"நண்றி...நண்றி... நண்றியை சொள்ளுகிறோம்.."
பிக் பாஸ் வீட்டின் கவிச்சக்கரவர்த்தியின் இந்தப் பாடலைக் கேட்டதுமே சட்டென்று எனக்கு நினைவுக்கு வந்தது, அடடா இவ்வளவு நாள் அந்த அற்புதக் கலைஞரைப் பற்றி எழுதாமல் போனோமே என்று.. இதோ.. எழுதியும் ஆயிற்று...
தமிழ் சினிமாவில் பாகவதர் - சின்னப்பா, எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித்குமார் என்று தலைமுறைகளைத் தாண்டி எழுதுகிற பல பாடலாசிரியர்கள் உண்டு.. ஆனால் ஒரே குடும்பத்தில் இருந்து வரும் மூன்று தலைமுறைக் கதாநாயகர்களுக்கு பாடல் எழுதிய பெருமை நான்கு பாடலாசிரியர்களுக்கு மட்டுமே உண்டு..
நடிகர் திலகம் சிவாஜி - அவரது மகன் இளைய திலகம் பிரபு - அவரது மகன் விக்ரம் பிரபு ஆகிய மூவருக்கும் பாடல்கள் எழுதிய பெருமை உடையவர்கள் "கவிஞர் வாலி, கவிஞர் வைரமுத்து மற்றும் புலவர் புலமைப்பித்தன்" ஆகிய மூவரும்.
இதேபோல மற்றொரு குடும்பத்தின் மூன்று தலைமுறை நாயகர்களுக்கு ( நவரசத் திலகம் ஆர்.முத்துராமன் - அவரது மகன் நவரச நாயகன் கார்த்திக் - அவரது மகன் கௌதம் கார்த்திக்) பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் உண்டு.. அந்த பெருமை உடைய ஒரே ஒரு பாடலாசிரியர் தான் இந்தப் பதிவின் நாயகர்.
"தவிதவிக்கிற ஏழைக்காக திட்டம் போடணும் - பொருளை
சரிசமமா பங்குவைக்க சட்டம் போடணும்
குவியக் குவிய விளைவதெல்லாம் கூறு போடணும் - ஏழைக்
குடிசைக்குள்ளே பாலும் தேனும் ஆறா ஓடணும்"
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்து 1964ல் வெளிவந்த "கன்னித்தாய்" என்ற படத்தில் இடம்பெற்ற "கேளம்மா சின்னப்பொண்ணு"
என்ற பாடலின் வரிகள் தான் இவை. திராவிட இயக்கத்தின் பிரச்சார பீரங்கியாக எம்.ஜி.ஆர் இயங்கி கொண்டிருந்த காலத்தில் இப்படி அவரது படத்தில் சிவப்புச் சிந்தனை சிதறும் வரிகளை எழுதிய இவர் தான் இந்தப் படத்தின் அத்தனைப் பாடல்களையும் எழுதியவர். அவர் பெயர் "அருணன்". கண்ணதாசன் நடத்தி வந்த "தென்றல்" பத்திரிகையில்
கவிதைகளும், கட்டுரைகளும் எழுதிக் கொண்டு பின்னாளில் அதன் உதவி ஆசிரியராக இருந்தவர். (பெயரைப் பார்த்து விட்டு தொலைக்காட்சி விவாதத்தில் "நீ தான்டா லூசு" என்று பாய்ந்த நபர் என்று குழப்பிக் கொள்ள வேண்டாம்.. இவர் அவரல்ல)
இதற்கு அடுத்த ஆண்டு (1965) எம்.ஜி.ஆருக்கும் அவரது படங்களில் தொடர்ந்து பாடல்கள் எழுதும் கவியரசு கண்ணதாசனுக்கும் பிணக்கு ஏற்பட்டு, இனி எனக்கு நீ வேண்டாம், உனக்கு நான் வேண்டாம் என்று பிரிந்த நேரத்தில் வெளிவந்த படம் "கலங்கரை விளக்கம்". அந்தப் படத்தில் இரண்டு சூழல்களுக்கான பாடல்களை கண்ணதாசன் எழுத வேண்டி இருந்ததால் அவசர உதவியாக இவரை எழுத வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி. வழக்கம் போல பதிவான பாடல்களை எம்.ஜி.ஆருக்கு தோட்டத்தில் போட்டு காண்பித்திருக்கிறார் வேலுமணி.
பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டுவிட்டு " என்ன நெனச்சிட்டு இருக்கீங்க?? நான் கண்ணதாசன் வேண்டாம்னு அவ்வளவு தூரம் சொல்லியும் கேக்காம அவரையே எழுத வச்சிருக்கீங்க...
மொதல்ல இதெல்லாத்தையும்
தூக்கி போட்டுட்டு வேற யாரையாவது வச்சு எழுதுங்க.." என்று சீறிச் சினந்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.
"ஐயையோ.. இது கண்ணதாசன் எழுதினது இல்லங்க.. எழுதியவர் இன்னார் தான்" என்று இவரது பெயரை எவ்வளவோ சொல்லி மன்றாடி இருக்கிறார் வேலுமணி...
"எனக்கு தெரியாதா??
"தென்னை வனத்தினில் உன்னை முகம்தொட்டு
எண்ணத்தைச் சொன்னவன் வாடுகிறேன்
உன்னிரு கண்பட்டு புண்பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டுக்கை தொடப் பாடுகிறேன்"...
இதெல்லாம் கண்ணதாசனால மட்டும் தான் எழுத முடியும். மொதல்ல சொன்னதை செய்யுங்க" என்று திருப்பி அனுப்பிவிட்டார்..
(இத்தனைக்கும், "சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தை சொல்லுதம்மா, மணமகளே மருமகளே வா வா" போன்ற காலத்தால் அழியாத பாடல்களை ஏற்கனவே எழுதி இருந்தவர் தான் அவர்)
பிறகு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியே நேரில் சென்று உண்மையைச் சொல்லி விளக்கிய பிறகே நம்பிய எம்.ஜி.ஆர்.. "ரொம்ப நல்லா எழுதி இருக்காரு.. இனிமேல் என் படங்களுக்கு இவர் எழுதுவார் அப்படின்னு சொல்லிடுங்க" என்று பாராட்டி இருக்கிறார்.. அந்தப் பாடலாசிரியர் தான் பின்னாளில் தயாரிப்பாளர், இயக்குனர், கதாசிரியர், திரைக்கதை - வசனகர்த்தா, பத்திரிகையாளர், திரைப்பட விநியோகஸ்தர் என்று பல்வேறு துறைகளிலும் அளப்பரிய சாதனைகளை படைத்த
திரு. பஞ்சு அருணாச்சலம். (அருணன் என்பது அவரது புனைப்பெயர்)
அன்று அவர் எழுதிய இரண்டு பாடல்கள் "பொன்னெழில் பூத்தது புதுவானில்" மற்றும் "என்னை மறந்ததேன் தென்றலே" ஆகியவை.
எம்.ஜி.ஆர் அழைத்தும் அதன் பிறகு அவர் அந்த வாய்ப்பை ஏற்கவில்லை.. அதற்கு காரணம் கவியரசர் கண்ணதாசனிடம் உதவியாளராக (பாடலை அவர் சொல்லச் சொல்ல எழுதுவது) "கவலை இல்லாத மனிதன்" தொடங்கி "கெளரவம்" வரையில் 12 ஆண்டுகள் 400 படங்களில் அவரோடு இருந்திருக்கிறார்.. அது மட்டுமன்றி இவர் கவியரசரின் உடன்பிறந்த அண்ணன் மகன். "அவரை வேண்டாம்னு சொல்லும் போது அந்த இடத்தில நான் எழுதுறது நல்லா இருக்காதுன்னு
மறுத்துட்டேன்" என்று இந்த மொத்த சம்பவத்தையும்
கவிஞர் வாலியின் 83வது பிறந்தநாள் விழாவில் அவரே விவரித்தார்.
