Sunday, September 4, 2016

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்!!!!

விநாயகர் சதுர்த்தி வருது... (விடுமுறை தினம்னு சொல்லணுமா? தெரியலையே).. எல்லா டிவி சேனலும் பக்திமழை பொழியிறாங்க.. நாமளும் ஏதாச்சும் செய்வோம்....

'மலரோ நிலவோ மலைமகளோ' ஜெயச்சந்திரன் பாடிய இந்தப் பாட்டுக்கு இசை யாருப்பா?? ஜெயச்சந்திரன் பாடிருக்காப்ல... செமி-கிளாசிக்கல்... ரெண்டாவது சரணத்துல ஸ்வரம் எல்லாம் வருது, 'ஸ்ரீதேவி என் வாழ்வில்' பாட்டு மாதிரியே இருக்கு.... வேற யாரு ராஜா தான்...

 'திருப்பரங்குன்றத்தில்  நீ சிரித்தால்' பாட்டு யாரு மியூசிக்கு?? என்ன கேள்விப்பா இது... கந்தன் கருணை கே.வி.மகாதேவன் National Award வாங்கின படம் ஆச்சே ... இது போன்ற தப்பிதக் கற்பனைகள் எனக்கு நிறைய இருந்தததுண்டு... சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும்...

அவர் ஒரு இசைக்கலைஞர்.. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் ஜி.ராமநாதன், சுப்பையா நாயுடு போன்றவர்களின் படங்களில் பக்கவாத்தியக் கலைஞராக இருந்தவர் பிறகு வாய்ப்புத் தேடி சென்னை வந்து கொலம்பியா எச்.எம்.வி யில் சூலமங்கலம் சகோதரிகள், எல். ஆர். ஈஸ்வரி, சீர்காழி கோவிந்தராஜன் போன்றவர்களுக்கு பக்திப் பாடல்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார்...  (கிட்டத்தட்ட 700 பாடல்களுக்கு மேல் ).. உதாரணத்துக்கு சில :

அழகெல்லாம் முருகனே, முருகனுக்கொருநாள் திருநாள், திருநீறில் மருந்திருக்கு தெரியுமா, ஆடுகின்றானடி தில்லையிலே (சூலமங்கலம் சகோதரிகள்)... கற்பூர நாயகியே கனகவல்லி, தாயே கருமாரி, கண்ணபுர நாயகியே மாரியம்மா, கருணை உள்ளம் கொண்டவளே (எல். ஆர் .ஈஸ்வரி) நாராயணா என்னும் பாராயணம், ஒப்பில்லாத பெருமாள் நம் உப்பிலியப்ப திருமால் (சீர்காழி கோவிந்தராஜன்)

அவரது பக்திப் பாடல்களில் ஒன்றைக் கேட்ட கவியரசு கண்ணதாசன் இந்தப் பாடல் உங்களது படத்தில் வரும் சூழலுக்கு சரியாகப் பொருந்தும் என்று இயக்குனர் ஏ.பி.நாகராஜனிடம் சொல்ல, அந்தப் பாடல் மற்றொரு இசை அமைப்பாளர் இசையமைத்த அந்தப் படத்தில் இடம் பெற்றது... "முருக கானாம்ருதம்" என்னும் பக்திப் பாடல் கேஸட்டிற்கு இவர் இசை அமைத்த பாடல் தான் கந்தன் கருணை படத்தில் இடம்பெற்ற "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்"

