Saturday, July 18, 2015

விச்சு - தமிழ்த் திரையிசையின் அச்சு!!!!!

இன்றைக்கு சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் திரையிசை முடியுடை மூவேந்தர்களின் ஆட்சியில் இருந்தது... தமிழ் ரசிகனின் மனங்களே அவர்களது எல்லை.. தன்மானமிக்க தமிழன் இவர்களின் ஆட்சியில் மட்டும் காலத்திற்கும் அடிமையாய் இருக்க சித்தமாக இருந்தான்...

ஒருவர் சோழநாட்டுத் திருவரங்கத்தில் பிறந்தவர்.. பெயர் வாலி... அடுத்தவர் சேரநாட்டு பாலக்காட்டில் எலப்புள்ளி கிராமத்தில் பிறந்தவர்... பெயர் விஸ்வநாதன்... மூன்றாமவர் பாண்டிநாட்டு சிறுகூடற்பட்டியில் பிறந்தவர்... பெயர் கண்ணதாசன்... முன்னவரும் பின்னவரும் தம் கவிதைத் தோரணங்களால் ஒரு புதிய கற்பனை உலகையே செதுக்கியவர்கள்.. இவர்கள் படைத்த கவிதை உலகிற்கு தமிழனை, தமிழ் ரசிகனை தம் இசைவாகனத்தில் ஏற்றிச் சென்றவர் மன்னவர்... மெல்லிசை மன்னவர்...

சமூகத் திரைப்படங்களின் வருகை தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றபோது, தமிழ் சினிமா இசையும் அடுத்த கட்டத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளவேண்டிய கட்டம் இருந்தது.. அதை செவ்வனே செய்துமுடித்த பெருமகன் மெல்லிசை மன்னர்...

இது தான் இவரது இசை வடிவம் என்று எந்தப் பாத்திரத்துக்குள்ளும் மூடிவிடக் கூடியது அல்ல அவரது இசை வடிவம்.. ஆனால் எந்தக் (கதா)பாத்திரத்துக்கும் பொருந்தக் கூடிய இசை அவரது இசை....

சங்கர்-ஜெய்கிஷன், கிஷோர்-ரஃபி, லதா மங்கேஷ்கர் என்ற அன்றைய இந்தி இசை உலகில் கொடிகட்டிப் பறந்த ஜோடியைப் போல "விஸ்வநாதன்-ராமமூர்த்தி, டி.எம்.எஸ்-பி.பி.எஸ், பி.சுசீலா என்ற புதிய கூட்டணியை அமைத்து கிட்டத்தட்ட ஒரு கால் நூற்றாண்டு காலம் தமிழ் ரசிகனை தம் இசையால் கட்டிப் போட்டவர் அவர்...

மக்கள் திலகம் - நடிகர் திலகம் என்னும் தமிழ் சினிமாவின் ஆதர்ஷ புருஷர்கள் இருவரும் 30 ஆண்டுகாலம் திரையில் பாடி நடித்தவை பெரும்பாலானவை இவரது பாடல்களே...

ஆம்.. நிஜம்... ஒரு விழாவில் கவிஞர்.வாலி அவர்கள் சொன்னது...
"விஸ்வநாத அண்ணனே...

உன்னைக் காணும் வரையில்
எனக்கு சோற்றுக்கே வக்கில்லை

உன்னைக் கண்ட பிறகு
எனக்கு சோறுதின்னக் கூட நேரமில்லை" என்று...

