Saturday, November 19, 2016

நதியோடும் கரையோரம்!!

"வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம் 
நாள் ஒன்றிலும் ஆனந்தம் 
நீ கண்டதோ துன்பம் 
இனி வாழ்வெல்லாம் இன்பம் 
சுக ராகமே ஆரம்பம்!! "

"உறவுகள் தொடர்கதை' பாடலின் சரணத்தில் வரும் இந்த வரிகளை கடந்த வாரம் ஒரு நண்பருக்கு முகநூல் செய்தி அனுப்பும் போதே நெனச்சேன்... அடடா தாடிக்காரரைப் பத்தி நம்ம Blog ல எழுதாம விட்டுட்டோமே அப்படின்னு... அடுத்து இன்னிக்கு "தேவனின் கோயில் மூடிய நேரம் நான் என்ன கேட்பேன்" பாட்டு கேட்கிற ஒரு சந்தர்ப்பம் வந்ததும் முடிவே பண்ணி களத்துல இறங்கிட்டேன்... ஏற்கனவே 7 - 8 வருஷங்களுக்கு முன்பு வேறொரு இடத்தில் இவரைப் பத்தி எழுதி இருந்தாலும் என்னோட சொந்த தளத்தில் எழுதும் போது மகிழ்ச்சி தான்.. முத்தம் என்பது சுவையானது என்றால் எத்தனை முறை தந்தாலும் சுவையானது தானே!!!

இந்த தாடிக்காரரை எப்படி அடையாள படுத்துவதுன்னு தெரியல... இப்போதைக்கு "அஷ்டாவதானி " ன்னு வச்சுக்குவோம்...




183 படங்களுக்கு இசையமைப்பாளர், கிட்டத்தட்ட ரெண்டாயிரம் பாடல்கள் எழுதிய பாடலாசிரியர், 100 நாள் கண்ட படங்கள், வெள்ளி விழா படங்கள் உட்பட 22 படங்களுக்கு இயக்குனர், கதை - வசனகர்த்தா, தயாரிப்பாளர், "பாமா ருக்மணி", "புதிய வார்ப்புகள்" போன்ற படங்களில் கே.பாக்யராஜுக்கு பின்னணிக் குரல் கொடுத்த டப்பிங் கலைஞர், தேவைப்படும் போது நடிகரும் கூட, ஜி.கே.வெங்கடேஷ், தெட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள், அர்ஜுனன் மாஸ்டர் உள்ளிட்ட பலரிடம் ரிதம் கிடாரிஸ்ட், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் இப்படி சொல்லிகிட்டே போகலாம்... மூணாங்கிளாஸ் வரைக்கும் படிச்ச இந்த மனிதர் பேனா பிடிக்கும் போது வந்து கொட்டுகிற தமிழ் அலாதியானது... "என்னது மூணாங்களாசாவா????".... ஓஓஓஓ அஷ்டாவதானின்னு சொன்னதும் நீங்க கருப்பு தாடிக்காரரை நெனைச்சுட்டீங்களா... இவரு வெள்ள தாடிக்காரருப்பா......

பேரு "R. டேனியல் அமர்சிங்"....

கவிஞர் வைரமுத்து வார்த்தைகளில் சொல்வதென்றால் "எப்போதும் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும் உற்சாக கங்கை அமரன்".....

அவர் மட்டுமல்ல.. அவரைப் பற்றி பேசுறதுன்னா எனக்கும் உற்சாகம் தொத்திக்கும்... பயறுமூட்டையை பொத்துவிட்ட மாதிரி கடகடன்னு கொட்டப்போறேன்.... பொறுத்துக்கோங்க...



பாவலர் பிரதர்ஸில் இளையராஜாவுக்கு அடுத்து அதிகம் அறியப்பெற்ற முகம்... இவரு வெவ்வேறு துறைகளில் செஞ்ச விஷயங்களைப் பற்றி பேசணும்னா ஒரு ரெண்டு மூணு பதிவாவது நான் எழுதணும்.. அதனால "பாடலாசிரியர் கங்கை அமரன்" பத்தி மட்டும் இப்போ பாக்கலாம்...

 "எங்கள் அண்ணன் பாவலர் வரதராஜன் தான் எங்கள் இசைக்கு ஆதாரம்" என்பது பல மேடைகளில் இளையராஜாவே சொன்னது தான் என்றாலும் சினிமாவில் நாம் கேட்கும் இளையராஜாவின் இசை என்பது பாவலரின் பாணி அல்ல.. அது டி.வி.ஜி யிடம் பயின்ற கர்நாடக இசை, Trinity College of Music ல் படித்த Western Guitar, தன்ராஜ் மாஸ்டரிடம் பயின்ற Western Classical மற்றும் Arrangement, ஜி.கே.வெங்கடேஷிடம் கற்ற இசை நுணுக்கங்கள் இப்படி பலவற்றின் கலவையே... அதில் கிராமிய பாணி என்கிற ஒரு துளி மட்டுமே பாவலரின் இன்ஸபிரேஷன்...  ஆனால் பாவலரின் எழுத்து பாணியை முழுக்க முழுக்க அப்படியே சுவீகரித்த அவரது நிஜ வாரிசு கங்கை அமரன்... புரியும் படியே சொல்றேன்...

கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்தவர் பாவலர் வரதராஜன்.
ஏற்கனவே இருந்த சினிமா மெட்டுக்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துக்களை எளிய வார்த்தைகளில் ஜனரஞ்சகமாக மக்களிடம் சேர்ப்பது தான் பாவலர் ஸ்டைல்.. இதற்கு உதாரணமாக பல பாடல்களைச் சொல்லலாம்... உணவுப் பஞ்சம் வந்த போது காங்கிரஸ் கட்சியை எதிர்த்து "விஸ்வநாதன் வேல வேணும் " என்கிற காதலிக்க நேரமில்லை படத்தின் பாடலின் மெட்டில் "சி.சுப்ரமண்யம் சோறு வேணும்" என்று பாடுவார்...  சரணத்தில்

"கங்கையும் காவிரி பாய்ந்து செழிக்கும் என் இந்திய நாட்டினிலே 
திங்கிற சோத்துக்கு டிங்கி அடிக்குது எங்களின் வாழ்க்கையிலே" என்று போகும்

குடும்பக் கட்டுப்பாட்டை எதிர்த்து "ரூப் தேரா மஸ்தானா மெட்டில் "

"லூப்பு தர்றான் சர்தானா
மாட்டலன்னா விடுறானா?? " என்று கிண்டல் செய்வார்

பாலிருக்கும் பழமிருக்கும் பாடல் மெட்டில் :

"ஏர்பிடிக்கும் உழவனுக்கு நிலமிருக்காது
எந்திரமாய் உழைத்திடுவான் பலனிருக்காது
ஆறுவகை உணவிருக்கும் பசியிருக்காது
அடிவயிற்றை பசி கடிக்கும் கூழிருக்காது" என்று பாடுவார்...

கம்யூனிஸ்ட் தலைவர் அஜய் கோஷ் மறைந்த போது "மலர்ந்தும் மலராத பாதி மலர்" மெட்டில்

"உழைத்துக் களைத்தோரின் இயக்கம்தனைக் காத்து
வளர்த்த அஜய்கோஷ் அய்யா
உம்மை நினைத்து துடித்தேங்க நிலத்தில் எம்மைநீயும்
விடுத்து பிரிந்தாய் அய்யா " என்று உருகுவார்

"பூமாலையில் ஓர் மல்லிகை' பாடல் மெட்டில்

"மாவீரமாய் போராடியே வியட்நாம் தானே வென்றது
எங்கும் வீரவாழ்த்து கேட்குது 
உள்ளம் விம்மியே துள்ளுது" என்று பாடுவார்



இதையெல்லாம் அருகில் இருந்து கேட்டும் அவரது கச்சேரிகளில் பெண்குரலாகவும் இருந்து பாடியும் வந்த அமருக்கு இயற்கையிலேயே அந்த எழுத்துப் பாணி ஒட்டிக் கொண்டிருக்கிறது.... அதன் விளைவாக அந்தப் பாணியில் விளையாட்டாக வார்த்தைகளை போட்டு எழுத ஆரம்பித்தார் அமரன்...

"குமரிப் பெண்ணின் உள்ளத்திலே" மெட்டில் "

"முருகப் பெருமான் கோயிலிலே
முடியெடுக்க நான் வரவேண்டும்
முடியெடுக்க நான் வருவதென்றால்
காணிக்கை என்ன தரவேண்டும்" என்று ஆரம்பித்த எழுத்து

ஒரு மேடையில்  சிறைப்பட்ட கம்யூனிஸ்ட் தொண்டர்களை விடுதலை செய்யும்படி "எனக்கொரு மகன் பிறப்பான்" பாடல் மெட்டில்

"அவர்களைத் திறந்துவிடு - இல்லை
அவருடன் எமையும் தூக்கிலிடு" ன்னு பாவலர் அண்ணன் பாடிய பாடலில் சரணத்தை அமரன் தன் சொந்த வரிகளில் பாடினார் இப்படி...

"வாடும் தொழிலாளர் வாழ்வை வளமாக்க 
வாழ்வில் பெரும்பாதி அளித்தார்
ஓடும் துயரென்று உறுதி தனைப்பூண்டு 
உறக்கமதைக் கூட ஒளித்தார்"

அது தான் அவரது எழுத்துக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்... இது நடந்த போது 13 - 14 வயதுப் பையனாக இருந்திருக்கிறார்...

