Saturday, July 5, 2014

நதியில் விளையாடி.... கொடியில் தலை சீவி!!!!

ஒரு வாரத்துக்கு முன்பே வந்திருக்க வேண்டிய பதிவு... போன வாரம் "அவருடைய" பிறந்தநாள்..

பணிச் சுமையால கொஞ்சம் தாமதம் ஆயிடுச்சு.. இருந்தாலும், நல்லத சொல்றதுக்கும்.. நல்லவங்கள பத்தி சொல்றதுக்கும் காலநேரமே தேவையில்ல... சரி மேட்டருக்கு வருவோம்...

இயக்குனர் கே.பாலசந்தருக்கு பாட்டு எழுதுறது அவ்வளவு லேசான காரியம் அல்ல... நெனச்ச மாதிரி வர்ர வரைக்கும் விடமாட்டாரு....
அது ஒரு பாடல் கம்போசிங்.. ஒரு கவிஞர் Situationக்கு பாட்டை எழுதி முடிச்சிடுறாரு... கே.பி சார் பாட்ட வாங்கிப் பாத்துட்டு... இந்தப் பாட்டுல பல்லவி மட்டும் கொஞ்சம் மாத்திகிட்டா நல்லாருக்குமேன்னு சொல்றாரு.. கவிஞரும் சரின்னு வேற பல்லவி எழுதிக் கொடுத்திடுறாரு.. 

அடுத்து, இந்தப் பல்லவியும் ரெண்டாவது சரணமும் பொருந்துது.. மொதல் சரணத்த மட்டும் மாத்தலாமான்னு கேக்குறாரு... கொஞ்சம் யோசிச்சிட்டு கவிஞர் அதையும் மாத்தி எழுதுறாரு...

அடுத்து இப்போ பல்லவியும் மொதல் சரணமும் செட் ஆகுது ரெண்டாவது சரணத்த மட்டும் மாத்திட்டா முடிஞ்சிடும்னு சொல்ல... கடுப்பான கவிஞரும் என் பாட்டத் திருப்பிக் குடுங்கப்பான்னு வாங்கிட்டு நடையக் கட்டிடுறாரு...

என்ன செய்யலாம்னு யோசிச்சிட்டு அடுத்து "அவர்"கிட்ட போறாங்க... "அவரும்" இந்தோ அந்தோன்னு அலையவிட்டுடு கடைசில ஒரு நாள் போன்ல பாட்ட தரேன்னு சொல்றாரு... போன் வருது... எடுக்குறாரு.. ஒரு கையில மது இன்னொரு கையில Receiver ... அந்த தங்கத் திரவம் தொண்டைய நனைக்க , பாட்ட சொல்ல ஆரம்பிக்கிறாரு... ஒரே மூச்சுல 14 சரணத்த சொல்லி புடிச்சத வச்சுக்கோங்கன்னு சொல்லிட்டு போன வச்சிடுறாரு... திக்குமுக்காடிப் போறாரு இயக்குனர் சிகரம்...

"அவர்" குடுத்த 14 சரணத்துல இருந்து 3 எடுத்து படத்துல வச்சுக்கிறாரு... அந்தப் பாடல்....... "தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு"...

எல்லாம் சரி "அவர்" யாரு? அத சொல்லவே இல்லையே... அதுக்கு முன்னாடி ஒரு சின்ன Intro

தமிழ் இலக்கியத்துல கவிஞர்கள நாலு விதமா பிரிப்பாங்க... (1) ஒரு தலைப்போ பொருளோ குடுத்தா, கொடுத்த மாத்திரத்திலேயே கவிதைய மழையா கொட்டித் தள்ளுகிற "ஆசுகவி"... (2)  கவிதைக்கு உரிய எல்லா லட்சணங்களும் பொருந்தற மாதிரி, கேட்கிறவங்கள மதுவைப்போல மயங்க வைக்கிற "மதுர கவி"... (3) வார்த்தைகளை வச்சுகிட்டு சித்திரம் வரையிர மாதிரி வெளையாடுற "சித்திரக் கவி"... (4) ரொம்ப வக்கனையா எழுதுற "வித்தாரக் கவி.. இந்த நாலு குணங்களும் ஒன்றானவர்னு "காளமேகப் புலவர" சொல்வாங்க...