அவர் பயன்படுத்தாத இசைக் கருவிகள் இல்லை... ஷெனாய் என்றால் "என்னை யார் என்று எண்ணி", அக்கார்டியன் என்றால் "கண் போன போக்கிலே", பியானோ என்றால் "பாட்டொன்று கேட்டேன்", டிரம்பெட் என்றால் 'மை நேம் இஸ் பில்லா", கிடார் என்றால் கண்களை மூடிக்கொண்டு "நினைத்தாலே இனிக்கும்" படத்தின் எந்தப் பாடலும் என்று சொல்லும்படி இசைக் கருவிகளை அத்தனை நேர்த்தியாக பயன்படுத்தியவர்... வெறும் மூன்று இசைக்கருவிகளை வைத்து இசையமைத்த "தாழையாம்பூ முடித்து" பாடலாகட்டும் முன்னூற்றுக்கும் அதிகமாக இசைக்கருவிகளை வைத்து உருவான "எங்கே நிம்மதி" ஆகட்டும் ஒவ்வொரு இசைக் கருவிக்கும் அதன் வீரியத்தை சரியாய் அடையாளம் காட்டக் கூடியன அவரது பாடல்கள்...

காங்கோ-பாங்கோ பின்னணியில் தொடங்கும் பல்லவி, முதலாவது Interlude ல் ஒரு மேஜிக்கை நிகழ்த்திவிட்டு சரணத்தில் தபலாவுக்கும் டக்காவுக்கும் மாறுவதும், பின் மீண்டும் காங்கோ-பாங்கோவுக்கு திரும்புவதும் மெல்லிசை மன்னரின் Signature Composing... "பார்த்த ஞாபகம் இல்லையோ", "பேசுவது கிளியா", "பூமாலையில் ஓர் மல்லிகை" இப்படி அநேகம் பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்...

Rhythm Programming ல் ஒரு புதிய பாணியை கொண்டுவந்தவர் அவர்.. உதாரணத்திற்கு பாசமலர் படத்தில் வரும் "பாவையின் முகத்தைப் பார்த்தால்" பாடலை எடுத்துக் கொள்ளுங்கள்... அதன் சரணத்தில் முதல் இரண்டு வரிகளில் வரும் டக்காவின் டெம்போ மூன்றாவது நான்காவது அடிகளில் மாறி, பின் மீண்டும் ஒரு துள்ளலோடு தொடங்கி, சரணத்தின் முடிவில் ஒரு தீர்மானத்துடன் அழகாய் நிரைவடைகிறது... ஒவ்வொரு இரண்டு அடிக்கும் மாறும் தாளத்தைக் கொண்ட Rhythm Programming...

சஹானா என்றதும் நினைவுக்கு வருகிற "பார்த்தேன் சிரித்தேன்", கானடா என்றால் "ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல்", கரகரப்ரியா ராகமா "மாதவிப் பொன் மயிலாள்" ராகம் தானே என்று ராகங்களை திரைப்பாடல்கள் மூலம் இன்றும் பலரால் அடையாளம் காட்டப் படுபவை இவரது பாடல்கள்....

கர்நாடக ராகங்கள் மட்டுமல்ல, அற்றை நாளின் Contemporary World Music ஐ தமிழ் ரசிகனுக்கு அள்ளித் தந்தவை இவரது பாடல்களே... உதாரணத்திற்கு "காசே தான் கடவுளடா" படத்தில் வரும் 'ஜம்புலிங்கமே ஜடாதரா" பாடலை எடுத்துக் கொண்டால் Fusion Music ன் மிகச் சிறந்த உதாரணம்... ஏக்தாராவில் தொடங்கி, உருமுகின்ற டிரம்ஸ் கொண்ட பல்லவியிலும் Electric Guitar Interlude லும் அச்சுப் பிசகாத மேலை நாட்டு இசையில் வளர்ந்து, சரணம் தொடங்கும் போது தபலாவில் பக்காவான இந்திய பஜனைப் பாடலாக மாறிப் பின் மீண்டும் Westernக்கு மாறுவது ஒரு அழகான இசைக் கலவை... ஆங்கிலேய இசை மட்டுமன்றி Persian Music ஐ "பட்டத்து ராணி" பாடலிலும், Egyptian Music ஐ "நினைத்தேன் வந்தாய் நூறு வயது"பாடலிலும், Spanish இசையை "துள்ளுவதோ இளமை" பாடலிலும், Japanese Music ஐ "பன்சாயி காதல் பறவை"களிலும், Latin இசையை "யார் அந்த நிலவிலும்", Russian Music "கண் போன போக்கிலே கால் போகலாமா"விலும்,  பாடலிலும் எளிமைப் படுத்தி தமிழ் ரசிகனுக்கு விருந்து படைத்தவர்...

