Monday, November 6, 2017

மீண்டும் ஒரு Concert கதை!!!


இரண்டு மாதத்திற்கு முன்பே என் அலுவலக நண்பர்கள், "தெரியுமா, நம்ம ஊர்ல முதன் முறையாக இளையராஜா கச்சேரி.. நான் 1600 ரூ டிக்கெட் புக் பண்ணிட்டேன்.. சீக்கிரம் நீயும் புக் பண்ணுய்யா" என்று சொன்ன போது கூட நான் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை..
ஆனால் ஊழ் என்பது வலியது அல்லவா... அந்த நாள் வந்தது... கடைசி நேரத்தில் அது என்னை நிகழ்ச்சி அரங்கு நோக்கி இட்டுச்சென்றது....

 
இந்த வலைப்பூவை நான் தொடங்கி முதன் முதலாக எழுத ஆரம்பித்தது கூட 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு இளையராஜா இசை நிகழ்ச்சியை வைத்து தான்... அப்படியிருக்க நானே நேரில் செல்லும் (காசு கொடுத்து டிக்கெட் வாங்கி... இதையும் சொல்லிரனும்ல) முதல் இளையராஜா கச்சேரி என்பதால் எனது இந்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..

விரிவாக பார்ப்பதற்கு முன்பு... சில Plus மற்றும் Minus கள் :

முதலில் Plus:

  • இளையராஜா என்றதும் நினைவுக்கு சட்டென்று வருவது Orchestration தான்... மற்ற இசை நிகழ்ச்சிகளில் இருந்து பளிச்சென வேறுபடுத்தி காட்டும் இந்த விஷயத்தில் நேற்று கூடுதல் போனசாக ஹங்கேரியில் இருந்து வந்த Symphony இசைக்குழுவினர் String Section (Violin / Viola / Cello / Double Bass) வாசித்தனர்..
  • ராஜாவின் ஆஸ்தான வித்வான்களான சதானந்தம் (Guitar), அருண்மொழி (Flute), பிரசாத் (Tabla), சுந்தர் (Percussion) என்று அனைவரும் வந்திருந்ததால் நேற்று இரண்டு Conductor கள்... ஹங்கேரி இசைக்குழுவுக்கு  John Scot மற்றும் ராஜாவின் இசைக்கலைஞர்களுக்கு பிரபாகர்..

  • தீவிர பயிற்சிக்கு பிறகு வந்திருந்ததால் ஒவ்வொரு பாடலின் இசையிலும் அவ்வளவு துல்லியம்.

  • இளையராஜா முதன் முதலாக தமிழ்ப்பாடல்களே இல்லாது நிகழ்த்திய இசைநிகழ்ச்சி இது தான்... 32 பாடல்களில் ஒன்றே ஒன்று தான் தமிழ்... 3 இந்தி, 28 தெலுங்குப் பாடல்கள்... உள்ளூர் ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஷயம் இது..

  • பாடல்கள் தேர்வு... தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வந்த பாடல்களாகவே தேர்வு செய்திருந்ததால் தமிழ் ரசிகர்களுக்கும் ரொம்ப போர் அடிக்காமல் ரசிக்க முடிந்தது...

  • மிக முக்கியமாக ரசிகர்களின் ஆதரவு.. அதீதமாக விசிலடித்தது ரகளை செய்யாமலும், இந்த பாட்டு பாடு அந்த பாட்டு பாடு என்று சலம்பாமலும் ரசித்தது நிகழ்ச்சிக்கு பெரிய சப்போர்ட்

அடுத்து மைனஸ்:

  • யேசுதாஸ், எஸ்.பி.பி, எஸ்.ஜானகி, சைலஜா, பவதாரிணி என்று ஒரு பெரிய இசைப்பாட்டாளமே................. டோட்டலாக மிஸ்ஸிங்...

  • எஸ்.பி.பி இல்லாமல் நான் பார்க்கும் முதல் இளையராஜா கச்சேரி இதுதான்... ராஜா சார் "பாலு" சேர்க்காமல் " ராயல்  டீ" குடிக்க ஆரம்பித்த பிறகு நடக்கும் முதல் நிகழ்ச்சியும் இது தான்..

