Friday, November 17, 2017

திரை வானில் ஒரு மின்னல் கீற்று!!!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் தனது துறையில் பெரும் ஆளுமையோடு விளங்குகிற ஒருவரின் புகழின் தாக்கம் என்பது, அவர்கள் சமகால கலைஞர்களின் படைப்புக்களைக்கூட இவர்களுடையது என்றே எண்ண வைக்கும் அளவுக்கு இருப்பதுண்டு.. இந்த நிகழ்வுக்கு உதாரணமாய் 60 களில் யார் பாடல் எழுதினாலும் அது கவியரசருடையது என்று தவறாக கருதப்படுவதையும் 80 களில் யார் இசைமைத்த பாடலாக இருந்தாலும் அது இளையராஜாவின் பாடல் என்று கருதப்படுவதையும் சொல்லலாம்.. அந்த வரிசையில் இயக்குனர்களும் உண்டு.. ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த இயக்குனரின் பாணியில் வந்த எந்தப் படமும் அவருடையதோ என்று எண்ணப் படுவதுண்டு... இதற்கு உதாரணமாய் அமைந்த ஆனால் மேற்சொன்ன நிகழ்வினால் அதிகம் அறியப்படாமல் போன ஓர் இயக்குனரைப் பற்றிய பதிவு தான் இது.



தெலுங்குப் படவுலகில் "தாட்டினேனி ராமராவ்" (T.Rama Rao) என்று ஒரு பிரபல இயக்குனர் உண்டு..  (படகோட்டி, உத்தம புத்திரன், பாதாள பைரவி போன்ற படங்களை எடுத்த T. பிரகாஷ் ராவின் தம்பி).. இவருக்கு ஒரு சிறப்பு உண்டு.. அது என்னவென்றால்.. முதன்முதலாக. 1966ல் நடிகர் திலகத்தின் "நவராத்திரி" படத்தை தெலுங்கில் எடுத்தார்.. அது சக்கை போடு போடவே, "இது நல்லாருக்கே!!" என்று நினைத்தாரோ என்னமோ? அதற்குப் பிறகு அதுவே அவரது பாணியாக மாறி  நல்ல கதைக்களம் மற்றும் வசனத்திற்கான Scope உள்ள தமிழ்ப்படங்களை வாங்கி அவற்றிக்கு இந்தி மசாலா தடவி "அமிதாப் பச்சன், ரிஷி கபூர், ஜிதேந்திரா என்று பாலிவுட் நட்சத்திரங்களை வைத்து இந்தியில் ஏராளமான ஹிட் படங்களைத் தந்தவர் (அவள் ஒரு தொடர்கதை, சட்டம் ஒரு இருட்டறை, மூன்று முகம், சம்சாரம் அது மின்சாரம் என்று பெரிய லிஸ்ட்).

அதற்கு நேர் எதிராக பிறமொழியில் பெரிய ஹிட் அடித்த படங்களை வாங்கி அவற்றிற்கு ரஜினி பிராண்ட் மசாலா தடவி இளையராஜாவின் பாடல்களில் பொரித்தெடுத்து Silver (Jubilee) Foil சுற்றியது தான் நம்ம பதிவின் நாயகரின் பாணி.

சுருங்கச் சொன்னால் இவர் இயக்குனராக இருந்ததே வெறும் 10 ஆண்டுகள் தான்.. அதிலும் அவரது Directorial Peak Period என்பது வெறும் 7 ஆண்டுகள் தான்.. ஆனால் இந்தக் குறுகிய காலத்திற்குள் ரஜினியை வைத்து 6 படங்கள், கமலை வைத்து 2 படங்கள், சிவாஜியுடன் 2, விஜயகாந்துடன் 2... எல்லாமே பெரிய வெற்றி படங்கள்.. இது போக தெலுங்கில் சிரஞ்சீவி, கன்னடத்தில் விஷ்ணுவர்தன், இந்தியில் மிதுன் சக்கரபர்த்தி என்று other language Super Stars படங்களும் இந்த லிஸ்டில் உண்டு... இவர் இயக்கிய மொத்தப் படங்கள் 20 - 25 தான் இருக்கும்.. ஆனால் அதில் 10 - 15 சூப்பர் ஹிட் படங்கள்...

