Friday, August 12, 2016

தனிமையிலே இனிமை காண முடியுமா

ஆலம்பனா ஊருக்கு போனபிறகு தனிமையில இனிமை காண என்னடா வழின்னு யோசிச்சப்போ நமக்கு இருக்கிற ஒரே இனிமை எழுதுறது  தானே... சரி எழுதிடுவோம்... ஏன் தனிமையிலே இனிமை காண பாட்டப் பத்தியே எழுதக் கூடாது அப்டின்னு யோசிச்சேன்??? அட ... நல்லாருக்கில்ல ..... விளைவு கீழே

ஒரு விழாவில் இளையராஜா பேசும் போது மெல்லத் திறந்தது கதவு திரைப்படத்தில் வரும் "வா வெண்ணிலா" பாடலுக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்த ஒரு பாடலைச் சொல்லி பாடிக் காட்டினார்... அந்தப் பாட்டு என்.டி.ஆர், பானுமதி நடிப்பில் இசைமேதை சி.ஆர். சுப்பராமன் இசையில் வெளிவந்த சண்டி ராணி திரைப்படத்தில் இடம்பெற்ற "வான் மீதிலே இன்பத் தேன் மாரி பெய்யுதே" என்கிற பாடல்..

யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் மதுரை ஸ்ரீ மங்கள பால கான சபா என்று ஒரு பாய்ஸ் கம்பெனி திருச்சியில் அற்றை நாளில் இயங்கி வந்தது.. அதில் திருச்சியை சேர்ந்த மாணவன் ஒருவனும் அவன் நண்பணும் போய் சேர்ந்தார்கள்.. அதில் ஒரு கண்டிப்பான நாடக ஆசிரியர் ஒருவர் இருந்தார்... மாணவர்கள் தவறு செய்து விட்டால் பிரம்பால் அடி பின்னி எடுத்து விடுவார்..அவரைக் கண்டாலே மாணவர்களுக்கு சிம்ம சொப்பனம் தான்.. ஒரு முறை அந்த மாணவன் நடிக்கும் போது கவனக் குறைவால் ஒரு சிறு தவறு செயது விட அவனை துரத்தி துரத்தி அடித்திருக்கிறார்..

பின்னாளில் அந்த மாணவன் ஒரு மாபெரும் நடிகனாகி ஒரு ஷூட்டிங் இடைவேளையில் செட்டுக்கு வெளியே கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி ஸ்டைலாக சிகரெட் பிடித்துக்கொண்டிருக்க அப்போது அதே படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த அந்த பழைய ஆசிரியர் தூரத்தில் வருவது கண்டு எழுந்து சிகரெட்டை பின்னால் மறைத்துக் கொண்டார்... ஆசிரியரும் அவரைக் கண்டு கொள்ளாதது போலவே செல்வார்...  அவர் தொலைவில் சென்ற பிறகு அருகில் இருந்த வசனகர்த்தாவிடம் "டேய் இதோ போறாரே வாத்தி... இவர் கிட்ட வாங்குன அடில தான் நான் இன்னிக்கு இந்த நெலமைல இருக்கேன்" என்று இந்த சம்பவங்களை எல்லாம் சொல்கிறார்.... அந்த ஆசிரியர் பெயர் கே.டி. சந்தானம்.. மாணவன் பெயர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்... அவரது நண்பர் காகா ராதாகிருஷ்ணன்... பாசமலர் படப்பிடிப்பில் நடந்த இந்த சம்பவத்தை வசனகர்த்தா ஆரூர்தாஸ் தனது சுயசரித்தில் அழகாய் பதிவு செய்கிறார்...

