Saturday, February 6, 2021

Twenty:20 - சில குறிப்புகள்!!!

 அந்த போலீஸ் அதிகாரி மேலே போலீஸ் உடுப்பும் தலையில் தொப்பியும் இடுப்பில் லுங்கியுமாய் மகளுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்.  அவரது மனைவி அவரது யூனிஃபார்ம் பேண்டை இஸ்திரி பண்ணிக் கொண்டிருக்கிறார்.

தொலைபேசி அலறுகிறது... ஹலோ.... சார்... நான் கான்ஸ்டபிள் ... நம்ம போலீசை எல்லாம் கயிறு பாக்டரில..... அய்யோ ... அம்மா ....  ரிசீவரை கடாசிவிட்டு ஓடிச்சென்று வாகனத்தில் ஏறுகிறார்... வ்ர்ர்ரூம்… உறுமியபடி அந்த வெள்ளை ஸ்கார்பியோ கயிறு பேக்டரி  முன் நிற்க... திபுதிபுவென ஓடி மூட்டை மேல் ஏறி தொப்பியை கழட்டி வைத்து விட்டு லுங்கியை பட்டா பட்டிக்கு மேல் ஏற்றி கட்டியபடி ஒரு செம்ம பைட் … அடி பொளந்தெடுக்கிறார்... “டேய் நீ ஆள் தெரியாம கைய வெச்சுட்ட.. எங்கப்பா யாரு தெரியுமா?” என்று கேட்கும் அக்யூஸ்டை ... “உன் அப்பன் யாராயிருந்தாலும் அவங்கப்பன் பெரிய கொலக்கொம்பனா இருந்தாலும் எனக்கு முன்னாடி ஒரு தூசிடா”... என்று பன்ச் அடித்தபடி இழுத்துப் போகிறார்...

 மாஸான இந்தக் காட்சி இடம்பெற்ற படத்தை பற்றி எழுத வேண்டும் என்று வெகுநாளாய் எனக்கு ஒரு எண்ணம்... அப்படி என்ன இது சிறப்பான படம்?? பெரிய நடிகர் நடிகைகள் நடித்த படமா? பெரிய இயக்குனரின் படமா? வசூலில் சாதனை படைத்த படமா ? அல்லது வேறு ஏதேனும் சிறப்புக்களை உடைய படமா ? என்றால் இந்த மொத்தக் கேள்விகளுக்கும் ஒரே சொல்லில் "ஆம்" என்று பதில் சொல்லலாம்.

அந்தப் படம் தான் 2008ல் வெளியாகி 7 ஆண்டுகள் அந்த மாநிலத்தின் வசூல் சாதனையாக இருந்த மலையாளத் திரைப்படம் Twenty : 20. மலையாள நடிகர் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artiste) விற்காக 55 பிரபல நட்சத்திரங்கள் உட்பட  மலையாளத் திரையுலகின் ஏராளமான நடிகர்கள் இணைந்து நடித்த படம்..

மூத்த நடிகர் மது சேட்டன் , மோகன்லால், மம்மூட்டி, சுரேஷ் கோபி, ஜெயராம், திலீப், முகேஷ், மனோஜ் கே ஜெயன்,  பிஜு மேனன் என்று 80 - 90 களின் ஹீரோக்கள், பிருதிவிராஜ், ஜெயசூர்யா, குஞ்சாக்க போபன், மணி குட்டன், என்று இளைய தலைமுறை நாயகர்கள்... கலாபவன் மணி, சித்திக் , பாபுராஜ் , பாபு ஆண்டனி, ஷம்மி திலகன் என்று வில்லன்கள்... பாவனா, நயன்தாரா, கோபிகா, கார்த்திகா,  சிந்து மேனன், ஜோதிர்மயி, காவ்யா மாதவன் என்று நடிகைகள் பட்டாளம்... இன்னும் நகைச்சுவை நடிகர்கள் கொச்சின் ஹனிஃபா , இன்னொசென்ட் , ஜகதி ஸ்ரீகுமார் , ஸ்ரீனிவாசன் , சலீம் குமார், மாமுக்கோயா , சுராஜ் வெஞ்சாரமூடு , ஹரிஸ்ரீ அசோகன், குண்டு கல்பனா என்று நடிகர் நடிகையர் பட்டியலே மிக நீ...ளம்..

