Saturday, May 18, 2019

ஆத்து மேட்டு தோப்புக்குள்ள!!!


இது இந்த வளைத் தளத்தில் நானெழுதும் 50 வது பதிவு... இது வரை நான் கிறுக்கி வைத்ததை எல்லாம் படித்ததோடு மட்டுமன்றி தங்களது கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்டு என்னை ஊக்கப்படுத்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நன்றி மலர்கள் உரித்தாகுக!!!! உங்கள் அன்பும் ஆதரவுமே என்னை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டும் உந்து சக்தி... உங்கள் ஆதரவை தொடர்ந்து நல்க வேண்டி விழைகிறேன்!!!!


"அப்பா ஆண்டவா!! எப்போதும் போல இன்னைக்கும் நம்ம கடைல யாவாரம் அமோகமா நடக்கணும்பா!!!"

இது என்னுடைய வேண்டுதல் இல்ல... பிஸ்தா படத்துல முதல் காட்சியில் கார்த்திக் வேலை செய்யும் மிலிட்டரி ஓட்டல் முதலாளியாக வந்து இந்த வசனத்தை பேசுற இவரை நியாபகம் இருக்கா??? இல்லைனா யோசிச்சுக்கோங்க....



"யாக சாலை"... 1980ல், சாகித்ய அகாதெமி விருது பெற்ற கோவி. மணிசேகரன் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் ஒரு அபூர்வமான பாடல் உண்டு ...

"ஒரு ரோசாப்பூ சிரிக்கிறது... புது ராஜாவை நினைக்கிறது"...

அற்றை நாளில் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிக்கும் பாடல்... அபாரமான ஒரு ஆலாபனையுடன் தொடங்கும் துள்ளலான  இந்தப் பாடலை இசையமைத்து எஸ்.என்.சுரேந்தரோடு இணைந்து பாடியவர் விஜயரமணி... இந்த விஜயரமணிக்கு இரண்டு சிறப்புகள் உண்டு... ஒன்று இவர் ஒரு மேடைப்பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் இப்படி பல்துறை வித்தகர்... இன்னொன்று பல பெயர்களில் சினிமா துறையில் இயங்கியவர்... திருவையாறு ரமணி என்கிற விஜயரமணி என்கிற ரமணா ஸ்ரீதர் என்கிற டி.எஸ்.ராகவேந்தர் (இன்னும் பிடிபடவில்லை என்றால் "வைதேகி காத்திருந்தாள் படத்தில் ரேவதியின் அப்பாவாக "அழகு மலராட" பாடலில் தக தகிட தக தகிட என்று ஜதி சொல்லியபடியே மண்டையை போடும் கதாபாத்திரத்தில் வருவாரே, அவரே தான்).

இவரைப் போலவே இந்தப் பாடலை எழுதிய பாடலாசிரியருக்கும் இரண்டு பெருமைகள் உண்டு.... ஒன்று அவர் ஒரு பாடலாசிரியர், நாடக ஆசிரியர், வசனகர்த்தா... தேவைப்பட்ட போது நடிகரும் கூட.... எம்.எஸ்.வி காலம் தொட்டு இளையராஜா, ரஹ்மான், தேவா, சங்கர் கணேஷ் , சந்திரபோஸ், சிற்பி, பரத்வாஜ் என்று தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா வரை அநேக இசை அமைப்பாளர்களின் இசையில் 800க்கும் அதிகமான பாடல்களை எழுதியவர். ஏறத்தாழ 40 ஆண்டுகாலம் தமிழ் சினிமாவில் கடும் போராட்டங்களையும் பெரிய வெற்றிகளையும் சந்தித்தவர்.... அவர் தான் இந்தப் பதிவின் நாயகர்!!!!!! அவர் பெயர் திருக்களாப்பட்டி கருப்பண்ணன்  ராசு...!!!

கவியரசு கண்ணதாசன், பஞ்சு அருணாசலம், கொத்தமங்கலம் சுப்பு, கவிஞர் முத்துலிங்கம் என்று ஏராளமான கவிஞர்களை தமிழ் சினிமாவுக்கு சப்ளை பண்ணிய சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூருக்கு அருகில் இருக்கிறது இந்த திருக்களாப்பட்டி.

