயத்துல ஒண்ணு...

பழைய காலத்துல நம்ம வீட்டுல எல்லாம், என்னமோ காத்தால Breakfastக்கு கால் லிட்டர் Fevicol குடிச்சுட்டு வந்த மாதிரி, வெறப்பா, கேமராகாரன மொரச்சுப்பாத்துட்டு இருக்கிற மாதிரி படம் வீட்டுக்கு ஒண்ணு கண்டிப்பா இருக்கும்...

அப்படி ஆரம்பிச்ச நம்ம Photo ஆர்வம், Poster, Cut Out, Vinyl Banner அப்டின்னு தொடர்ந்து, வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்னு Flex Boardக்கு அம்மை வாத்த மாதிரி எங்க பாத்தாலும் ஒரே Photo மயமா இருக்கு...

நம்ம பயபுள்ளைக Photo ஆர்வத்த இன்னும் தீயா வளத்துவுட்ட பெருமை "Facebook"க்கு உண்டு..

ஒரு குழந்தை பொறந்த உடனே "Blessed with a Baby"னு "Facebook" ல ஆரம்பிக்கிற சேட்டை, அடுத்த வருஷமே "Sattelite TV Channel" ல Photo போட்டு "Song Dedicate" பண்றதுன்னு தொடர்ந்து,

பின் நாட்கள்ல "Somaliya"வுக்கு ஆன்சைட் அனுப்பிவச்சாலும், சுவிட்சர்லாந்துக்கு "Honey Moon" போன மாதிரி "Facebook" ல Photo வ‌ போட்டு "Buddy Rocks in Somalia!!!"னு அலப்பறைய குடுக்குறதாகட்டும்..

மானஸ்தன் தங்கச்சி "அழகுமணி" மாதிரி இருந்தாலும், பொண்ணுங்க Photo போட்டாலே, Chris Gayle செஞ்சுரி அடிச்ச மாதிரி மூணு நிமிஷத்துல முப்பது கமெண்ட் அடிக்கிறதும், தமிழ்கூறு நல்லுலகத்தின் Photo ஆர்வத்துக்கு Facebook செஞ்ச பெரிய சேவை..

IT வந்து தான் Photo ஆர்வத்த வளத்துச்சான்னு நீங்க கேக்கிறது நியாயம் தான்.. Passport Size photo எடுக்கணும்னாலே, அஞ்சாம்ப்புல அஞ்சு அரியர் வச்ச ஆளு கூட அம்பானி வூட்டு மருமவப்புள்ள மாதிரி, கோட்டு போடாம நாம எடுக்கவே மாட்டோமே...

இப்படி ஆரம்பிக்கிற இவிங்க‌ சேட்டை, தமிழகத்தின் இமயமே, கரிகால் சோழனே, கல்விக் காவலரே, அறப்பணிச் செம்மலே அப்டின்னு வேற ரேஞ்சுல ரெக்க கட்டும்.. (அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!!)

கடைசில கண்ணீர் அஞ்சலி போஸ்டர்ல "மாடவிளக்கே"ன்னு photo வோட கொட்டை எழுத்துல போடற வரைக்கும் photo விடாம வாழ்க்கை முழுக்க சுத்தி சுத்தி வந்துட்டே இருக்கு..

அவ்வளவு ஏன், ஒரு மனுசன் செத்ததுக்கு அப்பறம்கூட, "குண்டு பல்பு, பூ, ஊதுபத்தி"ன்னு அவனுக்கு மரியாதைய வாங்கிக் குடுக்கிற ஒரே விஷயம் photo மட்டும் தான்..

த‌மிழ் சினிமாவுக்கும் இந்த‌ photo வெறிய‌‌ வ‌ள‌த்துவிட்ட‌ பெரிய‌ ப‌ங்கு உண்டு...
மூஞ்சியே பாக்காம‌ ல‌வ் ப‌ண்ற‌ ஹீரோ கூட‌ "நிழ‌ற்ப‌ட‌ம் அனுப்பிடு என்னுயிரே"னு நைசா நூல‌ உட்டு பாப்பாரு.. ஆனா அந்த‌புள்ள வெவரமா "நிஜ‌மின்றி வேறில்லை என்னிட‌மே"னு ப‌திலுக்கு ஆஃப் Kg திருநெல்வேலிய‌ குடுத்து உட்டுரும்..

சுருக்கமா சொல்லணும்னா, ப‌ட‌ம் ரிலீஸ் ஆக‌ லேட்டானா கூட‌ கொற‌ஞ்ச ப‌ட்ச‌ம், photo போட்டு Stamp ஆவ‌து ரிலீஸ் ப‌ண்ண‌லைன்னா சினிமால‌ கெத்து போயிரும்...

photo புடிக்க‌ ந‌ம்மாளுக‌ ப‌ண்ற‌ அல‌ப்ப‌றை இப்ப‌டின்னா, photo புடிக்கிற‌வ‌ங்ய‌ ப‌ண்ற‌ கொடுமை இன்னும் ப‌டு காமெடி..

க‌ல்யாண‌த்துக்கு அட்வான்ஸ் குடுக்கும்போதே, "ஹோட்ட்ல்ல..சாருக்கு ரெண்டு இட்லி ம‌ட்டும் தானா, இல்ல‌ தோச‌, காப்பி எதாவ‌து"னு கேக்க‌ற‌ மாதிரி, photo ம‌ட்டும் தானா, வீடியோ ஆல்ப‌ம் உண்டா..ஆல்பத்துல கரிஷ்மா போட்டுரலாமா.. அவங்க தங்கச்சி கரீனாவ போட்டுரலாமானு கேட்டு டெர்ர‌ர‌ ஸ்டார்ட் ப‌ண்ணுவாங்ய‌..

அஞ்சு ம‌ணி நேர‌ம் அக்கினி குண்ட‌த்துக்கு ப‌க்க‌த்துல‌ உக்கார‌ வ‌ச்சு அவிச்சு எடுத்த‌துக்க‌ப்புற‌ம் வ‌ந்து.. "சார்.. அப்டியே ஒரு ரொமான்டிக் லுக் ஒண்ணு உடுங்க‌.. மேட‌ம்.. உங்க‌ Chin ன‌ சார் Shoulder ல‌ வ‌ச்சு, அப்டியே Turn ப‌ண்ணி... (டேய்..டேய்..டேய்.. உங்க‌ள‌ எல்லாம் கும்பீபாக‌த்துல‌ த‌ள்ளி கொல்ல‌ணும்டா...)

க‌டைசில‌ photo டெலிவ‌ரி எடுக்க‌ போகும்போது தான் ஹைலைட்டே.. உள்ள‌ போகும்போது South Africaவுக்கு போன காந்தி மாதிரி போற ஆளுகூட, உள்ளவச்சு மொத்த "காந்தி"யையும் உருவி எடுத்ததுக்கு அப்புறம், உப்பு சத்தியாகிரத்துக்கு போன காந்தி மாதிரி வெளில வருவாரு..

இத எழுதும் போதே Stephen Leacock எழுதுன "With the Photographer" நினைவுக்கு வருது..

Leacock ஒரு ஸ்டுடியோவுக்கு photo எடுக்க போவாரு.. அங்க இருக்குற Photographer, குனி, நிமிரு, சிரின்னு அவர படுத்தி எடுத்துட்டு மூணு நாள் கழிச்சு வான்னு சொல்லுவான்.. இவரும் 3 நாள் கழிச்சு போகும் போது ஒரு போட்டோவ அவருகிட்ட குடுப்பான்...

அவரு அதப்பாத்து ஷாக் ஆகி இது என்ன மாதிரியே இல்லையே இந்தப் புருவம் வேற மாதிரி இருக்கேன்னு கேப்பாரு.. அதுக்கு அவன்.. ஆமாம் எனக்கு உன் புருவம் சுத்தமா புடிக்கல அத "Alter" பண்ணிட்டேன்.. இப்ப சூப்பரா இருக்குல்ல??.. இத நாங்க "Delphide"னு சொல்லுவோம் அப்டிம்பான்..

இந்த தாடை என்னோடத மாதிரியே இல்லையேம்பாரு.. அதுக்கும் அவன்..ஆமா..Photoக்கு அது எடுப்பா இல்ல.. அதையும் "Alter" பண்ணிட்டேன்.. இப்ப சூப்பரா இருக்குல்ல??.. இத நாங்க "Sulphide"னு சொல்லுவோம் அப்டிம்பான்..