பொதுவாக இது போன்ற பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்கள் என்று ஒரு கையளவு படங்களின் பெயர்களை சொல்லலாம். உதாரணத்திற்கு நம்ம ஊரு 'சுயம்வரம்' உட்பட.  80 களில்  இதே போல தமிழ் திரைப்பட நடிகர் சங்க நலநிதிக்காக "விஜயகாந்த் , பிரபு, கார்த்திக் , சத்யராஜ் " நடிப்பில் "இந்நாட்டு மன்னர்கள்" என்ற பெயரில் அமீர்ஜான் இயக்கத்தில் பூஜை போடப்பட்டது .  பிறகு என்ன  காரணத்தினாலோ அந்தப் படம் வளரவில்லை. மலையாளத் திரையுலகிலும் நடிகர் சங்க நலநிதிக்காக எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் Twenty: 20  தான். ஆனால் அவற்றில் இருந்து இந்தப் படம் எவ்வாறு வேறுபடுகிறது என்பது தான் இதன் சிறப்பு.

தென்னிந்திய மொழிகளில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நம்பர் 1 இடத்திற்கு போட்டியிடும் இரண்டு நடிகர்கள் ஒரே காட்சியில் தோன்றுவது என்பதில் ஒரு Pattern இருப்பதை நாம் ஒவ்வொரு மொழியிலும் காணலாம்.

முதலில் தமிழில் பாகவதரும் சின்னப்பாவும் இணைந்து நடித்ததில்லை. மக்கள் திலகமும் நடிகர் திலகமும் இணைந்து நடித்து வெளியான கூண்டுக்கிளி வந்த பொழுது, சிவாஜி நடிக்க வந்து 16 மாதங்களே ஆகி இருந்தன. அவரை விட எம்.ஜி.ஆர் 16 ஆண்டுகள் திரைத்துறையில் சீனியர்... ஆனால் இருவருமே அன்று நம்பர் 1 என்று சொல்வதற்கில்லை (பாகவதர் அப்போதும் நடித்துக் கொண்டிருந்தார் ). அதன் பிறகு ஆண்டவன் கட்டளை, ஆலயமணி என்று சிவாஜியும் ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டு பிள்ளை என்று எம்.ஜி.ஆரும் கொடிகட்டி பறந்த காலத்தில் இணைந்து நடிக்கவேயில்லை. பின்னர் ரஜினி - கமல் இணைந்து நடித்த காலங்களில் கமல் ஹீரோ ரஜினி வில்லன் என்றே இருந்தது. இவர்கள் இருவரும் உச்சம் தொட்ட 80 களில் இரண்டே இரண்டு படங்களில் இணைந்து நடித்தார்கள். Y.Gee.மகேந்திரன் கதாநாயகனாக நடித்த உருவங்கள் மாறலாம் (இதில் இருவருமே தனித் தனியாக ஒரு சீனில் வருவார்கள்). மற்றொன்று இந்தியில் அமிதாப் கதாநாயகனாக நடித்த Geraftaar. (இதில் Flash Back ல் ரெண்டு சீனில் வந்து மண்டையை போடும் வேடம் ரஜினிக்கு..) இருவரும் ஒரே காட்சியில் இணைந்து தோன்றவேயில்லை.

