நாட்டை Demonitization பிரச்சினை உலுக்கிக் கொண்டிருக்க எல்லாரும் ATM வாசலில் கால் கடுக்கக் காத்திருப்பது நாடறிந்தததே... ஆனால் எவரும் அறியாமல் இசை உலகின் ஒரு ATM களவு போனது கடந்த செவ்வாய்க்கிழமை... ATM என்றால் Any Time Music!!! ஆம், எம்.எஸ்.வி, இளையராஜா, ரகுமான், வித்யாசாகர் என்று திரை இசையமைப்பாளர்களாக இருந்தாலும் சரி.. அருணா சாய்ராம், ராஜேஷ் வைத்யா, சுதா ரகுநாதன் என்று கர்நாடக இசைக்கலைஞர்களாக இருந்தாலும் சரி எந்த நேரத்தில் இசையில் சந்தேகம் எழும்போதும் இவர்களெல்லாம் தேடுவது இந்த Reference Book ஐத் தான்... சொன்ன மாத்திரத்தில் பட்டென்று பாடிக்காட்டி விளக்கம் சொல்லும் Music Wiki... 27 ஸ்ருதிகளில் பாடிக்காட்டி விளக்கம் சொல்லக் கூடிய ஸ்வர ஞானி... பத்மவிபூஷன், பத்மஸ்ரீ, செவாலியே... இப்படி எத்தனையோ பட்டங்கள் விருதுகளைத் தாங்கி கொண்டும் நான் மேலே சொன்ன இன்னும் சொல்லப்படாத அத்தனை இசைக்கலைஞர்களாலும் "குருஜி" என்று அன்பொழுக அழைக்கப்பட்ட Dr. மங்கலம்பள்ளி பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் தாம் அந்த ATM....
மழலை மேதை (child prodigy), ஆறாவது வயதிலேயே கச்சேரி பண்ண ஆரம்பித்து விட்டார் என்றெல்லாம் சொல்வார்கள்... என்னைக் கேட்டால் இவருக்கு இசை என்பது வேறெங்கோ கற்றுக்கொள்ள வேண்டியதாக இல்லை.. அதுவே அவராக அவரே அதுவாக பிறந்தும் இருந்தும் இருக்கிறார்... பெற்றோர்கள் இருவரும் இசைக்கலைஞர்கள்.. அதுவும் இவரது தந்தை பட்டாபிராமைய்யா "சத்குரு தியாகராஜரின் சிஷ்ய பரம்பரையான சூசர்ல தட்சிணாமூர்த்தி சாஸ்திரிகளிடம்" பயின்றவர்... அதனால் தான் பிறக்கும் போதே பெயரிலேயே இசையைத் தாங்கி கொண்டு பிறந்திருக்கிறார் (முரளி என்றால் புல்லாங்குழல்).. 16 வயதுக்குள் 72 மேளகர்த்தா ராகங்களில் சாகித்யங்களையும் இயற்ற முடிந்திருக்கிறது...
சாஸ்திரிய சங்கீதத்துக்கும் எனக்குமான தொடர்பு "வீசம் என்ன விலை? " என்கிற அளவு தான் என்பதால் அதிகப்பிரசங்கித் தனமாக எதுவும் பேசாமல் அவருக்கான எனது இதய அஞ்சலியை இந்தப் பதிவில் திரை இசையில் அவரது பங்களிப்பை பற்றி மட்டுமே பேச விழைகிறேன்...