சரி யாருப்பா அந்த இயக்குனர்??

70 களின் இறுதியில் ராம்-ரஹீம் என்று ஓர் இரட்டையர்கள் கதை வசனம் எழுதி இயக்குவதில் பிரபலமானவர்கள் (இயக்குனர் இராமநாராயணனும் விஜயகாந்தை அறிமுகப் படுத்திய எம். .காஜாவும் தான் அந்த இரட்டையர்கள்).. அவர்களோடு மூன்றாவதாக இவர் இணைந்து கொண்டார்.. ("எரிமலை எப்படிப் பொறுக்கும்" புகழ்) சிவப்பு மல்லி, (கங்கை அமரன் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன) விடுகதை ஒரு தொடர்கதை, (சுருளி கலக்கிய) மாந்தோப்பு கிளியே, பௌர்ணமி அலைகள் என்று இவரது எழுத்தில் நிறைய படங்கள் முந்தைய இரண்டு இயக்குநர்களால் வெளிவந்து பிரபலமானது..

அதில் பௌர்ணமி அலைகள் கதையை முதன் முதலாக கன்னடத்தில் "ஹுன்னிமேய ராத்ரியல்லி" என்ற பெயரில் இவர் இயக்கினார் (இதற்கும் இசை கங்கை அமரன் தான்). படம் நன்றாகவே போக அதை உடனடியாக தெலுங்கில் இவரது இயக்கத்திலேயே எடுத்தது .வி. எம்... சிரஞ்சீவிக்கு பெரிய அடையாளத்தை பெற்றுத் தந்த அந்தப் படம் "புன்னமி நாகு".. படம் ஹிட்... உடனே .வி.எம்மின் அடுத்த படத்திற்கும் இவர் தான் இயக்குனர்.... சரிதா, பிரதாப் போத்தன் நடிப்பில் வெளிவந்த அந்தப் படம் "அம்மா"... (சங்கர்-கணேஷ் இணையின் அற்புதமான மெல்லிசை பாடல்களில் ஒன்றான "மழையே மழையே" இடம்பெற்ற படம்)... படம் படுதோல்வி.. அதற்கு அடுத்து இவர் பட்டாளத்து விஜயனை வைத்து எடுத்த கண்ணீர் பூக்களும் வெற்றிபெறவில்லை.. இடையில் தனது "பௌர்ணமி அலைகள்" கதையையே மூன்றாம் முறையாக மிதுன் சக்கரவர்த்தியை வைத்து இந்தியில் எடுத்தார்...
இந்த நான்காண்டுகால போராட்ட வாழ்விற்கு முடிவு கட்ட முதல் வெளிச்சக் கீற்றாய் அந்தப் படம் வந்தது... "அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், பாயும் புலி என்று தொடர்ந்து வில்லனாகவே நடித்து வந்த தியாகராஜனை வைத்து இவர் இயக்கிய "மலையூர் மம்பட்டியான்" தெறிக்க விட்ட ஹிட்டாகி இவருக்கு பெரிய பிரேக் கிடைக்க காரணமாக அமைந்தது... ராபின் ஹூட் பாணி நல்லவன் கதை, "சின்னப்பொண்ணு சேல", "காட்டுவழி போற பொண்ணே" என்று ராஜா போட்டுக் கொடுத்த அருமையான பாடல்கள், சிலுக்கு, ஜெயமாலினி எல்லாம் சேர்ந்த சரியான கலவையாய் அமைந்த படம் அது..


Trend Setter: "கரிமேடு கருவாயன், தீச்சட்டி கோவிந்தன், கும்பக்கரை தங்கையா, சீவலப்பேரி பாண்டி, வாட்டாகுடி இரணியன்" என்று வரிசையாக பல படங்கள் வர அமைந்த ஒரு Trend Setter.