சின்ன வயதிலேயே இசையின் மீதும் சினிமாவின் மீதும் ஏற்பட்ட ஈர்ப்பில் சென்னைக்கு ஓடி வந்து விட்டார்... அப்போது எம்.ஜி.ஆர் படங்களுக்கு கதை வசனம் எழுதிக் கொண்டிருந்த இவரது பக்கத்து ஊர்க்காரரான இயக்குனர் டி.என்.பாலு இவரை பிரபல பாடலாசிரியர் ஆலங்குடி சோமுவிடம் உதவியாளராக சேர்த்து விட்டிருக்கிறார்... 3 ஆண்டுகள் இது ஒரு பக்கத்தில் நடந்து கொண்டிருந்த போது சமயம் கிடைக்கும் போதெல்லாம் நாடகங்களுக்கு பாடல்கள் எழுதி இருக்கிறார்...

"கல்லெறிந்த சிறுவனுக்கு
கனிகொடுத்த மரம்போல  - கருணை நெஞ்சால்
கயவரைத் திருத்திடவே
பகைவனுக் கருள்வாய் மனமே"  

என்கிற நாடகப் பாடலோடு இவரது பாட்டுப் பயணம் தொடங்கியது.

இன்னொரு பக்கம்  "உத்தரவின்றி உள்ளே வா" போன்ற படங்களில் பாடிய பாடகர்  மரியதாஸ் லூயிஸ் ஸ்ரீகாந்த் என்கிற எம்.எல்.ஸ்ரீகாந்த்திடம் மெட்டுக்கு பாட்டு எழுதி பயிற்சி எடுத்தார்... 1969ல் வெளிவந்த "தாலாட்டு" திரைப்படத்தின் மூலம் "திருப்பத்தூர் ராசு" என்கிற பெயரில் இவரது சினிமா பிரவேசம் நடந்தது... சிவாஜி நாடக மன்றத்தில் நடிகராக இருந்த ராஜபாண்டியன் என்பவர் தான் கதாநாயகன். (தங்கப் பதக்கம் படத்தில் ஸ்ரீகாந்த் ஏற்ற சிவாஜியின் மகன் கதாபாத்திரத்தை நாடகத்தில் செய்தவர் இந்த நடிகர்.. பாரத விலாஸ், டாக்டர் சிவா போன்ற படங்களிலும் இவர் நடித்திருப்பார்).
இசை எம்.எல்.ஸ்ரீகாந்த் என்பதால் படத்தில் ஐந்தில் நான்கு பாடல்கள் இவருக்கு, ஒன்று  "தண்ணிலவு தேனிறைக்க" எழுதிய கவிஞர் பூலாங்குளம் மாயவநாதனுக்கு.



"மலையாக இருப்பதெல்லாம் ஆசை வடிவம் - அது
மண்ணாகும் போது ஞானி வடிவம்"

"விளக்கில்லாமல் கணக்கெழுதி என் வாழ்க்கை அமைத்தாயா - வேறு
வழியில்லாமல் மனிதன் வடிவில் என்னைப் படைத்தாயா"
என்று தத்துவமாக அமைந்த பாடல்கள் இவருக்கு என்றாலும் மாயவநாதன் எழுதி சூலமங்கலம் ராஜலட்சுமி பாடிய

"மல்லிகை பூப்போட்டு கண்ணனுக்கு
மங்கல நீராட்டு" பாடல் தான் வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் எச்.எம்.வீக்காக எல். ஆர்.ஈஸ்வரி பாடிய
"கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா"
இன்றும் அம்மன் கோவில்களில் எல்லாம் ஒலிக்கும் இந்தப் பாடல் இவருக்கு கிடைத்த முதல் வெற்றி பாடல்.

முதல் படம் 1969ல் வந்தாலும் பிறகு நெடுங்காலம் இவருக்கு பட வாய்ப்புக்கள் சரியாக அமையவில்லை... ஒரு கட்டத்தில் ஓட்டலில் சர்வராக கூட இருந்திருக்கிறார்... 1978ல் அதே டி.என்.பாலு இயக்குநராகி தனது படங்களில் தொடர்ந்து இவருக்கு வாய்ப்பு கொடுக்க தொடங்கி இருக்கிறார்...