1969ம் ஆண்டு அதே ஏ.பி.என்னிடம் இருந்து அந்த இசைக் கலைஞருக்கு அழைப்பு வருகிறது.. செல்கிறார்... "வா ராஜா வா" என்கிறார் இயக்குனர்.. இவர் புரியாமல் பார்க்க.. "என்ன பாக்கறீங்க.. இது தான் நீங்க இசை அமைக்கப் போற படத்தோட பேரு" என்று இன்ப அதிர்ச்சி அளிக்கிறார் ஏ.பி.என்... அந்த இசையமைப்பாளர் வேறு யாருமல்ல வயலின் இசை வேந்தர் பத்மஸ்ரீ குன்னக்குடி வைத்தியநாதன்...குன்னக்குடின்ன உடனே "நெத்தி நெறய பொங்கலுக்கு வெள்ளை அடிச்ச மாதிரி விபூதி பூசிக்கிட்டு, நடுவுல பழைய காலத்து பத்து ரூவா காயின் மாதிரி பொட்டு வச்சுக்கிட்டு, பொன்னாடைல சட்ட தெச்சு போட்டுக்கிட்டு தீபாவளிக்கு தீபாவளி காலைல சன் டிவி ல 06:30 - 07:30 அன்றும் இன்றும் ல மருதமலை மாமணியேவும் இஞ்சி இடுப்பழகாவும் வாசிப்பாரே அந்த குன்னக்குடி தான்" 15 வருஷம் முந்தி வரை எனக்கு தெரிஞ்ச குன்னக்குடி.. 22 படங்கள்.. 700க்கு மேற்பட்ட பக்திப் பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார் என்ற விபரம் தாமதமாக நான் அறிந்த ஒன்று..

சரி மீண்டும் விஷயத்துக்கு வருவோம்.. "இறைவன் படைத்த உலகை எல்லாம்", "கல்லெல்லாம் செல செஞ்சான் பல்லவராஜா" என்று அருமையான பாடல்களோடு "வா ராஜா வா" ஹிட் அடிக்க வரிசையாக ஏ.பி.என் படங்களுக்கு குன்னக்குடி இசை அமைத்தார்.

1970ல் வெளிவந்த "திருமலை தென்குமரி' தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றுத் தந்த திரைப்படம். ஒரு பேருந்தில்  சில குடும்பங்கள் பக்தித் தலங்களுக்கு யாத்திரை செல்வதாக அமைந்த படம். "திருப்பதி மலை வாழும் வெங்கடேசா" , குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா", "சிந்தனையில் மேடை கட்டி", என்று அனைத்தும் ஹிட் பாடல்கள்..

"மதுரை அரசாளும் மீனாட்சி".... சீர்காழியின் குரலில் காபி, கானடா, பீம்ப்ளாஸ், குந்தல‌வராளி என்று ராகமாலிகையாய் அமைந்த இந்தப் பாடலில் "திரிபுரசுந்தரி சீர்காழியிலே' என்ற வரியில் "சீர்காழியிலே" என்ற சொல்லை மட்டும் தனியாக ஆலாபித்து பக்கத்தில் இருக்கும் குன்னக்குடியை பார்த்து புன்னகைப்பார் சீர்காழி கோவிந்தராஜன்.. கடைசியில் வரும் அதி வேக ஸ்வரங்கள் குன்னக்குடி ஸ்பெஷல்..

1972ல் வெளிவந்த அகத்தியர் படம் குன்னக்குடியின் அடுத்த பெரிய ஹிட்.. சீர்காழி கோவிந்தராஜன், டி.ஆர்.மஹாலிங்கம் என்று இரண்டு இசை வல்லுநர்கள் இணைந்த படம்.. "நடந்தாய் வாழி காவேரி, உலகம் சமநிலை பெறவேண்டும், மலை நின்ற திருக்குமரா", "நமச்சிவாய என சொல்வோமே", "தாயிற் சிறந்த கோயிலுமில்லை", "இசையாய் தமிழாய் இருப்பவனே" என்று பெரிய பட்டியல்.. அத்தனையும் முத்தான பாடல்கள்...

அதே ஆண்டு வெளிவந்த "தேவரின் தெய்வம்" படம் தான் இன்றளவும் குன்னக்குடியின் கேரியர் பெஸ்ட் படம்.. முருகனின் ஆறுபடை வீடுகளைக் குறிக்கும் விதமாய் ஆறு பாட்டு.. ஆறும் பட்டயைக் கிளப்பிய ஹிட்... மதுரை சோமுவின் "மருதமலை மாமணியே", பெங்களூர் ஏ. ஆர். ரமணி அம்மாள் பாடிய "குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்", பித்துக்குளி முருகதாஸ் சுவாமிகள் பாடிய "நாடறியும் ஏழுமலை", டி.எம்.எஸ் - சீர்காழி இணையில் "திருச்செந்தூரின் கடலோரத்தில்", "சூலமங்கலம் ராஜலட்சுமி - எம்.ஆர்.விஜயா குரல்களில் "வருவான்டி தருவான்டி", ராதா-ஜெயலட்சுமி குரல்களில் "திருச்செந்தூரில் போர் புரிந்து".. படம் வந்து 45 ஆண்டுகள் ஆகின்றன.. ஆயினும் இன்னும் மனதை விட்டு நீங்காத இசை...

