ஒரு வாரத்திற்கு முன்பே எழுதி இருக்க வேண்டிய "Valentines Day" பதிவு.. என்ன பண்ணுறது... தமிழ்நாட்டு பப்பரப்பா செய்திகளில் முங்கிப் போயி அதற்கான சந்தர்ப்பம் அமையாமல் போய்விட்டது...
எதேச்சையாக சேனல்களை மாற்றிக்கொண்டிருந்த போது விஜய் ஆண்டனி இசை அமைத்த படம் ஒன்றின் பாடல் ஓடிக்கொண்டிருந்தது... சரணத்தில் வந்த வரிகள் டக்கென்று கவனிக்க வைத்தன...
"சிறுதுளி விழுந்து
நிறைகுடம் ஆனாயே
அரைக்கணப் பிரிவில்
நரைவிழச் செய்தாயே"
வழக்கமான காதல் பாட்டு தான் என்றாலும் அதைச் சொல்ல வந்த விதம் புதிது.... எழுதியவர் யாராக இருக்கும் என்று தேட ஆரம்பித்தேன்... தெரிந்து கொண்டபோது அடடா இவரா!! இவரைப் பற்றி எழுதலாமே என்று தோன்றியது...
90களின் மத்தியில் தமிழ் சினிமா ஒரு புதிய மாற்றத்திற்கு தயாராகிக்கொண்டிருந்தது...பாடுபொருள் என்னவோ அதே மரத்தைச் சுற்றி பாடுகிற பாடல்கள் தான் என்றாலும் அதைச் சொல்ல வருகின்ற விதத்தில் ஒரு பெரிய மாற்றத்தை தமிழ் ரசிகர்கள் எதிர்நோக்கினார்கள்....
இதற்கு பல காரணங்களை சொல்லலாம்... கரகாட்டக்காரன் ஹிட் ஆனதும் ஆளாளுக்கு கேமராவை தூக்கிக்கொண்டு வயக்காட்டுக்கு ஓடியதைப் போல, காதல் கோட்டை வெற்றியைத் தொடர்ந்து பாத்த காதல், பாக்காத காதல், நாக்கறுத்த காதல், சொல்லாத காதல், இன்டர்நெட் காதலன்னு ஆளாளுக்கு தொம்சம் பண்ண தொடங்கி அதே போல பாடல்களிலும் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று அடம்பிடித்ததும் ஒரு மிக முக்கியமான காரணம்.
ஏற்கனவே 80களின் பாடல்களில் தேயத்தேய பயன்படுத்திய "மானே தேனே பொன்மானே" வகையறா சொற்களும் சலித்துப் போயிருக்க வேண்டும்... 90களின் மத்தியில் சிறுநகரங்கள் மற்றும் சென்னை சார்ந்த கதைகள் வரத்தொடங்கிய போது அதற்கு வேறு ஒரு எழுத்து வடிவம் தேவைப்பட்டது... பெரும்பாலும் கல்லூரி சார்ந்த படங்களாக அவை அமைந்ததால் அப்போது பிரபலத்துவம் பெற்று விளங்கிய "புதுக்கவிதைகளை" திரைப்பாடலாக்கும் முயற்சியில் புதிய இசை அமைப்பாளர்கள் ஈடு பட்டார்கள். அது ஒரு புதிய ஈர்ப்பை தமிழ் ரசிகர்களிடம் உருவாக்கியது.
இன்னும் எளிமையாக சொல்லவேண்டும் என்றால் ஐந்தே வருடங்களுக்குள் ஒரு "ஒரு ரூபாய் நாணயத்தை தமிழ் சினிமா பாடலாசிரியர்கள் பார்க்கும் பார்வை எப்படி மாறிப்போனது" என்பதை வைத்தே இதை நாம் விளங்கிக்கொள்ள முடியும்.
"ஒத்தரூவா தாரேன் ஓணப்பத்தட்டும் தாரேன்" என்று முந்தைய பத்தாண்டில் சினிமா பாடல்களில் பயன்பட்ட ஒரு ரூவாய் நாணயம்... "பல்லாங்குழியின் வட்டம், புல்லாங்குழலின் துளைகள்" என்று பார்க்கும் இடமெல்லாம் காதலன் கொடுத்த ஒற்றை நாணயம் தெரிவதாய் யுகபாரதி எழுதினார்...
