ஆழி சூழ் உலகு
மாதிரி மகளிர் சூழ் வாழ்க்கை நம்முடையது... இன்று மகளிர் தினம் என்பதால் என் அம்மா தொடங்கி, அக்கா, ஆலம்பனா, என் மகள் ஈறாய் என் வாழ்வில் ஒவ்வொரு பகுதியிலும் நீக்கமற நிறைந்த அனைத்து மகளிற்கும்
இந்தப் பதிவு சமர்ப்பணம்.
இந்த ஒற்றைத்துளை பீப்பீ வாத்தியத்தை வைத்துக்
கொண்டு, வயலின், மிருதங்கம், தம்புரா,
தபலா என்று பக்கவாத்தியங்களோடு மலையாளத்து
தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகளின் பாடல்களில் பக்காவான மேடைக்கச்சேரி செய்கிறார் அவர். அவரது கனத்த சாரீரம்
இந்த குட்டியூண்டு வாத்தியத்தின் உட்புகுந்து வெளிவரும்போது ஷெனாயில் ஆஹிர் பைரவ் கேட்பது
மாதிரி மனதை பிசைந்து எடுக்கிறது.
இதே போன்ற மற்றொரு அபூர்வ இசைக்கருவி
இவர்
மீட்டும்
"காயத்ரி வீணை"!!!!
மகளிர்
தினப் பதிவுன்னதும், யாரைப்
பத்தி எழுதலாம்னு யோசிக்க ஆரம்பிச்சதுமே
ஒளவையார்ல இருந்து அதிதி பாலன் வரை பல
பேர் கண்முன்னால் வந்து வந்து போனாங்க..
இருந்தாலும் நம்மோட வழக்கமான Style பொருந்திப்
போற ஒரு பன்முகத்திறமையாளரைப் பத்தி
எழுதலாம்னு நெனைச்சப்போ
தான் சட்டென்று இவர் முகம் நினைவுக்கு
வந்தது!!! இசைக்கலைஞர்,
இரண்டு மாநில அரசு விருதுகள், டாக்டர் பட்டம், கின்னஸ்
சாதனை என்று 30 வயதுக்குள் ஏராளமான சாதனைகளை செய்து
குவித்த பெண் அவர்!!!
கசூ (Kazoo) - உள்ளங்கை
அளவே இருக்கக் கூடிய சிறிய மௌத்
ஆர்கன் வகையைச் சேர்ந்த ஒரு
அமெரிக்க இசைக்கருவி.
முன்னும் பின்னும் காற்று உட்புகவும் வெளிவரவும்
இருக்கும் துளைகளைத் தவிர மேலே ஒரே
ஒரு துளை மட்டும் கொண்டது..
இந்த ஒற்றைத் துளையைக் கொண்டு
தான் ஒலி அளவையும்
வடிவத்தையும் கையாள வேண்டும்.. கேட்பதற்கு
நம்மூர் "பூவரசம் பீப்பீயை" போல
ஒலியைத் தருகிறது.. இதில் ஒரே ஒரு
மாறுபாடு என்னவென்றால் வெறுமனே இதில் காற்றை
மட்டும் செலுத்தக் கூடாது இதனுள் காற்றோடு
சேர்த்து ஹம்மிங் (Humming) செய்ய வேண்டும்.
ஒருவரின் குரல் தன்மையைப் பொருத்து
இதன் இசை வெளிவரும்.... இத்தனை
நீளமான அறிமுகம் எதற்கு என்று நீங்கள்
யோசிக்கலாம்.
சிறுவயதில்
இருந்தே வீட்டில் இருந்த ஒரு பொம்மை
வீணையில் விளையாடிக் கொண்டிருந்தவருக்கு மாநில
அளவிலான திருச்சூர்
"கலா உத்சவம்" இசைப்போட்டியில் முதற்பரிசு பெற்றதற்காக இசைப்பயிற்றுநர் கும்மணம் சசிகுமார் அவர்கள் தானே உருவாக்கிய
ஒரு "காயத்ரி தம்புரா" வை
இவருக்கு பரிசாக வழங்கினார்.
எலெக்ட்ரானிக்ஸ் துறையில் பணிபுரியும் இவரது
தந்தை முரளிதரன் அதில்
சிறு மாறுதல்களை செய்து ஒரு வீணையை வடிவமைத்து அதை மின்மயமாக்கி தந்து (Electric Veena) இவரது இசைப்பயணத்திற்கு துணை
நின்றார்... வைக்கம் கோயிலில் முதன்முதலில்
இவர் இந்த வீணையை இசைத்த
பொழுது அதற்கு சிறப்பு விருந்தினராக
வந்த இசைமேதை குன்னக்குடி வைத்தியநாதன்,
இதற்கு "காயத்ரி வீணை" என்று
பெயர் சூட்டினார். (வழக்கமான ஏழு தந்திகளை உடைய
வீணைக்கு சரஸ்வதி வீணை என்று
பெயர்). இதில் என்ன சிறப்பென்றால்
இந்த வீணைக்கு ஒரே ஒரு தந்தி
மட்டுமே (ஒற்றைக் கம்பி வீணை).
