Saturday, November 12, 2016

ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு!!!

ஒரே சாயலில் அமைந்த பாடல்கள் வேறு இசையமைப்பாளர் இசை அமைத்ததாக கருதப் படுவதை நாம் அநேகம் முறை பார்த்தும் கேட்டும் இருக்கிறோம்.. ஒரே சாயலில் அமைந்த வரிகள் அதே காலகட்டத்தில் இருந்த பிறிதொரு கவிஞரால் எழுதப் பட்டதாக கற்பிதங்கள் உண்டு... இந்த வரிசையில் ஒரே சாயலில் அமைந்த குரல்களில் வந்த பாடல்கள் மற்றொருவர் பாடியதாக கருதப் பட்ட வரலாறும் நிறைய உண்டு... மனோ பாடிய பல பாடல்கள் எஸ்.பி.பி என்று நினைத்ததுண்டு.

அதே போல இவர் பாடிய பல பாடல்கள் ஏசுதாஸ் என்றும் அவர் பாடியவற்றை இவருடையது என்றும் நினைத்ததுண்டு....  "அவர்" கடவுளின் தேசம் கேரளம் தமிழுக்கு தந்த மிகச் சிறந்த குரல்களில் ஒன்றான 'பாவகாயகன்' 'கலைமாமணி'  "பி.ஜெயச்சந்திரன்" (மலையாளிகளிடம் பேசும் போது இந்த இனிஷியல் ரொம்ப முக்கியம் வெறுமனே ஜெயச்சந்திரன் பாட்டு என்றால் பி.ஜெயச்சந்திரனா?? எம்.ஜெயச்சந்திரனா?? என்று கேட்பார்கள்)....



மலையாளத்தில் "பாவகாயகன்" என்பது எந்த பாவத்திற்கும் உணர்ந்து பாடக்கூடியவர் என்று பொருள்படும்... இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகள் உட்பட 15,000 பாடல்களுக்கு மேல் பாடிய எவர்கிரீன் பாடகர்.... அதில் முக்காலே மூணு வீசம் மெல்லிசைப் பாடல்கள் தாம்... லேசான பேஸ் வாய்ஸுடன் கூடிய உறுத்தாத மிக மெல்லிய சாரீரம் ஜெயச்சந்திரனுடையது....

 என்னதான் யேசுதாஸின் சாயல் இருந்தாலும் ஜெயச்சந்திரனை பளிச்சென்று வேறுபடுத்திக் காட்டும் ஒரு விஷயம் அவரது தமிழ் உச்சரிப்பு.. பிள்ளையை 'பில்லை' என்றும் செந்தூர பந்தம் என்பதை செந்தூர 'பெந்தம்' என்றும் யேசுதாஸ் பாடுவது போல இருக்காது இவர் உச்சரிப்பு....

"மாஞ்சோலை கிளிதானோ" பாடலின் இரண்டாவது சரணம் ஒன்று போதும் இதற்கு உதாரணம்

"மின்னல் ஒளியென கண்ணைப் பறித்திடும் 
அழகோ தேவதையோ
அங்கம் ஒரு தங்கக் குடம் அழகினில்
மங்கை ஒரு கங்கை நதி உலகினில்
துள்ளும் இசை தேன் தான்
அள்ளும் கரம் நான் தான்
மஞ்சம்தனில் வஞ்சிக்கொடி 
வருவாள் சுகமே தருவாள் மகிழ்வேன்
கண்காவியம் பண்பாடிடும் பெண்ணோவியம் செந்தாமரையோ"

"ழ / ல / ள" மற்றும் "ன / ண" உச்சரிப்ப்பில் என்ன தெளிவு பாருங்கள்...
தத்தகாரத்தில் காற்புள்ளி, அரைப்புள்ளி மாறாமல் தமிழ் எழுதும் கவிஞர் முத்துலிங்கத்தின் வரிகளை சிதைக்காமலும், கரகரப்ரியாவின் துரித கதியில் அமைந்த மெட்டை இனிமை குறையாமலும் அருமையாகப் பாடி இருப்பார்...