(கண்ணதாசனிடம் இவரைப் போலவே உதவியாளராக இருந்து பின்னாளில் அவரது ஆசிர்வாதத்துடன் "காலத்தை வென்றவன் நீ, ஆகட்டுண்டா தம்பி ராஜா நட ராஜா, அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ" என்று வரிசையாக எம்.ஜி.ஆருக்கு பாடல்கள் எழுதியதோடு பிறகு இயக்குனர், தயாரிப்பாளர் என்று ஆன மற்றொருவர் நடிகர் பாண்டியராஜனின் மாமனார் திரு.அவிநாசி மணி )
பிறகு கதை-திரைக்கதை-வசனம்-தயாரிப்பு என்று வேறுவேறு துறைகளில் முழுமையாக இறங்கிவிட்டதால் பாடல்கள் அதிகம் எழுதவில்லை. இவரது சொந்த தயாரிப்பில் வெளியான "எங்கம்மா சபதம், உறவு சொல்ல ஒருவன், மயங்குகிறாள் ஒரு மாது" போன்ற படங்களில் இவர் அறிமுகப் படுத்திய "கன்னடத்து விஜய பாஸ்கரின்" இசையில் சில பாடல்களை எழுதி இருக்கிறார்..
இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்...
பஞ்சு சாரைப் பற்றி எழுதுவதென்றால் ஒரு நான்கைந்து பதிவுகளாவது எழுத வேண்டும்.. இந்தப் பதிவு திரு.பஞ்சு அருணாச்சலம் என்கிற அதிகம் அறியப்படாத ஆனால் 300க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற பாடல்களை எழுதிய பாடலாசிரியரைப் பற்றியது.
எனவே அவர் இளையராஜாவை அறிமுகப்படுத்தியது (கார்த்திக் ராஜா (பாண்டியன்), யுவன் சங்கர் ராஜாவை (பூவெல்லாம் கேட்டுப்பார்) அறிமுகம் செய்ததும் இவர் தான். அரவிந்தன் முதலில் வெளிவந்தது ), ரஜினிக்கு 30 படங்களில் கதை வசனம் எழுதியது, இயக்குனரானது பற்றியெல்லாம்
பேசப்புகுவதற்கு விரும்பவில்லை.
இது முழுக்க முழுக்க அவரது பாடல்களைப் பற்றிய பார்வையே.
இளையராஜாவின் முதல் பத்தாண்டுகளில் வந்த பாடல்களில் 30% கண்ணதாசன், 30% பஞ்சு அருணாச்சலம், 30% கங்கை அமரன்.. மீதமுள்ளது தான் மற்ற கவிஞர்கள் எழுதியவை.. அந்த அளவுக்கு இளையராஜாவின் பொற்காலமாக கருதப்படும் 76 - 85ல் வெளிவந்த ஏராளமான வெற்றி பாடல்களை எழுதியவர் பஞ்சு சார்.. பல சந்தர்ப்பங்களில் இதெல்லாம் இவர் எழுதியவையா என்று வியக்க வைத்திருக்கிறார்.. இதற்கு முக்கிய காரணம் காட்சி ஊடகங்கள் இவற்றை சரியாகப் பதிவு செய்யாமல் போவது தான்.
- அன்னக்கிளி
உன்னத் தேடுதே (அன்னக்கிளி)
- கண்மணியே
காதல் என்பது (ஆறிலிருந்து 60 வரை)
- விழியிலே
மலர்ந்தது (புவனா ஒரு கேள்விக்குறி)
- பருவமே புதிய பாடல் பாடு (நெஞ்சத்தை
கிள்ளாதே)
- அடி பெண்ணே பொன்னூஞ்சல்
(முள்ளும் மலரும்)
- காதல் வந்திருச்சு
ஆசையில் ஓடிவந்தேன் (கல்யாணராமன்)
- சின்னக் கண்ணன் அழைக்கிறான்
(கவிக்குயில்)
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் (இவை ஒரு சிறு துளி மாத்திரமே)
"அண்ணன் என்னடா தம்பி என்னடா", என்பது "அண்ணன் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன" என்று ஆனதைப் போல ஒன்றிரண்டு உதாரணங்களைத் தவிர பஞ்சு சாரின் எழுத்து நடை என்பது கவியரசரின் நடையிலிருந்து முற்று முழுதாய் வேறுபட்டது...
எரிக்கின்ற புரட்சிகர வரிகளோ, தெறிக்கின்ற கவித்துவமோ இல்லாமல் செவிக்கு செரிக்கின்ற வரிகளை சூழலுக்கு உறுத்தாமலும் மெட்டுக்குள் துருத்தாமலும்
எழுதுவது தான் அவரது பாணி.. இன்னும் துல்லியமாகச் சொல்வதென்றால் அவர் பட்டுகோட்டையோ அல்லது கண்ணதாசனோ இல்லை... ஆனால் கொழிக்கின்ற அழகுணர்ச்சியில் கு.மா.பாவின் வாரிசோ என எண்ணத் தோன்றுமெனக்கு. விரிவாகவே சொல்கிறேன்...