தமிழ் திரையுலகோடு நெருங்கிய தொடர்புடைய தெலுங்கு சினிமாவில் இரு பெரும் துருவங்களாக இருந்த என்.டி.ராமராவும், ஏ. நாகேஸ்வர ராவும் 1950ல் வெளிவந்த பல்லெட்டூரி பில்லா முதல் 1981ல் வெளியான சத்யம் சிவம் வரை 14 திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். இதில் சில படங்களில் நடிகர் திலகம் சிவாஜியும் உண்டு என்பது கூடுதல் சிறப்பு. ஆனால் இதற்கு பிறகு சிரஞ்சீவி - பாலகிருஷ்ணா - நாகார்ஜூனா என்று வந்த பொழுது அனைவருமே தனித்தனியாக நடிக்கவே விரும்பினர். ஒரு படத்தில் கூட நம்பர் 1 நடிகர்கள் இணைந்து தோன்றவே இல்லை. அதாவது ஒரு தலைமுறையில் இருந்தது அடுத்த தலைமுறையில் இல்லை.

இந்த பாணியில் இருந்து லேசாக மாறுபட்டது கன்னட திரையுலகம். "குமார த்ரயரு" (குமார மூவர் ) என்று போற்றப்பட்ட ராஜ்குமார், உதயகுமார், கல்யாண் குமார் மூவரும் இணைந்து பிரதான கதாபாத்திரங்களை ஏற்று "பூதானா (1962) " கவுரவ வேடங்களில் இணைந்து  "காலி கோபுரா (1961)" போன்ற படங்களில் நடித்தனர். இதில் நம்பர் 1 இடத்திற்கு போட்டியிட்ட ராஜ்குமார் - உதயகுமார் இணை 50 படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். அதன் பிறகு ராஜ்குமார் - விஷ்ணுவர்தன் என்று ஜோடி போட்ட அடுத்த தலைமுறையில் "கந்தத குடி" ஒரே படம் மட்டும் இணைந்து நடிக்க முடிந்தது. வேடிக்கையாக சொல்வதென்றால் "விஷ்ணுவர்தன மகாராஜா" கதாபாத்திரத்தில் ஒரு படத்தில் ராஜ்குமார் நடிக்க இருந்தபொழுது "என்னங்க நீங்க அவர் பேரு உள்ள படத்துல எல்லாம் நடிக்கிறீங்க ? அவருக்கு நீங்க பப்ளிசிட்டி தர்றதா ?" என்று உசுப்பேற்றி காலி பண்ணிவிட்டதாக ஒரு கதை உண்டு. அதாவது 60 களில் இருந்த சகஜ நிலை அடுத்த தலைமுறைக்கு இருந்த போதும் அதை முன்னெடுக்க முடியவில்லை.

இதில் கடைசியாக வருவது மலையாள திரைத்துறை. 50 - 60 களில் உச்ச நடிகர்களாக விளங்கிய பிரேம் நசீர் - சத்யன் மாஸ்டர் - மது சேட்டன் மூவரும் இணைந்து "திலோத்தமா (1966), அஸ்வமேதம் (1967), ஒள்ளத்து மதி (1967), உத்யோகஸ்தா (1967), மூணு பூக்கள் (1971) என்று 5 திரைப்படங்களில் நடித்துள்ளனர். இதில் 524 படங்களில் ஹீரோவாக நடித்து கின்னஸ் சாதனை படைத்த நசீர் - 150 படங்களில் நடித்த சத்யன் மாஸ்டரோடு இருபதிற்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து  நடித்திருக்கிறார். மது சேட்டனோடு இன்னும் அதிகம். சொல்லப்போனால் 1982ல் வெளியான படையோட்டம் படத்தில் "பிரேம் நசீர் - மது - மம்மூட்டி - மோகன்லால் மற்றும் ஒருதலை ராகம் சங்கர்" என்று 5 நட்சத்திர நடிகர்கள் உண்டு.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல அடுத்து வந்த மோகன்லாலும் மம்மூட்டியும் இதுவரை 55 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். இனியும் நடிக்கலாம். எனவே தொடக்கம் முதலே அங்கு "ஒண்ணா நடிச்சா என்னப்பா ? என்னுடைய பாத்திர படைப்பு சரியாக இருக்கிறதா? அதை எப்படி வெளிப்படுத்தலாம் என்கிற மனோபாவம் மேலோங்கி நிற்பதால் இது போன்றதொரு பிரம்மாண்ட படைப்பு சாத்தியமாகிறது என்பது இந்தப் படத்தின் முதல் சிறப்பு.

