Saturday, July 26, 2014

இங்கு மொத்தமாகவும் சில்லறையாகவும் கடலை வறுக்கப்படும்!!!!!!

ஏழெட்டு வருஷத்துக்கு முந்தி ஐ.டில ஆட்டுமந்தை மாதிரி ஆளெடுத்தபோது வேலைக்கு சேர்ந்துட்டு, இன்னிக்கு "நீ புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணி தான்"னு அப்பரசண்டிகள வெரட்டுற ஆட்கள்ள பெரும்பாலான பேர, அவங்களோட ஆரம்ப காலத்துல ரொம்ப 'பிசி"யா வச்சிருந்த ஒரு பேரு "ஆர்குட்".

உலக Social Network வரலாற்றில் முதன் முறையாகன்னு ஆரம்பிச்சு சில வருஷங்களுக்கு முந்தி வரைக்கும் ஓஹோன்னு பட்டைய கெளப்பிகிட்டு இருந்த "Orkut" தளத்த செப்டம்பர் மாதத்தோட மூடப்போறதா கூகுள் நிறுவனம் அறிவிச்சதுல இருந்து நம்மாளுங்களும் பழைய போட்டோவையெல்லாம் Download பண்றதுல தீவிரமா எறங்கிட்டாங்க... அதோட சேர்ந்து பழைய நினைவுகள்ளையும் எறங்கி பலரும் நெட்டுல பிரியாவிடை குடுத்துட்டு இருக்காங்க... நாமளும் கொஞ்சம் ஜாலியா அத திரும்பி பாக்கலாம்...

சமகாலத்துல ஆரம்பிக்கப்பட்டதா இருந்தாலும் ஃபேஸ்புக்கோட அனாடமி புரியறதுக்குள்ள ஆர்குட்ல இமயம் முதல் குமரி வரை தன்னோட கொடிய நாட்டிகிட்டுருந்தாங்க நம்மாளுங்க.. அதுக்கு சில சுவாரசியமான காரணங்கள் உண்டு...

விலையில்லா மின்கலக்கி, மின் அரைவை இயந்திரம் மாதிரி, விலையில்லா கடலை வறுக்கும் வசதி.... ஒரு கூகிள்  அக்கவுண்ட் இருந்தா போதும், மொத்தமாகவும் சில்லறையாகவும் கடலைய வறுக்கலாம்...

அஞ்சலைன்னு பேரு இருந்தாலும் "ஏஞ்சல்"னு Profile  பேரு வச்சுகிட்டா எவனும் கேக்க போறது கெடையாது...

ஆர்குட்டோட முக்கியமான அம்சமே "Scrap" தான்...

அதுவரைக்கும் தெரிஞ்ச புள்ளைங்ககிட்ட மட்டும் எஸ் எம் எஸ்ல  நூல் வுட்ட‌ ஆளுங்க எல்லாம், ஆர்குட் புண்ணியத்துல தெரிஞ்ச புள்ள, தெரியாத புள்ளைன்னு  வகைதொகையில்லாம் ஏரியா பூரா யூரியா அடிக்கிற மாதிரி Scrap வாரி எறைக்க ஆரம்பிச்சாங்க... சில பேரு எழுதுவானுங்க பாரு...

" I am trying to find the teaspoon sugar which adds the real taste of life..." (ராஜா.. உன் Analysis என்னமோ நல்லா தான் இருக்கு... ஆனா இதையே எல்லா பொண்ணுங்க பேஜ்லையும் எழுதிவச்சியின்னா Dialysis ல தான் முடியும்...)

" I saw you visited my page.. would like to have my company." ( ஆமா.. இவரு அம்பானி தம்பி, கம்பெனில பாதிய குடுக்குறாரு...)

                                           
இன்னும் சில பேரு அடிக்கிற கூத்து பெருங்கூத்து... ஒரு வருஷத்துல லட்சம் Scrap அடிக்கணும்னு கணக்கு வச்சுகிட்டு தினமும் 1008 Scrap அடிச்ச ஆளெல்லாம் உண்டு... (ராசா.. டெய்லி 1008 தடவை எழுதுறதுக்கு அது என்ன ஸ்ரீராமஜெயமாடா???? ).. இன்னும் சில பேரு Good Morning அப்டிங்கிறதையே ஒவ்வொரு எழுத்தா பிரிச்சு 11 Scrap போட்டு லொள்ளு பண்ணுவாங்ய..

சின்ன வயசுல இருந்தே Rough  நோட்டு,  பஸ், School Toilet செவுருன்னு ஒரு எடம் விடாம கிறுக்குறது நம்மாளுங்களுக்கு ரொம்ப புடிச்ச விஷயமாச்சே.. அப்படி இருந்தவன இன்டெர்நெட்டுல கிறுக்கு ராசான்னு சொன்னா சும்மா இருப்பாங்யளா... சரோஜா தேவி சோப்பு டப்பா கெடச்ச மாதிரி  மொத்தமா பாஞ்சு ஆளாளுக்கு  "சமூக"  சேவைய ஆத்து ஆத்துன்னு ஆத்துனாங்க...

