Saturday, April 8, 2017

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்!!!

பேரறிஞர் அண்ணாவைப் பற்றி  கலைஞர் கருணாநிதி எழுதிய பிரபலமான கவிதை ஒன்று உண்டு...

"அன்புக்கு மூன்றெழுத்து-அந்த
அன்புக்கு துணைநிற்கும் 
அறிவுக்கு மூன்றெழுத்து
அறிவார்ந்தோர் இடையில்எழும்
காதலுக்கு மூன்றெழுத்து..." என்று மூன்று மூன்றாக அடுக்கிக்கொண்டே போகும்...

அதற்கும் இந்தப் பதிவிற்கும் என்ன சம்பந்தம்னு யோசிக்கிறீங்க தானே?? இருக்கே...

1992 ல் ஒரு ரெக்கார்டிங்... பாடலுக்கான டியூனைக் கேட்ட உடனே பாடலாசிரியர் "அவரை" பாடவச்சா நல்லாருக்கும் சார் என்கிறார்.. இசையமைப்பாளரும் அதை ஆமோதிக்கிறார்.. இதன் பின் நடந்தவை அந்த பாடலாசிரியர் சொன்னபடியே சொல்கிறேன்..

 "அவரு வந்தாரு..  டியூனைக் கேட்டுட்டு சரி பாடலாம்னு சொல்லிட்டு உதவியாளரை அழைச்சு "போயி ரெண்டு டபுள் ஸ்ட்ராங் அமிர்தாஞ்சனம் வாங்கிட்டு வான்னாரு... அத ரெண்டு வெரல்ல மொத்தமா அப்டியே வழிச்சு தொண்டைல பூசுனாரு.. எனக்கா கண்ணெல்லாம் எரியுது இவர் என்ன இப்படி பூசுறாரேன்னு.. பாத்துட்டே இருந்தேன்.. அடுத்து ஒரு கைல ஒரு 50 கிராம் குறுமிளக எடுத்து வாயில போட்டு மெல்ல ஆரம்பிச்சாரு.. ரெண்டு தின்னாலே நமக்கு எரியும் இவரு இப்படி சாப்புடுறாரேன்னு பாத்துட்டே இருக்கேன்... அதுக்கு மேல சூடா ஒரு கப் பாலக்குடிச்சிட்டு பாட ஆரம்பிச்சாரு... கணீர்னு வெண்கல நாதம் மாதிரி அவரு குரல் விண்ணுன்னு ஒலிச்சது.... பாடல் பெரிய வெற்றியைப் பெற்றது".

அந்தப் பாடகர் வேறு யாருமல்ல "இசைமுரசு கலைமாமணி நாகூர் முஹம்மது இஸ்மாயில் ஹனிஃபா" என்கிற இ.எம்.ஹனிஃபா அவர்கள்...



கவிஞர் வாலி சொன்னது போல

"நாகூர் ஹனிஃபாவின்
நா கூர்...

ஆமாம் அது Razor Sharp Voice!! சற்றே கனத்த சாரீரமாக இருந்தாலும் எட்டுக்கட்டை சுருதியையும் எளிதில் எட்டும் சாரீரம்.. உச்சஸ்தாயியிலும் அவரது குரல் கொஞ்சமும் உதறாது.. அது ஹனிஃபாவின் ஆசீர்வதிக்கப்பட்ட குரல்...

இப்போது முதல் பத்தியில் சொன்ன விஷயத்திற்கு வருகிறேன்... "ஹனிஃபா" என்கிற மூன்றெழுத்துக்காரரின் குரல் என்ற மூன்றெழுத்து ஒலித்த மூன்று மூன்றெழுத்துக்களைப் பற்றிய பதிவு என்கிற மூன்றெழுத்து..