அதுக்கு Leacock ஒரு பதில் சொல்லுவாரு..

 "இந்த முகம் என்னோடது.. அது எப்படி இருந்தாலும் அது என்னுடையது.. அத மாத்த வேண்டிய எந்த அவசியமும் இல்ல... இங்க நான் Photo எடுக்க வந்ததே.. நான் இறந்த பிறகு என் நினைவாக என் நண்பர்களிடம் இருக்கத்தான்.. உனக்கு வேணும்னா உன் Photoவ எடுத்து, அதுல "Delphide, Sulphide, Oxide, Bromide, Cowhide" எந்த கருமத்த் வேணும்னாலும் பண்ணிக்கோனு சொல்லிட்டு வெளில வருவாரு..

உண்மையில் இந்த Photo பலருக்கு ரொம்பவே சென்டிமென்டான விஷயம்.. இசைஞானி இளையராஜா, தினமும் ரெக்கார்டிங் போறதுக்கு முன்னாடி தன்னோட அம்மா Photo வுக்கு "மம்மி டாட்டா"னு சொல்லிட்டு தான் கெளம்புவாரு.. அம்மா நிஜமென்றால்..Photo எடுத்த தருணம் நிஜமென்றால்.. அந்த Photoவும் நிஜம்னு அதுக்கு அர்த்தம் சொல்லுவாரு..

நடிகர் சிவகுமார் ஒரு பேட்டில, "ஒரு லட்சம் ஃப்ரேம்லயாவது என் Photo இருக்கும்.. ஆனா சின்ன வயசுல என்னோட ஸ்கூல்ல எடுத்த என்னோட குரூப் போட்டோ என்கிட்ட இல்ல"ன்னு உருக்கமா சொன்னாரு.. இப்படி Photo பலருக்கும் நிஜத்துக்கு ரொம்ப நெருக்கத்துலயே இருக்கு..

ஆழ‌மாவும் அழுத்த‌மாவும் சொல்ல‌ணும்னா... தோட்டத்து ஆப்பிள உதட்டுக்கும், தோட்டாக்களை மார்புக்கும் தின்னக் கொடுத்த ஒரு சின்னப் பையனோட ஒரே ஒரு Photo தான் ஒட்டு மொத்த‌ த‌மிழ்நாட்டையே வீதிக்கு வந்து போராட‌ வ‌ச்சிருக்கு...



எல்லாம் ச‌ரி.. டாடீ.. எனக்கு ஒரு டவுட்டு.....

விஜய் Photo போட்ட ஸ்டாம்ப "தபால் தளபதி"னு தான சொல்லனும்.. அப்பறம் ஏன் தபால்"தல"னு சொல்லறோம்... சொல்லுங்க டாடி சொல்லுங்க.. சொல்லுங்க டாடி சொல்லுங்க..

Monday, April 1, 2013

என்ன சித்தப்பு.. சாப்டீங்களா?????

நடிகவேள் எம்.ஆர்.ராதா ஒரு படத்துல சொல்லுவாரு "வெள்ளக்காரன் நீராவில ரயில் எஞ்சின செஞ்சு ஊரெல்லாம் உடறான்.. நம்மாளுக என்னடான்னா அதே நீராவில புட்டு செஞ்சு உள்ள உடறான்..னு...

இது ஒரு நையாண்டியா இருந்தாலும்..சாப்பாட்டு விஷ‌ய‌த்துல‌ ந‌ம‌க்கு இருக்குற Creativity‌ யே த‌னி தான்..

தேவர் மகன் சிவாஜி ஸ்டைல்ல சொன்னா, பெருமாள் கோயில்ல சக்கரப்பொங்கல் குடுக்கறான்னு கூப்புட்ட உடனே, குடுகுடுன்னு ஓடிப் போய் மொத வரிசைல நின்னாம் பாரு..அதுல முக்காவாசிப்பய நம்ம பயதேன்... அவனப் போயி ரயில உடுறான்னா எப்புடி உடுவான்.. ரவுண்டு கட்டி அடிச்சிட்டு ஏப்பந்தேன் உடுவான்...



Fridge கண்டுபுடிக்கும் முன்னாடியே புளியோதரைய கண்டுபுடிச்சு ஒரு மாசம் வச்சு அடிச்சதும் அவிங்க்ய தான்.. Fridge கண்டுபுடிச்சதுக்கப்புறம் கருவாட்டு கொழம்ப ஒரு வாரம் உள்ள வச்சு Combination ல அடிக்கலாம்னு கண்டுபுடிச்சதும் அவிங்க்ய தான்..

மத்த எடத்துல எல்லாம் சிக்கன் மஞ்சூரியா, மட்டன் கோலாபூரின்னு ஊர் பேர்ல ஃபேமஸான ஐட்டம் அங்க ஒண்ணும் இங்க ஓண்ணுமா இருக்கும்..

ஆனா, காஞ்சிபுரம் இட்லி, மதுர வீச்சு புரோட்டா, விருதுநகர் கொத்து புரோட்டா, ராஜபாளையம் கோலா உருண்ட, ஆம்பூர் பிரியாணி, திருநெல்வேலி அல்வா, திருவையாறு அசோகான்னு தமிழ்நாட்டுல 234 தொகுதிக்கும் எதாச்சும் ஒரு ஐட்டத்த கண்டுபுடிச்சு அத‌ Famous ஆக்குனது மட்டுமில்லாம, கல்யாணம், காதுகுத்துன்னு எல்லா எடத்துலயும் அத கட்டு கட்டுன்னு கட்டுனதுலயும் நம்மாளு Creativity யாருக்கும் வராது...

அந்த அளவுக்கு சாப்பாட்டுக்கும் அவனுக்கும் எப்போதும் ஒரு லிங்க் இருந்துட்டே இருக்கும்..

சாப்பாட்ட பக்தனுக்கு குடுத்தா பிரசாதம், பள்ளிக்கூடத்துல குடுத்தா அது சத்துணவு, கட்சிக்காரனுக்கு குடுத்தா அது எலக்ஷன் பிரியாணி, கடவுளுக்கு குடுத்தா அது நிவேதனம், இல்லாதவனுக்கு குடுத்தா அதுக்கு பேரு பிச்ச.. ஆனா இருக்குறவனுக்கே குடுத்தா அதுக்கு பேரு தான் TREATTU!!!!

"தலக்கறி கொளம்புன்னா தங்கச்சி வீட்ல தான் சாப்புடணும்னு சொல்லுவேன்.. அதுலயும் குறும்பாடு...ம்ம்ம்ம்.. கேக்கணுமா" அப்டின்னு பாசத்த காட்டுறதும்..

எலையில விழுந்த Leg Piece சின்னதா இருந்தா (அதென்ன ரம்பா தொடையாடா பெருசா இருக்க??) கோவத்துல வெரண்டு பங்காளியோட சங்க கடிக்க போறதும்...

அப்புறம் சமாதானமா போயி, "டேய் நீ கொஞ்ச நேரத்துக்கு முந்தி சத்தம் போட்ட பயலாச்சேடா.. இங்க என்னடா சாதம் போட்டுகிட்ருக்க.." அப்டின்னு நாமளே மண்ட காஞ்சு போற அளவுக்கு மறுபடி பாசத்துல கட்டிபொரள்றதும்.. அவனுக்கு எல்லாத்துக்குமே சாப்பாடு தான் ஒரு காரணகர்த்தா...



சாப்பாட்டு ஐட்டத்த வச்சே ஒரு தமிழனோட கல்வித்தகுதிய என்னன்னு கண்டுபுடிச்சுடலாம்..

கத்திரிக்கா, வெண்டக்கா, சின்ன வெங்காயம் னு சொன்னா, அவன் பஞ்சாயத்து ஸ்கூல் ல படிச்சவன்னு அர்த்தம்..

அதையே Brinjal, Ladies finger, Onion னு சொன்னா அவன் இங்கிலீஷ் மீடியத்துல படிச்சவன்னு அர்த்தம்...

அதையே Aubergene, Oakra, Shallots னு சொன்ன அவன் ஆன்சைட்டுக்கு போயிட்டு வந்த IT Employee னு அர்த்தம்..

அவ்வளவு ஏன்.. ஒட்டுமொத்த திராவிட இனத்தின் வரலாறையே ஒரு கரண்டி அரிசி மாவுல சொல்லிறலாம்..