கே.டி. சந்தானம் ஒரு நல்ல நடிகர்... பெரும்பாலான படங்களில் அப்பா அல்லது குணச்சித்திர வேடம் .... கணீரென்ற குரல்.... பாசமலரில் ராஜரத்தினம் என்ற கதாபாத்திரத்தில் சிவாஜிக்கு  திருமணம் பேசி முடிக்கும் ஊர் பெரிய மனிதர் வேடம்... ரகசிய போலீஸ் 115ல் "ஆஹா என்ன பொருத்தம்" பாடலில் "அங்கே என்னம்மா சத்தம்" என்று நடுவில் வசனம் பேசி பாடலில் கடைசி இரண்டு வரியை பாடுவார்...ஜெயலலிதாவுக்கு அப்பா வேடம்...ஆசை முகம் படத்தில் எம். ஜி.ஆருக்கு அப்பா....அம்பிகாபதியில் சடையப்ப வள்ளல்... திருமலை தென்குமரியில் பேராசிரியர் சொக்கலிங்கம்.... காரைக்கால் அம்மையாரில் பணக்கார தொழுநோயாளி வேடம்....பலே பாண்டியா, பாலும் பழமும், சங்கே முழங்கு,  குலமா குணமா என்று நூற்றுக் கணக்கான படங்களில் நடித்துள்ளார்...சரி அதற்கும் நான் மேலே இளையராஜா சொன்னதாக சொன்ன பாடலுக்கும் என்ன தொடர்பு? அந்தப் பாடலை எழுதிவர் கவிஞர் கே.டிசந்தானம். ஆம்,  அவர் ஒரு மிகச் சிறந்த கவிஞர்.. காலத்தால் அழியாத பல இனிய பாடல்களை புனைந்தவர்...

உதாரணத்திற்கு சில :


 • தனிமையிலே இனிமை காண முடியுமா - ஆடிப் பெருக்கு (A.M. ராஜா  P. சுசீலா - A.M. ராஜா)

 • பம்பரக் கண்ணாலே -  மணமகன் தேவை (சந்திரபாபு - G. ராமநாதன்)

 • ஒண்ணுமே புரியலே உலகத்திலே - குமார ராஜா (சந்திரபாபு - T.R. பாப்பா)

 • கனவிது தான் நினைவிது தான் - தேவதாஸ் (கண்டசாலா - C.R. சுப்பராமன்)

 • கண் கவரும் சிலையே - காஞ்சித்  தலைவன் (TMS -  K.V.மகாதேவன் )

 • வான் மீதிலே இன்பத் தேன் -  சண்டி ராணி (கண்டசாலா, P. பானுமதி  - C.R. சுப்பராமன்)
தமிழ்த் திரை இசையின் பொற்காலமாக விளங்கிய  1950 களில்
அங்கதம் கமழும் பகுத்தறிவுக் கருத்துக்களால்  "இவரை  அடிச்சுக்க ஆள் கிடையாது" என்று அறியப்பட்டு அன்றைய காலத்தின் பாடல்களில்  "Lion's Share" ஐ  எழுதியவர் உடுமலை நாராயண கவிராயர் (கவிராஜர் என்பதன் மரூஉ... 60 களில் கவியரசு என்றும் 80களுக்கு பிறகு கவிப்பேரரசு என்றும் வளர்ந்த அதே  தான்... இது ஒரு வகையான பகுத்தறிவு போலருக்கு )... பொதுவுடமைக் கருத்துக்களுக்கு  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , எளிய தமிழில் விவசாயக் கலாச்சாரத்தைப் பாட அ.மருதகாசி, தமிழர் வாழ்வியலையும் தத்துவத்தையும் பாட கண்ணதாசன் , செவிக்கினிய உறுத்தாத பாடல்களை எழுதிய கு.மா.பாலசுப்ரமணியம், ஜாலிலோ ஜிம்கானாவா? உலகே மாயம் வாழ்வே மாயமா? படத்துக்கு எது வேண்டுமோ  அதை எழுதித் தள்ளி அந்தக் கால வாலியாக விளங்கிய தஞ்சை என்.ராமையாதாஸ் இந்த வரிசையில் வைத்துப் போற்றப் படும் கவிஞர் கே.டி.சந்தானத்தின் அடையாளம் சந்தப் பாடல்கள்...