"அ"கரம் தமிழுக்கு சிகரமல்ல.. அது தமிழுக்கு ஆதாரம் தான்.. "ழ"கரம் தான் தமிழுக்குச் சிகரம் என்பார் கவிஞர் வைரமுத்து..
"தமிழ், மழை, எழில், வாழை, அழகு, வாழ்த்து, அழைப்பு, குழல்" என்று "ழ"கரத்தில் அமைந்த சொற்கள் அனைத்தும் இயல்பிலேயே இனிமையானவை... இத்தகைய "ழ"கர சொற்களை பல்லவியில் (பாடலின் முதலிரண்டு அடிகளில்) மிக அதிகமாக பயன்படுத்தியவர்
இவர் தான் என்பதை இவரது பாடல்களை உற்று நோக்கியவர்கள் எளிதில் உணர முடியும்... உதாரணத்திற்கு
இவரது சில சூப்பர் ஹிட் பாடல்கள்...
- சின்னக் கண்ணன் அழைக்கிறான்
- அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
- அக்கரைச்
சீமை அழகினிலே மனம் ஆடக்கண்டேன்
- மேகம் கருக்குது
மழ வரப்பாக்குது
- மச்சான பாத்தீங்களா
மலைவாழை தோப்புக்குள்ளே
- முத்தமிழ்க்
கவியே வருக முக்கனிச் சுவையும் தருக
- தென்மதுரை
வைகைநதி தினம் பாடும் தமிழ்ப் பாட்டு
- ஜெர்மனியின்
செந்தேன் மலரே தமிழ்மகளின் பொன்னே சிலையே
- பொன்னெழில்
பூத்தது புதுவானில்
- வாழ்க்கையே
வேஷம் இதில் பாசமென்ன நேசமென்ன
- எந்தன் வாழ்க்கையின்
அர்த்தம் சொல்ல
இது போல அநேகம் பாடல்கள்... பல்லவியில் தவற விட்ட "ழ"கரத்தை சரணத்தில் இவர் பயன்படுத்திக் கொள்வதுண்டு... இது தன்னிச்சையாக அமைந்ததா அல்லது வெற்றிபெறும் என்று தெரிந்தே அமைத்துக் கொண்ட பாணியா என்பது தெரியவில்லை...
"மழபேஞ்சு வெயிலடிச்சு நாத்து நட்டு கருதறுத்து
போரடிக்க காத்திருக்கேன்
பொழுதிருக்க வருவாரோ"
"அன்பிலே வாழும் நெஞ்சில் ஆயிரம் பாடலே
ஒன்று தான் எண்ணம் என்றால் உறவு தான் ராகமோ"
"மாதவன் பூங்குழல் மந்திர கீதத்தில்
மாதர் தம்மை மறந்தாட
ஆதவன் கரங்களின் ஆதரவால் பொன்னி
ஆற்றில் பொன்போல் அலையாட"
இப்படி அழகுணர்ச்சியின்
அடையாளங்கள் செழித்த சரணங்களும் ஏராளம்..
உவமைகளிலும் கூட இவரது பாணி தனித்தே தெரிகிறது..
இவரது திரைக்கதையில்
உருவான "புவனா ஒரு கேள்விக்குறி" படத்தின் "விழியிலே மலர்ந்தது" பாடலில்
"கையளவு பழுத்த மாதுளை.. பாலில் நெய்யளவு பரந்த புன்னகை"
என்று எழுதி இருப்பார்... பாலில் நெய் எப்படி இருக்குமிடம் தெரியாது அமைந்திருக்கிறதோ அது போல மிக மெலிதான புன்னகை என்பது தமிழ் சினிமாவில் யாரும் சொல்லாத அழகிய உவமை...
"பொன்னெழில் பூத்தது புதுவானில்" பாடலின் இரண்டாவது சரணத்தில்
"முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
கிண்ணம் நிரம்பிட செங்கனி சாறுண்ண
முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே"
என்று தனது சத்தான தமிழுக்கு சான்று படைக்கிற அதே வேளையில், "முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே" என்பதில் இரட்டுற மொழிதலாயும் (சிலேடை) விளையாடி இருப்பார்..