தனது பெயரை "திருப்பத்தூரான்" என்று மாற்றிக் கொண்டு எழுத ஆரம்பித்தவர்,  சட்டம் என் கையில் படத்தில் "மேரா நாம் அப்துல்லா", ஓடி விளையாடு தாத்தா படத்தில் டி.எம்.எஸ், மலேசியா வாசுதேவன், எஸ்.பி.பாலு மூவரும் இணைந்து பாடிய "சின்ன நாக்கும் சிமிழி மூக்கும் ஆராரோ" என்று இளையராஜா இசையில் இரண்டு படங்களுக்கு எழுதி இருக்கிறார்.



அடுத்த பத்து ஆண்டுகளில் தூர்தர்ஷனிலும் சென்னை வானொலியிலும் நாடகங்கள் எழுதப் போய் விட்டார்.  இந்த 1978 - 1988 கால கட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 150 நாடகங்கள் எழுதி இருக்கிறார். குறிப்பாக தூர்தர்ஷனில் மனோ , பாண்டு, காத்தாடி ராமமூர்த்தி நடிப்பில் வந்து சக்கை போடு போட்ட நகைச்சுவை நாடகம் "பஞ்சு - பட்டு - பீதாம்பரம்" இவர் வசனத்தில் உருவானது. வானொலியில் இவர் எழுதிய "கட் அண்ட் ரைட் கந்தசாமி" இவருக்கு சிறந்த நாடக ஆசிரியருக்கான தேசிய விருதை பெற்று தந்தது.. 

மற்றொரு பக்கம் "தலையணை மந்திரம், அன்பின் முகவரி, கரிமேடு கருவாயன், ஆகாய தாமரைகள், மரகத வீணை, ஒன்று எங்கள் ஜாதியே, மேளம் கொட்டு தாலி கட்டு", மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், தாயே நீயே துணை" என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக பட வாய்ப்புகள் வந்தன.. இதில் வெளிவராத படங்களும் உண்டு... இதில் சுவாரஸ்யமான தகவல் ஒன்று உண்டு...பூமரத்து பூங்குயிலே என்ற படத்தில் இவரோடு இணைந்து பாடல் எழுதிய மற்றொரு பாடலாசிரியர் தற்போது உலகப் புகழ் பெற்றுள்ள Translator கே.வி.தங்கபாலு.

தூர்தர்ஷன் அனுபவம் தான் இவரது வாழ்வின் பெரிய திருப்புமுனை... இதே சென்னை தூர்தர்ஷனில் Floor Assistant ஆக இருந்து ஒரு பக்கம் மெல்லிசை கச்சேரிகள் நடத்திக் கொண்டும் இன்னொரு பக்கம் பக்திப் பாடல்களுக்கு இசைஅமைத்துக் கொண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த "மாங்காடு சொக்கலிங்கம் தேவநேசன்" என்கிற இளைஞருக்கு இவரது பரிச்சயம் கிடைக்க தொடர்ந்து அவரது இசை அமைப்பில் எக்கோ சுப்பிரமணியத்தின் "இந்து மியூசிக்" கிற்காக

  • கணபதி கானம் (சீர்காழி சிவசிதம்பரம்)
  • ஆஞ்சநேயர் கீதாஞ்சலி (பாலமுரளி கிருஷ்ணா)
  • செந்தில் முருகன் போற்றி (டி.எம்.எஸ்)
  • மீனாட்சி அம்மன் பாமாலை (பி.சுசீலா)
  • மருத்துவர் சக்தி மகிமை (எல்.ஆர்.ஈஸ்வரி)
  • சுவாமிமலை முருகா (பித்துக்குளி முருகதாஸ்)
  • நமசிவாய நாதம் (கே. வீரமணி )
  • அருள்தரும் அகிலாண்டேஸ்வரி (ஜிக்கி)
  • மங்கலம் தரும் மகாலட்சுமி (சூலமங்கலம்)
  • கலைவாணி இசைமாலை (சித்ரா)


என்று கிட்டத்தட்ட 500 பக்திப் பாடல்கள் எழுதினார்.
மாங்காடு சொக்கலிங்கம் தேவநேசனுக்கு ராமராஜன் நடிக்கும் ஒரு படத்தில் இசை அமைக்க வாய்ப்பு கிடைக்க, அதில் இரண்டு தயாரிப்பாளர்களில் ஒருவர், பாடல்களை கவிஞர் வாலி எழுத வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார்வாலியும் வந்து "ஆரம்பம் நல்லாருக்கு... வயலெல்லாம் நெல்லாருக்கு" என்று மங்கலமாக முதல் பாட்டை எழுதிக் கொடுத்தார்... மொத்த பாட்டிற்கும் வாலிக்கு எங்கே போவது,  ஏற்கனவே தனது இசையில் எழுதியவர் என்பதால் இவரிடம் நீரே எழுதுமய்யா என்று கேட்க இவர் எழுதிய "நான் ஆத்து மேட்டு தோப்புக்குள்ள, ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க, முகமொரு நிலா" பாடல்கள் வெற்றிகரமாக அமைந்தன... அந்தப் படம் தான் "மனசுக்கேத்த மகராசா ".