அத கொழாயில போட்டா அது கேரளா புட்டு,
கிண்ணத்துல ஊத்துனா அது தமிழ்நாட்டு இட்லி,
கல்லுல ஊத்துனா அது தோசை..
அதுலயே கொஞ்சம் கார சட்னிய தடவுனா அது ஆந்திரா கார தோச, உள்ளுக்குள்ள கொஞ்சம் உருளக்கிழங்க ஒளிச்சு வச்சுட்டா அது கர்நாடகா மசால் தோச...

இன்னும் புழிஞ்சா இடியாப்பம், புடிச்சா கொழுக்கட்டை, ஊத்துனா ஊத்தப்பம், ஒன் சைடுன்னா அது ஆப்பம்னு நம்மாளோட Creativity நாடு நகரமெல்லாம் கடந்து பீடுநடை போடும்..

நம்மாளோட Creativityக்கு தீனி போட்டதுல தமிழ் சினிமாவோட பங்கும் கனிசமானது..

ஹோட்டல்ல கூட்டம் அதிகமானா நம்ம அழகன் மம்மூட்டி சொல்ற "ரெவா" உப்புமா, வீட்டுக்கு திடீர் விருந்தாளி வந்தா "இட்லி உப்புமா", ரொமான்ஸ் பண்ண‌ பொண்டாட்டிக்கு டிஃபன் கேரியர்ல மல்லிகப்பூ, அஜால் குஜால் மேட்டருக்கு அல்வா..

இது போக இட்லில பீர் ஊத்தி அடிக்கிறது, அப்பளத்துல பாயசத்த ஊத்தி அடிக்கிறதுன்னு, ஏகப்பட்ட அரிய அரிய அரிய அரிய கண்டுபிடிப்புகள,சாப்பாட்டு ஐட்டங்கள வச்சே இந்த‌ தமிழ்கூறு நல்லுலகத்துக்கு கத்துக்குடுத்துருக்கு...
.
இதென்ன பெரிசு, இதவிடப் பெரிய மேட்டர் ஒண்ணு இருக்கு நம்மாளு Creativityக்கு அடையாளமா....

ஒரு தமிழ்ப் புலவர்கிட்ட அவரோட சமையல்காரன், மதிய சாப்பாட்டுக்கு என்னங்க செய்யட்டும்னு கேட்டப்போ..

அவரு "சற்றே துவையல் அரை.."ன்னாரு..
மறுபடி கூப்புட்டு, "தம்பி, ஒரு பச்சடி வை.."ன்னு சொன்னாரு..
மறுபடி கூப்புட்டு, "வற்றல் ஏதேனும் வறுத்து வை.."ன்னாரு..
அடுத்து, "குற்றமில்லை, காயமிட்டு கீரை கடை..." அப்டின்னாரு..
மறுபடி கூப்புட்டு, "கம்மெனவே, மிளகுக்காய் அரைத்து வைப்பாய் கறி.." அப்டின்னாரு..

அவன் போயிட்டான்.. ஆனா இதுல என்ன‌ Twist அப்டின்னா, இவரு இப்ப சொன்ன மொத்த மெனுவையும் சேத்தா...அது ஒரு வெண்பா...

மத்தியான சாப்பாட்டு மெனுவக்கூட வெண்பால சொல்லணும்னு நம்மாளுக்கு தோணிருக்குன்னா அவனோட‌ Creativityக்கு அத விட என்ன பெரிய உதாரணம் வேணும்..
அந்த நேரிசை வெண்பா இது தான்..

சற்றே துவையலரை, தம்பியொரு பச்சடிவை
வற்றல் ஏதேனும் வறுத்துவை- குற்றமிலை,
காயமிட்டு கீரைகடை, கம்மெனவே மிளகுக்
காயரைத்து வைப்பாய் கறி!"


Creativityயின் உச்சம் தொட்டதுக்கு ஒரு கடைசி உதாரணம்....

ரத்தக் கண்ணீர் படத்துல எம்.ஆர். ராதா "கறி சோறு இருந்தா போடு..ன்னு" பிச்சை எடுப்பாரு.. அவருக்கு எஸ்.எஸ்.ஆர் சீரியசா பதில் சொல்லுவாரு "நாங்க அசைவம் சாப்புடுறதில்ல.. நாங்க ஜீவ காருண்ய கட்சியில சேந்திருக்கோம்".. அப்டின்னு..

அதுக்கு ஒரு பஞ்ச் அடிப்பாரு ராதா..

"அடிச‌க்க‌.... க‌ட்சி.... க‌ட்சி... திங்கிற‌துக்கு கூட‌ க‌ட்சி வெச்சுகிட்டீங்க‌ளாடா.... அது ஒண்ணுக்கு தான் இதுவரைக்கும் இல்ல.. இனி இந்த‌ நாடு உருப்புட்டா மாதிரி தான்டா ய‌ப்பா...." அப்டின்னு..


எதுலயுமே வித்தியாசத்த காமிக்கிற ஆளுங்க நாம தான்.. அதுனால தான்.. "காவிரி விவசாயி எலிக்கறி திங்கிறான்னும் TVல பப்ளிகுட்டி பண்ணிக்கிறோம்.. இன்னொரு பக்கம் சன்டே ஈவினிங் டைம்ல, அந்த ஸ்க்விட்ட Yogurtல‌ Marinate பண்ணி,  Egg Wash குடுத்து, Bread Crumbs ல‌ roll பண்ணி, pan ல‌  stirr fry பண்ணி... Texture, Consistancy, Shape... (ஸ்ஸ்ஸ் இப்பொவே கண்ண கட்டுதே)... அப்டின்னு Kilometer  கணக்குல Peter உட்டும் பப்ளிகுட்டி பண்ணிக்கிறோம்..

இத‌ எழுதும்போதே ஒரு ப‌ழைய‌ பாட்டு நியாப‌க‌த்துக்கு வ‌ருது....

ச‌மைய‌லெல்லாம் க‌ல‌க்குது.. அது ச‌ம‌த்துவ‌த்த‌ வ‌ள‌க்குது....
சாதிம‌த‌பேத‌மெல்லாம்... சோத்த‌க்க‌ண்டா ப‌ற‌க்குது!!!!!!

ஆமா... பெருமையா ஒரு டயலாக் சொல்லி முடிப்போம்..

 "ரவீ... இந்த ஓட்டல்ல பேப்பர் ரோஸ்ட் சாப்டா லிவருக்கு ரொம்ப நல்லது...."

Tuesday, March 12, 2013

நீ யாரு.. யாரு..யாரு...???

அன்பார்ந்த ஆண்களே!!! ஆருயிர் பெண்களே!!! உலகம் உருண்டை இல்ல.. அது சர்பத்ல போடாத சாத்துக்குடி வடிவம் தான்னு கண்டுபுடிச்சது எவ்ளோ பெரிய விஞ்ஞானியோ அத விடப் பெரிய ஆளு தான் நம்ம சினிமால "பஞ்ச்" டயலாக்க கண்டுபுடிச்ச ஆளும்...

படத்துல, லஞ்சுக்கே காசில்லாத கேரக்டரா இருந்தாலும் பஞ்ச் பேசலன்னா, ஆர்டிஸ்ட்டும் ஒத்துக்க மாட்டாங்க, தமிழகத்து மகாஜனங்களும் ஒத்துக்க மாட்டாங்க...

"என்னை நம்பாமல் கெட்டவர்கள் பலபேர் உண்டு.. ஆனால் நம்பிக் கெட்டவர்கள் இதுவரை யாருமில்லைன்னு" மக்கள் திலகத்துகிட்ட ஆரம்பிச்சு, "கண்ணா.. நான் எப்போ வருவேன், எப்டி வருவேன்னு யாருக்குமே தெரியாது.. ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்"ன்னு தொடர்ந்து, "நான் எர்ர்ர்ரங்க்கி போறவன் இல்ல... ஏர்ர்ர்ர்றி போறவன்..." அப்டின்னு வள்ர்ந்து, "ஒருவாட்டி முடிவுபண்ணிட்டா என் பேச்ச நானே கேக்கமாட்டேன்"னு முத்திப் போயி...கடைசில "ஆக்சுவலா நான் அப்டி கெடையாதுங்க.. எனக்கு நடிக்கத் தெரியாது..."வரைக்கும் வந்து நிக்குது...