இதை பாட்டுடைத் தலைவியை "செவ்வந்தி மாலை" என்று வர்ணிப்பதாயும் கொள்ளலாம்.. அல்லது "அந்த சிவந்த அந்தி மாலைப் பொழுதுகள் எங்கே?" என்று ஏங்குவதாயும் கொள்ளலாம்...
கவியரசோடு வெகுநாள் பயணத்தில் கற்றது மட்டுமன்றி, கதை, திரைக்கதை ஆசிரியராகவும்
இருப்பது ஒரு வகையில் பாடலாசிரியராக, சூழலையோ அல்லது கதை மாந்தர்களையோ இயல்பாக பாடல் வரிகளுக்குள் கொண்டு வருவதற்குஇவருக்கு கை கொடுத்திருக்கிறது... ... உதாரணமாக இவர் கதை வசனம் எழுதிய வட்டத்துக்குள் சதுரம் திரைப்படத்தில்
வரும் "இதோ இதோ என் நெஞ்சிலே" பாடலின் சரணத்தில்...
"இராமனின் குகனாக உனைப் பார்க்கிறேன்
மாலதி அனுவாக நான் வாழ்கிறேன்"... என்று எழுதி இருப்பார்.
இந்தப் பாடலை முதல் முறை கேட்டதிலிருந்து
"ராமன் - குகன் " மாதிரி "மாலதி - அனு" என்று இலக்கிய மாந்தர்கள் இருந்திருக்கிறார்களோ என்று தேடி அலைந்திருக்கிறேன்.. படம் பார்த்த பிறகு அவை இரண்டும் பாடலைப் பாடுகிற லதா மற்றும் சுமித்ரா கதாபாத்திரங்களின் பெயர்கள் என்று அறிந்துகொண்டேன்.. ஈருடல் ஓருயிர் என்கிற பொருளை அதீத கற்பனை எல்லாம் செய்யாமல், எளிமையாய் பாத்திரங்களின் பெயர்களை வைத்து அழகாய், கையாண்டிருக்கிறார்... அது தான் பஞ்சு சார்!!
ஒரே சொல்லையோ அல்லது சொல்லுகிற முறையையோ சூழலுக்கு தகுந்தாற்போல வெவ்வேறு உணர்வுகளை பிரதிபலிக்க பயன்படுத்துவதென்பது ஒரு தனிக்கலை... உதாரணமாக "ஆயிரத்தில் ஒருவன்" பாடல்களில்
"உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்" என்று நாயகி பாடுகையில் அது உயர்வு நவிற்சியாகவும்
விரக உணர்விலும் படுவதாகவும் அமைகிறது... (எழுதியவர் கவிஞர் வாலி)
அதுவே "நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்.. நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்" என்று நாயகன் பாடுகையில் அதே "ஆயிரத்தில் ஒருவன்" என்பதை தன்னிலை விளக்கமாயும் கையறுநிலையை விளக்குவதாயும் அமைகிறது... (கவியரசு கண்ணதாசன் வரிகள்)
இந்த யுக்தியை பஞ்சு அருணாச்சலம் தனது பாடல்களிலும் நேர்த்தியாக பயன்படுத்தி இருக்கிறார்.
"விளக்கினிலே எண்ணெய் வைத்தான்
எண்ணெயிலே திரியை வைத்தான்
திரியினிலே ஒளியை வைக்க
தெரியாமல் எங்கு சென்றான்??"
என்று "யாருக்கும் சொந்தம்" படத்தில் உணர்வு பூர்வமாக கேள்வி கேட்கிற அதே பாணியில்
"பூவுக்குள்ள வாசம் வச்சான்
பாலுக்குள்ள நெய்ய வச்சான்
கண்ணுக்குள்ள என்ன வச்சான்
பொங்குதடி எம் மனசு"??
என்று "ஆனந்த ராகம்" படப்பாடலில் கேள்வியை காதலாகவும் கேட்க முடிகிறது இவரால்
கரையெல்லாம் செண்பகப்பூ படத்தில் வரும் "ஏரியில் எலந்தைமரம்" பாடலை இவரது அழகுணர்ச்சிக்கு ஒரு ஆகச்சிறந்த உதாரணமாக சொல்லலாம்...
