Friday, June 26, 2015

அஜீரண Motto!!! கிண்டுங்க எஜமான்... கிண்டுங்க!!!

அப்பப்பொ சென்சேஷன் தேடுற நம்மாளுகளுக்கு லேட்டஸ்ட் தீனி "மேகி" மேட்டர் தான்... .. டீக்கடை பெஞ்சுல இருந்து டிவி நியூஸ் வரைக்கும்... ஐயகோ...உலகமயமாக்கலின் விளைவு, பொருளாதாரம்,அஜினொமோட்டோ அது இதுன்னு உலக லெவெல்ல கிண்டு கிண்டுனு கிண்டி எறிஞ்சிட்டாங்ய...  இதுல உச்சக்கட்ட காமெடியே, இதுல பாதிப்பேருக்கு மேல இந்த 2 மினிட்ஸ் வஸ்துவ  கூட சரியா கிண்டத் தெரியாத ஆளுக அப்படிங்கிறது ...

இவங்ய இந்தக் கிண்டு கிண்டு கிண்டும்போது நம்ம பங்குக்கு எதயாச்சும் கிண்டலாமேன்னு நமக்கு தெரிஞ்ச ஒரு ஓட்டல்காரர் வாயக்கிண்டுனேன்...அதோட விளைவதான் இந்த போஸ்ட் ரூபத்துல என்னோட சேந்து நீங்களும் அனுபவிக்கப் போறீங்க...

வெளிநாட்டு மேகில அதக் கலந்தான், இதக் கலந்தான்னு சலம்பல் பண்ணுற நமக்கு,  நம்மூர் ஓட்டல்ல நடக்குற அக்கப்போற பத்திப் பெருசா அக்கரையேயில்ல...  குடும்பத்தோட சேந்து எங்காச்சும் போகலாம்னா நாம தேர்ந்தெடுக்குற முதல் சாய்சே ஓட்டல் தான்... அங்க நாம விரும்பி திங்கிற ஐட்டங்கள்ல என்னென்ன கலக்குறாங்கனு ஒரு கிண்டு கிண்டிப் பாப்போம்...

ஓட்டல்ல போனதும் மொதல்ல நாம ஆர்டர் பண்ணுறது சூப்பு தான்... இந்த சூப்ப தயாரிக்க Main Ingredient அதாவது முக்கிய பொருளே Stock (அ) broth னு சொல்லக்கூடிய சாறு தான்... அசைவமா இருந்தா இறைச்சியையோ, சைவமா இருந்தா காய்கறிகளையோ வேகவச்சு அதுல இருந்து இறங்குற ரசத்த தான் Stock னு சொல்லி சூப்ப தயாரிக்க பயன்படுத்துவாங்க.. ஆனா இன்னிக்கு தேதிக்கு அப்டியெல்லாம் யாரும் செய்யிறது இல்ல... மத்த உணவுகளுக்காக வெட்டி முடிச்சதுக்கப்புறம் நாம பயன்படுத்தாத ஒட்டுக்குடல், நாக்கு, சிதறுன துக்கடா மாதிரி ஐட்டங்கள எல்லாம் அண்டாவுல போட்டு தண்ணியகொட்டி அவிச்சு வடிகட்டி தான் Stock செய்யுறாங்க.. சைவமா இருந்தா குடமிளகாயோட மையப் பகுதி, சீவி எறிஞ்ச கேரட் தோல், காலிபிளவரோட கீழ்ப் பகுதின்னு நறுக்கி வீசுன ஐட்டங்கள அவிச்சு எடுத்துறுவாங்க.. மேல 2 ஸ்பூன் எம்.எஸ்.ஜிய போட்டு, உப்பு, மிளகு தூவுனா சூப்பு ரெடி.. நம்ம வீட்டுல நாய்க்கும் மாட்டுக்கும் போடுற மிஞ்சுன ஐட்டத்த தான் காசக் குடுத்து திங்கிறோம்னு தெரியாம நாமளும்.. சூப்பு சூப்பர்னு கன்னி ராசில பிரபு சொல்ற மாதிரி சொல்லி சர்ர்ர்ருனு உறிஞ்சுவோம்...

அடுத்தது Starters... கபாப்... டக்கிலோ... சிக்காங்கொக்கா... எஸ்ட்ரா.. எஸ்ட்ரா...எஸ்ட்ரா.... அதாவது எண்ணெயில பொறிச்ச ஐயிட்டங்கள்...
மூணு கிலோ கடல‌ பருப்பு (கிலோ 45-50 ரூ) ஆட்டுனா தான் , ஒரு லிட்டர் கடலெண்ணெய் கிடைக்கும் . ஆனால் ஒரு லிட்டர் எண்ணெயே  95 ரூவாய்க்கு சந்தைல கெடைக்குது. பிறகு எப்படி குடுக்க முடியுது.. இதுல எந்த எண்ணெயுமே ஒரிஜினல் கடலை எண்ணெய் இல்ல.. பெட்ரோலிய கச்சா எண்ணெயில் , கடைசியா மிஞ்சுற தாரில் இருந்து பிரிச்சு எடுக்குற நிறமற்ற, மணமற்ற ஒரு எண்ணெயில தாவரக் கொழுப்பையும், எசென்சையும் ஊத்திக் கலக்குன மலிவு விலை எண்ணெய் தான்.. இதுல செய்யிற ஐட்டங்களத்தான், Starters னு சொல்லி வாங்கி அடிக்கிறோம்..

ஓட்டல்ல ரொம்ப பிரபலமான, நாம விரும்பி சாப்புடுற ஒரு உணவு "பன்னீர் பட்டர் மசாலா".. ஒரு bowl சராசரியா 120 ரூவாய்க்கு விக்கிற இந்த உணவைத் தயாரிக்க முக்கியப் பொருளே முந்திரி விழுது தான்... 100 கிராம் முந்திரி பருப்பே 94 ரூவா இருக்கும் போது 120 ரூவாய்க்கு எப்படி பன்னீர் பட்டர் மசாலா செய்ய முடியும்.. அதான் சூட்சமமே...

முழு முந்திரிய பாத்தீங்கன்னா அதோட முனைல மூக்கு மாதிரி ஒண்ணு இருக்கும்.. விற்பனைக்காக தரம் பிரிக்கும் போது இந்த மூக்குப் பகுதிய நீக்கிட்டு தான் விப்பாங்க.. அத எல்லாத்தையும் எடுத்து கிலோ 35-40 ரூவாய்க்கு ஓட்டலுக்கு சப்ளை பண்ணிருவாங்க..  அதத்தான் அரைச்சு ஊத்தி மசாலாவாக்கி நமக்கு விக்கிறாங்ய.. இந்த மூக்கு ஐட்டம் நம்ம வீட்டுல சுத்தம் பண்ணி கோழிக்கு போடுற வஸ்துன்னு கிராமத்து ஆளுகள கேட்டா சொல்லி சிரிப்பாங்ய... இந்தக் கருமத்த நான் கண்ணால நேர்லயே பாத்து தொலைச்சேன்..