இதுல "ஹேய்.. தமிள்நாட்ல மொத்தம்.." அப்டின்னு சென்சேஷனலா டயலாக் பேச ஆரம்பிச்சு, சென்சஸ் விபரம் எல்லாம் சொல்லி, இந்திய பொருளாதாரம், வரலாறு, கணக்கு, பாட்டனி எல்லாத்தயும் பிரிச்சு மேஞ்சுட்டு, ஒரு சென்செக்ஸ் புள்ளிவிபரத்தோட முடிக்கிற அளவுக்கு "பஞ்ச்" தன்னோட பரிணாம வளர்ச்சிய காட்டிருக்கு...

கொஞ்சம் ஆழ்ந்து இதையெல்லாம் பாத்தோம்னா நமக்கு ஒரு விஷயம் தெளிவா வெளங்கும்.. இது எல்லாமே ஒரு "Selling Techinique".. அதாவது "Tell about yourself" அப்டின்னு Interview ல கேப்பாங்களே, அந்த கேள்விக்கு கேக்காமலே சொல்ற பதில் தான் இதெல்லாமே...

சினிமாலேர்ந்து வெளி உலகத்துல, இந்த "Tell about yourself"க்கு ஒவ்வொரு ஆளும் ஒவ்வொரு அளவுகோல் வச்சிருப்பாங்க..

வேலை தேடிட்டிருக்கிற எல்லா பேச்சிலர் ரூம்லயும் இந்தக் கேள்வி ஒரு தடவையாச்சும் வந்துட்டு போயிடும்.. சில பேர் மச்சான்.. டெக்னிக்கல மட்டும் சொல்லு, சொந்தக் கத சோகக்கத எல்லாம் சொல்லாத.. ரிஜெக்ட் பண்ணிருவாங்ய...அப்டின்னு.. இன்னும் சில பேர் அதெல்லாம் சும்மா, அஞ்சு பைசாவுக்கு பஸ்கி போட்டதுலேந்து, ஆஃப் பாட்டில் விஸ்கி போட்டது வரைக்கும் எத வேணா சொல்லு மச்சி.. அப்டின்னு கெளப்பிவிடுவான்...

இதுல சிலபேர் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு, இந்த எடத்துல நான் இருந்தேன்னா, எப்டி பதில் சொல்றேன் பாருன்னு, தாவணிக்கனவுகள் பாக்யராஜ் மாதிரி பெர்ஃபாமன்ஸ் எல்லாம் பண்ணிக்காட்டுவாங்ய..

சில‌பேர் என்ன‌ சொல்ற‌துன்னே தெரியாம‌.. "I come from Decent Family sir" அப்டின்னுலாம் சொல்வாங்ய‌.. (கேள்வி கேட்டவன் ம‌ட்டும் என்ன‌ மான‌ங்கெட்டு ரோட்டுல‌யா அலையிறான்..)

உண்மையில‌ இந்த‌க் கேள்வி ஏன் கேட்க‌ப்ப‌டுகிற‌துன்னு பாத்தா..

உரையாட‌ல‌ ஆர‌ம்பிக்க‌ற‌துக்கு ஒரு "ஐஸ் பிரேக்கரா".., ஆர‌ம்பிச்ச‌ பிற‌கு "Communication & Attitude" இது ரெண்டையும் அள‌க்குற‌துக்கு ஒரு கருவியா பயன்படுத்தப்படுது.. (சொல்ட்டார்ப்பா..)

அன்றாட‌ வாழ்க்கையில‌, Interview ல ம‌ட்டுமில்லாம‌, க‌ல்யாண‌ம் மாதிரி ஒரு பொது நிக‌ழ்ச்சிலேயோ, அல்ல‌து டிரெயின் / ப‌ஸ் ப‌ய‌ண‌த்திலேயோ ப‌க்க‌த்துல‌ இருக்கிற‌ ஆள்கிட்ட‌ 'அப்ப‌ற‌ம் நீங்க‌..." அப்டின்னு நாம ஆர‌ம்பிக்கிற‌ அதே விஷ‌ய‌ம் தான் இந்த "Tell about yourself"..

அந்த மாதிரி சூழல்ல இந்தக்கேள்வி, Newton's third law மாதிரி... "It has its own equal and oppsosite reaction"..

நான் ஒரு டாக்டர், அல்லது வக்கீல், அல்லது வாத்தியாருன்னு நேரா பதில் சொல்லிட்டா.. அது நேர் வினை.. equal reaction.. ஆனா பாதி பேரு சொல்லமாட்டான்.. அது oppsosite reaction.. அந்த மாதிரியான சில சுவாரசியமான பதில்கள பத்திதான் இந்த போஸ்ட்டே..

கேட்டகிரி #1) என்னாச மைதிலியே...

எந்த‌க் கேள்விய‌க் கேட்டாலும், சுத்தி வ‌ள‌ச்சு, க‌டைசில‌ என்னாச‌ மைதிலியே பாடி முடிக்கிற‌ டி. ஆர் மாதிரி இவிங்ய‌..

"ந‌ம்ம‌ குடிகாட்டுல‌ ராம‌மூர்த்தி மாம‌ன் அக்கா ம‌வ‌ள‌ க‌ட்டிக்குடுத்தாவ‌ள்னா, அவுங்க‌ மாமியாரோட‌ அத்த‌ பைய‌னுக்கு ஒண்ணுவுட்ட‌ ச‌க‌ல‌பாடி யாரு???? உங்க‌ப்பா தான்.." அப்டின்னு முடிச்சுருவாங்ய..

நீ, இல்லயே என் சொந்த‌ ஊரு அஜித் ப‌ட்த்துல‌ அழிஞ்சுபோன‌ அத்திப்ப‌ட்டின்னு சொன்னாலும் அங்க‌தான் எங்க‌ தாத்தாவும் உங்க‌ தாத்தாவும் ஒண்ணா வ‌த்திப்பெட்டி வாங்குவாங்க‌ன்னு ச‌த்திய‌மே ப‌ண்ணுவாங்ய‌..

இவங்களுக்கு இந்தக் கேள்வி உறவுகளோட சம்பந்தப் பட்டது...இவ‌ங்க‌ சொல்ல‌ வ‌ர்ர‌ விஷ‌ய‌ம் என்ன‌ன்னா.. "நான் உன‌க்கு சொந்த‌க்கார‌ன்..."

நாம‌ளும் ப‌திலுக்கு ப‌ருத்திவீர‌ன் கார்த்தி மாதிரி "என்ன‌ மாமா சௌக்கிய‌மா??"ன்னு சொல்லிட்டு போயிர‌ணும்..

கேட்டகிரி #2)அலோ..துபாயா? அங்க என் பிரதர் மார்க் இருக்காரா?

இவிங்ய ஆரம்பமே அதிரடி தான்... "திருக்கொவளையில, நம்ம கலைஞர் வீட்டுக்கு நேர் பின்னாடி மூணாவது தெருவுல ரெண்டாவது வீடு நம்ம வீடு தான்..".. இது வில்லேஜ் பார்ட்டியோட டயலாக்கு..

இதே சிட்டி பார்ட்டின்னா அது கொஞ்சம் வேற மாதிரி இருக்கும்.." Actually.. my son in law is working as an additional general manager in Oracle.."

இவர பத்திக்கேட்டாலே சன் இன் லாவுலேந்து தான் கத ஸ்டார்ட் ஆகும்.. இவுங்க எல்லாருக்குமே இந்தக் கேள்வி சமூக அந்தஸ்த்தோட சம்பந்தப்பட்டது..

இவுங்க‌ சொல்ல‌ வ‌ர்ர‌து என்னன்னா..."என‌க்கு ஐ. ஜி ய‌ ந‌ல்லாத் தெரியும்..."

கேட்டகிரி #3) திஸ் செக்கோஸ்லேவியா, ஆ.. திஸ் யுக்கோஸ்லேவியா..திஸ் இஸ் மிஸ்ஸிசிப்பி..

இது கொஞ்சம் சிக்கலான பார்ட்டி.. கேள்வி கேட்ட உடனேயே நம்மள திருப்பி கேள்வி கேக்க ஆரம்பிப்பாங்க.. நாம மட்டும் இங்க தான் வேல பாக்குறோம்ணு சொன்னோம்.. அதோட நாம காலி.. உங்க கம்பெனியோட Annual Turn over எவ்ளவு.. எத்தன branches இருக்கு.. Abroad ல‌ head office எங்க இருக்குன்னு நோண்டி நொங்கெடுத்துருவாங்ய...