ராகங்களுக்கு மட்டுமல்ல, "டி.எம்.எஸ் என்றால் "யார் அந்த நிலவு", பி.பி.ஸ்ரீநிவாஸ் என்றால் "நிலவே என்னிடம் நெருங்காதே", "சீர்காழி கோவிந்தராஜன்" என்றால் "உள்ளத்தில் நல்ல உள்ளம்", "டி.ஆர்.மகாலிங்கம்" என்றால் "செந்தமிழ்த் தேன்மொழியாள்", "பி.சுசீலா என்றால் "பார்த்த ஞாபகம் இல்லையோ", ஏ.எல்.ராகவனுக்கு "எங்கிருந்தாலும் வாழ்க", எல். ஆர். ஈஸ்வரிக்கு "பட்டத்து ராணி" இப்படி அன்றைய பாடகர்களுக்கு கூட அவர்கள் பெயரைச் சொன்னாலே உடனே நினைவிலே தோன்றுகிற பாடல்கள் அவருடைய பாடல்களே...

இசையமைப்பில் மட்டுமல்ல.. பாடுவதிலும் தன்னுடைய முத்திரையை சரியாக பதித்தவர் அவர்....

இசை ஆராய்ச்சியாளர் வாமனன் சொல்வது போல அவரது குரலில் ஒரு "அந்தராத்மா" உள்ளிருந்து இயக்குகிற ஒரு ஆத்மா இருக்கும்.... வெறும் பாடலையும், சூழலையும் உந்தித் தள்ளி கேட்பவரின் இதயத்தை பிசைகிற குரல் அது...

ஜமீந்தார் சிவலிங்கம் (நடிகர் திலகம்), தன் மகள் தனது வீட்டை விட்டு வெளியேறிய பின் பாடுவதாய் வருகிற "பார் மகளே பார்" பாடல் அந்தக் காட்சியை காவியமாக்கி விடுகிறது... "இக்கரைக்கு அக்கரை பச்சை...", "உனக்கென்ன குறைச்சல் நீயொரு ராஜா....", என்று தத்துவமாக இருக்கட்டும்... "ஜகமே தந்திரம் சுகமே மந்திரம்" என்று சூஃபி தத்துவத்தை சொல்லும், சூப்பர் ஸ்டாருக்கு பாடிய ஜாலிப் பாடலாகட்டும்..  அவரது முதல் பாடலான "அன்பு மலர் ஆசை மலர்" என்னும் "பாசமலர்" பட டைட்டில் பாடலாகட்டும்... அந்தராத்மாவை அவரது குரல் அடையாளப் படுத்திக் கொண்டே இருக்கும்...

புகழ்பெற்ற இந்திப் படமான "ஆராதனா" தமிழில் "சிவகாமியின் செல்வன்" என்று எடுக்கப்பட்டபோது "எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே" என்று எம்.எஸ்.வி பாடியிருப்பார்... தற்கொலை செய்துகொள்ள இருந்த ஒரு பெண் அந்தப் பாடலைக் கேட்டு தன் முடிவை மாற்றிக் கொண்டார்...அது தான் உள் மனதின் இசை...