பாலமுரளி என்றதும் எனக்கு மட்டுமல்ல இசை விரும்பிகள் பலருக்கும் நினைவுக்கு வருவது இரண்டு விஷயங்கள்... ஒன்று அவரது மென்மையான மனதைப் பிடித்து இழுக்கும் வசீகரக் குரல் மற்றொன்று இசையில் அவர் செய்த Experiments... எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, பத்து வருஷங்களுக்கு முன்பு அவருக்கு செவாலியே விருது கிடைத்ததற்கான பாராட்டு விழாவில் வழக்கமான அவரது கீர்த்தனைகளும் தில்லானாக்களும் பாடிவிட்டு ஹைதராபாதில் இருந்து சென்னை வரும்போது ஸ்டேஷன்களின் பெயர்களை பார்த்து எண்ணிக்கொண்டு வந்ததாகவும் அதை வைத்து ஒரு பாடல் படுவதாகவும் சொல்லிப் பாடினார்... ஹைதராபாத்தில் தொடங்கி சார்மினார் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மாதிரி வேகமெடுத்து "நெல்லூர், கூடூர், நாயுடுபேட்டா, சூலூர்பேட்டா, பேசின் பிரிட்ஜ், சென்ட்ரல்... என்று கடகடவென்று முடியும் பாடல்.. முன்வரிசையில் அமர்ந்திருந்த ஜெயலலிதா ரசித்து கேட்டார்.. அடுத்ததாக இந்தப் பாடல் முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்று சொல்லிவிட்டு "ஜெய ஜெய லலிதே... ஜெயலலிதே" என்று அவரது பெயரில் தான் இயற்றிய கிருதி ஒன்றைப் பாடி அசத்தினார்... விழாவில் பேசிய ஜெயலலிதா "அடுத்த பிறவியில் தான் குருஜியின் மாணவியாகப் பிறந்து அவரிடம் சபாஷ் வாங்க வேண்டும்" என்று விரும்புவதாக நெகிழ்ந்து போய் பேசினார்...
இதை எதற்கு இப்போது சொல்கிறேன் என்றால் இவரது திரைப்பாடல்கள் பெரும்பாலும் "கர்நாடக சங்கீதத்தின் மேதைமை உள்ள கதாபாத்திரங்கள் அல்லது இது போன்ற Musical Experiments வகைப் பாடல்களே"!!
தெலுங்கு, சம்ஸ்கிருதம், கன்னடத்தில் பாடி இருந்தாலும் தமிழில் முதன்முதலில் இவர் பாடியது 1964ல் வெளிவந்த இயக்குனர் ஸ்ரீதரின் "கலைக்கோயில்" படத்தில் தான்.. குடியால் குடை சாய்ந்த ஒரு வீணை இசைக்கலைஞன் மீண்டு வந்து கலைக்கோயில் எழுப்புவதாய் அமைந்த "சிந்து பைரவி" சாயல் கதை .. அதில் அந்த இசைக்கலைஞன் பாடுவதாக அமைந்த சூழலில் ஒரு பண்பட்ட பாடகரைப் பாடவைக்க வேண்டும் என்று எல்லோரும் விரும்பினார்கள்.... படத்தின் தயாரிப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி... வேறன்ன வேண்டும்...தனது குருஜிக்கு போன் செயது நீங்க தான் பாடணும் என்று சொல்லிப் பாடவைத்தார்... அந்தப் பாட்டு "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா" என்னும் கோபாலகிருஷ்ண பாரதியின் புகழ்பெற்ற பாடல் அமைந்த "ஆபோகி" ராகத்தில் அமைந்த "தங்கரதம் வந்தது வீதியிலே" என்னும் பாடல்...
அதற்கு அடுத்த ஆண்டு தான் (1965) தமிழ் சினிமாவில் பாலமுரளியின் குரலை பட்டொளிவீசிப் பறக்கவிட்ட திருவிளையாடல் வெளிவந்தது... தோற்கும் பாடல்களை பாடமாட்டேன் என்று சீர்காழி சொல்லிவிட்டதால் கே.வி.எம்.மாமா இவரைப் பாடவைத்திருக்கிறார்... ஆனால் "ஒருநாள் போதுமா?? இன்றொரு நாள் போதுமா" என்று இவரது அமர்க்களமான எடுப்பே ஹேமநாத பாகவதராக வந்த டி.எஸ்.பாலைய்யாவுக்கு கனகச்சிதமாக பொருந்திப் போனது .. குரலில் என்ன ஒரு கெத்து... முதல் சரணம் வரை வரும் வரிகளை இசையமைத்து விட்டு இரண்டாவது சரணத்தில் வரும் ராகமாலிகையை இவரிடமே விட்டிருக்கிறார்கள்... தோடி,தர்பார், மோஹனம் ,கானடா என்று வரிசையாக அடுக்கி "இசை தெய்வம் நானடா" என்று முடிப்பது சாட்சாத் பாலமுரளியின் சொந்த இசையே.....