அதே காதல் தான்.. அதே மரத்தை சுத்திப் பாடுகிற டூயட் தான் என்றாலும் புற்றீசல் போலப் புறப்பட்டு வந்த புதிய பாடலாசிரியர்கள் அதைக்
கையாண்ட விதம் நவீனமாக இருந்தது... புதிய உவமைகள் கட்டவிழ்க்க்கப்பட்டன...
"உன் சமையலறையில் நான் உப்பா? சர்க்கரையா? " என்ற கேள்வியை எழுப்பினார் கபிலன்....
"உறங்காமலே உளறல் வரும்
இதுதானோ ஆரம்பம்
அடடா மனம் பறிபோனதே
அதில் தானே இன்பம்"
என்று காதலின் அறிகுறிகளை பட்டியலிட்டார் முத்துவிஜயன்
"மழைபேஞ்சா தானே மண்வாசம்...
உன்ன நெனச்சாலே பூவாசம்"
என்று யதார்த்த வார்த்தைகளிலேயே வியக்க வைத்தார் ரா. ரவிசங்கர்.
"தேன்மிதக்கும் உதடு
சேர்ந்திருப்பதென்ன
ஒன்றை ஒன்று முத்தமிட்டு
இன்பம் கொள்ளுதோ"
என்று வைரமுத்துவே தனது வழக்கமான ரூட்டில் இருந்து இந்தப் புதிய வடிவத்திற்கு தன் ஜாகையை மாற்ற வேண்டி வந்தது
பழனிபாரதி, அறிவுமதி, விவேகா, சினேகன், இளைய கம்பன், தாமரை, மயில், அண்ணாமலை, வைரபாரதி என்று புதுப்புது கவிஞர்கள் புறப்பட்ட காலம் அது...
இவர்கள் வரிசையில் வந்தவர் தான் இந்தப் பதிவின் நாயகர்.
1998ல் வெளிவந்த அந்தப் பாடலின் இரண்டு வரிகள் அழகியல் பார்வையின் உச்சம் என்றே நான் சொல்வேன்... ஞாபக முடிச்சுக்களை பிடித்துக்கொண்டு மனசென்னும் பள்ளத்தாக்கில் இறங்குகிற அந்தப் பாடலில் விழியெல்லாம் வியப்பை அப்பிக்கொண்டு திரும்ப திரும்ப அந்த இரண்டு வரிகளை உச்சரித்தது தமிழ்நாடு....
"பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால்
முகப்பரு ஞாபகமே!!!!"
முகத்தின் மேலே களங்கம் போல எழுகின்ற பருக்களைக்கூட இத்தனை அழகாக சிந்திக்க இயலுமா?? யாருய்யா இந்த ஆளு?? என்று தேட வைத்தார் அந்தக் கவிஞர்....
"அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்.
அழகு என்றதும் உந்தன் முத்தம் ஞாபகம்!!!"
என்று அடுத்த இரண்டு வரிகளில் அனைவர் இதயத்தையும் அள்ளியவர்.... யார் அந்தக் கவிஞர்??
சேலம் மாவட்டத்தில் உள்ள சிறுநகரம் இளம்பிள்ளை.. அதுதான் அந்த இளைஞருக்கு சொந்த ஊர். சிறுவயது முதலே பாட்டு மீது அலாதி பிரியம். சேலம் ஆர்ட்ஸ் காலேஜில் படித்துக்கொண்டிருந்த பொழுது ஒரு இசைக்குழுவையும் நடத்தி வந்தார்.. இடையிடையே இவரது சொந்தப் பாடல்களும் அதில் பாடப்படும்.. புத்தகம் பையிலே புத்தியோ பாட்டிலே...சென்னைக்கு வந்து வாய்ப்பு தேட ஆரம்பித்தார்... சினிமா ஒரு "ஒருகூறு புகவூடு சவ்வு" என்று புரிந்ததும் சில காலம் பத்திரிகைத் துறையில் வேலை செய்தார்.. ஆனால் பாடல்கள் மீதான ஆர்வம் மட்டும் குறையவில்லை. "ரெடி ஜூட்" என்று ஒரு ஆல்பம் வெளியிட்டார்..