மனசுக்கேத்த மகராசாவின் வெற்றியை தொடர்ந்து அதன் இயக்குனர் தீனதயாள் அதே ராமராஜன், அதே இசையமைப்பாளர் அதே கவிஞர் திருப்பத்தூரான் கூட்டணியில் எடுத்த "மண்ணுக்கேத்த மைந்தன்" படத்திலும் நல்ல நல்ல பாடல்களை எழுதினார்..

அடுத்த ஆண்டு "அன்பாலயா பிலிம்ஸ்" பிரபாகரனிடம் இருந்து முழுக்க புதுமுகங்களை வைத்து எடுக்கும் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு வரவே தேவநேசன் இவரையும் கையோடு அழைத்து சென்றிருக்கிறார்... இரண்டரை மணி நேரத்தில் 8 பாடல்கள் மெட்டமைத்து அங்கேயே சுடச்சுட பாடல் வரிகளும் எழுதப்பட அசந்து போன அன்பாலயா பிரபாகரன் அங்கேயே தனது நண்பர் திருப்பூர் மணிவாசகத்திற்கு தொலைபேசி அவரது படத்திற்கும் இவர்கள் இருவரையும் ஒப்பந்தம் செய்து வைத்தார்...



முதல் படம் "வைகாசி பொறந்தாச்சு"..... "சின்னப்பொண்ணு தான் வெட்கப்படுது, நீலக்குயிலே நீலக்குயிலே, தண்ணி கொடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா, ஆத்தா உன் கோயிலிலே" என்று அத்தனை பாட்டும் பட்டையை கிளப்பிய ஹிட் அடித்தது... ஒன்று சொல்ல மறந்து விட்டேன்... இந்த படத்தில் இருந்து இவரது பெயர் கவிஞர் திருப்பத்தூரான் இல்லை .... இப்போது இவர் கவிஞர் காளிதாசன்.... இன்னமும் மாங்காடு சொக்கலிங்கம் தேவநேசன் என்கிற இசையமைப்பாளர் "தேனிசை தென்றல் தேவா" தான் என்பதை சொல்ல தேவை இல்லை... நீங்களே இந்நேரம் ஊகித்து இருப்பீர்கள்.. இயக்குநர் மணிவாசகத்தின் அந்தப் படம் "நம்ம ஊரு பூவாத்தா".



அதற்கு பிறகு பத்தாண்டுகளில் தேவா இசை அமைத்த 400 படங்களில் மட்டும் 75 படங்கள் முழுப்பாடல்களையும், கிட்ட தட்ட 150 படங்களுக்கு மூன்றுக்கும் அதிகமான பாடல்களையும் இவர் தான் எழுதி இருக்கிறார்.