  • தெலுங்கில் இளையராஜா இசையமைத்த நூற்றி சொச்சம் படங்களில் 70% பாடல்கள் பாலு - ஜானகி தான், அதற்கு அடுத்து யேசுதாஸ் - சித்ரா... இதில் முதல் மூவர் மிஸ்ஸிங். அதனால் பொன் வைக்கும் இடத்தில பூவைக்கும் வகையில் பாலுவாக  மனோ, யேசுதாஸாக விஜய் பிரகாஷ், ஜானகியாக சாதனா சர்கம்... அவ்வளவு தான் மற்ற எல்லாம் சூப்பர் சிங்கர் பாடகர் பாடகியர் தான்.. "பொன்னான இசை" வைக்கும் இடம் எங்கள் காதுகள் என்பதால் தான் பூவைத்த முயற்சி ரசிக்கும்படி இல்லை...
 
  • வழக்கமாக யாராவது தொகுப்பாளர்கள் இருப்பார்கள்...பார்த்திபன், பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், கோபிநாத் என்று... இதில் அப்படி யாரும் இல்லை... ஜெட் வேகத்தில் வரிசையாக பாடல்கள் வந்தன..  (என்னைப் பொறுத்த வரை ராஜாவின் இசைநிகழ்ச்சிக்கு நியாயம் சேர்க்கும் தகுதி உடைய ஒரே தொகுப்பாளர் கங்கை அமரன் மட்டும் தான்... மற்றவர்கள் ஒன்று பம்முவார்கள்.. அல்லது விஷயத்தை வாங்கி தர முயற்சிக்க மாட்டார்கள்...) ராஜா சார் அடித்த ஜோக்குகள் கூட Template மாதிரி இதையும் Rehearsal பண்ணிட்டு வந்திருப்பாரோ என்று எண்ணத் தோன்றியது...

சரி இனி நிகழ்ச்சிக்குள்ள போவோம்

7 மணிக்கு ஆரம்பம் என்று போட்டிருந்தார்கள்.. எப்படியும் சாமி லேட்டா தான் வரும் என்று தெரிந்து 6:45க்கு போனோம்.. வழக்கம் போல அவர் ஒரு கடவுள், வேட்டி கட்டிய கலைவாணி, சங்கீதம் தான் அவரு.. அவரு தான் சங்கீதம் ரேஞ்சில் உள்ளூர் தொகுப்பாளர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்..

7:10க்கு விலாஸ் என்கிற ஓவியர் இளையராஜாவின் உருவத்தை திரையில் வரைந்தார்...

7:40க்கு இதோ வந்துவிட்டார் என்று 10 முதல் 1 வரை எண்ணினார் தொகுப்பாளர்.. ஒன்றுமே நடக்கவில்லை...

பிறகு ஒருவழியாக 7:50க்கு "குரு பிரம்மா குரு விஷ்ணு" என்று கோரஸ் ஒலிக்க, பலத்த கரவொலிக்கிடையே கைகளை கூப்பியபடி இளையராஜா உள்ளே வந்தார்... என்ன நினைத்தாரோ தெரியாது "குரு பிரம்மா குரு விஷ்ணு" வை மீண்டும் பாடவைத்தார்... பாடல்கள் ஆரம்பம்….
 

1)   ஜனனி ஜனனி - ராஜாவின் ராசியான முதல் பாட்டு... 13 வருடங்களாக எனது மொபைலின் ஹலோ டியூன்... 75 வயதிலும் அதன் அழகு குறையாமல் அருமையாகப் பாடினார் ராஜா சார்.. இந்த நிகழ்ச்சியின் ஒரே தமிழ்ப் பாடல் இதுதான்.

2)   ஓம் சிவோஹம் – Vijay Prakash Entry. படத்திலும் இந்தப் பாடல் அவரே பாடியது என்பதால், he performed it to the core.