ஒரு இயக்குனர் பெரிய ஹிட் கொடுத்தால் உடனே முன்னணி ஹீரோக்கள் படங்கள் தேடி வருவது இயற்கை தானே... வந்துச்சே...அதுவும் Super Star படம்.... "நானே ராஜா நீயே ராணி" என்று ஆரம்பிக்கப்பட்டு பிறகு பெயர் மாறி, ரஜினி, மாதவி ஜோடியில் தலைவர் பேண்டுக்குள்ள கைய விட்டுகிட்டு ஸ்டைலாக பாடும் "காதலின் தீபம் ஒன்று" பாடல் இடம்பெற்ற "தம்பிக்கு எந்த ஊரு"!!!..


மலையூர் மம்பட்டியான் தந்த அனுபவத்தில் "திரைக்கதையில் கில்லாடியான பஞ்சு அருணாச்சலம், பாட்டுக்கு இளையராஜா, கூடவே ரஜினியின் காமெடி எல்லாம் கலந்து ஒரு "குடும்ப பாங்கான மசாலா " பட பாணியை உருவாக்கி கொண்டார் நம்ம இயக்குனர்...  ரஜினி தனது வழக்கமான ஸ்டைலோடு, செந்தாமரையிடம் "இந்த கங்காதரன் இருக்கானாமே.. அவன் ஆளு எப்படி? என்று உதார் விடுவதில் ஆரம்பித்து, நம்பர் 1,2 க்கு எங்கு செல்வது என்று கேள்வி கேட்டுவிட்டு, சுலக்ஷனா பதில் சொன்னதும் "காத்தோட்டமா?? ம்ம்ம்... வெட்டவெளில?? ம்ம்ம்... சருப்பாலயே அடிச்சுக்கணும்" என்று சலம்புவது, பால் கறக்க தெரியாமல் உதை வாங்குவது, பாப்பா போட்ட தாப்பா படிக்க போய் பாம்பு பிடிப்பது என்று படம் முழுக்க காமெடியிலும் கலக்கி எடுத்திருப்பார்.

Trend Setter : முதன் முதலாக ரஜினிக்கு பாம்பை வைத்து காமெடி செய்யும் பாணியை ஆரம்பித்து வைத்த Trend Setter இந்தப் படம் தான்.. அதுமட்டுமல்ல இனி இவர் தொட்டதெல்லாம் ஹிட் ஆனது...

ஒரு படம் ஹிட் ஆனதும் அடுத்ததும் Super Star படம் தான்... மலையூர் மம்பட்டியானாக ரஜினியை வைத்து ஹிந்தியில் இவர் எடுத்த "கங்க்வா" பாலிவுட்டில் கலக்கியது....

அடுத்ததாக விஜயகாந்த், கன்னடத்து விஷ்ணுவர்தன் ஆகியோரை வைத்து "ஈட்டி" என்ற படம் எடுத்தார். சின்னச்சின்ன புரட்சிகர ரோல்களில் இருந்து கதாநாயகனாக முன்னேறி இருந்த விஜயகாந்திற்கு  அதே பாணியில் அமைந்த வெற்றிப்படம் இது.

சிரஞ்சீவி, மிதுன், ரஜினி, விஜயகாந்த், விஷ்ணுவர்தன் ஆச்சு.. அடுத்து யாரு??? Yessssss…. அவரே தான்!!



கனமான கதாபாத்திரங்களில் கம்பு சுற்றிய கமலை வைத்து இவர் எடுத்த பக்காவான மாஸ் மசாலா (சகலகலா வல்லவன் அளவுக்கு மட்டமில்லை)...  Fighting, Chasing  என்று பரபரப்பான போலீஸ் கதையில், கமலிசத்தையும் மானாவாரியாக கலந்து கட்டி அடித்து வெளுத்து வாங்கி இருப்பார் இயக்குனர்.. படு ஸ்டைலான கமல் (Opening Scene லேயே சட்டையில்லாமல் Push-ups எடுப்பார்),  அம்பிகா, மாதவி என்று இரண்டு ஹீரோயின்கள்.. பின்னி எடுத்திருப்பார் (Perfomence லங்க).. கண்மணியே பேசு, வானிலே தேனிலா ஆடுதே, சிங்காரி சரக்கு, பட்டுக் கன்னம் என்று அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்… முக்கியமாக சத்யராஜ்... ஏற்கனவே தம்பிக்கு எந்த ஊரு, ஈட்டி படங்களில் வில்லனாக இருந்தவருக்கு ஸ்டைலிஷ் வில்லனாக Promotion… "தகடுங்கணா!! தகடு.. தகடு!! என்று வெளுத்து வாங்கி இருப்பார் மனுஷன். 