அதுக்கு முன்னாடி யாருக்காச்சும் நம்மளோட ஃபோட்டோவ காட்டணும்னா ஒண்னு ஈ மெயில் அனுப்பணும் இல்ல "Picasa" மாதிரி எதுலயாச்சும் அப்லோட் பண்ணி லிங்க் அனுப்பணும்... ஆர்குட் வந்தாலும் வந்துச்சு,   நம்மள தேடிவந்து ஃபோட்டோவ பாக்கவைக்க ஒரு சான்ஸ் கெடச்சதும், எல்லா பயலும் வளைச்சு வளைச்சு போட்டோவ போட்டு அளப்பரைய குடுக்க ஆரம்பிச்சாணுங்க.. 

அதோட நிக்காம, ஊர்ல ஒரு Profile விடாம போயி போட்டோவுக்கு கமெண்ட் வேற... அதுலயும் பொண்ணுங்க Profile னா இவனுங்க தொல்ல தாங்கமுடியாது.. கல்யாணம் ஆகிப்போனாலும் வெரட்டி வெரட்டி "இந்த பொண்ணையும் அந்த பையனையும் பாக்கும்போது தில்லானா மோகனாம்பாள்ல வர சிவாஜியும் பத்மினியும் மாதிரி இருக்கு"னு எதையாவது சொல்லலைன்னா தூக்கமே வராது...

ஆர்குட்டோட அடுத்த சிறப்பம்சம் என்னன்னு பாத்தா, "Testimonial"... அதாவது இவரு நல்லவரு, வல்லவரு நாலும் தெரிஞ்சவருன்னு சொல்றது... இன்னும் கரெக்டா சொல்லணும்னா ஸ்கூல்ல தமிழ் பாடத்துல ஆசிரியர் குறிப்புன்னு ஒண்ணு வருமே அதே மாதிரி தான்... பாட்ட எழுதுன ஆளு "எக்ஸ்ட்ரா முட்டை" போடுறாங்கனு சொல்லியும்  Elementary School வரைக்கும் கூட போகலைன்னாலும் "ஓதாது உணர்ந்த ஞானச் செல்வர்"னு எழுதுவோமே அதே தான்...

அஞ்சு வருசமா புராஜக்ட்ல டம்மியா மிச்சர் திங்கறத தவிர ஒண்ணும் பண்ணலைன்னாலும்... a wonderful person to have in the team.. i like her company..னு எழுதி வைக்கிறது தான் "டெஸ்டி" தர்மம் (நீயெல்லாம் இங்கிலீஷ் பேசலைன்னு யாரு கேட்டாங்க... அதென்ன கம்பெனி... கெக்ரான் மெக்ரான் கம்பெனி)..இதுல வாங்குன காசுக்கு மேல "வருங்கால அமெரிக்க ஜனாதிபதி முருகேசன் வாழ்க"னு கூவுற ஆளெல்லாம் உண்டு..

இந்த Testi பித்து தலைக்கேறி  "அப்பறம்.... இந்த வாரம் நம்ம பேஜ்ல Testi ஒண்ணு போட்ருங்களேன்"னு பப்ளிகுட்டி பண்ணிக்கிற அப்பாடக்கரெல்லாம் உண்டு... (தம்பி... அவன் என்ன LIC பாலிசியா போடப்போறான்.. நீ வாங்குற பத்து அஞ்சு பிச்சைக்கு இதெல்லாம் தேவதானா????)


ஆர்குட்டோட மற்றுமொரு சிறப்பம்சம் "Community".. அதாவது தனித்தனியா "சமூக சேவை" பண்ணிட்டு இருந்த ஆளுங்க எல்லாம் மொத்தாமா சேந்து "அதே" வேலைய பண்றது... (இல்லைன்னா மட்டும் என்ன சுத்த சமய சமரச சன்மார்க்க ஆராய்ச்சியா பண்ணப்போறானுங்க...)

ஆரம்பத்துல இந்த Community எல்லாம் தனிப்பட்ட வி.ஐ.பிக்களுக்கு வாழ்க / ஒழிக போடுறதுக்கு தான் ஆரம்பிச்சானுங்க.. அக்பர் ரோடு சோனியாவுல இருந்து ஐதராபாத் சானியா வரைக்கும் எல்லாருக்கும் ஆரம்பிச்சும் வெறி அடங்காம‌ அடுத்து என்ன என்னன்னு யோசிக்க ஆரம்பிச்சதன் விளைவு... Cosmetics ல இருந்து கட்டன் சாயா வரைக்கும், பல்சர் பைக்குல இருந்து பருப்பு வடை வரைக்கும் கண்ட கருமத்துக்கும் Community ஆரம்பிச்சு தள்ளிட்டாங்ய...

