Friday, August 14, 2015

பூஞ்சிட்டு குருவிகளா!!! புதுமெட்டு தருவிகளா!!!

"இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு உங்கள் சோ அண்ட் சோ டிவியின் சிறப்பு நிகழ்ச்சிகள்"னு ஒவ்வொரு சேனலும் ஒரு வாரமா போட்டு பொளந்து எடுத்துகிட்டு இருக்காங்க..சரி விளம்பரமா இருக்கேன்னு டி.டிக்கு மாத்தும் போது அதுல எப்போவோ 20 வருஷத்துக்கு முந்தி எடுத்த வரலாற்று ஓரங்க நாடகம் ஒளிபரப்பாகிட்டு இருந்தது...

இத பாத்திட்டு இருக்கும்போதே Mind அப்ப‌டியே ஃப்ளாஷ் பேக்குல 20 வருஷம் பின்னாடி போயிருச்சு... தூர்தர்ஷனோட கொடைக்கானல் அலைவரிசை தொடங்குனதுக்காக ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாச்சு... அப்போதைய பிரபலமான சந்திரபோசோட இசை நிகழ்ச்சி... அதுக்கப்புறம் எந்த விசேஷம்னாலும் சிறப்பு ஒளிபரப்பு அதே தான்... ஆனா சும்மா சொல்லக் கூடாது நல்ல நல்ல பாட்டா போட்ருபாப்ல சந்திரபோஸ்... சரி நம்ம பிளாக்லயும் இந்த சுதந்திர தின சிறப்பு பதிவு திரு.சந்திரபோஸ் அவர்களப் பத்தி தான்...



80களின் தமிழ் சினிமாவுல இளையராஜா கொடிகட்டிப் பறந்த காலத்துல அவருக்கு மாற்றாக பல பட்ஜெட் இயக்குநர்களால் அடையாளம் காணப்பட்டவர்களில் மிக முக்கியமான ஒரு இசையமைப்பாளர் சந்திரபோஸ்..  திரைப்படத் துறைக்கு வர்ரதுக்கு முந்தி, இசையப்பாளர் தேவாவோட சேர்ந்து "போசஸ்-தேவா"ன்னு ஒரு இசைக்குழு வச்சு மேடைக்கச்சேரிகள் எல்லாம் பண்ணிகிட்டு இருந்தவருக்கு முதல் வாய்ப்பு மெல்லிசை மன்னர் இசையில பாடுறதுக்கு "ஆறு புஷ்பங்கள்" படம் மூலம் வந்தது.. அந்தப் பாட்டு பலராலும் பாராட்டப்பெற்ற "ஏண்டி முத்தம்மா ஏது புன்னகை"...

சந்திரபோசுக்கு இசையமைப்பாளராக முதல் வாய்ப்பு  1977 ல, அந்தக் காலத்துல "ம" வரிசைப் படங்களா எடுத்துகிட்டு இருந்த வி.சி.குகநாதன் இயக்கிய "மதுர கீதம்" படத்துல கிடைச்சது.. அதுக்கு பிறகு வரிசையா "மச்சானை பாத்தீங்களா", "மாங்குடி மைனர்", "முயலுக்கு மூணு கால்"னு வரிசையா அவரோட "ம" வரிசைப் படங்களுக்கும் இவர் தான் இசை.. இந்த சமயத்துல "பார்வையின் மறுபக்கம்", "தரையில் வாழும் மீன்கள்", "ராஜாத்தி ரோஜாக்கிளி"னு ஒரு 50 படம் மியூசிக் பண்ணிருப்பாரு.. பெரிய ஹிட் ஏதுமில்லைன்னாலும் அபூர்வமான சில நல்ல பாடல்களையெல்லாம் குடுத்திருப்பாரு... உதாரணத்துக்கு மச்சானப் பாத்தீங்களாவில் "மாம்பூவே சிறு மைனாவே", பார்வையின் மறுபக்கம் படத்தில் "சந்தோஷ நேரங்கள்", "தேவதை புரியும் தவங்கள்" இப்படி அப்போதைய சிலோன் ரேடியோவின் ஹிட் பாடல்கள் இவற்றில் அடக்கம்... அவரோட‌ பெரிய பலமே காதுகளை உறுத்தாத மென்மையான இசை தான்...