அந்த சமயத்தில் தான் ஒரு நண்பர் மூலம் இயக்குனர் விக்ரமனிடம் "புதிய மன்னர்கள்" படத்தில் உதவி இயக்குனராக சேர்ந்தார்... "வானத்தை போல" படம் வரை அவருக்கு உதவி இயக்குனராக இருந்தார்... பாடலாசிரியர்கள் பாடலை எழுதுவதற்கு முன்பே உதவி இயக்குனர்களை வைத்து டியூனுக்கு டம்மி வரிகளை எழுதிவைப்பது வழக்கம்... "சூர்யவம்சம்" படத்தில் ஒரு டியூனுக்கு இவர் எழுதி வைத்திருந்த
"திருநாளு தேரழகா... மகராசன் நடையழகா
பிறைபோல நெத்தியில செந்தூரப் பொட்டழகா"
என்ற வரிகள் டியூனுக்கு மட்டுமன்றி சக்திவேல் கவுண்டரின் கதாபாத்திரத்திற்கும் கச்சிதமாக பொருந்திப்போக, அதையே படத்தில் வைத்து அந்த இளைஞரின் பாட்டுப் பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டார் விக்ரமன்.. அடுத்த படமான "உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் " படத்தின் "ஏதோ ஒரு பாட்டு" தான் அந்த இளைஞரின் திருப்புமுனைப் பாட்டு... பல்வேறு ஞாபகங்களின் அடுக்காய் அமைந்த அந்தப் பாடலின் சரணத்தில் வரும் வரி தான் நான் மேலே குறிப்பிட்டது...
அது முதல் விக்ரமன் கடைசியாக எடுத்த "நினைத்தது யாரோ" வரை அவரது அனைத்துப் படங்களிலும் அந்த இளைஞருக்கு ஒரு பாட்டு கண்டிப்பாக உண்டு (வானத்தைப் போல படத்தை தவிர ).
காதல் - இந்த மூன்றெழுத்து வார்த்தையை எந்தக் கவிஞன் எழுதும்போதும் அவன் பேனாமுனையில் தேவதைகள் குடிவந்து விடுகின்றன... இவர் இந்த மூன்றெழுத்து மேஜிக்கை கையாளும் நேர்த்தி அலாதியானது... நான் ஊன்றிக் கவனித்த வரையில் ஓரிரு வரிகளுக்குள்ளேயே உவமை ஊற்றை உடைத்து விடுகிற உத்தியை இவரது காதல் பாடல்கள் முழுவதிலும் காணலாம்..
"நாணம் வந்து மேகம் கொண்டு
மூடும் நிலவென
கூந்தல் கொண்டு முகத்தை நீயும்
மூடும் அழகென்ன"
"மின்சாரக் கண்ணா" படத்தில் உன் பேர் சொல்ல ஆசைதான் பாடலில் வரும் அழகான உவமை...
அதற்கு சில வருடங்கள் முன்பு தான் பிரம்மனை கஞ்சன் வள்ளல் என்று வித்தியாசமாக வர்ணித்திருந்ததார் கவிஞர் வைரமுத்து...
இவர் அதை அடுத்த எல்லையில் தூக்கி வைத்தார்
"பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன் தான்
உன்னைப் படைத்ததாலே" என்று.
"மழை இல்லை நனைகிறேன்
நம் காதலின் சாரலா?
உனைக்கண்டு உறைகிறேன்
உன் பார்வை மின்சாரமா?? "
"நெஞ்சினிலே" படத்தில் இடம்பெற்ற "மனசே மனசே குழப்பமென்ன" பாடலில் இவரது இந்த வரிகளின் இன்ஸ்பிரேஷனில் நானே எழுதிய கவிதை ஒன்று உண்டு..