 இந்த இரண்டு வழிபாட்டுப் பாடல்கள் முடிந்த பிறகு ஹங்கேரி இசைக்குழுவையும் ஜான் ஸ்காட்டையும் அறிமுகப் படுத்தினார் இளையராஜா.

இதற்கடுத்து வரும் படங்களின் மற்றும் பாடல்களின் பெயர்களை படிப்பவர்களின் வசதிக்காக தமிழ்ப் பாடல்களையும் சேர்த்துப் பதிகிறேன்

3)   ஜெகதாநந்த காரகா (ஸ்ரீ ராமராஜ்யம்) - எஸ்.பி.பி யின் கம்பீரக் குரல் மற்றும் ஸ்ரேயா கோஷலின் மயக்கும் குரல்களில் அமைந்த இந்தப் பாடலை நேற்று பாடியவர்கள் மனோ மற்றும் சாதனா சர்கம்.

4)   நின்னுக்கோரி வர்ணம் (கர்ஷனா - தமிழில் அக்னி நட்சத்திரம்) – K.S.Chitra Entry. உள்ளே வரும்போதே பயங்கர கைதட்டல்கள்...நேற்றைய நிகழ்ச்சியில் பெரிய பலம் இவர்தான்... என்ன பாடப் போகிறார் என்ற ஆர்வத்தில் இருந்த ரசிகர்களுக்கு Electric Guitar ன் தொடக்கம் கேட்டதுமே கைத்தட்டலில் அரங்கம் அதிர்ந்து அடங்கியது... அடி பின்னி எடுத்தார்... She made it just like that!! Awesome Rendition!!


5)   கீரவாணி - (அன்வேஷனா தமிழில் "பாடும் பறவைகள்"). எஸ்.பி.பி - ஜானகி குரல்களில் அமைந்த இந்த அருமையான பாடலை நேற்று பாடியவர் கார்த்திக்… உடன் சாதனா. தெலுங்கில் சில பாடல்கள் உண்டு... எஸ்.பி.பியைத் தவிர வேறு யார் பாடினாலும் நியாயம் கற்பிக்க முடியாதவை.. அதில் இதுவும் ஒன்று. ஜானி படத்தில் வரும் "காற்றில் எந்தன் கீதம்" பாடலைப் போல ஒரு பாடல் வேண்டும் என்று இயக்குனர் வம்ஸி கேட்டதற்காக அதே ராகத்தில் இசையமைத்து தந்ததாக ஒரு தகவலை இளையராஜா சொன்னார்.. இரண்டு பாடல்களையும் இரண்டு இரண்டு வரிகள் ஹம் செய்து காட்டினார்.
 

6)   சிரிமல்லிப் பூவா - (பதஹாரேல்ல வயசு - தமிழில் 16 வயதினிலே படத்தில் வரும் செந்தூரப்பூவே ). இளையராஜாவின் கோரஸ் பாடகிகளில் ஒருவர் பாடினார்.. இவர் யாரெனத் தெரியவில்லை. கிட்டத்தட்ட ஏழெட்டுப் பாடல்கள் நேற்று இவரைத் தான் பாட வைத்தார்கள்.

 
7)   சுந்தரமோ சுமதுரமோ (அமாவாஸ்யா சந்துருடு, தமிழின் Evergreen Hit "அந்திமழை பொழிகிறது") - பாலு - ஜானகி ஜோடியின் மற்றுமொரு Classic gone for a toss. சித்ரா அருமையாகப் பாடினார்.. விஜய பிரகாஷ் தான் பாவம் அதீத கமகம் எல்லாம் போட்டு பாடினார். (IMO he couldn’t make it). விஜய் ஒரு இடத்தில் தவறு செய்த்துவிட அதை மீண்டும் ரிப்பீட்டே மோடில் பாடவைத்தார் ராஜா
 

8)   சந்தியா ராகபு - இந்துருடு சந்துருடு (தமிழில் "இந்திரன் சந்திரன்" படத்தில் வரும் "காதல் ராகமும்"). இளையராஜாவின் தனித்துவமான Rhythm Pattern ல், Inerlude களில் அற்புதமான Brass அமைந்த பாடல். Karthik made a very good attempt with this song. Truly his voice has some magic. நல்ல response.