அந்த நேரம் மலேரியா இன்ஸ்பெக்டர் சின்னச்சாமி (பாரதிராஜா) இவர்களோடு சேர்ந்து நாடகம் போட ஆரம்பித்தபோது, நாடகத்தில் கதாநாயகனாக நடித்த பாரதிராஜாவுக்கு முதன்முதலில் இளையராஜா இசையில் ஒரு பாடல் எழுதினார்

"வெண்ணிலவின் காவலிலே கங்கை நதி ஓடும்
கங்கை நதி ஓரத்திலே கண்ணன் மனம் பாடும்"

அதைத் தொடர்ந்து அந்த காலகட்டத்தில் நிறைய எழுதி இருக்கிறார்

"வைகறையில் வைகைக்கரையில்
வந்தால் வருவேன் உன் நினைவில்" (பின்னாளில் பயணங்கள் முடிவதில்லையில் வந்த பாடல்)

"அந்தப்புரத்தில் ஒரு மகாராணி - அவள்
அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்" (இதன் பல்லவியை மட்டும் வைத்துக் கொண்டு சரணங்களை திரைக்கு எழுதினார் புலமைப்பித்தன்)

இதெல்லாம் 13 லிருந்து 15 வயதுக்குள் இவர் எழுதிய பாடல்களில் சில...

சென்னைக்கு வந்து "பாவலர் பிரதர்ஸ்" என்ற பெயரில் சினிமா வாய்ப்பு தேடி அலைந்த சமயங்களில் நாடகங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்கள்... ஓ.ஏ.கே.தேவரின் ஒரு நாடகத்திற்கு இவர் எழுதிய பாட்டு

"மூன்று தமிழ்க் காவியமும் முருகனுக்கு தொட்டிலடி
முத்தமிழின் சங்கமமே முருகனுக்கு கட்டிலடி
நன்று சொன்ன தலைவனுக்கு நாடெல்லாம் கோயிலடி
நாளுமந்த கோயிலிலே நல்லநாள் கோலமடி"

நாடகத்தில் இளையராஜாவின் இசையில் இந்தப் பாடலை பாடியவர்கள் ஷோபா சந்திரசேகரும் (நடிகர் விஜயின் அம்மா) அவரது சகோதரி ஷீலாவும்... பின்னாளில் இந்த மெட்டு "பத்ரகாளி படத்தில் "கண்ணன் ஒரு கைக்குழந்தை" என்று வாலியின் வரிகளில் உருவெடுத்தது...

1975ல் இளையராஜா "பாப் ஹிட்ஸ் ஆப் 1975 - பாவலர் பிரதர்ஸ்" என்று ஒரு ஆல்பம் தயாரித்திருக்கிறார்.. இணையத்தில் பாடல்கள் எங்கும் கிடைக்கவில்லை.. இசை ஆராய்ச்சியாளர் வாமனனின் நூலில் இதற்கான குறிப்பு மட்டும் கிடைக்கிறது.. அதில் அனைத்து பாடல்களும் எழுதியது கங்கை அமரன் தான்...  அன்னக்கிளிக்கு முன்பாக "தீபம்" என்று ஒரு படம் பூஜை போடப்பட்டு "பாவலர் பிரதர்ஸ்" இசையில் முதல் பாடல் பதிவானது.. டி.எம்.எஸ். குரலில்

"சித்தங்கள் தெளிவடைய சிவனருளை நாடு" என்று பாடல் எழுதியவர் கங்கை அமரன்... படம் வெளிவரவில்லை...

1976ல் வெளிவந்த  அன்னக்கிளி ஹிட் அடிக்க... பின்னாலேயே  "16 வயதினிலே" படத்துடன் பாரதிராஜா அறிமுகம் ஆகிறார்... தனக்கு முதன்முதலில் பாடல் எழுதிய கங்கை அமரனை "சோளம் வெதைக்கையிலே" என்று தனது முதல் படத்தின் டைட்டில் பாடலை எழுத வைக்கிறார்... அந்தப் படத்தில் மற்றொரு பாடல்... கண்ணதாசன் எழுதுவதற்கு மெட்டமைக்கப் பட்டு கங்கை அமரன் டம்மி வரிகளை எழுதினார்...

"மன்னன் வருவான்... மாலையிடுவான்
இந்த மனதில்... இன்பம் தருவான்" என்று..

ஆனால் அந்த மெட்டு தேர்வாகவில்லை... (பின்னாளில் இந்த மெட்டு "பொண்ணு ஊருக்கு புதுசு படத்தில் "சோலைக்குயிலே காலைக்கதிரே" என்று M.G.வல்லபன் வரிகளில் உருவானது.. அதிலும் டெல்லியிலிருந்து வல்லபன் டெலிபோனில் சொல்லச்சொல்ல எழுதியவர் அமரன் தான்)

வேறு மெட்டு போடப்பட்டது... தான் முன்பே எழுதி இருந்த வரிகளை அப்படி இப்படி தூக்கி போட்டு அமர் மாற்றிக் கொடுத்தார்...