அந்த ஒரே தந்தியில் கர்நாடக
சங்கீத கீர்த்தனைகள், திரைப்பாடல்கள் என்று அனைத்தையும் இசைத்து
கேட்பவர்களை கட்டிப்போடுகிறார்.
சென்ற ஆண்டு இதில் மற்றொரு
உயரமாக 6 மணி நேரம் கிட்டத்தட்ட
64 பாடல்களை இடைவிடாது இந்த "ஏக தந்த்ரி வீணையில்"
இசைத்து கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்கப்
பட்டிருக்கிறார்... அதுமட்டுமல்ல இந்த காயத்ரி வீணையை
இசைக்கும் கலைஞர் உலகிலேயே இவர்
ஒருவர் மட்டும் தான்.
மலையாள
சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுகிற
ஜெ.சி.டேனியலின் வாழ்க்கை
வரலாறு பிருத்திவிராஜ் நடிப்பில் "செல்லுலாய்டு" என்ற பெயரில் 2013ல் வெளிவந்தது..
1920 களில் நடக்கின்ற கதை என்பதால் அதில்
வரும் ஒரு பாடலைப் பாட
அந்தக் காலப் பாடகிகள் சாயல்
உள்ள குரல் தேவை என்று
இயக்குனர் கமல் சொன்னபோது அந்தப்
படத்தின் இசையமைப்பாளரும் இவரது மானசீக குருவுமான
எம்.ஜெயச்சந்திரனுக்கு சட்டென்று இவரது குரல் நினைவுக்கு
வந்திருக்கிறது...
ஆம் அவர் ஒரு பாடகியும்
கூட.... சிறு வயதுமுதல் பாடல்களைக்
கேட்டே அதனை அச்சுப் பிசகாமல்
பாடிய இவரது திறமையைக் கண்டு
முறையான கர்நாடக இசைப் பயிற்சி
தந்திருக்கின்றனர் இவரது பெற்றோர். "அம்பலப்பள்ளி
துளசி"யிடம் கர்நாடக இசை
கற்று, தொடர்ந்து கோயில் இசைநிகழ்ச்சிகளில் பாடிவந்த
இவரது குரலைக் கேட்ட எம்.ஜெயச்சந்திரனுக்கு ஆழமான பதிவை
அது உண்டு பண்ணவே அதன்
விளைவாக "செல்லுலாய்டு " படத்தில் இவரது முதல் பாடலான
"காட்டே காட்டே" பாடலைப்
பாடும் வாய்ப்பைப் பெற்றார். பழம்பெரும் பாடகியான பி.லீலாவை விழுங்கி தொண்டையில்
வைத்துக் கொண்டு பாடுவது போல
இவர் பாடிய அந்தப் பாடல்
சக்கைப்போடு போடவே முதல் பாடலுக்கே கேரள
அரசின் விருதைப் பெற்றார்.
அதே ஆண்டு "நடன்" படத்தில் இவர் பாடிய "ஒத்தைக்கு
பாடுன்ன பூங்குயிலே" பாடலும்
பெரு வெற்றி பெற்று கேரளா
அரசின் சிறந்த பாடகி விருது
உட்பட ஏராளமான விருதுகளை
வாரிக் குவித்தது.
இந்தப்
பெருமைக்குரிய இசைக்கலைஞர் தான் மலையாள மண்ணின்
சமீபத்திய பிரபலமான டாக்டர் வைக்கம் எம்.விஜயலக்ஷ்மி. (விஜி என்று அன்போடு
அழைக்கிறார்கள் மலையாளிகள்).
"செல்லுலாய்டு"
திரைப்படம் தமிழில் ஜெ.சி.டேனியல் என்ற பெயரில்
மொழிமாற்றம் செய்து வெளியான பொழுது
அதில் "காற்றே காற்றே " என்று
பழனிபாரதியின் வரிகளை பாடியவரும் விஜி
தான்.