அம்பிகாபதியில் முக்கியக் காட்சி...  சிற்றின்பம் கலவாது 100 பாடல்களை அம்பிகாபதி பாட வேண்டும்... காப்புச் செய்யுளுடன் தொடங்கும் பாடல்களில் 99 பாடியதும் அமராவதி அவன் முன் தோன்ற 100வது பாடல் அவளைப் பற்றி பாடி விடுகிறான்... 5  பாடல்களைக் கொண்டு இந்தக் காட்சி அமைத்திருப்பார்கள் ஆங்கிலத்தில் Running Notations என்று சொல்வார்கள்... கடகடவென்று ஓடும் சந்தம்.. ராமநாத அய்யரின் இந்தப் பிரத்தியேக பாணியினியில் அதற்கு ஏற்றது போல  வரிகளில் கே.டி.சந்தானம் விளையாடி இருப்பார்1) ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் (கடவுள் வாழ்த்து)

2) சிந்தனை செய் மனமே (முதல் பாட்டு) வரிக்கு வரி சந்தம் கொஞ்சும் பாடல்

செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனை - செந்தில்
கந்தனை வானவர் காவலனை குகனை
சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை
சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை
ஆதலினால் இன்றே அருமறை பரவிய சரவணபவகுகனை ((Running Notations)
3)  வடிவேலும் மயிலும் துணை (98 வது பாட்டு)

4) தமிழ் மாலை தனைச் சூடுவாள் (99 வது பாட்டு ) (கே.டி.சந்தானத்தின் Signature பாடல் என்று சொல்வேன் )

தமிழ் மாலை தனைச் சூடுவான்
கொன்றைத் தளிர் மாலை மலர் மாலை  ஜப மாலையுடன்
சந்தத் தமிழ் மாலை தனைச் சூடுவான்

தாபமிகு வெப்பு வாதமொடு
பித்தமான பிணி மொய்க்கும் உடம்போடு
சாரும் உயிர் துன்ப சாகரமுழன்று
சாதனை இழந்து வருந்தா முன்
தாளையளித்திட வேணுமெனத் துதி
பாடருணைகிரி நாதனழைத்திட
தயவுடன் விரைந்து அருள் மழை பொழிந்து
முத்தைத்தரு பத்தித் திருநகையென
முதலடி உரைத்த தழைத்த கருணையை
நினைந்து நினைந்து கவி மலர் தொடுத்த
தமிழ் மாலை தனைச் சூடுவான்


(சரணத்தின் 5வது அடியில் இருந்து இறுதி வரை ஒரே மூச்சில் பாடுவதாய் காம்போதி ராகத்தில் அமைந்த அசுர மெட்டு... மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்)

5) சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம் (இறுதிப் பாடல் )

 சற்றே சரிந்த குழலே துவளத் தரள வடம்
 துற்றே அசைய குழையூசலாடதுவர் கொள் செவ்வாய்
 நற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்
 பொற்றேரிருக்க தலையலங்காரம் புறப்பட்டதே

(சத்தியமாக இது கே.டி.சந்தானத்தின் வரிகள் தாம்... மூலப் பாடலில் மாறுதல்கள் செய்திருப்பார்  )

ஓடுகின்ற நதியின் போக்கினைப் போல வேகமாக முன்னேறிச் செல்லுகிற நடை... இதை எழுதும் போது இவரது இன்னொரு பாடல் நினைவுக்கு வருகிறது...

அகத்தியர் திரைப்படத்தில் சாருகேசி ராகத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடும்  " நடந்தாய் வாழி காவேரி" , நதியின் பல்வேறு விதமான போக்குகளை காட்டுவதாய் அமைந்த மெட்டு... ஜி. ராமநாதன் பாணியில் Running நொட்டேஷன்ஸ் இல்  குன்னக்குடி வைத்தியநாதன் இசை...

"அசைந்து நெளிந்து வளைந்து தொடர்ந்து
அலைகடல் எனுமொரு மணமகன் துணைபெறவே"
என்று சரணத்தில் கே.டி.சந்தானத்தின் மேஜிக்கல் டச்...

இதே படத்தில் இன்னொரு நல்முத்து சீர்காழி , டி.ஆர். மகாலிங்கம் குரல்களில் அமைந்த "இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே"... கரகரப்ரியாவின்  மொத்த சங்கதிகளையும் ஒரே பாடலில் திரட்டுப்பாலாக கொடுத்து விட்டீர் குன்னக்குடி என்று மகாராஜபுரம் சந்தானம் பாராட்டிய பாடல்...

இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே..
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே..
இகபரசுகமருள் பரமகருணை வடிவே.. (Running நொட்டேஷன்ஸ் )

சரணத்தில் அடுத்தடுத்து சந்தத்தில் வேகம் கூட்டி குன்னக்குடி செய்த விளையாட்டுக்கெல்லாம் நான் மட்டும் என்ன சும்மாவா?? என் தமிழின் அழகை காட்டுகிறேன் பாருங்கள் என்று கே.டி.எஸ் அநாயாசமாக எழுதி இருப்பார்....

நந்திதேவனொடு இந்திராதியரும் வந்து தாளினை வணங்கிடவே..
தந்திமாமுகனும் விந்தைவேல்முகனும் சந்தமார் தமிழ் முழங்கிடவே..
எந்தவேளையும் மறந்திடாது மறைசிந்து நான்முகன் பணிந்திடவே..
சந்தமார்குழலி இந்துநேர்வதனி மங்களாம்பிகை மகிழ்ந்திடவே

(இதில் நந்தி  இந்தி வந்து என்பவை சீரெதுகை...நந்தி தந்தி எந்த சந்த  என்பவை அடி எதுகை... வணங்கிடவே முழங்கிடவே பணிந்திடவே மகிழ்ந்திடவே என்பவை இயைபுத் தொடை... நான்கு வரிகளுக்குள் எத்தனை இலக்கண அழகு பாருங்கள் )

பாடலில் அடுத்து இன்னும் வேகம் கூடும்
தவினுறு முகமதில் இளநகையே
கனிவுறு விழிகளில் அருள் மழையே..
சுவைபட வருவதும் எழுசுரமே
துணையென மொழிவதும் உயர்தமிழே.. ((Running நொட்டேஷன்ஸ் ))

அடுத்து இன்னும் கடுமையான சந்தம்

வழிபடும் அடியவர் இருவினை பொடிபட
மழுமதி தனைவிடும் இனிய அபயகரமும்
வாய்ந்த செஞ்சடைக் கோலமும்.. (ஒரே மூச்சில் பாட வேண்டிய சந்தம் )

கிடைத்த வாய்ப்பையெல்லாம் தன் வரிகளால் பொன்னாக மாற்றி இருப்பார்....

இன்றளவும் கே.டி.சந்தானத்தின் பேர் சொல்லும் மற்றுமொரு பாடல்.. கண்காட்சி படத்தில் பீம்பிளாஸ் ராகத்தில் இதுவரை யாரும் செய்யாத புதுமையாய் ஏழு அட்சரங்களைக் கொண்ட மிஸ்ர நடையில் ஒரு டூயட் பாடல் மெட்டமைத்தார் குன்னக்குடி

கே.டி.சந்தானத்தின் வரிகளில் ஏ.பி.என் அவர்கள் குரலில் தொகையறா :

வெண்நிலவைக் குடைபிடித்து வீசுதென்றல் தேர் ஏறி
மென் குயில்தான் இசை முழங்க மீன் வரைந்த கொடியசைய
கண்கவரும் பேரழகி கனகமணிப் பொற்பாவை
அன்ன நடை ரதியுடனே அழகுமதன் வில்லேந்தி
தன்முல்லை, தாமரை,மா, தனி நீலம், அசோகமென
வண்ணமலர்க் கணை தொடுத்தான் வையமெல்லாம் வாழ்கவென்றே!

அடுத்து வருகிறது பாடல் எஸ்.பி.பி, எல். ஆர். ஈஸ்வரி குரல்களில்
அனங்கன் அங்கஜன் அன்பன்
வசந்தன் மன்மதன் என்றும்
வணங்கும் என் உயிர் மன்னவா - மண்ணுயிர்க்கின்பம்
வழங்கும் உன் புகழ் சொல்லவா

கதம்பம் சண்பகம் தங்கும்
கருங்கூந்தல் கவின் பொங்கும்
கனிந்து ஓங்கும் கயற்கண்ணியே - அன்பெழுந்தங்கம்
கலந்தின்பம் தரும் கன்னியே
ஆடலும் பாடலும் அன்பின்

ஊடலும் கூடலும் இன்பம்
தேடலும் உன் செயல் அல்லவா
நீ இல்லையென்றால் வாடிடும் வையகம் அல்லவா

