Tuesday, December 26, 2017

கடவுள் அமைத்த காமெடி மேடை!!


"காலம் செய்த கோமாளித்தனத்தில் உலகம் பிறந்தது"
படித்தால் மட்டும் போதுமா திரைப்படத்தில் வரும் பாடல் இது..

"கோமாளி"
இந்த மூன்றெழுத்து வார்த்தைக்கு பின்னால், தனது வேடத்தினால் எதிரில் இருப்பவர் கவலையை கரைப்பதையும், தனது கவலையை மறைப்பதையும் ஒருசேரச் செய்கிற கலைஞர்களின் வலியும் வாழ்வும் பொதிந்து கிடக்கிறது... அப்படி ஒரு கலைஞனைப் பற்றிய பதிவு தான் இது...


தமிழ் சினிமாவைப் போலவே அற்றை நாளில் "ஏட்டமும் வல்லிய கலாக்காரர்களை" மலையாள சினிமா உலகிற்கு தந்தவை நாடகங்களே...     1960 - 70 களில் மலையாள சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நகைச்சுவைக் கலைஞர்களான "சங்கராடி", "அடூர் பாஸி" இவர்கள் இருவரும் நாடகங்களில் இருந்து சினிமாவிற்கு வந்த வெற்றியாளர்களே... நாடகப் பின்னணியில் இருந்து சினிமாவிற்கு வந்து, இந்த இருவரோடும் சற்றொப்ப 150 படங்களில் இணைந்து நடித்த ஒரு நகைச்சுவைக் கலைஞர் அவர்.

திருவனந்தபுரத்தில் உள்ள பட்டம் என்பது தான் அவரது ஊர்.  50 களின் இறுதியில் மலையாள நாடகங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களை செய்து வந்தவருக்கு சினிமா மீது காதல்...  சினிமாக் கனவுகளுடன் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்தார். Slapstick Comedy என்கிற உடலசைவுகளைக் கொண்டு செய்யப் படுகிற கோணங்கி சேஷ்டை வகை நகைச்சுவையில் 50 களின் பிற்பாதியில் சந்திரபாபுவும் 60 - 70 களில் நாகேஷும் கொடிகட்டிப் பறந்த தமிழ் சினிமாவில் அதே பாணியில் நகைச்சுவைகளை செய்த இவருக்கென்று பெரிதான இடம் கிடைக்கவில்லை தான். கதாநாயகனுக்கு பின்னால் நிற்கிற கதாபாத்திரங்களுக்கு இவரது ஒல்லியான உருவம் பொருந்திப் போக, "மற்றும் பலர்" வேடங்களே கிடைத்தன.
ஆனால் தொடர்ந்து மலையாள சினிமாக்களில் "ஜீவிக்கான் அனுவாதிக்கு", "அரப்பாவான்", "காட்டுக்குரங்கு" என்று  கிடைத்த வாய்ப்புக்களை  60களில்  செய்து வந்தவருக்கு தமிழில் தொடர்ந்து வாய்ப்புக்களை வழங்கியவர்களில் முதலாமவர் வீணை.எஸ்.பாலச்சந்தர்.  "பொம்மை", "நடு இரவில்", "அவனா இவன்" என்று தனது படங்களில் எல்லாம் இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார்.

அதே போல சொர்க்கம் படத்தில் டிரைவர் (சொல்லாதே யாரும் கேட்டால் பாட்டில் முழுமையாக வருவார் ), சிவந்த மண் படத்தில் சிப்பாய், ராமன் எத்தனை ராமனடி படத்தில் அப்பாவி சிவாஜியின் தோஸ்துகளில் ஒருவர்,  என்று  1984ல் படிக்காத பண்ணையார் வரை இவருக்கு  தொடர்ந்து தனது படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்த மற்றொருவர் "நடிகர் திலகம் சிவாஜி". இந்தப் பதிவின் முதல் பத்தியில் நான் சொன்ன பாடலிலும் "கரகாட்டக்காரனுக்கு காமெடி எழுதிய" .வீரப்பனோடு இணைந்து நடனம் ஆடியவரும் இவர் தான்.

இந்த அளவில் இவரது பெயரைத் தெரிந்து கொள்வது, தொடர்ந்து வாசிக்க வசதியாயிருக்கும்... அவரது பெயர் "பட்டம் சதன்".