வழக்கமான மலையாள
பாடகர்களின் குரலில் இருந்து ஜாஸி கிப்ட்டின் குரல் எப்படி மாறுபட்டு நிற்கிறதோ அதேபோல வழக்கமான
சினிமா பின்னணிப் பாடகிகள் குரலைப் போல அல்லாது
கனமான மாறுபட்ட குரல் அவருடையது. ஒரு
சூழலை, அதன் உணர்வை வாங்கி
வெளிப்படுத்தும் வகையிலான குரல்.. அதிலும் அவரது
ஆழ்ந்த கர்நாடக இசை ஞானமும்
அவரது தனித்திறமையும் சேர்ந்து மிகப் பொடிசான சங்கதிகளையும்,
கமகப் பிரயோகங்களையும் கூட சொடக்கு போடும்
நேரத்தில் பாடலில் கொண்டுவந்துவிடுகின்றன. இந்த தனித்தன்மையை
அடிப்படையாக கொண்டே அவருக்கு அடுத்தடுத்த
திரைப்பட பின்னணி வாய்ப்புகள் வந்தன.
2014ல்
குக்கூ படத்தின் "கோடையில மழை போல"
பாடலின் மூலம் தமிழுக்கு இவரை
அழைத்து வந்தவர் இசையமைப்பாளர் சந்தோஷ்
நாராயணன்.
இவரை தமிழில் சரியாகப் பயன்படுத்தி
பல வெற்றிப்பாடல்களைக் கொடுத்தவர் என்றால் அது டி.இமான் என்று சொல்லலாம்.
"என்னமோ ஏதோ" படத்தில் வரும் "புதிய உலகை புதிய
உலகை படைக்கப் போகிறேன்" பாடல் தான் விஜயலட்சுமி
முதன் முதலாக இமான் இசையில்
பாடிய பாடல். அதே ஆண்டு
"வெள்ளைக்கார துரை" படத்தில் இவர் பாடிய "காக்கா
முட்ட காக்கா முட்ட" பாடல்
இவரது பாணியில் இருந்து முற்றிலும் வேறு
ஒரு பரிமாணத்தை கொண்டு வந்த பாடல்.
2015ம்
ஆண்டு இவரது Career Graph ஐ உச்சத்திற்கு கொண்டு சென்ற ஆண்டு....
யுவன் , இமான் என்று ஒரு
பக்கம் தமிழிலும் இன்னொரு பக்கம்
ஒளசேப்பச்சன் உட்பட மலையாளத்திலும் வரிசையாக
ஹிட் பாடல்களுடன் இவர் பிசியாக இருந்த
ஆண்டு. உதாரணத்திற்கு சில முக்கியமான பாடல்கள்
மட்டும்
யாரு இவன் யாரு இவன் - பாகுபலி. பாகுபலி பிரபாஸ் கனமான சிவலிங்கத்தை தூக்கிக் கொண்டு நடக்கும்
காட்சியில் பின்னணியில் ஒலிக்கும் குரல் இவர் தான். இரண்டாவது பாகம் வரை கதாநாயகனாக
வரப்போகும் ஒரு இளைஞனின் வலிமையை, வீரத்தை தூக்கி நிறுத்தும் காட்சி என்பதால் இவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
தெலுங்கிலும் இவரே பாடி ஒலிப்பதிவு செய்திருக்கிறார்கள். பிறகு கடைசி நேரத்தில் அங்கு
மட்டும் மாற்றியிருக்கிறார்கள்.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய்
பாலகுமாரி
- ரோமியோ
ஜூலியட்.
கதாநாயகி படும் அவஸ்தைகளை நகைச்சுவையாக
விளக்கும் அசரீரி வகைப் பாடல்.
இமான் கூட்டணியில் மற்றுமொரு பிரபல பாடல்.
ஆழி மழை மேகம்
- விழித்திரு. விஜயலட்சுமி பாடிய அருமையான பாடல்களில்
ஒன்று... பாடல் முழுவதும் வருகிற
ஏற்ற இறக்கங்கள் மிக உணர்வுப்பூர்வமானவை.
கைக்கோட்டும் கண்டிட்டில்லா
- ஒரு
வடக்கன்
செல்ஃபி.
மற்றொரு துள்ளலான மலையாள ஹிட் பாடல்.
இப்போது
வரை 50க்கும் மேற்பட்ட பாடல்களைப்
பாடியிருக்கிறார்... வீர சிவாஜி படத்தில்
வரும் "சொப்பன சுந்தரி நான்
தானே" போன்ற துள்ளலான பாடலாகட்டும்,
அம்மணி படத்தில் சஹானாவில் உருக வைக்கிற "மழை
இங்கில்லையே" பாடலாகட்டும், தெறி படத்தின் "என்
ஜீவன்" பாடலின் சம்ஸ்கிருத பகுதி
ஆகட்டும் வெவ்வேறு உணர்வுகளை துல்லியமாக பதிவு செய்திருப்பார்.