வெள்ளி மலையில தேனருவி..
வேப்பமரத்துல பூங்குருவி
வாழை இலையில ஓடுற காத்து
ஆடுற கூத்து காணலியோ
அழகு பெத்த சோலையிலே
நெருஞ்சி முள்ளால் வேலிகளாம்
செண்டுக மேல வண்டுக வந்து
உண்டது தேன போதையில
ஆனந்தம் தானே போகையில
வழக்கு மொழியில் பாடப்படுகிற ஒரே காரணத்தினால் மட்டுமே இதைக் கவிதை இல்லை என்று நிராகரிக்க இயலுமா என்ன??
பாவேந்தர் எழுதிய "அழகின் சிரிப்பு" சிற்றூர், இதைக் கேட்கும் போதெல்லாம் என் மனக்கண் முன் வந்து வந்து போகும்... மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள் கிராமத்து அழகின் சிரிப்பை அப்பட்டமாக ரசிக்கலாம்..
சுருங்கக் கூறின் இவரது பாடல்கள் வெறும் கற்பனை வார்த்தைகளை வைத்து கருத்தை ஒப்பனை செய்கின்ற கவிதைகளின் அழகைப் போன்றதல்ல... ஒப்பனைகளற்ற ஒரு நடுத்தரக் கும்பத்தலைவியின் அழகைப் போன்றது..
கவிஞர் வைரமுத்துவின்
ஆயிரம் பாடல் புத்தக வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசும்போது ஒரு கருத்தை சொன்னார்... "எம்.ஜி.ஆர் சாருக்கு எப்படி வாலி சார் எழுதுவங்களோ அதே மாதிரி எனக்கு எழுதுவது வைரமுத்து சார் தான்" என்று.. இதில் நாம் விளங்கி கொள்ள வேண்டியது "கதாநாயகர்கள் நெஞ்சைத் தட்டி கையை உயர்த்தி பாடும் ஜனநாயக சோஷலிஸப் பாடல்கள்" என்பதை...
இளையராஜாவுடன் ஏற்பட்ட பிரிவுக்கு பிறகு 87ல் ராஜா சின்ன ரோஜாவில் இருந்து தான் (சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா என்று ) வைரமுத்து இதை ஆரம்பித்தார்... இதற்கு முந்தைய ஆண்டே "நாட்டுக்குள்ள நம்மைப் பத்தி கேட்டு பாருங்க.. அம்மம்மா இவர்தான் சூப்பர் ஸ்டாருங்க" என்று "விடுதலை"யில் புலமைப்பித்தன் எழுதி இருப்பார்.. ஆனால் முதன் முதலாக 1982 லேயே ரஜினிக்கு இந்த வகைப் பாடலை எழுதி இதைத் தொடங்கி வைத்தவர் பஞ்சு அருணாச்சலம் தான்.. அந்தப் பாடல் தான்
"பொதுவாக எம்மனசு தங்கம்.. ஒரு
போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்"
இதுமட்டுமல்ல 1977ல் வெளிவந்த "புவனா ஒரு கேள்விக்குறி" தொடங்கி 1994ல் வெளிவந்த "வீரா" வரை ரஜினியின் பெரும்பாலான சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியவர் பஞ்சு அருணாச்சலம் தான் என்பது பலரும் அறியாதது... தெளிவான பட்டியல் தயாரித்தால் இன்னும் நிறைய பாடல்கள் இடம்பெறும்.. உதாரணத்திற்காக சில மிக மிக பிரபலமான பாடல்கள் மட்டும்.