9)   பலப்பம் பட்டி பாமா (வெங்கடேஷ் நடித்த பொப்பிலி ராஜா படப் பாடல்) - ஒரிஜினலாக எஸ்.பி.பி - சித்ரா பாடிய பாடல்.. "நேற்றைய எஸ்.பி.பி" மனோவுடன் சித்ரா பாடினார். இதுவரை வரிசையாக கார்த்திக், பிரபு, கமல் என்று தமிழ் ஹீரோக்களின் பாடல்களே வரிசையாக வந்ததால் தெலுங்கு கதாநாயகர்களின் பாடல்களுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.. இந்த பாடலின் துள்ளலான Prelude தொடங்கியதுமே மீண்டும் ஒரு பலத்த கைதட்டல்கள். A well-received song from Mano & Chitra. And both sang this song very well.

10) மாட்டே மந்த்ரமு - சீதகோக்க சிலகா (தமிழில் "அலைகள் ஓய்வதில்லை" படத்தில் வரும் "காதல் ஓவியம்"). தெலுங்கில் எஸ்.பி.பி பாடிய பாடலை தமிழ் மூலத்தில் பாடிய இளையராஜாவே பாடியது தமிழ் Version கேட்டிராத தெலுங்கு ரசிகர்களுக்கு இனிய Surprise. தெலுங்கு வரிகளை பாடும் போது நடுவில் Miss ஆனதால், நிறுத்தி விட்டு மீண்டும் பாடினார் ராஜா.. செம்ம Claps.


11) ஏ ஜிந்தகி - சத்மா (தம்பிக்கு எந்த ஊரு படத்தில் வரும் "என் வாழ்விலே வரும் அன்பே வா"). இந்தி ரசிகர்களுக்கான சில பாடல்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாடலை நேற்று பாடிய கார்த்திக், பாடி முடித்து விட்டு இவரது இசையில் பாட என்ன புண்ணியம் செய்தேனோ என்று ஏதோ சொன்னார்.. Off late these things have become a cliché in Ilaiyaraaja’s Concerts. (புண்ணியம் செய்தனமே மனமே... அபிராமி அபிராமி)


12) ஹலோ குரு - (நாகார்ஜுனா நடித்த நிர்ணயம் படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடல்). SPB சொல்லி சொல்லி அடித்த இளையராஜாவின் நேரடி தெலுங்கு ஹிட் பாடல்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாடல் முழுக்க அவரது குரல் செய்யும் சேஷ்டைகள் செம்ம cute ஆக இருக்கும். One of the songs which proved that SPB has been badly missed yesterday. மனோ பாடினார்.. அவ்வளவு தான் சொல்லணும்.

13) அப்பாநீ தீயனி தெப்பா - (ஜெகதேக வீருடு அதிலோக சுந்தரி - தமிழில் "காதல் தேவதை" படத்தில் இடம்பெற்ற “சம்மதம் தந்திட்டேன் நம்பு”). பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், நாகார்ஜுனா பாடல்கள் வந்தாயிற்று இன்னும் சிரஞ்சீவி பாடல் வரவில்லையே என்று எதிர்பார்த்த ரசிகர் பட்டாளம், இந்த பாடலில் தொடக்கமான கோரஸ் கேட்ட மாத்திரத்திலேயே ஆர்ப்பரிக்க தொடங்கியது... ஒரு வினாடி நிறுத்தி விட்டு கவனிங்கப்பா என்பது போல சைகை காட்டிவிட்டு ராஜா மீண்டும் தொடங்கி வைத்தார்.. அதே நேரம் கேமரா முன்வரிசை நோக்கி திரும்ப, அங்கு குடும்பத்துடன் உட்கார்ந்து ரசித்துக்கொண்டிருந்த சிரஞ்சீவிக்கு முகமெல்லாம் புன்னகை... மீண்டும் கைதட்டல்கள். அடுத்து கேமரா நடிகை மாஞ்சு லக்ஷ்மியை நோக்கி நகர மீண்டும் கரவொலி.. நேற்றைய நிகழ்ச்சியில் அதிக கைதட்டல் வாங்கிய பாடல் இது... மனோவும் சித்ராவும் நன்றாகவே பாடினார்கள்.