இவங்கள பொருத்த வரைக்கும் இந்தக் கேள்வி அவங்க பொது அறிவோட சம்பந்தப்பட்ட விஷயம்..

சமீபத்துல இந்த மாதிரி ஒரு ஆளுகிட்ட தெரியாத்தனமா சிக்கி சின்னாபின்னம் ஆனேன்..  Connecticutt ல இருக்கிர எங்க‌ head office pincode எல்லாம் கேட்டாரு.. கோடு நம்பரு, ரோடு நம்பரு, எக்ஸ்ட்ரா நம்பரு இதெல்லாம் ஒனக்கு எதுக்குயான்னு பொலம்ப உட்டுட்டாரு..

கேட்டகிரி #4)ஆப்பிரிக்கால வைரச் சொரங்கம்.. ஜப்பான்ல ரப்பர் தோட்டம்..

போன கேட்டகிரி ஆளுங்க ரெய்டுக்க வந்த ஆஃபீசர் மாதிரி கேள்வி கேட்டா, இவுங்க நம்மள என்னமோ "Ayakar Bhavan"லேந்து வந்த அம்பாசிடர் மாதிரி நெனச்சு சொத்து கணக்கெல்லம் சொல்லுவாங்ய.. ஊட்டில நமக்கு ஊறுகா ஃபேக்ட்ரி இருக்கு.. சேலத்துல செங்கல் குவாரி இருக்குன்னு..புட்டு புட்டு வைப்பாங்க..

இதுல காமெடி என்னன்னா, வார்த்தைக்கு வார்த்த "நமக்கு" "நமக்கு"ன்னே சொல்லுவாங்ய (என்னமோ ஒம்போதாவது பொண்ணு நவலட்சுமிய நமக்கு கட்டிகுடுக்க போறமாதிரி...)

இவங்கள பொருத்த வரைக்குக்கும் இந்த "Tell about yourself", அசையும் / அசையா சொத்துக்களோட சம்பந்தப்பட்டது.. இவங்க சொல்ல வர்ரது.. "ஐ யம் எ மில்லினேர்ர்ர்.."

க‌டைசி கேட்ட‌கிரி)  தொர‌ இங்கிலீசெல்லாம் பேசுது.. சினேகித‌னைய்ய்...

ந‌ம்ம‌ கூட‌வே ப‌ஸ் ஏறிட்டு, "ஐ ஸ்டே இன் டேஞ்சூர்.. யுவர் நெகட்டிவ் வேர்??" அப்டின்னு ஒரு கேள்வி வேற‌.. இன்னும் சொல்ல‌ணுமா என்ன‌..

இவ‌ங்க‌ளோட‌ பார்வைல‌ இந்த‌க் கேள்வி ஆங்கில‌ அறிவோட‌ ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌து.. இவ‌ங்க‌ சொல்ல‌ வ‌ர்ர‌து.." I can Talk English.. I can walk english.. I can laugh english you bloody fellow..."

நாம‌ளும் க‌டைசியா ஒரு "ப‌ஞ்ச்" வ‌ச்சு முடிக்க‌லாம்...

இந்த கேட்டு சொல்றது, கேக்காமலே சொல்றது, நேர் வினை, எதிர்வினை எல்லாமே டைம் ந‌ல்லா இருக்க‌ற‌ வ‌ரைக்கும் தான்...

அது ம‌ட்டும் ஒருத்த‌னுக்கு ந‌ல்லா இல்ல‌..

"இதெல்லாமே Self Expense ல தானே வச்சுக்கிற செய்வினை தான்..." எப்பூடி!!! (எகிறு.. எகிறேய்ய்ய்...)

Thursday, March 7, 2013

ஒரு துண்டு போஸ்ட்!!!!

போன தடவ ஊருக்கு போயிருந்த சமயம், இந்த சம்பவம் நடந்துச்சு.

எங்கூரு பஸ்ஸுல அடிச்சு புடிச்சு ஏறி உக்காந்ததுக்கப்பறம் ஒரு மொரட்டு உருவம் வந்து, தம்பி.. எந்திரி.. இது என் சீட்டு.. துண்ட போட்டு வச்சிருக்கம்ல... அப்டின்னு மெரட்டுச்சு..

அப்புறம் அந்த பெருசுகிட்ட சமாதானமாப் போயி, அந்த உரிமை மீறல் பிரச்சினைய சட்ட ஒழுங்கு பிரச்சினயா மாறாத அளவுக்கு சரி பண்ணிட்டு வேற சீட்டுல போயி உக்காந்துகிட்டேன்..

துண்டுங்கிறது துவட்டிக்க அல்லது துடைச்சுக்க தானே அத தூக்கிட்டு வந்து பஸ் சீட்டுல போடலாம்ங்கிற ஐடியா எல்லாம் நம்மாளுங்களுக்குத்தான் வரும்...

"இதே நான் இந்த துண்ட தூக்கிட்டு போயிருந்தேன்னா என்ன பண்ணிருப்பான் அந்தாாளு?" ன்னு  நான் மெல்லமா மொனங்குனது பக்கதுல உக்காந்து இருந்தவருக்கு கேட்ருச்சு..

அதுக்கு அவரு ஒரு பதில் சொன்னாரு.. துண்டில்ல தம்பி.. பெத்த புள்ளையக் கூட தூக்கி போட்டு சீட்டு புடிப்பாய்ங்க.. நீ அத தூக்கிட்டு போனா கூட அடுத்த வருஷமே வேற ஒண்ண ரிலீஸ் பண்ணிப்பாய்ங்கன்னு...

அவனுங்க கெடக்கானுங்க.. ஆனா இந்த துண்டு மேட்டர் மட்டும் எனக்குள்ள நெறய யோசனைகளை கொண்டுவந்தது... அதோட மொத்த Collection  தான் இந்த post..

English ல‌ Unusual usage of things ன்னு சொல்லுவாங்க.. அதாவது ஒரு பொருளை அல்லது விஷயத்த, அதுக்கு உரிய விதத்துல இல்லாம சம்பந்த்மில்லாத வகையில பயன்படுத்துறது..
 
சொல்லப்போனா நாம நெறைய விஷயங்கள்ள இந்த Un usual usage அ Follow பண்றோம்... விபூதி மடிக்க Daily Calendar Sheet, காலேஜ் நோட்டுக்கு அட்டை போட  Monthly Calendar Sheet, வீட்டு shelf ல கவர் மாதிரி அடில போட News Paper, கார்ல தொங்கவிட சி.டி, வடை தட்டறதுக்கு பால் கவர் இப்படி சொல்லிகிட்டே போகலாம்..

இத சொல்லும் போது ஒரு பழைய தமிழ்ப் பாடல் என்னோட நினைவுக்கு வருது...

 ராமச்சந்திரக் கவிராயர்னு ஓரு தமிழ்ப்புலவர் தன்னோட பாக்குவெட்டி காணாமபோச்சுனு எழுதுனது...

விறகுதறிக்கக் கறிநறுக்க வெண்சோற்றுப்புக் கடகுவைக்கப்
 பிறகு பிளவுகிடைத்ததென்றா னாலாறாகப் பிளந்துகொள்ளப்
 பறகுபறகென்றே சொறியப் பதமாயிருந்த பாக்குவெட்டி
 இறகுமுளைத்துப் போவதுண்டோ வெடுத்தீராயிற் கொடுப்பீரே!!

விறகு பிளக்க, காய்கறி நறுக்க, ராத்திரி வேளைகளில் அந்தக் காலத்தில் உப்பு மாதிரியான பொருள பக்கத்து வீடுகளில் கடனா வாங்க அடமானமாக வைக்க, பாக்கு கெடச்சா அதையும் பிளக்க.. எல்லாத்துக்கும் மேல முதுகு அரிக்கும் போது சொறிஞ்சுக்க பயன்பட்ட பாக்குவெட்டி காணாம போச்சே.. அத யாராவது எடுத்தா கொடுத்துடுங்க அப்டின்னு பாடிருக்காரு..

ஓடற டிரெயின நிறுத்த தாவணி, ஆம்லெட் போட அடிவயிறுன்னு பல Un usual usage அ இந்த தமிழ்கூறு நல்லுலகத்துக்கு கத்துக்கொடுத்த சினிமாவிலும், இந்த "துண்டு"ங்கிறது மிகமிகப் பெரிய பங்கு வகிக்குது அப்படின்னு சொல்லலாம்..