எல்லாரையும் போல எனக்கும் ஜெயச்சந்திரன் என்றதும் உடனே நினைவுக்கு வருவது "ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு" தான்.. இதனாலே இவர் இளையராஜாவின் கண்டுபிடிப்பாக இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு சிறுவயதில் உண்டு.. ஆனால் இவர் எம்.ஜி.ஆர், முத்துராமன் காலத்து பாடகர் என்பது 90 களில் நான் கேசட்டுகளை பதிவு செய்ய அடிக்கடி செல்லும் "எலக்ட்ரோ மியூஸிக்கல்ஸ்" வாயிலாக அறிந்தது...

சின்ன வயதில் மிருதங்கம் கற்று அப்போதைய காலகட்டத்தில் நிறைய போட்டிகளில் வாசித்திருக்கிறார்.. யேசுதாஸ் சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு போட்டியில் இவரை சிறந்த மிருதங்க கலைஞராக தேர்வு செய்த்திருக்கிறார்கள்... அவ்வப்போது சின்னச் சின்ன லைட் மியூசிக் குழுக்களிலும் பாடிக்கொண்டு இருந்திருக்கிறார்...1965ல் பாகிஸ்தான் போர் நிதிக்காக இவர் ஏதோ ஒரு இசைநிகழ்ச்சியில் பாடியதை கேட்ட தயாரிப்பாளர் "ஆர்.எஸ்.பிரபு" இவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.. ஆனால் அதற்கு முன்பாகவே தேவராஜன் மாஸ்டர் இசையில் "களித்தோழனில்" இவர் பாடிய "மஞ்சலையில் முங்கி தோர்த்தி" வெளிவந்து ஹிட் அடிக்க இவரது பாட்டுப் பயணத்துக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது... ஆரம்பகாலங்களில் அதாவது 70களின் முற்பாதியில் தேவராஜன், எம்.கே.அர்ஜுனன், தெட்சிணாமூர்த்தி சுவாமிகள், எம்.எஸ்.வி ஆகியோர் இவருக்கு நிறைய வாய்ப்புகளை கொடுத்திருக்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் இவர் பாடிய சில அற்புதமான பாடல்கள் :


  • நின் மணியறையிலே - சி.ஐ.டி.நசீர்
  • சுவர்ண கோபுர நர்த்தகி - திவ்யதர்ஷனம்
  • சந்தனத்தில் கடைஞ்செடுத்தொரு - சாஸ்திரம் ஜெயிச்சு மனுஷ்யன் தோத்து
  • சந்தியக்கு எந்தினு சிந்தூரம் - மாயா
  • நீலகிரியுடே சகிகளே - பனிதீராத்தவீடு


இதில் கடைசிப் பாடல் 1972ல் இவருக்கு கேரளா அரசின் சிறந்த பாடகர் விருதை பெற்று தந்த பாட்டு... இசை மெல்லிசை மன்னர்.... பிறகென்ன ஜெயச்சந்திரனை அப்படியே லபக்கென்று தமிழுக்கு தூக்கிட்டு வந்துட்டார்  எம்.எஸ்.வி...

அதே ஆண்டு இயக்குனர் ஏ.ஜெகந்நாதனின் முதல் படமான "மணிப்பயல்" படத்தில் "தங்கச்சிமிழ் போல் இதழோ" தான் இவர் முதன்முதலாக பாடிய தமிழ் பாட்டு (பி.பி.எஸ் பேஸ் வாய்ஸில் பாடியதோ என்று தோன்றுகிறது)...

அதோடு நில்லாமல் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்திருக்கிறார் எம்.எஸ்.வி... 76ல் இளையராஜா வரும் வரையில் இவர் பாடிய சில ஹிட் பாடல்கள் :


  • மந்தார மலரே மந்தார மலரே - நான் அவன் இல்லை
  • பொன்னென்ன பூவென்ன கண்ணே - அலைகள்
  • வசந்த கால நதிகளிலே - மூன்று முடிச்சு
  • ஆடிவெள்ளி தேடி உன்னை நான் அடைந்த - மூன்று முடிச்சு
  • திருமுருகன் அருகினிலே - மேயர் மீனாட்சி
  • அமுத தமிழில் எழுதும் கவிதை - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்


தமிழிலும் மலையாளத்திலும்  தனக்கு முதல் வாய்ப்பு அளித்தஎம்.எஸ்.வி மற்றும் தேவராஜன் மாஸ்டர் மீது அதீத பற்றுதலும் மரியாதையும் உடையவர் ஜெயச்சந்திரன்...