14) கோரஸில் இருந்த சூப்பர் சிங்கர் பூஜா Hissing உடன் தொடங்கிய பாடல்.. சரி அவர் பாட போறாரோ என்று பார்த்தால் கார்த்திக் வந்தார்... மற்றொரு அற்புதமான SPB பாடல். ஏகாந்த வேளா - (அன்வேஷனா தமிழில் "பாடும் பறவைகள்" படத்தில் இடம்பெற்ற "ஏகாந்த வேளை")

15) ஜல்லன்ட்டா கவ்விந்தா - (கீதாஞ்சலி - தமிழில் "இதயத்தை திருடாதே" படத்தில் வரும் "ஆத்தாடி அம்மாடி தேன்மொட்டு").. சித்ராவின் சொந்தப பாட்டு என்பதால் இயல்பாக இருந்தது. பாடல் முடிந்த உடன் மனோவுடன் அருண்மொழி மேடைக்கு வந்தார்.. சரி நம்ம அபிமான பாடகர் தான் பாடப்போறாரோன்னு ஒரு நிமிஷம் குஜால் ஆயிட்டேன். அவர் பாட வரவில்லை.. அந்தப் பாடலில் இடம்பெற்ற 2வது Interlude ல் வரும் புல்லாங்குழல் பற்றிய நிகழ்ச்சியை சொன்னார்.. இளையராஜா அதற்கான குறிப்புகளை எழுதாமல் "நான் ஆர்மோனியத்தில் என்ன வாசிக்கிறேனோ அதை அப்படியே குழல்ல வாசி" என்று சொல்லியதை தான் வாசித்தேன் என்றார். உடனே நேரடி உதாரணமாக ராஜா ஆர்மோனியம் வாசிக்க அதை அருண்மொழி புல்லாங்குழலில் வாசித்து காண்பித்தார்.. These are interesting things which differentiates Raaja’s Concerts from others’.

16) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓ ப்ரியா ப்ரியா. (அறிமுகம் தேவையில்லை). தமிழில் மனோ சித்ரா பாடி இருப்பதால் நேற்று தெலுங்கிலும் இதே ஜோடி பாடியது சூப்பர். பாடல் முடிந்த பிறகு அதில் 2nd Interlude ல் வரும் BGM ஐ முதலில் Male Chorus , பிறகு Female Chorus , அதன் பிறகு Strings என்று தனித்தனியாய் வாசித்துக் காட்டி, பிறகு அனைத்தையும் ஒன்று சேர்த்து இசைத்து காண்பித்து வாய் பிளக்க வைத்தது Typical Raaja Magic. Hungary Orchestra அருமையாக வாசித்தார்கள்

17) பிரேமா எந்த மதுரம் - (அபிநந்தனா). இளையராஜா - எஸ்.பி.பாலுவின் நேரடி தெலுங்கு ஹிட் பாடல்களில் மற்றொன்று.. சோகச்சுவையை அதீத ஏற்ற இறக்கங்களுடன் வெளிப்படுத்தும் பாடல்.. இதே பாடலை இளையராஜாவின் அமெரிக்க கச்சேரியில் பாலு பாடியதை கேட்டுவிட்டு நேற்று மனோ பாடியதையும் கேட்டவர்கள் நிச்சயம் ராஜா சாரிடம் சொல்வார்கள் " "பாலு" இல்லாம "ராயல் டீ " குடிச்சுதான் ஆகணுமா??" என்று. பாடல் முடிந்த உடன் அதை எழுதிய கவிஞர் ஆத்ரேயாவைப் பற்றி குறிப்பிட்டார் ராஜா.

18) மாட்டராணி மௌனமிதி - மகரிஷி (தமிழில் செண்பகமே செண்பகமே படத்தில் வரும் "மஞ்சப்பொடி தேய்க்கையிலே" பாட்டு தான்). பாடியவர்கள் மனோ மற்றும் சாதனா. பாடலின் நடுவே Symbols கீழே விழுந்தது மாதிரி தனால் என்று ஒரு சத்தம் வந்தது..