சதன்  நடிகர் மட்டுமல்ல... அவர் நன்றாக பாடக்கூடியவர்.. மலையாளத்தில் "தேவராஜன் மாஸ்டர், அர்ஜுனன் மாஸ்டர், .டிஉம்மர், பாபுராஜ், கே.ஜே. ஜாய்" என்று அப்போதைய மலையாள இசையமைப்பாளர்கள் அனைவர் இசையிலும் பாடல்களை பாடியவர் தான்.

இன்றும் பிரபலமான இவரது சில மலையாள பாடல்கள்:
 • மணியான் செட்டிக்கு மணி மிட்டாயி - சந்தனச்சோல (கே.ஜே. ஜாய்)
 • பரிப்பு வடா பக்கு வடா - ஸ்நேஹ யமுனா (கே.ஜே. ஜாய்)
 • ஆரப்பிரி இளகியதார்க்கானு - ஜீவிக்கான் அனுவாதிக்கு (விஜய பாஸ்கர் )
 • சிரிக்குடுக்கே தங்கச் சிரிக்குடுக்கே - சந்தனச்சோல (கே.ஜே. ஜாய்)
 • ரெம்பயத் தேடிவந்த ராவணனோ - உல்லாசயாத்ர (எம்.எஸ்.வி)
 • கையில் நின்னே கிட்டியால் - நித்ய கன்யகா (தேவராஜன் மாஸ்டர்)
 • பூஞ்சொடியில் - ப்ரதிஞ்ச (பென் சுரேந்திரன்)

 1958ல் தனது இசையமைப்பில் "லில்லி" என்ற படத்தில் "ஓடியோடியோடி வன்னு " என்ற பாடலைப் பாடிய சதனை தனது இசைக்குழுவில் "கோரஸ்" பாடகராக இணைத்துக் கொண்டார் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.

எம்.எஸ்.வியிடம் இருந்த Chorus Section பற்றி சில வரிகள் சொல்லிவிடுவது இந்தப் பதிவை வாசிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றெண்ணுகிறேன்

டி.எம்.எஸ், பி.சுசீலா நீங்கலாக "எல்.ஆர்.ஈஸ்வரி, .எல்.ராகவன், கே.வீரமணி" என்று வெற்றி பாடல்களை பாடிய பாடகர்களைக் கொண்டது அந்த Chorus Section. “Lead singing only” concept எல்லாம் முந்தைய இருவருக்கு மட்டும் தான். மற்றவர்கள் எல்லாம் தங்கள் வாய்ப்பு வரும் பொழுது Lead singing பாடுவார்கள்.. அதே நேரம் எம்.எஸ்.வியின் மற்ற பாடகர்கள் பாடும் பாடல்களில் கோரஸும் பாடுவார்கள்.. இதற்கு சிறந்த உதாரணம் ஒன்று சொல்லலாம்… "பாசமலர் " படத்தில் "வாராய் என் தோழி" பாடலை 7 - 1 காலை கால்ஷீட்டில் பாடிவிட்டு மதியத்திற்கு "பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்" என்று ஜமுனாராணி பாடிய பாடலுக்கு கோரஸ் பாடியவர் எல்.ஆர்.ஈஸ்வரி.

இந்த வகையில் "குழந்தையும் தெய்வமும்" படத்தில் டி.எம்.எஸ்ஸும், ஏ.எல்.ராகவனும் பாடும் "என்ன வேகம்.. நில்லு பாமா" பாடலில் இவர்கள் இருவரோடு ஒலிக்கும் "டௌ டௌடௌட  டௌ" கோரஸ் பகுதி சதன் பாடியது..
"நீரும் நெருப்பும்" படத்தில் ஜெயலலிதாவோடு சிப்பாய்கள் பாடுவது போல் அமைந்த பன்மொழிப் பாடலான "விருந்தோ நல்ல விருந்து" பாடலில் "மதனப் பூங்காவனத்தில் மகிழும் மோளே" என்று தொடங்கும் மலையாள வரிகளைப் பாடியது மட்டுமன்றி அதில் ஜெயலலிதாவுடன் சேர்ந்து ஆடியும் இருப்பார் சதன்.

அக்கார்டியன்,  மெலோடியன், பியானோ, வைப்ரபோன் என்று மேலைநாட்டு இசைக்கருவிகளை நுணுக்கமாக பயன்படுத்த தெரிந்த மெல்லிசை மன்னர் அதையெல்லாம் விட "மனிதக் குரல்களுக்கு" இருக்கும் வீச்சையும் அதன் இயற்கையாய் அமைந்த சிறப்பையும் நன்கு அறிந்தவர்... அதனால் தான் தனது இசைக்குழுவில் Timing Rhythm Section என்று ஒன்றை நிரந்தரமாகவே வைத்திருந்தார். 