  • 1988 - 95 காலகட்டத்தில் பி அண்ட் சி சென்டர்களின் பெருவிருப்பமான இளையராஜா பாடல்களை போலவே இந்த ஜோடி கொடுத்த பாடல்கள் "குட்டியானை ஒட்டுறவர்ல இருந்து குபேட்டா ஒட்டுறவர் வரை, வில்லேஜ் வயல்ல பொட்டாஷ் அடிக்கிறவர்ல இருந்து விக்கிரவாண்டி ஓட்டல்ல பொராட்டா அடிக்கிறவர் வரை" ஸ்பீக்கரில் அலற விடும் பாடல்களாக  இன்று வரை நீங்காது நிறைந்து நிற்க காணலாம்.... உதாரணத்திற்கு சில பிரபலமான பாடல்கள் மட்டும்....
  • சின்னப்பொண்ணு தான் வெட்கப்படுது - வைகாசி பொறந்தாச்சு
  • சின்னஞ்சிறு பூவே உன்னை தொடும் போது - ஆத்தா உன் கோவிலிலே
  • தாழம்பூ சேல மாமா உன் மேல - சூரிய நமஸ்காரம்
  • ஓடுகிற வண்டி ஓட ஒத்துமையா ரெண்டு மாடு - மண்ணுக்கேத்த மைந்தன்
  • ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்சு - என் ஆசை மச்சான்
  • கிச்சிலி சம்பா குத்தி எடுத்தேன் - ஊர் மரியாதை
  • தென்னைமர தோப்புக்குள்ளே குயிலே குயிலே - தெற்கு தெரு மச்சான்
  • கருப்பு நிலா நீ தான் கலங்குவதேன் - என் ஆசை மச்சான்
  • ப்ரியா ப்ரியா என் ப்ரியா - கட்டபொம்மன்
  • நீலகிரி மல ஓரத்துல செவ்வந்தி மொட்டு - நம்ம அண்ணாச்சி
  • நான் ஆத்து மேட்டு தோப்புக்குள்ள - மனசுக்கேத்த மகராசா

தேவா - காளிதாசன் இந்த இருவரது ஏற்றமும் ஒரே நேர்கோட்டில் அமைந்தது.... இந்த இடத்தில் நான் இரண்டு விஷயங்களை எனது அவதானிப்பில் இருந்து விளக்க விரும்புகிறேன்... 

முதலாவது... "ஆரம்ப காலத்தில் தேவா இளையராஜாவின் மெட்டுக்களை ஆட்டைய போட்டார் " என்கிற குற்றச்சாட்டு... 

உண்மையில் இது படு மொன்னையான குற்றச்சாட்டு... தேவா கைக்கொண்டது ராஜாவின் மெட்டுக்களை அல்ல... அவருடைய பார்முலாவை....
  1. ராஜாவின் பாடல்களில் அதிகமாக இடம்பெறும் ஆபேரி, சிந்துபைரவி, கரகரப்ரியா, இந்தோளம், மாயா மாளவ கௌளை, சாருகேசி என்று ஒரு 8 - 10 பிரபலமான ராகங்களை மட்டும் மெட்டமைக்க எடுத்துக்கொண்டார்.
  2. Prelude  மற்றும் Interlude ல் ராஜா Orchestration ல் பயன்படுத்தும் அதே Violin Chorus, Flute மற்றும் Bells...... (இசைக்குழுக்களில் கீபோர்டு வாசிப்பவர்களிடம் வாயை கிண்டினால் Ilaiyaraja Bells என்றே ஒன்று வைத்திருப்பார்கள்... 80s – 90s இளையராஜா பாட்டு வாசிக்க... அது ரொம்ப பிரபலம்).
  3. Rhythm Pattern - பரவலாக பயன்படுத்தப்படும் 3/4 மற்றும் 4/4 தாளக்கட்டில் அதே தபலா, டக்கா மற்றும் அரிதாக டிரம்ஸ். (ராஜா கொஞ்சம் வித்தியாசமான  5/8, 7/8 தாளக்கட்டுகளிலும் அப்போது நிறைய பாடல்கள் அமைத்தார்... சொல்லப் போனால் அவை ஒவ்வொன்றுமே பெரிய ஹிட் பாடல்கள்)
  4. அதே பாலு, ஜானகி மற்றும் சித்ரா... குறிப்பாக எஸ்.பி.பியை பாட்டுக்கு நடுவே சிரிக்க வைப்பது, எஸ்.ஜானகியின் சிருங்கார  ஓசைகள்.
இது வரை உள்ள விஷயங்களுக்கு தேவாவுக்கு உதவ சபேஷ் - முரளி இருந்தார்கள்... ஆனால் இதெல்லாம் தாண்டி மற்றொரு முக்கிய அம்சம்,  80 - 90 களில் கங்கை அமரன் தனது  வரிகளில் ராஜாவின் பாடல்களுக்கு சேர்த்த பலம்...