19) மௌன மேலநோயி - தமிழில் "சலங்கை ஒலி" படத்தில் வரும் "மௌனமான நேரம்".. இதை கார்த்திக்கை பாட வைத்திருந்தால் கூட அனுபவித்து பாடி இருப்பார்.. “மௌன மேலநோயி” என்று சாதனா சர்க்கம் ஆரம்பித்ததே "பாப்பா துக்கத்தை கூட எவ்ளோ தூக்கலா சொல்லுது பாத்தியா" ரேஞ்சில் இருக்க அய்யயோ விஜய் என்ன பண்ண போறாரோன்னு நமக்கு கலக்கியது.. அவரு அதுக்கு மேல..

 
20) கலையா நிஜமா – “கூலி நம்பர் 1 படத்தில் ராஜா சார் சுசீலா அம்மாவுடன் பாடிய நேரடி தெலுங்கு பாடல். ராஜா சார் பாட ஆரம்பித்ததுமே பலமான கைதட்டல்கள்… என்ன ஒண்ணு.. சுசீலா அம்மாவுக்கு பதிலா சாதனா சர்க்கம்.. பாவம் மொத வரிசையில உக்காந்து சுசீலாம்மா நொந்து போயிருப்பார்.

21) மணி 10:00 ஆகியிருக்க கூட்டம் மெல்ல கலையத்தொடங்கி இருந்தது. கூட்டத்தின் Pulse பிடிக்க ஒரு குத்துப்பாட்டு பாடப்பட்டது.. அந்தப் பாடலை நான் இதற்கு முன்பு கேட்டதில்லை.. அதனால் பெயரை தெரிவிக்க இயலவில்லை.

22) பிரதி தினம் நீ தர்ஷனம் - "அனுமானஸ்பதம்", தமிழில் சூப்பர் ஹிட் பாடலான "மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்”.. 1986ல் வெளிவந்த இந்த பாடலை Re-Master செய்து Increased Tempo வில் மிருதங்கம் எல்லாம் வைத்து Fusion பாணியில் 2007ல் தெலுங்கில் வெளியிட்டார் இளையராஜா. நேற்று தமிழ்ப் பாடலின் பின்னணி இசையோடு தெலுங்கு வரிகளை பாடவைத்தது புதிய யுக்தி. தெலுங்கு ரசிகர்களுக்கு எவ்வளவு தூரம் புரிந்திருக்கும் என்று தெரியவில்லை. அருண்மொழியின் புல்லாங்குழல் இசைக்காகவே எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்.

23) வெண்ணெல்லோ கோதாரி அந்தம் - "சித்தாரா". தமிழில் “நிழல்கள்” படத்தில் இடம்பெற்ற "தூரத்தில் நான் கண்ட உன் முகம்" பாடல். கடினமான சரணத்தை உடைய எஸ்.ஜானகியின் இந்தப் பாடலை சுர்முகி நேற்று அனுபவித்து பாடினார்.

24) மீண்டும் ஒரு துள்ளலான பாட்டு.. சிரஞ்சீவி நடித்த "சேலஞ்ச்" படத்தில் இருந்து "இந்து வதன ".. மனோவுடன் இனைந்து பாடியவர் சூப்பர் சிங்கர் பூஜா.

25) ஜானே தோணா - "சீனி கம்". தமிழின் "விழியிலே மணி விழியிலே" பாடல். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது இந்திப் பாடல். கார்த்திக் பாடிக்கொண்டிருக்கும் பொழுது உய்ய்ய்ய்யங் என்று மைக்கில் சத்தம் வந்து பாடல் தடைபட்டது.. ஏற்கனவே ரெண்டு மூணு முறை இதேபோல சப்தம் வந்ததால் ராஜா கொஞ்சம் அப்செட் ஆகிவிட்டார்..

