Sunday, August 28, 2016

பாதாள பைரவி டூ பாகுபலி - பாகம் 2

பாதாள பைரவி டூ பாகுபலி - பாகம் 1ன் தொடர்ச்சி.....அதைப் படிக்கவில்லையெனில், புரிதலுக்காக முதலில் அதைப் படித்து விடுங்கள்!!

இரண்டாவது கட்டத்தில் (1960 களின் மத்தியில் இருந்து 1980 களின் மத்தி வரை ) மிகக் குறைந்த அளவே தெலுங்கு இசை அமைப்பாளர்கள் தமிழில் பங்களித்திருக்கிறார்கள்... இதற்கு முக்கிய காரணம் 60களில் மெல்லிசை மன்னர்களும் பின்னர் 1974ல் அறிமுகமாகி இளையராஜா ஒரு பக்கமும் ஏழைகளின் இளையராஜாவாக சங்கர் - கணேஷ் இரட்டையர்கள் இருந்ததும் தான்.. இந்தக் கால கட்டத்தில் இசையமைத்த ஒரு சில தெலுங்கு இசை அமைப்பாளர்களை பார்ப்போம்...

கவிஞர் வாலி, நாகேஷ், ஸ்ரீகாந்த், தாராபுரம் சுந்தர்ராஜன் இவர்களோடு கிளப் ஹவுசில் தங்கி வாய்ப்புத் தேடித் கொண்டிருந்தவர் அப்பாராவ் (Kommineni Apparao).. பின்னாட்களில் தெலுங்கில் கொடிகட்டிப் பரந்த இசை அமைப்பாளர்களின் ஒருவர் ஆனார்.. கே.சக்கரவர்த்தி என்றால் தெலுங்குக்கார்களுக்கு நன்கு தெரியும் 1989ல் வெளியான 95 தெலுங்குப் படங்களில் 66 இவரது இசை அமைப்பில் வெளிவந்தவை.. 900 படங்களுக்கு மேல் இசை அமைத்து அந்த ஊரின் சங்கர்-கணேஷாக விளங்கி வருகிறார்.. சிவாஜி, வாணிஸ்ரீ நடித்து 1978ல் வெளியான வாழ்க்கை அலைகள் படத்திற்கு இசை சக்கரவர்த்தி தான்..  எஸ்.பி.பி , சுசீலா குரல்களில் "உன் கண்களிலோ கனிகள்" என்று ஒரு மென்மையான பாடல் இந்தப் படத்தில்.. இவர் இசை அமைத்த மற்றொரு தமிழ்ப் படம் கமல் நடித்த "பகடை பன்னிரண்டு".

70 களில் இசை அமைத்த தெலுங்கு இசை அமைப்பாளர்களின் குறிப்பிடும்படியான இன்னொருவர் மேகசந்தேசம் படத்திற்காக தேசிய விருது பெற்ற ரமேஷ் நாயுடு.. மேளதாளங்கள் படத்தில் "ஆனந்த வீணை நான் மீட்டும் நேரம்' என்று எஸ்.பி.பி, ஜானகி குரல்களில் ஒலிப்பது ரமேஷ் நாயுடுவின் இசை.. "அவளொரு மேனகை... என் அபிமானத் தாரகை..... சிவரஞ்சனி..." நட்சித்திரம் படத்தில் ஸ்ரீப்ரியாவை பற்றி நீண்ட ஆலாபனையுடன் எஸ்.பி.பி பாடும் இந்தப் பாடல் தெலுங்கில் தாசரி நாராயணராவ் ஜெயசுதாவுக்காக எடுத்த "சிவரஞ்சனி" படத்தில் ரமேஷ் நாயுடு போட்ட மெட்டு... இதன் தமிழ் மறுபெயர்ப்பில் சங்கர் கணேஷ் இரட்டையர் இசை அமைத்திருந்தாலும் இந்தப் பாடலின் மீது உள்ள ஈர்ப்பால் அப்படியே மாற்றம் செய்யாமல் அமைத்திருப்பார்கள்..

தமிழ் சினிமாவில் தெலுங்கு இசை அமைப்பாளர்களின் மூன்றாவது கட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர்.. 1980 களின் இறுதியில் இளையராஜாவோடு முட்டிக்கொண்டு பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம் மூவரும் புதிய இசை அமைப்பாளர்களை தேடித் போனார்கள்... கொடி பறக்குது படத்துக்கு கன்னடத்து அம்சலேகாவை அழைத்து வந்தார் பாரதி ராஜா.. மணிரத்னம் ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகப் படுத்தினார்.. பாலச்சந்தர் அழைத்து வந்தது மரகதமணியை..