உன் பார்வை துருவியதும்
குளிர்ந்து உறைகிறதே என் இதயம்
இது தான் துருவப் பிரதேசமா"
நான் இந்தப் பதிவின் தொடக்கத்தில் சொன்ன பாடலில் மற்றொரு சரணத்தில் இந்த இளைஞர் நிகழ்த்துகிற காதல் களவு
கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே
கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே
இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே
ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே
"உன்னை நானும் நினைப்பதை
யாரும் தடுக்கின்ற வேளை
துடிக்கும் இதயம் வேலைநிறுத்தம் செய்கின்றதே"
வரிசை கட்டுகிற வாலிப வார்த்தைகளை வரம்பு மீறாமல் வகிடெடுத்து விடுகிறார்.
இப்படி ஏராளமான பாடல்கள் இருக்கின்றன.. உதாரணத்திற்கு சில :
- வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா - சிம்மராசி
- மாளவிகா மாளவிகா - உன்னை தேடி
- நீதானா நீதானா என் அன்பே நீதானா - உன்னை தேடி
- மனசே மனசே குழப்பமென்ன - நெஞ்சினிலே
- உன் பேர் சொல்ல ஆசை தான்- மின்சார கண்ணா
- அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே - நினைத்தாலே இனிக்கும்
- காதல் அழகா காதல் பெண் அழகா - பாட்டாளி
- சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் - தம்
- நிபுணா நிபுணா என் நிபுணா - குத்து
- அர்ஜுனா அர்ஜூனா அம்புவிடும் அர்ஜுனா- ஏய்
- பலகோடி பெண்களிலே உனைத்தேடி - இந்தியா பாகிஸ்தான்
- கண்ணோரமாய் கதை பேசு - கண்ணுபடப் போகுதய்யா
- இருபது வயதுவரை என் பெற்றோரின் - கண்ணோடு காண்பதெல்லாம்
- மயக்க ஊசி உன் பார்வையாச்சு - யுவன் யுவதி
இவரது முதல் பாடலுக்கு இசையமைத்த எஸ்.ஏ.ராஜ்குமார் தான் இவருக்கு ஆரம்பகாலத்தில் தொடர்ந்து புன்னகை தேசம், மலபார் போலீஸ், பாட்டாளி, சுதந்திரம், ஆனந்தம், காதலுடன், மானஸ்தன் என்று வரிசையாக தனது படங்களில் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்.
தேனிசை தென்றல் தேவாவுடன் இவர் கைகோர்த்த பிறகு விஜய், அஜித், பிரசாந்த் என்று அப்போதைய டாப் ஹீரோக்களின் படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்புக்கள் வரத்தொடங்கின... இப்போது ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிவிட்ட இவர் ரஹ்மான் முதல் முந்தாநாள் முளைத்த இசையமைப்பாளர்கள் வரை அனைவர் இசையமைப்பிலும் பாடல்கள் எழுதி இருக்கிறார்..., சூப்பர் ஸ்டார் ரஜினி ஒருவரைத் தவிர கமல் முதல் சரத்குமார் வரை முந்தைய தலைமுறை ஹீரோக்களுக்கும்... விஜய், அஜித் தொடங்கி பிரஷாந்த், மாதவன், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், பரத், ஆர்யா என்று லேட்டஸ்ட் ஹீரோக்கள் வரைக்கும் பாடல்கள் எழுதி இருக்கிறார்...
விக்ரமன் பட்டறையில் இருந்து வந்தவர் என்பதால் காதலைப் போலவே குடும்பச்சூழலை விளக்குகின்ற பாடல்கள் எழுதுவது இவருக்கு "கேக் வாக்" மாதிரி.. அதிலும் இவரது முத்திரை வரிகள் பளிச்சிடும்... எத்தனை மனச்சுமையில் இருக்கும்போதும் மயிலிறகு வார்த்தைகளால் இந்தப் பாடல் வருடிக்கொடுக்கும்போது மனசு லேசாவதை மறுப்பதற்கில்லை..
"பல நூறு வண்ணம் ஒன்றாக சேறும்
ஓவியம் போல சேர்ந்திருப்போம்
வரலாறு எல்லாம் நம் பேரை நாளை
சொல்வது போல வாழ்ந்திருப்போம்
எங்களுக்குள்ளே வளைந்திடுவோம்
நாணலை போல் தானே"
ஆனந்தம் படத்தில் டாக்டர் கே.ஜெ.யேசுதாஸ் குரலில் ஒலிக்கின்ற "ஆசை ஆசையாய் இருக்கிறதே இது போல் வாழ்ந்திடவே" பாடலின் சரணத்தில் வரும் கவித்துவமான வரிகள் இவை...
