Tuesday, June 17, 2014

யேய்...என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலியே???

"ஒலகத்துல ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான்.. கருப்பு எம்.ஜி.ஆர், புளூ எம்.ஜி.ஆர், செவப்பு எம்.ஜி.ஆர்னு எல்லாம் கெடையாது... நீ கருப்பு எம்.ஜி.ஆர்னா நான் கருப்பு நேரு... இப்ப என்ன பண்ணுவ போ...."

"கருப்பு எம்.ஜி.ஆர்" விஜயகாந்த பத்தி மூணு வருஷத்துக்கு முந்தி திருவாரூர் மீட்டிங்ல "கருப்பு நேரு" வடிவேலு கழுவி கழுவி ஊத்துன வசனம் தான் மேல நீங்க படிச்சது...அதுக்கப்புறம் கருப்பு நேருவோட கலைவாழ்க்கையே கரண்ட் போன கருமாதி வீடு மாதிரி கருங்கும்முனு இருளும், சோகமுமா மாறிப் போன கதை நாடறிஞ்சது... மூணு வருஷ வனவாசத்துக்கு பிறகு தன்னோட தெனாலிராமன் படம் மூலமா மீண்டு(ம்) வந்திருக்காரு வடிவேலு... போன வாரம் காஃபி வித் டிடி ல ஐயா தான் கெஸ்ட்...

அப்டின்னா வடிவேலு கருப்பு நேருவான்னு உங்களோட கேள்வி முடியறதுக்குள்ள... வடிவேலுவுக்கு "கருப்பு நாகேஷ்" அப்டின்னு ஒரு பேரு இருக்கு தெரியுமா?? (நல்லா கேக்குறாங்கய்யா டீட்டெய்லு...)

சகட்டுமேனிக்கு கலாய்ச்சாலும் சாகித்ய அகாடமி விருது கெடச்ச மாதிரி சிரிக்கிற ஆளுங்கள தமிழ்நாட்டு மக்களுக்கு ரொம்ப புடிக்கும்...வடிவேலுவும் வந்த புதுசுல அப்படித்தான்...

ஆரம்ப காலங்கள்ல, கவுண்டமணி - செந்தில் ஜோடியோட அப்பரசண்டியா அங்கொண்ணும் இங்கொண்ணுமா தலையக்காட்டிட்டு இருந்தவரு Life ல முதல் கியர் விழுந்தது காதலன் படத்துல தான்...

அந்தப் படத்த எடுத்த கே.டி.குஞ்சுமோன் தான் தன்னோட  படமான "சிந்து நதி பூ" படத்துக்கு 1994ல தினமணில‌ " "கருப்பு நாகேஷ்" வடிவேலு நடிப்பில்" அப்டின்னு ஒருவிளம்பரம் குடுத்தாரு... அன்னிக்கு தேதிக்கு நாகேஷுக்கும் அவருக்கும் இருந்த ஒரே ஒத்துமை கால்கிலோ கறி கூட இல்லாத பாடி மட்டும் தான்... (அப்ப நான் சிக்குனு சிறுத்தக்குட்டி மாதிரி இருந்தேன்..)


பின்னாட்கள்ல, "நான் தேவர் மகன் படத்துல Pathos ல பேர் எடுத்த ஆளு"னு வடிவேலுவே சொல்லிகிட்டாலும், காமெடியத் தவிர வேற எந்த ரோல்லயும் என்னால வடிவேலுவ அப்போ கற்பனை கூட பண்ணிப் பாக்கமுடியாது... ஏன்னா அது எல்லாமே அவருக்கு கொஞ்சமும் வரவே வராத விஷயம்...

அவரோட ஆரம்ப கால Pathos Actingக்கு உதாரணமா ஒரு செய்தி கூட உண்டு.. தேவர் மகன் பட ஷூட்டிங்.. சிவாஜி இறந்து போயி அவரப் படுக்க வச்சிருக்காங்க.. அப்போ சுத்தி நிக்கிற எல்லாரும் அழுவுற மாதிரி சீன்... "அய்யய்யோ...அய்யாயாயா... போயிட்டீங்களே.." ன்னு வடிவேலு ஒப்பாரி வைக்க ஆரம்பிக்க, படுத்திருந்த சிவாஜி எந்திரிச்சு, "எலாய்.. யார்ரா அவன் ஒப்பாரி வைக்கிறவன்.. சத்தம்போடாம அழுவணும்"னு சொல்ல, வெரண்டு போயி சத்தமில்லாம நடிச்சாரு அப்டின்னு...