1970ல் கண்மலர் என்றொரு படத்தில் "ஓதுவார் உன்பெயர் ஓதுவார்... ஓம் ஓம் ஓம் எனும் மந்திரத்தின் உட்பொருள் நாடுவார்" என்று ஒரு பாடல் சூலமங்கலத்தோடு இணைந்து பாடி இருப்பார்... "தோடுடைய செவியன்" என்னும் "ஞானசம்பந்தர் பதிகத்தோடு" தொடங்கும் பாடலாதலால் ஞானத்தோடு நெருங்கிய சம்பந்தம் உள்ள இவரைப் பாடவைத்திருக்கிறார் கே.வி.எம்... சித்தூர் வி. நாகையாவுக்கு அத்தனை அழகாக பொருந்துகிறது இவர் மென்மையான சாரீரம்... பாடலின் சரணத்தில்
"கங்கை கொண்டான் என்மேல் கருணை கொண்டான் - பிறைத்
திங்கள் கொண்டான் நெஞ்சைத் திருடிக் கொண்டான் - பாதி
மங்கை கொண்டான் எந்தன் மனதைக் கொண்டான் - இவை
யாவையும் கொண்டான் எந்தன் மாலையும் கொண்டான் "
என்று வரும் வரிகளைக் கேட்டுவிட்டு "இது எதோ தேவாரம் திருவாசகம்னு நெனச்சேன்.. வாலி நீ எழுதுனதாமே?? " என்று கண்ணதாசன் வியந்து பாராட்டியிருக்கிறார்...
1975ல் பாலச்சந்தர் "அபூர்வ ராகங்கள்" படம் எடுக்கும் போது எம்.எஸ்.வியிடம் "படத்துக்கு அபூர்வ ராகங்கள்ன்னு பெரு வச்சிருக்கேன்... அதனால இதுவரை சினிமாவில் வராத அபூர்வமான ஒரு ராகத்தில் நீங்க ஒரு பாட்டு போடணும்" என்று கோரிக்கை வைக்க, எம்.எஸ்.வி அணுகியது பாலமுரளி அவர்களைத் தான்... "மஹதி" என்று தானே கண்டுபிடித்த ஓரு ராகத்தை (ச - க - ப - நி என்று வெறும் நான்கு ஸ்வரங்கள் மட்டுமே கொண்டது) சொல்லித்தந்து உதவி இருக்கிறார்.. அதில் அமைந்த பாடல் தான் "அதிசய ராகம்... ஆனந்த ராகம்"...
(அவரை நான் குருஜின்னு சொல்லுவேன்.. அவரு ஒத்துக்கமாட்டாரு என்ன குருஜிம்பாரு.. எங்க ரெண்டு பேருக்கும் "குரு சாட்சாத் பரப்பிரம்மா" தான் என்கிறார் எம்.எஸ்.வி).. இதுபோல மூன்று அல்லது நான்கு ஸ்வரங்களை மட்டுமே உடைய பல ராகங்களை கண்டறிந்திருக்கிறார் இவர்... "மஹதி"யைப் போலவே "லவாங்கி", "சித்தி", "சுமுகம்" இவற்றுக்கும் நான்கு ஸ்வரங்கள் தான்... "கணபதி, ஓம்காரி, சர்வஸ்ரீ" இவற்றிற்கு வெறும் மூன்றே ஸ்வரங்கள் தாம்...
