Sunday, August 28, 2016

பாதாள பைரவி டூ பாகுபலி - பாகம் 1

2008ல் ஒரு தனியார் நிறுவனம் நடத்திய இசைப்போட்டியின் இறுதி போட்டியை பார்த்துக் கொண்டிருந்தேன்.. அடுத்து பாடவேண்டிய பெண் மேடையில் சுருதி சேர்த்துக் கொண்டிருந்தார்.. என் அருகில் அமர்ந்திருந்த என் நண்பர் "கடைசி வரைக்கும் ஒளப்பிகிட்டே இருப்பா பாருங்க.. பாட்டையே எடுக்க மாட்டா அவ்ளோ சீக்கிரத்தில" என்றார்.. என்ன பாட்டு என்றேன் நான்.. "குஹு குஹு போலே கோயலியா" என்றார்.."என்னது ??" இது நான் (எம்.ஆர். ராதா "வாட் பட்டை?? என்று கேட்பது போல் கேட்டிருக்கிறேன்).. "தேசுலாவுதே"ங்க... மணாளனே மங்கையின் பாக்கியம்" படத்துல வருமே" இது நண்பர்.. அப்போது தான் அந்தப் பாடலை முதன் முறை கேட்கிறேன்... ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் அலை அலையாய் எழும் ஸ்வரங்களோடு அத்தனை அற்புதமாய் இருந்தது அந்த பாடல்..
தமிழ் சினிமாவில் வந்த தெலுங்குப் பாடல்கள் மீது எனக்கு ஒரு ஈடுபாட்டை உண்டு பண்ணியது அந்த நிகழ்ச்சி...

தமிழ் சினிமாவில் தெலுங்கு இசை அமைப்ப்பாளர்களின் பங்கு என்பது சினிமா பேசத் தொடங்கிய காலத்தில் இருந்தே இருந்திருக்கிறது... இதை நாம் புரிதலுக்காக மூன்று கால கட்டங்களாக பிரித்துக் கொள்ளலாம்...
1950 கள் வரை மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப் படாமல் அனைத்தும் மதராஸ் ராஜதானியாக இருந்ததும் பெரும்பாலான ஸ்டுடியோக்கள் சென்னையிலேயே இருந்ததும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம்... அதே போல ஏராளமான படங்கள் Bilingual அதாவது (தமிழ்- தெலுங்கு) இருமொழி படங்கள் அந்தக் கால கட்டத்தில் வெளியாகின.. 1950 களின் மத்தியில் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி என்று இந்த மூன்று நட்சத்திர நாயகர்கள் தமிழில் உதயமாக என்.டி.ராமராவும் ஏ.நாகேஸ்வர ராவும் தமிழ்ப் படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டனர் இது வரை முதல் கால கட்டம்... இந்தக் கால கட்டத்தில் ஏராளமான தெலுங்கு இசை அமைப்பாளர்கள் தமிழ் சினிமாவில் தங்கள் பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்... முதலில் அவர்களை பார்ப்போம்.

உன்னை "ஹக்" கண் தேடுதே... இந்தப் பாடலை மறக்க முடியுமா??.. பி.சுசீலாவின் ஆரம்ப கால ஹிட் பாடல்.. கணவனே கண்கண்ட தெய்வம் படத்தில் இந்தப் பாடலுக்கு இசை ஏ.ராம ராவ் (Addepalli Ramarao). முதலில் இந்தப் பாடல் பி.பானுமதியை வைத்துப் பதிவு செய்யப் பட்டு பின்னர் எனோ சுசீலாம்மாவுக்கு மாற்றி இருக்கிறார்கள்.. பாடலில் நாம் கேட்கும் "ஹக்" என்ற விக்கல் மட்டும் பானுமதியுடையது.  இதே படத்தில் மற்றுமொரு அருமையான பாடல் "எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ"... ஹிந்தி தழுவலான தாய் உள்ளம் படத்தில் வரும் "கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம்" பாடலுக்கு இசை இவர் தான்.. மூலப் பாடலான "தண்டி ஹவாயே" க்கு கொஞ்சமும் குறையாத இனிமை எம். எல்.வசந்த குமாரியின் குரலில்... தமிழில் பங்களிப்பு குறைவென்றாலும் நான் மேற்சொன்ன பாடல்கள் காலத்தால் அழியாது நிற்பவை என்பதில் மாற்றில்லை.