Timing Rhythm என்பது என்னவென்றால் பாடல் காட்சியின் இடையிசையிலோ அல்லது பின்னணி இசையிலோ வழக்கமான இசைக்கருவிகளை தாண்டிய சில சப்தங்கள் தேவைப்படும் (இப்போது Loop களில் பாடல்களே முடிந்து விடுகின்றன.. அதனால் special sound effects பற்றி சொல்லத்தேவையே இல்லை.. இது 60-70 களின் நிலை).. உதாரணத்திற்கு "பட்டத்து ராணி பார்க்கும் பார்வை" பாடலில் சவுக்கால் அடிப்பது போன்ற ஒரு ஓசை தொடர்ந்து வரும் அல்லவா?.. அதன் ஓசை "தீபாவளி கேப்" வெடிகளை மூன்று மூன்றாக அடுக்கி அதை சுத்தியலால் தட்டி வெடிக்க வைத்து பதிவு செய்யப்பட்டது..


"நெஞ்சத்தைக் கிள்ளாதே" படத்தின் "பருவமே புதிய பாடல் பாடு" பாடலை "கடசிங்காரி வசிக்கும் ஜெயச்சா - மற்றும் தபலா வாசிக்கும் கண்ணையா" ஆகியோரை தொடையில் தட்ட வைத்து இளையராஜா ஒலிப்பதிவு செய்ததை அவரே சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறோம்..

இது போன்ற சிறப்பு ஒலிகளுக்காக நிரந்தரமாக 3 பேர் மெல்லிசை மன்னரின் குழுவில் இருந்தார்கள்... முதலாமவர் "உப்புக் காகிதங்களை தேய்த்து "கேள்வி பிறந்தது இன்று" பாடலின் ரயிலோசை, கொட்டாங்குச்சியை வைத்து "அச்சம் என்பது மடமையடா" பாடலின் "குளம்படிச் சத்தம்", சிறுவர்கள் விளையாடும் விசிலை வைத்து "லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்" பாடலின் பறவைகள் சத்தம் என்று புதிது புதிதாக கண்டுபிடித்த தாள வாத்திய கலைஞர்  "ஐ.எஸ்.முருகேசன் (தெரியாதவர்களுக்கு மட்டும் நடிகர் மீசை முருகேஷ்). கடசிங்காரி உட்பட பல புதிய இசைக்கருவிகளை கண்டுபிடித்தவர் இவர்.

இரண்டாமவர்….. எத்தனை பாடல்களில் சிவாஜியோ, எம்.ஜி.ஆரோ விசிலடித்துப் பாடி இருப்பார்கள்.. அது அத்தனையும் எம்.எஸ்.வி. குழுவில் மாண்டலின் வாசித்த "எம்.எஸ்.ராஜு"வின் வாய் வண்ணம்.

மூன்றாவது சதன்... அவர் ஒரு மிகச்சிறந்த  பலகுரல் கலைஞர்.. அதை மிகச்சரியாக ஏராளமான பாடல்களில் பயன்படுத்திக் கொண்டார் மெல்லிசை மன்னர்... அவரது குரல் ஒலித்த பாடல்களில் சிலவற்றை விரிவாகவே பார்ப்போம்.


 • பறக்கும் பந்து பறக்கும் - பணக்காரக் குடும்பம் படத்தில் எம்.ஜி.ஆரும் சரோஜா தேவியும் பேட்மிட்டன் விளையாடுவது போல அமைந்த இந்தப் பாடல் முழுவதும் "பந்தடிக்கும் ஓசை" பிரதானமாக வரும். ஆள்காட்டி விரலை வாயில் நுழைத்து பக்கவாட்டில் அழுத்தி இழுத்து "டொப்" என்ற பந்தடிக்கும் ஓசையை அழகாக உருவாக்கியவர் சதன்.. பாடல் பதிவில் பாடகர்களும் இசைக்கலைஞர்களும் மாற்றி மாற்றி ரீ-டேக் வாங்க மீண்டும் மீண்டும் இதே போல செய்து இவரது வாயில் ரத்தமே வந்திருக்கிறது.