1977ல் இளையராஜா என்கிற புதிய இசையமைப்பாளரின் இசையில் "கவிக்குயில்" படத்தில் இரண்டு பாடல்கள் பாடினார் பாலமுரளி... படத்தின் ஆரம்பமே ஊர் ஊராக சென்று புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ண பக்தர் சிவகுமார் பாடும் "ஆயிரம் கோடி காலங்களாக ஆனந்த லீலையில் நாயகன் நீயே" என்னும் ராகமாலிகை தான் (மாயா மாளவகௌளை, வகுளாபரணம், வாகதீஸ்வரி, வலஜி, சக்ரவாகம், மோஹனம், மோஹன கல்யாணி, சாருகேசி என்று எட்டு ராகங்களில் அமைந்த அஷ்டராகமாலிகா).. படத்தின் மற்ற பாடல்கள் அளவுக்கு இந்த பாடல் ஏனோ பிரபலமாகவில்லை...
அடுத்தது கதாநாயகியின் மனதில் ஒரு தெரியாத ராகம் இருக்கும்.. அதை என்னவென்று கண்டுபிடித்து இசைப்பதாக சவால் விட்டுவிட்டு முதலில் "பஹாடி" ராகத்தை வாசிப்பார்... அது இல்லை என்றதும் அடுத்த ரகசிய ராகம் வாசிப்பார்.. அபூர்வ ராகங்கள் போலவே அதுவரை திரை இசையில் பயன்படுத்தப் படாத "பரிபாலயமாம்" என்னும் ஸ்வாதி திருநாள் கீர்த்தனை அமைந்த "ரீதி கௌளை" ராகத்தில் அமைந்த அந்தப் பாடல் தான் "சின்னக் கண்ணன் அழைக்கிறான்" (பால முரளிகிருஷ்ணா என்றால் சின்னக் கண்ணன் என்று பொருள்).. "அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி சின்னக் கண்ணன் அழைக்கிறான்" என்று பஞ்சு அருணாசலம் எழுதியதன் பொருள் இதுதான்...அவரது பெயரில் இருக்கும் குழல் போல இனிமையாய் நம் இதயத்தை வருடுகிறது அவரது குரலின் மென்மை... 34 வருடங்களுக்கு பிறகு இளையராஜாவின் மேடையில் இதே பாடலைப் பாடிய போதும் அவரது குரலின் வாத்சல்யம் கொஞ்சமும் குறையவில்லை....
அதே 1977ல் இன்னும் 2 அருமையான பாடல்கள் அவருக்கு அமைந்தன... முதலாவது அவரே திரையில் தோன்றி பாடும் "ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே"... சங்கர் கணேஷ் இசையில் இவரது சிஷ்யர் கமலின் "உயர்ந்தவர்கள்" படத்தில்... அடுத்தது குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு இவர் பாடியது...
ஏற்கனவே நான் "குன்னக்குடி' அவர்கள் பதிவில் சொன்னது தான் என்றாலும் திரு. பாலமுரளி அவர்களுக்கான அஞ்சலிப் பதிவான இதில் சொல்லாது விட்டால் முறையாகாது என்பதால் மீண்டும் சொல்கிறேன்... இதுவும் நான் சொன்னது போல "Musical Experimental" type பாடல் தான்... மேற்கத்திய இசைக்கு அடிப்படை கர்நாடக சங்கீதமே என்று நிரூபிக்கும் வகையில் ஒரு பாடல் வேண்டும் என்று எம்.ஜி.ஆர். கேட்டதும் குன்னக்குடியின் நினைவுக்கு வந்தவர் பாலமுரளி சார் தான்... முதலில் "Sound of Music" படத்தில் வரும் "Loanely Goathered" பாடலை தியாகய்யரின் "பலுக்கு கண்ட சா" என்கிற நவரச கானடா ராக கீர்தனைக்கு ஒப்பிட்டு விளக்குவார்.. அடுத்து "Golden Youths Always Rules" என்னும் "My Fair lady" படப்பாடலை "ஏதாவுனரா" என்னும் கல்யாணி ராக தியாகராஜ கீர்த்தனைக்கு ஒப்பிட்டு பாடிக்காட்டி பின்னர் அதையே ஹிந்துஸ்தானி "அமீர் கல்யாணி"யில் "ஜோ தும் தோடோ பியா" என்னும் மீரா பஜன் பாடலுக்கு ஒப்பிட்டு மீண்டும் ஸ்வரங்களில் இந்த மூன்றையும் இணைத்து பாடிக்காட்டுவார்..