"என் மன்னன் எங்கே... என் மன்னன் எங்கே 

மாலைவரும் அந்த நாளை உரைத்திடுங்கள்
சாலைவழி எங்கும் பூவை இறைத்திடுங்கள்" என்று

"அமர் எழுதுனதே ரொம்ப நல்லாருக்கு.. இதையே வச்சுக்கலாம்" என்று பாரதிராஜா போட்ட பிள்ளையார் சுழியில் உருவான பாடல் தான் "எஸ்.ஜானகிக்கு தேசிய விருது பெற்றுத் தந்த "செந்தூர பூவே"..

தனது அடுத்த படம் கிழக்கே போகும் ரயிலிலும் அமரனை பாடல் எழுத வைத்தார் பாரதிராஜா...  "பூவரசம்பூ பூத்தாச்சு" என்று எழுதினார் கங்கை அமரன்..

அந்த சமயத்தில் "தியாகம்" படத்திற்கு பாடல் எழுத வந்த  கண்ணதாசனிடம் "ஒரு பூ பாட்டு எழுதுங்கண்ணே" என்று கேட்க... 'இந்த இவன் தான் ஊர்ல ஒரு பூ விடாம எழுதி வச்சிருப்பானே... சாயபு, செருப்பு ரெண்டு பூவத்தவிர மிச்ச எல்லாத்துலயும் எழுதிட்டான்" என்று இவரை கண்ணதாசன் கலாய்த்திருக்கிறார்... அன்று அவர் எழுதின பாட்டு "தேன்மல்லிப் பூவே... பூந்தென்றல் காற்றே"

பாரதிராஜா - கங்கை அமரன் இணை ரொம்ப அபூர்வமான பாடல்களை படத்திற்கு படம் தந்திருக்கிறது


  • செந்தூரப்பூவே - 16 வயதினிலே
  • பூவரசம்பூ பூத்தாச்சு - கிழக்கே போகும் ரயில்
  • நம் தன நம் தன  தாளம் வரும் - புதிய வார்ப்புகள்
  • பூங்கதவே தாழ் திறவாய் - நிழல்கள்
  • சிறுபொன்மணி அசையும் - கல்லுக்குள் ஈரம்
  • புத்தம் புது காலை - அலைகள் ஓய்வதில்லை


நிழல்களில் அறிமுகமான வைரமுத்து பிறகு "முதல் மரியாதை, புதுமைப் பெண், கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கொடி பறக்குது" படங்களில் அனைத்துப் பாடல்களையும் எழுதி இருக்கிறார்.. ஒரு நெடிய இடைவேளைக்கு பிறகு பாரதிராஜா மீண்டும் இளையராஜாவுடன் கைகோர்த்த "என் உயிர்த்தோழன், புதுநெல்லு புதுநாத்து" படங்களில் மீண்டும் அமரன் ராஜாங்கம்...

விட்ட இடத்துக்கே வரேன்... பாரதிராஜா மட்டுமல்ல... வைரமுத்து வரும் வரைக்கும் ஏராளமான மற்ற படங்களுக்கும் பாடல்கள் எழுதி இருக்கிறார்..

"ஜானி", "பகல் நிலவு", "பன்னீர் புஷ்பங்கள்", "அறுவடை நாள்" இப்படி படத்திலுள்ள அனைத்து பாடல்களும் எழுதிய படங்களும் நிறைய உண்டு... உதாரணத்துக்கு மிகப்பிரபலமான சில பாடல்கள் மட்டும் :


  • காற்றில் எந்தன் கீதம் - ஜானி
  • பூமாலையே தோள் சேரவா - பகல் நிலவு
  • உறவுகள் தொடர்கதை - அவள் அப்படித்தான்
  • ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் - முள்ளும் மலரும்
  • என் இனிய போன் நிலாவே - மூடு பனி
  • பூவண்ணம் போல மின்னும் - அழியாத கோலங்கள்
  • பொன்மேனி உருகுதே - மூன்றாம் பிறை
  • தேவனின் கோவில் மூடிய நேரம் - அறுவடை நாள்


இப்போது நான் சொன்னது மிகத் தெளிவாக புரிந்திருக்கும்... எளிமையான வார்த்தைகளை கொண்டு சூழலை மெட்டுக்குள் அடைக்கிற பாணியை பாவலரிடம் இருந்து அமரன் எப்படி பெற்றிருக்கிறார் என்று... இளையரஜாவின் இசை பாணி எப்படி வேறுபட்டது என்று மேலே சொல்லிட்டேன்.. அவருடைய எழுத்து நடையும் "ஜீவன், ஆத்மா, தேவர்கள், தியாகராஜர்" இப்படி அது ஒரு தனி ரகமாகவே இருக்கும்... அதுக்கும் பாவலருக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது.. அதுக்கும் சினிமாட்டிக் சிச்சுவேஷனுக்குமே சம்பந்தம் இருக்கான்னு கவனிக்கணும்....