 • போனால் போகட்டும் போடா - "ஓஹோஹோ" என்று டி.எம்.எஸ். ஆரம்பிக்கும் போதே பின்னால் சுடுகாட்டு எபெக்ட்டில் நாய், நாரி, கோட்டான் என்று என்னென்னவெல்லமோ கத்துமே, நினைவிருக்கிறதா?? அவை யாவுமே சதன் குரல் கொடுத்தவை தான். ("ஜோ ச்சலா கயா உஸ்செ பூல்ஜா" என்று இந்தி ரீமேக்கில் நவுஷாத் இசையில் "மன்னா தே" பாடிய போதும் இந்த கூக்குரல்கள் எல்லாம் சதன் உபயம் தான்.)
 • தத்தை நெஞ்சம் முத்தக்கிளி - சர்வர் சுந்தரம் படத்தில் கே.ஆர்.விஜயா கிளியோடு பாடுவது போல அமைந்த இந்தப் பாடலில் இசையரசி பி.சுசீலாவுடன் "முத்தக்கிளி", "இல்லியோ" என்று கிளி கொஞ்சுவது போல ஒலிப்பது சதன் குரல் தான்.

 • மகராஜா ஒரு மகராணி - இருமலர்கள் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலில் டி.எம்.எஸ் மற்றும் ஷோபா சந்திரசேகரோடு சேர்ந்து "குட்டிராணி" என்று கொஞ்சுவது சதனின் குரல் தான்.

 • மலரென்ற முகமொன்று சிரிக்கட்டும் - காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷும் சச்சுவும் டான்ஸ் ஆடும் பாடல்... பாடலின் நடுவில் "யூடு யூடு யூடு யூடுடுடுஊ" என்று ஒலிக்கும் யொடெல்லிங் சதன் தான்.

 • நினைத்தால் சிரிப்பு வரும் - தனது படங்களில் இசையில் ஏதாவது புதுமையை செய்துகொண்டே இருந்த கே.பாலச்சந்தரின் "பாமா விஜயம்" படத்தில் வரும் பாடல்.. முதலில் பி.சுசீலா குரலில் மென்மையாக ஆரம்பிக்கும் பாடல், சரணத்தில் நாகேஷ் - ஜெயந்தி ஜோடிக்காக எல்.ஆர்.ஈஸ்வரி குரலில் வேகமெடுக்கும்... நாகேஷ் தலைகீழாக நடந்து சுவற்றின் மீது ஏறி என்னென்னவோ செய்வார்.. அதை குரலில் கொண்டு வரவேண்டும் என்பது தான் சதனுக்கு வேலை... பின்னி எடுத்திருப்பார்.. கேட்டுப்பாருங்கள் ...
நடிப்பில் எஸ்.பாலச்சந்தர் வாய்ப்பு கொடுத்ததைப் போல, பாடல்களில் கே.பாலச்சந்தர் நிறைய வாய்ப்புக்களை சதனுக்காக உருவாக்கி தந்திருக்கிறார்.

அதில் இன்றளவும் சதனின்  பேர் சொல்லும் பாடல்....

 • கடவுள் அமைத்து வைத்த மேடை - அவள் ஒரு தொடர்கதை படத்தில், கமலுக்கு ஒரு பலகுரல் கலைஞனின் கதாபாத்திரம் என்பதால் சதனுக்கு அல்வா சாப்பிடுவது போல அமைந்த பாடல். எஸ்.பி.பியுடன் சதன் கிளிகள், மேளம் , நாதஸ்வரம், விமானம், மான், முயல்கள், பசுவும் கன்றும், வீணை, தவளை என்று பாடல் முழுக்க அதகளம் பண்ணி இருப்பார்..

இந்தப் பாடலின் அபார வெற்றியைத் தொடர்ந்து அவரது அடுத்த படமான "அவர்கள்" படத்தில் கமலை வைத்து Ventriloquism என்னும் பொம்மையுடன் பேசும் கலையை வைத்து ஒரு பாடல் காட்சி அமைத்திருப்பார்... அந்தப் பாடல்

 • ஜூனியர்... ஜூனியர்.... - மீண்டும் எஸ்.பி.பி மற்றும் சதன் கூட்டணி.. பொம்மையாகவே மாறிப் பாடியிருப்பார் சதன் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளை நெருங்கி விட்ட பிறகும் இன்றும் மிகப் புகழ் பெற்று விளங்குகிற பாடல்...