அடுத்தது பஞ்சாபி சோலே மசாலா... கருப்பு கொண்டைக் கடலைல செய்யிற ஒரு வட இந்திய உணவு.. இதுல விருவிருப்புக்காக பஞ்சாபிகள் சேக்குற ஒரு ரகசிய பொருள் டீ டிக்காஷன்.. ஓட்டல்ல இதுக்காக உக்காந்து டீயெல்லாம் போட்டுட்டு இருக்க மாட்டங்க.. காலைலேந்து டீ போட்டு வடிகட்டுன சக்கைய மொத்தமா கொட்டி அவிச்சு வடிகட்டி ஊத்திருவாங்க.. நம்ம வீடுகள்ல ரோஜா செடிக்கு போடுவோமே அதே டீத்துள் சக்கை தான்.

புஸ்ஸுனு வருதுன்னு ஓட்டல்ல இந்த மசாலாக்களோட சேத்து நாம அடிக்கிற இன்னொரு ஐட்டம் புல்கா ரொட்டி... அந்த நண்பர் சொன்னத அப்படியே சொல்ரேன்.. "கம்மி வெலைக்கு ஒரு சுமார் டால்டா கெடைக்குங்க.. அதுக்கு அகர்வால் டால்டானு நாங்க ஒரு அடையாளப் பேரு வச்சுக்குவோம்...  அதையும் சோடா உப்பையும் மொத்த மாவுல கால் வாசி கலக்குனோம்னா புசுபுசுன்னு புல்கா வரும்..." அப்புறம் என்ன... அத வாங்கித் தின்னுபுட்டு வயித்த ஜிலேபிப்பை மாதிரி புடிச்சுகிட்டு வடக்கையும் தெக்கையும் அலைய வேண்டியது தான்...

பாஸ்ட் புட் கடையில இருந்து படு பார்ஷான ஓட்டல் வரைக்கும் பிரபலமான ஒரு உணவு "Fried Rice"... சோத்த எண்ணெயில வறுத்து விக்கிறது.. அவ்வளவு தான்.. இதுல பல அநியாயம் நடக்குது.. மொதல்ல இதுக்கு சாதத்த எப்ப வடிக்கிறாங்கனு பாக்கணும்..

மாலை 7 மணிக்கு  Fried Rice செய்யணும்னா காலைலயே சாதம் ரெடி ஆகிடும்.. அதுவும் வர்ரவங்ய நெரைய தின்னுடக் கூடாதுனு முக்காப் பதத்துல எறக்கிடுவாங்க... காலைல வச்ச சாதம் போரடிக்குதுன்னு அத நாய்க்கு போட்டுட்டு ஓட்டல்ல போயி அதையே காசக் குடுத்து வாங்கித் திங்கிறோம் நாம...

இதுல சேக்கப் படுற‌ முக்கியமான ஒரு பொருள் எம்.எஸ்.ஜி.. Mono Sodium Glutamate... அதாவது. "உமாமி" என்கிற  ஏழாவது சுவைக்காக சீனாவுல பயன்படுத்துற ஒரு வகையான உப்பு.. இருந்தாலும் உப்ப உப்புன்னு சொல்லாம கிரிஸ்டல்னு சொல்ற மாதிரி, உமாமிக்கு நம்மாளு வச்ச பேரு தான் அஜினோமோட்டோ... கொஞ்ச நாள் முந்தி வரைக்கும் சாம்பார், ரசத்துல எல்லாம் கலக்குங்கனு விளம்பரம் போட்டவங்ய, இது கேன்சர் செல்களை உடம்புல தூண்டுதுன்னு உண்மை லீக்கானதும் கப்சிப்புனு ஆயிட்டானுங்க.. அந்த சீன சைத்தானத் தான் முக்கிய பொருளா தூவி Fried Rice தயாரிக்கிறாங்க.. நாமளும் இந்த உண்மையத் தெரியாம காசக் குடுத்து கேன்சர இன்ஸ்டால்மென்டுல  வாங்கிக்கிறோம்.. இதக் கலந்துபுட்டாங்யன்னு தான் மேகி மேட்டர மேய் மேய்னு உலகமே மேயுது...

இதெல்லாம் பெரிய ஓட்டலுக்கு போற ஆளுங்களுக்கு தான அப்டினு கேக்குறவங்க ரெடி ஆயிக்கோங்க அடுத்த மேட்டர் உங்களுக்கு தான்.. ரோட்டோர புரோட்டா கடைகள்ள கொவளையில குருமாவ மொண்டு ஊத்துவாங்களே பாத்துருக்கீங்களா.. "வெங்காயம், தக்காளி, இஞ்சிப்பூண்டு விழுது, காரப்பொடி, தனியா, மஞ்சள்தூள்" இந்த ஆறு முக்கியப் பொருள்களோடகறியோ அல்லது காய்கறியோ சேத்து தண்ணிய ஊத்தி கொதிக்க வைப்பாங்க.. அத கெட்டியாக்குறதுக்கு நம்ம வீடுகள்ல,,"தேங்காயும் சோம்பும் (அ) முந்திரி" அரைச்சு ஊத்துவோம்.. ஒரு தேங்கா 18 ரூவாய்க்கு விக்கும் போது திக்கான குருமா ஒரு அண்டா நிரைய செய்ய எவ்வளவு தேங்கா வேணும் யோசிங்க... பிறகு எப்புடி மொண்டு மொண்டு ஊத்துறது??..

குடும்பப் பொண்ணுக்கு பொம்மிஸ் நைட்டி மாதிரி குருமாவுக்கு குதிரைச் சாணிப் பொடி... (நீங்க படிச்சது கரெக்டு தான்..) காயவச்ச குதிரச் சாணியப் பொடியாக்கி அதையோ (அ) மரத்தூளையோ கலந்து மேற்கொண்டு எம்.எஸ்.ஜி கருமத்தையும் அப்டியே மழைச்சாரல் மாதிரி பரபரபரன்னு அப்டியே பெய்ய விட்டு.. கிண்டு கிண்டுனு கிண்டுனா.. குருமா ரெடி... நம்மாளுகளும் குருமாங்கிற பேர்ல குதிரைச் சாணியத் திங்கிறோம்னு தெரியாம... "பொரட்டாவ பிச்சு அதுல குருமாவ ஊத்திப் பொரட்டி அடிப்போம்ல...."னு மார் தட்டிக்குவாங்ய...