கீரவாணி (Koduri Marakathamani Keeravaani)  என்றால் தான் தெலுங்கு தேசத்தில் தெரியும்...  வானமே எல்லை படத்தில் "நாடோடி மன்னர்களே வணக்கம்", "நீ ஆண்டவனா தாய் தந்தை தான் உனக்கில்லையே", "ஜன கன மன என ஜதி சொல்லும் நேரம்" என்று வெரைட்டிக்கு ஒன்று ஹிட்.. குறிப்பாக "கம்மங்காடே கம்மங்காடே" என்று மரகதமணி பப்லூவுக்கு பாடிய பாட்டு செம ஹிட்டு.. 20 வருடம் கழித்து அதை தெலுங்கில் ராஜமௌலியின் சத்ரபதி படத்தில் போட்டிருப்பார்..

நைட் முழுக்க கடலை போடுவதென்றாலே நினைவுக்கு வருகிற "சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா" சஹானாவில் ஒரு அழகிய மெலடி.. புலவர் புலமைப்பித்தன் பாவேந்தரின் அழகின் சிரிப்பு பாணியில் எழுதிய "சாதி மல்லிப் பூச்சரமே" , எந்த இசைப் போட்டி என்றாலும் பாடப் படுகிற சித்ராவின் "தத்தித்தோம்",  சீர்காழி சிவசிதம்பரம், சித்ரா குரல்களில் நாட்டுப்புற பாணியில் ஒலிக்கும் "கோழி கூவும் நேரம் ஆச்சு" என்று அழகன் படத்தின் அத்தனை பாடல்களுமே இன்று வரை மரகதமணியின் பெயரை தமிழ்  சினிமா ரசிகர்களிடம் அழியாது பாதுகாக்கிறது ... குஷ்பூவை வைத்து பாலச்சந்தர் எடுத்த ஜாதி மல்லியிலும் மரகதமணியின் இசை வருடிக் கொடுக்கிறது "சமுந்தர் பார் பார்" என்னும் கஜல் பாடல்,  "மறக்க முடியவில்லை" என்னும் மெலடி,  "கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்" என்னும் பெப்பி நம்பர் என்று செம வெரைட்டி காட்டி இருப்பார்..

பாலச்சந்தரின் உதவி இயக்குனர் வசந்த் எடுத்த நீ பாதி நான் பாதியில் "யாரைக் கேட்டு ஈரக்காற்று பூவைக் கிள்ளும்", "புதிய பூக்களை பார்த்து அம்மம்மோ" என்று மென்மையான பாடல்கள்.. அதிலும் வித்யாசமாக வெறும் ஸ்வரங்களையும் ஒரே ஒரு பெயரையும் வைத்து உருவான "நிவேதா" பாட்டு அப்போ ரொம்ப பிரபலம்.. மரகதமணி மலையாளத்தில் இசை அமைத்து தமிழில் டப்பிங் செய்யப்பட்ட "தேவராகம்" படத்திலும் " சின்ன சின்ன மேகம்", "அழகிய கார்த்திகை தீபங்கள்" என்று மெலடிச் சாரல் தெறிக்கிறது.. ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் அவரது தம்பி எஸ்.எஸ்.ராஜமௌலியின் "ஸ்டூடன்ட் நம்பர் 1" படம் தமிழில் ரீமேக் ஆனபோது அதில் "விழாமலே இருக்க முடியுமா", "மம்மி செல்லமா டாடி செல்லமா" என்று ரீ-என்ட்ரி கொடுத்தார் இன்று வரை ராஜமௌலியின் தமிழ் படங்களில் அது தொடர்கிறது (பாகுபலி வரை).