26) என்னோ ராத்ரிலு ஒஸ்தாயி - "தர்ம க்ஷேத்ரம்". ராஜாவின் எல்லா கச்சேரிகளிலும் இடம்பெறும் “கில்மா” பாடலான "மாசி மாசம் ஆளான பொண்ணு". "பொன்னெழில் பூத்தது புதுவானில்" என்று எழுதிய பஞ்சு அருணாச்சலத்தை வைத்துக்கொண்டு இப்படி ஒரு குப்பையை ராஜா உருவாக்கியிருக்க வேண்டாம்.. தெலுங்கில் நேற்று இந்தப் பாடலை ராஜாவே பாடினார்.. பயங்கர கைதட்டல்கள்...

27) அடுத்து வந்தது இளையராஜா - சுசீலா ஜோடி உருவாக்கிய பாடல்களிலேயே ஆகச்சிறந்ததாக நான் கருதும் "வடபத்ர சாயிகி" - "ஸ்வாதி முத்யம்".. அதாங்க சிப்பிக்குள் முத்து படத்தில் இடம்பெற்ற "வரம் தந்த சாமிக்கு"... அனுபவித்து பாடி இருப்பார் சுசீலாம்மா.. நேற்று யாரோ ஒரு புதிய பாடகி பாடினார்.. பாடல் முடிந்த பிறகு இயக்குனர் கே.விஸ்வநாத்தின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார் ராஜா.

அடுத்த இரண்டு பாடல்களும் ஈவிரக்கமற்ற கொலைகள்

28) லலித ப்ரியகமலம் - "ருத்ர வீணா", தமிழில் உன்னால் முடியும் தம்பி படத்தில் வரும் "இதழில் கதை எழுதும் நேரம்".. தமிழில் எஸ்.பி.பாலு பாடிய இந்த பாடலை தெலுங்கில் பாடியவர் டாக்டர் கே.ஜெ.யேசுதாஸ். தமிழிலேயே அத்தனை இனிமையாக இருக்கும் இந்தப் பாடலின் தெலுங்கு வடிவத்தை முதன்முறை கேட்ட பொழுது அசந்து போனேன். லலிதா ராகத்தில் கர்நாடக சங்கதிகள் அதிகம் அமைந்த பாடல். யேசுதாஸ் பாடல்கள் பாடுவது என்று முடிவான பிறகு விஜய் யேசுதாசையோ அல்லது மது பாலகிருஷ்ணனையோ அழைத்திருக்கலாம்.... பாவம் விஜய் பிரகாஷ் இந்தப் பொறுப்பை தூக்கிச் சுமக்க ரொம்பவே சிரமப்பட்டார்.

29) சுர்மாயின் அக்கியோன் மெய்ன் : கவியரசரின் கடைசிப் பாடலான "கண்ணே கலைமானே" பாடலின் இந்தி வடிவம். இதையும் நேற்று பாடியவர் விஜய் பிரகாஷ் தான்.. ஹரிஹரனை வைத்து "மாஞ்சோலை கிளிதானோ" பாடவைக்க முயன்ற ராஜாவின் லேட்டஸ்ட் முயற்சி இது.. அவ்ளோ தான் சொல்லலாம்..

30) வெறும் 3 ஸ்வரங்களை மட்டுமே கொண்ட (ச, ரி, க) ஒரு பாடல் (3 Notes Song). 16.10.2005ல் முதன்முறையாக இளையராஜா சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்திய பொழுது பாடிய அதே பாடல் தான்.. சென்னையில் அந்தப் பாடலைப் பாடியவர் ஸ்ரேயா கோஷல். நேற்று யாரோ ஒரு புதுமுகம் பாடினார்..

இந்தப் பாடல் முடிந்த பிறகு ஹங்கேரி இசைக்குழுவுக்கு அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் கைதட்டினார்கள்.. ராஜா அவரது கண்டக்டர்கள் "ஜான் ஸ்காட்" மற்றும் "பிரபாகர்" ஆகியோரை முன்னால் அழைத்து பாராட்டுகளை பெற்று தந்தார்...