முதல் மூன்றெழுத்து : அல்லா(ஹ்)



இஸ்லாம்  இசையை  ஆதரிக்கிறதா  இல்லையா?.. அது " ஹராமா"??  அல்லது " ஹலாலா"?? என்கின்ற  போட்டி  வாதங்கள்  ஒருபுறம்  இருக்க ... இஸ்லாமியப்பாடல்கள்  என்றாலே  தமிழ்நாட்டில்  அனைவருக்கும் சட்டென்று நினைவுக்கு வருபவர் ஹனிஃபா சாஹேப் தான்... அந்த அளவுக்கு மாற்று சமயத்தவரிடம்  கூட இஸ்லாம் சமுதாயத்தின் அருமை பெருமைகளை தன் குரல்வழி கொண்டு சேர்த்த பெருமகன் அவர்.

ஹனிஃபா சாஹேப் யாரிடமும் முறைப்படி கர்நாடக சங்கீதமோ இந்துஸ்தானி இசையோ கற்காதவர்... ஆனால் மூன்றரை மணிநேரக் கச்சேரியிலும் துளியும் சுருதிபேதம் இருக்காது.அது அல்லாஹ்வின் "துஆ" (Gifted Voice). தனது 5 வயதிலேயே பள்ளிக்கூடத்தில் கடவுள் வாழ்த்து பாடத்தொடங்கியவர் 9வது வயதில் தன் அண்ணனின் வெல்டிங் பட்டறையில் பாடிக்கொண்டிருந்த போது உள்ளூர் "தப்ஸ்" இசைக்குழுவுக்கு பாட அழைத்துச் சென்று விட்டனர். கௌதியா பைத்து சபையில் இணைந்து பாடிக்கொண்டிருந்தவர்  தனது 14வது வயதில் திருமண வீடுகளில் தனி மேடைக்கச்சேரி செய்ய ஆரம்பித்து விட்டார். அதன்பிறகு கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் உலகெங்கும் சுற்றி வந்து தனது வெண்கல நாதத்தால் ஆயிரக்கணக்கான இசைநிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார்.

இஸ்லாத்தில் உங்களுக்கு என்ன வேண்டும்? அத்தனைக்கும் பாடி வைத்திருப்பார் ஹனிஃபா சாஹெப்.

அல்லாஹ்வைப் பற்றிப் பாடவேண்டுமா??

"எங்கும் நிரைந்தவனே அல்லா அல்லா", "அல்லாவை நாம் தொழுதால்", "இறைவனிடம் கையேந்துங்கள்"

பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிய பாடலா??

"தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு", "சொன்னால் முடிந்திடுமோ", "அதிகாலை நேரம் சுபுஹூக்குப் பின்னே"

பெருமானாரின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களைப் பற்றிய பாடலா??

"தீன்குலக் கண்ணு", "சுவர்க்க பதியின் மாண்பு மேவும் அரசி ஃபாத்திமா", "ஃபாத்திமா வாழ்ந்த முறை", "கன்னியரே அன்னையரே கொஞ்சம் நில்லுங்கள்"

இறைவேதத்தைப் பற்றிய பாடலா??

"திருமறையின் அருள்மொழியில் ஒளிந்திருப்பது என்ன?", "ஒருகையில் இறைவேதம்", "மௌத்தையே நீ மறந்து"

தர்ஹாக்களைப் பற்றிப் பாட வேண்டுமா??

"நமனை விரட்ட மருந்தொன்று", "தமிழ்நாட்டு தர்ஹாக்கள்"

இன்னும் "கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் என்னும் ஐம்பெரும் கடமைகளைப் பற்றி", தாயீப் நகத்துக் காட்சிகள், காஹ்பாவின் பெருமைகள், பத்ரூப் போரைப் பற்றி, அபூபக்கர் அவர்களைப் பற்றி இப்படி இஸ்லாத்தின் பல்வேறு விஷயங்களையும் அதன் பெருமைகளையும் மாற்று சமுதாயத்தினரும் அறியும் வண்ணம் ஆயிரக்கணக்கில் பாடிவைத்திருக்கிறார்..