இரண்டாவது, இத்தனை நட்சத்திரங்களையும் கட்டி இணைத்து நடிக்க வைக்க ஒரு சம்விதாயகன் (இயக்குனர் ) உண்டென்றால் அவர் " ஏட்டமும் வல்லிய கலாக்காரனாக " இருத்தல் மிக அவசியம். அது மட்டுமின்றி நெடிய திரை அனுபவமும், வெற்றிகரமான வரலாறும், பல நட்சத்திரங்களை இணைத்து நடிக்க வைக்கும் முன்னனுபவமும் பெற்றவராக இருக்க வேண்டும். அப்படி ஒருவர் தான் இந்தப் படத்தின் இயக்குனர் ஜோஷி. ஜோஷியின் நெடிய வரலாற்றை வாசிப்பவர்களின் புரிதலுக்காக இப்படி சொல்லலாம். இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது கணக்கை துவக்கிய 16 வயதினிலே படம் வந்த 1977க்கு அடுத்த ஆண்டு ஜோஷியின் முதல் படம் டைகர் சலீம் வந்தது.

பாரதிராஜாவிலிருந்து பாக்யராஜ் - பாக்யராஜிலிருந்து பார்த்திபன் - பார்த்திபனிடமிருந்து விக்ரமன் - விக்ரமனிடமிருந்து கே.எஸ்.ரவிக்குமார் - கே.எஸ்.ஆரிடம் இருந்து சேரன் என்று 5 தலைமுறைகள் வந்த நிலையில் 1997ல் திரை உலகில் கிட்டத்தட்ட ஓய்வு நிலைக்கு போயிருந்தார் பாரதிராஜா. அவரது கடைசி சூப்பர் ஹிட் கருத்தம்மா வெளியாகி கால் நூற்றாண்டாகிறது. ஆனால் 43 ஆண்டுகளில் 91 படங்களை இயக்கியுள்ள ஜோஷியின் வெற்றிப்பயணம் சமீபத்திய சூப்பர் ஹிட் "பொரிஞ்சு மரியம் ஜோஸ்"  (2019) வரை தொடர்கிறது.

பொதுவாகவே ஜோஷி படங்கள் என்றால் ஒரு ரெண்டு மூணு நாயகர்கள் இருப்பது சாதாரணமான ஒரு விஷயம். உதாரணமாக

  • "மம்மூட்டி - சுரேஷ் கோபி - சீயான் விக்ரம் - ஜெயராம் " நடிப்பில் துருவம்
  • "மோகன்லால் - சுரேஷ் கோபி - திலீப் - சரத்குமார்" நடிப்பில் Christian Brothers
  • "மம்மூட்டி - சுரேஷ் கோபி - தியாகராஜன் " நடிப்பில் New Delhi
  • பிருதிவிராஜ் - நரேன் - ஜெயசூர்யா நடிப்பில் Robin Hood
  • மம்மூட்டி - விஷ்ணுவர்தன் - திலகன் நடிப்பில் கௌரவர்

என்று Twenty: 20 க்கு முன்னும் பின்னுமாக ஏகப்பட்ட வெற்றி படங்களைத் தந்தவர் ஜோஷி. ரஜினியை வைத்து 25 படங்களை இயக்கிய எஸ்.பி.முத்துராமனை போல மம்மூட்டியின் 33 படங்களை இயக்கியவர் ஜோஷி (அதில் 30 வெற்றி படங்கள் ). இப்பேர்ப்பட்ட  நெடிய திரை அனுபவமுள்ள (அதாவது "பாரதிராஜாவை ஒத்த திரைப்பட வரலாறையும், எஸ்.பி. எம் அளவு சூப்பர் ஸ்டார்களை இயக்கிய அனுபவமும் ஒருங்கே பெற்ற")ஒரு கலைஞரின்  இயக்கத்தில் வெளிவந்தது, இந்தப் படத்தின் இரண்டாவது பெரிய சிறப்பாக நான் கருதுவது.