இப்படியெல்லாம் சொல்லி எங்களை வாந்தி எடுக்கவைக்க முடியாது.. நாங்களெல்லாம் சாக்கடைக்குள்ளேயே ஒரு மாமாங்கம் கூடுகட்டி வாழ்ந்த வித்தைக் காரர்கள்னு சொல்ற புலிகேசியா நீங்க.. இந்தா புடிச்சுக்கங்க... திருப்பதி தேவஸ்தானத்தில் பெரிய வருமானத்தில் ஒன்று நாம காணிக்கையா குடுக்குற முடி.. ஒரு வருஷத்துக்கு 132 கோடி ரூவாய்க்கு சீனாவுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் ஏலம் விடப்படுது... "மனுச மசுரக் கொண்டுபோய் என்னய்யா செய்வாங்ய?"னு கேக்குறீங்க தானே.. வெள்ளாவில வெளுத்து, ஆல்கஹால்ல அலசி அதுல இருந்து "கெரட்டின்"ங்கிற புரதத்த பிரிச்சு எடுப்பாங்க.. அது தான் சாக்லேட் தயாரிப்புல உமாமி சுவைக்காக சேர்க்கப் படுற முக்கியப் பொருளே.. சாப்பாட்டுல ஒரு முடி விழுந்தாலே சண்டைபோடுற நாம சாக்லேட்டே அதுலேந்து தான் தயாரிக்கிறான்னு தெரியாம சப்புக்கொட்டி நக்குறோம்..

"இவங்ய இப்புடித் தான்யா.. டாக்டரே சொல்லிட்டாரு.. ஓட்டலுக்கு போனா இட்லி மட்டும் சாப்புடுன்னு" அப்டிங்கிற ஆட்களுக்கு... இட்லி எப்டி தயாராகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க... மார்க்கெட்டுல கெடைக்குற மட்டமான மலிவு விலை அரிசி, முந்தின நாள் வச்சு மீந்து போன சோறு, மிச்சமுள்ள இட்லி, ஊறவச்ச ஜவ்வரிசி இதெல்லாத்தையும் ஒண்ணாப் போட்டு அரைச்சு, அதுல ஆப்ப சோடாவ போட்டு கிண்டி வச்சுருவாங்க.. அத ஊத்துறது இன்னும் ஹைலைட்டு..  தட்டுல தண்ணியத் தெளிச்சு, கைய உள்ளவுட்டு வழிச்சு, ஒவ்வொரு குழியிலயும் சொத் சொத்துனு ஒவ்வொரு அடி.. என்ன ஒண்ணு.. நடுநடுவுல அரிச்சாக்க பட்டாபட்டி மேல லைட்டா ஒரு சொறி சொறிஞ்சுக்குவாப்ல அவ்வளவு தான்..



இதெல்லாத்தையும் வாங்கி அடிச்சிட்டு கல்லீரல் கருங்கல்லாப் போயி, மண்ணீரல் மண்ணோட மண்ணாப் போயி, நுரையீரல் நொரதள்ளிப்போயி, மொத்ததுல பயபுள்ளைக்கு பல்ஸே பைப்பாசுல போற அளவுக்கு ஆயிடுது..

சரி குடும்பத்தோட சாப்புடணும்னா என்னத்த தான் திங்கிறதுன்னு கேக்குற ஆட்களுக்கு ஒரு ஓசி டிப்ஸ்.. செலவில்லாத ஆனால் ஆரோக்கியமான ஒரு வழி.. உங்கள் பிள்ளைகளில் எத்தனை பேருக்கு இது பரிச்சயம்...????

வீட்டில் சமைத்த குழைந்த சாதத்தை அம்மாவின் சுத்தமான கையினால் பிசைந்து உருட்டிக் கொடுக்க‌, கதைபேசியபடி குடும்பத்தோடு உக்கார்ந்து சாப்பிட்ட நிலாச்சோறு....  Try பண்ணித்தான் பாருங்களேன்....

Tuesday, March 3, 2015

வித்தியாசமான இசை வழங்கும்...!!!

ஒரு ரெண்டு வாரத்துக்கு முந்தி சூப்பர் சிங்கர் ஜூனியர்ல ஒரு பொண்ணு "புத்தம் புது பாட்டெடுத்தா"னு ஒரு பாட்ட உணர்ச்சிகரமா பாட, செட்டுல இருந்த மொத்தப் பேரும் அழுது அமர்க்களமாகிடுச்சு.. 

அந்தப் பொண்ணோட அப்பா பேசும் போது "வித்தியாசமா இருக்கட்டுமேன்னு வித்யாசாகர் பாட்டு எடுத்தோம்" அப்டின்னு சொன்னாரு.. நம்ம ஜேம்ஸ் வசந்தன் சாரே "நான் எல்லாம் ரொம்ப "தில்"லான ஆளு.. நானே வித்யாசாகர் பாட்டக் கேட்டு அழுதுட்டேன்" அப்டின்னாப்ல.. 

சரி.. வித்தியாசம்.. வித்யாசாகர்.. இதக் கேட்ட உடனே mind ஒரு 15-20 years flash back ல போயிருச்சு.. "இலங்கை வானொலி கொழும்பு சர்வதேச வர்த்தக ஒலிபரப்பு.. அடுத்து ஒலிக்கவிருக்கும் பாடல்... வித்தியாசமான இசை வழங்கும் வித்தியாசாகர் இசையில்.." அப்டின்னு ஒரு அறிவிப்பு.. பாட்டக் கேட்டு "அட"ன்னு அசந்து போயிட்டேன்.. 

அப்போ விஜய் பாட்டுன்னாவே "சுக்கா ரொட்டி, முட்ட பரோட்டா, கோத்தகிரி கோழிக்கறி, ஒயிட்டு லக்கான் " இப்படி ஒரே முனியாண்டி விலாஸ் ஐட்டமாவே இருக்கும்.. அப்டி இருக்கும் போது, ஹரிஹரன் குரல்ல "ஒரு தேதி பார்த்தா தென்றல் வீசும்.."னு மென்மையான ஒரு பாட்டக் கேட்டு, "சரி தான், "உங்கள் அன்பு அறிவிப்பாளர்" உண்மையா தான் சொல்லிருக்காப்ல.. வித்யாசமா இருக்கே"னு நெனச்சுகிட்டேன்.. Flash back over... வித்தியாசமா வித்யாசகர் பாட்டுன்னு சொன்னதும் எனக்கு இதான் நெனப்பு வந்துச்சு...

இந்த வித்யாசாகர் அப்படி என்னத்த வித்தியாசமா பண்ணிட்டாருன்னு கேக்குற ஆளுங்களுக்கு ஒரு சின்ன Lead..  "Rich Orchestration" உட்பட பல விஷயத்துல இவரு இளையராஜாவோட Successor.. (கவனிக்க.. follower இல்ல..successor). ரெண்டு பேருமே தன்ராஜ் மாஸ்டரோட சிஷ்யர்கள்.. ராஜா கிடார் படிச்ச அதே Trinity college of music ல வித்யாசாகர் பியானோ ஸ்டூடன்ட்.. இசையமைப்பாளர் ஆகுறதுக்கு முந்தி ரெண்டு பேருமே  MSV கிட்ட் Combo Organ வாசிச்சவங்க.. ரெண்டு பேருமே மலையாளத்துல தட்சிணாமூர்த்தி சுவாமிகள்கிட்ட Instrument players.. சத்யன் அந்திக்காடு இயக்கும் படங்களில் இளையராஜாவின் இடத்தை இப்பொ புடிச்சிருக்கிறவர் வித்யாசாகர்.. இப்படி சொல்லிட்டே போகலாம்..