1973ல் வெளிவந்த தமிழின் முதல் சினிமாஸ்கோப் படம் ராஜராஜ சோழனில் "தஞ்சை பெரிய  கோயில் பல்லாண்டு வாழ்கவே", "ஏடு தந்தானடி", தென்றலோடு உடன் பிறந்தாள்" என்று பல நல்ல பாடல்கள்...

அடுத்து வந்த திருமலை தெய்வம், திருவருள் படங்களிலும் வெற்றி பாடல்கள் தொடர்ந்தன "ஏழுமலை இருக்க எனக்கென்ன மனக்கவலை, நாளெல்லாம் உந்தன் திருநாளே, திருவருள் தரும் தெய்வம், கந்தன் காலடியை வணங்கினால், மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க, மாலை வண்ண மாலை" என்று...

பக்திப் படங்களில் இருந்து மாறி சமூகப் படங்களை ஏ.பி.என் எடுத்த போதும் குன்னக்குடியின் இசையில் பக்தி மணம்.. குமாஸ்தாவின் மகள் படத்தில் "எழுதி எழுதி பழகிவந்தேன்", மேல்நாட்டு மருமகள் படத்தில் "முத்தமிழில் பாடவந்தேன்" (நவராத்திரி சுண்டல் பாட்டு.. வருஷத்துக்கு யாராவது ஒருவர் வந்து பாடிடுறாங்க)

குன்னக்குடி என்றதும் நினைவுக்கு வரும் மற்றொரு விஷயம் அவர் எதையாவது வித்தியாசமாக செய்துகொண்டே இருப்பார்.. அவரது இசையமைப்பில் அப்படி நிறைய இருக்கிறது பேச.... வாங்க பேசுவோம்...

அகத்தியர் படத்தில் சீர்காழி - டி.எம்.எஸ் குரல்களில் ஒலிக்கும் பாடல் "வென்றிடுவேன்" "நாட்டை, பைரவி, தோடி, ஆரபி, ஷண்முகப்ரியா, தர்பார், ஹம்சத்வனி, வசந்தா, மோகனம், மனோலயம், பாகேஸ்வரி, சாரங்கா, காம்போதி, கௌரி மனோகரி, கல்யாணி, சரஸ்வதி" என்று 16 ராகங்களில் அமைந்த தமிழ் சினிமாவின் மிகப் பெரிய ராகமாலிகை.

அது மட்டுமல்ல "நாட்டை"யும் நாதத்தால் வென்றிடுவேன்.. "பைரவி" துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன் என்று ஒவ்வொரு வரியிலும் ராகத்தின் பெயரை பாடல் வரியில் கொண்ட பாடல் .. ..

இன்னும் சுவாரஸ்யமாக "சமமா நீ சரிசமமா? மனிதா நீ பாதக மனிதா" சாகசமா? பரிகாசமா? போன்ற சொற்களில் அந்த அந்த எழுத்துக்களைக் கொண்ட ஸ்வரங்களிலேயே வைத்து விளையாடி இருப்பார் வைத்தி... (உதாரணத்துக்கு: சமமா என்பதை "ச" "ம" "ம")...

வாகீச கலாநிதி கி.வா.ஜ அவர்களை முதன் முதலாக சினிமா பாடல் எழுத வைத்தவர் குன்னக்குடி தான்.. "நம்ம வீடு தெய்வம்" படத்தில் "உலகமெல்லாம் படைச்சவளே" என்ற பாட்டு.. (அவர் அடுத்து எழுதிய பாடலும் குன்னக்குடியின் இசையில் தான் "அன்னை அபிராமி" படத்துக்காக).. அதே போல குழந்தைக் கவிஞர் என்று போற்றப்பட்ட அழ. வள்ளியப்பாவை "கல்லெல்லாம் செல செஞ்சான்" என்று "வா ராஜா வா"வில் எழுத வைத்திருப்பார்..