மூன்றாவது, என்னதான் நடிகர்கள் இருந்தாலும், பெரிய இயக்குனர் இருந்தாலும் வலுவான கதையும் - திரைக்கதையும் தான் ஒரு திரைப்படத்தை தூக்கி நிறுத்த முடியும். இல்லாவிட்டால் உப்புமா தான் கிண்ட முடியும்.

நான்கைந்து நாயகர்கள் , நான்கைந்து நாயகிகள் இன்னும் கொஞ்சம் குணச்சித்திர நடிகர்கள் எல்லாம் நடிப்பதற்கு ஏற்றார் போல சீன யுத்த நலநிதிக்காக ஒரே நாள் இரவில் ஒரு நாடகம் வேணும் என்று நடிகர் திலகம் கேட்டதால் ஒரு தம்பதிக்கு 4 பொண்ணு , தனது எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்ய வேண்டும் என்பது அந்த அப்பாவின் கண்டிஷன். அதுக்கு நாலு ஜோடி,  நாலு மாப்பிள்ளைக்கு 4 அப்பா - அம்மா என்று ஒரே கரண்டி மாவில் சித்ராலயா கோபு சுட்டெடுத்த இட்லி தான் "கலாட்டா கல்யாணம் ". பிறகு அதையே சொந்த தயாரிப்பில் நடிகர் திலகம் படமாக எடுத்தார். அந்த இட்லியையே "4 குழந்தைகளை 9 குழந்தைகளாக உதிர்த்து போடு , பொறுப்பை மாப்பிள்ளைக்கு பதிலாக வளர்ப்பு மகனிடம் போடு, ஒரு அஞ்சாறு இசையமைப்பாளரிடம் பாட்டு வாங்கி அதையும் போடு , மேற்கொண்டு அஜினோமோட்டோ , கரம் மசாலா மழைச்சாரல் மாதிரி பரபரன்னு பெய்யவிட்டு  கிண்டி எடுத்த "ஸ்பெஷல் இட்லி உப்புமா"  தான் கின்னஸ் சாதனை சுயம்வரம்.

என்ன தான் மாஸ் படமாக இருந்தாலும் அதில் வலுவான கதையோட்டத்தை எதிர்பார்க்கிறவர்கள் மலையாள ஆடியன்ஸ். அதற்காகவே ஜோஷி தேர்ந்தெடுத்தது மலையாள திரையுலகில் பல வெற்றி படங்களுக்கு கதை - வசனம் எழுதிய "உதய கிருஷ்ணா - சிபி தாமஸ் " ஜோடியை.

திருவிதாங்கூர் , பத்தனம் திட்டா என்று தெற்கு கேரளத்தில் ரசிகர்களை கொண்ட மோகன்லாலையும் , கோழிக்கோடு , வயநாடு என்று வட கேரளத்தில் ரசிகர்களை உடைய மம்மூட்டியையும் சம அளவு காட்சிகளில் தோன்ற வைத்ததில் இருந்தே தொடங்குகிறது இவர்களது வெற்றி. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அவர்களது இமேஜுக்கு ஏற்றார் போல தனித்தனி அறிமுக காட்சிகள், அதை கதையோடு இணைத்தல் என்பதெல்லாம் இந்தப் படத்திற்கு வலுச்சேர்க்கின்றன.. சரி அப்படி என்ன கதை என்கிறீர்களா ?? இதான் சாமி ...