இதில் தான் காளிதாசன் தேவாவிற்கு பெரும் துணை புரிந்தார்... கங்கை அமரன் "பூவரசம்பூ, செந்தூரப்பூவே, கொத்தமல்லிப்பூவே" என்று புதிது புதிதாக பூக்களில் எழுதினால் இவர் "எலுமிச்சம் பூவே, மஞ்சணத்தி பூவே, செம்பட்டு பூவே, இளவட்ட பூவே" என்று எழுதினார்.. கங்கை அமரன் மாலை கருக்கலிலே, மல்லிகை தோட்டத்திலே, செவ்வரளி தோட்டத்திலே என்று எழுதினால் இவர் தென்னைமர தோப்புக்குள்ள , ஆத்துமேட்டு தோப்புக்குள்ள என்று எழுதினார், அவர் ராசா - ரோசா என்று எழுதினால் இவரும் அதே சாயலில் மாமா - மானே என்று எழுதினார். அமரன் வாய்யா வாய்யா பாய போடு என்று வக்கிரமாக எழுதினால், கதவ சாத்து மாமா நான் கன்னி கழியணும் ஆமா என்று தன் பங்குக்கு லோக்கலாக போட்டு உடைத்தார்... 

சுருக்கமாக சொன்னால் முதல் வரியில் ஆத்தோரம்னு வருதா அடுத்த வரில சேத்தோரம் னு போட்டுக்க என்பது போல Rhyming & Nativity  இது ரெண்டு மட்டும் தான் முக்கியம் என்ற சூத்திரத்தை இவர் பின்பற்றியது பக்கா சென்னை வாசியான தேவாவின் கிராமிய பாடல்களுக்கு யானை பலம் சேர்த்து தேவாவை "Poor Man's Ilaiyaraja" வாக சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு அடையாளம் காட்டியது.... இது முதல் விஷயம்....

இரண்டாவது,

கவிஞர் காளிதாசனும் அந்த நேரத்தில் கடும் போட்டியை சந்தித்திருக்கிறார்... கண்ணதாசன் காலத்தில் கண்ணதாசன் போலவும், கங்கை அமரன் காலத்தில் கங்கை அமரன் போலவும் எழுதிய பாட்டு பச்சோந்தி வாலி, காளிதாசன் காலத்தில் அவரது சாயலில் எழுத ஆரம்பித்தார்... கண்ணுல பால ஊத்த வந்த கண்ணம்மா, மண்ண தொட்டு கும்புட்டுட்டு, என் ஊரு மதுரைப்பக்கம் என் பாட்டு மனசில் நிக்கும், எட்டு மடிப்பு சேல இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோல போன்ற பாடல்கள் இன்னும் நமக்கு யார் எழுதியது என்ற குழப்பத்தை தருவது போல அமைந்த வாலியின் வார்த்தை ஜாலம்... இது ஒரு புறம் என்றால் இயக்குனர்களே பாதி பாடல்களை எழுத ஆரம்பித்தனர், (கூவுற குயிலு, தூதுவளை இலை அரைச்சு - கஸ்தூரி ராஜா, நில்லடி என்றது உள்மனது, வந்தாளப்பா வந்தாளப்பா - ஆர். சுந்தர்ராஜன், ஊத்திக்க மாமா ஒரு ரவுண்டு - ராஜா அண்ணாதுரை, இதயம் இதயம் இணைகிறதே - அகத்தியன்)... இது போக எழுதிய படங்களில் (மண்ணுக்கேத்த மைந்தன், சூரிய நமஸ்காரம், நாடோடி காதல் என்று) நிறைய படங்கள் வெளியிலேயே வரவில்லை...

இந்த ஆரம்ப கட்ட சிக்கலை சமாளித்த நேரத்தில் இவருக்கு இரண்டு வகையான உதவிகள் வந்து சேர்ந்தன.... ஒன்று இவர் மேல் பெரும் நம்பிக்கை வைத்து தங்கள் படங்களில் தொடர்ந்து பயன்படுத்திய இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், மணிவாசகம், வி.சேகர், ராமநாராயணன் போன்றவர்கள்... இவர்களுக்கு மட்டும் கிட்டத்தட்ட தலா 15 படங்கள் எழுதி இருப்பார்...

மற்றொன்று மற்ற இசையமைப்பாளர்களிடம் கிடைத்த வாய்ப்புகள்...