கணவனே கண் கண்கண்ட தெய்வம் வெற்றிக்கு பிறகு நடிகை அஞ்சலி தேவி "மணாளனே மங்கையின் பாக்கியம்", "மங்கையர் உள்ளம் மங்காத செல்வம்" என்று அதே போல முழ நீள பெயர்கள் கொண்ட படங்களை தயாரித்தார்..  அனைத்துப் படங்களுக்கும் இசை அவரது கணவர்  ஆதி நாராயண ராவ் (Penupatruni Adinarayana Rao).."தேசுலாவுதே தேன் மலராலே", "அழைக்காதே சிரிக்காதே அவைதனிலே ஓ ராஜா" இரண்டும் இன்றும் இனிமை...(தேசுலாவுதே எனக்குள் நிகழ்த்திய மேஜிக்கை முதல் பத்தியிலேயே சொல்லி விட்டேன்)... ஹிந்தி "படோசன்" படத்தின் "ஏக் சதுர் நார்" பாடலைக் கேட்டிருக்கிறீர்களா?? இதே சிச்சுவேஷனுக்கு அதன் மூலப் படமான "அடுத்த வீட்டுப் பெண்ணில் "கண்களும் கவி பாடுதே" என்று சீர்காழி, ஏ.எல்.ராகவன் குரல்களில் அமர்க்களமான பாடல் உண்டு. இசை ஆதி நாராயண ராவ் தான்..கவிகளும் கண் பாடுதே என்று உளறி சரிக்கட்டுவார்... செம்ம காமடிப் பாடல்.. பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய "கண்ணாலே பேசி பேசி கொல்லாதே" இந்தப் படத்தின் மற்றொரு நல்முத்து .. தமிழில் சொந்தப் படங்கள் ஒரு ஐந்தாறு தான் பண்ணியிருக்கிறார் (சிவாஜியின் இரண்டாவது படம் பூங்கோதை உட்பட) என்றாலும் நல்ல நல்ல பாடல்களைத் தந்திருக்கிறார்.

எம்.ஜி.ஆரின் முதல் படமான சந்திரலேகாவுக்கு இசை அமைத்த எஸ்.ராஜேஸ்வர ராவ் (Salur Rajeswara Rao) ஒரு முக்கியமான இசை அமைப்பாளர்.. "பிருந்தாவனமும் நந்தகுமாரனும்", "பழகத் தெரிய வேணும்.. பெண்ணே பார்த்து நடக்க வேணும்", "நீ தானா என்னை அழைத்தது", "ஆஹா இன்ப நிலாவினிலே போகோஜகமே ஆடிடுதே", 'கல்யாண சமையல் சாதம்" "புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே.. தங்கச்சி கண்ணே" என்று அந்தக் கால ஹிட் பாடல்களை நிறைய வழங்கியவர்... சந்திரலேகா, பிரேம பாசம், மிஸ்ஸியம்மா, மாயா பஜார், கடன் வாங்கி கல்யாணம், பானை பிடித்தவள் பாக்கியசாலி என்று ஏராளமான படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்

"நீல வண்ண கண்ணா வாடா".. மங்கையர் திலகம் படத்தில் பாலசரஸ்வதியின் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் அந்நாளில் மிகப் பிரபலம்.. பாடலுக்கு இசை எஸ்.தட்சிணாமூர்த்தி (Susarla Dakshinamurthi)... "அழகான பொண்ணு தான்.. அதுக்கேத்த கண்ணு தான்", "மாசிலா உண்மைக் காதலே" அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல்களுக்கும் இசை இவர் தான்..