தெனாலி படத்தின் "ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா" பாடலிலும் ஒரு அழகான குடும்பத்தை புதிய புதிய உவமான உவமேயங்களால் கட்டமைத்திருப்பார்
குளம் காட்டும் வெண்ணிலவாய்
அழகான நம் குடும்பம் கல் ஒன்று விழுவதால் கலையலாமா??
கல் ஒன்று விழுவதினால் தண்ணீரில் நெளி நெளியாய்
அலை போடும் ஓவியத்தை ரசிக்கலாமே
சித்தன்ன வாசல் சிற்பங்கள் பக்கம் வெறும் பாறை ஏனோ??
அன்பெனும் உளி பட்டதால் பாறை சிலை ஆகுமே
பிட்டு குழலுக்கு தேங்கப்பூவப்போல
ஒன்றாய் கலந்திட நெஞ்சு துடிக்குது
"குளம் காட்டும் வெண்ணிலவு", "பிட்டுக்குழலுக்கு தேங்காய்ப்பூவைப்போல" இவையெல்லாம் தமிழ் சினிமாவுக்கு ஒரே மாதிரியான லகான் பூட்டிய குதிரைபோல அல்லாது எந்த ஒரு பொருளையும் வேறு மாதிரியாக கூட கற்பனை செய்ய இயலும் என்பதற்கு நல்ல உதாரணங்கள்...
துளசிச் செடியில் மழையின் துளியைப் போலவே
எங்கள் விழியில் ஆனந்தத்தின் ஈரமே
பூவில் ஓர் பாத்திரம் நாம் செய்து பார்க்கலாம்
பால்சோறு போட்டு நாம் பறவைக்கும் ஊட்டலாம்
மெட்டுக்கு உறுத்தாமலும் வார்த்தைகள் துருத்தாமலும் கவிதைக்கு வர்ணமடிக்கிற அழகிய முயற்சி இது...
இப்படி இவரது கைவண்ணத்தில் வந்த அநேகம் பாடல்களை சொல்லலாம். உதாரணத்திற்கு சில :
- ஹேப்பி நியூ இயர் வந்ததே - உன்னை நினைத்து
- ஆலங்கட்டி மழை தாலாட்ட - தெனாலி
- அழகான சின்ன தேவதை - சமுத்திரம்
- ரோஜாக்களே நம் நெஞ்சில் பூக்குமே - பிரியமான தோழி
- வானம் என்ன வானம் தொட்டுவிடாலாம் - பிரியமான தோழி
- பாலக்காட்டு பொண்ணு பம்பரம் போல கண்ணு - மலபார் போலீஸ்
"சினிமா என்பது வணிகமும் சேர்ந்த கலை.. அதற்காக நாம் சில படிகள் இறங்கி வரத்தான் வேண்டி இருக்கிறது" என்று கமல் ஹாசன் சொன்னதைப் போல என்னதான் வளைத்து வளைத்து புதுக்கவிதை எழுதினாலும் துள்ளிசைப்பாட்டு எழுதலைன்னா துட்டு பாக்க முடியாது கோடம்பாக்கத்தில்.. இதற்கு யாரும் விதிவிலக்கல்ல... "ஆகாயம் பிழிந்து மை எடு.. சந்திர சூரியரை அஞ்சல்காரர்கள் ஆக்கு"ன்னு முழங்குற கவிப்பேரரசே "சிரிச்சு சிரிச்சு வந்தா சீனா தானா டோய்" எழுத வேண்டிவந்த இடம் இது.
1000 பாடல்கள் தாண்டிவிட்ட ஒரு சினிமா கவிஞன் குத்துப்பாட்டு எழுதலன்னா எப்புடி?? இவரும் நிறைய எழுதி இருக்கிறார்...