தெலுங்குல ஒரு 20-25 படத்துக்கு மேல ராஜமுந்திரில மாமன் பொண்ணு கூட டூயட் பாடுற ஹீரோக்களுக்கெல்லாம் டியூன் போட்டு பெரிய அளவுல ஹிட் ஆகாம இருந்தவரு, தமிழுக்கு வந்தப்போ அவரோட மொதல் அஞ்சாறு படங்கள் அவ்வளவு சுவாரசியம் இல்ல... காரணம் ராஜா/ ரஹ்மான் / தேவா மூணு பேரும் சரி சமமா படங்கள போட்டு தாக்கிட்டு இருந்த நேரத்துல தான் என்டர் ஆனாப்ல.. ஆடிக்காத்துல அம்மியும் பறக்கிற மாதிரி இவங்க அலைல முதல் சில படங்கள் எடுபடாம போயிடுச்சு..

ஆனா 1994ல வந்த படமான அர்ஜூனோட "ஜெய்ஹிந்த்" கைகொடுக்க, அடுத்து வந்த "கர்ணா" வித்யாசாகர பளிச்சுனு தமிழ் ரசிகனுக்கு அடையாளம் காட்டிச்சு.. புல்லாங்குழல் prelude ல "மலரே மௌனமா"னு எஸ்.பி.பி உருகுனத கேட்டு.. பாட்டு நல்லாருக்கே.. யாருப்பா இந்த பையன்னு திரும்பி பாக்க ஆரம்பிச்சாங்க.. அதுக்கு பிறகு அர்ஜுனோட ஆஸ்தான இசையமைப்பாளரே வித்யாசாகர் தான்.. 

சும்மா சொல்லக்கூடாது "ஜெய்ஹிந்த்", "கர்ணா", "தாயின் மணிக்கொடி", "செங்கோட்டை", "வேதம்"னு படத்துக்கு படம் "நூறாண்டுக்கு ஒரு முறை", "மலைக்காற்று வந்து", "உச்சி முதல் பாதம்"னு ஒவ்வொரு முறையும் நல்ல நல்ல பாடல்கள கொடுத்துட்டு போவாரு வித்யாசாகர்.. இவரோட ஆரம்ப கால பாடல்கள்ல "பாங்க்ரா" style interlude ஒண்ணு இருக்கும்... "டண்ட டண்ட.. டண்ட.. டண்ட.."னு..அந்த டியூன் இவரோட typical identity....

இந்த முதல் கட்டம் வித்யாசாகருக்கு அவ்வளவு பெரிய success இல்ல.. ஆனாலும் "உடையாத வெண்ணிலா - ப்ரியம்",  "சிந்தாமணி சிந்தாமணி - ஆஹா என்ன பொருத்தம்", "ஒரு தேதி பார்த்தா - கோயம்புத்தூர் மாப்பிள்ளை", "ஆனந்தம் ஆனந்தம் - முறை மாமன்", "வாசகி வாசகி - அரசியல்", " பூத்திருக்கும் மனமே - புதையல்"னு நல்ல நல்ல பாடல்களை அவ்வளவு tough competition லேயும் குடுத்திருப்பாப்ல..

திருப்பதி போயிட்டு வந்தா திருப்பம் னு சொல்லுவாங்களே.. அந்த மாதிரி இவருக்கு திருவனந்தபுரம் போயிட்டு வந்த பிறகு தான் மிகப் பெரிய திருப்பமே.. தமிழ் சினிமா மாதிரி மலையாளத்திலும் இவர் என்ட்ரி குடுத்த நேரம், ரொம்பவே tough time..  

"ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா..",  "பரதம்..", "ஆராம் தம்புரான்..", " நந்தனம்"னு வரிசையா National Award, State Award ன்னு கலக்கிட்டு இருந்த ரவீந்திரன் மாஸ்டர்.. ஔசேப்பச்சன், ஷரத், எஸ்.பி.வெங்கடேஷ், எம்.ஜெயசந்திரன், பாம்பே ரவின்னு ஒரு பெரிய இசையமைப்பாளர் பட்டாளமே அங்க இருந்திச்சு.. அது போக நம்மூர் இளையராஜாவும் தன் பங்குக்கு சத்யன் அந்திக்காடு படங்களுக்கு இசையமைச்சிட்டு இருந்தாரு..

ஆனா அடிப்படையிலேயே மெலடி பிரியர்களான மலையாளிகளுக்கு வித்யாசாகரோட தனித்துவமான கம்போசிங்கும் ,கிளாசிகல் டச்சும் பிடிச்சுப் போக மலையாளத்தில் இவர் இசையமைத்த முதல் படமே ("அழகிய ராவணன்") கேரள அரசின் விருதை வாங்கிக் கொடுத்துச்சு... அப்புறம் ஆரம்பிச்சது சுக்கிர திசை.. "பிரணய வர்ணங்கள், "வர்ணப் பகிட்டு", "தோஸ்த்", "கிருஷ்ணகுடியில் ஒரு பிரணய காலம்", “மீச மாதவன்”, "சம்மர் இன் பெத்லஹேம்", “கிளிச்சுண்டன் மாம்பழம்" னு வரிசையா ஹிட் மழை தான்...

அந்த நேரத்துல தான் வித்யாசாகரோட ரெண்டாவது இன்னிங்க்ஸ் தமிழ் சினிமாவுல ஆரம்பமாச்சு.. அதுவும் ஒண்ணொண்ணும் சொல்லி சொல்லி அடிச்ச ஹிட்.. "தில்", "தூள்", "கில்லி", "ரன்", "மஜா", தவசி", "அள்ளித் தந்த வானம்", "அன்பே சிவம்", "சந்திரமுகி"ன்னு இவர் இசையமத்த படத்திலெல்லாம் ஆறுக்கு ஆறு பாட்டு ஹிட்..

ஒரு கட்டத்துல "கில்லி", "மதுர", "திருமலை", "குருவி", "ஆதி"ன்னு விஜய் படங்களுக்கும்.. "பூவெல்லாம் உன் வாசம்", "ஜி", "வில்லன்"னு அஜித் படங்களுக்கும் வித்யாசாகர் தான் இசை..


  • "திருமண மலர்கள் தருவாயா", "காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்" - பூவெல்லாம் உன் வாசம்
  • நீ காற்று நான் மரம் - நிலாவே வா
  • உன் சமையலறையில் - தில்
  • காதல் வந்தால் சொல்லியனுப்பு - இயற்கை
  • கனா கண்டேனடி,  "ஆலங்குயில் கூவும் ரயில்" - பார்த்திபன் கனவு
  • சுடும் நிலவு - தம்பி
  • ஆசை ஆசை இப்பொழுது - தூள்
  • சொல்லித் தரவா - மஜா
  • அழகூரில் பூத்தவளே - திருமலை
  • அன்பே அன்பே - உயிரோடு உயிராக‌
  • கொஞ்ச நேரம் - சந்திரமுகி
  • பூ வாசம் புறப்படும்", "மௌனமே பார்வயாய் - அன்பே சிவம்
  • பனிக்காற்றே - ரன்
  • இது போக, கல்யாண வீடியோ கேசட்டுக்காகவே நேர்ந்து விட்ட "தவமின்றி கிடைத்த வரமே - அன்பு"

இப்படி வரிசையா ஹரிஹரன், மது பாலகிருஷ்ணன வச்சுகிட்டு லைட்டான ஒரு மலையாள சாயல்ல மெலடில பிச்சு ஒதறியிருப்பாரு...