என்னய்யா சம்பந்தம் இல்லாம Track போகுதேன்னு நெனைக்க வேண்டாம்... தமிழ் திரையிசையில் காளமேகத்தப் போல இந்த நாற்கவியும் ஒன்றாக இணைந்த ஒரு கவிதை மேகம் தான் "அவர்"....

யோசிச்சுகிட்டே இருங்க...  அடுத்த சம்பவத்த சொல்றேன் தெரியுதா பாப்போம்...

நாடறிஞ்ச "மருதமலை மாமணியே முருகையா" பாட்டு கம்போசிங்... இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன் டியூனை வயலின்ல வாசிக்க வாசிக்க "அவர்" கிட்டேயிருந்து வில்லுலேந்து கெளம்புன அம்பு மாதிரி வார்த்தைகள் வந்து விழுது.. அசந்து போன குன்னக்குடி,  வேணும்னே "அவர" சீண்டுறதுக்காக சும்மா "கரகர கரகர"ன்னு ஏழெட்டு தடவை வயலின்ல இழுத்துட்டு "அவர்" முகத்தப் பாக்க...  அசராமல் அதற்கும் வந்து விழுந்தன வரிகள்...

"பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
..." அப்டின்னு...

கண்கள் பனிக்க "அவரை" கையெடுத்து கும்பிட்டதா குன்னக்குடி அவர்களே ஒரு முறை டிவி ல சொன்னாரு... கொடுத்த மாத்திரத்தில் கவிமழை கொட்டும் ஆசுகவி "அவர்"...

சின்ன வயசுல காளமேகத்தோட காக்கை காகா கூகை"னு "க" வரிசை பாட்டு ஒண்ணு படிச்சதா நினைவு... அதே மாதிரி "அவரும்" வார்த்தை விளையாட்டுல வல்லவர்...

"அவன் தான் மனிதன் படத்துல ஒரு பாட்ட மே மாதம் சிங்கப்பூர் மலர் கண்காட்சியில படம் புடிக்கலாம்னு நெனச்சு அந்தப் படத்தோட இயக்குனர் "அவர்"கிட்ட மே மாசம் பாட்டு வேணும்னு சொன்னாரு... வழக்கம் போல "அவரும்" இந்தோ தரேன்... அந்தோ தரேன்ன்னு இழுத்தடிக்க.. தொடர்ந்து கேட்டுகிட்டே இருந்தாங்க... ஒரு கட்டத்துல கடுப்பாகிப் போன அவரும்... "ஏன்யா சும்மா  மே மேன்னு சொல்றீங்க... இப்ப என்ன "மே" ல பாட்டு வேணும் அவ்வளவு தான? தரேன் போ"ன்னு சொல்லிட்டு பாட்டக் குடுத்தாரு... "மே"ல பாட்டு வேணும்னு கேட்டதால ஒவ்வொரு வரியும் "மே"ன்னு முடியிற மாதிரி அந்தப் பாட்டு முழுக்க 56 "மே"...

அந்தப் பாட்டு.....

"அன்பு நடமாடும் கலைக்கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே
..."

'மே" மட்டுமல்ல "பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்"னு "தேன்" வரிசை... "அத்திக்காய் ஆலங்காய்"னு  "காய்" வரிசை... "அத்தான் என்னத்தான்"னு "தான்" வரிசை.. இப்படி அவர் திரையிசையில் தீட்டிய "சித்திரக் கவிகள் "ஏராளம்...

"வதனமே சந்திர பிம்பமோ... மலர்ந்த சரோஜமோ"னு யாருக்குமே புரியாத மொழியில இருந்த தமிழ் சினிமாப் பாட்ட... "கொடியசைந்ததும் காற்று வந்ததா??? காற்று வந்ததும் கொடியசைந்ததா??"னு நேரா தமிழனோட இதயத்துக்கு கொண்டு போன மகா கவிஞர் "அவர்".

அவரோட "மலர்ந்தும் மலராத"வில தமிழன் மயங்கிப் போனான்... "அச்சம் என்பது மடமையடா" அவன் நரம்புகள்ல திரிகொளுத்திச்சு... "வாழ நினைத்தால் வாழலாம்" அவனுக்கு நம்பிக்கை தந்திச்சு.. "சட்டி சுட்டதடா"ல அவன் ஞானம் அடஞ்சான்... "உள்ளத்தில் நல்ல உள்ளம்" பாட்டுல அவன் அத்வைதமே எய்துனான்...