- வண்டார்குழலி வண்டார்குழலி - திருடா திருடி
- கொக்ககோலா பிரௌன் கலருடா - பகவதி
- கை கை கை கை வெக்கிறா - பகவதி
- துனியா ஹே துனியா உன் கன்னம் - உனக்காக எல்லாம் உனக்காக
- கத்த கத்த கானாங்கத்த - அரசு
- புல்புல் தாரா புல்புல் தாரா - அரசு
- சிங்காரி சிங்காரி - ராஜா
- ராத்திரிடா ரவுண்டடிடா - சொல்லாமலே
- மனச மடிச்சு நீதான் - கண்ணுபடப் போகுதய்யா
உவமையைப் போலவே இவரது எழுத்துக்களில் நான் கவனித்த மற்றொரு விஷயம் இது.
ஒரு பேட்டியில் நா.முத்துக்குமார் "மியாவ் மியாவ் பூன" பாடலைப் பற்றி சொல்லும்போது "பல்லவியின் முதல் சொல்லை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை வரும்படி எழுதுவது அந்தப் பாடலை கேட்பவரின் மனதில் அழுத்தமாக பதிய வைக்கிற ஒரு உத்தி.. சின்னப்ப பசங்க ரைம்ஸுல பயன்படுத்துற டெக்னிக் இது.. நீங்க வேணா யோசிச்சு பாருங்க" என்று ஒரு போடு போட்டார்..
அதே ரூட்டில் இவரது பாடல்கள் ஏராளமாய் இருக்கின்றன. "நீதானா நீதானா, நிபுணா நிபுணா, சாணக்யா சாணக்யா" என்று காதல் பாடல்களானாலும், வண்டார்குழலி வண்டார்குழலி என்று குத்துப்பாட்டானாலும், அர்ஜுனா அர்ஜுனா என்று "தத்துவப்" பாட்டானாலும் இந்த "ரிப்பீட்டே" முறையை பரவலாகப் பிரயோகித்திருக்கிறார்.
ஒரு பேட்டியில் நா.முத்துக்குமார் "மியாவ் மியாவ் பூன" பாடலைப் பற்றி சொல்லும்போது "பல்லவியின் முதல் சொல்லை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை வரும்படி எழுதுவது அந்தப் பாடலை கேட்பவரின் மனதில் அழுத்தமாக பதிய வைக்கிற ஒரு உத்தி.. சின்னப்ப பசங்க ரைம்ஸுல பயன்படுத்துற டெக்னிக் இது.. நீங்க வேணா யோசிச்சு பாருங்க" என்று ஒரு போடு போட்டார்..
அதே ரூட்டில் இவரது பாடல்கள் ஏராளமாய் இருக்கின்றன. "நீதானா நீதானா, நிபுணா நிபுணா, சாணக்யா சாணக்யா" என்று காதல் பாடல்களானாலும், வண்டார்குழலி வண்டார்குழலி என்று குத்துப்பாட்டானாலும், அர்ஜுனா அர்ஜுனா என்று "தத்துவப்" பாட்டானாலும் இந்த "ரிப்பீட்டே" முறையை பரவலாகப் பிரயோகித்திருக்கிறார்.
நா.முத்துக்குமாருக்கோ, பா.விஜய்க்கோ கற்பனை வளத்திலோ, நவீன சிந்தனையிலோ சற்றும் குறைந்தவரல்ல இந்த இளைஞர்... பாடல் எழுதும் வாய்ப்பு நிறைய இருந்த போதே இயக்குனராகும் முயற்சியில் இறங்கியதும், ஹாரிஸுக்கு தாமரை, ரஹ்மானுக்கு வைரமுத்து, தேவாவுக்கு காளிதாசன், வித்யாசாகருக்கு பா.விஜய், யுவனுக்கு முத்துக்குமார் என்பதைப் போல எந்த இசையமைப்பாளருக்கும் ஆஸ்தான கவியாக இல்லாமல் போனதும் இவருக்கு ஒப்பீட்டளவில் குறைவான பாடல்கள் கிடைக்க காரணமாக இருந்திருக்கலாம்.
நான் தேடியவரை கிடைத்தவை இவை.. அதிலேயே நிறைய பாடல்கள் இவர் எழுதியவை தானா என்று புருவம் உயர்த்த வைத்தன.. முறையான ஆவணப்படுத்தல் இல்லாத ஒரே காரணத்தினாலேயே இவரது பல பாடல்கள் வெளியில் தெரியவில்லை..