இதே படத்தில் மீண்டும் ஒரு பரீட்சர்த்த முயற்சி "குருவிக்காரன் பொஞ்சாதி.." என்றொரு ஜிப்ஸி பாடல்.. எந்தவிதமான ஈகோவும் இல்லாமல் பாடி இருப்பார்.... பாலமுரளி அவர்களின் எளிமைக்கு இது ஒரு மிகச்சிறந்த உதாரணம்.. இதனால் தான் "சஹானா" மாதிரி டி.வி.சீரியல் பாடல் என்றாலும் அலட்டிக் கொள்ளாமல் பாட முடிகிறது இவரால்....
மீண்டும் கே.பி - எம்.எஸ்.வி - பாலமுரளி கிருஷ்ணா கூட்டணி கே.பி இருமொழிகளில் எடுத்த "நூல்வேலி" படத்தில் அமைந்தது... "மானஸ சஞ்சரரே" என்னும் சதாசிவ பிரம்மேந்திரரின் புகழ்பெற்ற கீர்த்தனம் அமைந்த 'சாமா" ராகத்தில் "மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே" என்றொரு மென்மையான பாடல்... இன்றும் வானொலிகளில் அரிதாகக் கேட்கக் கூடிய ஒரு அபூர்வமான பாடல்.. தெலுங்கிலும் "மௌனமே நீ பாஷா ஓ மூக மனசா" என்று பாலமுரளி கிருஷ்ணா அவர்களே பாடி இருப்பார்..
சின்னக் கண்ணனுக்கு பிறகு இளையராஜா 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் பாலமுரளி கிருஷ்ணாவை தனது படங்களில் பயன்படுத்தினார்... 1986ல் "இசை பாடும் தென்றல் என்றொரு படம்... சின்னக் கண்ணன் கூட்டணியாக அதே "தேவராஜ் - மோகன், சிவகுமார், இளையராஜா, பாலமுரளி கிருஷ்ணா".. இந்த முறை கூடுதலாக கே.ஜே.யேசுதாஸ் மற்றும் எஸ்.ஜானகியும்.... "ரகுவரா நன்னு மறவ தகுனா" என்னும் பந்துவராளி ராகத்தில் அமைந்த தியாகராஜ கீர்த்தனை... மூன்று பேரும் இணைந்து இசைப்பதாக ஒரு சிச்சுவேஷன்... சரணத்தில் தனது ஜெட் வேக ஸ்வரங்களில் அசத்தி இருப்பார் பாலமுரளி சார்...
தமிழில் மெல்லிசை மன்னரோடு இணைந்து "மெல்லத் திறந்தது கதவு" இசைத்த அதே ஆண்டு மலையாளத்தில் "தெட்சிணாமூர்த்தி ஸ்வாமிகளோடு இணைந்து "காவேரி" என்றொரு படம் இசை அமைத்தார் இளையராஜா.. மோகன்லால், மம்மூட்டி, நெடுமுடி வேணு என்று பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்த இந்தப் படத்தில் 4 பாடல்கள் பாடினார் பாலமுரளி...