அவர் ஒரு Trend Setter!! ஆம். அதற்கு முன்புவரை கர்நாடக இசையையோ அல்லது இந்துஸ்தானி இசையையோ சார்ந்து இருந்த இஸ்லாமிய இசையை, அதிலிருந்து மாறி புதிய வடிவத்திற்கு கொண்டு சென்றவர். எளிமையான மெட்டுக்களில் வலிமையான தெளிவான கருத்துக்கள்!! இந்த வடிவத்திற்கு "இஸ்லாமியத் தமிழிசை"ன்னு பெயர் வச்சுக்கலாம்... அதற்கு பிதாமகர் ஹனிஃபா சாஹேப் தான்.. பாமரர்க்கும் சென்றடையும் வகையில் சில சமயங்களில் தமிழ் (அ) இந்தி சினிமாப் பாடல்களின் மெட்டுக்களில் கூட அவரது பாடல்கள் அமைந்திருக்கும். உதாரணத்திற்கு


  • "ஆஜாரே சந்தமா ராத் ஆயீ" மெட்டில் "தீனோரே நியாயமா மாறலாமா"
  • "ஹம் தேரே தேரே தேரே" மெட்டில் "நீ எங்கே எங்கே எங்கே நாகூர் மீரானே"
  • "வாதா கர்தே சாஜ்தா" மெட்டில் "ஏகன் உண்மைத் தூதரே"
  • "ஆனேசே உஸ்கே ஆயே பஹார்" மெட்டில்  "இருலோகம் போற்றும் இறைத்தூதராம்"
  • "டம் டம் டீகா டீகா" மெட்டில் "கைகளை ஏந்திவிட்டேன்.. கண்ணீரைச் சிந்திவிட்டேன்"
  • "பால் மணக்குது பழம் மணக்குது பழனி மலையிலே" மெட்டில் "அருள் மணக்குது அறம் மணக்குது அரபு நாட்டிலே"


இப்படி நிரையச் சொல்லலாம்..

இந்த இசைவடிவத்தை வெற்றிகரமாக ஆக்கியதில் ஹனிஃபாவின் குரலுக்கு முதலிடம் என்பதில் மறுப்பேதும் இல்லை. அதே வேளை இதில் பக்கபலமாக நின்ற கவிஞர்களும் இசையமைப்பாளர்களும் இன்றியமையாதவர்கள்... "ஹனிபா அண்ணனுக்கு பாட்டு எழுதுறதுன்னா சும்மால்ல... வார்த்தைய புடம்போட்டு தான் எடுப்பாக..." என்று ஒரு பேட்டியில் கலைமாமணி நாகூர் சலீம் இதனை விவரிக்கிறார்... தொடக்க காலத்தில் தனக்கு பாடல் எழுதிய ஆபிதீன் புலவரை தனது ஆசானாகவே மதித்தவர் ஹனிஃபா. அதன் பிறகு இறையருட்கவிமணி பேராசிரியர் அப்துல் கஃபூர், கலைமாமணி நாகூர் சலீம், சாரண பாஸ்கரன், நாகூர் சேத்தான்,  கிளியனூர் அப்துல் சலாம் என்று ஏராளமான கவிஞர்கள் முத்தான பாடல்களை இசைமுரசுக்கு ஆக்கி அளித்திருக்கிறார்கள்.

அதே போல மற்றொரு மிகமுக்கியமான நபர் ஹனிஃபாவின் பெரும்பாலான பாடல்களுக்கு இசையமைத்த இன்பராஜ். எச்.எம்.வி இசைத்தட்டில் "இறைவனிடம் கையேந்துங்கள்", "அல்லாவை நாம் தொழுதால்" ஆகிய பாடல்களுக்கு இசையமைத்தவர் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு "காற்றினிலே வரும் கீதம்" பாடலுக்கு இசையமைத்த இசைமேதை எஸ்.வி.வெங்கட்ராமன், "தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு" பாடலுக்கு இசையமைத்தவர் இளையராஜா (அன்னக்கிளிக்கு முன்பு). மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி சில பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். என்றாலும் இசைமுரசின் பெரும்பாலான பாடல்கள் இன்பராஜாலேயே மெட்டமைக்கப்பட்டவை. அதேபோல அவருடன் இணைந்து பாடிய எஸ்.சரளா, கே.ராணி, எல்.ஆர்.அஞ்சலி ஆகியோரும் மறக்கமுடியாதவர்கள்.