கமலின் போலீஸ் கெட்டப்பிற்கு இன்றும் பேசப்படும் படம்.. தகடு தகடு பிறகு சத்யராஜின் அடையாளமாகவே மாறியது..



நான் பெரிதும் ரசிக்கும் கமல் படங்களில் ஒன்று!!!சுஜாதா சாரின் நாவலென்பது தெரிந்ததே... டிம்பிள் கபாடியா, "கப்பர் சிங்" அம்ஜத் கான், லிசி பிரியதர்ஷன் என்று புதிய பட்டாளத்தோடு நம்மூரு ஆச்சி மனோரமா, ஜனகராஜ் மற்றும் சுகிர்தராஜாவாக இவரது ஆஸ்தான வில்லன் சத்யராஜ்...  "ராக்கெட்ட தேடிகிட்டு மூக்குக்கு அடிலேயே வந்துட்டானா??", "சொக்கலால் பீடி குடிச்சிட்டு இருந்த நீ மதகுருவா?? நல்ல ட்ரைனிங் டா உனக்கு.. மொட்ட" என்று படம் முழுக்க  அதகளம் பண்ணி இருப்பார்... " Rocket Launching, Computer Science, Interrogation, ஒட்டக Chasing,  அம்பிகா நெற்றி பொட்டில் புல்லெட், என்று Making ல் மிரட்டி எடுத்திருப்பார்கள். தன் பங்குக்கு கமலும் "பாம்புக்கடி வைத்தியம்", எனக்கு புழுக்கமா இருந்தா சட்டையை கழட்டி வச்சிட்டு சுத்துவேன்.. உன்னால முடியுமா? என்று ஹீரோயினை கேட்பது", "என் ஜோடி மஞ்சக்குருவியில் தாவணியை லாவுவது", ராகவேந்தரை விசாரிக்கும் போது.. "இந்த நகத்தை கட்டிங் பிளேயர் வச்சு வெடுக்குனு புடுங்குனா உள்ள செவப்பா கொழகொழன்னு இருக்கும்.. அதுல உப்பு மொளகாப்பொடி எல்லாம் வச்சா" என்று மிரட்டுவது என்று தன்னை படம் முழுக்க நிறுத்திக்கொண்டிருப்பார்... மிக முக்கியமாக ஜனகராஜ்... அவரது துபாஷி வேலை... " யோ" "இன்னும் கொஞ்சம் கிட்ட வாய்யா".... Hilarious!!! வெளுத்து வாங்கிருப்பாரு... யாராச்சும் கவனிச்சிருக்கீங்களா சாமி??? சலாமியா நாட்டு பஸ்ஸுல ஜனகராஜ் பேசுற டயலாக் "குஷுபூ கூப்புடு" (அப்படின்னா அதோ பார் ஒட்டகம்).. பஞ்சு சார் காதுல விழுந்து இருக்கும் போல.. ரெண்டே வருஷத்துல நெஜமாவே கூட்டிட்டு வந்துட்டாரு குஷ்பூவை..

Trend Setter : முதன் முதலாக தயாரிப்பு செலவை ஒரு கோடி தாண்டி எடுத்த படம்.. இன்றைய சங்கர் படங்களின் அன்றைய Trend Setter

""ஹேய் இரு இரு... நீ என்ன சொன்ன?? பிறமொழிப் படங்கள்ல இருந்து தமிழுக்கு கொண்டாந்தாருன்னு சொன்ன.. ஆனா ஒரு படம் கூட அப்படி வரலயே""ன்னு தானே யோசிக்கிறீங்க.. Here we goooo!!!