- கண்மணியே
காதல் என்பது கற்பனையோ
- காதலின் தீபம் ஒன்று
- விழியிலே
மலர்ந்தது
- ராஜா என்பார் மந்திரி என்பார்
- பொதுவாக எம்மனசு தங்கம்
- பேசக்கூடாது
வெறும் பேச்சில் சுகம்
- கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
- தென்மதுரை
வைகைநதி
- முத்தமிழ்க்
கவியே வருக முக்கனிச் சுவையும் தருக
- மானின் இரு கண்கள் கொண்ட மானே
- மாசி மாசம் ஆளான பொண்ணு
- ஏய் பாடல் ஒன்று ராகம் ஒன்று
இதில் ஒரு சுவாரஸ்யமான சம்பவமும் உண்டு. தனது நூலில் இளையராஜாவே சொன்னது தான்.. 1984ல் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டு படுத்த படுக்கையாக இருந்திருக்கிறார் இளையராஜா. ஊட்டியிலிருந்து "ரஜினி சார் கால்ஷீட் 2 நாள் இருக்கு. ராஜா சார்கிட்டேந்து 2 பாட்டு வாங்கி கொடுத்தீங்கன்னா ஷூட் பண்ணிரலாம்" என்று இயக்குனர் ராஜசேகரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது பஞ்சு சாருக்கு..
இளையராஜாவை நேரில் சந்தித்து அவரது உடல் நலனை விசாரித்து விட்டு தயங்கி தயங்கி விஷயத்தை சொல்கிறார்... பாடினால் அடிவயிற்றிலிருந்து
காற்று எடுக்க வேண்டி தையல் பிரிந்து விடும் என்பதால், விசிலடித்தே மெட்டை பாடிக்காட்டுகிறார் இளையராஜா. அங்கேயே பஞ்சு அருணாச்சலம் பாடலை எழுதி முடிக்கிறார்.. உடனே ஒளிப்பதிவு செய்யப்பட அந்தப் பாட்டு தான் "காதலின் தீபம் ஒன்று". அவசரமாக எழுதப்பட்ட பாடலாயிருந்தாலும்..
"என்னை நான் தேடித் தேடி, உன்னிடம் கண்டு கொண்டேன்" என்று ரம்மியமான வரிகளை எழுதி இருப்பார்.
காமம் என்பது திரைப்பாடல்களில் இலைமறைகாயாக தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவர் பஞ்சு சார்.. ஆனால் அதிலும் இலையுதிர்காலங்கள்
நேர்ந்த பொழுதுகள் உண்டு..... அவரே
- மஞ்சக் குளிக்கையிலே மதிலேறிப் பாத்த மச்சான்
- மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்கு தான்
- மேயிற கோழியெல்லாம் பாயிறது சரியா
என்றெல்லாம் கூட எழுத வேண்டி வந்தது... இவை "சினிமா என்பது ஒரு வணிகம்.. அதில் நிறைய யோசிக்காதே" என்று கடந்து போக வேண்டுமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
உச்சகட்டமாக, கடல் மீன்கள் படத்தில் "மதனி மதனி மச்சான் இல்லையா இப்ப வீட்டுல" என்று இவர் எழுதிய பாடல் கடும் எதிர்ப்புக்களை சம்பாதித்து பிறகு சென்சாரால் "மதனி என்பது மயிலே" என்றும் "கொழுந்தா என்பது குமரா" என்றும் திருத்தப்பட்டது..
இளையராஜா நிறைய பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொண்டது இவரது பாடல்களில் தான்... நானறிந்த சிலவற்றைச் சொல்கிறேன்
- "புள்ளிபோட்ட லவுக்காரி புளியம்பூ சீலக்காரி" என்று உத்தமபாளையம் பகுதிகளில் வழங்கி வந்த நாட்டுப்பாடல் தான் "அன்னக்கிளி உன்னைத் தேடுது".. ராஜாவின் இசையில் வந்த இந்த முதல் பாடல்.
- திரையிசையில்
முதன் முதலாக "ரீதி கௌளை" ராகம் இடம்பெற்ற "சின்னக் கண்ணன் அழைக்கிறான்.