70களின் இரண்டாவது பாதியில் ஒரு பக்கம் எம்.எஸ்.வி என்றால் இன்னொரு பக்கம் இளையராஜா என்று கலக்கி இருக்கிறார்... இளையராஜாவின் ஆரம்பகால பாடல்களில் இவரது சில ஹிட் பாடல்கள் :


  • பூந்தென்றலே நல்ல நேரம் - புவனா ஒரு கேள்விக்குறி
  • ஒரு வானவில் போலே - காற்றினிலே வரும் கீதம்
  • சித்திரை செவ்வானம் - காற்றினிலே வரும் கீதம்
  • மாஞ்சோலை கிளிதானோ - கிழக்கே போகும் ரயில்
  • செவ்வானமே பொன்மேகமே - நல்லதொரு குடும்பம் 
  • மஞ்சள் நிலாவுக்கு இன்று - முதல் இரவு


70களில் ரஜினி மற்றும் கமலுக்கு சில பாடல்கள் பாடி இருக்கிறார் பிறகு நிரந்தரமாக அந்த இடம் எஸ்.பி.பாலுவுக்கு தாரை வார்க்கப்பட்ட பிறகு இவர்கள் இருவருக்கும் இவர் பாடவில்லை... நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினிக்கு பாபா படத்தில் பாடி இருப்பார்...

1980 கள் தான் இவர் தமிழில் அதிகமாக பாடிய காலம்...  இதை நாம் விரிவாக பார்க்க வேண்டும்... 80களின் முற்பாதியில் இவரை எம்.எஸ்.வி, இளையராஜா மட்டுமன்றி சங்கர் கணேஷ், கங்கை அமரன், சலீல் சௌதுரி, ஜி.கே. வெங்கடேஷ், டி.ராஜேந்தர் என்று அன்றைய நாளின் அநேக இசையமைப்பாளர்களும் பயன்படுத்த ஆரம்பித்தனர்... இந்தக் காலகட்டத்தில் வெளிவந்த இவரது பாடல்களில் சில :


  • கவிதை அரங்கேறும் நேரம் - அந்த 7 நாட்கள் (எம்.எஸ்.வி)
  • தென்றலது உன்னிடத்தில் - அந்த 7 நாட்கள் (எம்.எஸ்.வி)
  • வசந்த காலங்கள் - ரயில் பயணங்களில் (டி.ராஜேந்தர்)
  • கடவுள் வாழும் கோவிலிலே - ஒரு தலை ராகம் (டி.ராஜேந்தர் )
  • காதல் ஒருவழிப் பாதை - கிளிஞ்சல்கள் (டி.ராஜேந்தர் )
  • பூவண்ணம் போல மின்னும் - அழியாத கோலங்கள் (சலீல் சௌதுரி)
  • இசைக்கவோ நம் கல்யாண ராகம் - மலர்களே மலருங்கள் (கங்கை அமரன் )
  • பாடு தென்றலே - நெல்லிக்கனி (சங்கர் கணேஷ்)
  • மலரோ நிலவோ மலைமகளோ - ராக பந்தங்கள் (குன்னக்குடி வைத்தியநாதன்)
  • பாடிவா தென்றலே - முடிவல்ல ஆரம்பம் (இளையராஜா)
  • தேவன் தந்த வீணை - உன்னை நான் சந்தித்தேன் (இளையராஜா)
  • பூவிலே மேடை நான் போடவா - பூவிலங்கு (இளையராஜா)
  • காதல் மயக்கம் அழகிய கண்கள் - புதுமைப்பெண் (இளையராஜா)
  • தாலாட்டுதே வானம் - கடல் மீன்கள் (இளையராஜா)
  • காளிதாசன் கண்ணதாசன் - சூரக்கோட்டை சிங்கக்குட்டி (இளையராஜா)



1984ல் வெளிவந்த சுந்தர்ராஜனின் "வைதேகி காத்திருந்தாள்" ஜெயச்சந்திரனின் தமிழ் சினிமா அத்தியாயத்தில் ஒரு புதிய ஏட்டை புரட்டிப் போட்ட படம்... "ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு"ன்னு ஜெயச்சந்திரன் உருகுவது கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக இன்றும் காற்றலைகளில் மிதந்து கொண்டிருக்கிறது... இந்த ஒரே பாட்டின் மூலம் கிட்டத்தட்ட விஜயகாந்தின் பாட்டுக் குரலாகவே மாறிப்போனார் ஜெயச்சந்திரன்... 20 வருடங்களுக்கு மேலாக 2005ல் "எங்கள் அண்ணா" வரை நீள்கிறது இந்த இணை... எத்தனை சூப்பர் ஹிட் பாடல்கள் :