அங்கவஸ்த்திரம், பரிவட்டம், துண்டு, கோவணம்னு அது பல பரிமாணங்களை கடந்த ஒண்ணா இருக்கு...

Producerக்கு low அல்லது high அப்டின்னு Budget Fix பண்ணுது, Directorக்கு கிராமம் அப்டின்னு Location Fix பண்ணுது, Writterக்கு நாட்டாமைன்னோ அல்லது விவசாயின்னோ அல்லது பூசாரின்னோ Plot Fix பண்ணுது.. இதெல்லாம் பண்றது வெறும் துண்டு தான்...

முதல் மரியாதை சிவாஜி, எஜ‌மான் ர‌ஜினி, தேவ‌ர் ம‌க‌ன் க‌ம‌ல்,சின்ன‌க் க‌வுண்ட‌ர் விஜ‌ய‌காந்த், நாட்டாமை ச‌ர‌த், கிழ‌க்குச் சீமையிலேயிலிருந்து ப‌ல‌ ப‌ட‌ங்க‌ள்ல‌ விஜ‌ய‌குமார்.. சாக்லேட் ல‌ மும்தாஜ் (அட‌ அதையும் சொல்லித் தானே ஆக‌ணும்..).. இப்ப‌டி துண்டால‌ எக்க‌ச்ச‌க்க‌மா க‌ல்லா க‌ட்டாத‌ ஆட்க‌ள் த‌மிழ் சினிமால‌யே இல்ல‌ன்னு சொல்ல‌லாம்..

அவ்வ‌ள‌வு ஏங்க‌.. ச‌ன் டி.வி ல‌ யாக‌வா முனிவ‌ர் ஃபேம‌ஸ் ஆன‌தே துண்டால‌ அடிச்சு தான‌..

இந்த‌ துண்ட‌ வ‌ச்சு தான் எவ்வ‌ள‌வு ட‌ய‌லாக் வ‌ந்திருக்கு.. உதார‌ண‌த்துக்கு ஒண்ணே ஒண்னு.. ந‌ம்ம‌ சின்ன‌க் க‌வுண்ட‌ர் சொல்ற‌து..

ம்ஹூம்ஹூம்.. (அட‌ அவ‌ர் ஸ்பெஷாலிட்டியே இந்த‌ சிரிப்பு தானே..)

நான் துண்ட‌ இடுப்புல‌ க‌ட்டுனேன்னா கோயிலுக்கு போறேன்னு அர்த்த‌ம்.. தோள்ள‌ போட்டேன்னா தீர்ப்பு சொல்ல‌ப்போறேன்னு அர்த்த‌ம்..
அத‌யே அப்டி ஓர‌மா எடுத்து வ‌ச்சேன்னா ப‌ட்ட‌ய‌ கெள‌ப்ப‌ப்போறேன்னு அர்த்த‌ம்..

இது சின்ன‌க் க‌வுண்ட‌ர் பேச்சிலரா இருந்த‌ போது சொன்ன‌ ட‌ய‌லாக்.. இத‌யே எங்கூருல‌ க‌ல்யாணாம் முடிச்ச‌ ஆளுக‌ வேற‌ மாதிரி சொல்லுவாங்க‌..

நான் துண்ட‌ த‌லைல‌ க‌ட்டுனா, பொண்டாட்டி அரிசி உளுந்து ஊற‌ப்போட்டுருக்கான்னு அர்த்த‌ம்.. அதே துண்ட‌ இடுப்புல‌ க‌ட்டுனேன்னா துணி ஊற‌ப்போட்டுருக்கான்னு அர்த்த‌ம் அப்டின்னு..

ஒரு விவ‌சாயியோட‌ Life ல‌ இந்த‌ ட‌ய‌லாக் கூட‌ ஒரு Un usual usage தான்..

அவ‌ன் தோள்ல‌ துண்டு விழுந்தா‌ வீட்ல‌ விசேஷம்னு அர்த்த‌ம்..
த‌லைல‌ துண்டு விழுந்தா உள்ளூர் ரேஞ்சுல‌ க‌ட‌ன்னு அர்த்த‌ம்.
ப‌ட்ஜெட்ல‌யே துண்டு விழுந்தா ஒலக‌ ரேஞ்சுல‌ க‌ட‌ன்னு அர்த்த‌ம்..
க‌டைசியா அவ‌ன் க‌ழுத்த‌ சுத்தி துண்டு விழ்ந்தா அவ‌னுக்கே இறுதிக் க‌ட‌ன்னு அர்த்த‌ம்..

சரி அவ்ளோ பில்ட் அப் எதுக்கு.. நெஜமாவே இந்த துண்டுல அப்டி என்னென்ன Un usual usage இருக்கு..???

  • தோட்ட‌த்துல‌ க‌த்திரிக்காய் திருட‌லாம்..
  • திருடுன‌ க‌த்திரிக்காய‌ Secret Bidding ல‌ dispose ப‌ண்ண‌லாம் (அதாங்க‌ கையில‌ துண்டால‌ மூடி சந்தைல பேர‌ம் பேசுற‌து..)
  • திருடிப்புட்டு திருட‌வே இல்லைன்னு துண்ட‌ கீழ‌போட்டு தாண்டி ச‌த்திய‌ம் ப‌ண்ண‌லாம்..
  • அதையும் மீறி ஒத‌ச்சாணுங்க‌ன்னா, அடிவிழுந்த‌ எடத்துல‌ ர‌த்த‌ம் வ‌ராம‌ துண்டுல க‌ட்டுப் போட‌லாம்.
  • சத்தம் வெளியே தெரியாம அதே துண்ட வாயில பொத்தி அழுவலாம்
  • அப்புறம் கூட்டம் கலஞ்சதுக்கு பின்னாடி துண்ட விரிச்சு மல்லாக்க படுத்துக்கலாம்..
  • அப்டியே மழை வந்தா தலைக்கு மேல இருக்கிறத நனையாம துண்டால மூடி காப்பாத்திக்கலாம்.. (உள்ள இருக்கிறத பத்தி யாருக்கென்ன கவல..)
  • குளிர‌டிச்சா துப்ப‌ட்டியா போத்திக்க‌லாம்..
  • சுருட்டி வ‌ச்சா சும்மாடா ப‌ய‌ன்ப‌டுத்திக்க‌லாம்..
என்ன‌ எல்லாம் வில்லேஜ் மேட்ட‌ராவே இருக்குன்னு பாக்க‌றீங்க‌ளா..

துண்ட‌ க‌ழுத்துல‌ சுத்தி, அது மேல‌ ச‌ட்டைக்கு ச‌ம்ப‌ந்த‌மே இல்லாத‌ ஒரு T.T.R Coat போட்டுட்டோம்னா "Yo" Model ஆயிடுவோம்..

இதெல்லாமே ஆண்க‌ளுக்கு ம‌ட்டும் தானான்னு கேக்க‌ற‌ தாய்க்குல‌ங்க‌ள், துண்ட திடீர் விருந்தாளிகள் வந்துட்டா அவ‌ச‌ர‌த்துக்கு நைட்டி மேல‌ துப்ப‌ட்டாவா ப‌ய‌ன்ப‌டுத்திக்க‌லாம்..

அதே துண்டுல‌ கொஞ்சூண்டு த‌ண்ணிய‌ தெளிச்சு த‌லைய‌ சுத்தி க‌ட்டிட்டா ச‌ங்க‌ர் சார் ப‌ட‌த்துல‌ வ‌ர்ர‌ ச‌தா மாதிரி ச‌ட‌ன்னா கெட்ட‌ப் சேஞ்ச் ப‌ண்ணிர‌லாம்..
ரொம்ப முக்கியமா...   புருஷ‌ன‌ அடிக்க‌ ஆப‌த்தில்லாத‌ ஆயுத‌மா கூட‌ ப‌ய‌ன்ப‌டுத்திக்க‌லாம்..
 
இந்த‌ ஐடியாவ‌ உங்க‌ளுக்கு சொல்லிக்கொடுத்த‌தால‌ என்ன‌ய‌ யாரோ அடிக்க‌ வ‌ர‌மாதிரி இருக்கு..
 
I am Esscaaaaapeee......!!!!!!!

Wednesday, March 6, 2013

Toronto Concert ம்... ஓணாண்டிப் புலவரும்!!!