 • லட்சுமி.. மாலா... ஷீலா - கே.பி சார் கதை வசனத்தில் இயக்குனர் ஸ்ரீதரின் உதவியாளர் பி.மாதவன் இயக்கத்தில் வெளிவந்த "நீல வானம்" திரைப்படப் பாடல். காட்சிப்படி கதாநாயகி குளித்துக் கொண்டிருக்கும் நீச்சல் குளத்தில் குதித்து நடிகர் திலகம் குறும்பு செய்வது போன்ற பாடல்.. கடைசியில் குரலை மாற்றி பெண்குரலில் நடிகர் திலகம் சிவாஜி பாடுவதாக வரும்... கதாநாயகிக்காக பாடிய எல்.ஆர்.ஈஸ்வரியையே பாட வைத்திருந்திருக்கலாம் எம்.எஸ்.வி.. ஆனால் அந்த வாய்ப்பை சதனுக்கு கொடுத்திருப்பார்... கிட்டத்தட்ட எல்.ஆர்.ஈஸ்வரி குரலையே இமிடேட் செய்து பாடியிருப்பார்... சிவாஜிக்கு சதன் பாடிய ஒரே பாடல் இது தான்...

 • முத்தமோ மோகமோ - பறக்கும் பாவை படத்தில் டி.எம்.எஸ். மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி குரல்களில் ஒலிக்கும் பாடலில் இடையில் வரும் பலவிதமான விலங்குகளின் சப்தங்களும் சதன் கொடுத்தவை தான் என்று சொல்வது கிளிஷேவாக இருக்கும்.

 • வெத்தல போட்ட பத்தினி பொண்ணு - டிஸ்கோ சாந்தியின் அப்பா சி.எல்.ஆனந்தன் நடித்த வீரத்திருமகன் படத்தில் வரும் பாடல்.. பெண்வேடமிட்டு ஆனந்தன் ஆடியிருப்பார்.. பாடல் முழுக்க வினோதமான ஒரு சப்தம் வரும் அது சாட்சாத் சதன் தான்.

 • நெஞ்சிருக்கும் எங்களுக்கு - நெஞ்சிருக்கும் வரை படத்தில் சிவாஜி, முத்துராமன், வி.கோபாலகிருஷ்ணன் மூன்று பெரும் விசில் அடித்தபடி பாடும் பாடல்.. வழக்கமாக விசில் என்றாலே எம்.எஸ்.ராஜு தான் எம்.எஸ்.விக்கு... ஆனால் இதில் ஒன்றல்ல ஒன்றுக்கு மேற்பட்ட விசில்கள் என்பதால் சதனும் ராஜுவும் சேர்ந்து விசில் அடித்திருப்பார்கள்.

 • கேர்ள்ஸ் ஆன் தி பீச் - கல்லும் கனியாகும்... டி.எம்.எஸ்ஸும் .எல்.ராகவனும் சேர்ந்து சௌந்தர் ராகவன் பிக்சர்ஸ் என்ற பெயரில் எடுத்த படம்.. கதாநாயகன் .எல்.ராகவன்... இதில் கேர்ள்ஸ் ஆன் தி பீச் என்று ஆரம்பிக்கும் ஆங்கில வரிகளை கிண்டல் செயது "அய்யா ஊரு ஆப்பிரிக்கா காடு" என்று .எல்.ராகவனும் நாகேஷுக்காக சதனும் பாடிய பாடல்... வித்தியாச வித்தியாசமான ஓசையெல்லாம் எழுப்புவார்...

 • அழகிய தமிழ் மகள் இவள்... - எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற ரிக்ஷாக்காரன் படப்பாடல்... "லல் லல் லல் லல் லலலா..." வடிவேலு சொல்லும் நகைச்சுவை நினைவுக்கு வருகிறதா.. அந்த லல் லல் லல் சவுண்ட் எபெக்ட் சதனுடையது.
 • அம்மாடீ... பொண்ணுக்கு தங்க மனசு - ராமன் எத்தனை ராமனடி படத்தில் டி.எம்.எஸ்.குரலில் ஒலிக்கும் அற்புதமான பாடல்... பாடலின் நடுவே... மூக்கால் தாளம் போடும் ஓசை கேட்கும்.. அது படத்தில் நடிகர் திலகத்தோடு ஆடிப் பாடிய சதன் தான்.

இப்படி நிறைய சொல்லலாம்...