  • இன்றைக்கு ஏனிந்த - வைதேகி காத்திருந்தாள்
  • காத்திருந்து காத்திருந்து - வைதேகி காத்திருந்தாள்
  • மயங்கினேன் சொல்ல தயங்கினேன் - நானே ராஜா நானே மந்திரி
  • தேகம் சிறகடிக்கும் - நானே ராஜா நானே மந்திரி
  • பூவ எடுத்து ஒரு மால - அம்மன் கோயில் கிழக்காலே
  • பூமுடித்து பொட்டுவைத்த வட்டநிலா - எம் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்
  • புல்லைக்கூட பாடவைத்த - என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்
  • கஸ்தூரி மான்குட்டியாம் - ராஜ நடை 
  • விழியே விளக்கொன்று ஏற்று - தழுவாத கைகள்
  • சோதனை தீரவில்ல - செந்தூர பூவே
  • ஏழை ஜாதி கோழை ஜாதியல்ல - ஏழை ஜாதி
  • காதல் வெண்ணிலா - வானத்தை போல
  • வெள்ளையாய் மனம் பிள்ளையாய் - சொக்கத்தங்கம்
  • கொஞ்சி கொஞ்சி பேசும் மைனாவே - எங்கள் அண்ணா


80களின் பிற்பகுதி தான் ஜெயச்சந்திரன் தமிழில் அதிகம் பயன்படுத்தப்பட்ட காலம்... இதில் விஜயகாந்த் தவிர மற்ற நடிகர்களுக்கும் இவர் பாடிய சில ஹிட் பாடல்கள் :


  • கொடியிலே மல்லிகைப்பூ - கடலோரக் கவிதைகள்
  • அழகாக சிரித்தது அந்த நிலவு - டிசம்பர் பூக்கள்
  • அதிகாலை நிலவே - உறுதிமொழி
  • உன்னைக் காணும் நேரம் நெஞ்சில் - உன்னை நான் சந்தித்தேன்
  • எனது விழி வழிமேலே - சொல்ல துடிக்குது மனசு
  • அடி மாடிவீடு மானே - நட்பு
  • ராஜா மகள் ரோஜா மகள் - பிள்ளை நிலா
  • அழகிய அண்ணி - சம்சாரம் அது மின்சாரம்
  • கவிதை கேளுங்கள் - புன்னகை மன்னன் (ஆலாபனை மற்றும் ஜதி மட்டும்)


ஒருபக்கம் தமிழில் வெற்றி பாடல்களை தந்து கொண்டே மறுபக்கம் தனது தாய்மொழியில் 1988ல் 'ஸ்ரீ நாராயண குரு' படத்திற்காக "சிவசங்கர சர்வ" என்கிற பாடலுக்காக தேசிய விருதினை பெற்றார்...

1987ல் சின்னப்பூவே மெல்லப்பேசு படத்தில் ஆரம்பித்த தொடர்பில் அடுத்து இவரை எஸ்.ஏ.ராஜ்குமார் தனது படைப்புகளில் தொடர்ந்து நிறைய பாட வைத்திருக்கிறார் உதாரணத்துக்கு :


  • சின்னப்பூவே மெல்லப்பேசு - சின்னப்பூவே மெல்லப்பேசு
  • பூந்தென்றலே நீ பாடிவா - மனசுக்குள் மத்தாப்பூ
  • சொல்லாமலே யார் பார்த்தது - பூவே உனக்காக
  • இது காதலின் சங்கீதம் - அவள் வருவாளா
  • ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ - சூர்யவம்சம்
  • காதல் வெண்ணிலா - வானத்தை போல


90களில் இளையராஜாவின் ஆஸ்தான பாடகராக மனோ இருந்ததால் ஜெயச்சந்திரனுக்கு பெரிய அளவில் வாய்ப்புக்கள் கிடைத்திருக்கவில்லை... "ஒரு சின்ன மணிக்குயிலு (கட்டப் பஞ்சாயத்து), "வள்ளி வள்ளி என (தெய்வ வாக்கு), "ஊரெல்லாம் சாமியாக (தெய்வ வாக்கு)" என கிடைத்த வாய்ப்பையெல்லாம் தவற விடாது ஹிட் அடித்திருக்கிறார்...