இந்நேரம் கண்டுபிடித்திருப்பீர்கள்.. இருந்தாலும்... அட யார் அந்தக் கவிஞர்ன்னு சொல்லவே இல்லையேப்பா என்று கேட்பவர்களுக்கு மட்டும்...
குமரேசன் என்னும் சொந்தப் பெயருடன் வந்து, பின்னர் கோடம்பாக்கத்தில் தன் பாடல்களால் கொடி கட்டிய கவிஞர்களில் ஒருவரான
"கவிஞர். ஜெ.கலைக்குமார்"!!!
"வானம் என்ன வானம் தொட்டுவிடலாம்"... அந்த இளைஞருக்கு நிச்சயம் தொடுவானம் தூரமில்லை... இப்போதும் 'ஐம்புலன், சாமிப்புள்ள, தாக்க தாக்க, மார்கழி 16, காகித கப்பல்" என்று பிசியாகவே இயங்கும் இந்த இளைஞரை தேடி விருது வரும் நேரம்... இல்லை வெகு தூரம்....
மிக அறுமையான பதிவு
ReplyDeleteபெருமை கொள்கிறேன்.... சிறந்த பாடலாசிரியர்... அவர் எங்கள் ஊர் எங்கள் முன்னத்தி ஏர்
ReplyDeleteவாழ்க... வாழ்க...
நண்பா பெருமை கொள்கிறேன் உவகை கொள்கிறேன் பெருமிதம் கொள்கிறேன் கர்வம் கொள்கிறேன் நாம் ஒரு காலத்தில் ஒன்றாக பணிபுரிந்தோம் சூரியவம்சம் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்று தொடர்ச்சியாக பல படங்கள் விரைவில் சந்திப்போம் புதிய படங்களில் இறைவனின் ஆசி என்றும் உமக்கு உரித்தாகுக
ReplyDeleteமகிழ்ச்சி நண்பா..... :)
ReplyDeleteதொடுவானம் தூரமில்லை..... :)
வாழ்த்துகள்......
Superb na
ReplyDeleteதங்களது திருமண வரவேற்பு விழா காங்கேயம் மண்டபத்தில் தங்களது இனிய நண்பர் கவிஞர் கலைக்குமார் அவர்களை அறிமுகம் செய்து வைத்தது மறக்க முடியாத இனிய நினைவுகள்🤗👍🖎👌😊
ReplyDeleteஎனது படத்திலும் பாடல்களை எழுதி இருக்கும் இவர் மிக திறமைசாலி என்பதை நான் அறிவேன், இவர் எழுதிய பாடல்கள் இவை என்று சரியான விளம்பரம், அங்கீகாரம் கிடைக்காத காரணத்தினால் இவர் இன்னும் தமிழ் சினிமாவில் முதல் இடத்தை அடைய காலதாமதம் மட்டுமே ஆகிறது,எவ்வளவு தான் பந்தை நீரில் அமுக்கினாலும் மேலே வந்துதானே ஆகவேண்டும் 🧞♀️ திறமை உள்ள இவர் அதேப்போல் மிக விரைவில் வெளிச்சத்திற்க்கு வர இறைவனை வேண்டுகிறேன்🙏🙏🙏👍👍👍😃😃😃
ReplyDeleteஅன்புடன் W.Danny Jacksan (music director) 9840119421
மிகவும் நெருங்கிய நண்பரும்
ReplyDeleteகவிஞருமான ஜெ.கலைக்குமார்
அவர்களின் படைப்புகளின் பதிவு மகிழ்ச்சியாக இருக்கிறது பதிவிட்ட நண்பருக்கு நன்றி
மீண்டும் இணைவோம் நன்றி
பாலகிருஷ்ணன்.K
ரம்மி திரைப்பட இயக்குநர்
கருத்துக்களைப் பதிவிட்டு உற்சாகமூட்டிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், தங்கள் வருகைக்கும், வாசிப்பிற்கும், மேலான வாழ்த்துகளுக்கும் எனது உளமார்ந்த நன்றி!!!
ReplyDeleteAsusual nailed it Krishna. You are exposing Lot of hidden surprising talents. Keep up your research.
ReplyDelete