ஒய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி விஸ்வநாதமேனன் (மது சேட்டன்) மற்றும் அவரது மனைவி இருவரும் சொந்த வீட்டிற்கு பேரன் பேத்திகளுடன் விஷு புத்தாண்டு கொண்டாட வருகின்றனர். அப்போது அவரது பேரன் அருண் மீது ஒரு கொலை வழக்கு பதியப்படுகிறது. வழக்கை நேர்மையான போலீஸ் அதிகாரி ஆண்டனி புன்னக்காடன் (சுரேஷ் கோபி ) கையாளுகிறார். அருண் குமாரை போலீஸ் கைது செய்யப் போகும் போது அவர்கள் போலீசை தாக்க அதன் பிறகு நடந்தது தான் முதல் பத்தியில் நான் சொன்ன சம்பவம். அருணை மீட்க ரமேஷ் நம்பியார் (மம்மூட்டி) என்னும் வக்கீலை ஏற்பாடு செய்கின்றனர் மேனன் குடும்பத்தினர். கொலையை நேரில் பார்த்த சாட்சிகள் மருத்துவர் வினோத் பாஸ்கர் (ஜெயராம் ) மற்றும் ஓடக்காரன் காதர் (மாமுக்கோயா ).

இதில் கருங்கல் பாப்பச்சன் (கலாபவன் மணி )என்னும் ரவுடியை வைத்து ஜெயராமை கடத்தி மறைத்து வைக்கின்றனர் மேனன் குடும்பத்தினர். ஒரு சுவாரஸ்யமான அறிமுகத்துடன் வரும் மம்மூட்டி வழக்கை உடைத்து அருணை விடுவிக்கிறார். ஆனால் அடுத்த நாளே அருண் கொலை செய்யப்படுகிறான். கொலையாளி என்று தேவா என்பவனை சுரேஷ் கோபி கைது செய்கிறார். இந்நிலையில் வக்கீல் மம்மூட்டி வீட்டிற்கு வரும் ஒரு வயதான தாயும் மகளும் தங்களது மகன் தேவா ஒரு வாசனைப் பொருள் விற்கும் அப்பாவி. அவனை தவறாக கைது செய்துவிட்டதாகவும் அவனை காப்பாற்றும்படியும் கெஞ்சுகிறார்கள். முதலில் மறுக்கும் மம்மூட்டி பிறகு மனைவி வற்புறுத்தலால் ஒப்புக்கொண்டு அந்த வழக்கையும் உடைத்து தேவாவை விடுவிக்கிறார். வெளியே வந்த மறுநிமிடம் நான்கைந்து கோட்டு - சூட்டு அணிந்த உதவியாளர்கள் சகிதம் ரோலக்ஸ் வாட்சும் ஏத்தி விட்ட சட்டையுமாய் தகிட தகிட என்று பின்னணி இசையுடன் மம்மூட்டி முன்பு வந்து தனது பெயர் தேவராஜா பிரதாப வர்மா என்றும் தான் ஒரு பணக்காரன் என்றும் நான் தான் இந்த கொலையை செய்தேன் என்றும் அறிமுகம் செய்து கொள்ளுகிறார் தேவா மோகன்லால். அது மட்டுமல்ல இன்னும் இரண்டு பேரை மேனன் குடும்பத்தில் கொல்லப் போகிறேன் முடிந்தால் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று சவால் விடுகிறார்... அத்துடன் இடைவேளை.... அடுத்து வரும் ஒன்றரை மணி நேரத்தில் மோகன்லால் ஜெயித்தாரா, மம்மூட்டி ஜெயித்தாரா? சுரேஷ் கோபி இந்தக் கொலையை தடுத்தாரா ? ஜெயராம் என்ன ஆனார் ? என்பதெல்லாம் சங்கிலித் தொடரை போல காட்சிகளாக விரிகின்றன. அடுத்து அடுத்து திரைக்கதையில் வைக்கப்பட்டிருக்கும் திருப்பங்கள் நம்மை புருவம் உயர்த்த செய்கின்றன. இதில் மிக முக்கியமாக நான் ரசித்த ஒன்று,  சுரேஷ் கோபிக்கும் மேனன் குடும்பத்திற்கும் இடையே ஒரு பின்னணிக் கதை, மேனன் குடும்பத்தின் மனோஜ் கே ஜெயனுக்கும் மம்மூட்டிக்கும் இடையே ஒரு லிங்க், மம்மூட்டிக்கும் மோகன்லாலுக்கு உள்ள தொடர்புக்கு ஒரு பின்னணிக் கதை என்று அனைத்தும் மிக நேர்த்தியாக கோர்க்கப்பட்ட சம்பவங்கள்.