 இன்னும் ஒரு அருமையான உதாரணம் சொல்றேன்... "தலைவனை எண்ணி தலைவி பசலை நோயில் வாடுறா... இரவு நேரம் ... தூக்கம் வரல... பாடுறா இப்படி"

"நள்ளென்றன்றே யாமம்; சொல் அவிந்து
இனிது அடங்கினரே மக்கள்; முனிவு இன்று
நனந்தலை உலகமும் துஞ்சும்;
ஓர்யான் மன்ற துஞ்சா தானே"

இது குறுந்தொகையில பதுமனார் பாடிய செய்யுள்... இதை கண்ணதாசன் எளிமையாக்கி இப்படி பாடினாரு

"பூவுறங்குது பொழுதும் உறங்குது நீயுறங்கவில்லை நிலவே
கானுறங்குது காற்றும் உறங்குது நானுறங்கவில்லை" அப்படின்னு

நம்மாளு அதையும் இன்னும் எளிமையா ஆக்கிபுட்டாரு

"ஊருசனம் தூங்கிருச்சு.. ஊதக்காத்தும் அடிச்சிருச்சு
பாவிமனம் தூங்கலையே அதுவும் ஏனோ தெரியலையே"...

அதாங்க கங்கை அமரன்!!!!

அதுக்காக ரொம்ப சப்பையா மட்டுமே எழுதக்கூடியவர் அப்படினு முடிவுக்கு வந்துடாதீங்க... இளையராஜா இசையில் கடுமையான சந்தங்களைக் கூட அற்புதமான தனது வரிகளால் அழகு படுத்தியவர்... ரெண்டு மூணு உதாரணம் பாக்கலாம் :

"நதியும் முழுமதியும் இரு இதயம்தனில் பதியும்
ரதியும் அதன்பதியும் பெரும் சுகமே உதயம்
விதை ஊன்றிய நெஞ்சம் விளைவானது மஞ்சம்
கதைபேசுது கவிபாடுது கலந்தால் சுகம் மிஞ்சும்"

"சிறுபொன்மணி" அசையும் பாடலின் ரெண்டாவது சரணம்.. என்ன ஒரு கவித்துவம் பாருங்க

"சிந்தனை அம்புகள் எய்தது என்னிடம் வந்து விழ பல சிந்தை எழ
மனம் மன்னவன் உன்னடி வந்து தொழ
சிந்திய பூ மலர் சிந்திவிழ அலைபோல் உணர்வோ தினம் முந்தியெழ
அந்தியில் வந்தது சந்திரனோ சந்திரன் போலொரு இந்திரனோ
முந்திய நாளினில் எந்தனின் முன்பலனோ
துணை சுகம் தர சுவை பெற"

'இந்திரையோ இவள் சுந்தரியோ" என்னும் குற்றாலக்குறவஞ்சிப் பாடலை அடிப்படையாகக் கொண்டு "நம் தன நம் தன " என்று முடியாமல் நீண்டுகொண்டே போகும் பல்லவியை கொண்ட பாட்டின் ரெண்டாவது சரணம் இது...

"வெண்ணிலவும் பொன்னிநதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையில் சுகமன்றி
தந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்
கன்னிமயில் அருகே இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்"

"எனக்கு ஓஹோன்னு பாடத் தெரியாட்டாலும் ஓரளவுக்கு பாடுவேங்க" என்று சொல்லிவிட்டு மூச்சுவிடாமல் எஸ்.பி.பி பாடிய "மண்ணில் இந்த காதல்" பாடலின் சரணம்... பாவலர் வரதராஜன் பாட்டு என்று படத்தில் வரும்.. உண்மையில் எழுதியவர் கங்கை அமரன்"

"பிரிந்தே வாழும் நதிக்கரை போல தனித்தே வாழும் நாயகி
இணைவது எல்லாம் பிரிவதற்காக.. 
இதயங்களெல்லாம் மறப்பதற்காக
மறந்தால்தானே நிம்மதி"

தேவனின் கோவில் பாடலின் முதல் சரணத்தில் வரும் மனதை உருக்கும் வரிகள்

"இளங்காதல் ஆசை நெஞ்சில் ஏக்கம் அது தாக்கும்
இரவென்ன பகலும் என்ன தூக்கம் போகும்
பிரிவேதும் அறியா நெஞ்சில் உருவானது பாரம்
உறவென்னும் உணர்வால் இங்கே உயிரே பாரம்
உறவே வெறும் கனவே வரும் நினைவே பழங்கதையே
கனவே என தெரிந்தும் மனம் நினைக்கும் அதையே"

"ஆவாரம்பூ" படத்தில் வரும் "நதியோடும் கரையோரம்" பாடலின் சரணம்... சோகத்திற்குள்ளும் ஒரு சுகம் இருக்கிறது என்பதற்கு இந்தப் பாட்டு ஒரு உதாரணப்பாடல்.... பலமுறை கேட்டு தூக்கம் தொலைத்துண்டு...