விஜய் டி.வி ல இளையராஜாவின் எங்கேயும்.. எப்போதும் ராஜா... வரும் ஞாயிறு காலை 11:30க்குன்னு விளம்பரத்த பாத்த உடனே, இது எப்போ நடந்துச்சு, எங்க நடந்துச்சுன்னு, நெட்ட துழாவ ஆரம்பிச்சேன்.. Toronto மாநகரில் கடந்த மாதம் நடந்த நிகழ்ச்சி என்று தெரியவந்தது...
 
அதில் திரு.இளையராஜா அவர்கள் குறித்த சில / பல விமர்சனங்களும் (அல்லது குற்றச்சாட்டுன்னும் சொல்லலாம்...) நெட்டுல‌ பாக்க முடிஞ்சது...
 
என்னோட மொதல் போஸ்ட் Music க பத்தி தான் போடணும்னு நெனச்சிட்டு இருந்த எனக்கு, அதப் பாத்த உடனேயே முடிவு பண்ணிட்டேன்.. இது தான் நம்ம மொதல் போஸ்ட் அப்படின்னு...
 
ரொம்ப சீரியஸா, "அவர் ஒரு இசைக்கடவுள்.." அப்படிங்கிற எல்லைக்கு அவரையும் தள்ளாம.. "அவரை எப்படி விமர்சிக்கலாம்"ங்கிற எல்லைக்கு நாமும் செல்லாம.. வந்த விமர்சனங்களை பத்தி மட்டும் அலசலாம்...
 
#1) 2:30 மணி நேரம் லேட்டாக வந்தார்... ஆனால் Sorry கூட கேக்கல!!!
 
இந்த நிகழ்ச்சிய ஏற்பாடு செஞ்சது.. ஒரு தனியார் நிறுவனம்... பாட வர்ர ஆட்களை ஓட்டல் ரூம்ல இருந்து நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு கொண்டு செல்லும் வழியில் ரோஜர் சாலையில் ஏற்பட்ட Traffic Jam la திரு. இளையராஜாவும் மற்ற பாடகர்களும் மாட்டிகிட்டாங்க.. இதில் திரு.இளையராஜாவோட தப்பு அல்லது பங்கு என்னன்னே எனக்கு புரியல..
 
பொதுவாகவே அதிகாலை 5 மணிக்கெல்லாம் பிரசாத் ரெக்கார்டிங் தியேட்டர்ல டாண்ணு ஆஜர் ஆகக்கூடிய மனிதர் வேண்டுமென்றே 2:30 மணி நேரம் லேட்டா வருவாரான்னு நாம் கொஞ்சம் நிதானமா யோசிக்கணும்...
 
இந்த எடத்துல ஒரு சின்ன சம்பவத்த சொல்றது ரொம்ப பொருத்தமா இருக்கும்... ஒரு நாள் ரெக்கார்டிங்குக்கு கார்ல போகும்போது, வழியில கார் நின்னு போச்சுன்னு, விடுவிடுன்னு கார விட்டு இறங்கி பொடிநடையா ரெக்கார்டிங் தியேட்டருக்கு போன சம்பவத்த, அவரே சில வாரங்களுக்கு முன் விகடன் பதில்கள்ள சொல்லி இருந்தாரு..

அப்ப‌டிப்ப‌ட்ட‌ ஒரு மனிதர் ச‌ம்ப‌ந்த‌மே இல்லாம‌ ஏன் லேட்டா வ‌ர‌ணும்..
 
ஆக இந்த லேட்டா வந்தாரு அப்டிங்கிற குற்றச்சாட்டு, வாசக்கடக்காரன் சரியா டீ போடல, வண்ணாந்தொறைல சரியா துணி வெளுக்கலன்ற காரணுத்துக்கெல்லாம் அவரு தான் பொறுப்புன்னு சொல்றது மாதிரி இருக்கு..
 
ஆனா திரு.இளைய‌ராஜா அவ‌ர்க‌ள் உண்மையிலேயே ஒரு விஷ‌ய‌த்துக்கு வ‌ருத்த‌ம் தெரிவிச்சாரு.. 3 மாத‌ கால‌மாக‌ ப‌யிற்சி செஞ்சு இங்கே உங்க‌ முன்னாடி வாசிக்கிறோம்..இதுல‌ சில‌ர் சில‌ நோட்ஸ வாசிக்கும் போது த‌வ‌று செஞ்சிருக்க‌லாம்..அதுக்கு வ‌ருத்த‌ம் தெரிவிச்சுக்கறேன் அப்டின்னு...
 
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம் பதில் சொல்ல வேண்டிய விஷயத்துக்கெல்லாம், இளையராஜா சாரி கேக்கல, மேட்சிங் பிளவுஸ் கேக்கலன்னு சொன்னா ஞாயமா??
 
#2)100$, 400$ கொடுத்து வ‌ந்தோம், இளைய‌ராஜாவுக்கு ப‌ண‌த்தாசையா???...
 
Again இந்த‌ நிக‌ழ்ச்சியை ந‌ட‌த்திய‌ த‌னியார் நிறுவ‌ன‌ம் ப‌தில் சொல்ல‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம்.. எத்த‌னை ரூபாய்க்கு டிக்கெட்டுக‌ள் விற்க‌ப்ப‌ட்டாலும் அதில் இளைய‌ராஜாவின் த‌லையீடு என்று எதுவும் இல்லை.. அதே போல‌ தியேட்ட்ர் வாச‌லில் வ‌ந்து, 20 - 60, 20 - 60 என்று அவ‌ர் விற்க‌வும் இல்லை.. இதுவும் கொஞ்சங்கூட பொருத்தமில்லாத‌ குற்ற‌ச்சாட்டு..
 
தூரல் நின்னு போச்சு ப‌ட‌ விழாவில், அப்போதைய‌ முத‌ல்வ‌ர் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் அணிவித்த‌ மோதிர‌த்தை, "நான் ந‌கை அணிவ‌தில்லை"ன்னு சொல்லி அங்கேயே க‌ழ‌ட்டிக்கொடுத்த‌ ச‌ம்ப‌வ‌த்தை அவ‌ர‌து "யாருக்கு யார் எழுதுவ‌து - ப‌க்க‌ம் 56ல்" பாக்க‌ முடியும்...
 
அதே போல‌ க‌ர‌காட்ட‌க்கார‌ன் ப‌ட‌த்தை எடுத‌த‌ த‌யாரிப்பாள‌ர் பின்னாட்க‌ளில் ப‌ண‌க்க‌ஷ்ட‌த்தில் இருந்த‌போது, அவ‌ர் கொடுத்த‌ செக்கை திருப்பிக் கொடுத்துட்டு, 10 பைசா வாங்காம‌ல் இசையமைச்சுக்கொடுத்த‌ ப‌ட‌ம் தான் "வில்லுப்பாட்டுக்கார‌ன்"... இந்த‌ த‌க‌வ‌லை விஜ‌ய் டி.வி நீயா நானாவில் அந்த‌ த‌யாரிப்பாள‌ரே சொன்னாரு..
 
அப்ப‌டிப்ப‌ட்ட‌ ஒரு ஆளுக்கு என்ன‌ ப‌ண‌த்தாசை இருக்க‌ முடியும்??????
 
(நீங்க‌ளே சொல்லுங்க‌ யுவ‌ர் ஆன‌ர்.. அத‌க் க‌ள‌வாண்டு போயி அவ‌ர் என்ன‌ செய்ய‌ப்போராரு?? )
 
#3)விசிலடிக்கக் கூடாதுன்னு சொல்றாரே.. இதென்ன பஜனை மடமா??
 
இது ரொம்ப முக்கியமான ஒரு கேள்வி...
 
ஒரு விஷ‌ய‌த்த‌ இந்த‌ எட‌த்துல‌ தெளிவுப‌டுத்த‌ணும்னு நென‌க்கிறேன்..
 
இளைய‌ராஜா பாட்டு கேக்க‌ற‌துக்காக‌ ஒரு க‌ச்சேரிக்கு போற‌து வேற‌... இளைய‌ராஜா க‌ச்சேரிக்கு போற‌து வேற‌.. ரெண்டும் ஒண்ணு கெடையாது...
 
இது அவரோட மொதல் Concert கிடையாது.. 6வது நிகழ்ச்சி (எனக்கு தெரிஞ்சு)..
 
ஒவ்வொரு தடவையும், வெறும் சினிமா பாட்ட மட்டும்  அவ‌ர் நிக‌ழ்ச்சி ந‌ட‌த்துற‌தில்ல‌...
 