அநேக பாடகர்களை முதன் முதலில் சினிமாவில் பாடவைத்தவர் இவர் ( மதுரை சோமு, பெங்களூர் ரமணி அம்மாள், பித்துக்குளி முருகதாஸ், எம். ஆர்.விஜயா, டி.கே.கலா,உஷா உதூப்" என்று பெரிய பட்டியல்).

தமிழின் முதல் பாப் பாடலான " Life is a Flower.. Love is a Treasure" என்ற பாடலை மேல்நாட்டு மருமகள் படத்தில் உஷா உதூப்பை பாட வைத்திருப்பார்..

கண்காட்சி படத்தில் பீம்பிளாஸ் ராகத்தில் "3 - 2 - 2" என்று ஏழு அட்சரங்களைக் கொண்ட மிஸ்ர நடையில் முதன் முதலாக ஒரு டூயட் பாடல் அமைத்திருப்பார்.. அது கே.டி.சந்தானம் பதிவில் நான் சொன்ன "அநங்கன் அங்கஜன் அன்பன்" என்னும் பாடல் (நடிகர் சங்க மீட்டிங்கில் சிவகுமார் சொன்ன அதே பாடல் )

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு குன்னக்குடி இசையமைத்த "நவரத்தினம்" படத்தில் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவுக்கு இரண்டு வித்தியாசமான பாடல்கள்.. மேற்கத்திய பாடலுக்கு மூலம் கர்நாடக இசைதான் என்னும் விதமாக பாடல் வேண்டும் என்று எம்.ஜி.ஆரின் விருப்பத்திற்காக இவர் இசை அமைத்தது...

"Sound of Music" படத்தில் வரும் "Loanely Goathered" பாடலை தியாகய்யரின் "பலுக்கு கண்ட சா" என்கிற நவரச கானடா ராக கீர்தனைக்கு  ஒப்பிட்டு விளக்குவார்.. அடுத்து "Golden Youths Always Rules" என்னும் "My Fair lady"
படப்பாடலை "ஏதாவுனரா" என்னும் கல்யாணி ராக தியாகராஜ கீர்த்தனைக்கு ஒப்பிட்டு பாடிக்காட்டி பின்னர் அதையே ஹிந்துஸ்தானி "அமீர் கல்யாணி"யில் "ஜோ தும் தோடோ பியா" என்னும் மீரா பஜன் பாடலுக்கு ஒப்பிட்டு மீண்டும் ஸ்வரங்களில் இந்த மூன்றையும் இணைத்து பாடிக்காட்டுவார்.. 27 ஸ்ருதிகளில் பாடக்கூடிய ஸ்வர ஞானியாகிய பாலமுரளி பிரமாதப் படுத்தி இருப்பார்..

அப்பேர்ப்பட்ட பாலமுரளி கிருஷ்ணாவை "குருவிக்காரன் பொஞ்சாதி" என்று அதே படத்தில் ஜிப்ஸி பாடலையும் பாட வைத்திருப்பார்..

நடிகர் திலகம் சிவாஜியுடன் இவர் இணைந்த "ராஜராஜ சோழனில்" சிவாஜி கவிதை சொல்லச் சொல்ல டி.ஆர்.மஹாலிங்கம் அதை ராகமாக பாடும் "தென்றலோடு உடன் பிறந்தாள்" ஒரு வித்தியாசமான முயற்சி..

இதே படத்தில் இசைத்துறையில் மூன்று ஆகிருதிகளான "சீர்காழி - டி.ஆர்.மகாலிங்கம் - எஸ்.வரலட்சுமி" ஆகிய மூவரையும் "தஞ்சை பெரியகோயில் பல்லாண்டு வாழ்கவே" பாடலில் இணைத்திருப்பார்.. "நஞ்சைக் கழனிகளின் நாயகனே" என்று ஆரம்பமே படு கம்பீரமாக இருக்கும்.. மூன்று குரல்களும் ஒன்றாக சேர்ந்து ஒலிக்கும் பொழுது "வெண்கல நாதம்" மாதிரி இருக்கும்...