சந்திரபோசுக்கு முதல் பெரிய break நடிகர் பாலாஜி தயாரிப்பில் வெளிவந்த "விடுதலை" படத்துல (இந்தி "குர்பானி"யோட ரீமேக்) தான் கெடைச்சது.... சிவாஜி, ரஜினி, கன்னட சூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்த்தன்னு மெகா நடிகர் பட்டாளத்தோட வெளிவந்த படம். அதுல ஸ்டைலான ரஜினிக்கும், அலட்டிக்காத விஷ்ணுவர்த்தனுக்கும் எஸ்.பி.பி. சந்திரபோஸ் குரல்கள்ல ஒலிக்கிற "நீலக்குயில்கள் ரெண்டு" பாட்டு  சந்திரபோஸ் பேரச் சொன்னதும் பலருக்கும் இன்றும் நினைவுக்கு வரும் பாடலாக அடையாளம் காட்டிச்சு... (இந்த ஒரு வாரத்துல மட்டும் இந்தப் பாட்ட கொறஞ்சது 300 வாட்டியாச்சும் முணுமுணுத்திருப்பேன்... எஸ்பிபி குரல்ல என்ன ஒரு ஸ்டைல்...) "தங்கமணி ரங்கமணி வாம்மா நீ", "நாட்டுக்குள்ள நம்மப் பத்திக் கேட்டுப் பாருங்க, அம்மம்மா இவர் தான் சூப்பர் ஸ்டாருங்க"னு படத்தோட அத்தனை பாடல்களும் சக்கபோடு போட, சந்திரபோசோட வெற்றிகரமான ரெண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பம் ஆச்சு..


அதே சுரேஷ் ஆர்ட்ஸ் நிறுவனத்தோட அடுத்த படத்துக்கும் இவர் தான் இசை. அந்தப் படம், சத்யராஜ், அம்பிகா நடிச்சு வெளியான "மக்கள் என் பக்கம் (மலையாளத்து "ராஜாவின்டே மகன்" படத்தோட ரீமேக்). "ஆண்டவன பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும்"னு சந்திரபோஸ் போட்ட பாட்டு ஹிட் அடிக்க அடுத்த பெரிய  ஹிட் சந்திரபோச இன்னும் உயரத்துக்கு கொண்டு போச்சு...


பிரபல மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் "மோஹன்லால், மம்மூட்டி"னு ரெண்டு பெரிய ஸ்டார் நடிச்சு வெற்றிகரமாக ஓடிய "Gandhi Nagar 2nd Street" தமிழ்ல "அண்ணாநகர் முதல் தெரு"ன்னு ரீமேக் ஆச்சு.. இசை சந்திரபோஸ்... "மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு" என்ன ஒரு அருமையான மெலடி... ரொம்ப நாள் வரைக்கும் இது இளையராஜா பாட்டுன்னே நெனச்சுகிட்டு இருந்தேன்..  இது சந்திரபோஸ் பாட்டுன்னு தெரிஞ்சதும் வியந்துட்டேன்... அவரை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்த முதல் பாடல் இது தான்... இதே படத்தில் வரும் "என்ன கத சொல்லச் சொன்னா" ஒரு அருமையான மென் சோகப் பாடல்  ("அடடா யாவுமே முடிஞ்ச கத.. கனவாய்ப் போனதே காதல் கத"ன்னு எஸ்.பி.பி உருகும் போது நமக்குள்ள என்னவோ செய்யும்)
இந்தப் படம் தந்த வெற்றியால மிகப்பெரிய அதிர்ஷ்டம் அவரை அணைக்க தயாராச்சு....



"ஊக்குவிப்பார் ஊக்குவித்தால்.. ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்'னு கவிஞர் வாலி சொல்லுவாரே... அது போல சந்திரபோசோட தலையெழுத்தையே மாற்றியது ஒரு மூணெழுத்து... அந்த மூணெழுத்து....