மெலடில மட்டும் இல்ல‌

"கொக்கரக் கொக்கரக்கோ", "வாடி வாடி நாட்டுக் கட்ட", "அப்படி போடு போடு", "இந்தாடி கப்பக் கிழங்கே", "ஐ ஆர் எட்டு நாத்துக் கட்டு" இப்படி கமர்சியல் fast numbers லேயும் கலக்கி எடுத்து, தமிழ் ரசிகனோட சகல மியூசிக்கல் தேவைகளுக்கும் தன்னோட படங்கள்ல musical treat கொடுத்துருப்பாரு..

அதே நேரம் கே.வி.மகாதேவன் இசையில "சங்கராபரணம்", இளையராஜா இசையில "சலங்கை ஒலி" இப்படி தேசிய விருது பெற்ற இசைப் பொக்கிஷங்களை இயக்கிய கே.விஸ்வநாத், தன்னோடஅடுத்த musical subject "ஸ்வராபிஷேகம்" படத்துக்கு வித்யாசகரை book பண்ணுனாரு.. அடிப்படையிலேயே தனக்கிருந்த strong classical background ல ஒவ்வொரு பாட்டையும் அச்சு பிசகாம கம்போஸ் பண்ணி, இந்த வரிசையில் மூன்றாவது ஆளா தேசிய விருதையும் தட்டிகிட்டு வந்தாரு வித்யாசகர்..

ஏய்.. இரு.. இரு.. இரு...    ஆமா... வித்யாசாகர் என்னத்த வித்யாசமா பண்ணுனாரு????அத சொல்றேன்னு சொல்லிட்டு ஏதேதோ கத உட்டுகிட்டு இருக்கியே அப்டின்னு தான கேக்குறீங்க....??? சொல்றேன்... சொல்றேன்...

v  வித்யாசகரோட பெரிய வித்தியாசம் அவருடைய பாடல்கள இருக்கிற Unpredictable Progression... சரியா சொல்லணும்னா ஒரு பாட்டோட பல்லவியிலோ அல்லது சரணத்துலயோ, ஒரு அடிய கேட்கும்போது அடுத்து வரி இந்தப் பாடலோட டியூன் அல்லது அதோட போக்கு இப்படித் தான் இருக்கும்னு கணிக்கவே முடியாது.. அத்தனை வேரியேஷன் இருக்கும்..  Late 80's and Early 90's ல வந்த பெரும்பாலான இளையராஜா/தேவா பாடல்கள்ல இத ரொம்ப சுலபமா கணிக்க முடியும்... இது தான் வித்யாசாகர், ரஹ்மான் மாதிரியான இசையமைப்பாளர்களை பளிச்சுனு அடையாளம் காட்டிய முக்கிய காரணி.. (ரஹ்மானோட பாடல்கள்ல  Progression மட்டுமல்ல  Rhythm Pattern கூட ரொம்பவே  Unpredictable)

v  நல்லா மூணு மூணரை கட்டை சுதில அழகா பாடிகிட்டு இருந்த மனோவ, உச்ச ஸ்தாயில "ஏய்ய்ஷப்ப்பா ஏஷப்பா.."னு மொத மொதல்ல பாடவச்சவரு வித்யாசாகர் தான்.. அதுக்கு பிறகு இந்த ஸ்டைல் பாப்புலர் ஆகி "சிற்பி போன்ற இசையமைப்பாளர்கள் இதஃபாலோ பண்ண ஆரம்பிச்சாங்க..

v  பக்காவான நாட்டுப்புற இசைக் கலைஞரான புஷ்பவனம் குப்புசாமிய முதன் முதலா "தொட்டு தொட்டு பேசும் சுல்தான்னாங்ங்ங்..."னு பாப் ஸ்டைல்ல பாட வச்சது இவரு தான்.. அதுல ரொம்பவே இம்பிரெஸ் ஆகி "அடியாத்தி டான்ஸ் டான்ஸ்"னு ஒரு பாப் ஆல்பமே போட்டாரு புஷ்பவனம்.

v  அதே மாதிரி, சுத்தமான கர்நாடக சங்கீத வித்வான் சீர்காழி சிவ சிதம்பரத்த "முத்து முத்தா பேஞ்ச மழ தன்னே நன்னானே"னு செம்மையான குத்துப் பாட்டு பாட வச்சதும் வித்யாசாகர் தான்

v  உச்ச ஸ்தாயில பாடுற கைலஷ் கெர், ராஹத் பதே அலி கான் போன்ற வட இந்திய பாடகர்கள் பாணில‌ தமிழ்ல மாணிக்க விநாயகத்த "கண்ணுக்குள்ள கெளுத்தி"னு உச்ச ஸ்தாயில லவ் சாங் பாட வச்சது இவரே தான்.

v  Electric Guitar வச்சு குத்துப் பாட்டு போடுற ஸ்டைல பாப்புலர் ஆக்குனதும் வித்யாசாகர் தான்.. "இந்தாடி கப்பக்கிழங்கே"ல ஆரம்பிச்சது.. லேட்டஸ்டா "சிறுத்தை"ல "ராக்கம்மா ராக்கு" வரைக்கும் இன்னும் continue ஆகுது..

v  அதேமாதிரி proper carnatic-jazz fusion style songs பாப்புலர் ஆக்கி விட்டதும் வித்யாசாகர் தான்.. உதாரணத்துக்கு "புதையல்" படத்துல வர்ர "பூத்திருக்கும் மனமே மனமே", "அரசியல்" படத்துல வர்ர "வாசகி வாசகி"..

v  டெக்னிகலா சொல்லணும்னா, வித்யாசாகர் மாதிரி எக்ஸ்டென்ஸிவா (அதீதமா) flute பயன்படுத்துன இசையமைப்பாளர் யாருமில்ல.. "மலரே மௌனமா மாதிரி மெலடியா இருந்தாலும் சரி,  கொடுவா மீச அருவா பார்வ மாதிரி fast peppy number பாட்டா இருந்தாலும்,  கொக்கர கொக்கரக்கோ மாதிரி குத்துப்பாட்டா இருந்தாலும், அவ்வளவு ஏன் "சரக்கு சரக்கு தட்டு முட்டு சரக்கு"னு சில்க் ஸ்மிதா ஆடுற பக்கா ஐட்டம் நம்பரா இருந்தாலும் வித்யாசாகர் பாட்டுன்னா புல்லாங்குழலுக்கு தனி முக்கியத்துவம் உண்டு... அதுலயும் Wood Wind, Western Metal Flute, Tambourine, Hindustani Bansuri னு ஏகப்பட்ட வெரைட்டி... சும்மா இல்ல..  Flute ல‌ vibrato, Flute ல‌ counter, Flute ல‌ Slare, Flute ல‌ column answer னு கலக்கி எடுப்பாப்ல...

v  அவ்வளவு ஏன், நாசிகபூஷணி, வாகதீஸ்வரி மாதிரி யாரும் சினிமாவுல அதிகம் பயன்படுத்தாத ராகங்கள்ல பாடல் கமபோஸ் பண்றது.. விஜய் ஏசுதாஸ் உட்பட கிட்டத்தட்ட 21 புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தியது.. இப்படி வித்யாசாகர் பண்ணின‌ வித்தியாசங்கள சொல்லிட்டே போகலாம்...