  • ஒண்ணு ரெண்டு மூணுடா - புதிய மன்னர்கள் (ரஹ்மான்)
  • சம்பா சம்பா ஏலாக்குறிச்சி - பாண்டவர் பூமி (பரத்வாஜ்)
  • ஓஹோஹோ தங்கமே தங்கம் - முத்துகுளிக்க வாரீயளா (சௌந்தர்யன்)


எஸ்.. ராஜ்குமார், சிற்பி, அகத்தியன்,சங்கர் கணேஷ் இவர்களிடம் எல்லாம் நிறைய படங்கள்.... சினிமாப் பாடல்களோடு சேர்த்து பக்திப் பாடல்கள் அண்ணா திமுகவுக்கு பிரச்சார பாடல்கள் என்று இந்தக் கால கட்டத்தில் மனிதர் பரபரப்பாக இருந்திருக்கிறார்.  

1995ல் மெல்லிசை மன்னரின் இசையில் இவர் பாடல்கள் எழுதிய "நீங்க நல்லா இருக்கணும்படத்திற்கு
 சிறந்த பாடல் ஆசிரியருக்கான மாநில அரசு விருது இவருக்கு கிடைத்தது....

95க்கு பிறகு ரசனை மாற்றத்திற்கேற்ப தானும் தனது எழுத்து நடையை மாற்றினார்... அந்த கட்டத்தில் வந்த இவரது சில வெற்றி பாடல்கள்....

  • தலைமகனே கலங்காதே - அருணாச்சலம்
  • காக்கை சிறகினிலே நந்தலாலா - புருஷ லட்சணம்
  • கருடா கருடா என் காதலை சொல்லிவிடு - நட்புக்காக
  • உலக அழகியா பேரழகியா - பாட்டாளி
  • ஏரோப்பிளேன் பறக்குது மேலே - பாறை
  • சின்ன வீடு சித்ரா பெரிய வீடு கட்டுறா - தை பொறந்தாச்சு


ஆய்வு நோக்கில் பார்த்தால் கவிஞர்  காளிதாசனின் பாடல்களை 4 வகையாக பிரித்து விடலாம்....

1) மேற்சொன்ன கிராமிய பாடல்கள்...

2)  மளிகை கடை லிஸ்ட் மாதிரியாக எதையாவது பட்டியலிடும் பாடல்கள்... உதாரணத்துக்கு

  • கற்க கசடற கல்கி குமுதம் கற்றபின் விற்க பாதி விலைக்கு... கார்த்திகா கனகா ரேகா கௌதமி அமலா ரூபிணி ரஞ்சனி சித்தாரா ஈடு இல்லை உனக்கு - வைகாசி பொறந்தாச்சு.


  • கோலவிழியம்மா, ராஜகாளியம்மா பாளையத் தாயம்மா பங்காரு மாயம்மா - என்று 108 அம்மன் பெயர்கள் "ஒரு தாலி வரம் " பாடலில் - புருஷ லட்சணம்.


  • மருவத்தூர் ஓம்சக்தி என்று தொடங்கி 165 அம்மன் பெயர்கள்  - ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி.


  • கிள்ளி போட்ட சிக்கன் கரி, செட்டிநாடு மட்டன் கரி, முட்டைக்கறி, வாத்துக்கறி, முயலு - வான்கோழி கரி என்று பாடல் முழுக்க மிலிட்டரி ஓட்டல் ஐட்டங்களாக இவர் பட்டியலிட்ட  பாடல் - பிஸ்தா


  • மாவிளக்கு பூவிளக்கு மாரியம்மன் திருவிளக்கு குத்து விளக்கு கோலவிளக்கு என்று பாளையத்தம்மா நீ பாச விளக்கு பாடலில் 64 விளக்குகள் - பாளையத்து அம்மன்.


  • பித்தம் கொறஞ்சிட தின்னு பரங்கிக்கா, நித்தம்  குலவிக்க பிஞ்சு முருங்கக்கா, புத்தி தெளிஞ்சிட பிஞ்சு வெண்டைக்கா, ரத்த சோகைக்கு வத்தல் சுண்டைக்கா, தின்னதும் செரிக்கும் அத்திக்கா என்று பாட்டை கேட்கும் போதே ஒருவேளை டாக்டர் கு.சிவராமன் எழுதினாரோ என்று என்னும் படியாய் இவர் காய்கறி பட்டியல் போட்ட ஆம்பளைக்கு தெரியும் சமையலு  - எங்களுக்கும் காலம் வரும்.



  • குச்சி வீடு மச்சு வீடு கூர வீடு செங்கல் வீடு சிமெண்ட் வீடு என்று காளிதாஸ கொத்தனாராக மாறி இவர் பட்டியல் போட்ட சின்ன வீடு சித்ரா பாடலின் தொகையறா.