1990களில் தெலுங்கு டப்பிங் படங்கள் தமிழில் பிரபலமான சமயத்தில் "உயிரே உயிரே" என்று ஒரு பாடல் "எல்லாமே என் காதலி" படத்தில் (தெலுங்கில் தெலுசா மனசா) சன் மியூஸிக்கில் செம பாப்புலர்.. அதே சமயம் இன்னொரு டப்பிங் பாடலும் பிரபலமானது இரண்டுமே நாகர்ஜுனா படங்கள் தான்.. பிந்தயது "இன்ப ராகங்கள் நெஞ்சுக்குள்ளே பொங்குகின்ற" என்னும் "ஹலோ பிரதர்" திரைப்படப் பாடல்.. இசை "ராஜ்-கோட்டி".. தெலுங்கில் நூற்றுக்கணக்கில் இசை அமைத்த இந்த ஜோடி தமிழில் அவ்வளவு பிரபல்யம் இல்லை.. நினைவுக்கு வந்த ஒரு பாடல் இது

டப்பிங் படங்கள் என்றதும் என் நினைவுக்கு வருகிற மற்றொரு பாடல் "நமது நகரம் கல்கத்தாபுரி".. "கல்கத்தா" என்ற டப்பிங் படத்தில் உன்னி கிருஷ்ணன் பாடியது... மூலப்படமான "சூடாலனி உந்தி"யில் ஹரிஹரன் பாடியிருப்பார்.. "கதனகுதூகலம்" ராகத்தில் அமைந்த "ரகுவம்ச சுதாகர லோச்சனா" என்ற கீர்த்தனையின் அட்டைக்காப்பி.... இந்தப் பாடல் மூலம் எனக்கு அறிமுகமானவர் மணிசர்மா..  தெலுங்கில் மெலடி பிரம்மா என்று பெயர்..

நம்ம கேப்டன் கரண்டுக்கே ஷாக் அடிச்ச நரசிம்மவுல தமிழுக்கு அறிமுகமானவர்.. முதல் படத்திலேயே "காதல் ஆராரோ" என்ற நல்ல மெலடியையும் "ராரா நந்தலாலா", "எகிப்து ராணி உனக்கு' என்று பாஸ்ட் நம்பர்களையும் கொடுத்து பளிச் அறிமுகத்தை ஏற்படுத்திக் கொண்டவர்.. ஷாஜஹானில் "மே மாத மேகம்", "அச்சச்சோ புன்னகை", "மின்னலைப் பிடித்து" என்று வைரமுத்துவின் வரிகளில் நல்ல நல்ல பாடல்கள்.. என்றாலும் தெறிக்கவிட்ட பாட்டு "சரக்கு வச்சிருக்கேன்" தான்.. யூத் படம் தான் இன்றளவும் மணிஷர்மாவின் கேரியர் பெஸ்ட்.. சன் டிவி தேயத் தேய ஒளிபரப்பிய "சக்கரை நிலவே" மனதை வருடும் பாடல்.. அனால் அதையும் மிஞ்சி ஹிட் ஆனது "ஆல்தோட்ட பூபதி"... "மல்லிகை மல்லிகை பந்தலே" அரசு படத்தில் சரத்குமாருக்கு இவர் போட்ட நல்ல பாடல்களில் ஒன்று.. போக்கிரி, சுறா படங்களில் தெலுங்கில் ஹிட் அடித்த பாடல்களை தமிழுக்கு இறக்குமதி செய்திருப்பார்.. 25 படங்களுக்கு மேல் தமிழில் இசை அமைத்திருக்கும் மணி சர்மா வணிக ரீதியிலான பாடல்களை அமைத்த தெலுங்கு தேவாவாகவே தெரிகிறார்..

90களின் ஆரம்பத்தில் "டான்ஸ் பார்ட்டி" என்று ஒரு பாப் ஆல்பம் வெளியானது... "ஏய் உன்னோட அழகப் பார்த்து" என்று அதில் பாடியவர் தான் தேவிஸ்ரீ பிரசாத் (DSP).. 2005ன் முதல் மூன்று மாதத்தில் "கட்டு கட்டு கீரக்கட்டு", "வாடி வாடி வாடி கைபடாத சிடி", "காத்தாடி போல ஏண்டி" இந்த மூன்று பாடல்களால் தமிழ்நாட்டில் படுவேகமாக பிரபலமடைந்தவர்.. அதிலிருந்து இன்று வரை ஏராளமான டண்டனக்கடி வகையறா பாடல்களை கொடுத்தவர் "கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம்", "மியாவ் மியாவ் பூன", "டாடி மம்மி வீட்டில் இல்ல", "ஜல்ஸா ஜல்ஸா", "தீம்தனக்கா தில்லானா", "காதல் வந்தாலே காலு ரெண்டும் தன்னாலே", "ஜிங் ஜிக்கா" என்று சொல்லிக்கொண்டே போகலாம்... குறிப்பாக சில நல்ல மென்மையான பாடல்களையும் தள்ளி விட முடியாது... "கடவுள் தந்த அழகிய வீடு", "என் இதயம் இதயம்", "பாக்காத என்ன பாக்காத", "கண்மூடித் திறக்கும் போது கடவுள் எதிரே" என்று பட்டியல் நீளும்.. தசாவதாரம், மன்மதன் அம்பு என்று இரண்டு கமல் படங்களுக்கு இசை அமைத்து  தமிழ் சினிமாவில் அழுத்தமான இடம் பிடித்த தெலுங்கு இசை அமைப்பாளர்களில் இவரும் ஒருவர்