"முத்து" படம் நடிக்கும் போது 50 படங்களத் தொட்டிருந்த வடிவேலுக்கு சரியான பிரேக் கொடுத்த படம்... இன்னும் சொல்லப் போனா ரிட்டையர்மெண்டுக்கு கவுண்டமணி ஏற்கனவே தயாராகிட்டு இருந்த அந்த சமயத்துல, வடிவேலுவ முன்னணி நடிகரா அடையாளம் காட்டின படம், வி. சேகரோட "காலம் மாறிப் போச்சு"..

"சகல.. ஏன் அடி என்னான்னு நீ பாத்ததில்லையே.. இன்னைக்கு நீ பாக்கிற"ன்னு சவடால் விடுறது ஆகட்டும்... உள்ள போயி கோவை சரளா பொளந்தெடுத்ததும் அலறி அடிச்சிகிட்டு வெளிய ஓடிவந்து.. 
"யோவ்.. நீயெல்லாம் ஒரு சகலையா?? உள்ள கைய முறுக்கிகிட்டு நெஞ்சுல குத்துறாய்யா, அந்த குத்து குத்துறா.. வெளில நின்னு வேடிக்க பாக்குறியேடா அறிவுகெட்டவனே"ன்னு பொலம்புறதாகட்டும் மிடில் கிளாஸ் ஆடியன்ஸ் மொத்தத்தையும், வடிவேலு கட்டி இழுக்க ஆரம்பிச்ச படம் அது..குறிப்பா கோவை சரளாகிட்ட அடிவாங்குறதுன்னு ஒரு புது டிரெண்டையே ஆரம்பிச்சு வச்ச படம் அது.. வரிசையா "விரலுக்கேத்த வீக்கம்,பொங்கலோ பொங்கல்,வரவு எட்டணா செலவு பத்தணா, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" இப்படி வடிவேலுவுக்கு வி.சேகர் போட்டுக் குடுத்த ரூட் அவர நேரா மெயின்ரோட்டுல கொண்டு சேர்த்தது...

அடுத்து பார்த்திப‌னோட‌ ஜோடி போட‌ ஆர‌ம்பிச்ச‌ வ‌டிவேலுவுக்கு "வெற்றிக்கொடி க‌ட்டு" ப‌டத்துல தான் "வ‌ந்துட்டான்யா வ‌ந்துட்டான்யா"ன்னு அவ‌ரோட‌ முத‌ல் பாப்புல‌ர் ட‌ய‌லாக் ஆர‌ம்ப‌ம் ஆச்சு..

அதுக்குப் பிற‌கு Facebook ல‌ வெட்டியா ட‌ய‌லாக் உடுற‌ ப‌லபேர் பொழைப்புக்கு வ‌ழிப‌ண்ற‌ மாதிரி வ‌ரிசையா ஏக‌ப்ப‌ட்ட‌து ச‌ர‌மாரியா வ‌ந்து விழ‌ ஆர‌ம்பிச்சது...

கொஞ்ச‌ம் சாம்பிள் பாக்க‌லாமா?

  • நீ புடுங்குற‌தெல்லாமே தேவை இல்லாத‌ ஆணி தான்
  • அலோ துபாயா? அங்க‌ என்னோட‌ பிர‌த‌ர் மார்க் இருக்காறா?
  • Why blood? same blood!!!
  • நான் அப்ப‌டியே ஷாக்காயிட்டேன்...
  • மாப்பு வ‌ச்சுட்டான்யா ஆப்பு!!!

காமெடி சேனல் பாத்தோமா, கட கண்ணிக்கு போயி பொழப்ப பாத்தோமான்னு இல்லாம, கப்பித் தனமா, இதையெல்லாம் ஃபோன்ல‌ கால‌ர் டியூனா வ‌ச்சிகிட்டு அல‌ஞ்ச‌ ப‌க்கிங்க‌ நெற‌ய‌ பேரு..

அது வ‌ரைக்கும் வ‌டிவேலு ந‌டிச்ச‌ ப‌ட‌ம் ஹிட், வ‌டிவேலு பேசின‌ வ‌ச‌ன‌ம் ஹிட் அப்டின்னு இருந்த‌ நெல‌மைய‌ மாத்தி "வ‌ண்டு முருக‌ன், அலார்ட் ஆறுமுக‌ம், வ‌க்கீல் வெடிமுத்து, ச‌ங்கிம‌ங்கி, கைப்புள்ள‌"ன்னு ப‌ட‌த்தோட டைரக்டர விட தன்னோட கேரக்டர பிரபலம் ஆக்குனது வடிவேலுவோட ஹைலைட் ரெக்கார்டு...