1986 ல "பேர் சொல்லும் பிள்ளை" படத்துல இளையராஜா கிட்ட இருந்து பிரிந்து வந்த ஏவிஎம் நிறுவனுத்துக்கு கிடைச்ச சரியான ஆள் "சந்திரபோஸ்". (இவரை இளையராஜாவுக்கு எதிரா கொம்பு சீவிவிட்டார்கள்னும் சிலர் சொல்றாங்க)..
அதே நேரத்துல "கரிமேடு கருவாயன்" படத்தோட‌ இளையராஜாகிட்ட இருந்து பிரிஞ்சு வந்த வைரமுத்துவும் கூட்டு சேர "ஏவிஎம் - சந்திரபோஸ் - வைரமுத்து"ன்னு புதுக் கூட்டணி உண்டாச்சு... அடுத்த அஞ்சு வருஷத்துக்கு சந்திரபோஸ் காட்டுல இசை மழைதான்...



"சங்கர் குரு", "மனிதன்", "தாய் மேல் ஆணை", "பாட்டி சொல்லை தட்டாதே", "வசந்தி", "ராஜா சின்ன ரோஜா", "பெண்புத்தி முன் புத்தி", "சொந்தக்காரன்", "மாநகரக் காவல்"னு 1992 வரைக்கும் அனைத்து ஏவிஎம் படங்களுக்கும் சந்திரபோஸ் தான் இசை... இந்தக் காலகட்டத்தில் இவரது இசையில் வந்த சில சூப்பர் ஹிட் பாடல்கள் :

  • காக்கிச் சட்ட போட்ட மச்சான் (சங்கர் குரு)
  • சின்ன சின்னப் பூவே (சங்கர் குரு)
  • வானத்தப் பார்த்தேன் பூமியப் பாத்தேன் (மனிதன்)
  • மனிதன் மனிதன்... எவன் தான் மனிதன்(மனிதன்)
  • மல்லிகப்பூ பூத்திருக்கு அது மழையில் நனஞ்சிருக்கு (தாய் மேல் ஆணை)
  • கொலுசே கொலுசே.. எச பாடு கொலுசே (பெண்புத்தி முன் புத்தி)
  • பூஞ்சிட்டு குருவிகளா (ஒரு தொட்டில் சபதம்)
  • ராஜா சின்ன ரோஜாவோடு (ராஜா சின்ன ரோஜா)
  • சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா (ராஜா சின்ன ரோஜா)
  • டில்லிக்கு ராஜான்னாலும் (பாட்டி சொல்லைத் தட்டாதே)
  • வண்ணத்துப்பூச்சி வயசென்ன ஆச்சு (பாட்டி சொல்லை தட்டாதே)
  • ஏதேதோ கற்பனை வந்து (வாய்க்கொழுப்பு)
  • வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர (மாநகரக் காவல்)
இத எழுதும் போது இன்னொரு முக்கியமான விஷயத்தப் பத்தியும் சொல்லணும்... ஒவ்வொரு காலகட்டத்திலும் சந்திரபோஸ் தன்னுடைய இசையில் கே.ஜே.யேசுதாசுக்கு மிகச் சிறந்த பாடல்கள கொடுத்திருப்பாரு.. இது ஒரு அபூர்வமான இணைன்னே சொல்லலாம்..