இதுல இன்னும் சில சுவாரசியமான விஷயங்கள் உண்டு.. ஓயாம நெட்ட நோண்டி,  எதாச்சும் ஒரு புள்ளையோட Community லிஸ்ட்டுல இருக்குற ஐட்டத்த எல்லாம் பாத்துட்டு, மறுநாள் அந்த புள்ளைகிட்ட போயி..

" I know you like south indian coffee.. கரெக்டா???... எப்படி கண்டுபுடிச்சேன் பாருங்க..."ன்னு சீன் போட்ட ஆளுங்க ரொம்ப பேரு... (ஆமா இவரு எடிசன்.. கரண்ட கண்டுபுடிச்சுட்டாரு...)...

இதை எழுதும்போது இன்னொரு விஷயம் நினைவுக்கு வருது.. இதே மாதிரி நம்ம நண்பர் ஒருத்தர், அவரு ஓயாம வெரட்டிகிட்டு இருந்த ஒரு பொண்ணோட Community லிஸ்ட்டுல Roller skating னு இருக்குறத பாத்துட்டு அந்த பொண்ணுக்கு Roller skating ரொம்ப புடிக்கும் போலருக்குன்னு நெனச்சுகிட்டு, அத இம்பிரெஸ் பண்றதுக்காக நம்ம ஊரு முட்டுசந்துல Roller skating பண்ணி குப்புற விழுந்து மூக்கு வாயெல்லாம் மண்ணு உட்டுகிட்டாப்ல...

பின்னால தான் தெரிஞ்சது "அந்தப் புள்ளைக்கும் Roller skating கும் சம்பந்தமே இல்ல.. அதோட தம்பி தான் சும்மனாச்சுக்கும் அத Add பண்ணி வச்சிருந்தான்" அப்டின்னு....

இதெல்லாம் பண்ணி முடிச்சு போரடிச்ச ஆளுங்க ஆரம்பிச்சது தான் "I Hate" Community... மூணு நாளுக்கு முந்தி வச்ச பருப்பு கொழம்புல இருந்து முப்பது ரூவா கடன் கேட்டு குடுக்காத ரூம்மேட் வரைக்கும் புடிக்காத எல்லாத்தையும் கழுவி கழுவி ஊத்துற‌து தான் இந்த Community யோட வேலையே...
                                   
இதுல ரொம்ப பிரபலம் "I hate peter girls" Community..........    பீட்டர் உடுற பொண்ணுங்கள, ஆங்கிலத்தாலோ அல்லது அது வராமல் போனதாலோ பாதிக்கப்பட்ட ஆடவர்குல சிங்கங்கள் கேவலமா திட்டுறதுக்கு இந்த Community ஒரு தளம்... இதுக்கு பதிலடி குடுக்குறதுக்குன்னே ஆரம்பிக்கப்பட்டது "I hate flirting guys.." சதா சர்வ காலமும் எதாவதொரு பொண்ணுகிட்ட ஜொள்ளுவதையே பிறவிப்பயனா நெனச்ச பசங்கள மகளிர்குல மாணிக்கங்கள் ரொம்ப ரொம்ப கேவலமா திட்டுறதுக்கு இந்த Community ஒரு தளம்...  மொத்ததுல இத ரெண்டுபேருமே ஒரு ஜாலியாவே எடுத்துக்கிறது...

இதெல்லாம் தனக்கு சம்பந்தமான விஷயம்னு ஓரளவுக்கு மன்னிச்சு விட்ரலாம்.. சம்பந்தமே இல்லாம எதாச்சும் ஒரு வீடியோவ Youtube ல இருந்து லிங்க் குடுத்து அதப்பத்தி ஒரு பத்துபேரு சேட்டிலைட் TV ல வர்ர‌ Talk Show லெவல்ல மாறி மாறி பொளந்தெடுப்பாங்ய பாரு.. அது உச்சக்கட்ட கொடுமை...

இப்படி ஒவ்வொருத்தருக்கும் எத்தனையோ நினைவுகள் ஆனா ஒவ்வொண்ணும் ரொம்ப ரொம்ப சுவாரசியமான நினைவுகள்... அதான் ஆர்குட்டோட பலமே...

இன்னைக்கு ஃபேஸ்புக்குல இருந்து ஓயாம Candy Crush, Farm heros, Criminal Case னு ஒரு பய விடாம debit card விக்கிறவன் மாதிரி request குடுத்து டார்ச்சர் பண்றது, Viber ல ஓசி கால் பேசுறது, Whatsapp ல ரேகைய அழிக்கிறதுன்னு எல்லாத்துக்கும் முன்னோடி "ஆர்குட்."

ஆர்குட்னு சொன்ன உடனே நினைவுக்கு வர்ரது அதோட சிம்பல்ல இருக்குற "O" தான்... கல்லூரி முடிஞ்சு பிரிஞ்சு போற ஒரு ஜாலியான நண்பன மாதிரி நாமளும் ஆர்குட்டுக்கு விடை கொடுக்கலாம்...

எப்பூடி..... ஆர்குட்டுக்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய "O" போடலாம்....

No comments:

Post a Comment