2005-06க்கு பிறகு தமிழ், மலையாளம் ரெண்டுலயுமே சரியான ஹிட் படங்கள் அமையாம ஒரு சின்ன பின்னடைவை சந்திச்சவரு,  போன வருஷம் "புள்ளிப் புலிகளும் ஆட்டின் குட்டியும்", "நீலத்தாமர", "டயமண்ட் நெக்லஸ்", "ஆர்டினரி"னு மலையாளத்துல தன்னோட வெற்றிகரமான அடுத்த இன்னிங்க்ஸ ஆரம்பிச்சுட்டாரு...


  • ஒட்ட தும்பி - புள்ளிப் புலிகளும் ஆட்டின் குட்டியும்
  • அனுராக விலோசனனாய் - நீலத்தாமர
  • தொட்டு தொட்டு - டயமண்ட் நெக்லஸ்
  • சுன் சுன் சுந்தரி பெண்ணே - ஆர்டினரி

இந்த நான்கு பாடல்களே போதும்... "He is back with a bang" அப்டின்னு  prove பண்ண...


All the best Vidyasagar sir... We are looking for your golden hits season in Tamil once again... And by the way wishing you a very happy birthday (Mar 5th)!!!!

டாடீ... எனக்கு ஒரு டவுட்டு... 

வித்யாசாகர் பாட்டக் கேட்டு ஜேம்ஸ் அங்கிள் எதுக்கு அழுவணும்.. அற்றைத் திங்கள் ஒரிடம்'  பாட்ட தாளத்த மட்டும் மாத்தி "சண்டமாருதம்" படத்துல ஜேம்ஸ் அங்கிள் போட்டுருக்கிற பாட்டக் கேட்டு நியாயமா வித்யாசாகர்  தான அழுவணும்?????

சொல்லுங்க டாடி சொல்லுங்க... சொல்லுங்க டாடி சொல்லுங்க...!!!

Friday, January 9, 2015

அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட!!!!!

இந்த வாரத்தோட உச்சக்கட்ட பரபரப்பே வேர்ல்ட் கப்புக்கு இந்தியாவோட 15 பேர் அணி அறிவிப்புல தான்.....பாபா ராம்தேவ் குஸ்தில பின்னி எடுத்தார் அப்டிங்கிற பரபரப்பு அடங்குரதுக்குள்ள..."பின்னி"ய எடுத்ததுக்காக போடுற குஸ்தி ஊருக்குள்ள பப்பரப்பா பரபரப்பு ஆயிடுச்சு...

இதோ.. இதோன்னு எதிர்பார்த்த நம்மளோட 15 பேர் world cup டீமையும் அறிவிச்சாச்சு...

'யுவி'ய எடுக்கல..பின்னிய எடுத்துப்புட்டாங்ய.. ஆய்.. ஊய்னு பயங்கர கேள்விகள்.. அதுக்கு selection கமிட்டியும் கொஞ்சமும் கவலப்படாம 'நீயா நானா' கோபிநாத் மாதிரி..."வேற...வேற...அடுத்து..ஆங் அவருகிட்ட குடுங்க"னு கூலா பதில் சொல்லி சொல்லிப் பார்த்து.. கடைசில அவர மாதிரியே டேப்பரா படிக்கட்டுல உக்கார்ர அளவுக்கு போயிருச்சு...

தோனி சேனையும்.. "எடுறா வண்டிய.. அமுத்துடா ஆரன..."னு "ஜெய் சுக்கு, முன்னி, இளஞ்சி" சகிதம் கெளம்பிருச்சு....



Selection ல யுவராஜ், பின்னி, முரளி விஜய் இதப்பத்தி கேள்விய கேக்குற ஆளுங்களும், "இவன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டான்" ரேஞ்சுல பிளேயர்ச எடுத்த கமிட்டியும் வசதியா சில பல விஷயங்கள மறந்துட்டாங்க.. (அதாவது உட்டடிச்சுட்டாங்ய...)

1) இன்னைக்கு வரைக்கும் World cup அப்டின்னாலே, கிட்டத்தட்ட ஒரு 25 வருஷமா எல்லாராலும் உடனே நினைக்கப் படுற "டெண்டுல்கர்" அப்டிங்கிற மிகப் பெரிய ஆளுமை இல்லாம இந்திய அணி World cup சந்திக்கப் போகுது... அவரு டீம்ல இருந்ததே நமக்கு ஒரு யானை பலம்... "அவரோட எடத்த நிரப்பபோற ஆளு யாருன்னு கண்டுபுடிச்சிட்டீங்களாய்யா???" அப்டின்னு ஒரு பயலும் வாயே தெறக்கல...

2) ஒவ்வொரு World cup வெற்றிக்கும் அந்தந்த அணியில இருக்குற "ஆல்ரவுண்டர்" (one or more)" தான் முக்கிய காரணமா இருப்பாங்க.. 1983 ல கபில்தேவ், மதன்லால், அமர்நாத்... 1987 ல பார்டர், ஓடோனெல்,ஸ்டீவ் வாஹ்....1992 ல இம்ரான் கான், வாசிம் அக்ரம்... 1996 ல ரணதுங்கா, குருசிங்கா, டிசில்வா...இப்படி ஒவ்வொரு World cup லேயும்... சமீபத்திய 2011ல யுவராஜ் வரைக்கும்..

ஒரே வித்தியாசம் அது Subcontinent பிட்சாக இருந்தா spin bowling ஆல்ரவுண்டரும், Overseas பிட்சா இருந்தா fast bowling ஆல்ரவுண்டரும் இருப்பாங்க...World cup 2015 ல சிட்னி, மெல்போர்ன் மாதிரி "bouncy pitches" ல நடக்கப் போகுதுன்னு 4 வருஷத்துக்கு முந்தியே தெரிஞ்சும் ஒட்டுமொத்த இந்தியாவுல ஒரே ஒரு உருப்படியான fast bowling ஆல்ரவுண்டர கூடவா கண்டுபுடிக்க முடியல???? இதப்பத்தி ஒரு பயலும் வாயே தெறக்கல...