ஹனிஃபாவின் இந்த இசைவடிவத்தை மட்டுமன்றி அவரது ஹைபிட்ச் குரல், மாடுலேஷன், தொப்பி என்று அவரைப் பின்பற்றி பயணித்தவர்கள் / பயணிக்கிறவர்கள் "சங்கனாதச் செம்மல் ஏ.ஆர்.ஷேக் முஹம்மது, இசை இளமுரசு இறையன்பன் குத்தூஸ், எஸ்.ஏ.சீனி முஹம்மது இப்படி நிரையப் பேர். அதனால் தான் நான் முந்தைய பத்தியிலேயே சொன்னேன் "இஸ்லாமிய இசையில்அவர் ஒரு Trend Setter" என்று!!

இரண்டாவது மூன்றெழுத்து : திமுக‌



முரசுகளில் பலவகை உண்டு... போருக்கு வீரர்களை அழைக்கும் போர் முரசு, போரின் வெற்றியைக் கொண்டாட வெற்றி முரசு, தானம் வழங்கியவர்களை புகழ்ந்து ஒலிக்கும் தியாக முரசு, வேள்விக் காலத்தில் ஒலிக்கும் வேள்வி முரசு இப்படி... தி.மு.கழகத்தைப் பொருத்த வரையில் இவை அனைத்தும் சேர்ந்தது ஒரே முரசு தான்... இசைமுரசு!!

"உடன்பிறப்பே.. கழக உடன்பிறப்பே", "ஓடி வருகிறான் உதயசூரியன்", "தன்மானம் காக்கும் கழகம்" என்று இவரது குரல் முழங்காத திமுக மேடைகளே கிடையாது... சிங்கிள் டீயைக் குடித்துவிட்டு விடிய விடிய தேர்தலுக்கு கொடியும் தோரணமும் கட்டிய தொண்டனுக்கு அற்றை நாளின் உற்சாக பானமே அவரது குரல் தான். அண்ணா, கலைஞர் கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன் போன்றோரின் உரைவீச்சும், எம்.ஜி.ஆர் தனது திரைப்ப்டங்களில் செய்த பிரச்சாரத்திற்கும் நேர் நிகரானது ஹனிஃபா தனது பாடல்களால் செய்தவை..

தி.மு.கவின் வரலாற்றில் ஒவ்வொரு மைல்கல்லிலும் ஒவ்வொரு ஹனிஃபா பாட்டு இருக்கும். விரிவாகவே சொல்கிறேன்..

தூங்கிக் கிடந்த உன்னை துடைத்தணைத்து
தாங்கித் தரைமேல் இட்டார் – தமிழா
தாத்தாவாம் ஈவெராவே தமிழா
தாத்தாவாம் ஈவெராவே

என்று இளம்வயதிலேயே ஆபிதீன் புலவரின் வரிகளில் தந்தை பெரியாரைப் பாடியவர் ஹனிஃபா.

1940ல் சர். ஏ.டி. பன்னீர்செல்வம் மறைந்த போது "பறந்தாயே எங்கள் பன்னீர் செல்வமே" என்று இரங்கற்பா பாடியவர்.

1953 -  தமிழகம் முழுவதிலும் கைத்தறி நெசவாளர்கள் பாதிக்கப்பட்டு கடும் வறுமைக்குள்ளான போது, திமுகவின் சார்பில் அண்ணாவோடு சேர்ந்து திருச்சியில்

"சேலைகள் வேட்டிகள் வாங்குவீர்
திராவிட நாட்டின் சேமம் வேண்டி
சிங்கார ஆடைகள் வாங்குவீர்" என்று உடுமலை வாத்தியாரின் பாடலைப் பாடி வீதிவீதியாக கைத்தறி ஆடைகளை விற்றவர் ஹனிஃபா.