ஹிந்தியில் அமிதாப் நடித்து ஹிட்டான "குத்-தார்" படத்தை ரஜினிக்காக தமிழுக்கு கொண்டுவந்திருப்பார் நம்ம இயக்குனர்.. சஞ்சீவ் குமார் கதாபாத்திரத்தில் நடிகர் திலகம், அமிதாப் ரோல் ரஜினிக்கு...  "காலேஜ் ஆண்டு விழாவுக்கு கோட் சூட்டில் தடுக்கி விழுந்து நடந்து, ராமு... பிரதர்ர் இன்விஸ்டேஷன் என்று ஆங்கிலத்தில் உதார் விட்டு, புள்ளத்தாச்சி ஆக எவ்ளோ நாள் ஆகும் வாப்பா என்று நாகேஷிடம் அப்பாவியாக கேட்டு, தம்பிக்காக பூர்ணம் விஸ்வநாதனிடம் மன்றாடி, சிவாஜியை அண்ணன் என்று தெரிந்து நெகிழ்ந்து என்று  ரஜினியும்,  ரஜினி தான் தனது தம்பி என்று தெரிந்ததும் கோர்ட்டில் அவருக்காக போராடுவதுமாய் நடிப்பில் சிவாஜியும் ஸ்கோர் அடித்திருப்பார்கள்... "தங்கச்சிய நாய் கட்சிட்சு பா" என்று ஜனகராஜுக்கு பேர் சொல்லும் காமெடி.. வழக்கம்போல இளையராஜா இவருக்கென்றே வாரிக்கொடுத்திருப்பர் பாடல்களை...

Trend Setter : இந்தப் படம் "பணக்காரன்", "மன்னன்", "உழைப்பாளி" என்று பிற்காலத்தில் பி. வாசு படங்களில் காமெடி, செண்டிமெண்ட் என்று கலந்த மசாலா படங்கள் வருகைக்கு ஒரு Trend Setter ... நம்ம இயக்குனருக்கு கூட "பாட்டி சொல்லை தட்டாதே" படத்தில் வரும் கார் கட்சிகளுக்கு ஒரு முன்மாதிரி.

இந்த வெற்றியைத் தொடர்ந்து நிறைய படங்கள் தமிழுக்கு இறக்குமதி செய்தார்... சசி கபூர் நடித்த "பசேரா" தமிழில் "கண்மணியே பேசு" ஆனது, அசோக் குமார் நடித்த "குப்சூரத்" தமிழில் நடிகர் திலகம் நடிப்பில் "லட்சுமி வந்தாச்சு" ஆனது, அமிதாப்பின் "மர்த்" ரஜினி அம்பிகா நடிப்பில் "மாவீரன்" ஆனது.. இந்த வரிசையில் சில வெள்ளி விழாப் படங்கள் உங்கள் பார்வைக்கு...


இந்தியில் அமிதாப் நடித்த "காலியா" திரைப்படத்தின் தமிழ் இறக்குமதி... படத்துக்கு இசை விஜய டி  ராஜேந்தர்... "குத்துவிளக்காக குலமகளாக", "வச்ச குறி தப்பாது" என்று 87ல் வார வாரம் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியை ஆக்கிரமித்த பாடல்கள் என்று கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் விஜயகாந்துக்கு கிடைத்த வெள்ளி விழா திரைப்படம்...

சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் சக்கை போடு போட்ட "அத்தகு யமுடு அம்மாயிக்கி மொகுடு" படத்தை அவரே தமிழில் தயாரித்தார்.. ரஜினி, அமலா, இளையராஜா, பஞ்சு அருணாச்சலம் என்று பலமான கூட்டணியோடு தமிழில் தாறுமாறு ஹிட் அடித்த படம்.. "தண்ணியை போட்டுவிட்டு "என் மூக்கு மேல கைய வெச்சுட்டாடா" என்று ரஜினி செய்யும் காமெடி கலாட்டா அப்போது ரொம்ப பாப்புலர்... தயாரிப்பாளர் என்பதால் சிரஞ்சீவிக்கு ஒரு தனி சண்டைக்காட்சி உண்டு...