இந்தப் படத்தின் சிறப்பிற்கு இதையெல்லாம் விட மிகப் பெரிய விஷயங்கள் இன்னும் இருக்கின்றன...

ஒரு காட்சியில் "நீ சும்மா செஞ்ச உதவி ஒண்ணும் எனக்கு வேணாம்.. இந்தா Blank Cheque எவ்வளவு வேணுமோ எழுதி எடுத்துக்கோ " என்று மம்மூட்டியை பார்த்து மோகன்லால் பேசும் ஒரு வசனம் உண்டு.. ஆனால் இந்தப் படத்தில் நடித்த எந்த நடிகரும் காலணா கூட காசு வாங்காமல் திரைப்பட சங்க நலநிதிக்காக நடித்து கொடுத்தனர். அதுமட்டுமல்ல AMMA வுடன் இணைந்து இந்த படத்தை தயாரித்தவர் இந்தப் படத்தின் நாயகர்களில் ஒருவரான திலீப். படத்தில் கால் மணி நேரம் வந்து, ஒரு டூயட்டை பாடிவிட்டு மண்டையை போடும் கதாபாத்திரம் என்றாலும் துணிந்து ஏற்று நடித்தது மட்டுமன்றி படத்தின் தனது பங்கு தயாரிப்பு செலவை முன்னமே கொடுத்தவர்.

இந்த படத்தில் ஒரே ஒரு காட்சியில் ஒன்னரை நிமிடம் தோன்றும் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஸ்ரீனிவாசன் போல படம் முழுக்க துண்டு துக்கடா  பாத்திரங்கள் வரை நடித்தவர்கள் எல்லாமே நட்சத்திர நடிகர்கள் தான். அதனாலேயே இந்தப் படம் ஒரு “All Star Movie” என்றும் “Mother of Multistar movies” என்றும் அழைக்கப்படுகிறது

Multistarrer படங்கள் மலையாளத்தில் சகஜமாக இருந்தாலும் 20 வருஷங்களுக்கு பிறகு மம்மூட்டி - மோகன்லால் - சுரேஷ் கோபி மூன்று பெரும் ஹீரோக்களும் முக்கிய கதாபாத்திரங்களில் முதன் முறையாக இணைந்து  நடித்த படம் 20-20 தான். (இதற்கு முன்பு 1988ல்  மம்மூட்டியின் மனு அங்கிள் படத்தில் மோகன்லாலும் , சுரேஷ் கோபியும் கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள்).

ஏராளமான நட்சத்திரங்கள் நடித்த இந்தப் படத்தில் சில முக்கிய கலைஞர்களும் நடிக்க இயலவில்லை.. திலகன், நெடுமுடி வேணு, ராஜன் பி தேவ், மலையாள முரளி, தேவன், கேப்டன் ராஜு என்று இந்தப் பட்டியலும் பெரியது.. கதாநாயகியாக நடிக்க முதலில் தேர்வானவர் மீரா ஜாஸ்மின் அவரது பிஸியான கால்ஷீட்டால் இந்தப் படத்தின் ஹீரோயின் வாய்ப்பு பாவனாவுக்கு போனது.