முகமது பின் துக்ளக் படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்ற பிரச்சாரம் இருந்த நிலையில், அந்தப் படத்தின் டைட்டில் பாடலை "அல்லா அல்லா" என்று தொடங்க விரும்பினார்கள்... சரி "ரஃபி சாப்"பை பாடவைக்கலாம் என்று எம்.எஸ்.வி, முகமது ரஃபியை கேட்டபோது தான் ஹஜ் பயணத்தில் இருப்பதாயும் வந்து பாடித்தருவதாகவும் சொன்னார்... படத்தை காக்கவைக்க இயலாத நிலையில் இயக்க்குநர் சோ எம்.எஸ்.வியையே பாடச் சொன்னார்... அவரோ "பித்துக்குளி முருகதாஸ், சீர்காழி, நாகூர் அனீபா" மூவரில் ஒருவரை பாடவைக்கலாம் என்றார்... எல்லாப் பெயர்களையும் எழுதி சீட்டுக் குலுக்கிப் போட்டு எடுத்தார்கள்... எம்.எஸ்.வி பெயர் வந்தது.... அவரும் பாடினார். பாடல் ஹிட் ஆனது.. பிறகு சோ உண்மையை வெளியிட்டார்... "அவரது குரலில் ஒரு தொழுகை உணர்வு இருக்கும்.. அதனால எல்லா சீட்டுலையும் எம்.எஸ்.வின்னு எழுதிப் போட்டுட்டேன்" என்று.... அந்த உணர்வு தான் அந்தராத்மா....

சங்கமம் படத்தை எடுத்துக் கொண்டால்.. அதில் உருப்படியான ஒரே விஷயம் ரகுமானின் இசை தான்...  ஆவுடைப்பிள்ளையாக வரும் மணிவண்ணனுக்கு "ஆலாலகண்டா ஆடலுக்கு தகப்பா" என்று முழங்குகின்ற  பறையின் பின்னணியோடு எம்.எஸ்.வி பாடும்போது ரசிகனை எழுந்து அமரவைத்து அந்தக் கதாபாத்திரத்தின் நீட்சியை அதிகமாக்கியது... இந்துஸ்தானி சங்கதிகளை சர்வ சாதாரணமாகப் போடும் ஹரிஹரனை தனது குரலில் உள்ள அந்தராத்மாவால் தூக்கி சாப்பிட்டுருப்பார் எம்.எஸ்.வி....

அவரது இறுதி திரைப் பாடலான "கன்னத்தில் முத்தமிட்டால்" பாடலைக் கேளுங்கள்...

"விடைகொடு எங்கள் நாடே.. கடல் வாசல் தெளிக்கும் வீடே...
பனமரக் காடே... பறவைகள் கூடே மறுமுறை ஒருமுறை பார்ப்போமா...."

முதல் இரண்டு வரிகளை அவர் பாடும்போது மனதை எதுவோ பிசைவது போல ஒரு அழுத்தம் உருவாகி...

சரேலென்று மேல் ஸ்தாயியில் "உதட்டில் புன்னகை புதைத்தோம்.. உயிரை உடம்புக்குள் புதைத்தோம்.." என்ற வரிகளில்... பொத்துக் கொண்டு அழுகை கரகரவென்று நம் கன்னம் நனைப்பது... சாட்சாத் அந்தராத்மாவே அன்றி வேறென்ன....

ஒருவரின் மரணத்தையே மாற்றியமைத்த அந்தராத்மா உடலால் நம்மைப் பிரிந்திருக்கிறது....

ஆனால் இசையால் அது இன்னும் நம்மை சுற்றிச் சுற்றியே வந்துகொண்டிருக்கிறது....

நெஞ்சம் மறப்பதில்லை.... அது நினைவை இழப்பதில்லை.....

திரையுலகம் அவரை செல்லமாக "விச்சு" என்று அழைக்கிறது... உண்மையில் விச்சு... சுழலும் தமிழ்த் திரையிசையின் அச்சு!!!!!

2 comments:

  1. Classic tribute to the legend. Very well written.

    ReplyDelete
  2. பார்த்தேன் சிரித்தேன்... KVமஹாதேவன் மாமா. எங்கே நிம்மதி பாடலில்...120 கலைஞர்கள் பங்கு பெற்றனர், 300 இல்லை.

    ReplyDelete