எம்.எஸ்.வி மட்டுமின்றி சங்கர் - கணேஷ் இசையில் "நான் யார் தெரியுமா", "காலம் வெல்லும்", எஸ்.எஸ்.வேதா இசையில் "பொண்ணு மாப்ளே", ஷ்யாம் இசையில் "கருந்தேள் கண்ணாயிரம்", எஸ். பாலச்சந்தர் இசையில் "நடு  இரவில்" ஆகிய படங்களில் பாடி இருக்கிறார்...

70களுக்கு பிறகு வந்த இசை அலையில் இது போன்ற முயற்சிகள் அடிபட்டுப் போக மீண்டும் திருவனந்தபுரம் திசை நோக்கி இருக்கிறார்.. தொடக்கத்தில் நான் சொன்ன 150 படங்கள் என்பதெல்லாம் இந்த 70 களிலே தான்.. சின்னச்சின்ன வேடங்களாயிருந்தாலும் இதுபோல நிறைய கிடைத்திருக்கின்றன... அதுவும் ஒரு கட்டத்தில் குறைய தொடங்கியது... 1958-59ல் தொடங்கிய அவரது கலைப் பயணம் 1992ல் "சிம்ஹத்வனி" படத்துடன் முடிவுக்கு வந்தது...

தனது நடிப்பாலும் குரலாலும் ரசிகர்களை கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் மகிழ்வித்த அந்தக் கலைஞனின் தனிப்பட்ட வாழ்க்கை அத்தனை இனிமையாக இல்லை.. மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வடபழனி குமரன் காலனியில் மழை பெய்தால் குளம் கட்டும் தெருவில் ஒரு வாடகை வீட்டிலேயே இறுதி வரை அவரது வாழ்க்கை கழிந்தது.. அவரது மனைவியின் சிறிய ஊதியத்திலேயே குடும்பம் நடந்தது... 70 களுக்கு பிறகு இசை ரசனை மாறியது, பிறகு மெல்லிசை மன்னர் மெல்லமெல்ல இறங்குமுகத்தை சந்தித்தார்.. அடுத்த கட்ட இசையமைப்பாளர்களுக்கு சதனின் தேவை இல்லாது போனது.. இதற்கு எல்லாம் மேலே விடாத மதுப்பழக்கம் வேறு...

1992ல் வடபழனியில் ஒரு தனியார் மருத்துவமனையில் அந்தக் கலைஞனின் உயிர் பிரிந்தது... மருத்துவ சிகிச்சைக்கான கட்டணத்தைக் கூட அவரது குடும்பத்தால் செலுத்த இயலாமல் போக, அவரது உடலைத் தர மருத்துவமனை மறுத்தது... பிறகு அவரது சக கலைஞர் எல்லாம் சேர்ந்து பணத்தைச் செலுத்தி அவரது உடலை வெளிக்கொணர்ந்தனர்...

ஒப்பீட்டளவில் பார்த்தால் நூற்றுக்கு குறைவான பாடல்கள் தான் தமிழில் பாடி இருக்கிறார் சதன்... ஆனால் இன்று பலகுரல் கலைஞர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தில் சொற்ப அளவு கூட ஒரு இசை மேதையின் அருகில் இருந்த அவருக்கு கிடைக்கவில்லை என்பதே நிஜம்...

மிமிக்ரி என்ற பெயரால் எவரையும் காயப்படுத்தவோ கேலி செய்யவோ இல்லை... ஆனால் ஏறத்தாழ 20 ஆண்டுகள் அந்த அரிய கலையைக் கொண்டு பலப்பல அற்புதங்களை படைத்ததில் தான் மற்ற பலகுரல் கலைஞர்களிடம் இருந்து சதன் வேறுபட்டு உயர்ந்து நிற்கிறார்!!


அவருக்கு திறமைக்கு சரியான Remuneration கிடைக்காது போயிருந்திருக்கலாம்.... ஆனால் அதற்கான  Recognition என்பது கிடைப்பதில் தான் இவரைப் போன்ற கலைஞர்களை,  அவர்களின்  சாதனைகளை அடுத்த தலைமுறைக்கு முன்னெடுத்துச் செல்ல முடியும்.... 
நிறைவாக.... எப்போதும் நான் சொல்வது தான்... ஊடகங்கள் மற்றும் தமிழ் திரைத்துறை இவரைப் போன்ற கலைஞர்களின் சாதனைகளை முறையாக ஆவணப் படுத்தியே ஆகவேண்டும்... அதுவே அவர்களின் கடும் உழைப்பிற்கு நாம் திரும்பிச் செலுத்தும் நன்றியறிதலும் பெருமையும் ஆகும்!!

No comments:

Post a Comment