திருவிளையாடலில் ஆணவக்கார பாடகனுக்கு பாடியதாலோ அல்லது தோல்வி அடையும் கதாபாத்திரமாக இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் எனக்கு எந்தக் கவலையும் இல்லை, எனக்கு சங்கீதம் சங்கீதம் தான் என்கிற மனோபாவமோ எது காரணம் என்று புரியவில்லை.... நடிகர் திலகம் சிவாஜியின் "மிருதங்க சக்கரவர்த்தி" படத்தில் "இது கேட்க திகட்டாத கானம்.. இதில் தேவை என்ன பக்கமேளம்" என்று எம்.என்.நம்பியாருக்கு பாலமுரளியை பாடவைத்திருப்பார்கள்... உடனே மிருதங்க வித்வான் சிவாஜி மிருதங்கத்தை ஓரமாக வைக்க, மக்களின் கூக்குரலுக்கு சரணாகதி அடைந்து "தேவை என்ன தர்க்கவாதம்" என்று மாற்றிப் பாடி "சிவாஜியிடம் தோற்றுப் போவது" போல ஒரு சூழல்... உண்மையிலேயே "கேட்கத் திகட்டாத கானம் தான்" ஆனால் "பார்க்க சகிக்காத நடிப்பு"... பாடல் காட்சிப்படுத்தும் விதத்தால் குட்டிச்சுவராகப் போன அருமையான பல பாடல்களில் இதுவும் ஒன்று... சிவாஜி - நம்பியார் இருவரின் நடிப்பும் (மிகைநடிப்பும்) இந்தப் பாட்டில் தாங்கமுடியாது.... நல்ல வேளை ஏற்கனவே நாரதர் வேஷத்தில் நடித்திருக்கிறார் என்பதால் இந்த நம்பியார் கெட்டப்பை பாலமுரளியையே போடவைக்காமல் விட்டதற்கே நாம் சினிமா உலகுக்கு பெரிய நன்றி சொல்ல வேண்டும்...
பாலமுரளி கிருஷ்ணாவின் குரல் வெல்லும் பாடலுக்கு ஒரு நல்ல உதாரணம் உண்டு... அதுவும் அவரது ஸ்டைலிலேயே....
கன்னடத்தில் பிரபல நாவலாசிரியர் 'த.ரா.சு (டி.ஆர்.சுப்பாராவ்) எழுதி திரைப்படமாக வெளிவந்து தேசிய விருதை அள்ளிய "ஹம்சகீதே" படத்தில் பாடல்களுக்கு இசை அமைத்தார் பாலமுரளி கிருஷ்ணா.. இதில் "ஹிமாத்ரி சுதே பாஹிமாம்" என்னும் சியாமா சாஸ்திரிகளின் கீர்த்தனத்தை 'திருமல்லையா" என்னும் இசைக்கலைஞன் பாடுவார் (குரல் மதுரை டி.என்.சேஷகோபாலன்) அவருக்கு தம்புரா வாசிக்கும் கதாநாயகன் (அனந்த் நாக்) அதே கீர்த்தனத்தை 'திஸ்ர" நடையில் மாற்றி பாடவிரும்புதாய்க் கூற "இயலாது இதை இப்படித்தான் சாகித்யகர்த்தர் செய்திருக்கிறார்" என்று வாதிடுவார்... அதை கதாநாயகன் பாடிக்காட்டி வெல்வதாய் அமைந்த பாடல் பாலமுரளிக்கு "சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை பெற்றுத் தந்தது"...
தேசிய விருது பெற்றுத் தந்த "அனந்த் நாக் - பாலமுரளி கிருஷ்ணா கூட்டணி' மீண்டும் இணைந்தது.. இம்முறை மலையாள படத்திற்காக... மலையாளத்தில் ஏராளமான சாகித்யங்களை அருளித்தந்த "ஸ்வாதித் திருநாள்" பெயரில் அமைந்த படம்... ஸ்வாதித் திருநாள் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் "கே.ஜே.யேசுதாஸ்".. இதில் 'பன்னகேந்திர சயனா" என்றொரு ஸ்வாதித் திருநாள் மகாராஜாவின் கீர்த்தனத்தை "யேசுதாஸ் - நெய்யாட்டின்கரா வாசுதேவன் இவர்களோடு இணைந்து பாடி இருப்பார் பாலமுரளி கிருஷ்ணா... 'சங்கராபரணம், காம்போதி, நீலாம்பரி, பைரவி, தோடி, சுருட்டி, நாதநாமக்கிரியா, பூபாளம் என்னும் ராகங்களில் அமைந்த அஷ்டராகமாலிகா... இதில் சங்கராபரணத்தில் தொடங்கும் பல்லவியையும் பைரவி, பூபாளம் ஆகிய சரணங்களையும் மட்டும் படத்தில் வைத்திருப்பார்கள்... பாலமுரளி ஆலாபனை செய்து ராகத்தை எடுத்துக் கொடுக்க... யேசுதாஸ் அந்த ராகத்தில் அமைந்த சாகித்யத்தை பாட.. நெய்யாட்டின்கரா அதில் அமைந்த ஸ்வரத்தை பாடி அழகாய் நிறைவு செய்வதாய் அமைந்த மனோகரமான பாடல்...ரிசல்ட் "சிறந்த பாடகருக்கான கேரளா அரசின் விருது!!!