இப்படி, 'காதல்,  வீரம்,  தாய்மை,  நாட்டுப்பற்று, பரிவு, பிரிவு, பக்தி, தன்னம்பிக்கை, தத்துவம்"னு தமிழனோட ஒவ்வொரு வாழ்வியல் அடையாளத்தையும் தன் பாடலால் இழைத்து,  தேனில் விழுந்த வண்டாய் தமிழனை மயக்கிய ஒரு மதுரகவி "அவர்"...

"அவரது" பெரும்பாலான பாடல்களுக்கு இசையமைச்ச மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி சொன்ன சுவையான சம்பவம் ஒண்ணு உண்டு...

ஒரு நாள் ராத்திரி "அவர்" போன் பண்ணி, "விசு... இன்னைக்கு நான் எழுதுன பாட்டுல "ஓடம் நதியினிலே.... ஒருத்தி மட்டும் கரையினிலே"னு எழுதிட்டேன்... அந்த Situationக்கு "ஓடம் நதி வழியே... ஒருத்தி மட்டும் விதி வழியே"னு எழுதியிருக்கணும்... வீட்டுக்கு வந்தும் அதே நெனப்பாவே இருக்கு.. அத மாத்திடு.." அப்டின்னு சொன்னதாகவும்... இல்லையில்ல மொதல்ல எழுதுனதே நல்லாயிருக்குனு தான் சொன்னதாகவும்...

வெறும் மெட்டுக்குப் பாட்டெழுதுகிற கவிஞர் அல்ல அவர்... ஒவ்வொரு தத்துவப் பாட்டிலும் தன்னையே சிலுவையில் அறைந்து சுயவிமர்சனம் செய்த சித்தர் அவர்...

"ஊரெல்லாம் கூடி உரக்க அழுது பின்
பேரினை நீக்கிப் பிணமெண்று பேரிட்டு
சூரையன் காட்டிடை கொண்டுபோய் சுட்டு
நீரினுள் மூழ்கி நினைப்பொழிந்தார்களே
..."ன்னு ஒரு சித்தர் பாடல் உண்டு

அதை "அவர்" நாலே வரில ரொம்ப யதார்த்தமா சொன்னாரு..

" வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ???
" முடிஞ்சுபோச்சு...

இப்படி ஓண்ணல்ல ரெண்டல்ல "பொட்டில் அடிக்கிறமாதிரி தத்துவத்தையும்" போறபோக்குல அநேகம் பாட்டில் அடிச்சு நவத்துன வித்தாரக் கவி அவர்...

வெறும் எட்டாவது வரை மட்டுமே பள்ளிப் படிப்பை படிச்சிருந்தாலும், தன் வாழ்வியல் அனுபவம் ஒவ்வொண்ணையும் தமிழனுக்கு பாடமாக்கிய பல்கலைக்கழகம் அவர்...

"கலங்காதிரு மனமே" என்று ஒரு தன்னம்பிக்கை பாடலோடு திரைக்கு வந்து... "ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு" என்று தன் அடையாளத்தை மறைக்காது கூறி, "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை... எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.." என்று தன் கவிதையின் இருப்பை சாசனம் செய்து... கடைசியாக "கண்ணே கலைமானே" என்று தனக்குத் தானே ஆரிராரோ பாடி உறங்கச் சென்ற உன்னதக் கவிஞர்...

தினமலரும், தினத்தந்தியும் தவிர வேறு எதையும் படிக்க விரும்பாத என் அப்பா போன தடவை வீட்டிற்கு வந்தப்போ என்னிடம் கேட்டது... "உங்கிட்ட அர்த்தமுள்ள இந்துமதம் புஸ்தகம் இருக்குமே... அதை எடு.. ரொம்ப அருமையா இருக்கும்..."

இன்னுமென்ன பீடிகை... இந்தப் பதிவு முழுக்க நான் "அவர்" என்று குறிப்பிட்டது... தன் சுயசரிதம் முழுவதும் தன்னை "அவன்" என்று மூன்றாவது மனிதனாய் அழைத்த தமிழகத்தின் ஒரே கவியரசர் கண்ணதாசன்!!! அவரது பிறந்த நாள் கடந்த வாரம், ஜூன் 24...!!!!!


No comments:

Post a Comment