90களில் மீண்டும் மலையாளத்தில் பிசி ஆகி 'பிராயம் நம்மில்'(நிறம்) பாடலுக்காக மூன்றாவது கேரளா அரசு விருதை தட்டினார்..

1975ல்  9 வயது சிறுவன் திலீப் தன் தந்தை இசையமைப்பில்  "பெண்படா" என்கிற படத்தில் "வெள்ளிக்கிண்ணம்" என்ற பாடலுக்கு  இசை அமைத்தான்... பாடியவர் ஜெயச்சந்திரன்.. பின்னர் 17 ஆண்டுகள் கழித்து  திலீப் ஏ.ஆர்.ரஹ்மானாக மாறிய பின்னர் தனது இசையில் முதன் முதலில் பாடிய ஜெயச்சந்திரனுக்கு நிறைய வாய்ப்புக்கள் கொடுத்திருப்பார்... உதாரணத்துக்கு சில :


  • சித்திரை நிலவு - வண்டிச்சோலை சின்ராசு
  • கொல்லையில தென்னை வச்சு - காதலன்
  • என் மேல் விழுந்த - மே மாதம்
  • கத்தாழக் காட்டுவழி - கிழக்கு சீமையிலே
  • ஒரு தெய்வம் தந்த பூவே - கன்னத்தில் முத்தமிட்டால்
  • ராஜ்யமா இல்லை இமயமா - பாபா


2000க்கு பிறகு ஜெயச்சந்திரனுக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லை பரணி இசையில் (சுந்தரா டிராவல்ஸ்), வித்யாசாகர் இசையில் (தம்பி), ஜி.வி.பிரகாஷ் இசையில் (கிரீடம்) இப்படி அத்திப் பூத்தாற்போல பாடல்கள் அமைந்திருக்கின்றன... ஆனால் இந்த காலகட்டத்தில் மனிதர் மலையாளத்தில் படுபிஸியாக இருந்திருக்கிறார்.. கிட்டத்தட்ட எல்லார் இசை அமைப்பிலும்.... சும்மா ஒரு சாம்பிளுக்கு :


  • நீ மணிமுகிலாடல்கள் - வெள்ளித்திர (அல்போன்ஸ் ஜோசப்)
  • கல்லாயி கடவாதே - பெருமழக்காலம் (எம்.ஜெயச்சந்திரன்)
  • ஆலிலைத்தளியுமாய் - மிழி ரண்டிலும் (ரவீந்திரன் மாஸ்டர்)
  • பொண்ணுஷசின்னும் - மேக மல்ஹார் (ரமேஷ் நாராயண்)
  • ஸ்வயம்வர சந்திரிக்கே - கிரானிக் பேச்சிலர் (தீபக் தேவ்)
  • வட்டையில பந்தலிட்டு - யாத்ரகாருடே சிரத்தைக்கு (ஜான்சன் மாஸ்டர்)
  • தேரிறங்கும் முகிலே - மழைத்துளிகிளுக்கம் (சுரேஷ் பீட்டர்ஸ்)
  • இதலூர்ன்னு வீணா - தன்மத்ரம் (மோகன் சித்தாரா)




அவர் கடைசியாக பாடிய பாடல் நானறிந்த வரை பிஜிபால் இசையமைப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த "சு சு சுதி வாட்மீகம்" என்ற படத்தில் 'என்டே ஜன்னலருகில்'  என்ற பாடல்...

இந்தப் பாட்டை பாடும் போது அவருக்கு வயது 71.. ஆனால் இளைஞரான ஜெயசூர்யாவுக்கு இவரது குரல் அத்தனை இனிமையாக பொருந்துகிறது..... அது தான் நான் இந்தப் பதிவின் ஆரம்பத்தில் சொன்ன "எவர்கிரீன் வாய்ஸ்" என்பது!!!

2 comments:

  1. As usual மிக அருமையான பதிவு

    ReplyDelete
  2. பூவிலங்கு படத்தில் வரும் "கண்ணில் ஏதோ மின்னலடிச்சிருச்சு.." பாடலைப் பாடியவர் கே.ஜே.ஜேசுதாஸ். பி. ஜெயச்சந்திரன் அல்ல. உங்களுக்கும் குழப்பமா?

    ReplyDelete