1953ல் டால்மியாபுரம் என்ற பெயரை கல்லக்குடி பழங்கானத்தம் என்று மாற்றக்கோரி ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து போரட்டம் நடத்தினார் கலைஞர் கருணாநிதி. அதை கவுரவிக்கும் வகையில்
"கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே" என்று ஒலித்தது இசைமுரசின் குரல்.

1955 - அண்ணா மேடைக்கு வரப்போகிறார் என்றாலே ஒலிக்கும் "அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா" என்ற பாடலை எச்.எம்.வி இசைத்தட்டில் பாடினார் ஹனிஃபா. அந்த ஆண்டின் அதிகம் விற்பனையான இசைத்தட்டு அது தான். "ஹனிஃபாவின் அழைக்கின்றார் அண்ணா பாடலை திரைப்படமாக எடுக்க அனுமதி கிடைத்தால் அதைவைத்தே திராவிட நாடு அடைந்துவிடுவேன்" என்று அண்ணாவே பாராட்டிய பாடல் அது.

1965 - இந்தி எதிர்ப்பு போராட்டத்தில்

"ஓடிவந்த இந்திப் பெண்ணே கேள், நீ தேடிவந்த கோழை நாடு இதுவல்லவே" என்று பாவேந்தரின் பாடலை மேடைகள்தோறும் பாடியவர்

"செந்தமிழை மேயவந்த 
இந்தி என்ற எருமை மாடே! 
முன்னம் போட்ட சூடு என்ன 
மறந்ததோ உனக்கு?" என்று அவரது குரலையே ஆயுதமாய்க் கொண்டு போராடியவர்

அப்போதைய காங்கிரஸ் அரசை விமர்சித்து "கீழே இறங்கு.. மக்கள் குரலுக்கு இணங்கு" என்று முழங்கினார்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு கலவரத்தில் மாணவர்கள் இறந்த போது

"தாய்மொழியை காக்க நின்ற மாணவர்தம் மார்பகத்தில்
தீயவர்தம் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததம்மா" என்று இவர் பாடிய பாடல் மிகப்பெரிய எழுச்சியைத் தூண்டியது

மதுரை மாநாட்டில் கண்ணதாசனும் இ.வெ.கி.சம்பத்தும் வெளியேறி தனிக்கட்சி கண்டபோது கவிஞர் நாகூர் சலீமை வைத்து இவர் எழுதிப் பாடிய "வளர்த்தகடா மார்பில் பாய்ந்ததடா" மிகப் பிரபலமானது... பின்னர் எம்.ஜி.ஆர் வெளியேறிய போதும் வைகோ 93ல் வெளியேறிய போதும் இதே பாடல் திமுக கூட்டங்களில் நாடெங்கும் ஒலித்தது.

விருகம்பாக்கம் மாநாட்டில் "காய்ந்து சிவந்தது சூரியனே" என்று இவர் பாடிய பாடலைக் கேட்டு எம்.ஜி.ஆர் இவருக்கு 10,000 ரூவாய் பரிசு வழங்கியதாகச் சொல்வார்கள்

பேரறிஞர் அண்ணா மறைவின் போது

"அண்ணா அண்ணா என யாரை இனி அழைத்திடுவோம் - அன்புத்
தம்பி தம்பியென யாரண்ணா அழைத்திடுவார்" என்கிற பாடலில்

"நாளும் உழைத்து உடல் இளைத்தாயோ? - அதை
நாட்டுமக்கள் கண்களுக்கு மறைத்தாயோ?
ஆளும் திறமை அன்புக் கலைஞருக்கு இருப்பதை நீ
அறிந்ததனால் ஒய்வினை எடுத்தாயோ?"