இப்படி நெறய இருக்கு...

ராஜாவின் பொற்காலமாகிய 80களில் கிட்டத்தட்ட படத்துக்கு ஒரு பாட்டு கங்கை அமரன்னு இருந்திருக்கு... நிறைய நல்ல நல்ல பாடல்கள்...




  • நிலவு தூங்கும் நேரம் - குங்குமச்சிமிழ்
  • சீர்கொண்டுவா வெண்மேகமே - நான் பாடும் பாடல்
  • சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு - பூந்தோட்ட காவல்காரன்
  • ஆத்துமேட்டுல ஒரு பாட்டு கேக்குது - கிராமத்து அத்தியாயம்
  • இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே - வைதேகி காத்திருந்தாள்
  • அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் - சின்னத்தம்பி
  • பூவ எடுத்து ஒரு மால - அம்மன் கோயில் கிழக்காலே
  • இந்த மான் எந்தன் சொந்தமான் - கரகாட்டக்காரன்
  • தென்பாண்டி தமிழே என் சிங்காரக் குயிலே - பாசப்பறவைகள்
  • செண்பகமே செண்பகமே - எங்க ஊரு பாட்டுக்காரன்
  • அரும்பாகி மொட்டாகி பூவாகி - எங்க ஊரு காவக்காரன்


இந்த நேரத்துல ஒரு பக்கம் இயக்குநரா "கரகாட்டக்காரன்", எங்க ஊரு பாட்டுக்காரன்", "செண்பகமே செண்பகமே", "கோயில் காளை", "கும்பக்கரை தங்கையா"ன்னு வெற்றி படங்களை இயக்கிட்டு இருந்திருக்காரு... இன்னொரு பக்கம் நிறைய படங்களுக்கு இசை அமைப்பு.. இதில் அவர் இயக்கிய படங்கள் அனைத்திலும் பாடல்கள் அவர் தான்... அது சொல்லத் தேவையில்லை...

இதை தவிர அவர் இயக்காத, இந்த காலகட்டத்தில் வந்த நிறைய படங்களுக்கு அனைத்து பாடல்களும் எழுதி இருக்கிறாப்ல... உதாரணத்துக்கு :

ஜல்லிக்கட்டு, பாண்டி நாட்டு தங்கம், அம்மன் கோயில் கிழக்காலே, எங்க ஊரு காவக்காரன், சூரசம்ஹாரம்... இப்படி ஒரு 20 - 30 படங்கள் இருக்கும்...

கவிஞர் வாலி ராஜ் டிவி நடத்திய ஒரு விழாவில் தனது வாரிசு அப்டின்னு "கவிஞர் பா.விஜய்" பெயரை சொன்னாரு.. என்ன கேட்டா கவிஞர் வாலியின் நிஜமான திரையுலக வாரிசு கங்கை அமரன் தான்.. அவ்வளவு நெருக்கமா இருக்கும் ரெண்டு பேரோட எழுத்து நடையும்... உதாரணத்துக்கு நினைவே ஒரு சங்கீதம் படத்துல "எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்"னு ஒரு பாட்டு சந்தோஷமாகவும் பின்னர் சோகமாகவும் ரெண்டு முறை வரும்.. இதுல ஒண்ணு கங்கை அமரன் இன்னொண்ணு வாலி எழுதினது.. எது யாருதுன்னே வித்தியாசம் சொல்ல முடியாது... இன்னும் ரசனையான ஒரு சம்பவம் உண்டு...

"நிதமும் உன்னை நினைக்கிறேன்... நினைவினாலே அணைக்கிறேன்"

இது கங்கை அமரன் "உன் பார்வையில்" பாட்டுக்கு எழுதிய வரி... அடுத்த பாட்டு ரெக்கார்டிங்குக்கு வந்திருந்த கவிஞர் வாலி 'டேய் அமரா.. உன் பாட்டுல ஒரு வரி ரொம்ப நல்லா இருந்துது.. அத நான் பயன்படுத்திக்கிறேன்" என்று சொல்லி எழுதியது தான்

"எனை நீதான் பிரிந்தாலும்  நினைவாலே அணைப்பேனே" என்கிற 'நிலாவே வா" பாடலின் வரி... ஒரு காலத்தில் வாலிக்கு உதவியாளராக சேரணும்னு கனவோடு அலைஞ்ச அமரனுக்கு வாலி கொடுத்த மிகப்பெரிய கௌரவம் அது...