கபில்தேவ் & மனோஜ் பிரபாகர் ஜோடிக்கு பிறகு 1996ல இருந்தே 19 வருஷமா இந்தியா டீம்ல ஒரு உருப்படியான fast bowling ஆல்ரவுண்டர் கூட கெடையாது..."ஷேன் வாட்சன், கோரி ஆண்டர்சன், கைரன் போல்லார்டு"னு ஒவ்வொரு டீமும் மெரட்டிகிட்டு இருக்கும்போது நம்மால கொறஞ்சபட்சம் ஒரு மனோஜ் பிரபாகர கூட உருவாக்க முடியல..

இத படிச்சிட்டு உங்க புள்ளி விபரம் தப்புன்னு யாராச்சும் பொங்கிட போறாங்க..பிரபாகருக்கு பிறகு "fast bowling ஆல்ரவுண்டர்" அப்டிங்கிற பேர்ல நெரைய பேர் வந்தாங்க... "சஞ்சய் பாங்கர், ரீத்திந்தர் சிங் சோதி, லக்ஷ்மி ரத்தன் சுக்லா, ராபின் சிங், கட்டக் கடைசியா இர்பான் பதான்..." இதுல இர்பான தவிர மத்த எல்லாருமே  அதிபயங்கரமா 90-95 km வேகத்துல பந்துவீசக்கூடிய ஆட்கள்...கடைசியா இர்பான் பதான நம்மாளுக என்ன கொழப்பு கொழப்பி விட்டாங்க...

முந்தாநேத்து ஒரு டிவி இன்டர்வியூல "கிரிஸ் ஸ்ரீகாந்த்" சொல்றாரு "செலக்டர்ஸ் என்ன சார் பண்றது... match is going to happen in Australian pitches and the only fast bowling all rounder on the papers is "Binny"!!!!... (என்ன கொடும சார் இது "On the paper la" 30 பேர் வர்ர வரைக்கும் இந்த world cup "ராயபுரத்துலயோ அல்லது திருவான்மியூர்லயோ பீச் மண்ணுல" நடக்கப் போகுதுன்னா நெனச்சீங்க... ஆனாலும் உங்களுக்கு அநியாயத்துக்கு sense of humor சார்!!!)

3) சரி fast bowling ஆல்ரவுண்டர் தான் சரியில்ல.. Spin bowling ஆல்ரவுண்டர் ஒழுங்கா இருக்காரா அப்டின்னா.. த….த…ப…அது… ஜடேஜா எப்படியும் டாக்டர் சர்டிபிகேட் வாங்கி குடுத்துடுவாரு...( ஏட்டையா பாடி கண்டிசன் நல்லாருக்கு... அவரு கூடிய சீக்கிரமே ஏட்டையா பதவிய சீரும் செறப்பும செம்மையா ஆத்துவாருன்னு சொல்லிட்டாரு!!!!!)

4) 2011 world cup ல சச்சின், சேவாக், கம்பீர்னு 3 "In-Form" players இருந்த போதே, home groundலயே போட்டி நடந்தப்பவே 25-30 ஓவர்ல "Quarter Final ல 160/4.... Semi-Final ல 140/4.... பைனல்ல 120/3 (பிறகு 170/4)னு விக்கெட் போயி.... அதுக்கு பிறகும் 270+ ரன் எடுத்து இந்தியா ஜெயிக்க ஒரே காரணம் "தோனி, யுவராஜ், யூசுப் பதான், ரெய்னா, ஹர்பஜன், ஜாகீர் கான்"னு 6,7,8,9வது இடங்கள்ல மிக வலுவான lower order இருந்தது தான்...

In form top order  இருந்து home groundலயே போட்டி நடந்தப்பவே இந்த நெலமைனா, "வர்ர்ர்ரூம்ம்... ஆனா வராது" ஃபார்ம்ல இருக்குற ஷிகர் தவானையும்... ரெண்டு கேட்ச் மட்டும் விட்டுடுங்கடா.. அதுக்கப்புறம் double century அடிச்சு காட்டுறேன் அப்டிங்கிற ரோஹித் ஷர்மாவையும் வச்சுகிட்டு... அதுவும் ஆஸ்திரேலிய பிட்ச்சுல.... (இப்பவே கண்ணக் கட்டுதே....)..  இதப் பத்தி எவனாச்சும் கேக்குறானா???

சரி யாருங்க உங்க lower order பேட்ஸ்மேன் காட்டுங்க பாப்போம்... "அதே தோனி 6வது எடத்துல... 7,8,9 ???????? ஆறு மேட்ச் பின்னி, 10 மேட்ச் அக்ஸ்ர், அது போக பந்த throw பண்ணவே இப்பத்தான் பயிற்சி எடுக்குற ஜடேஜா.. அப்புறம் ரவி அஸ்வின் (யாராவது அவர Spin bowling ஆல்ரவுண்டர்னு சொல்லிவச்சு மார்லன் சாமுவேல்ஸ், ஸ்டீவ் ஸ்மித்துக்கெல்லாம் பேதி ஆயிடப் போகுது பாத்துக்கோங்க‌...)



5) பேட்டிங்க விட்டுத்தள்ளு... Fast bowling department எப்படி இருக்கு?? Mohammed Shami is the leading wicket taker in team (ஓ!!! சூப்பர்ல!!!) இருங்க.. அவசரப்படாதீங்க.. ஆனா அவரு மேட்ச்சுக்கு 60 ரன் விட்டுகுடுத்துருவாரு (அய்யய்யோ!!)... Bhuvaneswar Kumar is great in swinging the ball.. (இது போதுமே).. பொறுங்க சார்... ஆனா அவருக்கு ஸ்பீட் அவ்வளவா வராது.. வெறும் swing தான் (தொலையிது... போன சீசன்ல முனாப் படேல் இதே தான் செஞ்சாப்புடி...)...உமேஷ் யாதவ் நெனச்சமாதிரி ஸ்பீட டெலிவரி பண்ணுவாரு (இவன் தான்யா fast bowler)...அட உங்களுக்கு பொறுமையே கெடையாதுங்க...நெனச்ச மாதிரிஃபாஸ்ட் போடுவாருன்னு தான் சொன்னோம்.. அத line and length ல போடுவாருன்னு சொன்னோமா??? (அடக் கருமமே.. அதுக்கு நீ போடாமலே இருக்கலாமே).. கட்டக் கடைசியா நம்ம இஷாந்த் ஷர்மா... அவருக்கு முட்டில கொஞ்சம் பிரச்சனை.. எப்புடியாச்சும்.. முயற்சி பண்ணி... (போங்கடா நீங்களும் உங்க....)