வடிவேலுவோட  Speciality யே" ரத்தக் கண்ணீர் மாதிரி பழைய பட சிடி தேயத்தேய காப்பியடிக்காம, சரக்கையும் ஷகிலாவையும் மட்டுமே காமெடின்னு நம்பாம, எந்த தனிநபர் விமர்சனமும் இல்லாம, கருத்து கந்தசாமியா மாறி நாட்டத் திருத்துறேன்னு கெளம்பாம, யாரையும் மிமிக்ரி பண்ணாம எல்லாரையும் ரசிக்க வச்சது தான் (ஏன்ன்... நல்லாத்தானே போயிட்டு இருந்திச்சு...)

பொதுவா வடிவேலுவோட ஃபார்முலா ரொம்ப சிம்பிள்...

ஊருக்குள்ள சவடால் விடுற டுபாக்கூர் பார்ட்டியோ அல்லது எல்லா களவாணித்தனமும் பண்ணி மாட்டிகிற ஆளோ... அதிகபட்சம் இது ரெண்டுல ஒண்ணு தான்.. ஆனா சந்திரமுகி, வின்னர், கிரி, ரெண்டு, எல்லாம் அவன் செயல், போக்கிரி, தலைநகரம், மருதமலைன்னு படத்துக்கு படம் பட்டைய கெளப்புன ஃபார்முலா...

இப்படி ஹைவேல போயிட்டிருந்த வண்டி, சடப்புனு ரூட்டு மாறி கொடசாஞ்ச சம்பவம் வடிவேலுவுக்கு மட்டுமில்ல தமிழ்நாட்டு சினிமா ரசிகனுக்கும் செம அடி...

அப்புறம் என்ன... கொடசாஞ்ச வண்டி நேரா இன்னொரு தெருவுல இருக்குற சந்துக்கு போச்சு.. அங்க "சந்தானம், சிங்கம்புலி, பவர் ஸ்டார், சாம் ஆண்டர்சன், பிரேம்ஜின்னு... ஒரு பதினோரு பேரு... மூணு வருஷம் மூச்சு தெணற தெணற அடிச்சாங்யம்மா... தமிழனும் அடிச்சுட்டு போங்கடான்னு விட்டுட்டான்...

அதுக்கு முன்னடி, ஓமகுச்சி, தயிர்வடை தேசிகன் மாதிரி பலவீனமா இருக்கிற காமெடி நடிகர பாத்து தமிழன் சிரிச்ச காலம் மாறி, நடிப்பே ரொம்ப பலவீனமா இருக்கிற "பிரேம்ஜி, சாம் ஆண்டர்சன், பவர் ஸ்டார்" மாதிரி ஆளுங்களையெல்லாம் நடிகனா பாத்து சிரிக்க வேண்டிய நெலம (புள்ளப் பூச்சிக்கெல்லாம் கொடுக்கு மொளைக்கும்னு நான் என்ன கனவாடா கண்டேன்...ஹய்யோ...)

ஏற்கனவே "உங்க ஆயா ரெயின்கோட்டு போட்டுகிட்டா குளிப்பா?"ன்னு பத்திரிக்கையாளர பேசப்போயி, "பத்மஸ்ரீ"ய பறிமுதல் பண்ணுங்கடான்னு எவனோ கோக்குமாக்கா கொளுத்திப் போட, அது பரபரப்பா பத்திக்க, Mute ல போட்ட‌ Music Channel மாதிரி விவேக் இருந்ததும், போதாததுக்கு வடிவேலு வாயக்குடுத்து வகையா மாட்டுனதும் சேர்ந்து மூணு வருஷத்துல தமிழ்நாட்டு ரசிகனோட நகைச்சுவை உணர்வ மகாமட்டமான நெலமைக்கு கொண்டுபோச்சு...

சரி அதுகெடக்கட்டும் வடிவேலு கருப்பு நேருவா?? இல்ல கருப்பு நாகேஷா?? அதுக்கு வருவோம்.. என்னக் கேட்டா ரெண்டுமே இல்ல வடிவேலு ஒரு கருப்பு சந்திரபாபு... (யேய்.. இதுல இவன் வேறயா?? புதுசா இருக்கு...)