ராஜேஸ்வர ராவுக்கு அடுத்து ஒப்பீட்டு அளவில் தமிழில் அதிகப் படங்கள் இசை அமைத்த மற்றொரு இசை அமைப்பாளர் டி.சலபதி ராவ் (Tatineni Chalapathi Rao). சலபதி ராவ் தெரியுமா?? என்று எனது தெலுகு நண்பர்களிடம் கேட்ட போது "ஓ.. பாலகிருஷ்ணா படத்துல எல்லாம் ஒயிட் அண்ட் ஒயிட் ல சைட்ல இருப்பாரே அவரு தானே ?" என்று என்று பதில் சொல்லி என்னை மிரள வைத்தார்கள்.. அவரு நடிகர் சலபதி ராவ் டா.. நான் கேட்டது அந்தக் கால இசை அமைப்பாளர் சலபதி ராவ் என்று பின்னர் விளக்கினேன்..(அதென்னமோ பாலகிருஷ்ணா அப்டின்னாலே நமக்கு ஒரு பயம்).. "தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு", உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதிலே", "கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்", "துயிலாத பெண்ணொன்று கண்டேன்", "எங்கும் சொந்தமில்லை எந்த ஊருமில்லை" என்று ஏ.எம்.ராஜாவுக்கு பாடகராக நிறைய ஹிட் கொடுத்தவர்.. அந்த கால குத்துப் பாட்டான "ஜாலிலோ ஜிம்கானா" வுக்கும் இசை இவர் தான்... அமரதீபம், புனர்ஜென்மம், மீண்ட சொர்க்கம்,  உத்தமி பெற்ற ரத்தினம் என்று நிறையப் படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்..

இப்போது நான் டைட்டிலில் சொன்ன பாதாள பைரவி படத்தின் இசை அமைப்பாளரைப் பற்றி சொல்ல வேண்டும்.. 1950 / 60 களில் வந்த தெலுங்கு டப்பிங் படம் அல்லது மொழி மாற்றப் படம் என்றாலே பாடல்களில் நினைவுக்கு வரும் குரல் கண்டசாலாவுடையது (Ghantasala Venkateswara Rao) தான்.. (தெலுங்கில் கண்டசாலா மாஸ்டர் என்று மரியாதையாக அழைக்கிறார்கள்).. ஒரு மூன்று தசாப்தங்கள் என்.டி.ஆர், ஏ.என்.ஆர், காந்தா ராவ், கிருஷ்ணா, முரளி மோகன், சோபன் பாபு என்று தெலுங்கு தேசத்தின் அத்தனை கதாநாயகர்களுக்கும் பாடிய புண்ணியவான் இவர் தான்.. தமிழில் டி.எம்.எஸ் செய்த அதே சாதனை..

தமிழில் சி.ஆர்.சுப்பாராமன் தொடங்கி மெல்லிசை மன்னர் வரையில் அநேகர் இசை அமைப்பில் பாடிய கண்டசாலா, இசை அமைப்பாளராகவும் தனது இசைப் பங்களிப்பை தமிழ் சினிமாவுக்கு வழங்கி இருக்கிறார்.. இவற்றில் முக்காலே மூணு வீசம் தெலுங்குப் படங்கள் அல்லது இருமொழிப் படங்கள்.. "அமைதியில்லதென் மனமே.. என் மனமே" கண்டசாலா, பி.லீலா குரல்களில் ஒலிக்கும் பாதாள பைரவி படத்திற்கு இசை கண்டசாலா மாஸ்டர் தான்..

"காதல் யாத்திரைக்கு பிருந்தாவனமும் கற்பகச் சோலையும் ஏனோ?" மனிதன் மாறவில்லை படத்தில் ஏ.எல்.ராகவன், பி.சுசீலா குரல்களில் ஒலிக்கும் இந்தப் பாடலின் தெலுகு வடிவத்தை (பிரேம யாத்ராலகு)இசை அமைத்த கண்டசாலாவே பாடி இருப்பார்.. இன்றும் தெலுங்கு மக்கள் கொண்டாடும் பாடல்களில் ஒன்று.. பின்னநாளில் "டிடெக்ட்டிவ் நாரதா" படத்தில் இதன் Remastered Version ஐ  இதற்கு counter melody சேர்த்து அமைத்திருப்பார் இளையராஜா.. எல்லாம் இன்ப மயம், மனிதன் மாறவில்லை, பாதாள பைரவி, கல்யாணம் பண்ணிப் பார், கள்வனின் காதலி (இணை இசை டி.ஜி.லிங்கப்பாவின் தந்தை கோவிந்தராஜூலு நாயுடு) என்று பத்துப் பதினைந்து படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.. ஏ.எம். ராஜாவைப் போல இவரும் பாடகராகவே தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டிருக்கிறார்..