அதையும் தாண்டி த‌ன்னுடைய‌ ர‌சிக‌னுக்கு தெரியாத‌ ப‌ல‌ நுணுக்க‌மான‌ விஷ‌ய‌த்த‌ சொல்ல‌ அவ‌ர் முய‌ற்சி செஞ்சுகிட்டே இருக்காரு..
 
உதார‌ண‌த்துக்கு..
 
1) ச‌ ரி க‌... இந்த‌ மூணே மூணு ஸ்வ‌ர‌த்த‌ வ‌ச்சுகிட்டு ஒரு பாட்டு க‌ம்போஸ் பண்ண‌முடியும்னு காட்டுறார்..
 
2) அவ‌ரோட‌ அடுத்த‌ நிக‌ழ்ச்சியிலேயெ இன்னும் ஒரு ப‌டி மேல‌ போயி 2 நோட்டுல‌ ஒரு சாங் பாடிக்காட்டுறாரு.. இன்னும் ஒருபடி மேல போயி "வா வா பக்கம் வா" பாட்டு ஒரே ஒரு நோட்டுல போட்ட் பாட்டுணு சொல்றாரு
 
3) ஒரு ம‌னித‌னுடைய‌ வாழ்க்கையில் இசை எங்கெங்கு எல்லாம் ப‌ங்கெடுக்கிற‌து அப்டிங்கிற‌த‌ ஒரு பீஸா க‌ம்போஸ் ப‌ண்ணிக் காட்டுறாரு..
 
4) ஒரே வரிய எத்தனை விதமா கம்போஸ் பண்ணமுடியும்.. பண்ணுவாங்கன்னு சொல்ராரு (மாங்குயிலே பூங்குயிலேவை 6 விதமாக இவர் பாடிக்காட்டியது இன்னும் எனக்கு நெனப்பிருக்கு..)
 
இதெல்லாம் ஒரு கடைக்கோடி ரசிகனால் வேறு எங்கும் பார்க்க‌வோ அல்ல‌து தெரிஞ்சுக்கவோ இயாலாத ஒரு விஷயம்..
 
இன்னொரு அற்புதமான சம்பவம்..
 
அதுவரைக்கும் வயலின் மாதிரி இருக்குற எல்லாமே வயலின் தான்னு நெனச்ச ஆளு நானு..
 
சிம்பொனி என்பது எப்படி இருக்கும்னு.. ரொம்ப எளிமையா "இதயம் போகுதே.." பாட்ட வச்சுகிட்டு ஒண்ணுக்கு மேற்பட்ட் கவிதைகளை ஒரே நேரத்தில் வாசிக்கும் அனுபத்தைப் போன்றது சிம்பொனின்னு சொல்லி  Explain பண்ணுனாரு பாருங்க..அய்யோ.. வார்த்தையே இல்ல..
 
முதல்ல‌ Violin, பின் Viola, பின்னர் Cello, பின்னர் Double Bass இன்னு ஒவ்வொண்ணா சேந்து, இதெல்லாம் மொத்தமா ஒரு இசைப்பிரவாகமா வரும்போது கெடைக்கிற அனுபவம் இருக்கே.. சான்சே இல்ல.. இந்த நுணுக்கத்த சொல்லும்போது.. அல்லது சொல்லவரும்போது விசில் அடிச்சா சொல்ல வந்த விஷயத அவரும் முழுசா சொல்ல முடியாது.. ரசிகனும் முழுசா கேக்க முடியாது..
 
ஒரு சிந்த்சைசர் அப்புறம் ஒரு ஆக்டாபேட்..இந்த ரெண்ட வச்சுகிட்டு கச்சேரிய முடிக்காம.. மெனக்கெட்டு 60 பீஸ் ஆர்க்கெஸ்ட்ராவ கொண்டுவந்து அதன் நுண்மையான ஒலிகளை எல்லாம் எல்லாருக்கும் சேக்க ஒரு ஆளு பிரயத்தனப்படும்போது விசில் மட்டும் அடிக்காதீங்க.. கை தட்டி உற்சாகப்படுத்துங்கன்ணு சொன்னா அவரு சொல்றதுல என்ன தப்புன்னு எனக்கு புரியல...
 
ஜனனி ஜனனியோ, அல்லது ஓம் சிவோஹமோ பாடும்போது அது பக்தி இசை தான்..சிம்பொனிய பத்தி சொல்லும்போது அது ஒரு Operaவுக்கு கொஞ்சமும் இளைச்சதல்ல...
 
இதெல்லாம் எனக்கு வேணாம்யா.. நல்ல குத்து சாங் பாடு.. அப்டின்னு சொல்ற ஆட்கள், கற்கண்டு பாயசத்துல எங்கய்யா கருவப்பிலயே காணுமேன்னு தேடுறதா தான் அர்த்தம்.. அவர்களுக்கான நிகழ்ச்சி நிச்சயம் இது அல்ல..
 
அத சி டி பிளேயரிலோ அல்லது வேறு எந்த கச்சேரியிலோ நாம கேட்டுட்டு போயிடலாம்..
 
இதுல‌ என்ன‌ பெரிய‌ பொல்லாத‌ புனித‌த்த‌ன்ம‌ வ‌ந்திருச்சுன்னு கேக்க‌லாம்.. இது புனித்த‌த்த‌ன்மைய‌ சார்ந்த‌ விஷ‌ய‌ம‌ல்ல‌.. ஒரு அடிப்ப‌டை நாகரிக‌ம்னு அவ‌ரு சொல்ராரு.. அவ்ளோ தான்..
 
மொத்தத்துல இந்த விமர்சனங்கள் / குற்றச்சாட்டுகள் எல்லாமே "சார்.. இவர் என்ன கிள்றான் சார்.. மீஸ்ஸ்.. இவன் என் சிலேட்டுகுச்சிய எடுத்துட்டு தரமாட்டிங்கிறான் மீஸ்ஸ்.." அப்டிங்கிற மாதிரி தான் எனக்கு தோணுது..
 
நல்ல சங்கீதத்த கேக்கணும், தெரிஞ்சுக்கணும்னா இத மாதிரியான விஷயத்த நோண்டி நொங்கெடுக்காம இருந்தாலே போதும்..
 
நாம புலிகேசியா இல்லாத வரைக்கும் இளையராஜா சார் நமக்கு ஓணாண்டிப் புலவரா தெரியவே மாட்டார் ( புதிய தத்துவம் பத்தாயிரத்தி நூத்தி ரெண்டு...)

கொஞ்சம் Arattai!!! கொஞ்சம் Sharing!!!

எல்லாருக்கும் வணக்கம்!!!...

சத்ரியன் படத்துல அந்த குட்டி பையன், "முடியும்... உன்னால முடியும்" அப்டின்னு சொன்ன உடனே நம்ம கேப்டன் 100 மீட்டர்ஸ்ல ஓடற மாதிரி ஓடி... இஹா...இஹா..அப்டின்னு லெக் கிக் எல்லாம் பண்ணிட்டு கடைசில டப டபன்னு ஷீல்ட சுட்டுத் தள்ளுவாரே..

அந்த சீன பாத்துட்டு... நாமளும் எதாச்சும் பண்ணியே தீரணும்னு ஒரு கொலவெறியோட திரிஞ்சு.. (டயலாக் ரொம்ப லெந்த்தா போகுதுல்ல‌..  OK கட் பண்ணிறுவோம்...)

கடைசில என்ன பண்றது... மீண்டு(ம்) உங்கள் முன் Blogger அவதாரம் எடுத்துருக்கேன்....

பன்னீ....ர் (செ)சல்வம்... நீ வருவன்னு தெரியும்னு.. சொல்ற அத்தனை அண்ணாச்சிகளுக்கும் (அக்காச்சி / தங்கச்சி / தம்பிச்சி எல்லாருக்கும் சேத்து தான்..) மீண்டும் ஒரு நன்றி!!!!!!

ஆனா இந்த தடவ மறுபடி கவிதை எழுதி யாரையும் பயமுறுத்தாம... ஜாலியா.. அதே சமயம் கொஞ்சம் மேட்டரோட எழுதலாம் அப்டிங்கிறது தான் இப்பத்திக்கு என்னோட ரூல்ஸ்...

So... Welcome to கொஞ்சம் Arattai!!! கொஞ்சம் Sharing!!!