ச‌ந்திர‌பாபு, ப‌ல‌ திற‌மைக‌ளின் உறைவிட‌ம்..ரொம்ப‌ ந‌ல்லா ஆடுவாரு, ரொம்ப‌ ரொம்ப ந‌ல்லா பாடுவாரு.. அது ம‌ட்டுமில்லாம‌ ஒரு மிக‌ச்சிற‌ந்த‌ ந‌டிக‌ர்... வடிவேலுவும் அப்படித்தான்.. நல்லா இல்லாட்டாலும் ஓரளவுக்கு பாடுவாரு, பின்னழக தூக்கி தூக்கி ஆடுவாரு.. நல்லா நடிப்பாரு (இதான் நீ சொல்ல‌ வ‌ந்த‌ லாஜிக்கா மூதேவின்னு நீங்க‌ காறித்துப்ப‌ ரெடியாகிற‌து தெரியுது... வெயிட்.. வெயிட்.. வெயிட்)

ஒருமுறை சந்திரபாபு ஃபுல்லா சரக்கடிச்சிட்டு, ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்தாரு.

மூணே கேள்வி தான்.... முடிஞ்சது சோலி...

ஜெமினி கணேசன் பத்தி என்ன நினைக்கிறிங்க?

அவன் என்னோட ஆதி கால நண்பன். திருவல்லிகேணியில குப்பு முத்து முதலி தெருவில ஒரு மாடியில நான் குடியிருந்தேன். அப்பா அவன் ‘தாய் உள்ளம்’ படத்துல நடிச்சி கிட்டிருந்தான்.

அப்போ அவனுக்கு நான் காமெடி எப்படி பண்ணனும், பேத்தாஸ்னா எப்படி பண்ணனும், லவ் சீன எப்படி பண்ணனும்னு நடிச்சி காட்டினேன்.

அடே அம்பி, இத்தனை வருஷம் ஆச்சேடா, இன்னும் நடிப்புல எந்த முன் னேற்றத்தையும் காணுமேடா. நீ போன ஜென்மத்துல வட்டி கடை வச்சிருந்திருப்படா, படுபாவி.

சிவாஜி கணேசன் பத்தி உங்க அபிப்ராயம் என்ன?

அவர் நல்ல நடிகர். பட், அவரை சுத்தி காக்கா கூட்டம் ஜாஸ்தி இருக்கு. அந்த ஜால்ரா கூட்டம் போயிடிச்சின்னா அவர் தேறுவார்.

MGR பத்தி உங்க அபிப்ராயம் என்ன?

அவர் கோடம்பாக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி கட்டுறதா கேள்விப் பட்டேன். பேசாம கம்பவுண்டரா போகலாம்.

இதுக்க‌ப்புற‌மும் சொல்ல‌ணுமா என்ன‌ ந‌ட‌ந்திருக்கும்னு.... (வ‌ட‌க்குப‌ட்டி ராம‌சாமிக்கு குடுத்த‌ ப‌ண‌ம் ஊ.. ஊ...ஊ... தான்).

ச‌ர‌க்க‌ போட்டுட்டு எம்.ஜி.ஆரை க‌லாய்ச்சு ச‌ங்கு ஊதிக்கிட்ட‌வ‌ரு ச‌ந்திர‌பாபு.
ச‌ர‌க்கு போட்டாருன்னு க‌ருப்பு எம்.ஜி.ஆரை க‌லாய்ச்சு ச‌ங்கு ஊதிக்கிட்ட‌வ‌ரு வ‌டிவேலு...


அதுனால தான் சொல்றேன்...
 
"அன்புத் தாய்மார்க‌ளே... அருமைப் பெரியோர்க‌ளே.. இனிய‌ குழ‌ந்தைக‌ளே... வ‌டிவேலு க‌ருப்பு ச‌ந்திர‌பாபு... க‌ருப்பு ச‌ந்திர‌பாபு...க‌ருப்பு ச‌ந்திர‌பாபு...!!!


 (சொல்ட்டார்ப்பா....ராஜா.. நீ சொன்ன‌ வார்த்தைய‌ த‌ஞ்சாவூர் க‌ல்வெட்டுல‌ வெட்டிவ‌ச்சுட்டு அது ப‌க்க‌த்துல‌யே உக்காந்துக்க‌..உன‌க்கு பின்னாடி வ‌ர்ர‌ ச‌ந்த‌திக‌ள், அத‌ ப‌டிச்சு தெளிவா நட‌ந்துக்குக்குவாங்க‌...)

No comments:

Post a Comment