  • காபி தண்ணி போடட்டுமா, டீ தண்ணி போடட்டுமா, தென்னம்பாய விரிக்கட்டுமா ஈச்சம்பாய விரிக்கட்டுமா, நெல்லுச்சோறு ஆக்கட்டுமா கம்மஞ்சோறு ஆக்கட்டுமா என்று கேள்வியாய் கேட்கும் தேவா படத்தின் "மருமகனே" பாடல்


3) இவரது பெரிய பலமான பக்திப் பாடல்கள்...

தேவா 90களின் மத்தியில் இருந்து ரஜினி, கமல், விஜய், அஜித்  படங்களுக்கு வைரமுத்து வாலியோடு கைகோர்க்க, அந்த சமயத்தில்  இவருக்கு பெரிதும் உதவியவை "பாளையத்து அம்மன், நாகேஸ்வரி, கோட்டை மாரியம்மன், ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, பொட்டு அம்மன், தாலி காத்த காளியம்மன், அன்னை காளிகாம்பாள்...." என்று ராமநாராயணன் எடுத்து தள்ளிய பக்திப் படங்கள் தான்... முந்தைய பகுதியிலேயே சில முக்கியமான பக்திப் பாடல்களை சொல்லிவிட்டதால் மேலும் விவரிக்க தேவை இருக்காது என எண்ணுகிறேன்... பிஸ்தா படத்தில் இவர் எழுதிய பாலபிஷேகம் (சரணம் அய்யப்பா) பாடல் எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று.. இரண்டாவது சரணத்தில் ஒரு தேர்ந்த பாடலாசிரியரின் கைவண்ணம் தெரியும்.

4) இந்த மூன்று வகைக்குள் அடங்காத பிற பாடல்கள்....

படு பிசியாக பாடல்கள் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் சட்டையின் மேல் இரண்டு பொத்தான்களை கழட்டி விட்டு தங்க சங்கிலி தெரியத் தான் இருப்பார் காளிதாசன்...  ஆனால் அவரது தொடக்கத்தை போலவே இறுதிக் காலமும் நன்றாக அமையவில்லை... 2000 க்கு பிறகு தேவா, ராஜ்குமார், ஆதித்யன் என்று இவரது கூட்டாளிகள் எல்லாரும் இறங்கு முகத்தில் போக பட வாய்ப்புகள் குறைந்தன... நான் அறிந்த வரையில் "எதிரி" தான் இவர் கடைசியாக எழுதிய படம்.. வாய்ப்பில்லாமல் போனதோடு உடல் நலமும் பாதிக்கப்பட இறுதிக் காலத்தில் "உள்ளீடற்ற சட்டையை" போல எலும்பும் தோலுமாய் தஞ்சை எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்ட காட்சிகள் தொலைக்காட்சியில் பார்த்தவர்களின் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. நடிகர் சங்கம் 25 லட்சம் பணம் தந்து உதவியது... தொடர்ந்து இவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து 29.05.2016ம் ஆண்டு அன்னாரின் உயிர் பிரிந்தது....

1960களில் தொடங்கி 2000தின் மத்தி வரையிலான 40 ஆண்டுகால சினிமா வாழ்வில் சறுக்கலும் சாதனையும் சகடயைப் போல மாறி மாறி வந்ததை சந்தித்த ஒரு கவிஞர்... என்றாலும் 800 பாடல்கள் என்பது சாதாரணமல்ல... நிச்சயம் சினிமா சரித்திரம் தனது கணக்கில் மிக அழுத்தமாக பதிவு செய்ய வேண்டிய ஒரு கலைஞன் கவிஞர் காளிதாசன்!!!!

2 comments:

  1. அண்ணன்
    கவிஞர் காளிதாசன்
    அவர்களைப் பற்றி
    ஆதி முதல் அந்தம் வரை
    ஆராய்ந்துப் பகிரும்
    இந்தப் பதிவைக் கண்டு
    எங்களோடு சேர்ந்து
    அண்ணனின் ஆன்மாவும்
    ஆனந்தம் அடையும்...

    கிருஷ்ணன் ராமதாஸின்
    இந்த அரிய பணிக்குப்
    பாராட்டுகள்...

    # கலைக்குமார்
    # பாடலாசிரியர்

    ReplyDelete