மனப்பூர்வமாக ஒரு விழாவில் இப்படி பாராட்டினார் கூட "எங்கிட்ட ஏதாவது கவித்துவம் இருக்குன்னு நீங்க நெனச்சீங்கன்னா.. அதே அளவு கவித்துவம் இந்த கங்கை அமரன்கிட்டையும் இருக்கு" அப்டின்னு

இது ஒரு பக்கம் இருந்தாலும் கங்கை அமரன்னு சொன்னதும் பலருக்கும் நினைவுக்கு வருவது "டண்டனக்கடி" வகையறா பாடல்கள் தான்.. இதை இல்லைன்னும் முழுசா மறுத்துட முடியாது... ரொம்ப எளியமையா எழுதுறாரு அப்படிங்கிற ஒரே காரணுத்துக்காக தொடர்ந்து இவருக்கு இது மாதிரி வாய்ப்புகளே நிறைய தரப்பட்டிருக்கு... வேறு வார்த்தைகளில் சொல்வதுன்னா.. ஒரு படத்துல 6 பாட்டு 6 கவிஞர்கள் எழுதுறாங்க அப்டின்னா அதுல குத்துப்பாடோ அல்லது மலிவான ரசனையை உடைய பாடலோ இவருக்குன்னு ஒதுக்கப்பட்டிருக்கு... உதாரணத்திற்கு


  • ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா - பயணங்கள் முடிவதில்லை
  • வச்சுக்கவா உன்னமட்டும் நெஞ்சுக்குள்ள - நல்லவனுக்கு நல்லவன்
  • வாடி என் பொண்டாட்டி நீதாண்டி - வெள்ளை ரோஜா
  • அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி - நீங்கள் கேட்டவை
  • கண்ண தொறக்கணும் சாமி - முந்தானை முடிச்சு
  • வாடி என் கப்பக்கிழங்கே - அலைகள் ஓய்வதில்லை
  • வா வா வாத்தியாரே வா - முந்தானை முடிச்சு
  • வெத்தல மடிச்சுத்தர - மண்ணுக்கேத்த பொண்ணு
  • பொன்மேனி உருகுதே - மூன்றாம் பிறை


கங்கை அமரன் வாலி மாதிரி மெலடி பாடல்களுக்கு எழுதிய இதே நேரம், வாலியும் கங்கை அமரன் சாயலில் 'நேத்து ராத்திரி யம்மா", "நெலாக்காயுது நேரம் நல்ல நேரம்", "சும்மா நிக்காதீங்க நான் சொல்லும்படி வைக்காதீங்க"ன்னு தரைரேட்டுக்கு எழுத ஆரம்பிச்சிருந்தாரு...

அதே மாதிரி வேறு அரசியல் வில்லங்கங்களும் அமரன் பாடல்களுக்கு வந்து சேர்ந்தன... "ருக்குமணி வண்டி வருது... ஓரம்போ ஓரம்போ" என்று இவர் எழுதிய பாடலை நம்ம ஊரு ரேடியோ தடை செய்தது... ஆனால் சிலோன் ரேடியோவில் விடாமல் ஒலித்தது இந்தப்பாட்டு... சிலோனுக்கு கச்சேரி பண்ணப் போன இசையரசர் டி.எம்.எஸ் கிட்ட ஒரு பத்திரிகை நிருபர் "இந்த பாட்ட பத்தி என்ன நெனைக்கிறீங்க"ன்னு போட்டு வாங்க... "நேராப்போ ன்னு  சொல்லாமே ஒவ்வொருத்தனையும் பாத்து ஓரம்போ ஓரம்போன்னு சொல்றது அறச்சொல் மாதிரி ஒலிக்குது.. இது பாடியவர்களுக்கும் இசையமைத்தவர்களுக்கும் இழுக்கு" அப்டின்னு அவரும் யதார்த்தமா சொல்லிவைக்க... மறுநாளே இலங்கையின் மித்திரன் பத்திரிகைல இது பப்பரப்பா நியூஸ் ஆகிப்போனது.. அதோட இளையராஜாகிட்ட டி.எம்.எஸ். பாடுறதுக்கும் எண்டு கார்டு போட்டாச்சு...  ஒருகாலத்தில் திரைப்பட வெற்றிவிழாவில் தனக்கு கேடயம் வழங்கப் படாததற்கு "என்னுடைய உழைப்பும் இந்தப் படத்தில்  இருக்கு.. வேணும்னா என் பாட்டை நீக்கிட்டு படத்தை ஓட்டிப்பாருங்க" என்று தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணியிடம் தன்மானத்தோடு கர்ஜித்த அந்த இசைச்சிங்கம் கடைசிக்காலத்தில் "என்னை பயன்படுத்திக்க ராஜா" என்று ஆனந்த விகடனில் பேட்டி கொடுக்கும் நிலைக்கு போனது காலத்தின் வினோத விளையாட்டு...