என்று அண்ணா மறைவின் போதே அடுத்து தலைமைக்கு வரப்போகிறவர் நாவலர் அல்ல கலைஞர் தான் என்று கோடிட்டு காட்டியது அவரது குரல்

இப்படி எல்லாவற்றிற்கும் ஒலித்த ஒரே முரசு இசைமுரசு... எம்.ஜி.ஆர் தனிக்கட்சி கண்டபோது இவருக்கும் அழைப்பு வந்ததாம்.. எனக்கு ஒரே இறைவன்... ஒரே கட்சி தான் என்றைக்கும் என்று திட்டவட்டமாக மறுத்தவர். அதே போல கட்சிப் பணி என்றாலும் கடுகளவும் என் மார்க்கத்துக்கு விரோதமாக நடக்க மாட்டேன்.. தேர்தல்ல நின்னாலும் வேன்ல பாடிகிட்டே வந்து ஓட்டு கேட்கிறேன்.. என் மார்க்கத்துக்கு விரோதமாக யாரையும் கையெட்டுத்துக் கும்பிட மாட்டேன் என்று உறுதியாக நின்றவர். காமராசரைப் போலவே சொந்த மண்ணில் (நாகூரில்) தோற்றாலும் பின்னர் எம்.எல்.சியாக சட்டமன்றப் பணியாற்றியவர்.

சுருக்கமாகச் சொல்வதென்றால்... இன்றும் தேசிய அளவில் காங்கிரசின் பின்னால் நிற்கின்ற இஸ்லாமிய மக்களை, தமிழ் நாட்டில் திராவிடக் கட்சிகளின் பின்னால் கொண்டு சேர்த்த பெரும் பங்கு ஹனிஃபா சாஹேப்பின் குரலுக்கு உண்டு

மூன்றாவது மூன்றெழுத்து : சினிமா



இவர் அதிக அளவில் தனது பங்களிப்பைத் தராத இடம் சினிமா. 

திராவிட இயக்கங்களில் தீவிரமாக இவர் பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் அதன் வாயிலாகவே இவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்புகள் வந்திருக்கின்றன். அந்த வகையில் இவரது முதல் பாடலை பெற்றுத் தந்ததும் இவரது கெழுதகை நண்பர் கலைஞரே. 1953ல் எம்.ஜி.ஆர் - வி.என்.ஜானகி நடித்து கலைஞர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதி அவரது மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த "நாம்" படத்தில், கலைஞரின் மைத்துனர் சி.எஸ்.ஜெயராமன் இசையில் ஒரு நாட்டுக் கூத்துப் பாடலில் பலரோடு சேர்ந்து ஹனிஃபாவும் பாடினார். அதற்கு அடுத்த ஆண்டு மற்றொரு தி.மு.க நடிகரான "நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி" நடிப்பில் வெளிவந்த "சுகம் எங்கே படத்தில் பாடினார்.

1955ல் வெளிவந்த குலேபகாவலியில் "காமிக் பாடகர் எஸ்.சி.கிருஷ்ணனின்" புகழ்பெற்ற பாடலான "நலமே தரும் நபி நாயகமே" என்ற பாடலை இணைந்து பாடினார்.

1961ல் மெல்லிசை மன்னர்களின் இசையில் வெளிவந்த பாவமன்னிப்பு பாடல் தான் இன்றளவிலும் ஹனிஃபாவை தூக்கி நிறுத்திய சினிமாப் பாடல். "எல்லோரும் கொண்டாடுவோம்" பாடலில் "கைகால்கள் ஓய்ந்த பின்னே துடிப்பதில் லாபமில்லே" என்று உச்சபட்ச ஆக்டேவில் எகிரும் ஹனிஃபாவின் குரல் மிகப் பிரபலம். இந்தப் பாடலை இவர் மட்டும் மேடைகளிலே தனியாகப் பாடுவதுண்டு... டி.எம்.எஸ் போடும் சங்கதிகள் டோட்டலாக மிஸ் ஆகும் என்றாலும் இந்தப் பாடலில் ஜீவநாடியான அவரது குரல் பாடலை சிதைக்காமல் ரசிக்க வைக்கும்.