உச்சஸ்தாயியில் மேல்கால சஞ்சாரம் எல்லாம் செய்து பிருகாக்களோடு பாடும் டி. ஆர்.மகாலிங்கத்துக்கு அகத்தியர் படத்தில்  ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் சாகித்யமான எஸ்.ஜி.கிட்டப்பாவின் "ஆண்டவன் தரிசனமே தியாகேசன் தாண்டவ தரிசனமே" பாடலை உளுந்தூர்பேட்டை சண்முகம் வரிகளில் "ஆண்டவன் தரிசனமே மெய்யடியார் வேண்டிடும் அனுபவமே" என்று பாட வைத்திருப்பார்.. சொல்லத் தேவையே இல்லை ஹோம் கிரவுண்டில் சச்சின் ஆடுவது மாதிரி தான்... பிச்சு உதறி இருப்பர் டி.ஆர்.எம். (இதுபோல தனது பழைய பக்திப் பாடல்களான "ஆடுகின்றனடி தில்லையிலே"  பாடலை "ஏடு தந்தானடி" என்றும் "வேல்வந்து வினை தீர்க்க" பாடலை "காவலுக்கு வேலுண்டு" என்று மனிதனும் தெய்வமாகலாம் படத்திலும் பயன்படுத்தி இருக்கிறார்).

இந்தப் படத்தில் தான் நான் முந்தைய பதிவில் சொன்ன "இசையாய் தமிழாய் இருப்பவனே" பாடல்.. கடகடவென ஓடும் ரன்னிங் நொட்டேஷனில் கவிஞர் கே.டி.சந்தானத்தின் பல்லை உடைக்கிற வார்த்தைகளில் அருமையான Male டூயட்.. இந்த துரித கதி என்பது அவரது ஸ்டைலாகவே இருந்திருக்கிறது.. ஏராளமான பாடல்கள் இதே மாதிரி ஓடும் சங்கதிகளோடு அமைத்திருக்கிறார்.

கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் இவர் இசையில் காரைக்கால் அம்மையார், திருமலை தெய்வம் ஆகிய இரண்டு படங்களில் பாடி இருப்பார்.. அதிலும் காரைக்கால் அம்மையார் படத்தின் கிளைமாக்ஸ் பாடலான "தகதகதக தகதக வென ஆடவா" "திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம்" என்று மூன்று தாளக்கட்டுக்களில் மாற்றி மாற்றி கே.பி.எஸ்.குரலில் ஆனந்த தாண்டவத்தை இசை வடிவமாக கண் முன் நிறுத்தி இருப்பார்...

இவர் திரையில் தோன்றி நடித்த முதல் படமான கந்தர் அலங்காரத்தில் வயலின் இசைத்து அதில் வரும் தீப்பொறியில் ஆறு தீபங்கள் ஏற்றுவதாக ஒரு காட்சி வரும் (கேட்பதற்கு கொஞ்சம் தீப்பொறி திருமுகம் எபெக்ட்டில் இருந்தாலும்) ஷண்முகப்ரியா ராகத்தில் "வெல்லும் பெயர் தானே வேலவன்" என்று எஸ்.ஜானகி குரலில் ஒலிக்கும் பாடல் முழுதும் வயலினை திருப்பி பிடித்து மாண்டலின் போல் வாசிப்பது.. வில்லை எடுத்து மடார் மடார் என்று தந்தியில் அறைவது.. என்று வழக்கமான குன்னக்குடி சேட்டைகள்... என்னென்னெவெல்லாமோ செய்வாரு...

இதே படத்தில் எம்.ஆர்.ராதா கதாகாலட்சேபம் செய்வதாக ஒரு பாட்டு "கந்தா கடம்பா செவ்வேலா" என்று "பாகவதரின் "கிருஷ்ணா முகுந்தா" பாடலை எம்.ஆர்.ராதாவின் குரலில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை வைத்து மிமிக்ரி செய்திருப்பார்...