- இளையராஜா
இசையில் வெளிவந்த முதல் ராகமாலிகை, கவிக்குயில் படத்தில் இடம்பெற்ற "ஆயிரம் கோடி காலங்களாக" (மாயா மாளவகௌளை, வகுளாபரணம், வாகதீஸ்வரி, வலஜி, சக்ரவாகம், மோஹனம், மோஹன கல்யாணி, சாருகேசி என்று எட்டு ராகங்களில் அமைந்தது)
- தமிழ் சினிமாவில்
முதல் நேரடி சிலோன் பைலா பாடலான "சுராங்கனி சுராங்கனி"
- நாட்டுப்புற மெட்டில் Western Harmony யை இணைத்து உருவான "ஏரியில எலந்தைமரம்"
- முதன் முதலாக
Stereophonic இசையில் உருவான ப்ரியா படத்தின் அனைத்து பாடல்களும்
- Unconventional Rhythm Pattern ல் உருவான
"குரு" படத்தின் "நான் வணங்குகிறேன்"
- இசைக்கருவிகள்
இல்லாமல் வெறும் குரல்களை மட்டும் வைத்து உருவான பாடலான "மாயா பஜார் 1995" படத்தின் "நான் பொறந்து வந்தது"
- இரண்டு கால்களின்
Jogging சப்தத்தை தபலா வாசிக்கும் கண்ணையா மற்றும் Percussionist ஜெய்சா ஆகியோரை தொடையில் தட்டி அதன்மூலம் உருவான "பருவமே புதிய பாடல் பாடு"
இந்தப் பாடல்கள் அனைத்தையும் எழுதியவர் பஞ்சு சார் அவர்கள் தான்.. இதற்கு என் மனதில் தோன்றிய காரணம் "இந்தப் பையன் நல்லா தான்யா பண்ணுவான்" என்கிற எண்ணம் பஞ்சு சாருக்கும், தன்னை அறிமுகப்படுத்தியவர் என்பதைத் தாண்டி அதீதமாக எழுதுகிறேன் பேர்வழி என்று பாடலைக் காலி பண்ணி விட மாட்டார் என்று இளையராஜாவுக்கும்
பரஸ்பர நம்பிக்கை இருந்திருக்க வேண்டும்..
நா.காமராசன் அவர்கள் சொன்னதைப் போல, கண்ணதாசன் தமிழுக்கு வழங்கிய கொடைகளில் முக்கியமான ஒன்று "பஞ்சு.அருணாசலம்".
அவர் உடலால் மறைந்து 13 மாதங்கள் ஆனாலும், அவரது பாடல்கள் இன்னும் பல்லாண்டுகள் நிலைத்து நின்று நம்மோடு வாழும் என்பதில் ஐயமே இல்லை!!! வாழிய அன்னாரின் புகழ்!!!!
*****************************************************************
அதெல்லாம் சரி, பிக் பாஸ் கவிச்சக்ரவர்த்திக்கும் இந்தப் பதிவுக்கும் என்னடா சம்பந்தம் என்று கேட்பவர்களுக்கு மட்டும்.... பஞ்சு சார் கவியரசரின் உதவியாளராக தொடங்கி பின்னர் பாடலாசிரியர், தயாரிப்பாளர் என்று பல தளங்களில் இயங்கியவர்... பிக் பாஸ் கவிச்சக்கரவர்த்தி கவிப்பேரரசரின்
உதவியாளராக தொடங்கி பின்னர் கவிஞர், நடிகர், பிக் பாஸ் என்று பல தளங்களில் இயங்கி வருபவர்... பஞ்சு சார் எழுதிய பாடல்கள் முன்னூற்றி சொச்சம்... பிக் பாஸ் நாயகர் எழுதியவை மூவாயிரத்து சொச்சம்... (அவரே சொன்ன தகவல் தான்).
நான் முதல் பத்தியில் சொன்ன அந்த மூன்று தலைமுறை நாயகர்களின் படங்கள் : முத்துராமன் (மயங்குகிறாள் ஒரு மாது), கார்த்திக் (என் ஜீவன் பாடுது) , கௌதம் கார்த்திக் (முத்துராமலிங்கம்
- பஞ்சு சாரின் கடைசிப் படம்).
Krish...sema da
ReplyDeleteUnbelievable amazing 👌❣️❤️❤️❤️
ReplyDeleteஆண்னென்ன பெண்னென்ன நீயென்ன நானென்ன ...தர்மதுரை(1991)ல வரும் பாடலை எழுதியவர் கங்கை அமரன்.... பாவம் கங்கை அமரனோட பல பாடல்கள் இப்படி தான் மற்றவர்களுக்கு பெருமை சேர்க்குது
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார். 3 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய பதிவு. மிக சமீபத்தில் தான் திரு. கங்கை அமரனின் பேட்டி ஒன்றில் இந்தப் பாடல் பிறந்த கதையை அறிய நேர்ந்தது. பதிவில் இருந்து நீக்கி விடுகிறேன்.
ReplyDelete