அழகு தமிழே பழகும் இசையே
அமுத நிலையே உனது செயலால்
அந்தரங்க சிந்து பாடுவார்
சந்ததம் காதல் மந்திரத்தை தினம் நாடுவார்

மனம் கொஞ்சும் மலர் மஞ்சம்
அடைந்துள்ளம் குளிர் தங்கம்
கலந்தன்பின் நலம் காணுவோம்
குணம்கொள் பெண் அனங்கே உன்
மனம் கொண்டே மனம் தந்தேன்
இணைந்தொனறாய் சுகம் காணுவோம்

விவரிக்க வார்த்தைகள் போதவில்லை எனக்கு... அவ்வளவு அழகு...
அடுத்த இரண்டு ஆண்டுகளில் "லல்லி லாலி லாலோ" என்று ஒரு புதிய தமிழை பேசத் தயாரானது தமிழ் சினிமா ... 


 • கே.டி.எஸ் பற்றிய சில சுவாரஸ்யமான குறிப்புகள்
  100 படங்களுக்கு மேல் நடித்தவர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதிய ஒரே கவிஞர் / நடிகர் இவர் தான்.

 • ஏ.வி.எம் நிறுவனம் முதன் முதலாய் திரைப்படத் துறைக்குள் நுழைந்த போது கே.டி.எஸ்ஸை வைத்து சில காட்சிகளை வாழ்க்கை படத்திற்காக படம் பிடித்தார்கள்.. பின் அது கைவிடப் பட்டது. அந்த வகையில் ஏ.வி.எம் சினிமாஸின் முதல் நடிகர் கே.டி.சந்தானம் தான்.

 • நூற்றுக்கணக்கான இவர் பாடல்களில் ஒன்று கூட  இரட்டை அர்த்தமோ ஆபாசமோ கலந்த பாடல்கள் இல்லை .

 • 1960களில் பாடல் எழுதினாலும் ஒன்று கூட கதாநாயக  துதியோ / திராவிடம் / கம்யூனிசம் / அரசியல் சார்புடையதில்லை

 • திருவிதாங்கூர் சகோதரிகள் (லலிதா, பதமினி, ராகினி ) நாட்டிய நாடகங்களில் பிரபலமடைந்து வந்த போது அவர்களை அப்பச்சி (ஏ.வி.எம் அவர்கள் ) தன் படங்களில் நடிக்க வைக்க விரும்பினார்.. அவர்களுக்கு முதன் முதலில் 1948இல் வேதாள உலகம் படத்தில் ஒரு நாட்டிய நாடகப் பாடலை எழுதியவர் கே.டி.சந்தானம்...

 • ஏறத்தாழ 30 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் பாடல்களை புனைந்துள்ளார். கடைசிப் படம் 1977ல் எஸ்.வி.வெங்கடராமன் இசையில் கிருஷ்ண லீலா...

இறுதியாக ஒன்று...

அம்பிகாபதியில் சடையப்ப வள்ளலாக கே.டி.சந்தானத்தின் முதல் காட்சி... சிவாஜி மாடி அறைக்கு செல்வார். சடையப்ப வள்ளல் வந்திருக்கிறார் என்ற குரல் கேட்டதும் வெளியே வந்து கைகூப்பி அய்யா வணக்கம் என்று சொல்லிவிட்டு செல்வார்...

எனக்குத் தோன்றியது... "இது சடையப்ப வள்ளலுக்கு கம்பன் மகனின் வணக்கமன்று... சந்தான வாத்தியாருக்கு கணேசன் என்ற மாணவனின் வணக்கம்" என்று... இதைத்தான் "உள்ளத் தனையது உயர்வு" என்று உயர்த்திப் பேசுகிறது தாடி வைத்த தமிழ்!!!

6 comments:

 1. Really good article, congrats Krish! started reading all your other posts also!! Thanks Rakesh R Nath for sharing this with me.(sorry to comment here in english being a Tamilan ;)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கார்த்திக்!!

   Delete
  2. மிக்க நன்றி கார்த்திக்!!

   Delete
 2. WOW... what an article.. thanks

  ReplyDelete
 3. நன்றி தமிழரசன்!!

  ReplyDelete
 4. நன்றி தமிழரசன்!!

  ReplyDelete