நெடுநாட்களுக்கு பிறகு "அன்பாலே அழகாகும் வீடு" என்று ஜேம்ஸ் வசந்தன் இசையில் "பசங்க" படத்தில் ஒலித்தது அவர் குரல்.... ஒரு நாள் போதுமா, சின்னக் கண்ணன் என்று வெற்றி பாடல்களைத் தந்தாலும் தமிழ் சினிமாவில் அத்திப் பூத்தாற்போல ஒரு 20 பாடல்கள் தான் பாடி இருப்பார்..
இசை ஆராய்ச்சியாளர், ராகங்களை கண்டறிந்து அவற்றில் கீர்த்தனங்களை யாத்து, அவற்றிற்கு பண்ணமைத்து பாடவும் செய்யும் வாக்கேயக்காரர், திரைப்பட இசையமைப்பாளர், வயலின், மிருதங்கம், புல்லாங்குழல் வாசிக்கும் இசைக்கலைஞர், 25000 மேடைகளுக்கு மேல் கண்டு 80 ஆண்டு காலம் தனது குரலால் இந்தியாவை கட்டிப் போட்ட ஒரு தேசியக் கலைஞர்... சொல்லிக் கொண்டே போகலாம்...
எப்படி முடிப்பது என்று யோசித்த போது "வெல்லப் பிள்ளையாருக்கு அதையே உடைத்து படைப்பதை போல" அவரது வரிகளில் இருந்தே நிறைவு செய்ய விரும்புகிறேன்... "கர்நாடக இசையில் "அனுமந்தர ஸ்தாயி", "மந்தர ஸ்தாயி", "மத்யம ஸ்தாயி", "தார ஸ்தாயி", "அதிதார ஸ்தாயி"' என்று உண்டு... இவற்றையெல்லாம் கடந்து இன்று தெய்வ ஸ்தாயியை அடைந்திருக்கிறார் இந்த "காலத்தின் கலைஞர்"... எனது வரிகளில் சொல்வதென்றால் தனது இசையால் நம் அனைவரையும் ஆட்கொண்டு நிறைவாக இப்போது 'மங்களம்' பாடி "பள்ளிகொண்டிருக்கிறார் (நீங்காத் துயில்)" அந்த மங்கலம்பள்ளி சின்னக் கண்ணன்!!!!
-------------------------------------------------------------------------------------------------------------------
வியப்பின் விளிம்பில் : பொதுவாக கர்நாடக இசை மேடைகளில் "நாட்டை" ராகத்தில் தொடங்குவதும் நிறைவு செய்யும் போது "மங்களம்" பாடி நிறைவு செய்வதும் சம்பிரதாயம்... இந்தப் பதிவை எழுதி முடித்து பிழை திருத்தும் போது தான் கவனித்தேன் என்னை அறியாமலே "நாட்டை" என்று தொடங்கி "மங்களம் பாடி" என்று முடித்திருப்பதை... இது தான் தெய்வச்செயல் என்பது... தெய்வமான பாலமுரளி சாரின் செயல் என்றும் சொல்லலாம்!!!!

தற்போது தான் தங்களது வலைப்பக்கத்தைப் பார்க்க நேர்ந்தது. மிக அற்புதமாக எழுதுகிறீர்கள். ஏராளமான கேட்டிராத தகவல்கள். செலவிட்ட நேரம் முதலீடு!
ReplyDeleteஅருமை
ReplyDelete