6) 2011 ல‌ ஒரு Specialist  Leg Spinner (பியுஷ் சாவ்லா), ஒரு specialist off spinner (ஹர்பஜன்), ஒரு left arm spinner (யுவராஜ்) இதத் தவிர ஒரு additional spinner (அஷ்வின்) இப்படி variety இருந்தது.. இன்னிக்கு specialist ஸ்பின்னரே ஆஸ்திரேலியா டீம் கொத்து புரோட்டா போடுற அஷ்வின் மட்டும் தான்.. மத்தது எல்லாம் ??? (அத ஏன்யா கேக்குற??...).. வேணும்னா இந்தியாலேந்து ஒரு நரிய அனுப்பி வைக்கலாம்... நரி மொகத்துல முழிச்சிட்டு போனா அஷ்வின் விக்கெட்ட அள்ளிடுவாப்ல.. (ஊ.. ஊ...நரி ஊள உட்ருச்சி... வடக்குபட்டி ராமசாமி விக்கெட்ட எடுத்து வைடா!!!!)

7) Modern cricket ல ஒவ்வொரு டீம்லயும் நிரைய  utility players இருப்பாங்க .. திடீர்னு தேவைக்கு ஏத்த மாதிரி பவுலிங்ல பயன்படுத்திக்க... போன சீசன்ல நம்ம டீம்லயே சச்சின், சேவாக், யூசுப், ரெய்னான்னு ஒரு பட்டாளமே இருந்தது... இந்த சீசன்ல ரெய்னாவ தவிர அந்த எடம் காலி (கோஹ்லி சில சமயம் பந்து வீசுவாப்புல...)

8) 2011 World cup ல தோனி அடிக்கடி சொல்ற விஷயம் "India has lot of slow fielders.." சச்சின், சேவாக், ஜாகிர், முனாப் இவங்கள்ளாம் பந்த புடிக்க டைவ் அடிக்க மாட்டேங்கிறாங்க.. மாமன் பொண்ணு மேல மஞ்ச தண்ணி ஊத்தப் போற மாதிரி பவுண்டரி வரைக்கும் பின்னாடியே வெரட்டிகிட்டு ஓடுறாங்க" அப்டின்னு... இன்னிக்கு டீம்ல உருப்படியா பண்ற ஒரே விஷயம் பொத்து பொத்துன்னு விழறது தான் (பந்த புடிப்போமான்னு கேக்காதீங்க...)... உங்களுக்கெல்லாம் கூறே இல்ல... அதுக்கு எதுக்கு இவ்ளோ செலவு பண்ணி ஆஸ்திரேலியா வரைக்கும் போகணும்... பேசாம எங்க ஊரு பாலிடிக்ஸ்ல சேந்துருங்க.. நம‌க்கு இருக்குற விழும் தெறமைக்கு சீக்கிறம் பெரிய லெவல்ல கல்லா கட்டிறலாம்...

9) சரி உங்க ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் பத்தி சொல்லுங்க பாப்போம்.. அவருன்னா தலைவருக்கு உயிருங்க... அவரு ஆடுராரோ இல்லையோ அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல.. அவரு மட்டும் இல்லன்னா தலைக்கு யாரு பிரியாணி வாங்கியாந்து குடுப்பாங்க.??? (அடப்பாவிகளா... மாநாட்டுக்கு ஆள் சேக்க தான் எங்கூர்ல பிரியாணி பொட்டலம் வாங்கி குடுத்து கரெக்ட் பண்ணுவோம்.. இங்கயுமா ???)

இத எல்லாத்தையும் வச்சு பாக்கும்போது, 1992 World cup க்கு போன டீம் தான் எனக்கு நியாபகம் வருது.. சில ஒத்துமைகள பாப்போம்...


  • 1987 ல‌ home ground ல ஆடி semi final வரைக்கும் போயிட்டு அப்புறம் 1992 ல World cup வெளையாட இதே ஆஸ்திரேலியா / நியூஸிலாந்து போனோம்...
  • அப்போதும், அதுக்கு முந்தின World cup வரைக்கும் "சுனில் கவாஸ்கர்" காலம் நடந்தது... 1992 ல அதுக்கு மாற்று ஆள் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.
  • இன்னிக்கு டீம்ல 15 பேர்ல 11 பேர் புதுசு.. அன்னிக்கு 14 பேர்ல (சச்சின், ஜடேஜா, ஆம்ரே, காம்ப்ளி, மஞ்சுரேக்கர், பேனர்ஜி, ஸ்ரீநாத், வெங்கடபதி ராஜூ அப்டின்னு) ஒரு 8-9 பேர் புதுசு
  • இன்னிக்கு சம்பந்தமே இல்லாம 6 மேட்ச் பின்னிய ஆல்ரவுண்டர்னு சொல்லி அனுப்பி வச்சது மாதிரி, அன்னிக்கு (மொத்தமாகவே 6 மேட்ச் ஆடியிருக்கிற) பேனர்ஜிய ஆல்ரவுண்டர்னு சொல்லி அனுப்பி வச்சது
  • இதே மாதிரி அப்போவும் ஓப்பனிங் படு சொத்தை.. கேரியரோட கடைசில விளையாடின ஸ்ரீகாந்தும்.. மானாவாரியா 100 பால் தின்னுபுட்டு 25 ரன் அடிக்கிற ரவிசாஸ்திரியும்.
  • Form ல இருக்குற ஓப்பனர் முரளி விஜய் டீம்ல இல்லங்கிற மாதிரி.. முந்தின சீசன்ல "சிக்சர் சித்து"ன்னு பேர் வாங்கின நவ்ஜோத் சித்து டீம்ல இல்லாதது...
  • இன்னைக்கு தோனி மாதிரி, மொத்தப் பொறுப்பையும் சின்னப் பசங்கள வச்சுகிட்டு அசாருதீன் தோள்ல தூக்கி சுமந்தது...
  • சாஸ்திரி, ராஜூன்னு ரெண்டே ரெண்டு Left arm ஸ்பின்னர மட்டும் வச்சுகிட்டு அன்னைக்கும் ஒப்பேத்துனோம்.. இன்னிக்கு அதே ரெண்டு பேர் ஜடேஜா, அக்ஸர் (அஷ்வின் கோவிச்சுக்க போறாப்ல)..

இவங்கள்ளாம் இவ்ளோ கேள்வி கேக்குறாங்யளே நானும் ஒரே ஒரு கேள்வி கேக்குறேன்....



(போதும்.. அடுத்து நீ என்ன கேக்கப் போறன்னு எனக்கு தெரியும்.. கேட்ட.... படுவா அசிங்க அசிங்கமா பேசிப்புடுவேன்... அன்னிக்கு ஜிம்பாப்வே, பாகிஸ்தான் ரெண்டு டீம மட்டும் ஜெயிச்சிட்டு மத்த எல்லார்கிட்டயும் மரண ஒத வாங்குனோமே.. இந்த தடவையும் அதே மாதிரி தான் வாங்குவோமான்னு தான கேக்கப்போற??????)


இல்லண்ணே.... World Cup முடிஞ்சதும் தோனி கேப்டன விட்டு போயிடுவாரு....கேப்டன விட்டு போயிடுவாரு....ன்னு எல்லாரும் சொல்றாங்களே.. அவரு தான் கேப்டன் கட்சிலயே இல்லயே அப்புறம் எப்படி விட்டுட்டு போவாரு????