தெலுங்கில் ஆண் குரல் என்றதும் கண்டசாலா நினைவுக்கு வருவது போல பெண் குரல் என்றதும் முதலில் நினைவுக்கு வருபவர் அஷ்டாவதானி பி.பானுமதி (Paluvayi Bhanumathi Ramakrishna).. நடிகை, தயாரிப்பாளர், இயக்குனர், பின்னணிப் பாடகி, ஸ்டூடியோ அதிபர் என்று பன்முகத் திறமை கொண்ட பானுமதி சில படங்களுக்கு இசை அமைப்பாளராகவும் இருந்திருக்கிறார்... இந்துஸ்தானி சங்கதிகளோடு "நானே ராதே கண்ணா" என்று இவர் பாடும் "இப்படியும் ஒரு பெண்", சக்ரபாணி" போன்ற படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்...

பி.பி.ஸ்ரீனிவாஸ் என்ற கலைஞன் வரும் வரை (அதற்குப் பிறகும் கூட) ஜெமினியின் பாட்டுக் குரலாக ஒலித்த ஏ.எம்.ராஜா (Aemala Manmadharaju Rajah) இசை அமைப்பாளராக தமிழில் அருமையான பாடல்களை வழங்கி இருக்கிறார்.. கல்யாணப் பரிசு மற்றும் தேன் நிலவு இந்த இரண்டு படங்களின் பாடல்களே போதும் அவரது இசையின் இனிமையை நுகர... "துள்ளாத மனமும் துள்ளும்", "வாடிக்கை மறந்ததும் ஏனோ", "காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன்", பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா", "ஓஹோ என்றான் பேபி", "நிலவும் மலரும் பாடுது", "தனிமையிலே இனிமை காண முடியுமா", "காலையும் நீயே மாலையும் நீயே", "ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன்" அப்பப்பா எத்தனை எத்தனை மெட்டுக்கள்... அத்தனையும் சத்தான மெட்டுக்கள்.. கேட்பவரின் செவியை உறுத்தாத மெல்லிசை அவரது குரலைப் போலவே ஏ.எம்.ராஜாவின் இசையிலும் தெரிகிறது..

தமிழில் குறைந்த அளவு படங்களுக்கு மட்டும் இசையமைத்திருந்தாலும் "ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா", "பட்டணந்தான் போகலாமடி பொம்பளே", "மண்ணே நம்பி மரமிருக்கு கண்ணே சஞ்சலா" என்று தெலுங்கு வாசனையுடன் இனிய பாடல்களைக் கொடுத்த   இசை அமைப்பாளர் மாஸ்டர் வேணு (Madduri Venugopal).. மஞ்சள் மகிமை, எங்கள் வீட்டு மஹாலட்சுமி, பாக்கியதேவதை என்று ஒரு பத்துப் படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார் (பெரும்பாலும் Bilingual ) ..  இவரது மகன் தான் நடிகர் பானுச்சந்தர்.. (ஓ வசந்த ராஜா பாட்டில் சட்டையில்லாமல் வருவாரே அவரே தான்)..

இந்தக் கால கட்டம் வரையிலும் என்.டி.ராமராவும், நாகேஸ்வர ராவும் தமிழில் நடித்து வந்ததை கொஞ்சம் கொஞ்சமாக  குறைத்து ஆந்திரா மாநிலம் பிரிக்கப் பட்ட பிறகு ஒரு கட்டத்தில்  "ராவோடு ராவ் சேர்ந்து ராவோடு ராவாக  ஹைத"ராவ்"பாத்துக்கு குடிபெயர்ந்தனர்.. அதேபோல மெல்லிசை மன்னர்களும், திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவனும் தமிழ் சினிமா இசையின் ஆதாரத்தை அசைக்க முடியாத அளவுக்கு பற்றிக் கொண்டனர்.. அதே போல மாயாஜால, ராஜாராணிக் கதைகளைக் கொண்ட தெலுங்கு கதைக்களம் மாறி திராவிடக் கருத்துக்களை முன்வைத்த சமூகப் படங்களின் வருகையும் தமிழ் ரசிகர்களின் ரசனை மாற்றத்தை தெலுங்கு படாதிபதிகளுக்கு தெளிவாகக் காட்டின.. மேற்சொன்ன காரணங்களால் இந்த முதல் கட்டம் முடிந்தது..

தொடர்ச்சி இதன் அடுத்த பதிவில்... கீழே!!

http://krishronline.blogspot.in/2016/08/2.html

No comments:

Post a Comment