பென்னி இக்னேஷியஸ் மற்றும் 'சிக்கு புக்கு ரயிலே' சுரேஷ் பீட்டர்ஸ் என இரண்டு இசையமைப்பாளர்கள் இசையில் மொத்தமே படத்தில் 3 பாடல்கள் தான். ஆனால் நடிகர்கள் போலவே , கே.ஜே .யேசுதாஸ், சித்ரா, சுஜாதா , மது பாலகிருஷ்ணன் , ஷங்கர் மஹாதேவன் , ஜாஸி கிப்ட் , ஜ்யோத்சனா ராதாகிருஷ்ணன் , அப்சல், வினீத் ஸ்ரீனிவாசன், ரிமி டாமி , பிராங்கோ , சுனிதா சாரதி இவர்களுடன் இசையமைப்பாளரான சுரேஷ் பீட்டர்ஸ் என்று பாடியவர்கள் பட்டியலும் நீளமானது.

வசூலில் கூட இந்தப் படம் ஒரு பெரிய படம் தான். 7 கோடியில் உருவாகி (பெரிதாக படங்கள் இல்லாத ) 2008 தீபாவளியை ஒட்டி 115 தியேட்டர்களில் வெளியான இந்தப் படம் முதல் நாளிலேயே 1 கோடியை வசூல் செய்தது. முதல் வாரத்திலேயே விநியோகஸ்தர்களுக்கு  3 கோடியை ஈட்டிய முதல் படம் (அப்போது வரை). 25 பிரிண்டுகளில் (7 தமிழ்நாட்டுக்கு மட்டும் ) 10 இடங்களில் 100 நாட்களை கடந்து விழா  கொண்டாடியது . தமிழ்நாட்டில்  சென்னையில் மட்டும்  ஏகன் , வாரணம் ஆயிரம் படங்களுக்கு அடுத்து வசூலில் மூன்றாவது இடத்தை பிடித்தது. கேரளாவில் மட்டும் 10.5 கோடி வசூல். மொத்தமாக தயாரிப்பு செலவைப் போல 5 பங்கு அதிக லாபத்தை வாரி அள்ளியது. 7 வருஷங்களுக்கு பிறகு திருஷ்யம் படம் வந்து தான் இதன் ரெக்கார்டை முறியடிக்க முடிந்தது.

இப்போது உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் நான் ஏன் இந்தப் படத்தை தேர்ந்தெடுத்தேன் என்று.

Twenty: 20 கண்ட வெற்றியை பற்றி எழுதும் போதே 2020 ஆண்டு ஏற்படுத்திப் போன வெறுமையையும் வேதனையையும் எழுதாமல் நிறைவுறாது இந்தப் பதிவு. சமீபத்திய கொரோனா ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்ட துறைகளில் சினிமாவும் அது சார்ந்த தொழில்நுட்ப கலைஞர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் முக்கியமானவர்கள். அவர்களுக்கு ஒரு உதவிக்கரமாக Twenty : 20 போலவே அடுத்த படத்தை தயாரிக்க AMMA தயாராகி விட்டது. பிரபல இயக்குநர் டி.கே. ராஜீவ் குமார் அதை இயக்கப் போகிறார் என்றும் தகவல்கள் வருகின்றன.

நிறைவாக , சமீபத்தில் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் திரு. சித்ரா லட்சுமணன்  அவர்கள் எழுதிய ' என்னவென்று சொல்வேன்’ புத்தகத்தை வாசிக்கும் பொழுது தமிழ்த் திரையுலகம் மற்றும் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் நிதி மற்றும் நிர்வாக சிக்கல்கள் குறித்து அதில் தெளிவாக குறிப்பிட்டு இருந்தார்கள். நமது தமிழ் சினிமா ரசிகர்கள் தங்கள் உயிராக மதித்து  கொண்டாடும் யுகபுருஷர்களும் இதே போன்ற ஒரு முயற்சிக்கு சிறிதளவு தோள் கொடுத்தாலே அது மாபெரும் வெற்றியாக அமையும் என்பதில் ஐயமில்லை!!! காத்திருப்போம் அந்த நாளுக்காக !!!

1 comment:

  1. Nice and different analysis about south Indian cinema. Interesting to read. All the best for more such articles.

    ReplyDelete