31) நிகழ்ச்சி கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்ட சமயம்.. கடைசி இரண்டு பாடல்களும் துள்ளலான பாடல்களை பாடுவதென்று நினைத்தது நல்ல முடிவு... மீண்டும் "ஜெகதேக வீருடு அதிலோக சுந்தரி" படத்தில் இருந்து "யமஹோ நீ யமா" பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது.. அட நம்மூரு "மதுர மரிக்கொழுந்து வாசம்" பாட்டு தான்... பாட்டு போய்க்கொண்டிருக்கும் போதே பக்கத்தில் இருந்த ஒரு ரசிகர், என்னண்ணே ராமராஜன் பாட்டுக்கெல்லாம் இந்த ஊர்ல இவ்ளோ ரசிகர்கள் இருக்காங்க? என்று ஆச்சர்யப்பட.. அடேய் இங்க இது சிரஞ்சீவி பாட்டுடா என்று விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தேன்.. பாடலை முடிக்கும் முன்பு ஒரு இடத்தில் மனோ தடுமாற, முடிந்த பிறகு "என்ன ஆச்சு அங்கே?" என்று இளையராஜா கேட்டதற்கு "தமிழ் வரிகள்" நினைவுக்கு வந்துடுச்சு.. அதான் மிஸ் ஆயிடிச்சு" என்று சிரித்தபடி சொன்னார் மனோ.. அவருக்கு வேற மொழி வரிகள் தான் நினைவுக்கு வந்துச்சு எனக்கு வேற பாட்டே நினைவுக்கு வந்துச்சு (மானம் இடி இடிக்க மத்தளங்கள் சத்தமிட)... அட விடுங்கப்பா, 90கள்ள வந்த நிறைய இட்லி உப்புமாக்களில் இதுவும் ஒண்ணு.. அவ்ளோதான்!!

32) நிகழ்ச்சியின் இறுதிப் பாடல் "சிவா" (தெலுங்கு) படத்தில் இருந்து "பாட்டனி பாடமுந்தி மேட்டணி ஆட்டா உந்தி"... எஸ்.பி.பி மிமிக்ரி பண்ணுவது, தாளம் தப்பி பாடுவது என்று என்னென்னமோ செய்வார் இந்த பாட்டில்.. இந்தப் பாடலை மனோ பாடி நிறைவு செய்தார்...

கொடுத்த பணத்திற்கு 4 மணி நேர Entertainment முடிந்து கூட்டம் மகிழ்ச்சியோடு கலைந்தது.. கடைசிப் பாடல் பாடுவதற்கு முன்பே இளையராஜா மேடையை விட்டு கிளம்பிவிட்டார்.. நன்றி உரை எல்லாம் மனோ தான் ஆற்ற வேண்டி இருந்தது..

என்னைப் பொறுத்த வரையில் Budapest மற்றும் ராஜாவின் ஆஸ்தான இசைக்கலைஞர்களின் இசையில், நெடிய பயிற்சியுடன் கூடிய துல்லியமான இசை அமைப்புடன் இளையராஜாவின் பாடல்கள் அடங்கிய ஒரு சூப்பர் சிங்கர் பார்த்த உணர்வே மேலோங்கியது.. Absolutely Worthy for my Gallery ticket!!!
 
பின்குறிப்பு : இசைஞானி, ராகதேவன், சங்கீதமே அவர் தான், அவர் இல்லாவிட்டால் தமிழ்நாடு 30 வருடங்களாய் பிழைத்திருக்காது, வேஷ்டி கட்டிய சரஸ்வதி, சித்தர், கடவுள், அவதாரம், ஜென்ம சாபல்யம், பிறவிப்பயன் இப்படி எதையாவது எதிர்பார்த்து வந்து இந்தப் பதிவில் நீங்கள் ஏமார்ந்து போயிருந்தால்.. மன்னிக்கவும் அதற்கு நான் பொறுப்பல்ல.. நான் எதிர்பார்த்துப் போனது ராஜா ராகத்தை.. அதற்கான பதிவு தான் இது... நீங்கள் எதிர்பார்த்து வந்தது ராஜா மோகத்தை என்றால் அதற்கான பதிவு இதல்ல!!!

No comments:

Post a Comment