ஒரு நெடிய இடைவெளிக்குப் பிறகு பாடிய பாடல் தான் 1992ல் இளையராஜா இசையில் செம்பருத்தி படத்துக்காக அவர் பாடிய "நட்ட நடுக்கடல் மீது நான் பாடும் பாட்டு". இந்தப் பதிவின் முதல் பத்தியில் நான் சொன்ன பாட்டு இதுதான். சினிமாவில் இவரது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கி வைத்த பாட்டு என்றே சொல்ல்லாம்.

அந்தப் பத்தாண்டில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு ஏழெட்டுப் பாடல்கள் பாடியிருப்பார்.... இளையராஜாவின் இசையில் "தர்மசீலன்" படத்தில் "எங்குமுள்ள அல்லா பேரைச் சொல்லு நல்லா", ராமன் அப்துல்லா படத்தில் "உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்". சிற்பி இசையில் "படிக்கிற வயசுல" படத்தில் "படிக்கிற வயசினிலே படிக்கணுன்டா", மனோஜ் பட்நாகர் இசையில் "என்றென்றும் காதல்" படத்தில் "இது காதல் ஆரம்பம் (நாடோடி நண்பா போகாதே) என்று வரிசையாக இவருக்கு பாடல்கள் அமைந்தன. இறுதியாக இவர் தனது 77 வது வயதில் பாடிய சினிமாப் பாடல் முரளி நடித்து எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் 2002ம் ஆண்டு வெளிவந்த "காமராசு" படத்தில் "ஒருமுறை தான் இந்த வாழ்க்கையே" என்கிற பாடல்.

சினிமா கதாநாயகனுக்கான குரல் இல்லை என்றாலும் கதையின் போக்கை காட்சியமைப்பில் தூக்கி நிறுத்தும் அசரீரிக் குரலாக ஹனிஃபாவின் குரல் திரைப்படங்களில் ஒலித்தது

நான் மேற்சொன்ன இந்த மூன்று தளங்களைத் தவிர பொதுவான பாடல்களும் இசைமுரசின் கச்சேரிகளில் சூழலுக்கு ஏற்ப இடம் பெரும்.  "தலைவாரிப் பூச்சூட்டி உன்னை", "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்" போன்ற பாரதிதாசன் பாடல்கள், "மங்கலம் பொங்கிடும் இங்கிதம் தங்கிடும் மணமக்கள் தினம் வாழ்க" என்று நிக்காஹ் வீடுகளில் பாடப்படும் பாடல். சிங்கப்பூர் கச்சேரியென்றால் சிங்கப்பூரைப் பற்றிய பாடல் இடம்பிடிக்க்கும்.

திருச்சியில் நடந்த விழா ஒன்றில் கலைஞர் கருணாநிதி இவரைப் பற்றி சொன்ன வார்த்தைகள்... "ஹனி என்றால் தேன்... பா என்றால் பாட்டு... ஹனிபா என்றால் தேன் பாட்டு என்று பொருள் கொள்ளலாம். பொருத்தமான பெயரைத்தான் வைத்திருக்கிறார்கள் இவருக்கு" என்று

1925ல் பிறந்து தனது  5வது வயது முதல் கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் உலகமெல்லாம் தனது சிம்மக்குரலால் இசை ராஜாங்கம் நடத்திய அந்தக் குயில் இதே நாளில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (08-April-2015) இவ்வுலகை நீத்தது.. ஆம் இன்று அவரது இரண்டாம் ஆண்டு நினைவு போற்றும் நாள்!!

"மௌத்தையே நீ மறந்து வாழலாகுமா" என்று நிலையாமையைப் பாடியவர் தனது "மௌத்"திற்குப் பிறகும் நம்முடன் நிலைத்து வாழ்கிறார் தனது "Mouth" ஆக்கிவைத்த ஆயிரக்கணக்கான பாடல்களால் !!

ஓங்குக அன்னாரின் புகழ்!!!

3 comments:

  1. தன் மானம் காக்கும் கழகம் பாடல் பாடப்பட்ட ஆண்டு எப்பொழுது?

    ReplyDelete
  2. அற்புத குரலோன் ஹனிபா பற்றிய சிறந்த கட்டுரை.. அருமை

    ReplyDelete