கொசுறு: படத்தின் Title Card ல் தயாரிப்பு "அரவிந்தன்" என்று வரும்.. அது எப்புடி "அரவிந்தன்"னு போடலாம்?? "அல்லு அரவிந்த்" அப்டின்னு ஏன் போடலைன்னு அன்று யாருமே பப்ளிசிட்டி கொடுக்காமலேயே ஹிட் அடித்த படம்!!

கன்னடத்தில் ஹிட் அடித்ததேவா” படத்தின் தமிழாக்கம்... முதலில் ரஜினியை வைத்து "காலம் மாறிப் போச்சு" என்று ஒரு கதை பண்ணியிருக்கிறார்கள்.. பிறகு இந்தக் கதை "தர்மதுரை"யாக வெளிவந்தது... நம்ம இயக்குனர் இறுதியாக இயக்கிய படம்... ரஜினி, பஞ்சு, இளையராஜா கூட்டணி மீண்டும் இணைந்த படம், "ஆணென்ன பெண்ணென்ன", "மாசி மாசம் ஆளான", "சந்தைக்கு வந்த கிளி" என்று அனைத்து பாடல்களும் காலத்தை கடந்த வெற்றி பாடல்கள்.


கட்டுரையின் நீளம் கருதி இவரது பாட்டி சொல்லைத் தட்டாதே உட்பட பல படங்களை விரிவாக பேச இயலவில்லை...

சரிப்பா.. இவ்வளவும் சொல்லியாச்சு.. இனியும் பொத்தி வைக்கப் போறதில்ல... இந்த வெற்றி படங்கள் அனைத்தையும் இயக்கிவர் மறைந்த இயக்குனர் திரு.ராஜசேகர்!!





இந்தப் பெயரில் நிறைய குழப்பம் இருக்கிறது... பாலைவனச்சோலை இயக்கிய "ராபர்ட் - ராஜசேகரா?? இதுதாண்டா போலீஸ் ராஜசேகரா?? என்று.... இவர் அவர்களில் எவரும் அல்ல... இவரது பல படங்களின் பெயர்களைக் கேட்டதும், 80களில் ரஜினி கமலை வைத்து ஏராளமான வெற்றி படங்களை கொடுத்து வந்த எஸ்.பி.முத்துராமன் இயக்கியவையா என்றே எண்ணத் தோன்றும்...

நான் முன்பே சொன்னது போல வெறும் 7 ஆண்டுகளுக்குள் மொழிகளைக் கடந்து பல சூப்பர் ஹீரோக்களின் படங்களை இயக்கியவர் ராஜசேகர் அவர்கள்.. தர்மதுரை படத்தின் 100வது நாள் விழா அன்று ஒரு விபத்தில் இறந்துவிட்டார்...

இன்று இருந்திருந்தால் நிச்சயம் கே.எஸ்.ரவிக்குமார், பி. வாசு, சங்கர் மூன்று பேருக்கும் பெரிய போட்டியாளராக இருந்திருப்பர் என்பதில் இருவேறு கருத்திருக்க முடியாது...

அடித்துப் பெய்கின்ற பெருமழைக்கு நடுவே எழுந்து மறைகிற மின்னல் கீற்று போன்றது இயக்குனர் ராஜசேகரின் திரைப் பங்களிப்பு.. அதைக் காலம் மட்டுமல்ல, தமிழ் சினிமாவும், மற்ற ஊடகங்களும் கூட இன்னும் சற்று அழுத்தமாகவே பதிவு செய்ய வேண்டியிருக்கிறது!! 

2 comments:

  1. மிகப் பிரமாதமான கட்டுரை !

    ReplyDelete
  2. Exxcxxxxxxxxxxxxxcellent... Searching for words to appreciate you...

    ReplyDelete