300 ராகங்களை ஸ்வரப்படி
பாடுகிறார். கசூ, காயத்ரி
வீணை மட்டுமில்லாது கீ போர்டு, குழல்
என்று இவர் கையில் பட்டவை
எல்லாம் ஸ்வரமாகின்றன. இதற்கிடையில் "ஏழு தேசங்களுக்கும் அகலே"
என்ற மலையாள திரைப்படத்தில் ஒரு
ஆதிவாசியின் மகளாக நடிக்கவும் செய்தார்.
காயத்ரி
வீணையின் ஒற்றைத் தந்தியில் இவர்
நிகழ்த்துகின்ற ஜாலங்களுக்காக லண்டனில் உள்ள World Records University (WRU) இவருக்கு
கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கி
இருக்கிறது.
தமிழ்,
தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நான்கு
மொழிகளில் திரைப்படப் பாடல்கள், வடமொழிக் கீர்த்தனைகள், இந்து மற்றும் கிருத்தவ
பக்திப் பாடல்கள், மராட்டிய மொழியில் அமைந்த அபங்கங்கள், என்று
ஒரு புறம் ரெக்கார்டிங்கிலும். கோயில்
இசைநிகழ்ச்சிகள், காயத்ரி வீணையில் சாதனைகள்,
மாணவர்களுக்கு இசைப் பயிற்சி, ஒய்வு
கிடைக்கும் போதெல்லாம் கானகந்தர்வன் கே.ஜே .யேசுதாஸிடமும்,
எம்.ஜெயச்சந்திரனிடமும் தொலைபேசியிலேயே இசை நுணுக்கங்களை கற்றுக்கொள்ளுதல்
என்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இவரது கண்களில் "ராஜா
மற்றும் ரஹ்மான் இசையில் பாட
வேண்டும்" என்ற கனவுகள் நுரைக்கின்றன.
கண்கள்
என்றவுடன் சொல்ல மறந்த ஒன்று
நினைவுக்கு வருகிறது. கருவிலேயே இரண்டு விழிகளிலும் பார்வையை
இழந்தவர் விஜயலட்சுமி. ஆனால் அதை ஒரு
குறையாகவோ அல்லது பொருட்டாகவோ கூட
அவர் நினைப்பதில்லை.
"ஊக்குவிப்பார்
ஊக்குவித்தால் ஊக்கு விற்பவரும் தேக்கு
விற்பார்" என்கிற கவிஞர் வாலியின்
வரிகளுக்கு நிஜ உதாரணம் விஜி.
சாதனைக்கு முயற்சி, பயிற்சி, திறமை, வாய்ப்பு என்கிற
நான்கும் போதும் ஆண் / பெண்
என்கிற பேதமின்றி வெற்றியை எட்டுவதற்கு என்று சாதித்துக்காட்டிய நவயுக
நங்கை.
நிறைவாக
ஒன்று, கடந்த ஆண்டு இவருக்கு
மலையாள நடிகர் சந்தோஷ் பண்டிட்டுடன்
திருமணம் நிச்சயம் ஆனது. "உனக்கு எதற்கு சினிமா
வாய்ப்புக்கள் எல்லாம்? அதெல்லாம் கொஞ்ச நாள் தான்
வரும். அதனால ஒரு இசைப்பள்ளியில்
பார்வையற்றோர் கோட்டாவில் ஆசிரியர் பணியில் சேர்ந்து விட்டால்
காலத்திற்கும் வருமானம் வரும்" என்று அவர் கொடுத்த
ஐடியாவினால் மொத்தமாக தூக்கிப் போட்டுவிட்டார்... (கனவுகளை அல்ல... கட்டிக்க
இருந்தவனை).
இந்தப்
பதிவு முழுவதும் "மாநில அரசு விருது,
பிலிம்பேர் விருது, கின்னஸ் சாதனை,
கசூ கச்சேரி, கவுரவ டாக்டர் பட்டம்"
என்று நான் குறிப்பிட்ட இவை
எல்லாமே வெறும் நான்கரை ஆண்டுகளில்
விஜயலட்சுமி செய்து முடித்தவை (2013 மத்தியில்
இருந்து 2017 வரை). இன்னும் போக
வேண்டிய தூரமும் செய்ய வேண்டிய
சாதனைகளும் நிறைய இருக்கின்றன.
வாழ்த்துக்கள்
விஜி சேச்சி!!!!
விஜயலட்சுமியின்
அர்ப்பணிப்பை நினைக்கும் போது என் நினைவில்
வருகின்ற வரிகள்....
கால் நகத்தில் கண்கள் இருக்கு
நான் நடக்கப் பாதை இருக்கு
ஞானக் கண்ணு உள்ளே இருக்கு
நம்பிக்கை
தான் சொந்தம் எனக்கு
ஒரு அற்புதமான கலைஞரை அறிமுகப்படுத்தியதிற்க்கு நன்றி
ReplyDelete