நான் முதல் பத்தியில் சொன்ன மலரோ நிலவோ பாடல் இடம்பெற்ற "ராக பந்தங்கள்" படத்தில் மற்றொரு நல்ல பாடல் "சரி கம பத நி என்னும் சப்தஸ்வர ஜாலம்".. இசைப் பயிற்சியின் பல கட்டங்களாக "சரளி, ஜண்டை, கீதம் ஆகியவற்றை" முதன் முதலில் பயிற்றுவிக்கப்படும் "மாயா மாளவகௌளை" ராகத்தில் அமைத்திருப்பார்..

அவருக்கு மாநில அரசு விருது பெற்றுத் தந்த திருமலை தென்குமரியில் அனைத்து மொழி பேசுபவர்களும் பாடுவதாக அமைந்த (பாரத விலாஸ் டைப்) பாடல் ஒன்று உண்டு.. "அமுதே தமிழே" என்று சீர்காழி தொடங்கி வைப்பார் பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், நடுவில் "பாடணுன்னு மனசுக்குள்ள ஆச நெறய  கீது" என்று பேட்டை பாஷையில் மனோரமா என்று போய் கடைசியில் காலேஜ் மாணவர்கள் பாடும் ஆங்கிலம் கலந்த தமிழாக முடியும்... அருமையாக செய்திருப்பார்.. எனக்கு இதில் மிகவும் பிடித்தது எம்.ஆர். விஜயா பாடிய "தாசினா கரையுவே பா கிருஷ்ணா" என்கிற கன்னடப் பாடல்..

இதைத் தவிர "ஜெயலலிதா" என்ற ராகத்தை கண்டுபிடித்தது (அட சத்தியமா தாங்க)... மழை வராத பொழுது சென்னை புழல் ஏரியில் நின்று அமிர்தவர்ஷினி வாசித்து இப்படி நெறய இருக்கு...

இவர் தயாரித்து வெளியிட்ட தோடி ராகம் படத்தில் "தோடியில் பாடுகின்றேன்" என்று டி.என்.சேஷகோபாலன் பாடும் அருமையான பாடல் உண்டு (ஜெயா டிவியில் பார்த்ததாக நினைவு... பாடல் இணையத்தில் கிடைக்கவில்லை)

இந்தப் படத்துல "கொட்டாம்பட்டி ரோட்டிலே.. குட்டி போற ஷோக்கிலே" என்றொரு வண்டிக்காரன் பாட்டு உண்டு.. வில்லங்கமான வார்த்தைகளுடன் வரும் இந்தப் பாடலை பாடியவர் சாட்சாத் குன்னக்குடியே தான்...

வலையப்பட்டி தவிலோடு இணைந்து வயலின்... வயலின் தனிக்கச்சேரி... ராக ஆராய்ச்சி... ஏ.ஆர்.ரகுமான், ஜாகிர் உசேனோடு இணைந்து "கலர்ஸ்" என்னும் கலப்பிசை... இதுபோக சினிமா இசையமைப்பு என்று பல தளங்களிலும் இருந்தாலும் அவரது இசை "பக்தி இசை" என்ற அடையாளத்துக்கு உள்ளேயே வருகிறது.. அதில் குன்னக்குடியின் சாதனை அதை எளிமையாக்கி எல்லாரையும் ரசிக்க வைத்ததே....

இறுதியாக.... இந்தப் பதிவை நான் இப்போது எழுதக் காரணம் வரும் வியாழன் (08-செப்டெம்பர்) அன்னாரின் எட்டாம் ஆண்டு நினைவேந்தல்...

குன்னக்குடி அவர்கள் உடலால் மறைந்து எட்டாண்டுகள் ஆயினும் அவர் நாதம்  "குன்றாக் குடி" கொண்டு இருக்கிறது நம் எல்லோர் இதயங்களிலும்...

1 comment:

  1. உலகம் சமநிலை பெறவேண்டும் என்ற அகத்தியர் திரைப்படப் பாடலின் ராகம் என்ன ஐயா ?

    ReplyDelete