சமீபத்தில் "மேல ஏறி வாரோம் கொஞ்சம் ஒதுங்கி நில்லு" என்று அமரன் எழுதிய பாட்டுக்கும் அதே பொருள் தான்.. பாவம் அந்த இசைக்கலைஞன்...

அதே போல "ஒண்ணரை அணா காய்கறிய ஒன்னாருவா ஆக்கிபுட்டாங்க"ன்னு கோழி கூவுது படத்தில் இவர் எழுதிய பாடலின் வரிகளை அலேக்கா தூக்கி போஸ்டரில் போட்டு, அதற்கு கீழே "வாக்களிப்பீர் உதய சூரியனுக்கே' அப்படின்னு எதிர்க்கட்சி எம்.ஜி.ஆருக்கு எதிரா இடைத்தேர்தலில் பயன்படுத்த... தோட்டத்திற்கு அழைத்து முதல்வர் எம்.ஜி.ஆறே இவரை இந்த வரிகளை பற்றி விசாரிக்கிற அளவுக்கு போனது... கடந்த பொதுத்தேர்தல்ல "ஆளுமா டோலுமா" பாட்டு இதே டெக்கினிக்கில் தான் பயன்பட்டது...

இவர் இந்த நேரத்தில் பிசியாக இருந்தார்.. இந்த நேரம் குறைவாக எழுதினார்னு எல்லாம் சொல்றதுக்கு இல்லை.. 90களிலும் நிறைய பாடல்கள் எழுதி இருக்காப்ல "ஆவாரம்பூ, தங்க மனசுக்காரன், சின்னவர், சின்னப்பசங்க நாங்க, அத்த மக ரத்தினமே" ன்னு ஒரு வண்டிப் படங்கள்...அதற்கு பிறகு இளையராஜா தனக்கு சரியான வாய்ப்பு தரல அப்படின்னு சமீபத்துல கூட ஒரு பேட்டில சொல்லி இருந்தாரு...

2000க்கு பிறகும் உன்னை சரண் அடைந்தேன், மங்காத்தா, சென்னை 600028ன்னு நிறைய படங்களுக்கு எழுதிக்கொண்டு தான் இருக்கிறார்....



கவிஞர் வாலி சொன்னது போல மற்ற துறைகளிலும் சாதனைகள் நிறைய செய்திருந்தாலும் இளையராஜா முழுமையாக தன்னை இசையில் கரைத்துக்கொண்டதை போல இவர் பாடலாசிரியராக மட்டுமே கவனம் செலுத்தி இருந்தால் வாலி - வைரமுத்துவுக்கு இன்னும் கடுமையான சவாலாக இருந்திருப்பார் என்பதில் எள்முனை அளவுக்கும் சந்தேகமில்லை...

எத்தனை கவித்துவமான பாடல்கள் இருந்தாலும்... எத்தனை துள்ளலான பாடல்களை எழுதி இருந்தாலும், என்னை கங்கை அமரனின் பால் ஈர்த்த ஒரு பாட்டு உண்டு... இந்தப் பாடலுக்காகவே ஒரு சமயத்தில் விடிகாலையில் எழுந்து விஜய் டிவி பார்த்ததுண்டு...

அது அமரன் எழுதி இசையமைத்த "அம்மா" என்கிற பக்திப் பாடல் ஆல்பத்தின் முதல் பாடலான பாண்டிச்சேரி அரவிந்த அன்னையின் மேல் அமைந்த "மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே"

இளையராஜாவுக்கு "ஜனனி ஜனனி" மாதிரி அமருக்கு "மலர்போல மலர்கின்ற"... அவரது வரிகளிலேயே நிறைவு செய்வதென்றால்... அந்த நல்ல கலைஞனையும் அவரது கவித்துவத்தையும்

"ஒரு நோயும் தீண்டாமல் அணை போடு தாயே,
நதி காய நேராமல் நீரூற்று தாயே
இந்நிலம் பார்த்து நீயே..!"

1 comment:

  1. Enakku piditha kavignargalil oruvar- gangai amaran...
    But got loads n loads of info about his songs n work...

    Antha kalathhu arasiyal vilaiyattugalsi padikka swarasyamaga irundhadhu.

    Thank u for ur info and I thought that "poongadhavae thazh thiravaai" song was from vairamuthu as his song "idhu oru pon maalai pozhudhu" was famous for his first attempt... hence i thought all the song was from vairamuthu.

    ReplyDelete