  • மாம்பூவே சிறு மைனாவே (சந்திரபோசின் முதல் ஹிட்)
  • ஓடையின்னா நல்லோட... ஒளிஞ்சிருக்கப் பூஞ்சோல ( ராஜாத்தி ரோஜாக்கிளி படப் பாடல்)
  • பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டுபோனால் ( இன்றும் அனைத்து ஐய்யப்ப பூஜைகளிலும் தவறாது இடம் பிடிக்கு சந்திரபோஸின் இசைச் சொத்து)
  • தோடி ராகம் பாடவா மெல்லப்பாடு (மாநகரக் காவல்)
  • ரவிவர்மன் எழுதாத கலையோ ( வசந்தி)
  • சந்தோஷம் காணாத வாழ்வுண்டா ( வசந்தி படப் பாடல்... இந்தப் பாடல் ல‌ "வாழ்ந்துவிட்டால்"ன்ற வார்த்தைய தாசேட்டன் பாடும்போது ஒரு Roller Coaster ல சுத்தி மெதுவா land ஆன உணர்வு இருக்கும்..)
  • சின்ன சின்னப் பூவே.. நீ கண்ணால் பாரு போதும் ( சங்கர் குரு)
  • ஏதோ நடக்கிறது... இதமாய் இருக்கிறது... ( மனிதன் - என்ன ஒரு ஃபீல்... றெக்கட்ட நமக்கு மொளக்கிற மாதிரியே இருக்கும்)
  • ஒரு பண்பாடு இல்லையென்றால் ( ராஜா சின்ன ரோஜா படத்தின் தத்துவப் பாடல்)
இந்த ரெண்டாவது இன்னிங்ஸ்ல பாண்டியராஜன் நடித்த ஒரு டஜன் படங்களும், ரகுவரன் நடிப்பில் "மைக்கேல் ராஜ்",  உட்பட ஒரு அரை டஜன் படங்களும், பார்த்திபனின் முதல் படமான புதியபாதையும் அடக்கம்.

1992 ல ரோஜாவுல "ஏ.ஆர். ரகுமான்" னு  வைரமுத்துவுக்கு ஒரு புதுக் கூட்டாளி கெடைக்க‌ ,  "எஜமான்' படம் மூலம் ஏவிஎம் மீண்டும் இளையராஜாவோட கைகோர்க்க அதுக்கு பிறகு இந்தக் கூட்ட்ணி தொடரவே இல்ல...

இவருக்கு மூன்றாவது இன்னிங்சை அளித்தவர் இயக்குநர் வி.சேகர். அவருடைய முதல் படமான 'நீங்களும் ஹீரோ தான்"ல ஆரம்பிச்சு, "வரவு எட்டணா செலவு பத்தணா", "நான் புடிச்ச மாப்பிள்ளை", "பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்", "பொறந்த வீடா புகுந்த வீடா", "நான் பெத்த மகனே"ன்னு வரிசையா எல்லாப் படத்துக்கும் சந்திரபோஸ் இசை தான்.. "காலம் மாறிப் போச்சு"ல தான் தேவா இந்த இடத்துக்கு வந்தார்...

அதற்கு பிறகு நடந்தது பத்தி விரிவா சொல்லத் தேவையில்ல.. 90 கள்ல இளையராவோட இடத்த ரகுமானும்... இவரோட இடத்த இவரது முன்னாள் கூட்டாளி தேவாவும் பிடிக்க அதற்கு பிறகு இவருக்கு பெரிதாய் படங்கள் அமையல... ரொம்ப நாள் கழிச்சு தன்னோட பூஞ்சிட்டு குருவிகளாவ ரீமிக்ஸ் பண்ணி வெளியிட்டாரு... அப்புறம் சீரியல்ல கொஞ்ச நாள் நடிகர் அவதாரம் எடுத்தாரு...

ஒரு பத்தாண்டு காலம் காதுகளை குடையாத மென்மையான நல்ல பாடல்களைத் தந்த இந்த இசையமைப்பாளர் செப்டம்பர் 2010 ல தனது இசையை மட்டும் நம்மளோட விட்டுட்டு பிரிந்தார்.....

முத்தாய்ப்பாய் இந்தச் சுதந்திரப் பொன்னாளில், திரு. சந்திரபோஸ் இசையில் , "இது போன்ற உயர்ந்த பாடல்களை நான் ஊதியம் பெறாமலே பாட ஆசைப்படுகிறேன்" என்று கானகந்தர்வன் கே.ஜே.யேசுதாஸ் சொன்ன அந்தப் பாடலில் இருந்து....

பாசங்கள் போதும் பார்வைகள் போதும்
பாலையில் நீரும் சுரந்து விடும்
புன்னகை போதும் பூமொழி போதும்
போர்களும் கூட முடிந்துவிடும்

பாதையை அன்பே திறந்துவிடும்
பாறையும் பழமாய் கனிந்துவிடும்
வாழ்க்கையின் ஆழம் விளங்கிவிடும்!!!!!!!!

No comments:

Post a Comment