ஜெயம் ரவி நாயகனாக நடித்த முதல் படமான ஜெயம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனவர் ஆர்.பி.பட்நாயக் (Ravindra Prasad Patnaik) "கோடி கோடி மின்னல்கள்", "கவிதையே தெரியுமா" என்று இரண்டு மெலடி "வண்டி வண்டி ரயிலு வண்டி", "திருவிழான்னு வந்தா" என்று இரண்டு துள்ளலான பாடல்களுடன் ஜெயம் வெற்றி அடைய அதற்கு பிறகும் ஏனோ இவர் தமிழில் சோபிக்கவே இல்லை.. "பழனியப்பா கல்லூரி", "நான் அவள் அது' என்று இரண்டு படங்கள் இசை அமைத்திருக்கிறார்.. பாடல்கள் கேள்விப்பட்டதில்லை..

இவரைப் போலவே ஒரே ஒரு தமிழ்ப் படத்திற்கு மட்டும் இசை அமைத்த மற்றொருவர் "ரமணா கோகுலா".. விஜய் நடித்த "பத்ரி" படத்தின் பாடல்கள் மட்டும் இவரது இசை (பின்னணி தேவிஸ்ரீ பிராசத்).. "கலகலக்குது", காதல் சொல்வது உதடுகள் அல்ல, என்னோட லைலா வராளே மெயிலா" என்று மூன்று பாடல்கள் தேறும்...

இந்த லிஸ்ட்டில் கட்டக் கடைசியாக சேருபவர் "பாய்ஸ்" படத்தில் டிரம்மர் கிருஷ்ணாவாக வந்த "எஸ்.எஸ்.தமன்".. தமிழில் முதல் படம் "ஈரம்" என்று நினைவு... Computerized குத்து பாட்டு ஸ்பெஷலிஸ்ட்... "கலாசலா", "கருப்பு பேரழகா", "நீ தாண்டி ஒஸ்தி பொண்ணா" என்று அடுக்கலாம்... இதுவரை 30 படங்களுக்கு மேல் தமிழில் இசை அமைத்து விட்ட தெலுங்கு ஹாட் கேக்...

இந்த மூன்று கால கட்டங்களிலும் தமிழ் இசை அமைப்பாளர்களோடு கடும் போட்டி இருந்த போதும் "அக்கட" தேசத்து இசை வாணர்கள் அருமையான பாடல்களை தந்து தமிழ் ரசிகனுக்கு தீனி போட்டிருக்கிறார்கள்..

கடைசியாக ஒரு Disclaimer: இந்தப் பதிவை எழுத நான் அடிப்படையாக வைத்துக் கொண்டது "தெலுங்கு படங்களில் பெரும்பான்மையான படங்களுக்கு இசை அமைத்து அதே நேரம் தமிழிலும் இசை அமைத்த இசைஞர்களைப் பற்றியே".. பேச்சு மொழியையோ அல்லது அவர்கள் சார்ந்த சாதியையோ அல்ல.. ஆகையால் எஸ்.எம்.சுப்பையா நாயடு, ஜி.கோவிந்தராஜூலு நாயுடு, அவரது மகன் டி.ஜி.லிங்கப்பா உள்ளிட்ட பலரின் பெயர்கள் இந்தப் பதிவில் இடம் பெறவில்லை.. அவர்கள் பெரும்பாலும் தமிழ்ப் படங்களுக்கே இசை அமைத்ததால் அவர்கள் அனைவரையும் தமிழ் இசை அமைப்பாளர்களாகவே கருதுகிறேன்!!



No comments:

Post a Comment